Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


சிவகாமியின் சபதம் - பாகம்-1 : பூகம்பம்

Meena

Saha Moderator
Staff
Messages
1,067
Reaction score
80
Points
48
முதல் அத்தியாயம்



பிரயாணிகள்

இளவேனிற் காலத்தில் ஒருநாள் மாலை மகேந்திர தடாகத்தின் கரை வழியாகச் சென்ற இராஜபாட்டையில் பிரயாணிகள் இருவர் காஞ்சி மாநகரை நோக்கி நடந்து கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் ஆறடி உயரத்துக்குமேல் வளர்ந்திருந்த ஆஜானுபாகு; காவி வஸ்திரம் தரித்த பௌத்த சந்நியாசி. கடுமையான தவ விரத அனுஷ்டானங்களினாலோ, வேறு கடினமான காரியங்களில் ஈடுபட்டதனாலோ, அந்தப் புத்த பிக்ஷுவின் தேகமானது வறண்டு கெட்டிப்பட்டுக் கடினமாகியிருந்தது. அவருடைய முகத் தோற்றமானது அன்பையோ, பக்தியையோ உண்டாக்குவதாயில்லை; ஒருவித அச்சத்தை ஊட்டுவதாயிருந்தது.

இன்னொரு பிரயாணி கட்டமைந்த தேகமும், களை பொருந்திய முகமும் உடைய பதினெட்டுப் பிராயத்து இளம் பிள்ளை. பிரயாணிகள் இருவரும் வெகுதூரம் வழிநடந்து களைப்புற்றவர்களாகக் காணப்பட்டார்கள். "தலைநகரம் இன்னும் எவ்வளவு தூரம் இருக்கிறது?" என்று வாலிபன் கேட்டான். "அதோ!" என்று சந்நியாசி சுட்டிக் காட்டிய திக்கில், அடர்ந்த மரங்களுக்கு இடை இடையே மாட மாளிகைகளின் விமானங்கள் காணப்பட்டன. இளம் பிரயாணி சற்று நேரம் அந்தக் காட்சியை உற்று நோக்கிக் கொண்டிருந்தான். பின்னர், புத்த பிக்ஷுவைப் பார்த்து, "இங்கிருந்து ஒரு நாழிகை தூரம் இருக்குமா?" என்று கேட்டான். "அவ்வளவுதான் இருக்கும்." "அப்படியானால், நான் சற்று உட்கார்ந்து விட்டு வருகிறேன். அவசரமானால் தாங்கள் முன்னால் போகலாம்!" என்று சொல்லி, வாலிபன் கையிலிருந்த மூட்டையையும் தடியையும் பாதை ஓரமாகக் கீழே வைத்துவிட்டு, ஏரியைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்தான். சந்நியாசியும் அவன் அருகில் மேற்குத் திசையைப் பார்த்து கொண்டு அமர்ந்தார்.

மேல் வானத்தின் அடிப்புறத்தில் தங்க நிறமான ஞாயிறு திருமாலின் சக்ராயுதத்தைப்போல் 'தகதக'வென்று சுழன்று கொண்டிருந்தது. அதன் செங்கிரணங்களினால் மேல் வானமெல்லாம் செக்கர் படர்ந்து, பயங்கரமான போரில் இரத்த வெள்ளம் ஓடிய யுத்தகளத்தைப்போல் காட்சியளித்தது. ஆங்காங்கே காணப்பட்ட சிறு மேகக் கூட்டங்கள் தீப்பிடித்து எரிவது போல் தோன்றின. சூரியன் அஸ்தமித்துக்கொண்டிருந்த திசையில், மகேந்திர தடாகத்தின் பளிங்கு போலத் தௌிந்த நீர், உருக்கிய பொன்னைப் போல் ஒளிர்ந்து கொண்டிருந்தது. ஆனால், மேற்குத் திசையிலிருந்து சற்றுத் திரும்பி, அந்த விசாலமான ஏரியின் வடகரையை நோக்கினால் முற்றும் மாறான வேறொரு காட்சி காணப்பட்டது. அந்தக் கரையில் ஏரிக்குக் காவலாக நின்ற சிறு குன்றுகளின் மாலை நேரத்து நெடிய நிழல் ஏரியின் மேல் விஸ்தாரமாகப் படர்ந்திருந்தபடியால் ஏரி நீர் அங்கே கருநீலம் பெற்று விளங்கிற்று.

நிழல் படர்ந்த ஏரிக்கரை ஓரமாகச் சில இடங்களில் கண்ணைப் பறிக்கும் வெள்ளை நிறம் திட்டுத் திட்டாகத் திகழ்ந்தது. சிறிது கூர்ந்து கவனித்தால் அந்த இடங்களில் வெண் நாரைகள் ஒற்றைக் காலில் நின்று தவம் புரிகின்றன என்பதை அறிந்து கொள்ளலாம். சில சமயம் திடீரென்று ஒரு வெண் நாரைக் கூட்டமானது ஜலக்கரையிலிருந்து கிளம்பி ஆகாசத்தில் மிதக்கத் தொடங்கும். ஆகா! அந்தக் காட்சியின் அழகை என்னவென்று சொல்வது? கீழே கருநிறத் தண்ணீர் பரப்பு; மேலே கரு நீல வானம்; பின்னால் கரும் பசுமை நிறக்குன்றுகள். இவற்றின் மத்தியில் அந்தத் தாவள்யமான நாரைக் கூட்டம் வானவௌியில் மிதந்து செல்வதுபோல் நெருக்கமாய்ப் பறந்து செல்லும் காட்சி யாருக்குமே மனக் கிளர்ச்சியை உண்டாக்கும். இறைவனுடைய லீலா வினோதங்களில் சிந்தை செலுத்தியவர்களோ மெய்ம்மறந்து பரவசமாகி விடுவார்கள்.

இவற்றையெல்லாம் சற்று நேரம் மௌனமாய்ப் பார்த்துக் கொண்டிருந்த வாலிபன், தனக்குத் தானே பேசிக் கொள்வது போல், "இந்தப் பிரம்மாண்டமான ஏரியை மகேந்திர தடாகம் என்று சொல்வது பொருத்தமில்லை; மகேந்திர சமுத்திரம் என்று தான் இதைச் சொல்ல வேண்டும்!" என்றான். சந்நியாசி ஏரியை நோக்கியவண்ணம், "இந்த மகேந்திர தடாகத்தில் இப்போது தண்ணீர் குறைந்து போயிருக்கிறது. ஐப்பசிக் கார்த்திகையில் மழை பெய்து ஏரி நிரம்பியிருக்கும் போது பார்த்தாயானால், பிரமித்துப் போவாய்! அப்போது நிஜ சமுத்திரம் போலவே இருக்கும்!" என்று சொல்லிக் கொண்டே எழுந்தார். "புறப்பட்டு விட்டீர்களா, சுவாமி?" என்றான் வாலிபன். "ஆமாம், பரஞ்சோதி! என்னோடு வருவதற்குத் தான் உனக்குப் பிடிக்கவில்லை போலிருக்கிறதே!" என்று சந்நியாசி கூறிவிட்டு நடக்கத் தொடங்கினார். பரஞ்சோதி என்ற அவ்வாலிபனும் மூட்டையையும் தடியையும் எடுத்துக்கொண்டு அவரைத் தொடர்ந்து நடக்கலானான்.

சாலையில் போவோர் வருவோர் கூட்டம் அதிகமாயிருந்தது. பிரயாணிகள் ஏறிய வண்டிகளும், நெல்லும் வைக்கோலும் ஏற்றிய வண்டிகளும் சாரி சாரியாய்ப் போய்க் கொண்டிருந்தன. சாலைக்கு அப்புறத்தில் முதிர்ந்த கதிர்களையுடைய செந்நெல் வயல்கள் பரந்திருந்தன. கதிர்களின் பாரத்தினால் பயிர்கள் தலை சாய்ந்து விழுந்து கிடந்தன. ஆங்காங்கே சில வயல்களில் குடியானவர்கள் அறுவடையான கற்றைகளைக் கட்டிக் கொண்டிருந்தார்கள். வயல்களிலிருந்து புது நெல், புது வைக்கோலின் நறுமணம், 'கம்'மென்று வந்து கொண்டிருந்தது.

சற்றுத் தூரம் போனதும் ஓர் அழகிய கிராமம் தென்பட்டது. அந்தக் கிராமத்தைத் தாண்டியதும் புதுநெல் மணத்துக்குப் பதிலாக மல்லிகை முல்லை மலர்களின் நறுமணம் சூழ்ந்தது. அந்த மணத்தை மூக்கினால் நுகர்வது மட்டுமின்றித் தேகம் முழுவதனாலும் ஸ்பரிசித்து அனுபவிக்கலாம் என்று தோன்றியது. "ஆகா!" என்றான் வாலிபன். அவனுக்கெதிரே கண்ணுக்கெட்டிய தூரம் நந்தவனங்கள், மல்லிகை முல்லைப் புதர்களின்மீது வானத்து நட்சத்திரங்கள் வந்து படிந்ததுபோல் குண்டுமல்லிகைகளும் முத்து முல்லைகளும் 'கலீ'ரென்று பூத்துச் சிரித்துக்கொண்டிருந்தன.

இந்த வெண்மலர்ப் பரப்புக்கு இடை இடையே தங்க நிறச் செவ்வந்திப் பூக்களின் காடும் காணப்பட்டது. "இவ்வளவு பூவையும் என்னதான் செய்வார்கள்?" என்று வாலிபன் கேட்டான். "இவற்றில் பாதி கோயில் தெய்வங்களுக்கு அர்ப்பணமாகும். மற்றப் பாதி காஞ்சி நகரத்துப் பெண் தெய்வங்களின் கூந்தலை அலங்கரிக்கும்...அதோ!" என்று சட்டென நின்றார் சந்நியாசி. சர சரவென்று சாலையின் குறுக்கே ஒரு பாம்பு ஊர்ந்து சென்று நந்தவனத்துக்குள் புகுந்து மறைந்தது. "இந்த மல்லிகை மணத்துக்குப் பாம்புகள் எங்கே என்று காத்திருக்கும்!" என்றார் சந்நியாசி.

பாம்பு மறைந்ததும் இருவரும் மேலே சென்றார்கள் சற்று நேரம் மௌனம் குடிகொண்டிருந்தது. பரஞ்சோதி 'களுக்'கென்று சிரித்தான். "எதை நினைத்துச் சிரிக்கிறாய்?" என்றார் சந்நியாசி. பரஞ்சோதி சற்று நேரம் பேசாமல் இருந்துவிட்டு, "இல்லை, அடிகளே! மத்தியானம் அந்தச் சர்ப்பத்தைக் கொன்று என்னைக் காப்பாற்றினீர்களே? நீங்கள் புத்த பிக்ஷுவாயிற்றே? ஜீவஹத்தி செய்யலாமா என்று நினைத்துச் சிரித்தேன்!" என்றான். "தன்னை கொல்ல வந்த பசுவையும் கொல்லலாம் அல்லவா?" என்றார் புத்த பிக்ஷு. "ஆனால் பாம்பு தங்களைக் கொல்ல வரவில்லையே? என்னைத் தானே கொல்ல வந்தது?" என்றான் பரஞ்சோதி ஏளனமான குரலில். "என் சிஷ்யனை நான் காப்பாற்ற வேண்டாமா?" என்றார் பிக்ஷு. "சிஷ்யனா? யாரைச் சொன்னீர்கள்?" "ஆமாம், நீ என் உயிரை ஒரு சமயம் காப்பாற்றினாய், அதற்குப் பிரதியாக..." "தங்கள் உயிரை நான் காப்பாற்றினேனா! எப்போது?" "முந்நூறு வருஷங்களுக்கு முன்னால்..." "என்ன!" "முன்னொரு ஜன்மத்தில்." "ஓஹோ! தாங்கள் முக்காலமும் உணர்ந்த முனிவர் என்பது தெரியாமல் கேட்டுவிட்டேன்; க்ஷமிக்க வேண்டும்."

சந்நியாசி மௌனமாக நடந்தார். மறுபடி பரஞ்சோதி, "சுவாமி! இனிமேல் வரப்போகிறது கூடத் தங்கள் ஞான திருஷ்டியில் தெரியுமல்லவா?" என்று கேட்டான். "வரப்போகிறது ஒன்றைச் சொல்லட்டுமா?" "சொல்லுங்கள்." "இந்த நாட்டுக்குப் பெரிய யுத்தம் வரப்போகிறது!" "பெரிய யுத்தமா?" "ஆமாம்; மகா பயங்கரமான யுத்தம் பாலாறு இரத்த ஆறாக ஓடப் போகிறது. மகேந்திர தடாகம் இரத்தத் தடாகம் ஆகப் போகிறது." "ஐயோ! பயமாயிருக்கிறதே! போதும் அடிகளே!"

சற்றுப் பொறுத்து மறுபடியும் பரஞ்சோதி, "நாட்டின் சமாசாரம் எனக்கெதற்கு, சுவாமி? என் விஷயமாக ஏதாவது தெரிந்தால் சொல்லுங்கள்!" என்றான். "இன்று ராத்திரி உனக்கு ஒரு கஷ்டம் ஏற்படப் போகிறது." "சிவ சிவா! நல்ல வாக்காக ஏதாவது சொல்லக் கூடாதா?" "புத்தபகவானுடைய அருளால் அந்தக் கஷ்டம் நீங்கும்." "நான் சைவன் ஆயிற்றே! புத்தர் எனக்கு அருள் செய்வாரா?" "புத்தருடைய கருணை எல்லையற்றது." "அதோ வருவது யார்?" என்று கேட்டான் பரஞ்சோதி.

மங்கிய மாலை வௌிச்சத்தில், ஓர் அபூர்வ உருவம் அவர்களுக்கெதிரே வந்துகொண்டிருந்தது தெரிந்தது. "பார்த்தாலே தெரியவில்லையா? திகம்பர சமண முனிவர் வருகிறார்!" என்றார் புத்த பிக்ஷு. "சமண முனிவர்கள் இன்னும் இங்கே இருக்கிறார்களா?" என்று பரஞ்சோதி கேட்டான். "முக்கால்வாசிப்பேர் பாண்டிய நாட்டுக்குப் போய்விட்டார்கள் மற்றவர்களும் சீக்கிரம் போய்விடுவார்கள்."

சமண முனிவர் அருகில் வந்தார். அவர் புத்த பிக்ஷுவைப் போல் உயர்ந்து வளர்ந்தவர் அல்ல. கட்டையாயும் குட்டையாயும் இருந்தார். கௌபீனம் ஒன்றுதான் அவருடைய ஆடை, ஒரு கையில் உறி கட்டித் தூக்கிய கமண்டலம் வைத்திருந்தார். இன்னொரு கையில் மயில் தோகை விசிறி; கக்கத்தில் சுருட்டிய சிறுபாய். அவர் அருகில் வந்ததும் புத்த பிக்ஷு, "புத்தம் சரணம் கச்சாமி!" என்றார். சமண முனிவர், "அருகர் தாள் போற்றி!" என்றார். "இருட்டுகிற சமயத்தில் அடிகள் எங்கே பிரயாணமோ?" என்று புத்த சந்நியாசி கேட்டார். அதற்குச் சமணர், "ஆகா! இந்த ருத்ர பூமியில் எனக்கு என்ன வேலை? தொண்டை மண்டலந்தான் சடையன் கூத்தாடும் சுடுகாடாகி விட்டதே, தெரியாதா? நான் பாண்டிய நாட்டுக்குப் போகிறேன்" என்றார்.

"இன்றைக்கு முக்கியமாக ஏதாவது விசேஷம் உண்டோ?" என்று புத்த பிக்ஷு கேட்க, சமண முனிவர், "உண்டு, விசேஷம் உண்டு; கோட்டைக் கதவுகளை அடைக்கப் போகிறார்களாம்!" என்று சொல்லிக்கொண்டே மேலே விரைந்து சென்றார். "ஒரு காலத்தில் இந்தப் பல்லவ ராஜ்யத்தில் சமணர்கள் வைத்ததே சட்டமாயிருந்தது. அவர்கள் கிழித்தகோடு தாண்டாமல், மகேந்திர சக்கரவர்த்தி நடந்து வந்தார். இப்போது.." என்று கூறிப் புத்த பிக்ஷு நிறுத்தினார். "இப்போது என்ன?" என்று பரஞ்சோதி கேட்டான். "இப்போது சைவ வைஷ்ணவர்களின் பாடு இந்த நாட்டில் கொண்டாட்டமாயிருக்கிறது." "ஓஹோ!" என்றான் பரஞ்சோதி. பிறகு, "ஏதோ கோட்டைக் கதவு சாத்துவதைப் பற்றிச் சமண முனிவர் சொன்னாரே, அது என்ன?" என்று கேட்டான். "அதோ பார்!" என்றார் சந்நியாசி. சாலையில் அந்தச் சமயத்தில் ஒரு முடுக்குத் திரும்பினார்கள். எதிரே காஞ்சி மாநகரின் தெற்குக் கோட்டை வாசல் தெரிந்தது. கோட்டை வாசலின் பிரம்மாண்டமான கதவுகள் மூடியிருந்தன.
 
இரண்டாம் அத்தியாயம்

தலைநகரம்

கோட்டை மதிலைச் சேர்ந்தாற்போல் பெரிய அகழி இருந்தது. அதன் அகலம் சுமார் நூறு அடி இருக்கும். குனிந்து பார்த்தால் கிடுகிடு பள்ளமாயிருந்தது. அடியில் இருண்ட நிறமுள்ள ஜலம் காணப்பட்டது. நமது பிரயாணிகள் வந்த இராஜ பாதையானது அகழியின் அருகில் வந்ததும் இரண்டாகப் பிரிந்து ஒன்று வலப்புறமாகவும் ஒன்று இடப்புறமாகவும் கோட்டை மதிலைச் சுற்றி அகழிக் கரையோடு சென்றது. சாலையோடு வந்த வண்டிகளும், மனிதர்களும் இடப்புறமாகவோ வலப்புறமாகவோ மதிலைச் சுற்றிக் கொண்டு போனார்கள்.

அகழியின் மேல் ஒரு குறுகலான மரப்பாலம் காணப்பட்டது. அது கோட்டை வாசல்வரை சென்றது. புத்த பிக்ஷு பரஞ்சோதிக்குச் சைகை காட்டிவிட்டு அந்தப் பாலத்தின்மேல் நடந்து சென்றார். பரஞ்சோதியும் அவரைப் பின் தொடர்ந்தான். "இதென்ன, இவ்வளவு சின்னப் பாலமாயிருக்கிறதே? கோட்டைக்குள் வண்டிகளும் வாகனங்களும் எப்படிப் போகும்?" என்று கேட்டான் பரஞ்சோதி. "இந்த வாசல் வழியாகப் போக முடியாது. வடக்கு வாசலிலும் கிழக்கு வாசலிலும் பெரிய பாலங்கள் இருக்கின்றன. அவற்றில் யானைகள் கூடப் போகலாம்!" என்றார் சந்நியாசி.

பாலத்தைத் தாண்டிக் கோட்டை வாசலருகில் அவர்கள் வந்தார்கள். அங்கே ஒரு சேமக்கலம் கட்டித் தொங்கிற்று. பக்கத்தில் ஒரு கட்டையும் கிடந்தது. கட்டையை எடுத்துச் சேமக்கலத்தில் ஒரு தட்டுத் தட்டினார் சந்நியாசி. மேலேயிருந்து, "யார் அங்கே?" என்று குரல் கேட்டது. கோட்டை வாசலின் மேல் மாடத்திலிருந்து ஒருவன் எட்டிப் பார்த்தான். இருட்டிவிட்டபடியால் அவன் முகம் தெரியவில்லை. "மருதப்பா! நான்தான்!" என்று சாமியார் சொல்லவும், மேலேயிருந்து எட்டிப் பார்த்தவன், "தாங்களா! இதோ வந்து விட்டேன்; அடிகளே" என்று கூறிவிட்டு மறைந்தான்.

சற்று நேரத்துக்கெல்லாம் கோட்டைக் கதவின் தாள் திறக்கும் சத்தம் கேட்டது. கதவில் ஒரு மனிதர் உள்ளே புகக் கூடிய அளவு துவாரம் தோன்றியது. புத்த சந்நியாசி அந்தத் துவாரத்திற்குள் புகுந்து சென்று பரஞ்சோதியையும் கையைப்பிடித்து உள்ளே அழைத்துக் கொண்டார். மறுபடி கதவின் துவாரம் அடைக்கப்பட்டது. பரஞ்சோதி உள்ளே போனதும் நகரின் பக்கம் பார்வையைச் செலுத்தினான். எங்கே பார்த்தாலும் பிரகாசமான தீபங்களால் நகரம் ஒளி மயமாகக் காணப்பட்டது. ஆயிரக்கணக்கான மனிதர்கள் பேசுவதிலிருந்து உண்டாகும் 'கல்' என்ற ஓசை எழுந்தது. பரஞ்சோதி இதுவரையில் அவ்வளவு பெரிய நகரத்தைப் பார்த்ததே கிடையாது. எனவே, பார்த்தது பார்த்தபடி பிரமித்து நின்றான்.

புத்த சந்நியாசி கதவைத் திறந்த காவலனைப் பார்த்து, "மருதப்பா! நகரில் ஏன் கலகலப்புக் குறைவாயிருக்கிறது? கோட்டைக் கதவு இதற்குள் ஏன் சாத்தப்பட்டது? ஏதாவது விசேஷம் உண்டா?" என்று கேட்டார். "நன்றாகத் தெரியவில்லை சுவாமி! இன்று காலையிலிருந்து நகரம் ஒரே கோலாகலமாய்த்தானிருந்தது..." என்பதற்குள் பிக்ஷு குறுக்கிட்டார். "கோலாகலத்துக்குக் காரணம்?" என்று கேட்டார். "தங்களுக்குத் தெரியாதா? சிவகாமி அம்மையின் நடனம் இன்றைக்குச் சக்கரவர்த்தியின் சபையில் அரங்கேறுவதாக இருந்தது. அதனால்தான் ஜனங்களுக்கு அவ்வளவு கொண்டாட்டம்!" "எந்த சிவகாமி அம்மை?" என்று சந்நியாசி கேட்டார். "வேறு யார்? ஆயனரின் மகள் சிவகாமிதான்..!"

இதுவரை பேச்சைக் கவனியாதிருந்த பரஞ்சோதி சட்டென்று திரும்பி, "யார், ஆயனச் சிற்பியாரா?" என்று கேட்டான். "ஆமாம்!" என்று காவலன் கூறிப் பரஞ்சோதியை உற்று நோக்கிவிட்டு, "அடிகளே! இந்தப் பிள்ளை யார்?" என்று பிக்ஷுவைப் பார்த்துக் கேட்டான். "இவன் என் சிஷ்யன் நீ மேலே சொல்லு. சிவகாமி அம்மையின் நடனம் அரங்கேறுவதாக இருந்தது, பிறகு?"

"சபை கூடி அரங்கேற்றம் நடந்து கொண்டிருந்ததாம். பாதி நடந்து கொண்டிருந்தபோது, யாரோ தூதுவர்கள், வெகு அவசரச் செய்தியுடன் வந்திருப்பதாகத் தெரிந்ததாம். சக்கரவர்த்தி சபையிலிருந்து சட்டென்று எழுந்து போனாராம். அப்புறம் திரும்பிச் சபைக்கு வரவேயில்லையாம், குமார சக்கரவர்த்தியும், மந்திரி மண்டலத்தாருங்கூட எழுந்து போய்விட்டார்களாம். நாட்டியம் நடுவில் நின்று போய்விட்டதாம். அஸ்தமித்ததும் கோட்டைக் கதவுகளை அடைக்கும்படி எனக்குக் கட்டளை வந்தது. அவ்வளவுதான் எனக்குத் தெரியும் என்னவாயிருக்கலாம் சுவாமி? யுத்தம் ஏதாவது வரக்கூடுமா? ஆனால் காஞ்சி சக்கரவர்த்தியுடன் யுத்தம் செய்யக்கூடிய அரசன் இந்தப் பூமண்டலத்திலேயே இப்போது கிடையாதே?" என்றான் மருதப்பன். "அப்படிச் சொல்லக் கூடாது, மருதப்பா! இன்றைக்கு மணி மகுடம் தரித்து மன்னாதி மன்னர்களாயிருப்பவர்கள் நாளைக்கு... ஆனால் அதைப் பற்றியெல்லாம் நாம் ஏன் பேச வேண்டும்? உன் மகன் சௌக்கியமா?" என்று சந்நியாசி கேட்டார். "தங்கள் கிருபை சுவாமி, சௌக்கியமா இருக்கிறான்!" என்றான் மருதப்பன்.

மருதப்பனுடைய மகனை ஒரு சமயம் பாம்பு தீண்டி அவன் உயிர் பிழைப்பதே துர்லபம் என்று தோன்றியது. அச்சமயம் இந்த புத்த பிக்ஷு மணிமந்திர ஔஷதங்களினால் அந்தப் பிள்ளையைக் குணப்படுத்தினார். அவரிடம் மருதப்பன் பக்தி கொண்டதற்கு இதுதான் காரணம். "என்னால் ஒன்றுமில்லை, மருதப்பா! எல்லாம் புத்த பகவானின் கருணை நான் வருகிறேன்" என்று சொல்லிவிட்டு மேலே பிக்ஷு நடந்தார். பரஞ்சோதியும் அவருடன் சென்றான்.

"அடிகளே! கோட்டைக் கதவைச் சாத்தும்படி கட்டளை பிறந்திருக்கும்போது உங்களை மட்டும் காவலன் எப்படி விட்டான்?" என்று பரஞ்சோதி கேட்டான். "எல்லாம் இந்தக் காவித் துணியின் மகிமைதான்!" என்றார் புத்த பிக்ஷு. "ஓஹோ! பல்லவ சக்கரவர்த்தியின் இராஜ்யத்தில் காவித் துணிக்கு அவ்வளவு கௌரவமா? ஆனால் சமணர்கள் மட்டும் ஏன்...?" "சமணர்கள் ராஜரீக விஷயங்களில் தலையிட்டார்கள். நாங்கள் அந்த வழிக்கே போவதில்லை. இராஜ வம்சத்தினரின் முகத்தைக் கூடப் பார்ப்பதில்லையென்று வைத்துக் கொண்டிருக்கிறோம்...போகட்டும்! உன்னுடைய உத்தேசம் என்ன? என்னுடன் பௌத்த விஹாரத்துக்கு வரப்போகிறாயா?"

"இல்லை, சுவாமி! நாவுக்கரசர் மடத்துக்கே போய்விடுகிறேன். வேறு எங்கேயும் தங்க வேண்டாமென்று என் தாயாரின் கட்டளை." "அப்படியானால் இந்த இடத்தில் நாம் பிரிய வேண்டியதுதான் போய் வருகிறாயா, தம்பி?" "சுவாமி, நாவுக்கரசர் மடம் எங்கே இருக்கிறது? எப்படிப் போகவேண்டும்?" என்று பரஞ்சோதி கேட்டான். "ஏகாம்பரேசுவரர் கோயிலுக்குப் பக்கத்தில் இருக்கிறது அதோ பார் கோயில்விமானத்தை!" பரஞ்சோதி பார்த்தான் வெகு தூரத்துக்கு வெகுதூரம் பரவியிருந்த அந்த விசாலமான நகரில் எங்கே பார்த்தாலும் விமானங்கள் தெரிந்தன.

இந்த வரலாறு நிகழ்ந்த காலத்தில் அதாவது ஏறக்குறைய (சிவகாமியின் சபதம் எழுதப்பட்ட ஆண்டு 1946) ஆயிரத்து முந்நூற்றிருபது ஆண்டுகளுக்கு முன்னர் - தமிழகத்துக் கோயில்களின் முன்வாசல் கோபுரங்கள் இப்போது இருப்பது போல் உயரமாக அமைந்திருக்கவில்லை. கோயில் கர்ப்பக் கிருஹத்துக்கு மேலேதான் விமானங்கள் அமைப்பது வழக்கம். இவையும் அவ்வளவு உயரமாக இருப்பதில்லை. மேலும் சிவன் கோயில் விமானங்கள், சமணப் பள்ளிகளின் விமானங்கள், அரண்மனை விமானங்கள் எல்லாம் ஏறக்குறைய ஒரே மாதிரியாயிருக்கும். "எங்கே பார்த்தாலும் விமான மயமாகக் காணப்படுகிறதே! நீங்கள் எதைச் சொல்கிறீர்கள்?" என்று பரஞ்சோதி கேட்டான். "இங்கிருந்து அடையாளம் சொல்லுவது கஷ்டம். இந்த வீதியோடு நேரே போ! ஏகம்பர் கோயிலுக்கு வழி அங்கங்கே விசாரித்துத் தெரிந்து கொள்ளலாம். கோயில் சந்நிதியில் வாகீசர் மடம் இருக்கிறது. ஜாக்கிரதை, தம்பி! காலம் விபரீதமாகிக் கொண்டு வருகிறது!' என்று சொல்லிக்கொண்டே புத்த பிக்ஷு அங்கிருந்து பிரிந்த வேறொரு வீதி வழியாகச் சென்றார்.

வாலிபப் பிரயாணி நேரே பிக்ஷு காட்டிய திக்கை நோக்கிச் சென்றான். அக்காலத்தில் தென் தேசத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்று விளங்கியது காஞ்சி மாநகரம். அந்நகரின் வீதி ஒவ்வொன்றுமே தேரோடும் வீதியைப்போல் விசாலமாக அமைந்திருந்தது. வீடுகள் எல்லாம் மாளிகைகளாகவே இருந்தன. ஆங்காங்கே கல்லாலான தூண்களின் மேல் விசாலமான அகல்களில் தூங்காவிளக்குகள் சுடர் விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தன. வீதிகளில் 'ஜே ஜே' என்று போவோரும் வருவோருமாய் ஏகக் கூட்டமாயிருந்தது. கடைத் தெருக்களின் காட்சியையோ சொல்லவேண்டாம். காசி முதல் கன்னியாகுமரி வரையில் பரதகண்டத்தில் விளையும் பொருள்களெல்லாம் அந்தக் கடை வீதிகளில் கிடைக்கும். புஷ்பக் கடைகளாக ஒரு பக்கம், பழக் கடைகளாக ஒரு பக்கம்; பட்சணக் கடைகளாக ஒரு பக்கம்; தானியக் கடைகள் ஒரு பக்கம். முத்து இரத்தின வியாபாரிகளின் கடைகள் இன்னொரு பக்கம்.... இப்படிக் கடை வீதியானது எல்லையில்லாமல் வளர்ந்து கொண்டே போயிற்று.

பரஞ்சோதி அளவில்லா வியப்புடன் மேற்கூறிய வீதிக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டு போனான். ஆங்காங்கே ஜனங்கள் கூட்டமாய் நின்ற இடங்களில் எல்லாம் சிவகாமி அம்மையின் நடன அரங்கேற்றம் நடுவில் நின்று போனதைப் பற்றியும், கோட்டைக் கதவுகளைச் சாத்தும்படி கட்டளை பிறந்திருப்பதைப் பற்றியுமே பேசிக் கொண்டிருந்ததை அவன் கேட்டுக்கொண்டு நடந்தான். சற்று நேரத்துக்கொரு தடவை அவன் எதிரே வந்தவர்களிடம், "ஏகாம்பரேசுவரர் கோயில் எது?" என்று கேட்டான். "அதோ!" என்று அவர்களும் சுட்டிக் காட்டிவிட்டுப் போனார்கள், ஆனாலும் ஏகாம்பரேசுவரர் கோயிலை அவன் அடைந்தபாடில்லை. புதிது புதிதாக ஒரு பெரிய நகரத்தைப் பார்க்கும் அதிசயத்தில் மூழ்கியிருந்தபடியால் பரஞ்சோதியும் கோயிலைச் சீக்கிரமாகக் கண்டுபிடிப்பதில் அவ்வளவு கவலையுள்ளவனாயில்லை.

இப்படி அவன் வீதி வலம் வந்துகொண்டிருக்கையில் திடீரென்று ஓரிடத்தில் ஏகக் கூச்சலும் குழப்பமும் உண்டாவதைப் பார்த்தான். ஜனங்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். "கோயில் யானைக்கு மதம் பிடித்து விட்டது! ஓடுங்கள்! ஓடுங்கள்!" என்ற கூக்குரலோடு சேர்ந்து, குழந்தைகள் வீறிடும் சத்தம், ஸ்திரீகள் அலறும் சத்தம், குதிரைகள் கனைக்கும் சத்தம், வீட்டுக் கதவுகளைத் 'தடால்' தடால்' என்று சாத்தும் சத்தம், மாடுகள் 'அம்மா' என்று கத்தும் சத்தம், கட்டை வண்டிகள் 'கட கட' என்று உருண்டோடும் சத்தம் இவ்வளவும் சேர்ந்து சொல்ல முடியாத அல்லோலகல்லோலமாகி விட்டது.

பரஞ்சோதி ஒரு கணம் திகைத்து நின்றான். தானும் ஓட வேண்டுமா, எந்தப் பக்கம் ஓடுவது என்று அவன் மனம் சிந்தித்துக் கொண்டிருந்தபோதே, அவனுக்கெதிரே நடந்த சம்பவங்களை அவனுடைய கண்கள் கவனித்தன. தெருவில் அவனுக்கு முன்னால் சற்றுத் தூரத்தில் ஒரு பல்லக்கு சென்று கொண்டிருந்தது. அதில் சௌந்தர்ய தேவதை என்று சொல்லக் கூடிய ஓர் இளம் பெண்ணும் அவளுடைய தந்தையெனத் தோன்றிய பெரியவர் ஒருவரும் இருந்தார்கள். பல்லக்கைத் தூக்கிச் சென்றவர்கள் அவர்களுக்குப் பின்னால் எழுந்த கூச்சலையும் கோலாகலத்தையும் கேட்டுவிட்டு பல்லக்கைக் கீழே வைத்துவிட்டு நாலாபக்கமும் சிதறி ஓடினார்கள். அதே சமயத்தில் அவனுக்குப் பின்னால் வெகு சமீபத்தில் மதங்கொண்ட யானை ஒன்று பூமி அதிர ஓடி வந்தது.

இதையெல்லாம் கவனித்த பரஞ்சோதி ஒரு கணம் தயங்கி நின்றான். அடுத்த கணத்தில் ஒரு தீர்மானத்துக்கு வந்தவனாய்ச் சட்டென்று கையிலிருந்த மூட்டையைக் கீழே வைத்து அவசரமாக அவிழ்த்தான். அதற்குள்ளிருந்த வேல் முனையை எடுத்துத் தன் கையில் வைத்திருந்த தடியின் முனையில் செருகிப் பொருத்தினான். பொருந்திய வேலை அவன் வலது கையில் தூக்கிப் பிடித்ததற்கும் மதம்கொண்ட யானை அவன் நின்ற இடத்திற்கு அருகே வருவதற்கும் சரியாயிருந்தது. அவ்வளவுதான்! பரஞ்சோதி தன் முழுபலத்தையும் கொண்டு வேலை வீசினான். அது யானையின் இடது கண்ணுக்கருகில் பாய்ந்தது. யானையின் தடித்த தோலைப் பொத்துக்கொண்டு உள்ளேயை சென்று விட்டது. யானை பயங்கரமாக ஒரு முறை பிளிறிற்று. துதிக்கையால் வேலைப் பிடுங்கிக் காலின் கீழை போட்டு மிதித்தது. பிறகு வேலை எறிந்த வாலிபன் நின்ற பக்கம் திரும்பிற்று.

மதங்கொண்ட யானையின் மீது வேலை எறிந்தால் அதனுடைய விளைவு என்னவாகும் என்பதை அந்த இளம் பிரயாணி நன்கு உணர்ந்திருந்தான். எனவே, யானை தன் பக்கம் திரும்பக் கண்டதும், பல்லக்கு இருந்த திசைக்கு எதிர்த் திசையில் வேகமாக ஓடத் தொடங்கினான். யானை தன்னுடைய பிரம்மாண்டமான தேகத்தை முழுவதும் திருப்புவதற்குள்ளே அவன் வெகுதூரம் ஓடிவிட்டான். ஓடிய வண்ணமே திரும்பிப் பார்த்தபோது, யானை வீறிட்டுக் கொண்டு தன்னை நோக்கி விரைந்து வருவதைக் கண்டான். உடனே அங்கே காணப்பட்ட ஒரு சந்தில் திரும்பி ஓடத் தொடங்கினான். சற்று நேரம் திரும்பிப் பார்க்காமல் ஓடிய பிறகு மறுபடியும் ஒரு விசாலமான பெரிய வீதியில் தான் வந்திருப்பதைக் கண்டான். தனக்கு எதிரே ஐந்தாறு யானைகள் மாவுத்தர்களால் ஏவப்பட்டு விரைவாக வந்து கொண்டிருப்பதைப் பார்த்துத் தெருவின் ஓரத்தில் ஒதுங்கினான். மதயானையைக் கட்டுக்கு உட்படுத்தி அழைத்துச் செல்வதற்காகவே இந்த யானைகள் போகின்றன என்பதை ஊகித்துணர்ந்ததும் ஓடுவதை நிறுத்தி மெதுவாக நடக்கலானான்.

பரஞ்சோதிக்கு அப்போதுதான் தன் தேகநிலை பற்றிய நினைவு வந்தது. அவனுடைய நெஞ்சு 'படபட' என்று அடித்துக் கொண்டிருந்தது. உடம்பெல்லாம் வியர்வையினால் சொட்ட நனைந்து போயிருந்தது. ஏற்கனவே, நாளெல்லாம் வழி நடந்ததனால் பரஞ்சோதி களைத்துப் போயிருந்தான். இப்போது அதி வேகமாக ஓடி வந்ததனால் அவனுடைய களைப்பு மிகுதியாகியிருந்தது. கால்கள் தளர்ந்து தடுமாறின. உள்ளத்தில் ஏற்பட்ட கிளர்ச்சியினாலும் பரபரப்பினாலும், தேகம் நடுங்கிற்று. சற்று உட்கார்ந்து இளைப்பாறாமல் மேலே நடக்க முடியாது என்று தோன்றியது. வீதி ஓரத்தில் காணப்பட்ட சுமைதாங்கி அருகில் சென்று அதன் மேல் உட்கார்ந்தான்.

வானத்தில் பூரண சந்திரன் பிரகாசித்துக் கொண்டிருந்தது. இளந்தென்றல் மெல்ல மெல்ல வந்து களைத்துப் போயிருந்த அவனுடைய தேகத்தின்மீது வீசி இளைப்பாற்றியது. உடம்பின் களைப்பு நீங்க நீங்க உள்ளம் சிந்தனை செய்யத் தொடங்கியது. "நாம் வந்த காரியம் என்ன? செய்த காரியம் என்ன?" என்று எண்ணியபோது, பரஞ்சோதிக்கே வியப்பாயிருந்தது. அந்த மதயானையின் மேல் வேலை எறியும்படியாக அந்தச் சமயம் தனக்குத் தோன்றிய காரணம் என்ன? அதனிடம் சிக்கிக் கொண்டிருந்தால், தன்னுடைய கதி என்னவாகியிருக்கும்? தன்னிடம் உயிரையே வைத்திருக்கும் தன் அருமை அன்னையை மறுபடியும் பார்க்க முடியாமலே போயிருக்கும் அல்லவா?

சிவிகையில் வீற்றிருந்த இளம்பெண்ணின் முகமும் பெரியவரின் முகமும் பரஞ்சோதியின் மனக்கண் முன்பு தோன்றின. ஆம்; மதயானையினால் அவர்களுக்கு ஆபத்து வராமலிருக்கும் பொருட்டே அந்தச் சமயம் அவன் வேலை எடுத்து வீசினான். அவர் யாராயிருக்கலாம்? ஒருவேளை அரங்கேற்றம் தடைப்பட்டது குறித்துப் பேசிக் கொண்டிருந்தார்களே, அந்தச் சிவகாமி அம்மைதானோ அந்த இளம்பெண்! பெரியவர் அவளுடைய தந்தை ஆயனராயிருக்குமோ? இவ்விதம் சிந்தித்த வண்ணமாய்ப் பரஞ்சோதி சுமைதாங்கியின் மேடைமீது சாய்ந்தான். அவனை அறியாமல் அவனுடைய கண்ணிமைகள் மூடிக்கொண்டன. நித்திராதேவி தன் மிருதுவான மந்திரக் கரங்களினால் அவனைத் தழுவலானாள்.
 
மூன்றாம் அத்தியாயம்

கடவுள் காப்பாற்றினார்

மின்னல் மின்னுகிற நேரத்தில் மதயானையின் மீது ஓர் இளம்பிள்ளை வேலை எறிந்ததையும் யானை திரும்பி அவனைத் துரத்திச் சென்றதையும், சிவிகையிலிருந்த பெரியவரும் இளம் பெண்ணும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த வாலிபனின் தீரமும் துணிச்சலும் அவர்களுக்குப் பெரும் வியப்பை உண்டு பண்ணின. அந்தப் பிள்ளைக்கு அபாயம் நேராமல் இருக்க வேண்டுமேயென்று அவர்களுடைய உள்ளங்கள் துடித்தன. அவனுக்கு என்ன நேர்ந்தது என்று தெரிந்துகொள்ளும் ஆவலினால் சிவிகைக்குள்ளிருந்து பரபரப்புடன் வௌியே வந்தார்கள். அந்தச் சமயம் அவ்விசாலமான வீதி, ஜன சூனியமாகக் காணப்பட்டது ஓர் ஈ காக்கை அங்கே கிடையாது.

பல்லக்கிலிருந்து இறங்கிய மனிதர் அந்த இளம் பெண்ணின் முதுகில் கையை வைத்து அணைத்துக்கொண்டு அன்பு கனிந்த குரலில், "பயமாயிருக்கிறதா, சிவகாமி?" என்று கேட்டார். "இல்லவே இல்லை, அப்பா! பயமில்லை!" என்றாள் சிவகாமி. பிறகு அவள், "நல்ல சமயத்தில் அந்த வாலிபன் மட்டும் வந்து யானையைத் திருப்பியிராவிட்டால் நம்முடைய கதி என்னவாகியிருக்கும்?" என்றாள். "பல்லக்கு சுக்கு நூறாகியிருக்கும்!" என்றார் தந்தை. "ஐயோ!" என்றாள் அந்த இளம் பெண். "அதற்காகத்தான் சிவிகையை கீழே வைத்துவிட்டுச் சிவிகை தூக்கிகளை ஓட்டமெடுக்கச் சொன்னேன். நாமும் பக்கத்து வீட்டுக்குள் ஓடித் தப்பியிருக்கலாம். ஆனாலும் வந்த அபாயம் பெரிதுதான்!" என்றார் பெரியவர்.

நாலாபுறமும் சிதறி ஓடிய ஜனங்கள் கொஞ்ச நேரத்துக்கெல்லாம் ஒவ்வொருவராகத் திரும்பி வர ஆரம்பித்தார்கள். வந்தவர்கள் எல்லாரும் அங்கு நிகழ்ந்தவைகளைப் பற்றி ஏக காலத்தில் பேச ஆரம்பிக்கவே, சற்றுமுன் நிசப்தம் குடிகொண்டிருந்த இடத்தில் 'கல கல' என்று பேச்சொலி எழுந்தது. "ஆகா! ஆயனரும் அவர் மகளும் அல்லவா! நல்ல வேளையாகப் போயிற்று! கடவுள்தான் காப்பாற்றினார்!" என்று ஜனங்கள் பலவாறாகப் பேசிக்கொண்டு நின்றார்கள். கடவுள் காப்பாற்றினார் என்றாலும், அவர் அந்த வீர வாலிபனுடைய உருவத்தில் வந்தல்லவா காப்பாற்றினார்! அந்தப் பிள்ளை யாராயிருக்கும்? அவனுடைய கதி என்னவாயிற்று? இதைப் பற்றித்தான் ஆயனரும் அவருடைய மகளும் எண்ணமிட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் அந்த இளம்பிள்ளையைப் பற்றி அவர்களுக்குத் தகவல் தெரிவிக்கக் கூடியவர்கள் யாருமில்லை.

ஆயனர், யானை கடைசியாக நின்ற இடத்தின் அருகே சென்றார். அங்கே யானையின் காலில் மிதிபட்டு முறிந்து கிடந்த வேலைக் கையில் எடுத்துக்கொண்டார். இன்னும் சற்றுத் தூரத்தில் அவிழ்ந்து கிடந்த மூட்டையை அவர் கட்டி எடுத்துக்கொண்டு திரும்பிச் சிவிகையண்டை வந்தார். சிவகாமி அந்த முறிந்த வேலை வாங்கி வியப்புடன் நோக்கினாள். ஆயனர், "சிவகாமி! இங்கே வீணாக நின்று கொண்டிருப்பதில் பயனில்லை. நாம் போகலாம்; எல்லா விவரங்களும் தானே நாளைக்குத் தெரிந்து விடுகிறது" என்றார். தந்தையும் மகளும் சிவிகைக்குள் ஏற உத்தேசித்த சமயத்தில் சற்றுத் தூரத்தில் குதிரைகள் அதிவேகமாக வரும் சப்தம் கேட்டுத் தயங்கி நின்றார்கள்.

நிலா வௌிச்சத்தில், முன்னால் இரண்டு வெண்புரவிகள் பாய்ந்து வருவதும், பின்னால் ஐந்தாறு குதிரைகள் தொடர்ந்து வருவதும் தெரிந்தன. முன்னால் வந்த குதிரைகளில் இரண்டு கம்பீர புருஷர்கள் ஏறி வந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து குதிரைகளின் மீது வேல் பிடித்த வீரர்கள் காணப்பட்டனர். குதிரைகள் சிவிகைக்குப் பக்கத்தில் வந்து நின்றதும் ஜனங்கள் பயபக்தியுடன் சிறிது விலகிக் கொண்டார்கள்.

"மகேந்திர மகா பல்லவர் வாழ்க!" "திரிபுவன சக்கரவர்த்தி வாழ்க!" குணபுர மகாராஜா வாழ்க!" "குமார சக்கரவர்த்தி மாமல்லர் வாழ்க!" என்ற கோஷங்கள் நாற்புறமும் எழுந்தன. வெண்புரவிகளில் முன்னால் வந்தவர்கள் மகேந்திர சக்கரவர்த்தியும், அவருடைய ஏக புதல்வர் நரசிம்ம பல்லவருந்தான் என்பதை ஆயனரும், சிவகாமியும் உணர்ந்ததும் அவர்களுக்குப் பெரிதும் வியப்பு உண்டாயிற்று. சிவகாமி ஆயனருக்குப் பின்னால் ஒதுங்கி நாணத்துடன் நின்றாள். அவளுடைய விசாலமான கரிய கண்கள் மகேந்திர சக்கரவர்த்திக்குப் பின்னால் குதிரைமீது வீற்றிருந்த குமார சக்கரவர்த்தியை நோக்கின.

மகேந்திர சக்கரவர்த்தி, "ஆயனரே! இது என்ன? நான் கேள்விப்பட்டது விபரீதமாக அல்லவா இருக்கிறது?" என்று சொல்லிக்கொண்டே குதிரை மீதிருந்து இறங்கினார். "ஏகாம்பரர் அருளால் அபாயம் ஒன்றும் நேரவில்லை, பிரபு!" என்றார் ஆயனர். "சிவகாமி ரொம்பவும் பயந்து போய்விட்டாளா?" என்று சக்கரவர்த்தி கேட்டார். "சிவகாமி பயப்படவில்லை இதையெல்லாம் அவள் ஏதோ வேடிக்கையென்று எண்ணிக்கொண்டிருக்கிறாள்!" என்று ஆயனர் கூறி, அன்பு நிறைந்த கண்களால் தமக்குப் பின்னால் அடக்கத்துடன் நின்ற சிவகாமியைப் பார்த்தார்.

அப்போது சக்கரவர்த்தியும் அவளைப் பரிவுடன் நோக்கி, "சிவகாமி! ஏன் தலைகுனிந்துகொண்டிருக்கிறாய்? அரங்கேற்றத்தின்போது நடுவில் போய்விட்டேனே என்று என் பேரில் மனஸ்தாபமா?" என்றார். சிவகாமியின் முகத்தில் நாணத்துடன் கூடிய புன்னகை மலர்ந்தது அவள் மௌனமாயிருந்தாள். அப்போது ஆயனர், "பல்லவேந்திரா! சிவகாமிக்கு அவ்வளவு தெரியாதா? ஏதோ மிகவும் முக்கியமான காரியமாதலால்தான் தாங்கள் நடுவில் எழுந்து போயிருக்க வேண்டும்..." என்றார். "ஆமாம், ஆயனரே! ரொம்பவும் முக்கியமான காரியந்தான். எல்லாம் பிறகு விவரமாகச் சொல்லுகிறேன். மந்திராலோசனை முடிந்து வௌியில் வந்ததும் உங்களைப் பற்றி விசாரித்தேன். நீங்கள் புறப்பட்டு விட்டதாகத் தெரிந்தது. ஏன் இவ்வளவு அவசரமாகக் கிளம்பினீர்கள்?" என்று சக்கரவர்த்தி கேட்டார்.

"இராத்திரி வீடு போய்ச் சேர்ந்தால்தானே காலையில் என் வேலையைத் தொடங்கலாம்? ஒருநாள் என்றால், ஒருநாள் வீணாகப் போக வேண்டாமென்றுதான் இன்றே புறப்பட்டேன், பிரபு!" "ஆமாம்; உமது தெய்வீகச் சிற்பக் கலையை விட்டுவிட்டு உம்மால் ஒருநாள் கூட இருக்கமுடியாதுதான். இப்போதும் இராத்திரியே போவதாகத்தான் உத்தேசமா?" "ஆம், பல்லவேந்திரா! பட்டப் பகலைப்போல் நிலா எரிகிறது இரவு போய்விடுவதே சௌகரியம்." "இந்த வெண்ணிலாவைப் பார்த்தால் எனக்குக்கூட உம்முடன் வரவேண்டுமென்று தோன்றுகிறது. ஆனால், அது முடியாத காரியம். நாளை அல்லது மறுநாள் வருகிறேன்" என்று கூறிச் சக்கரவர்த்தி திரும்பிப் பார்த்தார்.

அப்போது சக்கரவர்த்திக்குப் பின்னால் இன்னொரு வெண்புரவியின் மேலிருந்த நரசிம்மவர்மர் வெகு லாகவத்துடன் குதிரை மேலிருந்து கீழே குதித்துச் சக்கரவர்த்தியின் பக்கத்தில் வந்து, "அப்பா! யானையின் மீது வேல் எறிந்த வாலிபனைப்பற்றி விசாரிக்கவில்லையே?" என்று கூறிவிட்டு ஆயனரைப் பார்த்து, "அந்த வாலிபன் யார்? அவன் எங்கே சென்றான்? உங்களுக்கு ஏதாவது தெரியுமா?" என்று கேட்டார். "அதுதான் தெரியவில்லை வேலை எறிந்ததும் அவன் மின்னலைப் போல் மறைந்துவிட்டான். ஆனால், அப்படி மறைந்ததனாலேயே உயிர்தப்பிப் பிழைத்தான். தேசாந்தரம் வந்த பிள்ளையாகத் தோன்றியது" என்றார் ஆயனர்.

குமார சக்கரவர்த்தி, ஆயனருடன் பேசிக்கொண்டிருக்கையில் அவருடைய கண்கள் மட்டும் ஆயனருக்குப் பின்னால் இருந்த சிவகாமியின் மீது நின்றன. நரசிம்மவர்மர் சற்றுத் தூரத்தில் குதிரைமீதிருந்தபோது அவரை ஏறிட்டுத் தீவிர நோக்குடன் பார்த்த சிவகாமியோ இப்போது அவர் பக்கமே பார்க்காமல் பூமியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். தரையில் அவள் அருகில், சற்று முன்னால் அவள் கையிலிருந்து நழுவிய முறிந்த வேல் கிடந்தது. அதைப் பார்த்த நரசிம்மவர்மர், "சிவகாமி! இது என்ன?" என்று கேட்டுக்கொண்டே அவள் அருகில் சென்றார். சிவகாமி சிறிது பின்வாங்கி, முறிந்த வேலைத் தரையிலிருந்து எடுத்து அவர் பக்கம் நீட்டினாள். அதை நரசிம்மவர்மர் வாங்கிக் கொண்ட போது, அவருடைய கைவிரல்கள் சிவகாமியின் விரல்களைத் தீண்டியிருக்கவேண்டும். தேள் கொட்டியவர்களைப் போல் அவர்கள் அவசரமாக விலகிக் கொண்டதிலிருந்து இதை ஊகிக்கக்கூடியதாயிருந்தது.

நரசிம்மவர்மர் தம் தேகத்தில் ஏற்பட்ட படபடப்பை ஒருவாறு சமாளித்து அடக்கிக்கொண்டு, ஆயனரைப் பார்த்து, "உங்களை மத யானையின் கோபத்திலிருந்து காப்பாற்றியது இந்த வேல்தானா, ஆயனரே?" என்று கேட்டார். "ஆமாம், பல்லவ குமாரா!" என்று ஆயனர் மேலும் ஏதோ சொல்லுவதற்குள் மாமல்லர் தந்தையைப் பார்த்து, "அப்பா! இந்த வேலுக்கு உடையவனைக் கட்டாயம் கண்டுபிடிக்க வேண்டும். அவன் நல்ல சமயத்தில் இத்தகைய வீரச் செயலைப் புரிந்திராவிட்டால், பல்லவ சாம்ராஜ்யத்தின் மகா சிற்பியை அல்லவா இந்நேரம் இழந்திருப்போம்?" என்றார்.

அதற்குச் சக்கரவர்த்தி, "மகா சிற்பியை மட்டும்தானா? பல்லவ சாம்ராஜ்யத்தின் தலைசிறந்த கலைவாணியையும் இழந்திருப்போம்! அந்த வீரனைக் கண்டுபிடிக்க வேண்டியது அவசியந்தான். இவர்கள் இப்போது புறப்பட்டுச் செல்லட்டும் ஏற்கனவே நேரம் அதிகமாகி விட்டது!" என்று சொல்லிவிட்டுச் சிவகாமியைப் பார்த்து, "குழந்தாய்! உன்னுடைய ஆட்டம் இன்று அற்புதமாயிருந்தது. முழுமையும் பார்க்கத் தான் முடியாமல் போயிற்று" என்றார். பின்னர் அவள் தந்தையை நோக்கி, "ஆயனரே! உம்முடன் பேசவேண்டிய விஷயங்கள் எத்தனையோ இருக்கின்றன. சீக்கிரத்தில் மாமல்லபுரம் வருகிறேன் இப்போது ஜாக்கிரதையாய்ப் போய்ச் சேருங்கள்" என்று சொன்னார்.

அங்கே தாம் நிற்கும் வரையில் ஆயனரும் அவர் மகளும் பல்லக்கில் ஏறமாட்டார்கள் என்பதை அறிந்த சக்கரவர்த்தி விரைந்து சென்று குதிரையின் மேல் ஏறினார். நரசிம்மவர்மரும் தம் குதிரைமீது ஏறிக்கொண்டார். குதிரைகள் புறப்படுமுன் மகேந்திர பல்லவர் தமக்குப் பின்னால் நின்ற வீரர்களில் ஒருவனைச் சைகையினால் கூப்பிட்டு, "அயலூரிலிருந்து புதிதாக வந்த இளைஞன் யாராயிருந்தாலும் இன்றிரவு அவனைப் பிடித்து வைத்திருந்து நாளைக்கு அரண்மனைக்கு அழைத்து வரவேண்டும்; நகர்க்காப்புத் தலைவனுக்கு இந்தக் கட்டளையை உடனே தெரியப்படுத்து!" என்று ஆக்ஞாபித்தார். சக்கரவர்த்தியும் குமாரரும் அங்கிருந்து போனதும், ஆயனரும் சிவகாமியும் தங்கள் சிவிகையில் அமர்ந்தார்கள். காவலர் புடைசூழ, சிவிகை காஞ்சிக் கோட்டையின் கீழ் வாசலை நோக்கிச் சென்றது.
 
நான்காம் அத்தியாயம்

துர்ச்சகுனம்

வீதி ஓரத்திலிருந்த சுமைதாங்கியின் மீது பரஞ்சோதி சாய்ந்து கண்ணை மூடிக் கால்நாழிகைகூட இராது. ஏதோ பேச்சுக் குரலைக் கேட்டுத் தூக்கி வாரிப்போட்டுக்கொண்டு கண் விழித்தான். தெருவில் யாரோ இவ்விதம் பேசிக்கொண்டு போனார்கள். "கோயில் யானைக்கு மதம் பிடித்தால் துர்ச்சகுனம் என்று சொல்லுகிறார்களே!" "ஆமாம்; நாட்டுக்கு ஏதோ பெரிய விபரீதம் வரப்போகிறது!" "யானைக்கு எப்படி மதம் பிடித்ததாம்?" "யாருக்குத் தெரியும்? யாரோ அசலூரான் ஒருவன் யானையின் மேல் வேலை வீசி எறிந்தானாம். அதனால் யானைக்கு வெறிபிடித்து விட்டது என்று சொல்லுகிறார்கள். "ஆயனச் சிற்பியும் அவருடைய மகளும் பிழைத்தது புனர் ஜன்மம் என்கிறார்களே?" "அப்படித்தான்; அரங்கேற்றம் நடுவில் நின்றது போதாதென்று இந்த ஆபத்து வேறே அவர்களுக்கு நேர்ந்தது."

அதற்குமேல் பரஞ்சோதிக்கு அவர்கள் பேசியது கேட்கவில்லை. "வேலை எறிந்ததனால் யானைக்கு வெறிபிடித்து விட்டதாம்!" என்னும் பேச்சுக் காதில் விழுந்ததும், பரஞ்சோதியின் உள்ளம் திடுக்கிட்டது. அப்போது அவனுக்கு இன்னொரு விஷயமும் ஞாபகம் வந்தது. அவன் கொண்டு வந்திருந்த மூட்டையை நடுத் தெருவிலேயே போட்டுவிட்டு அவன் ஓடி வந்துவிட்டான். நாவுக்கரசருக்கும் ஆயனச் சிற்பிக்கும் அவன் கொண்டு வந்திருந்த ஓலைகள் அந்த மூட்டையில் இருந்தன. இன்னும் அவனுடைய துணி மணிகளும், அவன் கொண்டு வந்திருந்த சொற்பப் பணமும் மூட்டைக்குள்ளேதான் இருந்தன. அதை அவசியம் கண்டுபிடித்தாக வேண்டும். போட்ட இடத்திலேயே மூட்டை கிடைக்குமா? திக்குத் திசை புரியாத இந்தப் பெரிய நகரத்தில் அந்த இடத்தை மறுபடியும் கண்டுபிடிப்பது எப்படி?

பரஞ்சோதி சுமைதாங்கியிலிருந்து இறங்கி, தான் ஓடி வந்த வழி எதுவாயிருக்குமென்று ஒருவாறு ஊகித்துக்கொண்டு அந்தத் திசையை நோக்கி நடக்கத் தொடங்கினான். இதற்குள் வீதிகளில் ஜன நடமாட்டம் வெகுவாகக் குறைந்து போயிருந்தது. வீட்டுக் கதவுகளையெல்லாம் சாத்தியாகி விட்டது. வீதி விளக்குகளை அணைத்துவிட்டார்கள். நல்ல வேளையாகப் பூரண சந்திரன் பால் போன்ற வெண்ணிலாவைப் பொழிந்துகொண்டிருந்தான். நிலா வௌிச்சத்தில் நாற்புறமும் கூர்மையாகப் பார்த்துக் கொண்டு பரஞ்சோதி வெகுநேரம் நடந்தான். எவ்வளவு நடந்தும், யானையைச் சந்தித்த இடத்தை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. மூட்டையையும் அவன் எங்கும் காணவில்லை.

நேரமாக ஆக, வீதிகளில் நிசப்தம் குடிகொண்டது. உச்சி வானத்தில் சந்திரனைப் பார்த்து அர்த்தராத்திரியாகிவிட்டது என்பதைப் பரஞ்சோதி தெரிந்துகொண்டான். கால்கள் இனி நடக்க முடியாதபடி சோர்ந்துபோயின. உடம்பை எங்கேயாவது கீழே போட்டால் போதும் என்று அவனுக்கு ஆகிவிட்டது. இனிமேல் மூட்டையைத் தேடுவதில் பயனில்லை. நாவுக்கரசர் மடத்துக்கு எப்படியாவது போய்ச் சேர்ந்தால் போதும்.

ஆனால், எப்படிப் போவது? வழி கேட்பதற்குக்கூட வீதிகளில் யாரையும் காணோம். லட்சக்கணக்கான ஜனங்கள் வாழ்ந்த அந்தப் பெரிய நகரத்தில் தான் மட்டும் தன்னந்தனியாக அலைவதை நினைத்தபோது பரஞ்சோதிக்கு எப்படியோ இருந்தது. ராத்திரியெல்லாம் இப்படியே அலைந்து கொண்டிருக்க வேண்டியதுதானா? ஆயிரக்கணக்கான மாளிகைகளும், மண்டபங்களும், வீடுகளும் நிறைந்துள்ள இந்த நகரில் தனக்கு இரவில் தங்குவதற்கு இடம் கிடையாதா? நல்ல வேளையாக இதோ யாரோ வருகிறார்கள் போலிருக்கிறது. பேச்சுக் குரல் கேட்கிறது அவர்களை விசாரித்துப் பார்க்கலாம்.

ஒரு வீதியின் முடுக்கில் இரண்டுபேர் பேசிக்கொண்டு வந்தார்கள். அவர்களைப் பார்த்தால் நகர்க் காவலர்கள் என்று தோன்றியது. பரஞ்சோதியைப் பார்த்ததும் அவர்களே நின்றார்கள். "யாரப்பா நீ? நடு ராத்திரியில் எங்கே கிளம்பினாய்?" என்று அவர்களில் ஒருவன் கேட்டான். "நான் அயலூர், ஐயா!..." என்று பரஞ்சோதி சொல்ல ஆரம்பிப்பதற்குள், முதலில் பேசியவன், "அயலூர் என்றால், எந்த ஊர்?" என்றான். "சோழ தேசம்.." "ஓகோ உறையூரா?" "இல்லை, ஐயா! கீழைச் சோழ நாட்டில் செங்காட்டங்குடி கிராமம். இன்று மாலைதான் காஞ்சிக்கு வந்து சேர்ந்தேன். "அப்படியா? இங்கு எதற்கு வந்தாய்?" "நாவுக்கரசர் மடத்தில் தமிழ்ப் பயில்வதற்காக வந்தேன்." "அப்படியானால், நள்ளிரவில் தெருவீதியில் ஏன் அலைகிறாய்?" "மடம் இருக்குமிடம் தெரியவில்லை சாயங்காலத்திலிருந்து தேடிக்கொண்டிருக்கிறேன்.

அந்தக் காவலர்கள் இருவரும் இலேசாகச் சிரித்த சிரிப்பில் பரிகாசம் தொனித்தது. அவர்களில் ஒருவன், "நாவுக்கரசர் மடத்துக்கு நீ கட்டாயம் போகவேண்டுமா?" என்று கேட்டான். "ஆம், ஐயா!" "நாங்கள் அந்தப் பக்கந்தான் போகிறோம் நீ வந்தால் அழைத்துக்கொண்டு போய்விடுகிறோம்." பரஞ்சோதி காவலர்களுக்கு வந்தனம் சொல்லிவிட்டு அவர்களைப் பின்தொடர்ந்து சென்றான். சற்று நேரத்துக்கெல்லாம் அவர்கள் உயரமான மதில் சுவர்களையுடைய ஒரு கட்டிடத்தின் வாசலில் வந்து நின்றார்கள். "இதுதான் மடமா?" என்று கேட்டான் பரஞ்சோதி. "ஆமாம், பார்த்தால் இது மடமாகத் தோன்றவில்லையா?"

உண்மையில் பரஞ்சோதிக்கு அது மடமாகத் தோன்றவில்லை. அருகில் கோயில் எதையும் காணவில்லை. கட்டிடத்தின் உயரமான சுவர்களும், வாசற் கதவில் பூட்டியிருந்த பெரிய பூட்டும் அவனுக்கு இன்னதென்று தெரியாத சந்தேகத்தை உண்டாக்கின. அவனை அழைத்துப் போனவர்களில் ஒருவன் வாசற் கதவண்டை சென்று அங்கேயிருந்த காவலாளியிடம் ஏதோ சொன்னான். உடனே பூட்டுத் திறக்கப்பட்டது: கதவும் திறந்தது. "வா, தம்பி!" நெஞ்சு திக்திக் என்று அடித்துக்கொள்ள, பரஞ்சோதி வாசற்படியைத் தாண்டி உள்ளே சென்றான். இரு புறமும் உயரமான சுவர் எழுப்பிய குறுகிய சந்தின் வழியாக அவனை அழைத்துப் போனார்கள். ஓரிடத்தில் நின்றார்கள் அங்கிருந்த அறையின் கதவு திறக்கப்பட்டது. "இங்கே படுத்திரு, மடத்தில் எல்லோரும் தூங்குகிறார்கள் பொழுது விடிந்து பார்த்துக் கொள்ளலாம்" என்றான் ஒருவன்.

பரஞ்சோதி அந்த இருட்டறைக்குள் எட்டிப் பார்த்தான். கொஞ்சம் வைக்கோலும் ஒரு கோரைப் பாயும் கிடந்தன. ஒரு மூலையில் சட்டியில் தண்ணீர் வைத்திருந்தது. திரும்பித் தன்னுடன் வந்த காவலர்களைப் பார்த்து, "இது மடந்தானா?" என்று கேட்டான். "ஆமாம், தம்பி! உனக்கு என்ன சந்தேகம்?" என்றான் காவலர்களில் ஒருவன். "இங்கிருக்க விருப்பம் இல்லாவிட்டால் வௌியே போய்விடு!" என்றான் இன்னொருவன். பரஞ்சோதிக்கு இருந்த களைப்பில் எப்படியாவது இராத்திரி படுத்துத் தூங்க இடம் கிடைத்தால் போதும் என்று இருந்தது. "இல்லை இங்கேயே நான் படுத்திருக்கிறேன்" என்று சொல்லிவிட்டு அறைக்குள் நுழைந்தான். அப்போது அவனை அழைத்து வந்தவர்களில் ஒருவன், "தம்பி! இது மடந்தான் ஆனால், நாவுக்கரசர் மடமல்ல. மன்னர் மன்னரான மகேந்திர சக்கரவர்த்தியின் மடம்!" என்று சொல்லிக் கொண்டே கதவைச் சாத்தினான். அடுத்த கணம் அறைக் கதவைப் பூட்டும் சத்தம் கேட்டது!
 
ஐந்தாம் அத்தியாயம்

செல்லப்பிள்ளை

பொன்னி நதி தன் பல்லாயிரம் கைகளாலும் வளப்படுத்திப் பொன் கொழிக்கச் செய்யும் கீழைச் சோழ நாட்டில் செங்காட்டங்குடி என்ற கிராமம் செழித்து விளங்கிற்று. இந்தக் கிராமத்தில் மாமாத்திரர் என்று பட்டம் பெற்ற பழங்குடியில் பிறந்த பிள்ளை பரஞ்சோதி. சோழநாடு முழுதும் உறையூர்ச் சோழ மன்னர்களின் ஆட்சியின்கீழ் இருந்த பழைய காலத்தில் பரஞ்சோதியின் மூதாதைகள் இராஜ சேவையில் ஈடுபட்டுப் படைத் தலைவர்களாயிருந்தார்கள். சோழ வம்சம் பழம்பெருமை இழந்து, பல்லவர் ஆட்சி ஓங்கியபோது மாமாத்திரர் குலமும் அதன் சிறப்பை இழந்தது, சென்ற சில தலைமுறைகளாக மாமாத்திரர் போர்த் தொழிலையும் எல்லைக் காவல் தொழிலையும் கைவிட்டு விவசாயத் தொழிலை மேற்கொண்டிருந்தார்கள்.

இத்தகைய குலத்திலே பிறந்த பரஞ்சோதி குழந்தைப் பிராயத்திலேயே, தந்தையை இழந்து, தாயாரின் செல்லப் பிள்ளையாக வளர்ந்து வந்தான். 'முரடன்', 'பொல்லாதவன்' என்று அக்கம் பக்கங்களில் பெயர் வாங்கினான். சண்டை என்பது அவனுக்குச் சர்க்கரையும் பாலுமாக இருந்தது. போர்த் தொழிலுக்குரிய சாதனங்களில் இயற்கையாக அவன் புத்தி சென்றது. வீராதி வீரர்களென்று புகழ் பெற்ற அவனுடைய மூதாதைகளின் வீர இரத்தம் பரஞ்சோதியின் தேகத்தில் அலை மோதிக்கொண்டு ஓடியது. கழி விளையாட்டு, கத்தி விளையாட்டு, மல்யுத்தம், வேல் எறிதல் ஆகியவற்றில் அவன் அதிவிரைவாகத் தேர்ச்சிபெற்றான்.

பரஞ்சோதியின் தாயார் வடிவழகி அம்மை தன் ஏக புத்திரனிடம் உயிரையே வைத்திருந்தாள். ஆனாலும், பரஞ்சோதியின் முரட்டுக் காரியங்கள் அவளுக்குப் பெரிதும் கவலையை அளித்தன. அந்த மூதாட்டி சிவபக்திச் செலுத்துவதிலும் கலைச் செல்வத்திலும் சிறந்த குடும்பத்திலே பிறந்தவள். அவளுடைய தமையனார் திருவெண்காட்டுப்பதியில் புகழுடன் வசித்த மருத்துவர்; சிவநேசச் செல்வர். தெய்வத் தமிழ் மொழியை நன்கு பயின்றிருந்ததோடு வடமொழியிலும் அவர் புலமை பெற்று விளங்கினார். வைத்தியக் கலையில் தேர்ச்சிபெற்று நோய் தீர்ப்பதில் வல்லவராய் இருந்தார்.

அந்தச் சிவபக்தரின் மூத்த பெண்ணுக்கு உமையாள் என்று பெயர். அழகிலும் குணத்திலும் அவள் இணையற்று விளங்கியது போலக் கல்வியிலும் சிவபக்தியிலும் சிறந்து விளங்கினாள். இந்தத் திருவெண்காட்டுப் பெண்ணைத் தன் மகனுக்கு மணம் முடித்து வைக்கவேண்டுமென்று பரஞ்சோதியின் அன்னை அந்தரங்கத்தில் ஆசைகொண்டிருந்தாள். ஆனால், நிறைவேறுமா என்ற சந்தேகமும் கவலையும் அவளுடைய மனத்தில் குடிகொண்டிருந்தன. பல துறைகளிலும் புலமை மிகுந்த அவளுடைய தமையனார் இந்த முரட்டுப் பிள்ளைக்குத் தம் அருமைப் பெண்ணைக் கொடுப்பாரா?

பரஞ்சோதியைக் கல்வி கேள்விகளில் வல்லவனாக்க அவனுடைய தாயார் எவ்வளவோ பிரயத்தனம் செய்தாள், ஆனால், பரஞ்சோதிக்குக் கல்வி கற்பிக்க முயன்ற அண்ணாவிகள் எல்லாரும் தோல்வியே அடைந்தனர். அவர்களில் ஒருவராவது அதிக காலம் நீடித்து அந்த முயற்சியைச் செய்யவில்லை. ஒவ்வொருவரும் சிலகாலம் முயன்று பார்த்தபிறகு, அந்த மூதாட்டியிடம் வந்து, "அம்மா! உங்கள் புதல்வன் வெகு புத்திசாலி; ஏகசந்தக்கிராஹி என்றே சொல்லலாம். எந்த விஷயத்தையும் கவனம் செலுத்தி ஒரு தடவை கேட்டால் போதும் உடனே தெரிந்து கொள்கிறான். ஆனால் அந்த ஒரு தடவை அவனைக் கவனித்துக் கேட்கும்படி செய்வதற்குள்ளே எங்கள் பிராணன் போய்விடுகிறது. அவனுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் சக்தி எங்களுக்கு இல்லை" என்று சொல்லிவிட்டு போனார்கள். இரண்டொரு அண்ணாவிமார் பரஞ்சோதி விஷயத்தில் தண்ட உபாயத்தைக் கையாளப் பார்த்தார்கள். அதன் பயனாக அவர்கள் அவனுடைய தாயாரிடம் சொல்லிக் கொள்ளமலே ஊரைவிட்டுப் போகும்படி நேர்ந்துவிட்டது!

இதனாலெல்லாம் பரஞ்சோதியின் தாய் மிகவும் கவலை கொண்டிருந்தாள். ஒரு வருஷம் பொங்கல் பண்டிகைக்காகப் பரஞ்சோதியும் வடிவழகி அம்மையும் திருவெண்காட்டுக்குப் போயிருந்தார்கள். அங்கே பரஞ்சோதி உமையாளைப் பார்த்தான். உமையாளின் கல்யாணத்தைப் பற்றிப் பேச்சு நடப்பதைக் கேட்டான். தன் மாமனும் தாயாரும் தன்னைப் பற்றி வருத்தத்துடனும் கவலையுடனும் பேசிக் கொண்டிருந்ததும் அவன் காதில் விழுந்தது. எல்லாவற்றையும் சேர்த்து, நிலைமையை ஒருவாறு தெரிந்து கொண்டான்.

அவர்கள் திருவெண்காட்டிலிருந்து திரும்பித் திருச்செங்காட்டங்குடிக்கு வந்தபிறகு, ஒருநாள் பரஞ்சோதியின் தாயார் தரையில் படுத்த வண்ணம் கண்ணீர் உகுத்துக் கொண்டிருந்தாள். எங்கேயோ வௌியே போய்விட்டு வந்த பரஞ்சோதி இதைப் பார்த்து, தாயாரின் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டான். அன்னை எதற்காக அழுகிறாள் என்று அவன் கேட்கவில்லை. அவளுக்குச் சமாதானமும் சொல்லவில்லை. "அம்மா! நான் ஒன்று சொல்கிறேன்; நீ அதற்குத் தடை சொல்லக்கூடாது" என்றான். அன்னை கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, "என்னடா, என் கண்ணே!" என்றாள். "நான் காஞ்சி மாநகருக்குப் போகப் போகிறேன்" என்று பரஞ்சோதி சொன்னதும், திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தாள். "எதற்காக?" என்று கேட்டாள். "கல்வி கற்பதற்காகத்தான், அம்மா! இத்தனை நாளும் நான் கல்வி கற்காமல் வாணாளை வீணாய்க் கழித்து விட்டதை நினைத்தால் வருத்தமாயிருக்கிறது!" என்றான் பரஞ்சோதி.

தாயாருக்கு ஆனந்தக் கண்ணீரும் துக்கக் கண்ணீரும் சேர்ந்தாற்போல் கண்களில் துளித்தன. "கல்வி கற்பதற்குக் காஞ்சிக்குப் போவானேன் இங்கேயே படிக்கக் கூடாதா, குழந்தாய்?" என்றாள். "இந்த ஊரில் இருக்கும் வரையில் எனக்குப் படிப்பு வராது. நல்ல கல்விப் பயிற்சி பெறவேண்டுமென்றால், காஞ்சி மாநகருக்குத் தான் போகவேண்டுமென்று எல்லோரும் சொல்கிறார்கள். இந்தப் பரத கண்டத்திலேயே காஞ்சியில் உள்ளவை போன்ற கல்லூரிகளும் கலைக்கூடங்களும் வேறெங்கும் இல்லையாம். நான் எல்லாம் விசாரித்துத் தெரிந்து கொண்டேன் அம்மா!" என்றான் பரஞ்சோதி.

பரஞ்சோதி கூறியது உண்மைதான் அந்த நாளில் காஞ்சி மாநகரமானது கலைமகளுக்கு உறைவிடமாயிருந்தது. வடமொழிக் கல்வி அளித்த வேத கடிகைகளும், தமிழ்க் கல்வி பயில்வித்த திருமடங்களும், பௌத்தர்களின் மதபோதனைக் கல்லூரிகளும், சமண சமயப் பள்ளிகளும் காஞ்சியில் நிறைந்திருந்தன. இன்னும் சித்திரம், சிற்பம், சங்கீதம் ஆகிய அருங்கலைகளைப் பயில்வதற்குச் சிறந்த கலைக் கழகங்களும் இருந்தன. இவற்றையெல்லாம்விட காஞ்சி மாநகருக்குப் பெருஞ்சிறப்பு அளித்து தமிழகமெங்கும் பெருங்கிளர்ச்சி உண்டாக்கிய சம்பவம் ஒன்று சில காலத்துக்கு முன்பு நிகழ்ந்திருந்தது. அந்தச் சம்பவம் மகா வீரரும் மகா புத்திமானும் சகலகலா வல்லவருமான மகேந்திரவர்ம சக்கரவர்த்தி, திருநாவுக்கரசரின் மகிமையினால் சமண மதத்தைத் துறந்து சிவநேசச் செல்வரானதுதான்.

மருள் நீக்கியார் என்னும் இயற்பெயர் கொண்ட நாவுக்கரசர் சிலகாலம் தர்மசேனர் என்ற பெயருடன் சமண சமயப் போதகர்களில் புகழ்பெற்றவராய் விளங்கினார். பின்னர், அவருடைய சகோதரி திலகவதியாரின் சிவபக்தி காரணமாக அவர் சமண மதத்தைத் துறந்து சிவனடியாரானார். அதுமுதல், தேனினும் இனிய தமிழ்மொழியில் சிவபக்தி ததும்பும் பண்களையும் தாண்டகங்களையும் அமுத வெள்ளமாகப் பொழிந்து வந்தார். அந்தத் தெய்வீகப் பாடல்களின் மகிமையில் ஈடுபட்ட மகேந்திர சக்கரவர்த்தியானவர், 'நான் நாட்டுக்கரசன், தாங்கள் நாவுக்கரசர்' என்று மருள்நீக்கியாரைப் போற்றியதோடு, சமண மதத்தையே துறந்து சிவநேசராகிவிட்டார். இந்த வரலாறு தமிழகமெங்கும் பரவியிருந்தது. மேற்கூறிய, அதிசயங்களைப் பற்றியே இந்தக் காலத்தில் எங்கெங்கும் வியப்புடன் ஜனங்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். மகேந்திர சக்கரவர்த்தியினது வேண்டுகோளின்பேரில் நாவுக்கரசர் காஞ்சியில் திருமடம் ஸ்தாபித்திருக்கிறார் என்றும், அந்த மடத்தில் தெய்வத் தமிழ்மொழியும், தெய்வீக இசைப்பாடல்களும் கற்பிக்கப்படுகின்றன என்றும் நாடெங்கும் பிரசித்தமாகியிருந்தன. இந்தச் செய்திகள் எல்லாம் பரஞ்சோதியின் காதிலும் விழுந்திருந்தபடியால்தான், 'கல்வி கற்கக் காஞ்சிக்குப் போகிறேன்' என்று அவன் தாயாரிடம் கூறினான்.

ஏக புதல்வனைப் பிரிந்திருக்க வேண்டுமென்பதை நினைத்து வடிவழகி அம்மை பெரும் வேதனையை அடைந்த போதிலும், 'கல்வி கற்கப் போகிறேன்' என்று பரஞ்சோதி கூறியது அவளுக்கு ஒரு பக்கத்தில் அளவில்லாத மகிழ்ச்சியையும் அளித்தது. தாயாரின் சம்மதத்தைத் தெரிந்து கொண்டதும் பரஞ்சோதி, "அம்மா! நீ மாமாவிடம் சொல்லி நான் கல்வி கற்றுத் திரும்பி வரும்வரையில் உமையாளுக்குக் கலியாணம் செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்" என்று கூறிய போது, மகனுடைய மன நிலையை அறிந்து கொண்டு அன்னை மீண்டும் ஆனந்தக் கண்ணீர் வடித்தாள். பரஞ்சோதியின் தீர்மானத்தை அறிந்து அவனுடைய மாமனும் அளவற்ற மகிழ்ச்சியடைந்தார். அந்தச் சிவபக்தர் திருநாவுக்கரசரைத் தரிசித்து அவருடன் நட்புரிமை பூண்டவராதலால் நாவுக்கரசருக்கு ஓலை எழுதித் தருவதாகச் சொன்னார். தமிழ்க் கல்வியோடு ஏதேனும் ஒரு கலையும் அவன் கற்று வரவேண்டுமென்றும் இதன் பொருட்டுத் தம்முடைய பழைய சிநேகிதரான ஆயனருக்கு ஓலை தருவதாகவும் கூறினார். பரஞ்சோதியின் மன நிலையை அறிந்துகொண்டு அவன் கல்வி பயின்று திரும்பியதும் உமையாளை அவனுக்கே மணம் செய்து தருவதாகவும் உறுதி கூறினார்.

நல்லநாள், நல்ல வேளையில் பரஞ்சோதி அன்னையிடமும் மாமனிடமும் ஆசிபெற்று, மற்ற எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டு காஞ்சி மாநகருக்குப் புறப்பட்டான். புறப்படும்போது, கடைசியாக அவனுடைய மாமன் கூறிய புத்திமதி என்னவென்றால், "அப்பா, பரஞ்சோதி! தூரவழி போகும்போது கையில் வேலுடன் நீ புறப்படுவது நியாயந்தான். ஆனால் வழிப்பிரயாணத்துக்கு மட்டும் வேலைத் துணையாக வைத்துக் கொள், காஞ்சி மாநகரை அடைந்ததும், வேலைத் தலையைச் சுற்றி வீசி எறிந்துவிடு. அப்புறம் கல்வி கற்பதிலேயே முழுக் கவனத்தையும் செலுத்து" என்பதுதான்.
 

New Threads

Top Bottom