Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நான்கு பாதை!ஒரு வழி!

அத்தியாயம்6



அன்று இரவு தங்கும் விடுதி ஒன்றில் தங்கிய சகோதரர்கள் இருவரும் தனிமையில் உரையாட ஆரம்பித்தனர்.”அண்ணா! இந்த வேட்டை விழாவை பற்றி நமக்கு எந்த விசயமும் தெரியாது.அதை நாம் தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.”



“வாஸ்தவம்தான்! அதை தெரிந்து கொள்ள என்னிடம் ஒரு உபாயம் உள்ளது! “என்றான் அரிஞ்சயன்.



“சொல்லுங்கள்! செய்து பார்ப்போம்! “என்றான் ஆதித்தன்.



“இப்போது விடுதியிலிருந்து வெளியேறி ஆளுக்கு ஒரு திசையில் செல்வோம்.வேட்டை விழாவை பற்றி நகர மக்களிடம் விசாரிப்போம்.மீண்டும் விடுதியில் சந்தித்து நமக்கு கிடைத்த தகவல்கள் ஒத்து போகிறதா என்று சரி பார்ப்போம்.பிறகு விளையாட்டில் வெல்லும் வழியை கண்டு பிடிப்போம்! “



சம்மதத்திற்கு அறிகுறியாக தலையை அசைத்த ஆதித்தன் “அடுத்த சில மணி நேரங்கள் நாம் தனித்தனியாக இருக்கப் போகிறோம்.அதை சாதகமாக்கி கொள்ள நம் கருநாகம் முயற்சி செய்யலாம்! “



“நம் கருணாகரனுக்கு பொருத்தமான பெயரைத்தான் வைத்திருக்கிறாய்! “என்று புகழ்ந்த அரிஞ்சயன் “அடிபட்ட பாம்பிடம் எச்சரிக்கையாகத்தான் இருக்க வேண்டும்! உன் எச்சரிக்கையை கவனத்தில் வைக்கிறேன்.!”



“நேரடியாக மோத துணிய மாட்டான் என்பதால் நாம் கண்ணில்பட்டவர்களிடம் சந்தேக கண் கொண்டே பழகியாக வேண்டும்! “என்ற ஆதித்தன் “ஆமாம் மோகினியும், உனது குதிரையும் எங்கே? “என்றான்.



“வாடகை குதிரை லாயத்தில் பாதுகாப்பாக ஒப்படைத்திருக்கிறேன்.கவலைப்பட வேண்டாம்.நம் நகர் உலா கால்நடையாகவே நிகழப் போகிறது! “



அடுத்த சில நிமிடங்களில் சகோதரர்கள் இருவரும் விடுதியிலிருந்து வெளியேறி ஆளுக்கொரு திசையில் நடந்தனர்.அதே நேரம் கருணாகரன் தனக்கு விசுவாசமான படை வீரர்களுடன் குயுக்தியான திட்டம் ஒன்றை தீட்டி கொண்டிருந்தான்.அபிமன்யு சக்ர வியூகத்தில் சிக்கி உயிரை விட்டதற்கு ஒப்பான ஒரு திட்டம் அவன் மனதில் உதயமாகியிருந்தது.அதில் சிக்கியவர்கள் மீள்வது எளிதல்ல! ஆதித்தனின் மனப்போக்கை ஓரளவு ஊகித்திருந்த கருணாகரன் இரண்டு விதமான திட்டங்களை தீட்டி வைத்திருந்தான்.ஆதித்தன் எந்த வழியை தேர்ந்தெடுத்தாலும் அது மரணத்தின் நுழைவாயிலாகவே இருக்கும் என்று தெளிவாக தெரிந்த பின்பே கருணாகரன் படுக்கைக்கு போனான்.



முதல் ஜாமம் முடிவடையும் நேரத்தில் சகோதரர்கள் இருவரும் விடுதியில் சந்தித்து கொண்டனர்.இருவருக்கும் எந்த இடையூறும் நேராதிருந்த போதே கருணாகரன் மிகப்பெரிய வலை ஒன்றை தங்களுக்காக விரித்திருப்பான் என்பதை ஆதித்தன் யூகித்திருந்தான்.உணவருந்தி படுக்கையில் உட்கார்ந்த ஆதித்தன் “சொல் அண்ணா? நீ கேள்விப்பட்டவற்றை! “என்றான்.



பெருமூச்சு விட்ட அரிஞ்சயன் “இது உயிர்பலி நிறைந்த விளையாட்டு ஆதித்தா! யுத்தவெறி பிடித்த மகேந்திரனின் கொடூரத்திற்கு இந்த விளையாட்டு ஒரு சாட்சி! “



“ஆம்! நானும் அதைத்தான் நினைத்தேன்.!”என்றான் ஆதித்தன்.



“போட்டி இரண்டு வழிகளில் நடக்கும்.ஒன்று நீலமலையை அடையும் நேர்வழி! “



“அதில் பயணிக்கும் வீரர்களை மகேந்திரனும் அவனது வீரர்களும் அம்புகளாலும் வேலாலும் தாக்கி கொல்வார்கள்! கணவாய் பகுதிகளில் பாறைகள் உருட்டி விடப்படும்.யானைகளை பிடிக்கும் குழி வேல் கம்புகள் நடப்பட்டு மணல் போர்த்தி காணப்படும்.அதில் விழுபவர்களின் கதி அதோ கதிதான்.!”



“நீல மலைக்கான நேர்வழியில் ஆபத்து நேராகவே காத்திருக்கும்.அதில் தப்பி தொடர்ந்து இலக்கு நோக்கி பயணிக்க வேண்டும்.!”என்றான் ஆதித்தன்.



“உயிர் போனாலும் கவலையில்லை என்று வீரர்களிடம் முதலிலேயே பிராமண பத்திரம் எழுதி வாங்கி கொள்வதால் உயிர்பலிக்கு நடவடிக்கை இல்லை.போட்டி இரண்டு பகல், இரண்டு இரவுகள் தொடர்ந்து நடக்கும்.தாக்குதல் இரவிலும் நடக்கும்.ஒருவரையொருவர் முந்தி செல்ல தங்களுக்குள்ளாக அடித்து கொண்டு வீரர்கள் இறப்பதும் உண்டு.!”



“கேள்விப்பட்டேன்.கருணாகரன் இதில்தான் பயணிக்கிறானா? “



“அப்படித்தான் தெரிகிறது.போட்டியில் முதல் ஆளாக அவன்தான் கிளம்புகிறான்.தங்கள் நாட்டு வீரன் என்பதால் தாக்குதல் நடத்தப்படுவதில்லையென்ற புகாரும் நகரில் நிலவுகிறது! “



“அது உண்மையாக கூட இருக்கலாம்! அடுத்த வழி? “



“அது வழியல்ல! நரகத்தின் வாசல்! “என்றான் அரிஞ்சயன்.



“உண்மைதான்.!இரண்டாவது வழி மாயமான் கரடு! அதனுள் நுழைந்தவர்கள் உயிருடன் திரும்பியதில்லை! இதுவரை அதில் பயணம் செய்ய முயற்சி செய்த 160 பேர் இறந்திருக்கின்றனர்!அந்த வழி நான்கு பாதையாக பிரியும்.அதில் ஒன்றுதான் சரியான வழி.!தவறான வழியில் சென்றாலும் தவறான வழியில் சென்றாலும் மரணம் நிச்சயம்.அது ஒரு புதிர் வழி “என்றான் அரிஞ்சயன்.



“அப்படியானால் நாம் அதில்தான் பயணிக்க போகிறோம்! “என்றான் ஆதித்தன்.!



“அது மரணத்திற்கு சமம்! “என்றான் அரிஞ்சயன்.



“அதையும் நேரில் சந்தித்து பார்ப்போம் அண்ணா! “என்றான் ஆதித்தன்.



கருணாகரன் ஆதித்தன் இந்த வழியைத்தான் தேர்ந்தெடுப்பான் என்று யூகித்து வகுத்த சக்ர வியூகத்தில் காலை வைத்தான் ஆதித்தன்
 
அத்தியாயம்7



மரணத்தின் நுழைவாயிலாக கருதப்படும் நீலமலைக்கான நேர்வழியை விடுத்து தன் தம்பி பொய்மான் கரடு வழியை தேர்ந்தெடுத்ததுடன் அதிலேயே பயணம் செய்வேன் என்று அடித்து கூறியதால் அரிஞ்சயன் குழப்பமடைந்ததுடன் அதை ஆதித்தனிடம் கேட்கவும் செய்தான்.இளையவனோ புன்னகையுடன் பதில் கேள்வியை தொடுத்தான்.”நீலமலைக்கான நேர் வழியில் ஆபத்து நேராகவே வரும்.ஆனால் பொய் மான் கரடின் வழியில் ஆபத்து எப்படி வரும் அண்ணா? நீ கேட்டறிந்ததை கூறு? “



“அந்த வழி நான்கு பாதையாக பிரிகிறது.அதில் ஒரு வழிதான் எளிதானது.மற்ற மூன்று வழிகள் ஆபத்து நிறைந்தவை.கொடிய மிருகங்கள், மனித கறி உண்ணும் காட்டுவாசிகள், ஆளை விழுங்கும் புதை குழிகள், சுய நினைவை இழக்க செய்யும் மதிமயக்கி வனம் போன்ற ஆபத்துகள் நிறைந்தவை.நீலமலையின் வழியில் மகேந்திரனால் உருவாக்கப்படும் செயற்கையான அபாயங்களுக்கு சற்றும் குறைந்ததல்ல இந்த இயற்கை அபாயங்கள்.இதில் சரியான பாதையை கண்டறிய இயலாமல் உயிரை விட்டவர்கள் இதுவரை 160 பேர்! உள்ளே நுழைந்தவர்கள் இதுவரை திரும்பி வந்ததில்லை! “



“அந்த காரணத்தினால்தான் நான் அந்த வழியை தேர்ந்தெடுத்தேன்.!”



“புரியவில்லை ஆதித்தா! “



“அண்ணா! நன்றாக யோசித்து பார்.உள்ளே சென்றவர்கள் உயிருடன் வந்ததில்லை என்றால் அங்கிருக்கும் அத்தனை அபாயங்களும் வெளி உலகிற்கு எப்படி தெரிய வந்திருக்கும்? “இடியென இறங்கியது இளையவனின் கேள்வி.அதுவரை அந்த கோணத்தில் யோசிக்காத அரிஞ்சயன் தன் தம்பியின் புத்திசாலித்தனத்தை மனதிற்குள் வியந்தான்.



“சரியான கேள்வியைத்தான் கேட்டிருக்கிறாய்! இந்த கேள்விக்கு பதில்? “



“இந்த கேள்விக்கு பதில் தெரிந்தவர்கள் இருவர்.ஒருவன் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை.இன்னொருவன் மகேந்திரன்! “



“புரியவில்லை ஆதித்தா! “



“புரியும்படியாக சொல்ல வேண்டுமானால் நாம் மகேந்திரன் மன்னனாக பதவியேற்ற பத்தாண்டுகளுக்கு முன்பாக செல்ல வேண்டும்.ஏனென்றால் மகேந்திரன் மன்னனாகும் போது பொய்மான் கரடு நீலமலைக்கான குறுக்கு வழியாக இருந்தது.அடர்ந்த காடு என்பதைத்தவிர வேறு பயம் எதுவுமில்லை.மகேந்திரபுரி என்னும் இந்த புதிய தலைநகரை நிர்மாணித்த மகேந்திரனின் கண்கள் இந்த காட்டின் மீது விழுந்தது.புதிர் விளையாட்டில் விருப்பம் கொண்ட யாரோ ஒரு கட்டிட கலைஞனின் மூலம் பொய்மான் கரட்டை ஆபத்தான இடமாக மாற்றி இருக்க வேண்டும்.அதில் இருக்கும் ஆபத்தை மகேந்திரனும் அவனும் மட்டுமே அறிந்திருக்க வேண்டும்.ரகசியம் வெளிப்படாதிருக்க அந்த கலைஞனை மகேந்திரன் கொன்றிருக்க வேண்டும்.இல்லையென்றால் அவனை சிறைப்படுத்தியிருக்க வேண்டும்! “



“இது எப்படி உனக்கு தெரியும்? “



“நகரத்தின் வயது முதிர்ந்த பெரியவரிடம் பேசிய போது கிடைத்த தகவல்கள் இவை! “



“இந்த தகவல்கள் புதிய கதையை கூறுகின்றன! “



“ஆம்! பத்மாவதி தீ விபத்தில் இறந்தாள் என்று நாம் பத்தாண்டுகளாக நினைத்து வந்தோம்.ஆறு மாதங்களுக்கு முன் நம்மை சந்தித்த முதியவர் அது விபத்தல்ல கொலை என்று புதிய கதையை கூறவில்லையா? கரிகாலனை அரசு கொன்றது என்று நாம் நினைத்தோம்.ஆனால் நீதி மண்டபத்தில் கருணாகரன் கொன்றதாக புதிய கதை கிடைக்கவில்லையா?”



“உண்மைதான்! நீ கூறியபடி பார்த்தால் பொய்மான் கரடின் வழியை அதன் அபாயத்தை மகேந்திரன் மட்டுமே அறிவான்.அந்த நான்கு பாதைகளில் இருக்கும் எளிய ஒரு வழியை அறிந்தவர்கள் யாருமில்லை போலிருக்கிறதே?”



“மகேந்திரனை தவிரவும் இன்னொருவனுக்கு அந்த வழி தெரியும்! “



“அது யார்? “



“நம் நண்பர் கருணாகரன்தான் அது! “



“அந்த வழியை கூறியது மகேந்திரனாக இருக்குமோ? “



“இருக்கலாம்! இல்லாமலும் இருக்கலாம்! “



“புதிர் போட்டு பேசுகிறாய்! “



“எனக்கே கொஞ்சம் குழப்பம்தான் அண்ணா! ஆனால் நிச்சயமாக சொல்வேன்.போட்டியின் போது கருணாகரன் நீலமலை வழியில் செல்வதில்லை.பொய்மான் கரட்டு வழியாகத்தான் செல்கிறான்.!”



“அது எப்படி? போட்டியில் முதலில் கருணாகரன்தானே கிளம்புகிறான்! “



“வாஸ்தவம்தான்! ஆனால் போட்டியின் நடுவில் அவன் தட்டுப்படுவதில்லை.கடைசியில்தான் காட்சியளிக்கிறான்.!”



“அதுவும் உண்மைதான்.அதற்கு என்ன காரணம்? “



“பொய்மான் கரட்டின் எளிய வழி கருணாகரனுக்கு தெரியும் என்பதுதான் காரணம்.போட்டியில் முதலாவதாக கிளம்பும் கருணாகரன் ஒரு கல் தொலைவை கடந்த பின் பொய்மான் கரட்டு வழியில் புகுந்து விடுவான்.போட்டியாளர்கள் குற்றுயிரும், குலையுயிருமாக நீலமலை அடிவாரத்தை அடையும் போது கருணாகரன் குறுக்கு வழியில் இலக்கை அடைந்து விடுவான்! “



“சரியான திட்டம்.!இதை நாம் எப்படி முறியடிப்பது? “



“யோசிப்போம் அண்ணா!பொய்மான் கரடின் அபாயங்கள் கற்பனையாக கூட இருக்கலாம்! “என்றபடி படுக்கையில் சாய்ந்தான் ஆதித்தன்.இருவரும் உறங்க தொடங்கினர்.ஆதித்தனுக்கு தெரியாது மறுநாள் போட்டியின் போது துவக்கத்திலேயே கருணாகரன் தன்னை யோசிக்க விடாமல் கதற வைப்பான் என்று!
 
அத்தியாயம்8



மறுநாள் காலை ஆதவன் கிழக்கே உதித்தான்.அந்த சூரிய உதயம் எத்தனை பேரின் தலை எழுத்தை மாற்றி எழுதப்போகிறதென்பதை யார் அறிவார்? .அணி, அணியாகவும், குழுவாகவும், தனியாகவும் போட்டியாளர்கள் வகைவகையாக வந்து சேர்ந்திருந்தனர்.விழா மேடையில் மகேந்திரனை காணவில்லை.அவன் போட்டி நடக்கும் வழியின் மூன்றாவது கல் தொலைவில் தன் காவலர்களுடன் வில், அம்புகளுடனும், ஈட்டியுடனும் காத்திருந்தான்.தாக்குதல் நடத்திய பின் அடுத்த தாக்குதலை நடத்தும் இலக்கில் ஆயுதங்களும், வீரர்களும் காத்திருந்தனர்.விளையாட்டு துவங்கும் மைதானத்தில் அறிவிப்பாளன் தோன்றியதும் மைதானம் ஆழ்ந்த அமைதியில் ஆழ்ந்தது.அவன் தொண்டையை கனைத்து கொண்டு உரத்த குரலில் பேச ஆரம்பித்தான்.”வீரர்களே! நமது மன்னரின் வீர விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.இந்த போட்டியில் வெல்லும் வீரருக்கு ஏராளமான பொன்னையும் பொருளையும் மன்னர் பரிசளிப்பார்.கடந்த பத்தாண்டுகளாக இந்த போட்டியில் வெற்றி பெற்றிருப்பவர் நம் தளபதி கருணாகரன்.!”



தன்பெயர் குறிப்பிடப்பட்டதும் கருணாகரனின் முகத்தில் பெருமிதம் படர்ந்தது.பார்த்தாயா என் பெருமையை என்பது போல் மீசையை முறுக்கியபடி ஆதித்தனை பார்த்தான்.ஆதித்தனோ வாயை கையால் பொத்தி சிரிப்பை அடக்கி அவனை கேலி செய்தான்.



அறிவிப்பாளன் போட்டி விதிமுறைகளை அறிவிக்க தொடங்கினான்.



“இங்கிருந்து நீலமலைக்கான நேர்வழி தொடங்குகிறது.இந்த வழியில் ஒரு காத தூரம் சென்ற பின் வலது புறம் பொய்மான்கரடு என்ற குறுக்கு வழி செல்கிறது.போட்டியாளர்கள் இரண்டு வழிகளில் எதில் வேண்டுமானாலும் பயணம் செய்யலாம்.இரண்டு பகல், இரண்டு இரவுக்கு பிறகான சூரிய உதயத்தின் போது நீலமலை அடிவாரத்தை அடைபவர்களே வெற்றி பெற்றவர்கள்! “



அடுத்ததாக அவன் கூறியது இரண்டு வழிகளிலும் இருக்கும் அபாயத்தை பற்றியது.அது சகோதரர்கள் இருவரும் கேள்விப்பட்டவற்றுடன் ஒத்து போனது.போட்டியாளர்களை பின்பற்றி வரும் முதலுதவி படை களத்தில் காயமடைந்தவர்களை, இறந்தவர்களை அப்புறப்படுத்தும்.அதுவும் நீலமலைக்கான நேர்வழியில் மட்டுமே இந்த படை செயல்படும்.இவற்றை சொல்லி முடித்த அறிவிப்பாளன் தன் கையிலிருக்கும் சிகப்பு துணியை நழுவ விடும் போது குதிரைகளும், தேர்களும் கிளம்பலாம் என்று கூறினான்.கருணாகரன் தன் புரவியின் கடிவாளத்தை இறுக பிடித்திருந்தான்.ஆதித்தனும், அரிஞ்சயனும் சுவாதீனமாக குதிரைகளில் உட்கார்ந்திருந்தனர்.அறிவிப்பாளனின் கையிலிருந்த சிகப்புதுணி நழுவியதும் கருணாகரனின் குதிரை மின்னலென முதலில் கிளம்பியது.அடுத்தடுத்து ஒவ்வொரு போட்டியாளர்களின் குதிரைகளும் போட்டி போட்டு கொண்டு வெளியேறின.எல்லா குதிரைகளுமபுழுதியை் கிளப்பி கொண்டு கிளம்பிய பின்பும் சகோதரர்கள் இருவரின் குதிரையும் ஆணி அடித்தது போல் நின்ற இடத்தை விட்டு அசையாமல் நின்றன.அவர்களின் இந்த வினோத செயல் மைதானத்தில் சிரிப்பொலியை கிளப்பியது.

“அண்ணா! புழுதியிலிருந்து நம்மை காத்து கொள்ள துணியை முகத்தில் கட்டி கொள்வோம்! “என்றான் ஆதித்தன்.



அரிஞ்சயன் துணியை முகத்தில் கட்டி கொண்டு குதிரையை முடுக்கினான்.ஆதித்தன் தன் இடுப்பிலிருந்த செந்நிற துணியை முகத்தில் கட்டியதும் மைதானம் ஒரு நிமிடம் திடுக்கிட்டது.செந்நிற முகமூடியணிந்திருந்த ஆதித்தனின் உருவம் அவர்களின் மனதிலிருந்த மற்றோரு வீரனை பற்றிய நினைவுகளை தட்டி எழுப்பியது.அறிவிப்பாளன்தான் அந்த உணர்வை முதலில் உரத்த குரலில் வெளிப்படுத்தினான்.”கரிகாலன்! “

அந்த குரல் திரும்பவும் மைதானத்திலிருந்த மக்களிடமிருந்து உரத்த குரலில் எதிரொலித்தது.அனைத்து திசைகளிலிருந்தும் "கரிகாலன்!கரிகாலன்! "என்ற முழக்கம் கிளம்பியது. அறிவிப்பாளனின் உதடுகள் வியப்பில் விரிந்ததுடன் “மாண்டவன் மீண்டான்! “என்று நடுக்கத்துடன் உச்சரிக்கவும் செய்தது.
 
அத்தியாயம்9



மைதானத்திலிருந்த மக்கள் “கரிகாலன்! கரிகாலன்! “என்று உணர்ச்சிமயமாக கத்தி கொண்டிருப்பதை பார்த்து குழப்பமடைந்த அரிஞ்சயன் “யார் இந்த கரிகாலன்? உன்னை பார்த்து ஏன் கரிகாலன் என்று கத்துகிறார்கள்? “என்றான்.



“அதுதான் எனக்கும் புரியவில்லை.ஏதோ ஒரு விதத்தில் நான் கரிகாலனை நினைவுபடுத்தியிருக்க வேண்டும்.அதனால்தான் கத்துகிறார்கள்.இப்போது அது முக்கியமில்லை.போட்டியில் மனதை செலுத்துவோம்.!”என்ற ஆதித்தன் குதிரையை விரட்டினான்.மோகினி நாலு கால் பாய்ச்சலில் முன்னேறியது.பொய்மான் கரடிற்கு அரை காத தூரம் இருக்கும் போது ஆதித்தனின் கண்கள் மரங்களின் மறைவில் இருந்த ஒரு காட்சியை கண்டன.அந்த காட்சியை பார்த்ததும் ஆதித்தனின் மனதில் முதல் முறையாக பயம் தோன்றியது.”அண்ணா! அந்த மரத்தின் மறைவில் பார்! “என்றான் அரிஞ்சயனை நோக்கி.பாதையில் கவனமாக இருந்த அரிஞ்சயன் ஆதித்தன் காட்டிய திசையில் பார்த்து விட்டு “நான்கு பேர் ஆயுதங்களுடன் குதிரையில் மறைந்திருக்கின்றனர்.போட்டியில் கலந்து கொள்ள வந்தவர்களாக இருக்குமோ? கடைசியாக வந்தால் உயிர் தப்பலாம் என்று பதுங்கியுள்ளனரோ? “



“அவர்கள் போட்டியாளர்களாக இருந்தால் மைதானத்தில் பங்கேற்பாளர்களாக இருந்திருப்பார்களே? “



“அப்படியானால் அவர்கள்? “



“கருணாகரனின் ஆட்கள்.நம்மை கொல்ல நியமிக்கப்பட்டவர்கள்.அதோ பின் தொடர ஆரம்பித்து விட்டனர்.!”



“நாம் நீல மலைக்கான வழியில் பயணித்தால் என்ன செய்வார்கள்? “



“நம் முதுகில் அம்பை பாய்ச்சி விட்டு காணாமல் போவார்கள்! “



“அப்படியானால் நாம் சீக்கிரமாக பொய்மான் கரடு வழியில் புகுந்து விட வேண்டும்.!”



“அங்கேயும் கருணாகரன் ஆட்களை நிறுத்தியிருப்பான்.முன்னும் பின்னுமாக எதிரிகள்.நடுவில் நாம்.தப்பிக்க வழியேயில்லை! “



“மரணம் நிச்சயம்.இப்போதாவது முடிவில் மாற்றமுண்டா? “



“ஒரு மாற்றமும் இல்லை.முன் வைத்த காலை பின் வைக்க போவதில்லை.!”



“நான்கு பாதைகள் பிரியும் இடத்தில் கருணாகரன் ஆட்களை நிறுத்தியிருப்பான்.இரண்டு பக்கமும் சுற்றி வளைக்கப்படும் நாம் தப்ப வழியில்லை! கருணாகரன் எமகாதகன்தான்! “



ஆதித்தன் தன் வலுவான எதிரியின் முற்றுகையில் திணற ஆரம்பித்திருந்தான்.கருணாகரனின் இந்த சக்ரவியூகம் ஆதித்தன் எதிர்பாராதது.இறுகி வரும் வியூகத்தை உடைக்கும் யோசனையில் ஆதித்தன் ஆழ்ந்தான்.



அதே நேரம் மைதானத்தில் கரிகாலன் கரிகாலன் என்று மக்கள் அலறி கொண்டிருந்தது ஒருவனை பதட்டத்திற்குள்ளாக்கியது.பரபரப்பாக மைதானத்தை விட்டு கிளம்பிய கந்த மாறன் தன் புரவியை அவிழ்த்தான்.தன் அருகிலிருந்தவனை அழைத்தவன் “பூபதி! அந்த இருவரை பற்றிய முழு தகவலும் எனக்கு வேண்டும்.விசாரித்து விட்டு அமைச்சர் மதிவாணரின் இல்லத்திற்கு வா! “என்று கட்டளையிட்டு விட்டு சிட்டாக பறந்தான்.அமைச்சரின் இல்லத்திற்குள் பரபரப்பாக நுழைந்தவன் அவரை வணங்கி நின்றான்.”சொல் கந்தமாறா? என்ன விசயம்? “என்றார் மதிவாணன்.



“மைதானத்தில் கரிகாலனின் அடையாளத்தோடு ஒருவன் கலந்து கொண்டிருக்கிறான். ஒருவேளை மக்கள் நினைப்பது போல் கரிகாலன் உயிரோடு இருக்க கூடுமோ? “



“உயிரோடு இருக்க வாய்ப்பில்லை.மகேந்திரன் கரிகாலனின் உடலை உருத்தெரியாமல் அழித்து விட்டான்.வந்திருப்பவன் கரிகாலனின் ஆப்த நண்பனாக இருக்கலாம்.இல்லையென்றால் கரிகாலனின் அடையாளத்தை தற்செயலாக புனைந்திருக்கலாம்.!”



“அப்படியும் இருக்கலாம்.கரிகாலன் உயிரோடு இருந்தால் காணாமல் போன இளவரசர் மாறவர்மனும் உயிரோடு இருப்பதாகத்தானே அர்த்தம்! கரிகாலன் இறந்து விட்டானென்றால் இளவரசரும்? “



“இளவரசர் இறக்கவில்லை! உயிரோடுதான் இருக்கிறார்.!”



“துறவறம் பூண்டு துறவியாகவா? அப்படி சொல்லித்தானே மகேந்திரன் மக்களை நம்ப வைத்திருக்கிறான்.அவர் உயிரோடு இருப்பதற்கு ஆதாரம் இருக்கிறதா? அவர் எங்கே இருக்கிறார்!? “



“இளவரசர் உயிரோடு இருப்பதற்கு ஆதாரம் இன்று வந்த இந்த ஓலை.!”



“இந்த ஓலை வந்த வழி? “



“புறாவின் மூலம் வந்தது.”



ஓலையை படித்த கந்தமாறனின் முகத்தில் சவக்களை படர்ந்தது.”இளவரசர் உயிரோடு இருக்கிறார்.ஆனால் யாரும் அவரை மீட்க முடியாது.அவராலும் தப்பி வர இயலாது.விபரீதமான நிலை அமைச்சரே! “



“ஆம்! அதைப்பற்றித்தான் யோசிக்கிறேன்! “என்றார் மதிவாணர்.



ஆதித்தனும், மதிவாணரும் வெவ்வேறு திசையில் வெவ்வேறு யோசனையில் இருந்தாலும் அவர்களின் சிந்தனை குவிந்திருந்தது ஒரே இலக்கில்தான்.
 
அத்தியாயம் 10



குதிரையை விரட்டி கொண்டிருந்த ஆதித்தன் முன்னும் பின்னுமாக தன்னை சூழப் போகும் அபாயத்திலிருந்து தங்களை எப்படி காப்பாற்றி கொள்வது என்று யோசித்தவனின் மூளை கடகடவென சில திட்டங்களை தீட்டியது.பொய்மான் கரட்டின் உள்ளே நுழையும் சமயம் ஆதித்தன் பரபரப்பானான்.”அண்ணா! உன்னிடமுள்ள கயிற்றை சாலையின் ஓரத்திலுள்ள மரங்களின் கிளைகளை நோக்கி வீசு.ஒடிந்து விழும் மரக்கிளைகளை இழுத்து செல்வோம்.கயிற்றின் முனையில் நங்கூரத்தை கட்ட மறக்காதே! “

அரிஞ்சயன் துரித கதியில் ஆதித்தனின் உத்தரவை நிறைவேற்றினான்.அண்ணனுக்கு உத்தரவிட்ட ஆதித்தன் தானும் ஒரு கிளையை கயிற்றின் உதவியால் கீழே வீழ்த்தினான்.கிளைகள் தரையில் இழுபட்டதால் பிரமாண்டமான புழுதி புயல் கிளம்பியது.பின் தொடர்ந்து வந்தவர்களால் சகோதரர்கள் இருவரையும் பார்க்க முடியவில்லை.அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் புழுதி புயல் மட்டுமே!



“அண்ணா தொடர்ந்து போய் கொண்டே இரு! பின்னால் பார்க்காதே! “என்றான் ஆதித்தன்.பாதை நான்காக பிரியும் இடத்திலிருந்த ஐந்து வீரர்களில் ஒருவன் அந்த புழுதி புயலை பார்த்து பதட்டமடைந்தான்.”இருவர் மட்டுமே வருவதாகத்தானே தளபதி சொன்னார்.?ஒரு படையே வரும் போல் தெரிகிறதே? “என்றான்.புழுதி புயலை கிளப்பிய படி வந்த அரிஞ்சயன் அந்த வீரர்களால் மறிக்கப்பட்டான்.”இதென்ன இரண்டு குதிரைகள் இருக்கின்றன.ஒருவன்தான் வந்திருக்கிறான்! “வீரர்கள் குழம்பி கொண்டிருந்த போது துரத்தி வந்தவர்கள் அவர்களை நெருங்கினார்கள்.



“எங்கே இன்னொருவன்? “



“தெரியவில்லையே? இரண்டு குதிரைகளுடன் இவன் ஒருவன்தான் வந்தான்.!”



“கள்வனே! எங்கே உன் சகோதரன்? “



“அவன் போட்டிக்கு பயந்து ஓடி விட்டான் ஐயா! “என்றான் அரிஞ்சயன்.



“நமக்கு வேலை மிச்சம்.உன் தம்பி புத்திசாலி.அதுதான் உயிரை காப்பாற்றி கொள்ள ஓடி விட்டான்.ஆனால் நீ பாவம்.பரிதாபமாக இறக்க போகிறாய்! “



குதிரையிலிருந்து இறக்கப்பட்ட அரிஞ்சயனிடமிருந்து ஆயுதங்கள் பறிக்கப்பட்டன.மண்டியிட்டு அமர வைக்கப்பட்ட அரிஞ்சயனின் தலையை துண்டிக்க ஒருவன் தயாரானான்.அவன் வாளை உயர்த்திய போது எங்கிருந்தோ வந்த அம்பு அவனை வீழ்த்தியது.பாதி வழியில் புழுதியை பயன்படுத்தி கொண்டு புதர் மறைவில் குதித்து பதுங்கிய ஆதித்தன் வில் அம்போடு இப்போது காட்சியளித்தான்.விக்கித்து நின்ற வீரர்களில் இருவரை கண நேரத்தில் வீழ்த்தினான் அரிஞ்சயன்.இருவரின் தாக்குதலில் சிறிது நேரத்திலேயே அவர்கள் சரணடைந்தனர்.அவர்களின் கைகளை பின்புறமாக கட்டி உருட்டிய ஆதித்தன் அவர்களில் ஒருவனை கத்தி முனையில் மிரட்ட ஆரம்பித்தான்.



“இந்த நான்கு பாதைகளில் கருணாகரன் பயணித்த சரியான பாதை எது? ஒழுங்காக சொல்லி விடு! “



“சத்தியமாக சொல்கிறேன்.எங்களில் யாருக்கும் சரியான வழி தெரியாது.நம்புங்கள்.!”



மறுபடியும் சிக்கலில் சிக்கி தவிக்க ஆரம்பித்தான் ஆதித்தன்.



அதே நேரம் கந்தமாறனும் மதிவாணரும் உரையாடிக் கொண்டிருந்தனர்.



“இளவரசரை மீட்க யாராலும் இயலாது போல் தோன்றுகிறது அமைச்சரே? “



“பதட்டப்படாதே கந்தமாறா! கரிகாலனின் மறைவிற்கு பின் அவனுடைய ஆட்கள் மக்களோடு மக்களாக கலந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.அவர்களை மறுபடியும் ஒன்று திரட்டு.இந்த போலி கரிகாலனின் வரவை நமக்கு சாதகமாக்கி கொள்வோம்.எதை செய்தாவது மகேந்திரனை வீழ்த்தி இளவரசனை மீட்போம்.கடந்த ஒரு வருடமாக இளவரசர் உயிரோடு இருப்பது எனக்கு தெரியும்.நானும் அவரும் கடித தொடர்பில் இருக்கிறோம்.சரியான சமயத்திற்காக காத்திருந்தேன்.மக்களுக்கு கரிகாலனின் நினைவு வந்து விட்டது.இனி புரட்சியை தூண்டுவது எளிது.!”



அதே நேரம் பூபதி குதிரையில் வந்து இல்லத்தின் முன் இறங்கினான்.தான் விசாரித்தவற்றை விலாவரியாக கூறி முடித்தான்.



“கருணாகரனிடம் மோதி உள்ளதால் இவர்கள் நமக்கு நண்பர்கள்! “



“ஆம்! எதிரிக்கு எதிரி நண்பன்தானே? “



“ஆனால் அமைச்சரே இந்த வேட்டை திருவிழாவில் நாம் அவர்களுக்கு உதவி செய்யலாமே? “



“அவர்கள் திறமையானவர்கள்.நம் உதவி அவர்களுக்கு தேவைப்படாது.”



“அது உண்மைதான்.ஆனால் நமக்கு கருணாகரன் உயிரோடு வேண்டும்.அப்போதுதான் இளவரசரை மீட்க முடியும்.”



“கண்டிப்பாக! “



“மாறாக அவர்கள் கருணாகரனை கொன்று விட்டால்? “கந்தமாறனின் கேள்வி இடியென இறங்கியது.



“அவர்களால் அவனை நிச்சயமாக கொல்ல முடியாது.அப்படி கொன்றால் அவர்களும் சேர்ந்தே இறப்பார்கள்! “மதிவாணரின் குரல் தீர்க்கமாக ஒலித்தது.
 

New Threads

Top Bottom