Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Regular-Update மயிலரசி

மயிலரசி 5

"எது நான் பேட் பாட்டியா இதெல்லாம் ரொம்ப ஓவரு. நான் சமைச்சு கொடுக்காமயா உங்க டாடி வளர்ந்துட்டான்.” என்றார் பொய் கோபம் கொண்டு.

"அதான் சொல்லிட்டேனே என் டாடி பாவம் பிடிக்காம தான் உன் சாப்பாடு சாப்பிட்டிருப்பாரு. என் அபி பேபி மாதிரி டேஸ்டா சமைக்க முடியுமா உன்னால..." என்றது.

"இங்க நம்ம பேசிக்கிட்டு இருக்கும் போது எதுக்கு அபி வந்தா? நீ எப்போ அபி கிட்ட சாப்பிட்ட?" என்றார் பாட்டி.

"போன முறை போனப்ப டூ டேஸ் அட்மிட் ஆகியிருந்தேன்ல இல்ல ஹாஸ்பிட்டல்.."

"ஆமா அதுக்கும் இப்போ அபி கிட்ட நீ சாப்பிட்டேன்னு சொன்னதுக்கும் என்ன சம்பந்தம்?" என்றார் பாட்டி.

"ஐயோ மக்கு பாட்டி" என்று தலையில் அடித்துக் கொண்டது.

"என்னது மக்கா?"

"ஆமா போன வாட்டி அங்க இருந்தப்ப ஹாஸ்பிடல்ல கொடுத்த சாப்பாடு எனக்கு பிடிக்கவே இல்லை. நான் கொஞ்சம் கூட சாப்பிடல. அப்ப அபி பேபி என்ன பணணா தெரியுமா?" என்றது பிள்ளை குரலில்.

"என்ன பண்ணா?" என்றார் பாட்டி சந்தேகமாய்.

"அவ எனக்காக வேற ரூம்ல போயிட்டு சுட சுட ரசம் செஞ்சு எடுத்துட்டு வந்தா தெரியுமா? அதோட தொட்டுக்க எனக்கு புடிச்ச புதினா சட்னியும் காரம் இல்லாம எடுத்துட்டு வந்தா. வெறும் ரசம் ஆனா அது எவ்வளவு டேஸ்டா இருந்தது தெரியுமா? அவ்வளவு டேஸ்டா சமைப்பா என் அபி பேபி." என்றது குழந்தை மகிழ்ச்சியாக.

'என்னடா இது' என்பது போல் தன் நண்பனை முறைத்தான்.

'எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.' என்று தோளை குலுக்கினான் மேகவர்மன்.

அப்போது அவர்களை திரும்பி பார்த்த அவனின் மகள்.

"ஹை அப்பா வந்துட்டாரு.. இதுக்கு மேல நீ என்ன தரது நான் என் டாடி கூப்ட்டு செஞ்சுப்பேன்.” என்று பாட்டியை வெறுப்பேற்றியபடி தந்தையிடம் ஓடினாள்.

"அப்பா" என்று தந்தையிடம் தாவியது. மகள் ஓடி வந்ததும் ஆசையாய் தூக்கியவன் முகம் முழுவதும் முத்தமிட்டான்.

"எப்படி இருக்கீங்க பட்டு?" என்றான் மயில் வீரா கனிவாய்.

"நான் நல்லா இருக்கேன் பா நீங்க எப்படி இருக்கீங்க? ஏன் இவ்ளோ நாள் என்னை பாக்கவே வரல. நான் குட்டி பாப்பா தானே.. என் கூட தான நீங்க இருக்கணும்." என்றாள்.

"என் பட்டு என்னை ரொம்ப மிஸ் பண்ணாங்களா? சாரிடா தங்கம் இனிமேல் அப்பா உங்க கூட இருக்கிற மாதிரி பார்த்துக்கிறேன். ரொம்ப எமர்ஜென்சினா மட்டும் வெளியே போறேன் சரியா?" என்று கன்னம் கிள்ளி கொஞ்சினான்.

"சரிப்பா" என்று தந்தையின் கன்னத்தில் முத்தமிட்டு சிரித்தது குழந்தை.

“நான் வரும் போது பாட்டிக்கிட்டே ஏதோ சொல்லிட்டு இருந்தீங்களே.. யார் உங்களுக்கு ரசம் சாதம் செஞ்சு கொடுத்தாங்க.” என்றான்.

“அதுவா ப்பா.. என்னோட அபி பேபி.” என்றது அதுவும் அழகாய்.

“அபி பேபியா? அப்பாக்கு தெரியாம அது யாரு உங்களுக்கு புது பிரண்டு.” என்றான் மகளின் வாயாலே அனைத்தும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று.

"அதுவா எனக்கு மொதல்ல எல்லாம் ஹாஸ்பிட்டல் போறதுனால பிடிக்காது இல்லப்பா, ஆனா இப்ப எல்லாம் ஹாஸ்பிட்டல் போகனும்னா ரொம்ப பிடிக்கும். என் அபி பேபி அங்க தான இருக்கா. அதான் அங்க போனா பேபி கூட ரொம்ப நேரம் இருக்கலாம்ல. எனக்கு பிடிச்ச பாட்டு பாடுவா, நிறைய கதை சொல்லுவா, எனக்கு சாப்பாடு ஊட்டி விடுவா..." என்று இன்னும் இன்னும் நிறைய விழிகளை சுருக்கி அழகாய் கூறி கொண்டே சென்றது. அதில் குழந்தையுடைய ஏக்கங்கள் அப்பட்டமாய் தெரிய தன்னையே நொந்து கொண்டான் மயில் வீரா.

"யார் அந்த அபி உனக்கு அவங்கள அவ்ளோ பிடிக்குமா?" என்றான் ஆவலாய்.

"ஆமாம் டேட். உங்களுக்கு அப்புறம் உங்களை மாதிரி என்னை ரொம்ப நல்லா பாத்துப்பா." என்றதும் அனைவரும் திடுக்கிட்டு குழந்தையை பார்த்தனர்.

"அப்போ சரி நாளைக்கு நம்ம அவங்கள போய் பாக்கலாமா? எனக்கு நீ அவங்களை இண்ட்ரடியூஸ் பண்ணி வைக்கிறியா? என் பட்டு கிட்ட அவ்வளவு அன்பா நடந்துக்கிட்டது யாருன்னு பார்க்க எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு." என்றான் வீரா.

"ஓ போலாமே! எனக்கும் அபி பேபிய பார்க்க ஆசையா இருக்கு." என்றது குழந்தை.

அதன்பின் அவனின் நேரங்களை மகளே ஆக்கிரமித்து கொள்ள, அன்று ஒரு வழியாக இவர்களின் அட்டகாசங்கள் முடிந்து அனைவரும் உண்டு உறங்கினர்.

மறுநாள் விடிந்து எழுந்தவனின் மனம் உலைக்கலனாய் கொதித்து கொண்டிருந்தது. முகம் தெரியாத அந்த பெண்ணின் மீது அளவு கடந்த கோபம் ஊற்று போல் பெருகி கொண்டே சென்றது.

'யார் அந்த அபி? எவ்ளோ தைரியம் இருந்தா என் பொண்ணுகிட்ட பாசமா இருக்க மாதிரி நடிச்சுருப்பா. இந்த மாதிரி பொண்ணுங்க எல்லாம் எதுக்கு இப்டி பண்றாங்கன்னு எனக்கு தெரியாதா? பணக்கார வீட்டு குழந்தைகளை மயக்கி அவங்க வீட்டு பையன்களை மடக்கி போட்டு இந்த சொத்தை ஆளணும்னு ஆசை படறாங்க. ச்சீ.. இவங்க எல்லாம் என்ன ஜென்மங்களோ... இன்னைக்கு நேர்ல பார்த்து கன்னம் பழுக்குற மாதிரி நாலு கொடுத்தா தான் எனக்கு மனசு ஆறும். இன்னைக்கு நான் கேட்க போற கேள்வில என் பொண்ணை மட்டுமல்ல வேற எந்த குடும்பத்தையும் கெடுக்க இந்த மாதிரி எண்ணமே வர கூடாது.' என்று கரித்து கொட்டி கொண்டிருந்தான். தன் நண்பன் அனுப்பிய காணொளியை அவன் இதுவரை காணவில்லை என்பதை மறந்து விட்டிருந்தான் மயில்வீரா.

தன் மகள் காலையில் இருந்தே அபி புராணத்தை கூறியபடி உற்சாகமாய் கிளம்புவது வேறு அவனை உள்ளுக்குள் இன்னும் கோபமூட்டியது.

மகளுக்கு முன் காட்ட கூடாதென்று அமைதி காத்தவன் அபியை காணும் நேரம் வெடிக்க காத்திருந்தான்.

இரவே மேகவர்மனை போட்டு கோபத்தில் தாளித்திருந்தான். அது தனி கதை. நண்பனின் கோபம் பற்றி அறிந்தவன் உள்ளுக்குள் அபிக்காக வருந்தினான். நண்பனுடனே செல்ல தயாராகியவனை மயில்வீரா வேண்டுமென்றே வேறு அலுவலை கொடுத்து அனுப்பி வைத்தான்.

"இன்னைக்கு என்கிட்டே இருந்து அந்த மாயக்காரி எப்படி தப்பிக்கிறான்னு பார்க்கிறேன். அவளுக்கு சப்போர்ட் பண்ண கிளம்புறான் இவன்." உள்ளுக்குள் திட்டி கொண்டே இருந்தான்.

ஒரு வழியாக மருத்துவமனைக்குள் மகளுடன் நுழைந்தான். வழக்கமாக வரும் மருத்துவமனை என்பதால் குழந்தை தடுமாறாமல் தந்தைக்கு வழி காட்டி அழைத்து சென்றது. குழந்தைகள் பிரிவு வந்ததும் தந்தையை நிறுத்தியவள் தான் மாட்டியிருந்த கிட்டி பேகில் இருந்து இரண்டு மாஸ்க்கை எடுத்து ஒன்றை தான் போட்டு கொண்டு மற்றொன்றை தந்தையிடம் கொடுத்தாள்.

"அப்பா இதை போட்டுக்கோங்க உள்ள என்னை மாதிரி நிறைய கிட்ஸ் இருக்காங்க இல்ல அவங்களுக்கு எந்த இன்பெக்க்ஷனும் வரக்கூடாதாம். அதுக்காக எப்பவும் உள்ள மாஸ்க் போட்டுட்டு தான் வரணும்னு அபி பேபி சொல்லிருக்கு. போட்டுக்கிட்டிங்களா இப்போ போகலாம்." என்று தந்தையின் கரம் பிடித்து அழகாய் உள்ளே அழைத்து சென்றது.

மகளின் இந்த முகம் அவனுக்கு புதிது.. மகளின் பக்குவப்பட்ட நிலையை கண்டு ஆச்சர்யமடைந்தான்.

"ஹேய் நீத்து டார்லிங் என்னாச்சு உங்களுக்கு மறுபடியும் ஹாஸ்பிட்டல் வந்துருக்கீங்க?" என்றாள் செவிலியர் மேரி.

"எனக்கு எதுவும் இல்ல சிஸ்டர். அபி பேபி எங்க? என் டேடி ஊர்ல இருந்து வந்துட்டாங்க அதான் பேபிகிட்ட டேடியை காட்ட கூட்டிட்டு வந்தேன்."

அவளின் பேச்சில் அதிர்ந்த செவிலியர் மயில்வீராவை பார்த்தாள்.

"அது ஒண்ணுமில்லை சிஸ்டர் அவங்களை பார்க்கணும்னு பாப்பா ரொம்ப அடமா கேட்டதால கூட்டிட்டு வந்தேன். அவங்க இல்லையா?" என்றான்.

"வந்துருக்காங்க சார். இன்னொரு எமெர்ஜென்சி கேஸ் இப்போ தான் முடிஞ்சுது. சிஸ்டர் இப்போ வந்துருவாங்க உட்காருங்க." என்று அங்கிருந்த இருக்கையில் அமர வைத்தாள்.

அதேநேரம் கைகளை துடைத்தபடி உள்ளே வந்து கொண்டிருந்த அபி, "சிஸ்டர் அந்த நியூ பேபிக்கு கொஞ்சம் இன்பெக்க்ஷன் ஆக சேன்ஸ் இருக்கு. சோ, ஸ்ட்ரிக்ட்டா யாரையும் டூ டேஸ்க்கு உள்ள விடாதீங்க." என்று மாஸ்க்கை அணியவும் மயிலவீரா திரும்பி பார்க்கவும் சரியாக இருந்தது. இருவரும் மாஸ்க்கை அணிந்திருந்ததால் முகத்தை பார்க்க முடியவில்லை என்றாலும் இருவரின் இதயமும் வேகமாய் துடிக்கத் தொடங்கியது.

'என்னாச்சு எனக்கு... ஏன் என் ஹார்ட் இப்படி வேகமாக துடிக்குது...' தனக்குள்ளேயே கேட்டு கொண்டான் மயில்வீரா.

"ஓகே சிஸ்டர். உங்களை பார்க்க உங்க பேவரைட் பர்சன் வந்துருக்காங்க பாருங்க." என்று புன்னகைத்துவிட்டு வெளியேற, 'யாருடா அது நமக்கு பிடிச்சவங்க?' என்று கேள்வியாய் திரும்பியவளின் முகம் மலர்ந்தது.

"நீத்து டார்லிங் என்ன ஆச்சு உடம்பேதும் சரி இல்லையா?" என்று வேகமாய் குழந்தையிடம் நெருங்கி மண்டியிட்டு அமர்ந்து நெற்றியை தொட்டு பார்த்தாள்.

"எனக்கு ஒண்ணுமில்ல அபி பேபி. உன்னை பார்க்க தான் வந்தேன்." என்றதும் பொய்யாய் குழந்தையை முறைத்தவள், "நான் ஏற்கனவே சொல்லிருக்கேன் இல்லையா... நீத்து டார்லிங் மாதிரி நிறைய டார்லிங்ஸ் இங்க இருக்காங்க. இங்க எல்லாம் குட்டிஸ் அடிக்கடி வரக்கூடாதுன்னு இதுல நீங்க என்னை சும்மா பார்க்க வந்தேன்னு சொல்றிங்க... இதென்ன பார்க்கா டார்லிங்? ஹாஸ்பிட்டல் இல்லையா உங்களை மாதிரி குட்டிஸ்கு ஈஸியா இன்பெக்க்ஷன் ஆகும் இல்லையா?" என்று கேட்டதும் தலையை குனிந்து கொண்ட குழந்தை, "சாரி பேபி. நீ சொன்ன நான் தான் மறந்துட்டேன். ஆனா எனக்கு உன்னை பார்க்கணும் போல இருந்தது." என்று முகம் மலர்ந்து, "உனக்கு இன்னொன்னு தெரியுமா பேபி என் டேடி வந்துருக்காங்க." என்று தந்தையை காட்டினாள்.

இதுவரை இருவரின் உரையாடலை மட்டுமே பார்த்து கொண்டிருந்தவனை பார்த்தவள் எழுந்து, "வணக்கம் சார். எப்படி இருக்கீங்க? உங்களை பத்தி தான் நீத்து எப்பவும் சொல்வாங்க." என்று தன் இருக்கையில் அமர்ந்தாள்.

அவளின் மேல் கோபமாக வந்தவன் இப்போது அதை மறந்து அவள் கயல்விழிகளை ரசித்து பார்த்து கொண்டிருந்தான். ஏன் என்று அவனுக்கும் தெரியவில்லை.

"பைன்" என்றான் ஒற்றை வார்த்தையில்.

அவனின் ஒற்றை சொல்லில் உள்ளுக்குள் உடல் சிலிர்த்தது அபிக்கு. முகத்தில் எதையும் காட்டாமல் குழந்தையை பார்த்தாள்.

"பேபி!" என்றது நீத்து.

"என்ன டார்லிங்?" என்றாள் புன்னகை மாறாமல்.

"நீ சாப்பிட்டியா?" என்று கேட்டது.

குழந்தை அப்படி கேட்டதும் லேசாக சத்தம் வர சிரித்தவள், "இன்னும் இல்லடா. ஏன்?" என்றாள்.

"இல்ல எனக்கு பசிக்குது நீ என்ன எடுத்துட்டு வந்த?" என்று ஆர்வமாய் கேட்டது.

"நானா? நான் இன்னைக்கு என் அப்பாக்கு பிடிச்ச மாதிரி பன்னீர் புலாவ் செஞ்சு எடுத்துட்டு வந்தேன். சாப்பிட்டிறியா?" என்று கேட்டதும் உடனே தலையாட்டியது ஆசையாய்.
 
மயிலரசி 6

"நீத்து குட்டி" என்று வீரா அதட்டுவதற்குள் அங்கிருந்த அத்தனை குழந்தைகளும் அவள் முன் வந்து நின்று இடையில் கரம் வைத்து முறைத்தன.

"என்னை எதுக்கு எல்லோரும் இப்படி ஆசையா பார்க்கிறீங்க?" என்றாள் ஏதும் அறியாதவள் போல்.

"அப்போ எங்களுக்கு?" என்றன கோரசாய்.

"உஷ்... உஷ்... இப்படி சத்தம் போட்டா என்னை வீட்டுக்கு அனுப்பிடுவாங்க நான் போகவா?" என்றாள் சோகமாய்.

"இல்ல இல்ல வேண்டாம்." என்றன எல்லா குழந்தைகளும் மெதுவான குரலில்.

மெல்லிய புன்னகையுடன், "நேத்து நீங்க எல்லோரும் தானே புலாவ் வேணும்னு கேட்டிங்க... ஆயில், காரம் ரொம்ப போடாம உங்களுக்காக செஞ்சு எடுத்துட்டு வந்துருக்கேன். சாப்பிடறீங்களா?" என்று ஒற்றை புருவம் உயர்த்தி கேட்டாள்.

"சரி" என்று அனைத்தும் ஆசையாய் தலையாட்டின.

"சிஸ்டர்" என்று பார்க்க அனைவரையும் பார்த்த மேரி பொய்யாய் முறைத்து, "உங்க எல்லாருக்கும் இதே வேலையா போச்சு. உங்க கூட இவங்களும் சேர்ந்துக்குறாங்க. ஹாஸ்பிட்டல் மாதிரியா இருக்கு.." என்று புலம்பியபடி வாசலின் அருகில் சென்று நின்று கொண்டவர்,

"சீக்கிரம் யாராவது வர போறாங்க." என்றார்.

"சரி சரி கோபப் படாதீங்க உங்களுக்கும் ஒரு பாக்ஸ் எடுத்துட்டு வந்துருக்கேன்." என்றதும் புன்னகைத்தவர்.

"வாலு." என்றார்.

நேத்ராவின் தந்தையை பார்த்தவள், "சார் உங்களுக்கு ஒன்னும் ப்ராப்லம் இல்லையே?" என்றாள் தயங்கி.

'இல்லை' என்று தலையாட்டியதும், "ஓகே எல்லோரும் பொசிஷன்ல உட்காருங்க." என்றாள்.

கடகடவென அனைத்து குழந்தைகளும் வேகமாய் இரண்டு கட்டிலில் அரை வட்டமாய் அமர்ந்தனர், நேத்ராவும் அதில் அடக்கம்.

தன் பையில் இருந்து ஒரு பெரிய டிபன் பாக்சை எடுத்து திறந்தவள், "ஒரே ஒரு கண்டிஷன் இருக்கு. எல்லோருக்கும் ரெண்டு வாய் தான். இப்போதைக்கு இந்த சாதம் அதிகம் சாப்பிட கூடாது. உங்களுக்கு சரியாகிடுச்சுன்னா மறுபடியும் செஞ்சு தரேன். சரியா?" என்றதும் 'சரி' என்று தலையாட்டின.

இரண்டு கட்டிலுக்கும் நடுவில் சென்று நின்றவள், தன் கரத்தால் ஒவ்வொரு குழந்தைக்கும் ஊட்ட அழகாய் வாங்கி கொண்டன. ஒரு குழந்தையின் விழிகள் கலங்கவும் பதறியவள், "மித்து கண்ணா, என்னப்பா காரமா இருக்கா?" என்றாள்.

"இல்ல இதுவரைக்கும் என் மம்மி எனக்கு ஊட்டி விட்டதே இல்ல. நானி தான் பிளேட்ல போட்டு கொடுத்துருவாங்க. எனக்கு அம்மா மாதிரி இப்போ தான் நீ ஊட்டிருக்க அபி. ஐ லவ் யூ." என்று கண்ணீருடன் புன்னகைத்து அபியின் கன்னத்தில் முத்தமிட்டான்.

"ஐ லவ் யூ கண்ணா. பாய்ஸ் அழ கூடாதுன்னு என் அம்மா சொல்லுவாங்க. நீங்க பிரேவ் பாய் தானே. சோ டோன்ட் கிரை." என்று அவனின் நெற்றியில் முத்தமிட்டவள் அனைத்து குழந்தைகளுக்கும் ஊட்டி முடித்தாள்.

"சிஸ்டர்" என்று கூப்பிடவும் உள்ளே வந்தவர், "ஊட்டியாச்சா?" என்றதும், "ம்ம்ம் இந்தாங்க உங்களுக்கு." என்று பாக்சை கொடுத்து, "டைம் ஆகிடுச்சு நீங்க முதல்ல போய் சாப்பிட்டு வாங்க. நான் நீங்க வந்த பிறகு சாப்பிடுறேன்." என்று அனுப்பி வைத்தாள்.

"அபி பேபி போதும்.. ரொம்ப நேரம் ஹாஸ்பிட்டல்ல இருக்கக் கூடாது. அப்புறம் அப்பாவை இதுபோல இனி தொந்தரவு செய்ய கூடாது. டேடிக்கு வர்க் இருக்கும்ல... சரியா?" என்று கேட்க, "சரி அபி. அபி ஒன்னு கேட்கட்டா?" என்றது.

"என்னடா?" என்று தன் அருகில் நிற்க வைத்து கேட்டாள்.

"அபி நீ என் கூடவே எங்க வீட்டுக்கு வந்துட்றியா? என் கூட வந்துட்டா எப்பவும் என் கூடவே இருப்பல்ல..." என்று கேட்கவும் அதிர்ச்சியாய் விழிகள் விரித்தவள் பின் மெல்ல புன்னகைத்து குழந்தையை தூக்கி மடியில் வைத்து, "நீத்து டார்லிங். அப்டி எல்லாம் அபியால உங்க வீட்டுக்கு வர முடியாது தங்கம்."

"ஏன் அபி பேபிக்கு என்னை பிடிக்கலையா?" என்று அழ தயாராகியது குழந்தை.

"இல்ல தங்கம். இப்போ நீங்க, டேடி, பாட்டி எல்லோரும் ஒரு பேமிலியா இருக்கீங்க இல்ல. அதே போல எனக்கும் ஒரு குட்டி பேபி இருக்காங்க. அதோட என் அப்பாவும், தம்பியும் இருக்காங்க. அவங்க என்னோட பேமிலி அவங்களை எல்லாம் விட்டுட்டு வர முடியாதுடா குட்டி. உங்களுக்கு என்ன வேணும்னாலும் உங்க டேடி செஞ்சு தருவாங்க அவங்க கிட்ட கேளுடா தங்கம் சரியா?" என்றாள் பொறுமையாய்.

"ஆனா எனக்கு அம்மா இல்லையே பேபி." என்றதும் அதிர்ந்து மயில் வீராவை பார்த்தவள் உடனே சுதாரித்து கொண்டு, "அதுக்கென்ன டார்லிங்... எனக்கும் தான் அம்மா இல்ல ஆனா என்னோட அப்பா தான் என்னை அம்மாவா இருந்து நல்லா பார்த்துக்கிட்டார். உங்க டேடியும் உன்னை அப்டி தான் ரொம்ப நல்லா பார்த்துப்பார்." என்றதும்.

"அப்போ எனக்கு உன்னை பார்க்கணும்னு ஆசையா இருக்குமே உன்னை பார்க்கணும்னா என்ன செய்ய?" என்று கேட்டது.

"அதுவும் இருக்குல்ல அப்போ என்ன பண்ணலாம்... சரி உங்க பாட்டி நம்பர் என்கிட்டே இருக்கு. அவங்களுக்கு என்னோட நம்பர் தரேன் உனக்கு எப்போ வேணுமோ அப்போ பாட்டி நம்பர்ல இருந்து எனக்கு கூப்பிடு நாம நிறைய பேசலாம். சரியா?" அவளின் கன்னத்தில் முத்தமிட, "ஐயோ பேபி, யாராவது மாஸ்க் போட்டுட்டு கிஸ் பண்ணுவாங்களா? அதுவும் இல்லாம டேடிய உன்னை பார்க்க தானே கூட்டிட்டு வந்தேன். மாஸ்க் எடு பேபி. டேடி நீங்களும் மாஸ்க் ரிமூவ் பண்ணுங்க." என்றதும் இருவரும் மாஸ்க்கை எடுத்து விட்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

அபியை பார்த்தவனின் விழிகளில் அப்பட்டமான அதிர்ச்சி. இதயம் துடித்ததற்கான காரணத்தை இப்பொழுது அறிந்து கொண்டான்.

ஆனால் அவளின் முகத்தில் எவ்வித மாறுபட்ட உணர்வும் இல்லாமல் புன்னகைத்தவள், "போதுமா டார்லிங்." என்று அவளின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

"பேபி உனக்கு என்னை பிடிக்குமா?"

"ஓஹ் பிடிக்குமே... அதுவும் நீத்துக்குட்டி என்னோட ஸ்பெஷல் ஆச்சே.." என்று கன்னத்தில் குழி விழ அழகாய் சிரிக்க, "ஏன்?" என்று ஆர்வமாய் கேட்டது.

அவளின் பதிலுக்காக வீராவும் ஆர்வமாய் பார்த்திருக்க, "ஏன்னா நீத்து பேபியோட முழு பேர் என்ன?" என்று கேட்டாள்.

"ஸ்ரீநேத்ரா மயில்வீரா." என்றது அழகாய்.

"ஓஹ் சூப்பர். என்னோட பேபி பேரும் சாய்நேத்ரா கனியழகன். ரெண்டு பேருக்கும் ஒரே பேர் அதான்." என்றாள்.

"ஓஹ் கனியழகன் யாரு?"

"நீ உங்க டேடி பேரு வச்சுருக்கா மாதிரி. அவளுக்கு அவங்க டேடி பேர் வச்சுருக்கு." என்றாள்.

"அப்படியா சரி. உன் பேபி எனக்கு அக்காவா?"

"இல்லடா உங்களுக்கு இப்போ மூணு வயசு இல்லையா? அவங்களுக்கு ரெண்டரை வயசு தான். உனக்கு தங்கச்சி." என்றாள்.

"எனக்கு அபி ஞாபகமா ஏதாவது வேணுமே.." என்றது குழந்தை விழிகள் சுருக்கி.

"டார்லிங்க்கு என்ன தரது?" என்று யோசித்தவள், "இருங்க" என்று, "தன் டேபிளை திறந்தவள் சிறிது தேடி பின் ஒரு படத்தை எடுத்து கொடுத்தாள்.

"இத வச்சுக்கோங்க. இது நானே செஞ்சது." என்றாள்.

"ரொம்ப அழகா இருக்கு பேபி. நீங்களே செஞ்சீங்களா?" என்றாள் குழந்தை அதை தடவி பார்த்து கொண்டே.

"ஆமா டார்லிங். சின்ன வயசுலர்ந்து என்னோட ஹாபி இது. இந்த பெய்ண்டிங் பண்ணா எனக்கு மனசு ரிலாக்ஸ் ஆகிடும்." என்று சிரித்தாள்.

குழந்தையின் கரத்தில் இருந்த படத்தை பார்த்தவனின் இதயம் வெளியே வந்து குதித்து விடும் போல் இருந்தது. திடிரென்று வியர்க்க தொடங்கியது.

"சிஸ்டர் உங்கள டீன் சார் கூப்பிடறாங்க." என்று வந்தாள் செவிலியர்.

யோசனையில் புருவம் நெறித்து, "சரி வரேன் சிஸ்டர்." என்று அனுப்பி வைத்தவள்.

"ஓகே நீத்து குட்டி. அபிக்கு வர்க்கு இருக்கு. நீங்க சமத்து குட்டியா டேடி கூட வீட்டுக்கு போங்க. பாட்டிய கேட்டேன்னு சொல்லுங்க. நல்லா ஹெல்தியா சாப்பிடணும் சரியா." என்றவள், "மன்னிக்கணும் சார். நான் டீனை போய் பார்க்கணும். நீங்க பாப்பாவை கூட்டிட்டு கிளம்புங்க." என்று அவன் முகம் பார்த்து கூறியவள் குழந்தைக்கு முத்தம் கொடுத்து விட்டு வெளியேறினாள்.

அவள் சென்றதும் இவர்கள் இருவரும் வெளியே வர அபியை பற்றி யோசித்து கொண்டு வந்தவனின் பார்வையில் விழுந்தது மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களின் பெயர் வரிசை கொண்ட பலகை.

சத்தியமூர்த்தி டீன், அதன் கீழ் இதழரசி சத்யமூர்த்தி, அன்பிற்கரசி கனியழகன் என்பதை பார்த்தவனின் புருவம் சுருங்கியது.

"டேடி வாங்க போகலாம்." என்று மகள் அழைக்கவும், "போலாம் பட்டு." என்று அழைத்து சென்றான்.

*****

வீட்டிற்கு வந்தவனின் மனம் ஏனோ ஒரு நிலையில் இல்லாமல் தவிக்க தொடங்கியது.

அவனின் கவனம் எதிலும் இல்லாமல் இருப்பதை பார்த்த மேகவர்மன், "மயில் என்னடா ஏன் ஒரு மாதிரி இருக்க. ஹாஸ்பிட்டல்ல அந்த பொண்ணு ஏதாவது சொல்லிருச்சா?" என்று கேட்டான் அப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை என்று தெரிந்தும்.

"அதெல்லாம் ஒண்ணுமில்லைடா. பாப்பா என்ன பண்றா?" என்றான் நண்பனை பார்க்காமல்.

தன் நண்பனை அழுத்தமாய் பார்த்தவனின் பார்வை அவன் கரத்தில் இருந்த சிகரெட்டில் நிலைத்தது. மிகவும் மன உளைச்சலில் இருந்தால் மட்டுமே சிகரெட்டை ஸ்வாசிப்பான். அதுவும் மகள் பிறந்ததும் அறவே நிறுத்தியிருந்தவன் இப்பொழுது திடிரென்று சிகரெட் பிடிப்பது யோசிக்க வைத்தது.

"அவ சாப்பிட்டு அம்மா கூட தூங்கிட்டா. உனக்கு என்ன ஆச்சு அத முதல்ல சொல்லு." என்றான் மேகவர்மன் அழுத்தமாய்.

"அதான் ஒன்னும் இல்லன்னு சொல்றேன்ல அப்புறம் ஏன்டா திரும்பத் திரும்ப கேட்கிறே?" என்றான் சற்று எரிச்சலாய்.

"நீ சொல்றதை கேட்டுட்டு அமைதியா போறதுக்கு நான் ஒன்னும் முட்டாள் இல்ல. உன்ன பத்தி முழுசா தெரிஞ்சவன். என்ன நடந்ததுன்னு இப்ப சொல்லப் போறியா இல்லையா?" என்றான் மேகவர்மன் கோபமாய்.

"அபி தான்..."

"ஏற்கனவே எனக்கு ஒன்னும் புரியல... ஜாங்கிரியை புட்டு போட்ட மாதிரி சும்மா சும்மா நிறுத்தி நிறுத்தி சொல்லி என்னை டென்ஷன் பண்ணாத. என்ன நடந்ததுன்னு ஒழுங்கா சொல்லித் தொலை." என்று காய்ந்தான்.

இன்று மருத்துவமனையில் நடந்தது முழுவதையும் ஒன்று விடாமல் கூறி முடித்தான்.

"சரி இதுக்கும் இப்ப நீ டென்ஷனா இருக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்?" என்றான் ஒன்றும் புரியாமல்.

"மேகா நான் லண்டன்ல படிக்கும் போது என்னை ஒரு பொண்ணு விரும்புச்சுன்னு சொன்னேன் இல்ல அது இவ தான்." என்றான் பட்டென்று.

"என்ன?" என்ற அதிர்ச்சியில் எழுந்தே நின்று விட்டான் மேகவர்மன்.
 
☺️ ☺️ mayil veera nice name sister .story romba nalla irrunthathu .next episode eappo varum . konjam fasta update pana nalla irrukum .ok sis😊😊

 
மயிலரசி 7:

"ஆமா அது இவளே தான்." என்றான் வீரா உறுதியாய்.

"நீ என்ன முட்டாளாடா? நான் ஒரே ஒரு தடவை தான் பார்த்து இருக்கேன் அப்பவே அந்த பொண்ண எனக்கு அவ்வளவு பிடிச்சு போச்சு. இந்த மாதிரி ஒரு தங்கமான பொண்னையா வேணாம்னு சொன்ன. உன்னை தேடி வந்த நல்ல வாழ்க்கைய வேண்டாம்னா இப்படி ஒரு தேவையில்லாத இக்கட்டான வாழ்க்கையில் வந்து மாட்டிக்கிட்ட." என்றான் மேகவர்மன் ஆதங்கமாய்.

"அந்த நேரத்துல நானும் உன் தங்கச்சியும் விரும்பிட்டிருந்தோம் டா." என்றவனை மிகவும் கோபமாய் முறைத்தான்.

"சரி உன் தங்கச்சி விரும்புறேன்னு சொன்னதை உண்மைன்னு நம்பி நானும் விரும்பினேன். உன் தங்கச்சி வேணா என்னை விரும்பாமல் இருக்கலாம் ஆனால் நான் விரும்பினேன் இல்ல. என் நண்பனோட தங்கச்சி என்ற ஒரு தகுதி அவளுக்கு போதுமானதாக இருந்தது. ஆனா அவ தான் ஏதோ காரணத்துக்காக கடமைக்கு என் கூட இருந்துட்டு பாதியில விட்டுட்டு போய்ட்டா. அதனாலயே எனக்கு என் பொண்ணையும் அம்மாவையும் தவிர எந்த பொண்ணுங்க மேலையும் நம்பிக்கை இல்லடா.” என்றான் மயில்வீரா கசந்த புன்னகையுடன்.

"சாரிடா. எனக்கும் அவளோட எண்ணத்தை பத்தி எதுவும் தெரியல. அதனால் தான் நீங்க ரெண்டு பேரும் உண்மையா விரும்புகிறீர்கள் என்று நினைத்து நான் உங்க கல்யாணத்தை நடத்தி வச்சேன். நானே உன் வாழ்க்கைக்கு குழி பறிச்சிருக்கேன்னு எனக்கு அப்போ தெரியலை." என்று கண் கலங்கினான் மேகவர்மன்.

"எனக்கு பண்ணின துரோகமா இல்ல உனக்கு செஞ்ச நம்பிக்கை துரோகமா தெரியல எங்கையோ போயும் வாழாம கார் ஆக்சிடென்ட்ல பிழைக்காம போய் சேர்ந்துட்டா. விடுடா முடிஞ்சுது முடிஞ்சதாவே இருக்கட்டும். இப்போ எனக்கு அபியோட லைஃப்ல என்ன நடந்துதுன்னு தெரிஞ்சுக்கணும்." என்றான் மயில்வீரா.

"ஏன்?" என்றான் சந்தேகமாய் மேகவர்மன்.

"அவ நீ நினைக்கிற மாதிரி சாதாரண பொண்ணு இல்லடா.. பெரிய கோடீஸ்வரி டா. அவ பேர்ல இருக்க சொத்துக்கு ஏழு தலைமுறைக்கும் உட்கார்ந்து சாப்பிடலாம். அப்டி இருக்கும் போது ஏன் அவளோட சொந்த ஹாஸ்பிட்டல்ல ஒரு நர்சா வேலை பார்க்கணும்? எப்படி இருந்த பொண்ணு தெரியுமா அவ... அவளை இப்படி பார்க்க என்னவோ போல இருக்கு.. ஏதோ ஒன்னு பெருசா நடந்திருக்கு அவ வாழ்க்கைல.." என்றான் மயில்வீரா உறுதியாய்.

"டேய் மயில் நீ அவளை விரும்புறியா?" என்றான் மேகவர்மன்.

"ஹ்ம்ம் அப்படி இல்லடா... எப்போ உன் தங்கச்சி என்னை விட்டுட்டு போனாளோ... அப்போ இருந்து என் மனசுல அரிச்சுகிட்டு இருந்த ஒரு விஷயம் என்னை உண்மையா விரும்புறேன்னு சொன்ன பொண்ணோட மனசை காயப்படுத்தி அனுப்பினேன். அவளுக்கும் இப்படி தானே வலிச்சிருக்கும்னு. அப்பப்போ அவளை திரும்பி பாப்போமான்னு ஒரு சின்ன ஏக்கம் இருக்கும். ஆனா இன்னைக்கு இப்படி ஒரு நிலைல அவளை பார்ப்பேன்னு நான் கனவுல கூட நினைக்கல." என்று வருந்தினான்.

"அவ உன்னை பார்த்ததும் பேசலையா?"

"இல்ல... என்னை பார்த்தும் ஒரு சின்ன முக மாறுதல் கூட இல்ல அவகிட்ட. லைஃப்ல எவ்ளோ அடிபட்டிருந்தா முகத்துல உணர்ச்சியை கொஞ்சம் கூட காட்டாம சிரிச்சுக்கிட்டே இருக்க பழகிருப்பா. அவளோட வலில எனக்கும் பெரிய பங்கு இருக்கு." என்றான் மயில்வீரா வேதனையாய்.

"என்னடா சொல்ற? நீ எப்படி காரணமாக முடியும்..." என்றான் மேகவர்மன்.

"அது இன்னைக்கு பாப்பாக்கு ஒரு பெய்ண்டிங் கிப்ட் கொடுத்தாடா. அதை பார்த்ததும் எனக்கு உயிரே போய்டுச்சு." என்றவனின் விழிகளில் ஒரே ஒரு சொட்டு கண்ணீர் விழ தயாராக இருந்தது.

"டேய் என்னடா ஆச்சு?"

"எனக்கு தெரிஞ்சு அவ என்னை மூணு மாசமா தான் காதலிக்கிறான்னு நானே நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா இன்னைக்கு தான் ஒரு விஷயம் தெரிஞ்சுது. அவ என்னை ரெண்டு வருஷத்துக்கும் மேல தான் விரும்பிருக்கணும். எனக்கு எப்படி அது தெரியாம போச்சு." என்றவனின் விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.

"எப்படி அவ்ளோ உறுதியா சொல்ற?"

"இன்னைக்கு பாப்பாக்கு கொடுத்த பெய்ண்டிங் மாதிரி தான் உன் தங்கச்சி முதல் முதலா எனக்கு நானே வரைஞ்சுதுன்னு சொல்லி கொடுத்து ப்ரொபோஸ் பண்ணா." என்றான் முகம் இறுக.

"என்னது அவ வரைஞ்சாளா? டேய் அவளுக்கு ஒரு வட்டம் கூட ஒழுங்கா போட தெரியாது. அப்புறம் அவளுக்கு இந்த ட்ராயிங், ஆர்ட் ல எல்லாம் கொஞ்சம் கூட விருப்பம் இல்ல. அப்புறம் எப்படி உனக்கு வரைஞ்சு கொடுப்பா. அவ ஒரு ஆளுன்னு சொன்னா அதை நீயும் நம்பிருக்க." என்றான் மேகவர்மன் தலையில் அடித்து கொண்டு.

"டேய் எனக்கு எப்படி அவ பொய் சொல்றான்னு தெரியும் எல்லாத்துக்கும் மேல் அவ உன்னோட தங்கச்சி." என்றவனை வெட்டவா குத்தவா என்று முறைத்தான்.

"இந்த ஒரே டைலாக் இன்னொரு முறை சொன்ன அவ்ளோ தான் சொல்லிட்டேன். சரி அந்த மாதிரி யாரு வேணா வரையலாம். அது அபி தான் வரைஞ்சதுன்னு எப்படி சொல்ற?" என்றதும் தன் கப்போர்டில் இருந்து அவன் தங்கை கொடுத்த படத்தை எடுத்து கொடுத்தான்.

"இதுல இங்க அந்த பொண்ணுக்கு கீழே பாரு ரசிவீர் ன்னு போட்ருக்கு. இதே பேர் இதே கையெழுத்துல தான் இன்னைக்கு பாப்பாக்கு கொடுத்ததுலயும் இருந்தது.

அதை விட அந்த பேரை நல்லா கவனி “ரசிவீர்” ன்னு போட்ருக்கு. ரசி அவளோட கடைசி பேர் அரசி. என்னோட கடைசி பேர் வீரா, அதை வீர் னு சுருக்கி எங்க ரெண்டு பேர் பேரையும் சேர்த்து போட்ருக்கா. அன்னைக்கே இதை கொஞ்சம் ஒழுங்கா கவனிச்சு இருந்தா இன்னைக்கு எங்க ரெண்டு பேருக்கும் இவ்ளோ கஷ்டம் இல்லடா.

அப்போ உன் தங்கச்சிக்கு அவ என்னை விரும்புறது எப்பவோ தெரிஞ்சுருக்கு. அபி என்கிட்டே நெருங்கி பேச கூடாதுன்னு தான் அவசர அவசரமா இங்க இருந்து டிஸ்கண்டினியூ பண்ணிட்டு என் காலேஜ்ல சேர்ந்துருக்கா. அபி என்னை விரும்புறதை என்கிட்டே சொல்ல போறான்னு தான் அபி படிப்பு முடிய போற ஆறு மாசம் முன்னாடி திடிர்னு ஒரு நாள் என் வீட்டுக்கு வந்து பக்கத்து ரூம்லயே தங்கிக்கிறேன்னு தங்கி இருந்திருக்கா. அபிக்கிட்ட பேச விடாம என் கவனத்தை அவ பக்கமாவே வச்சிருந்தா. நானும் அவ தனியா இருந்ததால லோன்லியா பீல் பண்றான்னு விட்டுட்டேன். அதுதான் இன்னைக்கு நான் இப்படி பீல் பண்ணிட்டு இருக்கேன். என் லைஃப்ல என்ன நடந்துருக்குன்னு எனக்கு தெரியல. எனக்கு பைத்தியமே பிடிச்சிரும் போல இருக்கு." என்று தலையில் கரம் வைத்து அமர்ந்து விட்டான்.

நண்பனின் தடுமாற்றத்தை கண்டு வருந்தியவன், "சரிடா. நடந்ததை பத்தி பேசுறதால எந்த பிரயோசனமும் இல்ல. அபியை பத்தி தெரிஞ்சுக்கலாம். நான் விசாரிச்சு சொல்றேன். நீ டென்சன் ஆகாத. கொஞ்ச நேரம் எதை பத்தியும் யோசிக்காம அமைதியா தூங்கு." என்று சமாதானப் படுத்திவிட்டு வெளியேறினான்.

மெத்தையில் விழுந்தவனின் எண்ணங்கள் தன் கல்லூரி காலத்திற்கு சென்றது.
*****

தன் உண்மையான நேசத்தையும் காத்திருப்பையும் கூறும் வகையில் ஒரு ஓவியத்தை வரைந்து வண்ணமிட்டு அழகு படுத்தி தன் காதலை கூற கோவிலுக்கு ஒரு வித படபடப்புடனும் ஆசையுடனும் எடுத்துச் சென்றாள் அபி.

அதில் கண்ணனுக்காக காத்திருக்கும் மீரா கண்ணனை தூரத்தில் கண்டு விட்ட மகிழ்ச்சி முகத்தில் ஜொலிப்பதை போல் வரைந்திருந்தாள்.

கோவிலுக்கு எப்பொழுதும் வரும் நேரத்திற்கு முன்பே வந்து விட்டிருந்த அபி மயில்வீராவின் வருகைக்கு காத்திருந்தாள். எப்பொழுதும் வரும் நேரமும் கடந்துவிட வீரா வராமல் போகவும் என்னாயிற்று என்ற பதட்டத்துடன் வாயிலையே பார்த்திருக்க அவளின் பக்கவாட்டில் வைத்திருந்த ஓவியம் அவள் அறியாமல் களவாட பட்டிருந்தது.

வீரா அன்று வராமல் போகவும் இன்னொரு நாள் பார்த்து கொள்ளலாம் என்று ஓவியத்தை எடுக்க திரும்பி பார்க்கவும் அது இல்லாமல் போகவும் தேடி பார்த்தாள். எல்லா இடத்திலும் தேடியும் எங்குமே இல்லாமல் மிகவும் வருந்தி அழுதபடி வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.

அந்த நேரம் அதே கோவிலில் அதே இடத்தில் அவனுக்கு அதே ஓவியத்தை தான் வரைந்ததாக கூறி கொடுத்துக் கொண்டிருந்தாள் சுபாஷினி.

“என்ன சுபா திடிர்னு.. நாம இது வரைக்கும் அந்த மாதிரி பழகலையே?” என்றான் வீரா எதுவும் புரியாமல்.

“எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் வீரா. உன்னை என் உயிருக்கும் மேலா விரும்புறேன். எப்போ உன் மேல காதல் வந்துச்சுன்னு சரியா சொல்ல தெரியல. என்னோட அண்ணன் தினமும் உன்னை பத்தி எதாவது வந்து பேசிட்டே இருப்பான் அதுல ஏற்பட்ட ஆர்வமா கூட இருக்கலாம். ஆனா ஒன்னு மட்டும் தெரிஞ்சுது நீ இல்லாம என்னால இருக்க முடியாது வீரா ப்ளீஸ் என்னை நிராகரிச்சுறாத.” என்று கூறவும் சிறிது நேரம் யோசித்தவன், “எனக்கு இப்போதைக்கு உன் மீது காதல் வரலை சுபா. ஆனாலும் உன்னை நிராகரிக்கவும் எனக்கு எந்த காரணமும் இல்ல. எல்லாத்துக்கும் மேல என் நண்பன் மேகவர்மனோட தங்கச்சி. கொஞ்ச நாள் பழகுவோம் பிடிக்கும் போது கட்டிப்போம். சரியா?” என்றான்.

“சரி” என்று சிரித்தவள் அவனுடன் அவ்வப்பொழுது அலைபேசியில் பேசி பழகி காதல் வளர்த்தனர். கல்லூரி இறுதியாண்டு படிக்கும் பொழுது திடிரென்று திருமணம் செய்து கொள்வோம்.” என்று வற்புறுத்தவும் விரும்பும் பெண் தானே என்று சம்மதித்து வீட்டில் பேசி திருமண நாளை முடிவு செய்து திருமணமும் செய்து கொண்டனர்.

திருமணம் முடிந்து கொஞ்ச நாட்கள் இருவருக்கும் இனிமையாக தான் கழிந்தது. காதல் மனைவியுடன் இனிமையாக பொழுதுகளை கழித்து வந்தான் வீரா. மனைவி கருவுற்று இருப்பதை அறிந்தவன் அகம் மகிழ்ந்து போனான். மனைவியை கொண்டாடித் தீர்த்தான்.

எல்லாம் சரியாக தான் சென்றது சுபாவிற்கு குழந்தை பிறக்கும் வரை. சுபாஷினிக்கு வளைகாப்பு ஊரை கூட்டி விமரிசையாக செய்தான். ஓர் நாள் இரவில் வலி கண்டு பெண் குழந்தை பெற்றெடுத்தாள் சுபா. குழந்தை பிறந்த ஒரு வாரத்தில் அவளின் நடவடிக்கைகள் மாறத் தொடங்கின. குழந்தையை கவனிப்பதை நிறுத்தினாள் வீராவுடன் பேசுவதை தவிர்த்தாள். இதனால் இருவருக்கும் சண்டைகள் ஏற்பட, “எனக்கு உன்னை பிடிக்கலை வீரா. இனி உன்னோட என்னால வாழ முடியாது. என்னை உன்னால் முழுமையாக திருப்தி படுத்தவும் முடியாது தயவு செய்து என்னைத் தேடாதே.” என்று கடிதம் எழுதி வைத்து விட்டு பச்சை குழந்தையை பிறந்த ஒரு மாதத்திற்குள் விட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறினாள்.

நன்றாக இருந்தவள் எதற்காக திடிரென்று சண்டை போடத் துவங்கினாள். எதற்காக வீட்டையும் தன்னையும் விட்டு போனாள். காதலை கூறும் போது கூட தான் இல்லாவிட்டால் தன்னால் வாழவே முடியாது என்று கூறியவள் இப்பொழுது ஏன் பச்சை குழந்தையை கூட பொருட்படுத்தாமல் சென்றாள் என்று எதுவும் புரியாமல் யோசித்து யோசித்து அவன் வேதனையில் தூக்கமில்லாமல் கழிந்த காலங்கள் ஏராளம்.

மேகவர்மன் தங்கை செய்த வேலையில் நண்பனின் முகத்தில் முழிக்க முடியாமல் தடுமாற வீராவே மேகாவை தேற்றினான். அன்றில் இருந்து நண்பன் தான் மேகவர்மனுக்கு எல்லாமே.

எதனால் இப்படி நடந்தது என்று தெரியாமல் இருக்கும் போதே திடிரென்று ஒரு நாள் மருத்துவமனையில் இருந்து அழைப்பு வர பதட்டத்தோடு சென்று பார்க்கும் பொழுது விபத்தில் அடிபட்டு தன்னுடைய கடைசி மூச்சை வீராவை பார்த்துக் கொண்டே விட்டிருந்தாள் சுபாஷினி. என்ன இருந்தாலும் தான் உண்மையாய் காதலித்தவள் ஆயிற்றே நொறுங்கி தான் போனான் வீரா. பின் ஒரு வழியாய் தன்னை சரி செய்து கொண்டு மகளையும் அன்னையையும் மட்டுமே தன் உலகம் என்று வேலையில் கவனம் செலுத்தி அயராது உழைத்து முன்னேறினான்.

*****
தன் வீட்டிற்குள் நுழைந்து அனைவரிடமும் பேசிவிட்டு அறைக்குள் நுழைந்தவள் விழிகளில் இருந்து கண்ணீர் அருவி போல் கொட்ட தொடங்கியது.

"மறுபடியும் எதுக்கு என் கண்ல படறீங்க வீர். நீங்க வேணான்னு சொன்னதும் உங்க வாழ்க்கைல இருந்தே மறைஞ்சுட்டேன். என் வாழ்க்கையும் முழுசா அஸ்தமனம் ஆகிடுச்சு. இனி எதுவுமே மாற போறதில்ல. உங்களை அடிக்கடி பார்த்துட்டு எதுவுமே நடக்காத மாதிரி செத்து செத்து வாழ முடியாது. நான் இங்க இருந்து போறது தான் உங்க லைஃப்கு நல்லது எனக்கும் நல்லது. கூடிய சீக்கிரம் அதுக்கான ஏற்பாடு பண்றேன்." என்று தனக்குள் பேசி கொண்டவள் ஒரு முடிவுடன் விழிகளை துடைக்கவும் கதவு தட்ட பட்டது.

முகம் கழுவி வந்து திறக்க குழந்தையுடன் நின்றிருந்தார் கணேசன்.

"என்னப்பா என்ன சொல்றா உங்க பேத்தி?" என்று கேட்டுக்கொண்டே அவரை காணாமல் சமையலறைக்குள் நுழைந்து இருவருக்கும் டீ, ஹார்லிக்ஸ் போட்டு எடுத்து வந்தாள்.

வயதில் மூத்தவரல்லவா கண்டு கொண்டார் மகளின் அழுத முகத்தை.. இருந்தும் எதுவும் கேட்காமல் இருந்தார்.

"அப்பா கொஞ்ச நாளைக்கு வேற ஊருக்கு போவோமா? மனசு ஏனோ ஒரு மாதிரி இருக்கு. இடம் மாறினால் கொஞ்சம் நல்லாருக்கும்னு தோணுது." என்றாள் தயங்கியபடி.

"என்னடா திடிர்னு... ஏன் உன் முகம் ஒரு மாதிரி இருக்கு? ஹாஸ்பிட்டல்ல ஏதாவது பிரச்சனையா?" என்றார் கவலையாய்.

"அதெல்லாம் எதுவும் இல்லப்பா. திடிர்னு தோணுச்சு வேற ஒன்னும் இல்ல." என்று அமைதியாகி விட்டாள்.

"திடிர்னு வேற இடத்துக்கு மாத்தினா பாப்பாக்கு செட் ஆகாதுடா. வேணும்னா நமக்கு ஒரு மாறுதலுக்கு உன் பிரென்ட் ஊட்டில இருக்கா இல்ல அங்க ஒரு பத்து நாள் போய்ட்டு வருவோம் ஓகேவா? அவளும் கூப்பிட்டுக்கிட்டே இருக்கா உனக்கும் நேரம் கிடைக்கவே இல்லல்ல." என்றார்.

"சரிப்பா இது கூட நல்ல ஐடியா தான். நாளைக்கே நான் லீவ்க்கு சொல்லிடறேன். நாளை மறுநாள் கிளம்பலாம்." என்றாள்.

அவளின் இந்த பதட்டமும் அவசரமும் அவருக்கு குழப்பத்தையும் கவலையையும் தர வெளியே காட்டி கொள்ளாமல் அமைதியாக இருந்தார்.

"உடனே நீ லீவ் போட முடியுமாம்மா? இன்னும் மூணு நாள் போகட்டும் நானும் நமக்கு தேவையான ஏற்பாடெல்லாம் செய்து வைக்கிறேன்." என்றார்.

அவரை பொறுத்த வரை வளர்ந்திருந்தாலும் அபியும் தன் பேத்தியை போல சிறு குழந்தை தான். காலத்தின் கட்டாயத்தில் அவளின் வாழ்க்கை இப்படி இலக்கில்லாமல் துயரத்தில் பயணிக்கின்றது.

இதற்கான முடிவை தான் எதிர்பார்த்து கடவுளை ஒவ்வொரு நொடியும் வேண்டி கொண்டிருக்கிறார்.

என்று அவரின் வேண்டுதலுக்கு கடவுள் செவி சாய்ப்பாரோ என்று காத்திருக்கிறார். கடவுளின் அருள் அவருக்கு கிடைத்து விட்டதை சீக்கிரம் அறியவும் போகிறார்.

மகளை தூங்க வைத்தபின் தன் அறை ஜன்னலில் இலக்கில்லாமல் எங்கோ வெறித்து கொண்டிருந்தவளின் எண்ணங்கள் கடந்த கால கல்லூரி வாழ்க்கைக்குள் நுழைய தொடங்கியது. அவள் வாழ்க்கையின் சிறந்த பொக்கிஷமான வசந்த காலம் அவை. அவனை போலவே அழகானதும் கூட அனுமதி இல்லாமல் அவள் மனமும் இதழும் விரிந்தன.

"வீர்." இதழ் மிக மென்மையாய் உச்சரித்தது அவள் மனம் கவர்ந்த மன்னவனின் பெயர்.
 
மயிலரசி 8:



அவனை பற்றி நினைத்தாலே அவளுக்குள் எப்பொழுதும் சில்லென்ற தென்றல் ஒன்று வீசி செல்லும். எப்படி பட்ட குழப்பத்திற்கும் நொடி பொழுதில் தீர்வு கிடைத்து விடும். அவளின் திருமணம் நடைபெறும் நொடி வரை தான் அவை எல்லாம்.

தவிர்க்க முடியாத கட்டாயத்தின் பேரில் திருமணம் நடைபெற்றாலும் தாலி கட்டிய கணவனுக்கு உண்மையாய் இருக்க வேண்டும் என்று அவனின் நினைவுகளை தன் இதயத்தில் இரும்பு பூட்டு கொண்டு பூட்டி வைத்துவிட்டாள் என்பது தான் உண்மை. அதன் பிறகு அவள் வாழ்வில் நடைபெற்ற அடுத்தடுத்த நிகழ்வுகளில் வேறு எதையும் நினைக்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறாள். அதோடு மகள் வந்த பிறகு பொறுப்புகள் கூடி தேவையற்ற எந்த சிந்தனையையும் யோசிக்க கூட அவள் விரும்பவில்லை.

ஆனால் அவனின் எதிர்பாராத இந்த வருகை அவளை நிலை குலைய வைத்திருந்தது. இன்று எப்படியோ அவன் முன் எதையும் காட்டி கொள்ளாமல் சிரமப்பட்டு பேசி அனுப்பி விட்டாள். ஆயிரம் தான் அவள் தன் உணர்வுகளை காட்டாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் அவள் அவன் மேல் கொண்ட ஆழ்ந்த நேசம் எங்கே வெளிப்பட்டு விடுமோ என்ற பயம் உண்டாகி அவனை கண்ட நொடி முதல் அவளை பயமுறுத்த தொடங்கி விட்டது.

***** flashback
சிறுவயது முதல் தந்தையுடன் பேசாமல் வைராக்யத்துடன் வளர்ந்தவள் தான். ஒரு நிலைக்கு மேல் சித்தி செய்யும் கொடுமைகளை சகிக்க முடியாமல் வெளிநாட்டிற்கு படிக்க பறந்து விட்டிருந்தாள்.

அவள் இப்புவியில் பிறந்ததற்கான காரணம் இங்கு தான் இருக்கின்றது என்று அவள் உணரத் தொடங்கிய காலம் அது தான்.

முதல் இரண்டு வருடங்கள் எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் தான் சென்றது. படிப்பில் கெட்டிக்காரி என்பதால் ஓரளவு கல்லூரியில் நற்பெயரையும் மாணவர்களின் கனவு நாயகியாகவும் இருந்து வந்தாள். இருந்தும் அதையெல்லாம் அவள் என்றும் பெரிதாக எடுத்து கொண்டதில்லை. அவளின் இலக்கு படிப்பு அதில் மட்டுமே குறியாய் இருந்தாள்.

அவளை மாற்ற தமிழகத்தில் பிறந்த கருந்தேக மலை ஒன்று வந்து கொண்டிருக்கிறது என்பதை அறியாமல் மூன்றாம் ஆண்டின் முதல் நாள் அதுவும் அவளின் பிறந்தநாள் அன்று என்பதால் அங்கிருந்த சிவன் கோவிலிற்கு சென்றிருந்தாள்.
அவளுக்கு ஆறுதல் என்றால் அவள் அப்பன் ஈசன் மட்டுமே... விழிமூடி கரம் கூப்பி, “ஈசனே” என்று மனமுருகி நின்றுவிடுவாள்.

அர்ச்சனை தட்டை வாங்கிக் கொண்டு கோவிலின் முதல் படியை தொட்டு வணங்கிட அடித்தது கோவில் மணி. மனம் லேசான உணர்வோடு நிமிர்ந்து பார்க்க ஆறடி சிற்பம் ஒன்று குழந்தையை தூக்கி மணி அடிக்க வைத்து சிரித்து கொண்டிருந்தது. பால் நிறம் கொண்டு அனைவரையும் கவரும் அழகனில்லை தான் அவன்... ஆனால் அதற்கும் மேல்... நம் தமிழ் மண்ணின் கரிசல் நிறத்தோடு தங்கமாய் ஜொலித்து பார்ப்பவரை கட்டி போடும் அழகு சிலை தான். அவளும் அதில் சேர்ந்து விட்டாள். கண்டதும் அப்படி ஒரு நேசம்... அவன் கரத்தில் இருக்கும் குழந்தையாய் தான் இருக்க வேண்டும் என்று என்னும் அளவிற்கு குழந்தையாய் ஏங்க தொடங்கிய நேசம் அது. இதுவரை ஆண்களை காணாதவள் அல்ல அவள். தந்தை செய்த செயலால் ஆண்களை பிடிக்காமல் எத்தனையோ ஆண்களை கடந்தும் நிராகரித்தும் வந்திருப்பவள் தான். ஆனால் இன்று ஒரு கரிசல் மலை தனக்குள் அவளை ஈர்த்துக் கொண்டிருந்தது

அவளையுமறியாமல் அவள் மனம் அவனிடம் செல்ல, மங்கையின் மனதை சேதாரப் படுத்துகிறோம் என்று எதுவும் தெரியாமல் அங்கே வருவோருக்கு இனிப்பு வழங்கி கொண்டிருந்தான் மயில்வீரா. முருகனின் பெயர் கொண்ட அழகு சிற்பம். அவன் அருகில் செல்ல செல்ல வியர்வை துளிகள் அரும்பி இதயம் வேகமாய் துடிக்கத் தொடங்கியது. இருப்பினும் அவனின் காந்தக் குரல் அவளை நிற்க வைத்தது.

"மேம் டுடே இஸ் மை மாம்ஸ் பர்த்டே. சோ ஹவ் அ ஸ்வீட் அண்ட் பிரே பார் ஹெர் லாங் லைஃப்." என்று அவளை கொல்லும் புன்னகையோடு வழங்க மறுக்க மனம் வருமா என்ன? மெல்லிய இதழ் விரிப்பில் வாங்கி கொண்டவள் வாழ்த்துக்கள் கூறி மின்னலென கூட்டத்திற்குள் மறைந்திருந்தாள்.

அவனின் மனம் ஏனோ அவளை ஒரு முறை ஒழுங்காய் காண வேண்டும் என்று அடம் பிடிக்க விழிகளில் சிக்காமல் கரைந்திருந்தாள். இளம்பச்சை நிறத்தில் தாவணி உடுத்தி காண்பதற்கு கண்கள் உறுத்தாத நம் தமிழ் மணம் மாறா தேவதை போல் இருந்தவளின் முகத்தை கூட சரியாக காணவில்லை என்ற எண்ணம் தான்.

அவள் மட்டும் என்ன சளைத்தவளா உடல் மட்டும் நகர்ந்திருக்க அவன் காலடியில் சரணடைந்து வர மறுத்த இதயத்தை ஒரு வழியாய் கெஞ்சி கொஞ்சி அழைத்து செல்ல அவள் பட்ட பாடு அவள் மட்டுமே அறிவாள்.

ஒரு நொடி பார்த்தவனானாலும் வாழ்க்கை முழுவதும் அவன் நேசம் வேண்டுமென தவம் கிடக்கின்ற மனதை தட்டி அடக்கி அங்கிருந்து கூட்டிச் சென்றாள்.

அதன்பிறகு ஒரு மாதம் அவள் கண்ணில் அவன் படவே இல்லை. அவனை காண்பதற்காகவே கோவிலுக்கு தினமும் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டாள். முழுதாக முப்பது நாட்கள் முடிந்த பின்னர் அவளுக்கு தரிசனம் தந்தான் அவளின் கனவு நாயகன்.

அவனை காண தினமும் கோவிலுக்கு எப்படி சும்மா வருவது என்று அங்கிருக்கும் தமிழ் குழந்தைகளுக்கு சில நாட்களுக்கு மட்டும் பாட்டு கற்று கொடுக்க ஆரம்பித்தாள்.

அதனால் தினமும் வர வேண்டிய அவசியமும் ஏற்பட்டது. நீண்ட நாட்கள் கழித்து கிடைத்த அழகனின் தரிசனத்தில் அகம் மகிழ்ந்து போனாள்.

அதன் பிறகு வாரம் இரு நாட்கள் அவன் கோவிலுக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளான் என்பதை அறிந்து கொண்டவள் அந்நாட்கள் மட்டும் தவறாமல் வர தொடங்கினாள். அவனுக்கு தெரியாமல் ரசிப்பது மட்டுமே அவளின் வேலை.

அவனை பின் தொடர்ந்து அவனிருக்கும் இடத்தை அறிந்து கொண்டவள் அவன் பிளாட்டிற்கு எதிர் பிளாட்டை வாங்கி விட்டாள். ஆனாலும் அவனுக்கு எதிரில் போக ஏதோ ஒரு தயக்கம். அவனுக்கு தெரியாமல் அங்கே குடி ஏறினாள். அங்கே ஒரு பெண் குடியேறி உள்ளாள் என்பது வரை அவன் அறிந்து கொள்ள வைத்தாள்.

மயில்வீரா நம் தமிழ்நாட்டின் பெருமை மிக்க கரிசல் மண்னின் அழகன். நடுத்தர வர்க்கம் என்றும் கூற முடியாது ஏகபோகமாய் வசதி படைத்தவர்கள் என்றும் கூற முடியாது. மயில்வீராவின் தந்தை இருசக்கர வாகனங்களின் உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வந்தார். அவன் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் போது பெங்களூருக்கு தொழில் நிமித்தமாக மீட்டிங் ஒன்றிற்கு சென்று வரும் பொழுது விபத்தில் உயிரிழந்தார். தந்தையின் எதிர்பாரா மரணம் அவனை நிலைகுலைய செய்ய தோள் கொடுப்பான் தோழன் என்பது போல் துணை நின்றான் மேகவர்மன். நண்பனுடன் சேர்ந்து அவன் துக்கத்தில் இருந்து வெளி வர உதவியவன் அவன் தந்தை நடத்தி கொண்டிருந்த தொழிற்சாலையை நடத்த உதவி செய்தான். படிப்பையும் தொழிலையும் ஒரு சேர கவனிக்க முடியாமல் இருவரும் திண்டாட அவர்களுக்கு கரம் கொடுத்தார் தாமரை வீராவின் அம்மா. இருவரையும் படிப்பில் கவனம் செலுத்த கூறிவிட்டு தொழிலில் அவர் இறங்கினார். ஏற்கனவே கணவருடன் சேர்ந்து பணியாற்றிய அனுபவம் இப்பொழுது அவருக்கு சிறிது கரம் கொடுக்க சரிவில் விழாமல் தொழிலை நடத்த முயற்சித்து கொண்டிருந்தார். கணவரின் மறைவை அறிந்த போட்டி தொழிற்சாலைகள் அவருக்கு இடைஞ்சல் கொடுக்க சற்று தடுமாறினாலும் விழாமல் தொழிலை திறம்பட நடத்தி வந்தார்.

கல்லூரிக்கு சென்றாலும் அன்னைக்கு தங்களால் முடிந்த அளவு உதவி செய்தவர்கள். படிப்பை ஒரு வழியாக முடித்தனர். சாரதாவும் மேகவர்மனும் மயில் வீராவை வற்புறுத்தி லண்டனில் பிஸ்னெஸ் மேனேஜ்மென்ட் படிக்க அனுப்பி வைத்தனர். இங்கிருந்தே சில நேரம் அன்னைக்கு உதவினாலும் இங்கு வந்த காரணத்தை நிறைவேற்ற அயராது படித்தான். நண்பன் அன்னையுடன் தொழிலை கவனித்து கொள்ளும் தைரியத்தில் இங்கு நிம்மதியாக படிக்கவும் முடிந்தது அவனால். அந்த வகையில் மேகவர்மன் தான் அவனுக்கு எல்லாம்.

மேகவர்மனும் அவன் தங்கை சுபாஷினியும் சிறுவயதிலேயே தாய் தந்தையை இழந்தவர்கள். ஆசிரமத்தில் வளர்ந்தவர்கள். பத்தாம் வகுப்பின் போது தான் மேகவர்மன் வீராவை சந்திக்க அவர்கள் நட்பு உருவானது. கிடைக்கும் சிறு சிறு வேலைகளை செய்து தங்கைக்கு தேவையானவற்றை வாங்கி தருவான் மேகவர்மன். ஆனாலும் சுபாஷினிக்கு போதவில்லை. வசதி வாய்ப்புகள் வேண்டும் என்று மனம் ஏங்கியது. வருடங்கள் ஓட ஏக்கம் வளர்ந்து ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட கல்லூரியில் கூடா நட்பு ஏற்பட்டு தவறான வழியில் போக தொடங்கியிருந்தாள். தங்கை ஆசிரமத்தில் பல குழந்தைகளை பார்த்து வளர்வதால் தவறான வழிக்கு செல்ல மாட்டாள் என்ற நம்பிக்கையில் நண்பனுக்கு உதவி கொண்டிருந்தான் மேக்கவர்மன். தங்கையின் இந்த கூடா நட்பு அவளின் வாழ்க்கையும் மட்டுமல்லாது உடன் இருப்பவர்களின் வாழ்க்கையும் சேர்த்து கெடுக்க போகிறது என்று அறியாமல் போனான் மேகவர்மன்.

வீராவை பற்றி நன்கு எல்லாம் அறிந்து கொண்டவள் அவன் அன்னையின் மீது கொண்டுள்ள பாசத்தை கண்டு அவன் மீது பித்தாக தொடங்கினாள். அவள் தான் செய்கிறாள் என்று காட்டி கொள்ளாமல் அவனுக்கு பிடித்த அனைத்தையும் அவனுக்காக செய்தாள்.

இதற்கு மேலும் ஒரு வேலை செய்தாள். அவனுக்கு இந்திய உணவு சமைக்க ஒருவரை ஏற்பாடு செய்திருந்தான். அந்த வயதான பெண்மணியிடம் நட்பு பாராட்டி அவனுக்கு பிடித்த உணவுகளை தெரிந்து கொண்டு அவனுக்காக பார்த்து பார்த்து சமைத்து கொடுத்தாள். தான் சமைத்ததாக எக்காரணம் கொண்டும் கூறக் கூடாது என்று மன்றாடி வேண்டிக் கொண்டாள்.

அபியின் நேசத்தை கண்டு அவர்கள் நன்றாக வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டி கொண்டு அவளுக்கு உதவி செய்தார்.

மயில்வீராவுக்கு தெரியாமலே அவனுக்காக அனைத்தையும் பார்த்து பார்த்து செய்தாள். அவன் இல்லாத நேரம் மட்டும் தான் அவளின் சேட்டைகள் எல்லாம். அவன் வீட்டில் இருந்தால் இந்த பக்கம் எட்டி கூட பார்க்க மாட்டாள்.

ஆனால் அவனுக்கான சமையலை வீட்டிற்கு வெளியேவே பாட்டியிடம் சேர்த்து விடுவாள்.

அவனுக்கு சமைத்தாள், துவைத்தாள், அறையை சுத்தம் செய்தாள். வீட்டை அழகாக்கினாள். ஆனால் அவை எல்லாம் பாட்டி செய்ததாக அவனுக்கு முன் உருவக படுத்தினாள்.

"ஏன் தங்கம் இவ்வளோ உயிரா இருக்கியே அப்புறம் ஏன் அந்த தம்பி கிட்ட உண்மையை சொல்ல மாட்டேங்குற? சீக்கிரம் நீ நேசிக்கிறதை சொல்லி ரெண்டு பேரும் சந்தோஷமா வாழுங்க புள்ள." என்றார் பாட்டி.

"இப்போதைக்கு இது இப்படியே இருக்கட்டும் பாட்டி. நாங்க ரெண்டு பேருமே படிச்சுட்டு இருக்கோம் இல்லையா? எங்க கவனம் படிப்புல இருக்கணும்ல அதான் சொல்லாம இருக்கேன். கூடிய சீக்கிரம் சொல்லிடுவேன் பாட்டி. உங்களையும் எங்க கல்யாணத்துக்கு கூப்பிடுவேன். நீங்களும் கண்டிப்பா வரணும் சரியா?" என்று கேட்டாள்.

"கண்டிப்பா நான் உயிரோட இருந்தா வரேன் கண்ணு. ரெண்டு வருஷம் கழிச்சு நானும் இந்தியா போயிருவேன் தங்கம். அதுக்குள்ள நீங்க சேர்ந்துரனும்." என்றார்.

"சரி பாட்டி. எனக்கு ஒரு வாரம் எக்ஸாம் இருக்கு. இந்த பக்கம் வர முடியாது. ஏதாவது தேவைன்னா கூப்பிடுங்க." என்று வெளியேறினாள்.

இப்படியே மூன்றரை வருடங்கள் மாயமாய் ஓடி போனது. அவளின் காதலும் அவனுக்காக பாகாய் உருகி உள்ளுக்குள் வழிந்து கொண்டே இருந்தது.

அவனிடம் இப்பொழுது அவளின் நேசத்தை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறாள். இவ்வளவு நாள் எது தடுத்ததோ அதுவே இப்பொழுதும் தடுக்கிறது.

ஆம், இவ்வளவு நாளும் அவளுக்குள் இந்த பயமே அவன் முன் செல்லாமல் தன் நேசத்தை சொல்லாமல் இருப்பதற்கு காரணம். சிறு வயதில் தாயை இழந்தவள் தந்தையையும் ஒதுக்கி வைத்தவள். அவள் யாரை மிகவும் நேசிக்கிறாளோ அவர்களை விதி அவளிடம் இருந்து பிரித்து விடுகிறது என்ற மாயத் தோற்றத்தை அவளுக்குள் விதைத்திருந்தாள். இருந்தும் கடந்த இரு மாதம் அவனுடன் இருக்க வேண்டும் என்று மனம் கெஞ்சி கொண்டிருக்கிறது. இதோ இன்றோ நாளையோ சொல்ல வேண்டும் என்று முடிவெடுத்து நகர்த்தி கொண்டிருக்கிறாள்.

இப்படி ஒருத்தி உயிராய் தன்னை நேசிக்கிறாள் என்பதே தெரியாமல் அவனும் அவன் படிப்பு மற்றும் இதர வேலைகளை பார்த்து கொண்டிருக்கிறான். பாக்கியம் பாட்டியிடம் மேகவரமனும் வீராவை பற்றி விசாரித்து கொண்டிருந்தான்.

இன்னும் ஆறு மாதங்கள் தான் இருந்தது அவளின் குழந்தைகள் நலமருத்துவ படிப்பு முடிய.

ஒரு நாள் பாட்டிக்கு உடல்நிலை சரி இல்லை என்று அவரை கட்டாயப்படுத்தி வீட்டுக்கு அனுப்பிவிட்டு வழக்கமான வேலைகளை செய்துவிட்டு தன் வீட்டிற்கு வந்துவிட்டாள்.

அவள் சென்ற சிறிது நேரத்தில் அவன் உள்ளே நுழைய, "பாட்டி பசிக்குது இன்னைக்கு என்ன சமைச்சிருக்கீங்க?" என்று கேட்டபடி சோர்வாய் வந்து அமர்ந்தான்.

எந்த பதிலும் இல்லை. தட்டு தடுமாறி எழுந்து சமையலறைக்குள் சென்றான் அவரை காணவில்லை ஆனால் சமைத்து வைக்கப் பட்டிருந்தது. ஒரு தட்டில் போட்டு கொண்டு வந்து சோபாவில் அமர்ந்தவனால் ஒரு வாய்க்கு மேல் உண்ண முடியவில்லை. உடல் சோர்வு வாட்டி எடுத்தது.

அந்நேரம் வாசலில் அழைப்புமணி அடிக்க எழுந்து சென்று கதவை திறந்தான். முதல் முறை துணிந்து மனம் கவர்ந்தவனை காண வந்துவிட்டாள். அவன் வீட்டிற்குள் சோர்ந்து நுழையும் போதே கண்டவள் மனம் கேளாமல் அவனுக்கு தரிசனம் கொடுத்து விட்டாள்.

(இதில் இருந்து தான் வீராவை பொறுத்தவரை மயில்வீராவின் கடந்த காலம் தொடர்கிறது.)
 

New Threads

Top Bottom