அற்புதம் -3
பாலகர்கள் அனைவரும் சத்தமில்லாமல் அதே நேரம் எவரது கண்ணிலும் படாமல் இருப்பதற்காக மேனி முழுவதும் கருஞ்சாந்தை பூசிக்கொண்டும், அதன்மேல் மெல்லிய துணியைப் போர்த்திக் கொண்டும் அங்கிருந்து ஒருவர் பின் ஒருவராக நகர்ந்தார்கள். அனைவரின் பின்பும் இறுதியாக தானும் தன்னை முழுதாக முக்காடிட்டுக் கொண்டு அவர்களைப் பின்தொடர்ந்து சென்றாள் அந்தரி..
முன்பு ஒருமுறை தன் தந்தை இரவு வேளையில் எதற்காகவோ இந்தப் பாதையில் செல்வதைக் கண்ட மிகிரன் தானும் அவரைப் பின் தொடர்ந்து வந்தான். பாதாள லோகத்திலிருந்து மேற்பகுதிக்கு செல்வதற்கான வாயிலின் அருகில் வந்தவன் எவ்வாறு தந்தை வெளியேறுகிறார் என்பதை நின்று கவனித்து விட்டு, அதன் பின் திரும்பி வந்த வழியே தன் இருப்பிடத்திற்கு சென்று விட்டான். இப்போதும் அதே வழியில் பொறுமையாக நடந்தான். முள் செடிகளும், புதர்களும் அடந்திருந்தாலும் அனைத்தையும் ஒதுக்கிக் கொண்டு லாவகமாக அவன் முன்னே செல்ல, அவனைப் பின்பற்றி அவனது தோழர்படைகளும் நடந்து செல்ல. இறுதியாக வந்த அந்தரியும் கவனமுடன் தன் உடைகளில் எந்த கிழிசல்களும் ஏற்படாதவாறு மிக மிக கவனமுடன் அவர்களைப் பின் தொடர்ந்தாள்.
அடர்ந்து வளர்ந்திருந்த பலவகை புல், பூண்டுகளையும், நெருங்கி அடர்ந்து வளர்ந்திருந்த இது வரை யாரும் கண்டிடாத மரங்களையும், வளைவு நெளிவுகளை கொண்ட வனப்பகுதிகளையும் லாவகமாக கடந்து சென்ற மிகிரன் ஓரிடத்தில் அப்படியே நின்றான். இருளில் வெளிச்சமின்றி நடக்க முடியாது என்பதால் தான் வேறு மார்க்கம் கண்டிருந்தான்.
பெரும்பாலும் இங்க வாழ்வோரின் இல்லங்களில் வெளிச்சத்திற்காக பிசின்களும், உலர்ந்த மரத்துகள்களும் பயன்படுத்தப்படுகின்றன. இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் பிசின் நிறைந்தக் குடுவையை வெளிச்சத்திற்காக எடுத்து வந்தால் எங்கே எவரது விழிகளிலாவது தாங்கள் பட நேர்ந்துவிடுமோ? என்பதால் தான் அதை தவிர்த்து விட்டு வெளிச்சத்தை தரக்கூடிய கண்ணாம் பூச்சிகளை (மின்மினிப் பூச்சி) கொண்டு வந்திருந்தான். முழுதாக சற்று பெரிய அளவில் இருக்கும் கனிகளின் உள்ளே இருக்கும் சதைகளையும், விதைகளையும் நீக்கி விட்டு அதன் மேற்தோல்களைக் கவனமுடன் உரித்து அடுக்கடுக்காக இருக்கும் நார்களையெல்லாம் அகற்றி விட்டு கண்ணாடி குடுவை போல் செய்து வைத்திருக்க. அதில் கண்ணாம் பூச்சிகளைச் சேகரித்து எடுத்து வந்திருந்தான், அதனால்தான் எந்த தடங்கலுமின்றி அவனால் முன்னேற முடிந்தது.
இதோ வெளியுலகைக் காண்பதற்கான நுழைவாயிலின் அருகே வந்துவிட்டனர். ஆனால் நுழைவாயிலை எப்படி திறந்து வெளியே செல்வது என்று தெரியாமல் ஒரு கணம் குழம்பி நின்றான் மிகிரன். ஏனெனில் தன் தந்தை அருகிலிருந்த மரங்களின் மீது தன் கையை வைத்து அழுத்த, அதன்பிறகே நுழைவாயில் திறந்தது என்பதை மீண்டும் நினைவு கூர்ந்தவன் தொடர்ச்சியாக அங்கிருந்த மரங்களின் மீது கைகளை வைத்து தடவ எதன்மீதோ அவன் விரல் பட்டதும், திறவுகோல்
ஒன்றினை அம்மரம் வெளிக்கொணர்ந்தது. அதைக் கண்டு அவன் வதனம் பூரிப்பில் மலர்ந்தது. தன் விரல்களை அத்திறவுகோலில் வைத்து அவன் அழுத்தியதும் சப்தமின்றி தலைக்கு மேலே இருந்த பகுதி திறந்து கொள்ள, படிகளும் நொடியில் உருவாயின.
இதெல்லாம் எப்படி நடக்கிறது? என்பதை அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே வேகவேகமாக படி ஏறினான் மிகிரன். ஏனெனில் சொற்ப நொடி நேரங்களுக்கு மட்டுமே இந்த வாயில் திறந்து இருக்கும் என்பதை அவன் அறிந்து இருந்ததால் தான் துரிதமாகச் செயல்பட்டான். அவனைப் பின்பற்றி அனைவரும் அவன் பின்னேயே மேலேறினார்கள். மேலே சென்றதும் மிகிரன் சற்று தள்ளி நின்று கொள்ள, மேலேறிய அனைவரும் அவன் அருகில் வந்து நின்றனர். இன்னும் சில மணித்துளிகளில் நுழைவாயில் மூடி விடும் என்பதால் எந்த ஒரு அலட்டலும் இல்லாமல் வெளியுலகை! அதன் அழகை!. அதன் பரப்பளவை! அதன் செழுமையை! அதன் ஆளுமையை! விழி கொண்டு ரசித்தவாறு அனைவரும் நின்றிருக்க. நுழைவாயில் வழியாக தலையை மட்டும் நீட்டி அனைவரையும் கவனித்த அந்தரி யாரும் தன்னை பார்க்கவில்லை என்றதும் சட்டென்று தன் உடலையும் வெளியே இழுத்துக் கொண்டு, வெளியேறியவள் ஓர் அடி எடுத்து வைப்பதற்குள் நுழைவாயில் சத்தமின்றி மூடிக்கொண்டது..
‘கணநொடி தாமதித்திருந்தாலும் என் சிரசு சிதறி இருக்கும். நல்ல வேளையாக தப்பித்து விட்டேன்’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள் சத்தமில்லாமல் பதுங்கி பதுங்கி முன்னேறினாள் ஓரவிழியால் அவர்களைப் பார்த்துக் கொண்டே.. வளர்ந்து, அடர்ந்து நின்றிருந்த கொடும் வனத்தினை விழிகளால் அலசி ஆராய்ந்தவள் புதர் போல் மண்டிக்கிடந்த பகுதிக்குள் நுழைய சென்ற வேளையில் சத்தமில்லாமல் சுருண்டு படுத்திருக்கும் ஆளுயர சர்ப்பத்தைக் கண்டு விட்டாள்..
அவர்கள் வசிக்கும் இடத்திற்கு பெரும்பாலான விலங்குகள், பறவைகள் ஏன் இன்னபிறவற்றும் வர வாய்ப்புகள் குறைவு. ஆதலால் அங்கிருப்பவர்களுக்கு அதைக் காணும் வாய்ப்பும் கிடையாது.. கூடவே அவர்கள் ஏடிசுவைத் தவிர அனைத்து உயிர்களையும் காக்கும் கடவுளான காளிதேவியையும் வணங்குவதாலும், அவளது பூரண அருளாசி இருப்பதாலும் இது போன்ற நஞ்சு கொண்ட பிராணிகளை அவர்கள் காண்பதில்லை. ஆனால் பெரிய விலங்குகள் இன்றி இது போன்ற ஊர்வன இனத்தை மட்டும் அந்தரி ஏற்கனவே கண்டிருக்கிறாள், அதுவும் சிறிய அளவில் இருக்குமே தவிர இப்போது பார்ப்பது போல் அத்தனை பெரியதாக இருக்காது. அதனாலேயே சிறு பெண்ணவள் அஞ்சி நடுங்கி விட்டாள். அச்சத்தில் எச்சில் சலவாயை கூட்டி விழுங்கியவாறு ஈரடி பின்னால் எடுத்து வைத்தவள், கொத்துக்கொத்தாய் மஞ்சள் நிறக் கனிகளை காய்த்து தொங்கவிட்டிருக்கும் பெரிய மரத்தின் பின்னே தன்னை மறைத்துக் கொண்டாள். அந்த பெரிய சர்ப்பம் அங்கிருந்து நகர்ந்து சென்றதும் தான் அவளுக்கு உயிரே வந்தது போலிருந்தது.
நடுநிசியான இவ்வேளையில் பசி வேறு வயிற்றைக் கிள்ள சரசரவென்று மரத்தின் மீது ஏறியவள் ஒற்றைக் கனியைப் பறித்து தன் மடியில் இருத்திக் கொண்டு, மற்றொரு கனியை கையில் வைத்துக்கொண்டு சத்தமில்லாமல் கீழே இறங்கி அந்த மரத்தின் பின்னே சாய்ந்து அமர்ந்தவள், அதை எடுத்துப் புசிக்க சென்ற வேளையில், மிகிரனுடன் இருந்த அவன் தோழர் படைகளில் ஒருவனான மணிமான், “மிகிரா அங்கே பாரேன்! அம்மரத்தில் எவ்வளவு கனிகள் காய்த்துத் தொங்குகிறதென்று. எனக்குப் பசி வேறு எடுக்கிறது, வேண்டுமென்றால் நான் மட்டும் சென்று இரு கனிகளைப் பறித்து உண்டு விட்டு வந்துவிடட்டுமா? அதீத பசி உடல்நிலையைப் பாதிக்குமென என் தாயார் கூறியிருக்கிறார்..”என்று கூற. அவன் சொன்னதைக் கேட்டு அவனை முறைத்த மிகிரன் ஏதோ சொல்ல வருவதற்குள், அவனது தோழர் படைகளில் இருந்த மற்றவர்களும் தங்களுக்கும் பசிக்கிறதென்று சொல்ல. வேறு வழி இல்லாமல் அனைவரையும் அழைத்துக்கொண்டு அம்மரத்தை நோக்கி நடந்தான்.
அவர்களை ஓரவிழியால் பார்த்தவாறு கனியை புசிக்கச் சென்றவள் அவர்களனைவரும் தன்னை நோக்கி வருவதைக் கண்டதும் சட்டென்று எழுந்து நின்று தான் அணிந்திருந்த உடைகளுக்குள் கனிகளைச் சுருட்டி பத்திரப்படுத்திக் கொண்டு சத்தமில்லாமல் அங்கிருந்து நகர்ந்தாள். அவர்களை விட்டுச் சிறிது தூரம் சென்றால் மட்டுமே இக்காட்சிகளை ரசிக்க முடியும், தான் எண்ணியதை செயலாக்க முடியும் என்பதை உணர்ந்தவள் சத்தமில்லாமல் அந்த அடர்ந்த வனத்திற்குள் மெல்ல மெல்ல மண்டி போட்டவாறே நகர்ந்தாள்..
அவர்கள் அனைவரும் அந்த மரத்தை அடையும் வேளையில் தொலைதூரம் சென்றிருந்தாள் அந்தரி. அங்கு இழைத் தழைகளையும், மரப்பட்டைகளையும் கொண்டு குடில் ஒன்று அமைக்கப்பட்டிருக்க. அந்தத் திறந்த வெளிக் குடிலின் மத்தியில் கிளிஞ்சல்களாலும்,பல வண்ண குழாங்கற்களாலும் நிலை மேடை (மேசை) ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.
அந்நிலை மேடையின் மீது பெரிய அளவிலான கிளிஞ்சல்களில் பலவண்ண நிறத்தைக் கொண்ட பழங்களும், அழகாக கோர்க்கப்பட்டிருந்த வெண்மை, பழுப்பு மற்றும் வானவில்லின் நிறப்பிரிகையைக் கலவையாகக் கொண்ட முத்து மாலைகளும், அலங்கார அணிகலன்களும் வீற்றிருந்தன. மேலும் அலங்கரிக்கப்பட்ட இலைகளினாலான நிலை மேடையின் மீது சிறு பெண்ணொருத்தி அணியும் அளவிற்கான பிரத்யேக பவளமணி மாலைகளும், நவரத்தின மணிமாலைகளும், மற்ற பாகங்களில் அணியும் மாலைகளும் இருந்தன. அவற்றையெல்லாம் கண்ட அவளது விழிகள் ஆச்சரியத்தில் அகலமாய் விரிந்தன. இதை யார் இங்கே வைத்திருப்பார்கள்? எதற்காக வைத்திருக்கிறார்கள்? என்பதை கூட உணராதவளாய் வேகமாக அதன் அருகில் நெருங்கி அதில் மிகவும் அழகாக இருந்த பவளமணி மாலை ஒன்றை எடுத்து தன் கழுத்தில் அணிந்து கொண்டவள், இடையினை அலங்கரிக்கும் முத்துக்களாலான இடையணியை அணிந்து கொண்டாள். மேலும் விரல்களில் பவளங்களோடு முத்துக்கள் இணைந்திருந்த கணையாழியையும் ( மோதிரம்), முத்துக்களால் இழைக்கப்பட்ட காதோலைச்சுருளையும்( தோடு), கால்களில் கொலுசுமணி மாலைகளையும் அணிந்து அழகுபார்த்தாள். கூடவே அங்கிருந்து இரு கனிகளை எடுத்துக்கொண்டு குடிலுக்குள் சென்று, அங்கு விரிக்கப்பட்டிருந்த மலர் விரிப்பில் அமர்ந்து உண்ண தொடங்கினாள்..
சரியாக இரு பழங்களில் ஒன்றை உண்டு முடித்தவளுக்கு சட்டென்று இதழோரம் நுரை தள்ள ஆரம்பிக்க, கை கால்கள் வெவ்வேறு திசையில் இழுத்துக் கொள்வது போலிருக்க, சுவாசத்திற்கு ஏங்குபவள் போல் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியவளுக்கு நீர் தாகமெடுத்து, நீர் அருந்த வேண்டும் போல் இருந்தது. முயன்று தன் கால்களை இழுத்து தட்டுத் தடுமாறி கடல் அலையை நோக்கி ஓடினாள் நீர் தாகத்தை தணித்துக் கொள்வதற்காக..
இவ்வளவு நேரம் அலைகளின் ஓசையையும், விழிகள் காணும் திசையெங்கும் கருமையை குடைபிடித்திருக்கும் வான்வெளியையும் இமைத்தட்டாது ரசித்துக் கொண்டு கனியை ருசித்துக் கொண்டிருந்தவளுக்கு திடீரென்று ஏதேதோ மாற்றங்கள் நிகழ. அவையெல்லாம் அச்சத்தையும் கொடுக்க சட்டென்று இதழுக்குள்ளிருந்த கனிகளின் சதைகளை உமிழ்ந்தவாறு கடல் அலையை நோக்கி ஓடினாள். செல்லும் போதே விரலை வாயினுள் விரல் விட்டு உள்ளே இருப்பவற்றை வெளியே எடுத்து விட்டவாறு காறி உமிழ்ந்துக் கொண்டே சென்றாள். சரியாக கடல் அலைகள் அவள் கால்களைத் தழுவிடும் வேளையில் தலை சுற்றி மயக்கம் வருவது போலிருக்க, தன்னையும் மீறி கடல் அலையில் நினைவிழந்து விழுந்து விட்டாள்..
அதே நேரம் பிஞ்சுக் கரம் ஒன்று அவள் முடியை கொத்தாகப் பற்றி தூக்க முயன்றது. தன்னால் அவளைத் தூக்க முடியாததால் சற்றே திணறலுடன் அவளைப் பார்த்துவிட்டு எதைப்பற்றியும் யோசிக்காமல் மேலும் மேலும் நீரின் உள்ளே அடியாழத்திற்கு அவளைத் தன் கையால் பிடித்து கொண்டு வாலால் நீரினை உந்தித் தள்ளியவாறு உள்ளே இழுத்துச் சென்றான் அவன். ஒரு குறிப்பிட்ட ஆழம் சென்றதும் அங்கிருந்த மூலிகைத் தாவரங்களைப் பறித்து தன் நாசியின் அருகில் வைத்து, ஆழ சுவாசித்து விட்டு, அதன் பிறகு எதைப் பற்றியும் யோசிக்காமல் அச்சிறு பெண்ணின் இதழ் வழியே தன் உயிர் சுவாசத்தை கொடுத்து அவள் உயிரை மீட்டிட முனைந்தான் அவன். ஆனால் அவள் தேகத்தில் கலந்திருந்த நஞ்சானது அவளை கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்க தொடங்கியது.
அதாவது சாதாரண மனிதர்கள் உண்ணத் தகாத பழங்களை உட்கொண்டதால் சிறிது நேரத்திலேயே அந்தரியின் உயிர் பிரிந்திருந்தது. மீண்டும் அவள் உயிர் பெறுவது என்பது சாதாரணமல்ல. அது இயற்கைக்கு மாறான ஒன்று. ஆனால் தனக்குள் இருக்கும் உயிர் சக்திகளில் பாதியை அவளுக்கு வழங்க முடியும், அவ்வாறு செய்தால் கண்டிப்பாக அவள் உயிரை மீட்க முடியும் என்பதால் அவன் அத்தகைய பெரும் செயலை செய்யத் துணிந்திட்டான். அந்த வயதில் அவனுக்கிருந்த அறிவு இவ்வளவுதான்! இதனால் தனக்கும் தன் இனத்திற்கும் பாதிப்பு உண்டு என்பதை சிறுபாலகன் அவன் உணரவில்லை. இக்குழந்தையின் உயிரை காக்க வேண்டுமென்ற எண்ணத்தில் கணநேரங்கூட தாமதிக்காமல் தனது உயிர்சக்தியில் பாதியையும், தான் உயிர் வாழும் ஆயுட்காலத்தில் பாதியையும் அவள் உடலினுள் செலுத்திட, சில மணித்துளிகளில் இருமலோடு உயிர்ப்பிழைத்தாள் அந்தரி..
அவள் இரும ஆரம்பித்ததுமே உயிர் பிழைத்து விட்டால் என்பதை உணர்ந்த அவனது இதழ்கள் புன்னகையில் விரிந்தது. மனமும் ஆனந்தத்தில் மிதக்க, கடல் குதிரை ஒன்றை அழைத்து, “இப்பெண்ணை நிலப்பரப்பில் சேர்த்து விடு” என்று சொல்ல, அக்குதிரையோ மறுப்பாக தலையசைத்தது.
அதில் அவனுக்கு சற்றே சினம் ஏற்பட்டது, விழிகளை உருட்டி மிரட்டி அதட்டியவன்,
“அரசர்
அரிச்சிகரின் புதல்வனான என் வார்த்தைக்கே மதிப்பளிக்காமல் மறுமொழி உரைக்கிறாயா?” என்றுரைத்திட.
“இளவரசர்! என்னை மன்னித்தருள வேண்டும். குறிப்பிட்ட காலம் வரை தாங்கள் யாரும் நீரின் மேல் பரப்பிற்கோ, நிலப்பரப்பிற்கோ செல்லக்கூடாதென்பது அரசரின் கட்டளை.அதை நாங்கள் மட்டுமின்றி தாங்களும் அறிவீர்கள்!. ஆனால் தாங்கள் அதையும் மீறி இன்று தங்களின் தங்கையின் ஐந்தாம் பிறப்பு தினத்தை விமர்சையாக கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தோடு நிலப்பரப்பில் ஏகப்பட்ட ஏற்பாடுகளைச் செய்து இருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். நான் மட்டுமல்ல எனது தோழனொருவனையும் சேர்த்து இருவர் மட்டுமே இதை அறிவோம், அதுவும் வேண்டுமென்றே இதை நாங்கள் அறிந்து கொள்ள முயலவில்லை. நீங்கள் சற்று நாழிகைக்கு முன்பு மேற்புறம் சென்று விட்டு கீழே வந்ததையும், இளவரசியிடம் ஏதோ சைகையில் தெரிவித்து விட்டு மீண்டும் மேற்பரப்பிற்கு சென்றவர், ஒரு சிறு பெண்ணுடன் கீழே வந்ததையும் நாங்கள் அறிவோம். அதனால் தான் என்ன ஆனதென்று அறிந்து கொள்வதற்காக இவ்விடத்திற்கு விரைந்து வந்தேன். இப்போது தாங்கள் என்னிடம் இப்பெண்ணை மேற்பகுதிக்கு அழைத்துச் செல்ல சொல்கிறீர்கள்? ஒருவேளை அதை அரசர் காண நேர்ந்தால் என் உயிருக்கு ஆபத்தாகிவிடும், என்னை மன்னித்துவிடுங்கள் இளவரசே” என்றுரைத்து விட்டு கடல்குதிரை அங்கிருந்து நகர்ந்திட.
‘தான் எப்படி இங்கு வந்தோம்? இங்கு வந்ததோடு மட்டுமின்றி நீருக்கடியில் எப்படி தன்னால் எந்த ஒரு இடையூறும் இன்றி சுவாசிக்க முடிகிறது? விழிகளுக்குள் நீர் செல்லாமல் எப்படி தன்னால் அனைத்தையும் காண முடிகிறது? என்ற குழப்பத்தோடு தன் முன்னால் நிற்கும் புதியவனை மிரண்டப் பார்வை பார்த்துக் கொண்டு நீரில் மிதந்தாள் அந்தரி.
அவளைக் கண்ட அவனது இதழ்கள் இன்னும் புன்னகையைத் தத்தெடுத்துக் கொள்ள, “என் பெயர்
அதிசாந்திரன் உமது பெயர் என்ன?” என்று மொழிந்திட..
அவன் முகம் மனித முகம் போல் இருந்தாலும், அவனது காதுமடல்கள் செதில் போலவும், விழிகள் மீனைப் போன்றும் இருக்க, அவனது தலையில் மணி மகுடமாய் ஒரு சிவப்புக்கல் பதிக்கப்பட்ட நவமணி கிரீடமொன்று வீற்றிருந்தது..
அவனது கழுத்தில் நவமணி மாலைகளோடு, சிவப்பு நிற பவள மாலைகளும், கழுத்தணிகளாய் அணியப்பட்டிருக்க, அதற்கு கீழேயான பாகங்கள் யாவும் வெற்றுடலாய் தெரியாமல் மெல்லிய அதேநேரம் நீல நிறத்தோலினால் மூடப்பட்டிருந்தன. மேலும் வயிற்றுப் பகுதிக்குக் கீழே அவனுடல் இரண்டாகப் பிளந்து ஒரு பகுதி செதில் போலவும், மறு பகுதி கால்கள் போன்றும் நீண்டிருக்க இறுதியில், இருபிளவுகளும் தட்டையாக நீண்டு பின் ஒன்றிணைந்திருந்த உருவம் கொண்ட அவனைக் கண்டு மீண்டும் மயக்கம் வர, மயங்கிச் சரிந்தாள் அந்தரி.
மீண்டும் அவளை தாங்கிய பத்தே அகவை நிரம்பிய அதிசாந்திரன் இதழ் விரித்தப் புன்னகையோடு, “என் தங்கைக்கென்று பார்த்து பார்த்து நான் சேகரித்த அணிகலன்களை அணிந்து கொண்ட போதும், நாங்கள் மட்டுமே உண்ணக்கூடிய கனிவகைகளை உண்ணும் போதும் இருந்த தைரியமெல்லாம் எனைக் காணும் வேளையில் எங்கோ சென்று மறைந்து கொண்டது போலும். எனது இந்த உருவத்தைக் கண்டு பெருத்த அச்சம் கொண்டு மீண்டும் மயக்கமாகி விட்டாள். சிறு பெண் தானே! ஆதலால் தான் பலவீனமாக உள்ளாள்” என்று விளித்தவாறு வாலால் நீந்தி மீண்டும் நீரின் மேற்பரப்பு வந்தவன் தட்டுத்தடுமாறி அவளைத் தன் கைகளில் ஏந்தியவாறு தன் தங்கைக்காக ஏற்பாடு செய்திருந்த அலங்காரக் குடிலை நோக்கி நடந்தான்..
அதேநேரம் தன் தோழர் படைகளுக்கு தேவையான கனிகளைப் பறித்துக் கொடுத்து விட்டு கடல் நீரில் கை கழுவுவதற்காக நடந்த மிகிரனின் விழிகளில் இக்காட்சி தென்பட. விழிகளைச் சுருக்கி உற்று நோக்கியவனுக்கு யாரோ ஒருவர், யாரையோ தூக்கி செல்வது மட்டுமே கண்ணில் தென்பட்டது. அதிலும் அதிசாந்திரன் தரையைத் தொட்டதும் வால்கள் மறைந்து கால்கள் மட்டுமே நிலைத்திருக்க, மிகிரனுக்கு எந்த ஒரு சந்தேகமும் எழவில்லை. ஆனால் அவர்கள் யார் என்று கண்டு கொள்ளும் ஆவலோடு அவர்களை நெருங்கினான்.
குடிலுக்குள் இருந்த மலர் படுக்கை விரிப்பில் அவளை படுக்க வைத்தவன் மீண்டும் அவளுக்கு உயிர் சுவாசத்தை கொடுத்தான். அவள் விழிகளைத் திறந்த போது, “என்னைக் கண்டு அஞ்சாது பெண்ணே! நான் உன் உயிரைக் காப்பாற்றி இருக்கிறேன். அதுவும் என் உயிரில் பாதியை உனக்கு கொடுத்து உன்னை உயிர்ப்பித்திருக்கிறேன். ஆதலால் ஒன்றை புரிந்து கொள் என்னால் உனக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. நீ இங்கேயே இரு, நான் விரைவில் என் தங்கையுடன் திரும்பி வருகிறேன். உனக்கு ஒன்று தரவேண்டுமென்று தோன்றுகிறது. ஏனென்றே தெரியாமல் உன் மீது அளப்பரிய அன்பு உருவாகிறது, இங்கேயே இரு, வேறெங்கும் சென்று விடாதே! விரைவாக வந்து விடுகிறேன்” என்று சொல்லி விட்டு அவன் கடலை நோக்கி ஓட.
அதே நேரம் அந்தக் குடிலை நெருங்கிய மிகிரன் உள்ளே எட்டிப்பார்த்தான். உள்ளே தன் தங்கை இருப்பதைக் கண்டது அவனுக்கு முதல் அதிர்ச்சி என்றால், எப்படி இவள் இங்கு வந்தாளென்பது அவனுக்கு இரண்டாம் அதிர்ச்சி.. கூடவே தன் தங்கையை தூக்கிக் கொண்டு வந்து விட்டு விட்டு ஓடும் நபரையும் அதிர்வோடு பார்த்திருந்தவன், ‘முதலில் தன் தங்கையின் நிலை தான் முக்கியம். அவளுக்கென்ன ஆனதென்று பார்ப்பதே உசிதமானது’ என்றெண்ணியவாறு வேகமாக அந்தரியை நெருங்கினான். அதேநேரம் கடலுக்குள் சென்ற அதிசாந்திரன் சுற்று வளைக்கப்பட்டு கையில் விலங்கிடப்பட்ட நிலையில் இழுத்துச் செல்லப்பட்டான்..
இருவேறு உலகம் தான்..!
இருவேறு இனமது தான்..!
இருந்தாலும் இயல்பாய்
பொருந்தி போவதென்னவோ
அன்பென்ற அளப்பரிய
உணர்வால் தான்..!
- அற்புதமது பிறக்கும்..
https://www.sahaptham.com/community/threads/ஆர்கலி-ஈன்ற-அற்புதமே-comments.389/