Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


GY NOVEL நானும் ஆன்டி ஹீரோ தான் - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
983
Reaction score
588
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:
அத்தியாயம் ௦: (Prelude)

இன்றைய தினம் எப்பொழுது முடியும் என்று நிமிடத்திற்கு ஒரு முறை கைகடிகாரத்தை பார்த்தவாறு அமர்ந்திருந்தாள் கமலி.

பள்ளி, கல்லூரி, அலுவலகம் என்று அவள் அவள் வாழ்வின் ஒவ்வொரு படிநிலைகளையும் கடந்து வரும் போதும் அவள் வாழ்வில் ஏதேனும் மாறிக்கொண்டு தான் இருந்தது. ஆனால், ஒன்று மட்டும் மாறாமல் இருந்தது.

வாரஇறுதிகளை நெருங்கியதும் உள்ளுக்குள் தோன்றும் உற்சாகம்.


இன்றும் அதே உற்சாகத்தோடு, கடிகாரத்துக்குள் இருக்கும் இரண்டு முற்களும் ஒன்றுக்கொண்டு முறைத்துக்கொண்டு நேரெதிராக நூற்றெண்பது டிகிரி விலகி நின்று ஆறு மணி என்று காட்டும் நொடிக்காக காத்திருந்தாள் கமலி.


“இன்னும் ஒரு மணி நேரம் தான்! இன்னும் அரைமணிநேரம் தான்! இன்னும் கால் மணி நேரம் தான்!” என்று தனக்குள்ளாகவே உற்சாகித்துக்கொண்டிருந்தவளை அதிகம் காக்க வைக்காமல், மாலை ஆறு மணியும் விரைவாக வந்துவிட்டது.

ஆறு மணி ஆனதும் தான் தாமதம், இதற்கு மேல் ஒரு நொடி கூட இருக்க முடியாது என்று அலுவலகத்தை விட்டு கிளம்பினாள்.

“விடை கொடு சிஸ்டம்!
Log out செய்கிறேன்!

விடை கொடு ஆபிஸ்!

வாசல் தாண்டுகிறேன்!” என்று தானே எழுதிய நன்னாரே பாட்டின் புதிய ‘வாரயிறுதி வெர்ஷன்’-ஐ பாடிக்கொண்டு வெளியேறினாள் கமலி.

சென்னை நகரின் ஆறு மணி சாலை நெருசலில் அல்லோல்ப்பட்டு, தனக்கு பிடித்த இன்ஸ்டன்ட் நூடல்ஸ் பாக்கெட்டை வாங்கிக்கொண்டு அவள் வீட்டு வாசலை அடையும் போது மணி ஏழு.

கைப்பையில் இருந்த சாவியை எடுத்து, உள்ளே வந்தவள், “இந்த வீக்-எண்ட் நான் ஒரு ப்ரீ பர்ட்!” என்று சோபாவில் பொத்தென அமர்ந்தாள்.

தாய், தந்தை, தாத்தா என்று எந்நேரமும் பல குரல்கள் ஒலிக்கும் அந்த வீட்டில், இன்று அவள் குரல் மட்டுமே ஒலித்துக்கொண்டிருந்தது.

கூடவே, அவள் அலைபேசியும் ஒலித்தது. அழைத்திருந்தது அவள் அன்னை தான்.

அவள் அழைப்பை எடுத்ததுமே, “வீட்டுக்கு வந்துட்டல்ல. பத்தரமா இரு. வீட்டை பார்த்துக்கோ நான் திரும்ப வர எப்படியும் ஒரு வாரம் ஆகும். சமச்சி முடிச்சதும் ஒழுங்கா கேஸ் ஆப் பண்ணு. எல்லா இடத்திலும் லைட், பேன் எல்லாம் ஓடவிடாத. தண்ணி டேப் எல்லாம் மூடியிருக்கான்னு செக் பண்ணு. கதை எழுதறேன்ன்னு விட்டத்தை பார்த்துட்டே உக்கார்ந்துட்டு இருக்க” என்று மூச்சி விடாமல் அறிவுரைகள் சொல்லிக்கொண்டிருந்த தாய் பேசியதை கேட்டவளுக்கு, “ரேடியோல பேசறவங்க எல்லாம் தோத்துடுவாங்க போல” என்று நினைத்துக்கொண்டாள்.

“சரி. சரி. அதெல்லாம் நான் ஒழுங்கா வீட்டை பார்த்துக்கறேன். நானும் அப்போல இருந்து கேட்டுட்டு இருக்கிறேன்ல. ஸ்டேட்ஸ்ல சொந்தக்காரங்க யாரோ சீரியஸா இருக்காங்கன்னு தான் சொல்றீங்க. யாருன்னு சொல்ல மாட்றீங்க. எனக்கு தெரியாம யார் உங்களுக்கு சொந்தம்?” என்று கமலி கேட்க, “நான் அப்பறம் பேசறேன். டைம் ஆச்சு. செக்-இன் பண்ண போறோம்” என்று பதிலே சொல்லாமல் அழைப்பை துண்டித்தார் அவளின் தாய்.

“கடைசி வரைக்கும் ஸ்டேட்ஸ்ல இருக்க சொந்தக்காரங்க யாருன்னு சொல்லவே இல்லையே!” என்று நினைத்துக்கொண்டவள், அடுத்து வேறு எண்ணில் இருந்து அழைப்பு வர அதை மறந்துப்போனாள்.

அழைப்பு வந்த எண்ணை பார்த்தவள், “என்ன அதிசயமா இந்த அக்கா போன் பண்றாங்க!” என்று யோசித்துக்கொண்டு அழைப்பை ஏற்றவள், “ஹலோ! என்ன கவி. திடீர்னு போன் பண்ணிருக்கீங்க!” என்று கேட்க, “எதுக்கு பண்ணேனா! நானும் ஆன்டி-ஹீரோ நாவல் எழுத போறேன்னு சொல்லிட்டு போனவ தான். அதுக்கப்றம் ஆளையும் காணோம். கதையும் காணோம். அதான் உசுரோட தான் இருக்கியான்னு பார்க்க போன் பண்ணேன்” என்றாள் அவளின் தோழி பார்கவி.

“அது! அதுவந்து... சில தவிர்க்கமுடியாத காரணத்தால என்னால எழுத முடியல” என்று கமலி சொல்ல, “அப்படி என்னம்மா தவிர்க்க முடியாத காரணம்” என்றாள் பார்கவி.

“அது... அது வந்து... எனக்கு வேற வேலை இருந்துச்சு. கதை எழுதுறது என்ன எனக்கு முழுநேர வேலையா!” என்று கமலி சீரியஸாக பேச முயற்சித்தாலும், “ஆன்ட்டி-ஹீரோ கதை எழுத தெரியல. அதை மழுப்ப என்னென்ன சொல்றா பாருங்க” என்று அவள் சமாளிப்பதை கண்டுபிடித்துவிட்டாள் பார்கவி.

“நம் ராஜத்தந்திரங்கள் அனைத்தும் வீணானதே!” என்று நினைத்துக்கொண்ட கமலி, தனக்கு ஆன்டி-ஹீரோ கதை எழுத வராது என்பதை மட்டும் ஒத்துக்கொள்ள தயாராய் இல்லை.

“அப்போ! எனக்கு ஆன்டி-ஹீரோ கதை எழுத வராதுன்னு சொல்றீங்க. அப்படி தான!” என்று கமலி கேட்க, “ஆமாம். அப்டி தான்” என்றாள் பார்கவியும்.

“இதுக்காகவே! நீங்க இப்படி சொல்றதுக்காகவே நான் ஒரு ஆன்டி-ஹீரோ கதை எழுத தான் போறேன்” என்று கமலி சொல்ல, “நீ அதுக்கு சரி பட்டு வர மாட்ட ராசாத்தி. நீ எழுதற கதையெல்லாம் நான் பார்த்ததில்லையா என்ன? உன் ஹீரோ எல்லாம் தயிர்சாதம், சாம்பார்சாதம் மெட்டிரியல். உன்னால காரசாரமா ஆன்டி-ஹீரோ எல்லாம் எழுதவே முடியாது” என்றாள் பார்கவியும் உறுதியாக.

“நீங்க போன வைங்க. நான் கதை எழுதிட்டு அப்பறம் பேசிக்கறேன்” என்று அழைப்பை துண்டித்தவள் சிந்தை முழுதும், ‘ஆன்டி-ஹீரோ... ஆன்டி-ஹீரோ... ஆன்டி-ஹீரோ’ மட்டும் தான்.

“அது என்ன? என்னால எழுத முடியாத கதை? ஆன்டி-ஹீரோ எழுத ஏதாவது தனி தகுதி வேணுமா என்ன? நானும் எழுதி காட்டுவேன்” என்று உறுதிப்பூண்டவள், மடிக்கணினியை எடுத்துக்கொண்டு, ‘ஒரு தென்றல் புயாலாகி வருதே!’ என்று பாட்டை ஒலிக்கவிட்டுக்கொண்டு அமர்ந்தாள்.

“எழுதறேன்! எழுதி காட்றேன்” என்று தொடங்கிய வேகத்திலே பிரேக் போட்டு நின்றாள் கமலி.

“ஆன்டி-ஹீரோ, ஆன்டி-ஹீரோன்னு சொல்றாங்களே! அவன் எப்படி இருப்பான்!” என்று யோசித்துக்கொண்டிருந்தவளுக்கு, பல ஆன்டி-ஹீரோ கதைகளில் ஹீரோவை சிங்கத்தோடு ஒப்பிட்டது நினைவுக்கு வந்தது.

“நம்பளும் சிங்கம் மாதிரி ஒரு ஹீரோவ இறக்குறோம். நானும் ஆன்டி-ஹீரோ ரைட்டர் தான்னு காட்டறோம்” என்று முடிவுசெய்த மறுநிமிடம் அவள் மூளைக்குள் வேறு ஒரு குரல் கேட்டது. “இதெல்லாம் தப்பு. அப்படி எழுதாத” என்று.

“என்ன டா இது! யாரோ மண்டைக்குள்ள சவுண்ட் போடறாங்க? ஒஹ்! இதுக்கு பேர் தான் மனசாட்சியா?” என்று கவனித்தாள்.

அவள் மூளைக்குள் ஒரு உருவம் அமர்ந்து கத்திக்கொண்டிருந்தது. மூளைக்குள் இருந்து பேசும் அந்த உருவத்தை அவளால் உணர முடிந்தது. அகக்கண்ணால் பார்க்க முடிந்தது. ‘யாரடா அது?’ என்று கமலி உற்றுப்பார்க்க, அந்த உருவம் தன்னுடைய சாயலிலேயே இருப்பதை கவனித்தாள்.

முக ஜாடையும், வெள்ளை நிற தோலும், குறிப்பாக நீல நிற கண்களும் தன்னை போலவே இருந்தது. ஆனால், தோள் சுருங்கி, தலை முடி வெளிர்த்து வயாதான தோற்றமாக இருந்தது.

“என்ன டா இது! நம்ப மனசாட்சி இவ்வளவு வயசாகி இருக்கு! ஆனா, இங்கிலீஷ்காரி மாதிரி இவ்வளவு ஸ்டைலா இருக்கு. இங்கிலீஷ்காரி மாதிரி என்ன! இங்கிலீஷ் காரியே தான்னு சொல்ற போல இருக்கு” என்று உற்றுநோக்கிக் கொண்டிருந்தாள்.

பால் ரோஸ் நிறத்தில், வெள்ளை நிற பூக்கள் தெளித்து போல் ஒரு மெல்லிய கவுன். அதற்க்கு மேல் ஒரு டெனிம் ஜாக்கெட், கால்களில் பூட்ஸ், கண்களுக்கு கூலிங் க்ளாஸ், தலை மேல் ஒரு அழகான பூ வேலைப்பாடுகள் வைத்த கேப் என்று மேலிருந்து கீழ் வரை டிப்-டாப்பாக இருந்து உருவத்தை வாயை பிளந்து பார்த்துக்கொண்டிருந்தாள் கமலி.



கால் மேல் கால் போட்டு, கமலியை பார்த்ததும், தலையில் இருந்து கேப்பை லேசாக நகர்த்தி அவளை ஓரக்கண்ணால் பார்த்தார் அந்த பட்டி. இங்கிலீஷ்கார பாட்டி.

“இந்த வயசுல ஸ்டைல பார்த்தியா!” என்று மனதுக்குள் திட்டிய கமலி, “என்ன நம்ப மனசாட்சிய நம்பலே திட்டுறோம்” என்று நாக்கை கடித்துக்கொண்டாள்.

“ஹே கமலி. ஹாய்! எப்படி இருக்க” என்று அந்த பாட்டி தமிழ் பேசியது தமிழ் வார்த்தைகளில் தான் பேசினாலும், தமிழ் போல் இல்லை. வல்லினம், மெல்லினம், இடையினம் என்று எழுத்துக்களை வகைக்கண்டு, ஒவ்வொரு வகை எழுத்தும் மார்பு, மூக்கு, கழுத்து என்று எந்தெந்த உறுப்பில் இருந்து பிறக்க வேண்டும் என்று எழுத்துக்களுக்கு பிறப்பிலக்கணம் கொண்டுள்ள மொழி அல்லவா தமிழ்.

ஆனால், அந்த பாட்டி பேசிய தமிழ் வார்த்தைகளுக்கும், மார்புக்கும் மூக்குக்கும் கழுத்துக்கும் தொடர்பே இல்லை. நுனி நாக்கில் ஆங்கிலம் பேசி பழகியவரின் நாக்கில் இருந்து உதிர்த்த தமிழ் எழுத்துக்களும் நுனி நாக்கில் இருந்து பிறந்ததாகவே இருந்தது.

“என்ன டா இது! நம்ப மனசாட்சி தமிழையே இங்கிலீஷ் மாதிரி பேசுது! ஒருவேள. நம்ப வயசாகி இப்படி தான் இருப்போமோ! இருக்காதே! இந்த சிங்கார சென்னைல இருந்துகிட்டு இப்படி எல்லாம் தமிழ் பேச வாய்ப்பே இல்லையே!

ஒருவேள. இப்போ அம்மா, அப்பா தாத்தா எல்லாம் ஸ்டேட்ஸ் போய்ருக்காங்களே! அங்க எனக்கு அத்தை மாமா யாராவது இருப்பங்களோ! அவங்க பையனுக்கு எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டு என்னையும் அமெரிக்கன் சிட்டிசன் ஆக்கிடுவாங்களோ! அதனால நான் வயசானதும் இங்க்லீஷ் பாட்டி ஆகிடுவனோ!” என்று கமலியின் கற்பனை குதிரை தரிக்கெட்டு ஓடியது.

“எப்படி இருக்க என்று கேட்டேன்” என்று அந்த பாட்டி மீண்டும் குரல் குடுக்க, “ஹான்! நல்லா இருக்கேன். ஆமா, நீ யாரு! என் மனசாட்சியா?” என்று கமலி கேட்க, சத்தமாக சிரித்தது அவள் தலைக்குள் இருந்த உருவம்.

“உனக்கு அப்படியா தோணுது?” என்று பாட்டி கேட்க, “ஆமாம்! நம்ப ரெண்டு பேரும் கொஞ்சம் பார்க்க ஒரே மாதிரி தான் இருக்கோம். என்ன, என்னை விட கொஞ்சமே கொஞ்சம் வெள்ளையா இருக்க. பாஷை வேற மாதிரி இருக்க. ஸ்டைலா இருக்க. வயாசாகி போய் இருக்க.

நானும் உன் கலர்ல தான் இருப்பேன். இந்த சென்னை வெயில்ல தான் கருத்துட்டேன். இப்போ மட்டும் எனக்கு அமெரிக்கால செட்டில் ஆகுற வாய்ப்பு கிடைச்சிதுன்னு வையி. நான் அறுபது வயசுல உன்ன மாதிரி ஆகிடுவேன்.

அப்போ நீயும் நானும் ஒன்னு தான. அப்போ நீ என்னோட மனசாட்சியா தான் இருக்கணும். என்ன என் மனசாட்சி கொஞ்சம் கிழவி மாதிரி யோசிக்கும் போல. அதான், வயசாகி இருக்க” என்றாள் கமலி.

“நம்ப ரெண்டு பேர் உருவமும் அவ்வளவு மேட்சிங்கா?” என்று பாட்டி கேட்க, “ஆமாம். ஒன்னு போல தான் இருக்கு. சொல்லு. நீ ஏன் மனசாட்சி தான!” என்று கேட்ட கமலியின் வார்த்தைகளில் அவசரம். கண்களில் ஆர்வம்.

“உனக்கு அப்படி தோனுச்சுன்னா, அப்படியே வச்சிக்கோ!” என்றார் பாட்டி.

“சரி இப்போ எதுக்கு வந்த?” என்று கமலி கேட்க, “நான் வரும் முன் என்ன சொல்லிட்டு இருந்த?” என்றார் பாட்டி.

“என்ன சொல்லிட்டு இருந்தேன்! கதை எழுத போறேன்னு சொல்லிடு இருந்தேன்!”

“என்ன கதை?”

“ஆன்டி-ஹீரோ கதை”

“ஹீரோ எப்படி இருக்கணும்ன்னு சொல்லிட்டு இருந்த?”

“சிங்கம் மாதிரி” என்று சொன்ன கமலியின் கண்களில் பெருமிதம், புளாங்கிதம்.

“கதைய யாரு எழுதறா?”

“நான் தான்! என்ன கேள்வி கேக்கற நீ!”

“அது இல்ல. கதை எழுதுறது சிங்கமா?”

“இல்ல மனுஷி”

“கதை படிக்கப் போறது யாரு?”

“மனுஷங்க!”

“கதை மாந்தர்கள் எல்லாம் யாரு?”

“மனுஷங்க தான்!”

“அப்பறம் எதுக்கு ஹீரோ மட்டும் சிங்கம் மாதிரி!” என்று பாட்டி கேட்க, “அது... அதுவந்து...!” என்று திணறினாள் கமலி.

பாட்டி கண்களில் கண்களில் அணிந்திருக்கும் கூலிங் கிளாஸை கழட்டி, “என்ன. சொல்லு” என்றார் புருவத்தை உயர்த்தி.

“என்ன பாட்டி கேள்வி கேக்கற நீ? இப்போ எல்லாம் சிங்கம், புலி மாதிரி ஹீரோ இருந்தா தான் கதையே படிக்க வராங்க. அதான் trend!” என்றாள் கமலி.

“மனுஷன் மனுஷன் மாதிரி தான் இருக்கணும். அப்படி இருந்தா தான் அவன் ஹீரோ!” என்று பாட்டி சொல்ல

“கரெக்ட் தான். மனுஷன் மனுஷன் மாதிரி இருந்தா ஹீரோ. சிங்கம் மாதிரி இருந்தா அவன் ஆன்டி-ஹீரோ!” என்று பதில் சொன்ன கமலி, “ஆன்டி-ஹீரோவுக்கும் ஹீரோவுக்கும் இருக்கும் ஏழு வித்தியாசங்களை எழுதுக” என்ற ஐந்து மதிப்பெண் கேள்விக்கு விடை எழுத கூட தயாராக இருந்தாள்.

“அப்படி மனுஷன் சிங்கம் மாதிரி இருந்தா அவன் மனுஷனே இல்ல. அப்பறம் எப்படி அவன் ஹீரோவா இருப்பான்” என்று பாட்டி கேட்க, “ஐயோ! இந்த வயசான மனசாட்சியை வச்சிட்டு நிம்மதியா ஒரு கதை எழுத முடியுதா! இங்க பாரு பாட்டி. இந்த லாஜிக் கேள்வி எல்லாம் தூக்கி தூரம் போடு. நான் சிங்கம் மாதிரி ஒரு ஹீரோவ வச்சி ஆன்டி-ஹீரோ கதை எழுத தான் போறேன்” என்றாள் கமலி.

“அப்போ கண்டிப்பா எழுத தான் போறியா?” என்று பாட்டி கேட்க, “ஆமாம்! Yes! அவுனு! அதே!” என்று என்றாள் கமலி உறுதியாக.

“சரி. முடிவு எப்படி இருக்கும்?” என்று பாட்டி கேட்க, “அதெல்லாம் நான் முடிவு பண்ணிட்டு எழுதுறது இல்லை. என்னோட கதாபாத்திரங்களை தன் போக்கில் ஓடவிட்டு எப்படி அவங்க போக்குல தான் கதைய முடிப்பேன்” என்றாள் கமலி பெருமையாக.

“அப்படி செய்தா, கதை ஸ்டார்டிங் தான் நல்லா இருக்கும். பினிஷிங் சரியா இருக்காதே” என்று பாட்டி யோசிக்க, ‘ஐயோ. பாட்டி நம்பள டேமேஜ் பண்ணுதே’ என்று பல்லை கடித்துக்கொண்டு நின்றாள் கமலி.

சிறிது நேரம் யோசித்த பாட்டி, “சரி எழுது. ஆனா, ஒரு கண்டிஷன்” என்று சொல்ல. முதல் வரியில் சந்தோஷப்பட்ட கமலி, அடுத்த வரியில் ‘பாட்டி என்ன ட்விஸ்ட் வச்சிருக்கோ’ என்று படபடக்க தொடங்கிவிட்டாள்.

“என்ன ட்விஸ்ட்?” என்று அவள் கேட்க, “கதையில நீ உன்னையும் ஒரு கதாபாத்திரமா சேர்த்துக்கணும்” என்றார் பாட்டி.

“ஏதே! நான் கதாபாத்திரமா மாறனுமா? நான் ரைட்டர்!” என்று தன் சிரத்தின் மேல் கிரீடம் வைத்தது போல் கற்பனை செய்துக்கொண்டாள் கமலி.

“ரைட்டர்ன்னா என்ன? உன் இஷ்டதுக்கு சிங்கம் மாதிரி இருக்கவனை எல்லாம் ஹீரோவா போட்டுடுவ. உன் கதைல இருக்க மத்த கதாபாத்திரம் எல்லாம் அவன் கிட்ட கஷ்டப்படணும். அவனை உருவாக்கிட்டு நீ மட்டும் ஜாலியா சுத்துவியா. போ, நீயும் உள்ள போய் கஷ்டப்படு” என்று பாட்டி கமலியின் கன்னத்தில் பளீரென்று ஒன்று வைக்க, வாங்கிய அடியில் தலை மேல இருந்த கிரீடம் எல்லாம் காணாமல் போனது.

“என்ன பாட்டி அடிக்கற? நீ என் ஹீரோவ விட மோசமா இருப்ப போலேயே” என்று அழுதுக்கொண்டே நின்றாள் கமலி. “ஒரு ஆன்டி-ஹீரோ கதையை எழுதுறதுக்கு இந்த கமலி கெழவி கிட்ட எல்லாம் அடி வாங்க வேண்டி இருக்கு” என்று சூனா-பான மைண்ட் வாய்சில் தனக்குத்தானே பாவப்பட்டுக்கொண்டாள்.

“அழுது நடிக்காத. நான் சொன்னத செய். உன்னையும் கதையில் ஒரு கதாபாத்திரமா சேர்த்து கதையை யோசி” என்று பாட்டி சொல்ல,

“பண்றேன். பண்ணி தொலைக்கிறேன்” என்றாள் கமலி கண்ணத்தில் கை வைத்துக்கொண்டே.

பாட்டி சொன்னது போலவே தன்னையும் கதாப்பாத்திரமாக சேர்ந்து கதையை கற்பனை செய்யத் தொடங்கியவளின் மனதில் ஒரே உற்சாகம் தான்.


“நானும் ஆன்டி-ஹீரோ ரைட்டர் தான்டா!” என்று சொல்லி சொல்லி சந்தோசப்பட்டுக்கொண்டாள்.



உங்கள் கருத்துக்களை இந்த link-யில் பகிர்ந்துக்கொள்ளுங்கள் friends!
​
 
Last edited:
அத்தியாயம் - 1. 1

மதியம் மணி பன்னிரண்டு. நாற்பது டிகிரி உச்சி வெயில்.

மரங்களின் நெருக்கம் அதிகமில்லாத காடு அது. தரையில் புற்கள் செழித்து வளர ஏதுவாக, நெடிய மரங்கள் ஒன்றை விட்டு ஒன்று விலகி நின்று, சூரியக் கதிர்கள் தரையில் விழ வழிவகைச் செய்தன.

செழித்து வளர்ந்த புற்களை உண்டு கொழுகொழுவென வளர்ந்த மான்கள், காட்டெருமைகள் போன்ற விலங்குகள் அதிகம் இருந்தன, அந்த சவானா வகைப் புல்வெளியில்.
மான்கள், காட்டெருமைகள் போன்ற தாவரப் பட்சினிகளின் ஜனத்தொகை அதிகம் பெருகி, காட்டில் உள்ள அனைத்துத் தாவரங்களையும் தன் பசிக்கு இரையாக்குவதைத் தவிர்க்கவென, சில மாமிசவுண்ணிகளும் இருந்தன.

அந்த உச்சி வெயில் நேரத்தில், ஒரு மரத்தின் நிழலில் படுத்த வண்ணம் இருந்தது ஒரு ஆண் சிங்கம்.

சிங்கங்களை விட வேகமாக ஓடக்கூடியவைச் சிறுத்தைகள்.

சிங்கங்களை விட அதிக எடை உள்ளவைப் புலிகள்.
சிங்கங்களை விட தந்திரக்காரர்கள் நரிகள்.

ஆயினும், ‘ராஜாக்கள்’ சிங்கங்களே. அந்தப் பட்டத்தைப் பெற சிங்கங்கள், அதிவேகமாக ஓடவேண்டியதில்லை.

அதிக எடை உள்ளவையாக, உயரம் அதிகம் உள்ளவையாக இருத்தல் அவசியமில்லை.

தந்திரக்காரர்களாகத் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை.

அலட்டல் ஏதுமின்றி, மரத்தின் கீழ் அமைதியாகப் படுத்திருக்கும் அந்தத் தோரணைப் போதும். அதன் கழுத்தையும், தலையையும் சுற்றி, இயற்கையே சிங்கங்களுக்குச் சூட்டியக் கிரீடம் போலிருக்கும் அந்தப் பிடரி முடி போதும். சுற்று வட்டாரம் ஐந்து மைல்கள் வரை, அதிகாரமாய் ஒலிக்கும் அதன் கர்ஜனைப் போதும். ‘காட்டின் ராஜா!’ என்று பட்டம் பெற.

நேற்று தான் கொழுத்தக் காட்டெருமை ஒன்றை வேட்டையாடி, முழுக் குடும்பமும் அடுத்த இரண்டு நாட்களுக்கும் போதும் என்ற அளவுக்கு உண்டதால், இன்று வேட்டையாடும் வேலையின்றி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன.

சிங்கங்கள் வேட்டையாடுவதையும், பிற மிருகங்களைக் கொல்வதையும் வாடிக்கையாக வைத்திருக்கவில்லை. தன் வயிறு பசித்திராதவரை, அவை வேறு எந்த உயிரினத்தையும் துன்புறுத்துவதில்லை.
இந்தச் சிங்கக்குடும்பமும் அப்படியே. அடுத்த முறை பசிக்கும்வரை, இதோ கண்ணுக்கெட்டும் தூரத்தில் மேயும் அந்தப் புள்ளிமான்களை அவைத் தொட்டும் பார்க்கப்போவதில்லை.

சிங்கக்குடும்பம்! ஆம், சிங்கங்கள் குடும்பமாக வாழ்பவை. ஒரு ஆண் சிங்கம், சில பெண் சிங்கங்கள், சில சிங்கக்குட்டிகள் ஆகியவை அந்தக் குடும்பத்தில் அடக்கம்.

ஒரு ஆண் சிங்கம் என்பது மட்டுமல்லாமல் சில நேரம், இரண்டு அல்லது மூன்று ஆண் சிங்கங்கள் என்று கூட மாறக்கூடும். அப்படி இருப்பின், ஒரே குடும்பத்தில் வாழும் அந்த ஆண் சிங்கங்கள் நெருங்கிய உறவுகளாக, ஒரு தாய் வயிற்றில், ஒரே கர்ப்பத்தில் பிறந்து, ஒன்றாக வளர்ந்தவையாக இருக்கும்.

ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பு அந்தக் குடும்பத்தின் ஆட்சியின் கீழிருக்கும். வேற்றுக் குடும்பத்தைச் சேர்ந்த சிங்கங்கள் அந்த நிலப்பரப்பில் நுழைய முடியாது. ஆண் சிங்கங்கள் நுழையவும் விடாது.

‘ஆஸ்கர்’ என்றழைக்கப்படும், இந்தச் சிங்கக்குடும்பத்தையும், அதற்குரிய நிலப்பரப்பையும், அப்படியான மூன்று சிங்கங்கள் கூட்டாட்சி செய்து வருகின்றன.
அஸ்லான், அரி, அப்பாஸ் என்று மூன்று சிங்கங்களுக்குள் மூத்தவன் அஸ்லான்.

இவை மூன்றும் தலைமைத் தாங்கும் அந்தக் குடும்பத்தில், ஐந்து வளர்ந்த பெண் சிங்கங்களும், மூன்று இளவயது பெண் சிங்கங்களும் இருந்தன. இளவயது ஆண் சிங்கம் ஒன்றும், இரண்டு ஒரு வயது குட்டிகளும் கூட அந்தக் குடும்பத்தின் அங்கம்.

மொத்தம் பதினான்கு உறுப்பினர்களைக் கொண்ட இந்த ஆஸ்கர் சிங்கக்குடும்பம், இந்தச் சுற்றுவட்டாரத்தின் அதிக வலிமையானச் சிங்கக்குடும்பம். ஆயினும், அடுத்தச் சில நாட்களில் ஆஸ்கர் குடும்பம் பல இழப்புகளைச் சந்திக்கலாம்!

‘வலிமையானக் குடும்பம்’ என்றப் பெயர் மறைந்து, இந்தக் குடும்பம் குலைந்துப் போகலாம்.

ஒரு குடும்பத்திலிருக்கும் பெண் சிங்கங்கள் அனைத்தும், பெரும்பாலும் நெருங்கிய ரத்தச் சொந்தங்களாகவே இருக்கும். முழுவளர்ச்சிப் பெற்ற அந்த ஐந்து சிங்கங்களுக்குள் முதன்மையானவள் அம்ரா.
பிறந்து சில வாரங்களே ஆன, தன் இரண்டு குட்டிகளுக்குப் பால் புகட்டிக்கொண்டிருந்தவள், மரத்துக்கடியில் கம்பீரமாகப் படுத்திருக்கும் அஸ்லானைப் பார்த்தாள்.

அஸ்லானின் பார்வைக் குத்திட்டு நிற்கும் இடத்தைக் கவனித்தவள் அவனின் யோசனையையும் கணித்தாள்.

தன் மடியில் பால் குடித்துக்கொண்டிருக்கும் தன் இரண்டு குட்டிகளும் முழுதாகப் பசியாறும் வரை அமைதியாகவே இருந்தாள் அம்ரா.

‘மைலோ’ என்ற ஆண் சிங்கக்குட்டியும், ‘பாப்பி’ என்ற பெண் சிங்கக்குட்டியும். அந்தக் குடும்பத்தின் இளம் உறுப்பினர்கள். பசியாறிய இரண்டு குட்டிகளும் ஒன்றுக்கொன்று சீறிக்கொண்டும், கீறிக்கொண்டும் விளையாடத்தொடங்கின.
அம்ரா, மெதுவாக எழுந்துச் சென்று அஸ்லானின் அருகில் அமர்ந்தாள்.
அச்லானின் பார்வை யாரிடம் குத்திட்டு நின்றதோ, அவனையே கவலைத் தேய்ந்தக் கண்களுடன் பார்த்த அம்ரா, தன் முகவாயை வைத்து அஸ்லானின் முதுகில் தடவினாள். ஆயினும் அஸ்லான் தன் பார்வையை அவ்விடம் விட்டுத் திருப்பியப் பாடில்லை.
அஸ்லான் பார்வை நிலைத்திருக்கும் இடத்திலிருந்தது ‘லெனி’. அம்ராவின் மூத்த மகன். இந்தச் சிங்கக்குடும்பத்தின் ஒரே இளம் ஆண்சிங்கம்.
அவனின் செய்கைகள் நினைத்து, அந்தச் சிங்கக்குடும்பத்தில் உள்ள அனைவருக்குமே கவலையென்றாலும், லெனியின் தாயான அம்ராவுக்கும், அந்தக் கூட்டத்தில் மூத்த ஆண் சிங்கமான அஸ்லானுக்கும் தான் அதீதக் கவலை.
அனைவரும் கவலைக் கொள்ளும் அளவிற்கு அப்படி என்ன செய்கிறான் லெனி? அவனின் செய்கைகள் எப்படியானவையாக இருக்கின்றன?

அவன் செய்கைகள் மற்ற சிங்கங்களிடமிருந்து வெகுவாக வேறுபட்டு இருந்தன. சிங்கத்தின் இயல்பான குணங்கள் அவனிடம் இல்லை.

ஆம், அவன் வேட்டையாடுவது இல்லை. மாமிசம் உண்பது இல்லை. ஏன், சிங்கங்களுக்குரிய மற்ற விலங்குகளை நடுங்கவைக்கும் கர்ஜனைக் கூட அவனிடம் இல்லை.

இதோ, இப்போதுகூட, இந்த சவானா புல்வெளியில், செழித்து வளர்ந்த புற்களைச் சுவைப் பார்த்துக்கொண்டிருக்கும் தன் நண்பன் குடும்பத்தோடு சேர்ந்து தானும் இலைகளையும், தழைகளையும் உண்டுக்கொண்டிருந்தான் லெனி.

அந்தப் புல்வெளியில் மேய்ந்துக்கொண்டிருக்கும் மான் குடும்பத்தில் ஒருவனான மெல்வின் என்ற மான் தான் லெனியின் நெருங்கிய நண்பன்.

மான் நண்பனோடு சேர்ந்து, மாமிசம் உண்ணுவதற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பற்களைக் கொண்டிருக்கும் சிங்கமும் இலையும், தழையும் உண்கிறது என்றால், மனிதர்கள் அதை இயற்கையின் ஆச்சரியமாகப் பார்ப்பர்.
ஆனால், ஆஸ்கர் குடும்பத்திற்கும், அஸ்லானுக்கும், அரி, அப்பாஸுக்கும் அந்தக் காட்சி அருவருக்கத்தக்கதாய் இருந்தது.

தங்கள் ரத்தத்தில் உதித்த மகனா இவன் என்று எண்ணியெண்ணி நொந்துக்கொண்டனர் அந்த மூன்று சகோதரர்களும்.

லெனிக்கு இப்போது மூன்று வயது.

பொதுவாக மூன்று வயதில் ஆண் சிங்கங்கள், குடும்பத்தை விட்டு வெளியேறிவிடும்.
அப்படி வெளியேறவில்லை என்றாலும், அந்தக் குடும்பத்தின் தலைவராக இருக்கும் மூத்த ஆண் சிங்கங்கள், அடித்து விரட்டி இருக்கும். ஏனெனில், சிங்கங்கள் தானே ராஜாவாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவை.

அப்படி மூன்று வயதில் வெளியேறிய சிங்கங்கள், கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் நாடோடிகளாக அலைந்து, உடலில் வலுவேற்றிக்கொண்டு, ஐந்து அல்லது ஆறு வயதில், தன்னுடைய குடும்பத்திலோ, அல்லது வேறு சிங்கக்குடும்பத்திலோ இருக்கும் மூத்த ஆண் சிங்கத்தைச் சண்டையிட்டு வீழ்த்தி, அந்தக் குடும்பத்தின் தலைவனாகும்.

லெனிக்கு மூன்று வயதாகியும், அஸ்லானும் அவனின் சகோதரர்களும் லெனியை ஆஸ்கர் நிலத்தை விட்டு வெளியேற்றவில்லை.
அதற்குக் காரணம்? சாதுவாக இருக்கும் லெனி ஒருபோதும் ராஜாவாகப் போவதில்லை என்பதாகக் கூட இருக்கலாம்.

அஸ்லானின் பார்வைத் தன் மீது படருவதைக் கூட அறியாமல், மெல்வினுடன் விளையாடிக்கொண்டிருந்த லெனியைத் திரும்பிப் பார்க்க வைத்தது அம்ராவின் உறுமல் சத்தம்.
அம்ராவின் உறுமல் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்த லெனி, அஸ்லானின் கோவப்பார்வையை உணர்ந்து, தழைகள் மேய்வதை விட்டுவிட்டு, தன் குடும்பம் படுத்திருந்த அந்த மரத்தை நோக்கி வந்தான் லெனி!

லெனி!

உறுதியான சிங்கம் என்று அர்த்தம் அவன் பெயருக்கு.
ஆனால், அவன் குடும்பத்தையும், தந்தைகளையும் பொறுத்தவரை அவன் சிங்கமாக இருக்கவே தகுதியற்றவன்.

ஆஸ்கர் குடும்பத்தின் இழுக்கு அவன்.

குடும்பத்தின் மற்ற சிங்கங்களுக்குக் கேலிப்பொருள் அவன்.

ஆனால், அவனை வெகுவாக விரும்பும் இரண்டு உயிர்களும் அந்தக் குடும்பத்தில் உண்டு.

அவனின் தம்பியும், தங்கையும்.

மைலோவும், பாப்பியும்!

ரத்தம், வேட்டை, மாமிசம் போன்றவற்றின் வாசமறியாது, தாய் பால் மட்டும் அருந்திக்கொண்டிருக்கும் மைலோவுக்கும் பாப்பிக்கும் சிங்கத்தின் இலக்கணம், சிங்கத்தின் குணநலன் என்று எதுவும் இன்னும் தெரியவில்லை.

அதனாலேயே அவர்கள், லெனியை மாமிசம் உண்ணாதவனாக, வேட்டையாடாதவனாக, தங்கள் குடும்பத்தில் தப்பு வந்து பிறந்தவனாக அடையாளம் காணாமல், தங்களோடு மண்ணில் உருண்டுப் புரண்டு விளையாடி, பாசம் காட்டும் லெனியாக மட்டுமே அடையாளம் கண்டுக்கொண்டார்கள்.

ஒருவேளை ‘லெனி’ என்ற பெயருக்கான அர்த்தம் புரியும் வயதிலோ, அல்லது அந்தப் பெயருக்கும், சிங்கக்குடும்பத்திற்கும் அவன் ஏற்றவன் இல்லை என்று அவர்கள் உணரும் வயதிலோ லெனியை அவர்கள் வெறுக்கக்கூடும்.

சுயநலமும், ‘தான்’ என்ற எண்ணமும் சிங்கங்களின் இயல்பான குணநலன்களில் ஒன்று.
ஆனால், ‘இவர்கள் வளர்ந்ததும் குடும்பத்தின் மற்ற உறுப்பினர் போல் என்னை வெறுத்து ஒதுக்குவரோ!’ என்று யோசிக்காமல் அந்தச் சின்னக் குட்டிகள் மீது பாசத்தைப் பொழிந்தான் லெனி.

ஏனெனில், லெனி சிங்கங்களின் இயல்பான குணநலன்களைக் கொண்டிராதவன்.

ஏனெனில், லெனி பாசத்தைப் பொழிபவன்.

தன்னுடைய இந்தக் குணங்களால் அவன் எதிர்காலம் மட்டும் அல்லாது, இந்த ஆஸ்கர் குடும்பத்தின் எதிர்காலமே எப்படி எல்லாம் மாறப்போகிறது என்பதைப் பற்றிய சிந்தனைகள் கொஞ்சமும் இல்லாமல் மைலோவையும், பாப்பியையும் கொஞ்சிக்கொண்டிருந்தான் லெனி!


** ** ** ** ** **
 
Last edited:
அத்தியாயம் 1.2:

பெரிய பங்களா போன்ற வீடு அது.

ஓங்கி உயர்ந்த மதில் சுவர்கள். அதற்கு இணையான உயரத்தில் நுழைவாயில் கதவுகள். அந்தக் கதவைத் திறக்கவே இருவர் வேண்டுமோ என்று எண்ணும் படியான நெடிய, பலமான கதவுகள்.

அந்தக் கதவைத் திறந்து உள்ளே சென்றோமானால், நம்மை வரவேற்பது பச்சைப் பசேலெனப் புட்தரைகளும், பூச்செடிகளும், மரங்களுமே. வீட்டின் வாசற்படியை அடைய அந்தப் புட்தரைகளுக்கு நடுவே ஒரு கருங்கல் பாதை இருந்தது.

அந்தத் தோட்டத்தின் அழகில் மயங்கி, இரண்டு நொடிகள் அங்கே நின்றோமானால், அந்த ரம்மியமானச் சூழலைக் கெடுக்கும்படியாகக் கேட்கும், நாய்கள் குறைக்கும் சத்தம்.

கமலியுடன் அந்த வீட்டுக்குள் நுழைந்தப் பாட்டி, அந்தத் தோட்டத்தைப் பார்த்து, “வாவ்” என்று வாயசைக்க அடுத்த நொடி “வவ்.. வவ்” என்று கேட்டது நாயின் சத்தம்.

“என்ன சத்தம்” என்று பாட்டி சுற்றி முற்றி பார்ப்பதற்குள் ஒரு நாய் பாட்டியின் தோள் உயரம் வரை எகிறியிருந்தது.

“அவுச்!” என்று பாட்டி பதறிக் கீழே விழுவதற்குள் அந்த நாய்களைப் பராமரிக்கவென இருந்த ஆட்கள் அந்த நாயைப் பிடித்து இழுத்துச் சென்றிருந்தனர்.

அந்த நாயைப் போலவே இன்னும் நான்கு நாய்களைக் கண்ட பாட்டி, கமலியை முறைத்துவிட்டு, “வாட் த ஹெக் இஸ் திஸ்?இதுங்க வளர்ப்பு நாயா? வேட்டை நாயா?
உன் கற்பனை என்ன இவ்ளோ கொடூரமா இருக்கு” என்று கேட்க, முகத்தைச் சிலுப்பிக்கொண்ட கமலி, “தோட்டத்தோட அழகை ரசிச்சப்போ சுகமா இருந்துச்சோ!” என்றாள்.
“ம்கும்ம். உன் கற்பனைல இது மட்டும் தான் அழகா இருக்கும் போல. அது சரி, இது யார் வீடு?” என்று பாட்டி கேட்க, “என் ஹீரோ வீடு” என்றாள் கமலி பெருமையாக.

அந்தப் பதிலைக் கேட்டதும் ஏளனமாய் சிரித்த பாட்டி, “அவன் தான் சிங்கமாச்சே! அவன் வீட்டைக் காவல் காக்க எதுக்கு நாய்?” என்றார்.

பாட்டியை முறைத்த கமலி, “உனக்கு வயசாச்சே தவிர. அறிவுக் கொஞ்சமும் இல்ல. ஒருவேளை, நாளைக்கே என் ஹீரோ ஒரு பொண்ணைப் பார்க்கலாம். அந்தப் பொண்ணு கிட்ட லவ் ப்ரோபோஸ் பண்ணலாம். அந்தப் பொண்ணு அவனைப் பிடிக்கலன்னு சொல்லி அசிங்கப்படுத்தி அனுப்பலாம். அந்தப் பொண்ணை என் ஹீரோ கடத்திட்டு வந்து இந்த வீட்ல வைக்கலாம்!
அப்போ அந்த ஹீரோயின் தப்பிச்சி ஓட பார்க்கலாம். அப்போ, அவ தப்பிச்சி ஓடாம பார்த்துக்க காவல் நாய் வேணாம்!” என்று அதற்கென நெடிய விளக்கமொன்றைக் கொடுத்தாள் கமலி.
“அப்போ! உன் ஹீரோவுக்கு ஒரு பொண்ணுக்குத் தன்னைப் பிடிக்கவைக்கத் துப்பு இல்ல அப்படித் தான!” என்று பாட்டி கேட்க, “என்னது? துப்புக் கிடையாதா? தப்பு பாட்டி.

நீ இன்னும் என் ஹீரோவ பார்க்கல. அதனால தான் இப்படியெல்லாம் பேசற. என் ஹீரோவ மட்டும் நீ பார்த்தன்னு வையி. இந்த வயசுலயும் உனக்கு அவன் மேல லவ்வு லவ்வா வரும்” என்று கமலி சொல்ல மீண்டும் பாட்டியிடமிருந்து கேவலமானப் பார்வை ஒன்றே பரிசாகக் கிடைத்தது.

பாட்டி அதற்குப் பதில் பேசும் முன்னே, அந்த அந்த வீட்டின் அடியாள் ஒருவர், “எதுக்கு வந்திருக்கீங்க? யார பார்க்கணும்” என்று கேட்க, “லெனின் நிரஞ்சன்” என்றாள் கமலி.

“ஓஹ்! சின்ன ஐயாவையா. அப்போ காலேஜ் விஷயமா தான் இருக்கும்” என்றவர் அதற்கு மேல் கேள்விகள் கேட்காமல் அவர்களை உள்ளே விட்டார்.

அங்கிருந்து வாசற்படியை அடைவதற்குள்ளேயே பத்துப் பதினைந்து அடியாட்களைக் கடந்தனர் பாட்டியும் கமலியும். அனைவரும் ஹெவிவெய்ட் சாம்பியன்கள் போன்ற உடலமைப்பில், கரடு முரடானத் தேகத்துடன், முறையாகப் பராமரிக்கப்படாதக் கேசத்துடன் இருந்தனர்.

அவர்களைக் கடந்து சென்றதும் கமலி, “பாத்தியா! எவ்ளோ டெரரான அடியாளுங்க. என் ஹீரோ எவ்ளோ பெரிய கை பாத்தியா!” என்று காலரை உயர்த்த, “சிங்கங்கள் தன்னைத் தானே பாதுகாத்துக்கொள்ளும். சிங்கத்துக்குத் காவல் நாயோ, அடியாளோ இருந்தா அது சிங்கத்துக்குத் தான் அசிங்கம்” என்று பாட்டி சொல்ல, ஏறிய காலர் தானாக இறங்கியது.

இருவரும் வீட்டுக்குள் நுழைய, அழகான, மென்மையான, அமைதியான ஒரு பெண் அவர்களை எதிர்க்கொண்டார்.
வயது ஐம்பதுக்கும் அறுபதுக்கும் நடுவில் இருக்கும் என்று பார்த்தாலே கணிக்க முடிந்தது. கமலியிடம் வந்தவர், “யாரைப் பார்க்கணும்?” என்று கேட்க, “லெனின் நிரஞ்சன்” என்றாள்.

“அவன் இப்போதான் கிளம்பிட்டு இருக்கான். கீழ வர பத்து நிமிஷம் ஆகும். வெய்ட் பண்ணுங்க” என்று அவர் சொல்லிவிட்டு உள்ளே செல்ல, “இது யாரு?” என்றார் பாட்டி.

“இதுக் கூடவா தெரியல. ஹீரோ வீட்டுக்கு வந்திருக்கோம். அங்க இந்த வயசுல மான் மாதிரி அமைதியா ஒரு ஜீவன் வந்துட்டு போகுதுன்னா யாரா இருக்கும். நம்ப ஹீரோவுக்கு அம்மா தான் இவங்க” என்றாள் கமலி.

“ஹீரோ சிங்கம்ன்னா. அவங்க அம்மாவும் சிங்கம் மாதிரி இருப்பாங்கன்னு நினைச்சேன்” என்று பாட்டி புருவம் உயர்த்த, “அம்மா அப்படித் தான் இருக்கணுமா. அப்பா கூட அப்படி இருக்கலாம். அதனால கூட ஹீரோ சிங்கக்குட்டியா பிறந்திருக்கலாம்” என்றாள் கமலி திருதிரு முழியுடன்.

“அப்போ ஹீரோ, ஹீரோவோட அப்பா எல்லாம் சிங்கம், புலியா இருந்தாலும், ஹீரோவோட அம்மா, லவ்வர், பொண்டாட்டி எல்லாம் மானு, முயல்ன்னு இருந்து, அவங்கக் கிட்ட சிக்கித் தவிக்கணும்.
பெண் சிங்கமாவோ, புலியாவோ இருக்கக் கூடாது. அப்படித் தான” என்று பாட்டி கேட்க, “பாட்டி. ஆன்ட்டி-ஹீரோ ஸ்டோரி இலக்கணமே தெரியாம பேசற நீ. நீ கேக்கற லாஜிக் எல்லாம் பார்த்துக் கதை எழுதுனா, நான் ஆண்ட்டி-ஹீரோ எழுத முடியாது. பாட்டி-ஹீரோ தான் எழுத முடியும்” என்று பொரிந்தாள் கமலி.

‘ஐயோ! இந்த ஒத்த கதையை முடிக்கறதுக்குள்ள இந்தப் பாட்டி கிட்ட என்னென்ன கேள்வி வாங்கப்போறேனோ! அவ்வ்வ்வவ்!’ என்று உள்ளுக்குள் நொந்துக்கொண்டாள் கமலி.

அவர்கள் அப்படிப் பேசிக்கொண்டிருக்கும் போதே, பூட்டிய அறையிலிருந்து “ஐயோ!” என்று அலறல் சத்தம் கேட்க, இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
அந்த அறையின் கதவைத் திறந்துக்கொண்டு, கையில் ரத்தக்கறைப் படிந்தக் கத்தி ஒன்றை ஏந்தியக் கையோடு வெள்ளை வேட்டி சட்டைப் போட்ட ஒருவர் வெளியே வந்தார்.

வந்தவர், இரண்டு அடியாட்களை அழைத்து, “அவன் பாடியை டிஸ்போஸ் பண்ணுங்கடா” என்று சொல்லிவிட்டுத் திரும்பினார். அவரின் பார்வை இவர்கள் இருவரின் மேலும் விழ, கமலி நடுநடுங்கி எழுந்து நிற்க, பாட்டியோ கால் மேல் கால் போட்டு அமர்ந்த வண்ணம் இருந்தார்.
“பாட்டி. இவரு ஹீரோவோட அப்பா. ஊருல பெரிய கையி. பெரிய ரவுடி. எழுந்து நின்னு மரியாதைக் குடு” என்று கமலி பாட்டியின் காதில் கிசுகிசுக்க, “கொலைப் பண்றவன், கொள்ளை அடிக்கறவன் எல்லாம் பெரிய ஆளு கிடையாது. மரியாதையும் குடுக்க முடியாது. நெவர்” என்று பதிலளித்தார் பாட்டி.

“ஐயா. அது இந்தப் பாட்டிக்குக் கால் ஊனம். அதான் எழுந்து நிக்க முடியல” என்று கமலி சொல்ல, வேண்டுமென்ற எழுந்து நின்று நடந்துக் காட்டினார்.

‘ஐயோ! கெழவி என்னைச் சாவடிக்காம விடாது போலயே’ என்று கமலி நடுங்கும் நேரத்தில் சரியாக வந்தார் அந்தப் பெண்மணி. பாட்டியின் பாஷையில் சொல்ல வேண்டும் என்றால், ‘மான்’. அந்தப் பாத்திரத்துக்கு கமலி வைத்திருந்தப் பெயர் பூங்கொடி.

“நிரஞ்சனைப் பார்க்க வந்திருக்காங்க” என்று அவர் கணவரிடம் சொல்ல, “ம்ம்ம்” என்றவர் அங்கிருந்து நகர்ந்தார்.
அந்தக் கூடத்திற்கு நடுவில், முதல் மாடிக்குச் செல்லும் படிகள் இருந்தன. அந்தப் படிகளிலிருந்து முதலில் கீழே வந்தது, ஒரு பதினைந்து வயது பையன்.
அவன் சீப்பைத் தூக்கிக்கொண்டு ஓடி வர, அவன் பின்னால், பாதித் தலைப் பின்னியும் பாதிப் பின்னாமலும் ஓடி வந்தாள் ஒரு பதினெட்டு வயது பெண்.

அந்தப் பெண் நேராக, தந்தையிடம் வந்து, “அப்பா! அவனைப் பாருங்க. என் சீப்பைத் தூக்கிட்டு ஓடி வந்துட்டான். குடுக்கச் சொல்லுங்கப்பா” என்று முறையிட, அந்தப் பையனோ தாயின் பின்னால் ஒளிந்துக்கொண்டு அவளைப் பழித்துக்கொண்டிருந்தான்.

அவள் தளிர்.

சிங்கமுத்து-பூங்கொடி இருவரின் ஒரே பெண். அவளிடம் வம்பு வளர்க்கும் சிறுவன், சந்தோஷ். அவர்களின் கடைசி மகன்.
பூங்கொடி ஒருவாறாக இருவரையும் சமாதானம் செய்து வைத்து தளிருக்கு தலைச் சீவி முடிக்க, உறுதியான காலடிச் சத்தம் கேட்டது.

சந்தன நிற முழுக்கால் சட்டை, அடர் நீல நிற முழுக்கைச் சட்டை, கருப்பு நிற ஷூ சகிதம், கையிலிருந்த விலையுயர்ந்தக் கைக்கடிகாரத்தை மாட்டிக்கொண்டே கீழே இறங்கிவர அனைவர் கவனமும் அவன் பக்கம் திரும்பியது.

அவன் ‘லெனின் நிரஞ்சன்’.

கம்பீர நடை, சுற்றி இருப்பவர்களை ஆராயும் பார்வை, இறுக்கமான உடல்வாகு, அனைவரையும் கவனிக்கவைக்கும் குரல், முக்கியமாக வயிற்றில் படிக்கட்டு வெட்டி வைத்தது போன்ற சிக்ஸ் பேக் பாடி. சுந்தரன் தான். ஆயினும், ‘கொஞ்சமே கொஞ்சமாகச் சிரித்தால் அழகுக்கு அழகுச் சேர்த்தது போல் இருக்குமே’ என்ற எண்ணம் தோன்றி அவன் சிரிப்பானா என்று எதிர்பார்க்க வைக்கும் எழில் வதனம்.

அவன் வந்ததும் பாட்டியை இடித்த கமலி, “எப்புடி? ஆன்ட்டி-ஹீரோவா இருக்குறதுக்கே அளவெடுத்து செஞ்ச மாதிரி இருக்கான்ல!” என்று கேட்க, “பாக்குறதுக்கு எல்லாம் நல்லா தான் இருக்கான். ஆனா, ஏன் சிரிக்கா மூஞ்சியா இருக்கான்? சிரிச்சா என்ன அழகா இருப்பான் தெரியுமா இவன்?” என்றார் பாட்டி.

“ஐயோ! எத்தனை தடவ உன்ன திட்டுறதுன்னு தெரியல. முதல்ல, ஆன்ட்டி-ஹீரோ இலக்கணம்ன்னு ஒரு புக்க எழுதி உன் கைல குடுக்கணும்.
சிரிச்சி கலகலன்னு இருந்தா அவனை ஆன்ட்டி-ஹீரோன்னு ஒத்துக்க மாட்டாங்க. ஆன்ட்டி-ஹீரோன்னா, அவன் சிரிச்சாலே எல்லாரும் பயப்படனும்” என்று கமலி சொல்ல, “ஏன்? அவ்ளோ கேவலமாவா இருக்கும்!” என்றார் பாட்டி வெள்ளந்தியாக.

“இல்ல. அவன் சிரிச்சா அதுல வில்லத்தனம் இருக்கணும். ‘ஐயோ. சிரிக்கறானே! அடுத்து என்ன பண்ணுவானோ’ன்னு யோசிக்கணும்” என்றாள் கமலி.

“அரக்கனா அவன்” என்று பாட்டி கேட்க, “இல்ல ஆன்ட்டி ஹீரோன்னு எத்தனை முறை சொல்றது” என்று அலுத்துக்கொண்டாள்.

அதற்குள் லெனின் நிரஞ்சன் கீழே இறங்கி வந்திருந்தான்.
நேராக தந்தையிடம் சென்றவன், அவரின் கையிலிருக்கும் கத்தியைப் பார்க்க, “மார்க்கெட் நடுவுல ஒருத்தனைப் போட்டோமே. அவனை நம்ப ஆளுங்க தான் போட்டாங்கன்னு எவிடன்ஸோட ஒரு போலிஸ்காரன் அரெஸ்ட் பண்றேன்னு வீட்டுக்குள்ளேயே வந்துட்டான். அவன் தான்” என்றார் சிங்கமுத்து.

“வயசாகிடுச்சு ப்பா உங்களுக்கு. எல்லாருக்கும் பயம் போய்டுச்சு உங்க மேல. போலீஸ் வீட்டுக்குள்ளயே வந்திருக்கான்” என்று அவரை ஆழமாகப் பார்த்தான் லெனின் நிரஞ்சன்.

“இதுக்குத் தான் சொன்னேன். எல்லாத்தையும் மொத்தமா என்கிட்ட குடுத்துடுங்க” என்று அவன் பார்க்க, “உன்கிட்ட பல தடவை சொல்லிட்டேன் லெனின். உனக்கு இந்தக் கைல ரத்தம் படியற வேலை எல்லாம் வேண்டாம். நம்ப காலேஜ் இருக்கு. அதைப் பார்த்துக்கோ. அதை மட்டும். இந்தக் கொலை, கட்டப்பஞ்சாயத்து எல்லாம் என்னோட முடியட்டும்” என்று சிங்கமுத்து சொல்ல, “முடியாது. எனக்கு எல்லாமும் வேணும். நீங்க இப்போ செஞ்சிட்டு இருக்க எல்லாமும் என் தலைமைக்குக் கீழ வரணும். நீங்க வேணாம்ன்னு சொன்னாலும். ஒரு நாள் வரும்” என்றவனை முறைத்தார் சிங்கமுத்து.
ஆனால், அதையெல்லாம் கண்டுக்கொள்ளாதவன், தாயைப் பரிமாறச் சொல்லி, காலை உணவை உண்ணத்தொடங்கினான்.
அதற்கு மேல் இங்கிருக்க விரும்பாமல், சிங்கமுத்து அவரின் அறைக்குள் நுழைந்தார்.

“நிரஞ்சா. அதான் அப்பா சொல்றாருல்ல. இந்த ரத்தம், கொலை எல்லாம் அவரோட போகட்டும்ப்பா. நீ நம்ப காலேஜ பார்த்துக்கோ. அதுல வர்ற காசு நமக்குத் தாராளமா போதும்” என்று பூங்கொடி சொல்ல, லெனின் நிரஞ்சன் “முடியாது” என்றதோடு சரி.
அதன் பிறகான ஐந்து நிமிடங்கள் அமைதியாகவே கடக்க, “நிரஞ்சன் அண்ணா” என்றாள் தளிர்.

“கால் மீ லெனி!” என்றான் அவன் தளிரை எரிக்கும் பார்வையுடன்.

அவன் பிறந்தபோது, ரஷிய புரட்சியாளர் லெனின் ஞாபகமாக, அவனுக்கு அந்தப் பெயரைச் சூட்ட ஆசைப்பட்டு அந்தப் பெயரை வைத்தார். “There are Decades Where Nothing Happen. There are Weeks Where Decades Happen” என்றவர் லெனின்.

தசாப்தங்களில் செய்து முடிக்க வேண்டியதை, வாரங்களில் செய்து முடிக்கும் வல்லமையோடு தன் மகன் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு அந்தப் பெயரை வைத்தார் சிங்கமுத்து. ஆனால், அவனோ இன்று, “வெள்ளைக் கையுறைகள் அணிந்து புரட்சி செய்ய முடியாது” என்று லெனினின் பொன்மொழி ஒன்றைக் கூறி, சிகப்புக் கையுறை அணிய துடித்துக்கொண்டிருக்கிறான்.

பூங்கொடியோ, எந்தக் குறையுமில்லாமல், அனைத்து மகிழ்ச்சிகளையும் பெற்று நிறைவான வாழ்வைத் தன் மகன் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டு, ‘நிரஞ்சன்’ என்று சொல்ல, இரண்டு பெயர்களையும் சேர்த்து ‘லெனின் நிரஞ்சன்’ என்று வைத்தனர்.

தந்தை லெனின் என்றும், தாய் நிரஞ்சன் என்றும் அழைக்கும் போதும் அமைதியாக இருப்பவன், வேறு யாரும் அப்படி அழைத்தால் கோபத்தில் சீறுவான்.

மற்ற அனைவரும் அவனை, ‘லெனி’ என்று அழைப்பதையே விரும்புவான்.

“ஏன்டா. பாப்பா இப்போ நிரஞ்சன்னு கூப்ட்டா என்ன டா?” என்று பூங்கொடி கேட்க, “இல்ல ம்மா. என்னை லெனின்னு கூப்பிடறது தான் எனக்குப் பிடிச்சிருக்கு. உனக்குத் தெரியுமா! லெனின்னா சிங்கம்ன்னு அர்த்தம். எனக்கு அந்தப் பேர் தான் பொருத்தம்ன்னு எனக்குத் தோணிக்கிட்டே இருக்கு” என்றான் அவன்.

‘லெனி’ என்று பெயரைக் கேட்டதும் பாட்டியின் முகத்தில் அதிர்ச்சி.


“லெனி... இந்தப் பேர் நீ வச்சதா?” என்று கமலியிடம் கேட்க, “ஆமாம்! செமையா இருக்குல்ல” என்று கேட்க “ம்ம்” என்ற பாட்டியின் முகத்தில் தோன்றிய வியப்பு மறைய சில நிமிடங்கள் எடுத்தது.

லெனின் நிரஞ்சன்!

லெனி!

சிங்கம் என்ற பெயரையும், ‘சிங்கம் போல்’ என்ற உவமையையும், ‘தலைமை’ பதவியையும் வெகுவாக விரும்புபவன்.

அதற்காக எந்த எல்லைக்கும் போகக்கூடியவன்.


அவனின் இந்தக் குணம், அவனின் எதிர்க்காலத்தை மட்டுமில்லாமல், அவன் குடும்பத்தின் எதிர்க்காலத்தையே எப்படி மாற்றி அமைக்கப்போகிறது என்பதைப் பற்றித் துளியும் கவலையின்றி, தளிர் என்ன சொல்ல தன்னை அழைத்தாள் என்று வினவிக்கொண்டிருந்தான் லெனி.
 
Last edited:
அத்தியாயம் – 2.1:

அம்ராவின் உறுமல் சத்தத்தை வைத்தே, ‘அஸ்லானின் கோபத்திற்கு ஆளாகாதே!’ என்று தாய் உச்சரிப்பதை உணர்ந்துக்கொண்டான் லெனி.

அதற்கு மேல் அங்கு நிற்காமல், தங்களுக்குள் சீறிக்கொண்டும், பிஞ்சு நகங்களால் மாற்றி மாற்றிக் கீறிக்கொண்டும் விளையாடிக்கொண்டிருந்த மைலோ மற்றும் பாப்பியிடம் சென்றவன், பாப்பியின் கழுத்தை வாயால் கவ்வித் தூக்கிக்கொண்டு சுற்ற, “நானும்! நானும்!” என்று லெனியின் பின்னால் சுற்றி வந்தான் மைலோ.

அவன் இவ்வாறாகக் குட்டிகளுடன் விளையாடுவதைக் கண்ட அஸ்லான், எழுந்து அவனை நோக்கி நடக்கலானார். அஸ்லான் வருவதைக்கண்டதுமே, வாயில் கவ்வியிருந்தப் பாப்பியை இறக்கிவிட்டு அஸ்லானையே பார்த்து நின்றான் லெனி.

அஸ்லானின் நோக்கம் புரிந்ததாலோ என்னவோ, அந்தக் குடும்பத்தின் வேறொரு பெண் சிங்கம் வந்து பாப்பியையும், மைலோவையும் அங்கிருந்துத் தூக்கிச் சென்றது.

மற்றவர்களுக்குப் புரிந்தாலும், லெனிக்கு அஸ்லான் என்ன செய்ய வருகிறார் என்பதைப் பற்றி எவ்விதக் கணிப்புமே இல்லை. இதுவரை, அஸ்லான் லெனியிடம் எதுவும் பேசியதில்லை. அவ்வப்போது அவனை முறைத்துப்பார்ப்பதும், வெறித்துப்பார்ப்பதும் உண்டு. அதுவும் தூரத்திலிருந்து.

இன்று தன்னை நோக்கி வரவும், ‘என்னவாக இருக்கும்!’ என்று யோசித்தாலும் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆதலால், யோசிப்பதை நிறுத்திவிட்டு, நின்ற இடத்திலேயே நின்று அஸ்லானின் பார்வையை நேராக எதிர்க்கொண்டான்.

அஸ்லான் இதை எதிர்பார்க்கவில்லை.

அஸ்லானைப் பொருத்தமட்டில், வேட்டையாடாத, கர்ஜிக்காத லெனி வலிமை இல்லாதவன். உடலில் வலிமை இல்லாததால் தான் வேட்டையாடுவதில்லை. மனவுறுதி இல்லாததால் தான், அவன் குரல் கர்ஜனையாக வெளியே கேட்பதை அவன் விரும்பவில்லை என்றே நினைத்தார்.

ஏனெனில், சிங்கங்களின் கர்ஜனை வெறும் சத்தம் மட்டுமல்ல. அவை சிங்கத்தின் சக்தி, ஆதிக்கம் ஆகியவற்றின் வெளிப்பாடு.

சிங்கங்களின் எதிரிகள் முதலில் எதிர்க்கொள்வது அதட்டலான ஆண் சிங்கத்தின் கர்ஜனையைத் தான்.

எதிரிகளைப் பயந்து ஓடவைப்பதும் அந்தக் கர்ஜனை தான். ‘நீ சண்டைக்கு வந்தாலும் என்னை வீழ்த்த முடியாது’ என்று எச்சரிப்பது அந்தக் கர்ஜனை.

‘ஜெயிக்க முடியும்’ என்று மனவுறுதி இல்லாததால் தான் லெனி கர்ஜிக்கவில்லை என்று நினைத்திருந்த அஸ்லானுக்கு, ‘அப்படியில்லை’ இன்று நிரூபித்தான் லெனி.

மனவுறுதி இல்லாத எந்த உயிரினமாக இருப்பினும், முழுதும் வளர்ந்த ஆண் சிங்கம், பிடரி முடி சிணுங்க, அடி மேல் அடிவைத்து தன்னை நோக்கி வருகையில், ஒரு அடியேனும் பின்னெடுத்து வைக்கும்.

ஆனால், அசராமல், நின்றிருந்த இடத்திலேயே நின்றிருந்தானே லெனி. அதுவும் அஸ்லானின் கண்களிலிருந்து அவன் பார்வையை அகற்றாமல்.

‘தன் மகன் மனவுறுதியற்றவன் இல்லை’ என்று ஏதோ பூரிப்புப் படர்ந்தது அஸ்லானுக்குள். அந்தப் பூரிப்பின் காரணமாக, எடுத்து வைத்த அடிகளின் வேகம் கூடியது. அத்தனை வேகமும், அவனின் உடலுறுதியையும் இன்றே சோதித்துப் பார்த்துவிட.

அதே ஆவலில், லெனியை நோக்கி ஓடிய அஸ்லான், அவரின் முன்னங்கால்களின் கூர்மையான நகங்களைக் கொண்டு லெனியின் உடல் பகுதியில் கீற, லெனி அப்பொழுதும் நகரவுமில்லை. வலியில் அலறவுமில்லை. எதுவும் நடவாதது போலவே நின்றிருந்தான்.

அவனின் முன்னங்கால்களில் ஓங்கி அடித்தார். அதற்கும் அவன் அசைந்து கொடுக்கவில்லை. வேறு விலங்குகளாக இருந்திருந்தால், ஏன் அஸ்லான் அளவிற்கு வளர்ந்த வேறு ஆண் சிங்கமாக இருந்திருந்தால் கூட, அந்த அடியில் கால்களைப் பின்னே நகர்த்தியிருக்கும். ஆனால், இன்னும் முழு வளர்ச்சியடையாத, இளம் சிங்கமாக இருப்பினும், அந்த அடியைத் தாங்கிக்கொள்ளும் சக்தி அவன் உடலிலிருந்தது.

‘உடல் பலம்’. அது ‘ஆஸ்கர்’ குடும்பத்துச் சிங்கங்களுக்கு இயல்பாகவே அதிகம். அதனாலேயே தான், இதுவரை வேறு எந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சிங்கங்களும் ‘ஆஸ்கர்’ சிங்கங்களை வீழ்த்தி, அந்நிலத்திற்குத் தலைவன் ஆனதில்லை. ஒரு ‘ஆஸ்கர்’ சிங்கத்தை வீழ்த்தி, புதிதாகத் தலைமைக்கு வருவது, இன்னொரு ஆஸ்கர் சிங்கமாகத்தான் இருக்கும்.

அந்த உடல் வலிமை, லெனியிடமும் குறையாமல் இருப்பது அஸ்லானுக்கு உவகை என்றால், இன்னமும் கூட அவன் பாதங்கள் பின்னே நகராமல் இருப்பது ஆச்சரியம்.

சற்று முன் அவனை அருவருப்பு பார்வைப் பார்த்தவர், இந்த நொடி ஆச்சரியப்பார்வை வீசினார்.

இப்பொழுது, அவருக்கிருந்த ஒரே குறிக்கோள், லெனியைத் தன்னை அடிக்கவைத்துவிட வேண்டும்.

ஒரே ஒரு பதிலடி அவன் கொடுத்துவிட வேண்டும். அதற்கான முயற்சியில் ஈடுபட்டார் அஸ்லான்.

முன்னங்கால்கள் கொண்டும், நகங்கள் கொண்டும் எத்தனைத் தாக்கியும் பயனில்லாமல், அடுத்தக் கட்டத் தாக்குதலுக்குத் தயாரானார் அஸ்லான்.

நான்கு அடிகள் பின்னே எடுத்து வைத்தவர், வேகமாக ஓடி வந்து, பின்னங்கால்களைத் தரையில் ஊன்றி, முன்னங்கால்களை உயர்த்தி, லெனியின் தலையைப் பிடித்து அவனைத் தரையில் சாய்த்தார்.

தன்னைக் காப்பாற்றிக்கொள்ள லெனி, அஸ்லானின் தலையைப் பிடிக்கவுமில்லை. தன் பற்கள் கொண்டு அவரைக் கடிக்கவுமில்லை. சொல்லப்போனால், காரணமே இல்லாமல் தன்னைத் தாக்கும் அஸ்லானைப் பதிலுக்குத் தாக்க, அவன் எவ்வித முயற்சியும் எடுக்கவே இல்லை.

அஸ்லானின் தாக்குதலுக்கு அவன் வீழ்ந்துவிடவும் இல்லை. பயந்துவிடவும் இல்லை. தரையில் சாய்ந்த அடுத்த நொடி, தன் மீது அழுத்தம் கொடுத்து நின்ற அஸ்லானையும் மீறி எழுந்து நின்றான் லெனி.

அஸ்லானின் தாக்குதல் இன்னும் சில நிமிடங்கள் நீடித்திருந்தது. வாழ்வில் முதல் முறையாக, தான் யாரோடு சண்டையிடுகிறோமோ அவன் தன்னை எதிர்த்துச் சண்டையிடவில்லையே என்று வருத்தப்பட்டார் அஸ்லான்.

ஆம், அஸ்லான் தோற்றுப்போனார். லெனி அவரை எதிர்த்துச் சண்டையிடவே இல்லை என்பதால் தோற்றுப்போனார். லெனியிடமிருந்து ஒரே ஒரு கீறல், ஒரே ஒரு சீறல், ஒரே ஒரு அடி, குறைந்தது எச்சரிப்பாய் ஒரே ஒரு கர்ஜனைக் கூட வரவைக்க முடியாமல் தோற்றுப்போனார் அஸ்லான்.

அந்தத் தோல்வியோடு, இலவச இணைப்பாக இன்னொரு தோல்வியும் ஒட்டிக்கொண்டது. எதில் தோல்வி? லெனி மற்ற சிங்கங்கள் போல் அல்லாது, சாதுவாக சைவ உணவு உண்பவனாக இருப்பதற்குக் காரணம் கண்டுபிடிக்க முயற்சித்ததில்.

அதற்குக் குறிப்பிட்டக் காரணங்கள் எதுவுமில்லை என்று அஸ்லானுக்கு யார் புரியவைப்பது? லெனி இயற்கையின் அதிசயம். இயற்கையின் விந்தை என்று யார் சொல்வது.

தோல்வியில் தலைக்கவிழ்ந்து, அஸ்லான் தான் முன்பு படுத்திருந்த மரத்தடிக்குத் திரும்ப, கீழே விழுந்ததில் தன் மீது ஒட்டிய மண்ணையெல்லாம் உடலைக் குலுக்கி உதறினான் லெனி.

‘ஏன் தாக்குதல்? எதற்குத் தாக்குதல்?’ என்று புரியாமல் விழித்தான் லெனி.

அவனைப் பார்க்கப் பார்க்கக் கோவம் கோவமாக வந்தது அஸ்லானுக்கு.

சிங்கங்கள் தங்கள் மகன்களுக்குத் தலைமையை விட்டுக்கொடுக்காமல், குறிப்பிட்ட வயது வந்ததும் அவர்களைக் குடும்பத்தை விட்டு வெளியேற்றும் விலங்குகள் தான். ஆனால், வலிமையானச் சந்ததிகளை உருவாக்கப் பேராவல் கொண்டவை. தன் ரத்தத்தில் உதித்த மகன்கள் தான் ஆள வேண்டும் என்று எண்ணுபவை.

சில நிமிடங்கள் அஸ்லானைப் பார்த்திருந்த லெனி, மீண்டும் மைலோ, பாப்பி இருவரும் இருந்த இடத்திற்குச் சென்று, அவர்களுடன் விளையாடத்தொடங்கினான்.

அதைப் பார்த்திருந்த அஸ்லான் மீண்டும் வேகமாக லெனியிடம் வந்தார். அவனைக் கூர்மையாகப் பார்த்து விட்டு, மைலோவையும், பாப்பியையும் ஒரே கவ்வில் அவரோடு தூக்கிச் சென்றார்.

லெனி மைலோவுடனும், பாப்பியுடனும் விளையாடுவது அவருக்குப் பிடிக்கவில்லை என்று லெனிக்குப் புரிந்தது. ஆனால், அதற்கான காரணம் புரியவில்லை.

அவன் அம்ராவைப் பார்க்க, காரணம் தெரிந்த அம்ரா அமைதியாக நின்றாள்.

மைலோவும், பாப்பியும் அவனோடு பழகினால், அவனைப் போலவே தாவரப் பட்சினியாக மாறிவிடுவரோ என்ற அஸ்லானின் பயம் தான் இந்தச் செயலுக்குக் காரணம் என்று நினைத்தார் அம்ரா.

ஆனால், அவனுடைய நடவடிக்கைகள் இயற்கைக்குப் புறம்பானவை என்பது இன்னமும் புரியாமலிருக்கும் லெனியிடம் இதை என்னவென்று சொல்வார் அம்ரா.

எப்பொழுதும் அஸ்லானின் எண்ணங்களைச் சரியாகக் கணிக்கும் அம்ராவின் கணிப்பு இந்த முறைத் தவறாக இருந்தது.

அஸ்லான், மைலோ பாப்பி இருவரையும் தூக்கிச் சென்றது, அவர்கள் லெனியுடன் பழகக்கூடாது என்பதற்காக அல்ல. மைலோ ஒருபோதும் லெனியைப் போல் மாறப்போவதில்லை என்பதை உணர்ந்து தான் இருந்தார் அஸ்லான். ஏனெனில், இந்த வயதிலேயே சீறலும் சீற்றமுமாக தான் இருந்தான் மைலோ.

அவர் தூக்கிவந்ததன் நோக்கம், இரண்டு குட்டிகள் மீதும் அதீதப் பாசம் கொண்ட லெனி, அவர்களைத் தன்னிடமிருந்துப் பிரித்துச்செல்ல வேண்டாம் என்று தன்னிடம் சண்டைப் பிடிப்பான் என்றெண்ணித் தான்.

ஆனால், அஸ்லானை மீண்டும் ஒரு முறைத் தோல்வியைக் கவ்வ வைத்தான் லெனி, அமைதியாக அவ்விடம்விட்டு அகன்று.

அங்கிருந்து நகர்ந்தவன் எண்ணமெல்லாம் மைலோ, பாப்பியைச் சுற்றியே இருந்தது.

அவர்களைத் திரும்பிப் பார்த்துக்கொண்டே நகர்ந்தான்.

** ** ** ** ** **
 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom