Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


சிவகாமியின் சபதம் - பாகம்-1 : பூகம்பம்

ஆறாம் அத்தியாயம்

மர்மக் கயிறு

சிறைக்கூடத்தின் இருள் சூழ்ந்த அறைக்குள்ளே கோரைப் பாயில் தன்னந்தனியாகப் படுத்திருந்த பரஞ்சோதிக்கு மேற்கூறிய மாமனுடைய புத்திமதி நினைவுக்கு வந்தது. காஞ்சி மாநகரை அடைந்ததும் மாமனுடைய புத்திமதியின் பிரகாரம் அவன் வேலை வீசி எறியத்தான் செய்தான்! ஆனால், அந்தப் பொல்லாத வேல் மதங்கொண்ட யானையின் மீது விழுந்து தொலைத்தது! அதனுடைய பலன்தான் தன்னைச் சிறையிலே கொண்டுவந்து சேர்த்தது என்பதை எண்ணியபோது பரஞ்சோதிக்குச் சிரிப்பு வந்தது. காஞ்சி மாநகர் சேர்ந்த முதல்நாள் இரவைத் தான் சிறைச்சாலையில் கழிக்க வேண்டியிருந்தது என்பதை அவனுடைய தாயும் மாமனும் அறிந்தால் என்ன நினைப்பார்கள்? தான் காஞ்சிக்குப் புறப்பட்ட சமயத்தில், வீட்டுச் சுவருக்கு அப்பால் தனியாக நின்று கனிவும், கண்ணீரும் ததும்பிய கண்களினால் விடை கொடுத்த உமையாளுக்குத் தான் என்னமாயிருக்கும்?

காஞ்சியில் தமிழ்க் கல்வியும், சிற்பக் கலையும் கற்றுக் கொண்டு திரும்பி ஊருக்குப் போனதும், இந்த முதல்நாள் சம்பவத்தைச் சொன்னால், அவர்கள் ஒருவேளை நம்ப மறுத்தாலும், மறுக்கலாம். இன்று மத்தியானம் தன்னிடம் யாராவது, இப்படியெல்லாம் நடக்கும் என்று சொல்லியிருந்தால் நம்பியிருக்க முடியுமா? சட்டென்று பரஞ்சோதிக்கு ஒரு விஷயம் நினைவு வந்தது. அந்த புத்த சந்நியாசி என்ன சொன்னார்? இன்று இரவு உனக்கு ஒரு கஷ்டம் வரும் என்று சொன்னாரல்லவா? அது உண்மையாகி விட்டதே! உண்மையிலேயே அவர் முக்காலமும் உணர்ந்த முனிவரா? அன்று நண்பகலில் அந்தப் புத்த சந்நியாசியை அவன் சந்தித்த சம்பவத்தை நினைத்துக்கொண்டு பரஞ்சோதி தனக்குத் தானே நகைத்துக்கொண்டான் அந்தச் சம்பவம் பின்வருமாறு.

காலையெல்லாம் வழி நடந்த பிறகு, காஞ்சி நகர் இன்னும் ஒரு காத தூரத்தில்தான் இருக்கிறது என்று பரஞ்சோதி தெரிந்து கொண்டு சற்று இளைப்பாறிச் செல்லலாமென்று சாலை ஓரத்தில் ஒரு மரத்தடியில் படுத்துக் கொண்டான். அவனுடைய தலை மாட்டில் மூட்டையும் அவன் பக்கத்தில் வேலாயுதமும் கிடந்தன. சிறிது நேரத்துக்கெல்லாம் சாலையோடு ஒரு புத்த சந்நியாசி வருவதை அவன் பார்த்தான். புத்தர்கள் அல்லது சமணர்களுடைய கூட்டுறவு கூடாதென்றும், அவர்களைக் கண்டால் தூர விலகிப்போய்விட வேண்டுமென்றும் அவனுடைய மாமனும் அன்னையும் மிகவும் வற்புறுத்திக் கூறியிருந்தார்கள். எனவே, தூரத்தில் புத்த சந்நியாசியைக் கண்டதும் பரஞ்சோதி கண்களை மூடிக் கொண்டான். அவர் தன்னைத் தாண்டிச் சாலையோடு தொலை தூரம் போகும் வரையில் தூங்குவது போல் பாசாங்கு செய்ய அவன் தீர்மானித்திருந்தான்.

சிறிது நேரத்துக்கெல்லாம் தனக்கு அருகில் வந்து யாரோ நிற்பது போலவும் தன்னை உற்றுப் பார்ப்பது போலவும் அவனுக்குத் தோன்றியது மெதுவாகக் கண்களைத் திறந்து பார்த்தான். பரஞ்சோதி அஞ்சா நெஞ்சம் படைத்த வாலிபன்தான் ஆனாலும் கண்ணைத் திறந்ததும் எதிரில் கண்ட காட்சி அவனைத் துணுக்குறச் செய்தது. புத்த சந்நியாசி அவனுக்கு அருகில் வந்து நின்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய முகத்தோற்றம் அவனுக்கு அச்சத்தை அளித்தது. அதைக் காட்டிலும் அவர் கையில் வாலைப் பிடித்துத் தலைகீழாகத் தொங்கவிட்டுக் கொண்டிருந்த பாம்பு அதிக அருவருப்பையும் பயங்கரத்தையும் அளித்தது.

ஐந்து அடி நீளமுள்ள நாகசர்ப்பம் அது; ஆனால், உயிர் இல்லாதது! அதனுடைய உடலில் இரத்தம் கசிந்தது. பரஞ்சோதி பரபரப்புடன் எழுந்து, "அடிகளே! இது என்ன வேடிக்கை? எதற்காகச் செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? தூர எறியுங்கள்!" என்றான். "பிள்ளாய்! இவ்வாறு காட்டுப் பிரதேசத்தில் தனியாகப் படுத்து உறங்கலாமா? இத்தனை நேரம் இந்த நாக சர்ப்பம் உன்னைத் தீண்டியிருக்குமே. நல்ல சமயத்தில் நான் வந்து இதை அடித்தேனோ, நீ பிழைத்தாயோ?" என்று சொல்லி விட்டு, புத்த சந்நியாசி அந்தச் செத்த பாம்பை தூர எறிந்தார்.

பரஞ்சோதி தன் முகத்தில் தோன்றிய புன்சிரிப்பை மறைத்துக்கொண்டு, "அப்படியா அடிகளே! நான் ஒரு தாய்க்கு ஒரே பிள்ளை. என்னை நீங்கள் காப்பாற்றியதற்காக என் தாயார் தங்களுக்கு ரொம்பவும் நன்றி செலுத்துவாள்" என்றான். பிறகு அவன் மூட்டையையும் வேலையும் எடுத்துக் கொண்டு எழுந்து நின்று, "தங்கள் திருநாமம் என்னவோ? என் தாயாரிடம் எப்போதாவது தங்களைப்பற்றிச் சொல்ல நேர்ந்தால்?...என்பதற்குள் பிக்ஷு குறுக்கிட்டு, "நாகநந்தி என்பார்கள்; நீ எவ்விடத்துக்குச் செல்கிறாய் தம்பி?" என்று கேட்டார். "காஞ்சிக்குப் போகிறேன்" என்று பரஞ்சோதி கூறியதும் "நானும் அங்கேதான் போகிறேன்! வழித்துணை ஆயிற்று, வா, போகலாம்!" என்றார் நாகநந்தி அடிகள்.

இருண்ட சிறையில் கோரைப்பாயில் படுத்திருந்த பரஞ்சோதி, 'அந்தப் புத்த பிக்ஷுவுக்கு நாகநந்தி, என்பது எவ்வளவு பொருத்தமான பெயர்! அவர் முகத்தைப் பார்த்தாலே நாகப் பாம்பின் ஞாபகம் வருகிறது!" என்று எண்ணமிட்டான். நாகநந்தி அடிகள் வருங்காலத்தை ஞான திருஷ்டியினால் அறிந்துதான் சொன்னாரோ, அல்லது குருட்டம் போக்காய்ச் சொன்னாரோ, அவருடைய ஜோசியத்தில் முற்பகுதி நிறைவேறிவிட்டது. தான் இப்போது ஒரு கஷ்டத்தில் அகப்பட்டுக் கொண்டிருப்பது உண்மைதான். அவருடைய ஜோசியத்தின் இன்னொரு பகுதியும் நிறைவேறுமா? 'புத்த பகவான் அருளால் அந்தக் கஷ்டம் நீங்கும்!" என்று சொன்னது பலிக்குமா? ஆம்; பலிக்கத்தான் வேண்டும்.

உண்மையில் பரஞ்சோதி தன்னுடைய நிலைமையைக் குறித்து அதிகக் கவலைப்படவில்லை. ஏதோ தவறுதலினால் தன்னைச் சிறையில் அடைத்திருக்கிறார்கள் என்றும் உண்மை தெரியும்போது தன்னை நிச்சயம் விடுதலை செய்து விடுவார்கள் என்றும் உறுதியாக நம்பினான். எனவே, இன்றிரவு நிம்மதியாகத் தூங்குவதுதான் சரி. ஆனால், ஏன் தூக்கம் வரமாட்டேன் என்கிறது? ஓகோ! எல்லாம் இந்த ஒரு சாண் வயிறு செய்யும் காரியந்தான். இராத்திரி ஒன்றும் சாப்பிடவில்லையல்லவா? பசி வயிற்றைக் கிள்ளுகிறது! அதனால்தான் தூக்கம் பிடிக்கவில்லை. நல்ல காஞ்சி நகரம்! நெடுந்தூரம் யாத்திரை செய்து வந்த அதிதிகளை இராப்பட்டினி போட்டுக் கொல்லுகிற இந்த நகரத்தைப்பற்றி என்னத்தைச் சொல்வது! காஞ்சி நகரை அணுகியபோது அந்தத் திகம்பர ஜைன முனிவர் எதிர்பட்டார் அல்லவா? அந்த இராப்பட்டினிக்காரனின் முகதரிசனத்தின் பலன்தான் இன்றிரவு தனக்கு அன்னம் அபாவமாய்ப் போய்விட்டது போலும்...!

மேற்சொன்னவாறு பரஞ்சோதி சிந்தனை செய்து கொண்டிருக்கையில், அந்த அறையில் உண்டான ஒரு மாறுதல் அவனுடைய கவனத்தைச் சட்டென்று கவர்ந்தது. சற்று முன் வரையில் இருள் சூழ்ந்திருந்த அந்த அறையில் இப்போது கொஞ்சம் வௌிச்சம் காணப்பட்டது. இந்த மாறுதலுக்குக் காரணம் என்னவென்று அதிசயித்துப் பரஞ்சோதி மேலே பார்த்தான்; கூரையில் இருந்த சிறு துவாரத்தின் வழியாகச் சந்திர கிரணம் உள்ளே புகுந்து வந்ததுதான் என்று தெரிந்தது. இத்தனை நேரம் இல்லாமல் இப்போது திடீரென்று மேற்படி துவாரம் எப்படி ஏற்பட்டது என்று ஒரு கணம் பரஞ்சோதிக்கு வியப்பாயிருந்தது. "இல்லை, இல்லை! துவாரம் எப்போதும் இருந்திருக்க வேண்டும்; ஆனால் துவாரத்துக்கு நேராக இப்போதுதான் சந்திரன் வந்திருக்கிறது!" என்று தனக்குத்தானே சந்தேக நிவர்த்தி செய்து கொண்டான். ஆம்; பூரணச் சந்திரனுடைய மோகன நிலவானது வௌி உலகத்தையெல்லாம் அப்போது சொப்பன சௌந்தரிய லோகமாகச் செய்து கொண்டிருக்கிறது! அந்த விஷயத்தைத் தனக்கு எடுத்துச் சொல்லித் தன்னுடைய வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்வதற்காகவே மேற்கூரைத் துவாரத்தின் வழியாக அந்தச் சந்திர கிரணம் உள்ளே புகுந்து வருகிறது போலும்...!

ஆகா! இது என்ன? உள்ளே வரும் நிலவு வௌிச்சம் இவ்வளவு அதிகமாகி விட்டதே! துவாரம் பெரிதாகியிருப்பது போல் தோன்றுகிறதே! அடடே! முதலில் பார்த்தபோது ஒரு கைகூட நுழையமுடியாத சிறு துவாரமாயிருந்தது இப்போது ஆள் நுழையக்கூடிய அளவு பெரிதாகிவிட்டதே! இது என்ன இந்திர ஜாலமா? அல்லது மகேந்திர ஜாலமா? மகேந்திர சக்கரவர்த்தியின் காஞ்சி மாநகரம் மாய ஜால நகரமாயிருக்கிறதே! ஐயையோ! இது என்ன பயங்கரம்?.. பரஞ்சோதியின் மூச்சு ஒரு நிமிஷம் நின்று போய்விட்டது! மேற்கூரைத் துவாரத்தின் வழியாக நௌிந்து நௌிந்து கீழே வந்தது ஒரு நீளமான பாம்பு!.. இல்லை, இல்லை! பாம்பு இல்லை!... அது வெறும் கயிறுதான்! சீ! இன்று மத்தியானம் அந்த புத்த பிக்ஷு செத்த பாம்புடன் வந்து தன்னைத் திடுக்கிடச் செய்தாலும் செய்தார்! கயிற்றைப் பார்த்தால்கூடப் பாம்பு மாதிரி தோன்றுகிறது.

மேற்கூரைத் துவாரத்தின் மர்மம் இப்போது புலப்பட்டது. யாரோ வேண்டுமென்றுதான் கூரையில் துவாரம் செய்திருக்கிறார்கள். அதன் வழியாக கயிற்றை உள்ளே விடுகிறார்கள்!..எதற்காக? வேறு எதற்காக இருக்கும்? தன்னைத் தப்புவிப்பதற்காகத்தான்! ஆனால், முன்பின் தெரியாத இந்தப் பெரிய நகரில் தன்னிடம் அவ்வளவு சிரத்தை கொண்டிருப்பவர்கள் யார்? தான் அந்தச் சிறைச்சாலை அறையில் இருப்பது அவர்களுக்கு எப்படித் தெரிந்தது? இதற்குள்ளாகக் கயிற்றின் முனை கீழே அவன் கைக்கு எட்டும் தூரத்துக்கு வந்துவிட்டது. இன்னும் கீழே வந்து தரையையும் தொட்டுவிட்டது, பிறகு, அந்தக் கயிறு இப்படியும் அப்படியும் அசையத் தொடங்கியது. மேலேயிருந்து கயிற்றை விட்டவர்கள் அதைக் குலுக்குகிறார்கள் என்பதில் சந்தேகமேயில்லை. எதற்காக? தன்னை அந்தக் கயிற்றின் வழியாக மேலே வரும்படி சமிக்ஞை செய்கிறார்களா? அப்படித்தான் இருக்க வேண்டும்.

அதிசயமான முறையில் வந்த அந்த உதவியைப் பெற்றுக் கொள்ளலாமா வேண்டாமா என்று பரஞ்சோதி ஒரு நிமிஷம் யோசனை செய்தான். அதனால் வேறு என்ன தொல்லைகள் விளையுமோ என்பதாக ஒரு பக்கம் அவனுக்கு யோசனையாயிருந்தது. இவ்வளவு சிரத்தை எடுத்துத் தன்னைக் காப்பாற்ற விரும்புகிறவர்கள் யார் என்று தெரிந்துகொள்ள ஒரு பக்கம் அவனுக்குப் பேராவல் உண்டாயிற்று. அதோடு, இன்னொரு முக்கிய காரணமும் சேர்ந்தது! அது அவனுடைய வயிற்றைக் கிள்ளிக் கொண்டிருந்த பசிதான்! பரஞ்சோதி கயிற்றை அழுத்தமாய்ப் பிடித்து இழுத்தான். மேலே அது இறுகக் கட்டியிருக்கிறதென்று தெரிந்தது. தன்னுடைய பாரத்தை அது நன்றாய்த் தாங்கும் என்று நிச்சயமாயிற்று. உடனே கயிற்றின் வழியாக அவன் மேலே ஏறத் தொடங்கினான்.
 
ஏழாம் அத்தியாயம்

நிலா முற்றம்

ஆயனரிடமும் சிவகாமியிடமும் விடை பெற்றுக் கொண்ட பிறகு மகேந்திர சக்கரவர்த்தியும் மாமல்லரும், குதிரைகளைத் திருப்பி அதிவேகமாய் விட்டுக்கொண்டு போய், அரண்மனையை அடைந்தார்கள். அவர்களைக் கண்டதும் அரண்மனை வாசலில் காவல்புரிந்து கொண்டிருந்த வீரர்கள், "வாழ்க! வாழ்க சக்கரவர்த்திப் பெருமான் வாழ்க! மாமல்ல மகா வீரர் வாழ்க!" என்று கோஷித்துக் கொண்டு அவர்களுக்கு வணங்கி வழிவிட்டு நின்றார்கள். காவலர்களுடைய வாழ்த்து ஒலியுடன் அங்கே வரிசை வரிசையாக நின்ற குதிரைகளின் கனைப்பு ஒலியும் சேர்ந்தது. அரண்மனை முன் வாசலைத் தாண்டி அவர்கள் உள்ளே நுழைந்ததும் அங்கேயிருந்த விசாலமான நிலா முற்றத்தில் வீரர்கள் பலர் அணி வகுத்து நிற்பது தெரிந்தது. சக்கரவர்த்தியையும் குமார பல்லவரையும் கண்டதும் அந்த வீரர்களும் ஜயகோஷம் செய்தார்கள். எல்லோருக்கும் முன்னால் நின்ற ஒருவர் மட்டும் தனியே பிரிந்து முன்னால் வந்து பணிவுடன் நிற்க, சக்கரவர்த்தி அவரைப் பார்த்து, "சேனாதிபதி! தூதர்களுக்கு எல்லா விஷயமும் சொல்லியாகி விட்டதா! புறப்படுவதற்கு ஆயத்தமாயிருக்கிறார்களா? என்று கேட்டார்.

"ஆம், பிரபு! எல்லோருக்கும் சொல்லியாகிவிட்டது. அவரவர்களும் இன்னின்ன திக்குக்குச் செல்ல வேண்டுமென்று தெரிவித்து விட்டேன். எல்லோரும் கிளம்ப ஆயத்தமாய்த் தங்களுடைய கட்டளைக்காகக் காத்திருக்கிறார்கள்" என்று சேனாதிபதி கூறினார். சக்கரவர்த்தி நரசிம்மவர்மரைப் பார்த்து, "குழந்தாய்! உன் தாயார் கவலையுடன் இருப்பாள். அவளிடம் சென்று விஷயம் இன்னதென்று தெரியப்படுத்து. இருவரும் போஜனத்தை முடித்துக்கொண்டு, மேல் மாடத்துக்குச் செல்லுங்கள். இந்தத் தூதர்களை அனுப்பிவிட்டு நானும் அங்கு வந்து சேருகிறேன்" என்றார்.

வெகுகாலம் சமணராயிருந்த காரணத்தினால் சக்கரவர்த்தி இரவில் போஜனம் செய்வதில்லை. சைவரான பிறகும் அவர் இரவில் உணவு அருந்தும் வழக்கத்தை மேற்கொள்ளவில்லை. "ஆகட்டும் அப்பா! இதோ போகிறேன், ஆனால் எல்லாப் படைகளும் வந்து சேரும் வரையில் காத்திருக்க வேண்டுமா? ஆயத்தமாயிருக்கும் படைகள் உடனே போருக்குப் புறப்படலாமல்லவா?" சக்கரவர்த்தி புன்னகையுடன், "அதைப்பற்றி யோசிக்கலாம், குழந்தாய்! நீ இப்போது தாயாரைப் போய்ப் பார்!" என்றார்.

மாமல்லர் போன பிறகு மகேந்திரர் சேனாதிபதியைப் பார்த்து, "கலிப்பகையாரே! தூதுவர்களிடம் சொல்லி அனுப்ப வேண்டிய செய்தி இது; தொண்டை மண்டலத்திலும் சோழ மண்டலத்திலும் உள்ள ஒவ்வொரு கோட்டத்திலும் ஆயிரம் வீரர் அடங்கிய படைகளைத் திரட்டி ஆயத்தமாய் வைத்திருக்க வேண்டியது. மறுபடியும் செய்தி அனுப்பியவுடனே படை புறப்படச் சித்தமாயிருக்க வேண்டும் நான் சொல்வது தெரிகிறதா?" என்றார். "தெரிகிறது, பிரபு!" "கோட்டையைப் பத்திரப்படுத்துவதற்கு வேண்டிய ஏற்பாடு எல்லாம் செய்தாகிவிட்டதல்லவா?"

"துறவறத்தாரைத் தவிர வேறு யாரையும் விசாரியாமல் கோட்டைக்குள் விடக்கூடாதென்று கட்டளையிட்டிருக்கிறேன். வௌியே போகிறவர்களையும் கவனிக்கச் சொல்லியிருக்கிறேன். நகருக்குள்ளேயும் யார் பேரிலாவது சந்தேகத்துக்கு இடமிருந்தால் சிறைப்படுத்திக் காவலில் வைக்கச் சொல்லியிருக்கிறேன்." கோட்டைச் சுவரெல்லாம் பழுது பார்த்திருக்கிறதா? சேனாதிபதி! பல்லவ சாம்ராஜ்யம் நிலைத்து நிற்பது இந்தக் காஞ்சிக் கோட்டையின் பாதுகாப்பையே பொறுத்திருக்கலாம்."

"பல்லவ சாம்ராஜ்யத்தைப் பாதுகாப்பதற்குக் காவேரி முதல் கிருஷ்ணா நதி வரையில் லட்சோப லட்சம் வீரர்கள் காத்திருக்கிறார்கள், பிரபு!" "உண்மைதான், ஆனால், அவர்கள் வெறும் கையினால் சண்டை போட முடியாதல்லவா? அந்த லட்சோப லட்சம் வீரர்களுக்கும் வேண்டிய வேல்களும் வாள்களும் எங்கே?" என்றார் சக்கரவர்த்தி. சேனாபதி கலிப்பகையார் மௌனம் சாதித்தார். "கீழைச் சோழநாட்டில் வாளும் வேலும் நன்றாய்ச் செய்வார்கள் போலிருக்கிறது. யானைமேல் எறியப்பட்ட வேலை நீர் பார்த்தீரா?" "இல்லை, பிரபு!" "மாமல்லனிடம் அது இருக்கிறது 'மாமாத்திரர்' என்று எழுதியிருக்கிறது. 'மாமாத்திரர்' என்ற பட்டம் கீழைச் சோழ நாட்டிற்கு உரியதல்லவா?" "ஆம், பல்லவேந்திரா!" "அந்த வேலை எறிந்தவன் கீழைச் சோழநாட்டானாய்த்தானிருக்கவேண்டும். அம்மாதிரி வேல் எறியக்கூடிய வீரர்கள் ஆயிரம் பேர் இருந்தால் இந்தக் கோட்டைக் காவலைப்பற்றிக் கவலையில்லை!" "பல்லவ சைனியத்தில் எத்தனையோ ஆயிரம் வேல் வீரர்கள் இருக்கிறார்கள், பிரபு!" "அந்த வேலை எறிந்தவன் பதினாயிரத்தில் ஒரு வீரன்; அவனை அவசியம் கண்டுபிடிக்க வேண்டும்" சேனாபதி மௌனமாயிருந்தார்.

"இன்னும் ஒரு விஷயம், காவித்துணி அணிந்தவர்களைப் பற்றிய கட்டளையை மாற்ற வேண்டும். ஆயனரையும் அவர் மகளையும் பார்த்துவிட்டு நாங்கள் திரும்பியபோது ஒரு சந்தின் முனையில் ஒரு புத்த பிக்ஷு நிற்பதைப் பார்த்தேன். சட்டென்று அவர் நிழலில் மறைந்துகொண்டார்." "கட்டளை என்ன பிரபு?" "இராஜ விஹாரத்தின் மேல் கவனம் வைத்து, புதிதாக வந்திருக்கும் புத்த பிக்ஷு யார் என்று பார்க்கவேண்டும்." "உடனே ஏற்பாடு செய்கிறேன்." பிறகு, சேனாபதி கலிப்பகையார் ஒவ்வொரு தூதராக அழைத்து இவரிவர் இன்னின்ன கோட்டத்துக்குப் போகிறார் என்று சக்கரவர்த்தியிடம் தெரியப்படுத்தினார். தூதர்கள் தனித் தனியே சக்கரவர்த்திக்கு வணங்கி விடைபெற்றுக் கொண்டு தத்தம் குதிரை மீதேறி விரைந்து சென்றார்கள்.
 
எட்டாம் அத்தியாயம்

புவன மகாதேவி

மாமல்லர் தந்தையின் சொற்படி அரண்மனை நிலாமுற்றத்தைக் கடந்து சென்று, உள் வாசலை நெருங்கியதும், குதிரை மீதிருந்து இறங்கினார். அங்கே சித்தமாய்க் காத்திருந்த பணியாட்கள் குதிரையைப் பிடித்து அப்பாலே கொண்டு சென்றார்கள். பிறகு, மாமல்லர் விசாலமான அந்த அழகிய அரண்மனைக்குள் பிரவேசித்து, தீபம் ஏந்துவோர் தம்மைப் பின் தொடர்ந்து வருவதற்குத் திணறும்படியாக, அவ்வளவு விரைவாக நடந்து சென்றார். புதிதாக அந்த அரண்மனைக்குள் பிரவேசிக்கிறவர்கள் அங்கே குறுக்கு நெடுக்குமாகச் சென்ற நடைபாதைகளில் வழி கண்டுபிடித்துச் செல்வது அசாத்தியமாயிருக்கும். நரசிம்மர் அந்தப் பாதைகளின் வழியாக வளைந்து வளைந்து சென்று அரண்மனை அந்தப்புரத்தை அடைந்தார். அங்கே சிற்ப வேலைகளினால் சிறப்படைந்த ஒரு வாசலை அவர் அணுகியதும், "குழந்தாய்! வந்தாயா?" என்று உள்ளே இருந்து ஒரு குரல் கேட்டது.

பல்லவ சாம்ராஜ்யத்தின் பட்டத்தரசியான புவன மகாதேவி அந்தப்புர வாசற்படியில் வந்து நின்றார். அவருடைய கம்பீரமான தோற்றமும் முதிர்ந்த சௌந்தர்யவதனமும், "திரிபுவன சக்கரவர்த்தினி" என்று பல்லவ சாம்ராஜ்யத்தின் பிரஜைகள் அவரைக் கொண்டாடுவது முற்றும் பொருந்தும் என்று தெரியப்படுத்தின. "அம்மா!" என்ற குரலுடன் அருகில் வந்த குமாரனைச் சக்கரவர்த்தினி இரு கைகளாலும் அணைத்துக்கொண்டு, "குழந்தாய்! இன்றைக்கு..." என்று ஏதோ சொல்லத் தொடங்குவதற்குள், மாமல்லர், "அம்மா! உங்களை ரொம்பவும் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன், ஒரு வரம் தர வேண்டும்!" என்றார்.

புவனமகாதேவியின் முகத்தில் புன்னகை அரும்பியது. "வரமா! நல்லது, கேள்! தருகிறேன் அதற்குப் பிரதியாக நானும் ஒரு வரம் கேட்பேன் அதை நீ தரவேண்டும்!" என்று அன்பு கனிந்த குரலில் கூறினார். மாமல்லர், "பிள்ளை அன்னையிடம் வரம் கேட்பது நியாயம். பிள்ளையிடம் தாய் வரம் கேட்பது எங்கேயாவது உண்டா? முடியவே முடியாது?" என்றதும், புவன மகாதேவியின் முகத்தில் புன்னகை மறைந்தது. இருவரும் உள்ளே சென்றார்கள்.

நரசிம்மர் தமது தலை அணியையும் ஆபரணங்களையும் எடுத்து வைத்துவிட்டுக் கால் கை சுத்தம் செய்துகொண்டு வந்தார். பிறகு இருவரும் அந்தப்புர பூஜா மண்டபத்துக்குள் பிரவேசித்தார்கள். அங்கே, மத்தியில் நடராஜ மூர்த்தியின் திருவுருவம் திவ்ய அலங்காரங்களுடன் விளங்கியது. பின்புறச் சுவர்களில் சிவபெருமானுடைய பல வடிவங்களும், பாலகோபாலனுடைய லீலைகளும் வர்ணங்களில் அழகாகச் சித்தரிக்கப்பட்டிருந்தன.

பூஜையெல்லாம் முன்னமே முடிந்தபடியால், தாயும் மகனும் அந்தத் திருவுருவத்தை வழிபட்டுவிட்டு வௌியே வந்து போஜன மண்டபத்துக்குள் பிரவேசித்தார்கள். உணவருந்த உட்கார்ந்ததும் புவனமகாதேவி, "குழந்தாய்! ஏதோ முக்கியமான செய்தி வந்திருக்கிறதாம்! கோட்டை வாசல் எல்லாம் சாத்தியாகிவிட்டதாம். அரண்மனையெல்லாம் அல்லோலகல்லோலப்படுகிறது. எனக்கு மட்டும் ஒன்றுமே தெரியவில்லை நீயாவது சொல்லக்கூடாதா? பெண்கள் என்றால் மட்டமானவர்கள், அவர்களுக்கு ஒன்றுமே தெரியவேண்டியதில்லை என்பதாக நீ கூடவா எண்ணம் வைத்திருக்கிறாய்?" என்றார்.

மாமல்லர் உணவு பரிமாறிக் கொண்டிருந்த பணியாட்களைப் பார்த்து விட்டு, "அம்மா! சாப்பிட்டானதும் மேல் மாடத்துக்குப் போய் எல்லா விவரங்களும் சொல்கிறேன். ஆனால், ஒன்று மட்டும் இப்போதே கேட்டுக் கொள்கிறேன். இனிமேல் தினந்தோறும் நான் வந்த பிறகுதான் தாங்கள் இராப் போஜனம் செய்வது என்று வைத்துக் கொள்ளக் கூடாது அந்த வழக்கத்தை இன்றோடு நிறுத்திவிட வேண்டும்" என்றார். சக்கரவர்த்தினி குமாரனை அன்பு ததும்பிய கண்களால் பார்த்துப் புன்னகை புரிந்தார் ஆனால், மறுமொழி ஒன்றும் சொல்லவில்லை.

காஞ்சி அரண்மனையில் பகல் போஜனம் ராஜரீக சம்பிரதாயங்களுடன் ஆடம்பரமாய் நடப்பது வழக்கம். பெரிய சாம்ராஜ்ய உத்தியோகஸ்தர்கள், அந்நிய நாடுகளிலிருந்து வந்த பிரமுகர்கள், சிவனடியார்கள், வைஷ்ணவப் பெரியார்கள், பிரசித்தி பெற்ற கலைஞர்கள், தமிழ்க் கவிஞர்கள், வடமொழிப் பண்டிதர்கள் முதலியோர் விருந்தாளியாக அழைக்கப்படுவது உண்டு. எனவே பகல் போஜன நேரத்தில் அரண்மனைவாசிகள் ஒருவரோடொருவர் அளவளாவுதல் இயலாத காரியம். மற்றும் பகல் நேரமெல்லாம் சக்கரவர்த்தியும் குமாரரும் ராஜரீக காரியங்களில் ஈடுபட்டிருப்பார்கள். எனவே, தாயும் பிள்ளையும் சந்திப்பதற்கு இராப் போஜன நேரத்தைச் சக்கரவர்த்தி திட்டம் செய்திருந்தார். அதற்குப் பிறகு அரண்மனைமேல் உப்பரிகையின் நிலாமாடத்தில் அவர்கள் மூன்று பேரும் சந்தித்துப் பேசுவது வழக்கமாயிருந்தது.

இன்றைக்குச் சாப்பாடு ஆனதும் தாயும் புதல்வனும் மேல் உப்பரிகைக்குச் சென்று நிலா மாடத்தில் அமைந்திருந்த பளிங்குக்கல் மேடையில் அமர்ந்தார்கள். பால் நிலவில் மூழ்கியிருந்த காஞ்சி நகரமானது அன்றிரவு என்றுமில்லாத அமைதி பெற்று விளங்கிற்று. நரசிம்மவர்மருடைய மனம் அந்நகரின் கீழ்க் கோட்டை வாசலுக்குச் சென்றது. இப்போது அந்தக் கோட்டை வாசலைக் கடந்து ஒரு சிவிகை போய்க் கொண்டிருக்கும். அந்தச் சிவிகையில் ஆயனரும் அவர் மகளும் அமர்ந்திருப்பார்கள். ஆகா! அவர்களுக்குத்தான் இன்றைக்கு எப்பேர்ப்பட்ட ஆபத்து வந்தது! மதயானையின் மீது வேல் எறிந்து அவர்களைக் காப்பாற்றிய வீரன் யாராக இருப்பான்?...

புதல்வன், தானே பேசுவான் என்று புவனமகாதேவி சிறிது நேரம் காத்திருந்தார். அவன் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து விட்டான் என்பதைத் தெரிந்துகொண்டு, "குழந்தாய்!" என்றார். உடனே மாமல்லர் திடீரென்று கனவு கலைந்தவர் போல் திடுக்கிட்டுத் தாயாரைப் பார்த்தார். "அம்மா! அம்மா! நான் உங்களிடம் விரும்பிய வரத்தைக் கேட்டே விடுகிறேன். உங்களுக்குப் புண்ணியமாய்ப் போகட்டும் என்னைக் 'குழந்தாய்' என்று கூப்பிடாதீர்கள். நான் இன்னும் பச்சைக் குழந்தையா? பல்லவ ராஜ்யத்திலுள்ள புகழ் வாய்ந்த மல்லர்களையெல்லாம் ஜயித்து 'மாமல்லன்' என்று பட்டம் பெற்ற பிறகும், என்னைக் குழந்தை!' 'குழந்தை' என்றால் நான் என்ன செய்கிறது? அப்பாவோ இன்னும் என்னைத் தொட்டிலில் கிடக்கும் குழந்தையாகவே எண்ணி நடத்துகிறார்! உங்கள் இரண்டு பேருக்கும் இடையில் நான் அகப்பட்டுக் கொண்டு..." "அதற்கு என்ன செய்யலாம்? பெற்றோர்களுக்கு மகன் எப்போதும் குழந்தைதான்" என்ற குரலைக் கேட்டுத் தாயும் மகனும் திரும்பிப் பார்த்தார்கள். அவர்களுக்குத் தெரியாமல் மகேந்திர சக்கரவர்த்தி பின்னால் வந்து நிற்பதைத் தெரிந்து கொண்டு இருவரும் பயபக்தியுடன் எழுந்து நின்றார்கள்.

மகேந்திரர் பளிங்கு மேடையில் அமர்ந்ததும் புவன மகாதேவியும் மாமல்லரும் உட்கார்ந்தார்கள். "தேவி! குழந்தை ஏதாவது சொன்னானா?" என்று சக்கரவர்த்தி கேட்டார். "இன்னும் ஒன்றும் சொல்லவில்லை என்பேரிலும் உங்கள் பேரிலும் குறைதான் சொல்லிக்கொண்டிருந்தான்!" "குறை சொல்லாமல் வேறு என்ன சொல்லட்டும், அப்பா! பல்லவ ராஜ்யத்தில் அந்நியர் பிரவேசித்த செய்தி கிடைத்த பிறகும் நாம் வெறுமனே கையைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பதா? சேனாபதி கலிப்பகையார் சேனை திரட்டுவதற்குள் கலியுகமே முடிந்துவிடும் போலிருக்கிறதே! இத்தனை நேரம் நமது சைனியம் போருக்குக் கிளம்பியிருக்க வேண்டாமா?" என்று கொதித்தார் மாமல்லர்.

"பல்லவ ராஜ்யத்தில் அந்நியர் பிரவேசித்தார்களா? இது என்ன?" என்று புவனமாதேவி வியப்பும் அவநம்பிக்கையும் தொனித்த குரலில் கேட்டார். "ஆம், தேவி! அற்ப சொற்பமாகப் பிரவேசிக்கவில்லை. பெரும் படைகளுடனே திடீரென்று பிரவேசித்திருக்கிறார்கள்.." "பல்லவேந்திரா! மந்திராலோசனை சபையில் நான் மட்டும் வாயைத் திறக்காமல் இருக்கவேண்டும் என்று ஏன் கட்டளையிட்டிருக்கிறீர்கள்? எல்லாரும் ஏதோ பேசியபோது என் மனம் கொதித்த கொதிப்பை மிகவும் முயன்று அடக்கிக் கொண்டிருந்தேன்..."

மாமல்லரின் பேச்சை மறுத்துச் சக்கரவர்த்தி தமது பட்ட மகிஷியைப் பார்த்துச் சொன்னார்: "தேவி! நரசிம்மன் இன்னும் குழந்தையாகத்தான் இருக்கிறான். வந்திருக்கும் யுத்தம் எப்பேர்ப்பட்டதென்பதை அவன் அறியவில்லை. இரண்டு பேரும் கேளுங்கள் வாதாபி மன்னன் புலிகேசி பெரும் படைகளுடன் துங்கபத்திரை நதியைக் கடந்து நமது ராஜ்யத்துக்குள் பிரவேசித்திருக்கிறான். அவனுடைய சைனியத்தில் லட்சக்கணக்கான வீரர்கள் இருக்கிறார்களாம். ஆயிரக்கணக்கில் யானைகள் இருக்கின்றனவாம். பெரிய காளைகள் பூட்டிய நூற்றுக்கணக்கான வண்டிகள் தொடர்ந்து வருகின்றனவாம். பதினாயிரக்கணக்கான குதிரை வீரர்கள் வருகிறார்களாம். வெகு காலமாகவே புலிகேசி இந்த யுத்த ஏற்பாடுகளைச் செய்து வந்திருக்கிறான். நமது ஒற்றர்கள் எப்படியோ ஏமாந்து போயிருக்கிறார்கள். நமது எல்லைக் காவல் படைகளைப் புலிகேசியின் ராட்சத சைனியம் வெகு சீக்கிரத்தில் முறியடித்து விட்டு அதிவேகமாக முன்னேறி வருகிறதாம். அந்தச் சைனியத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு வேண்டிய படை பலம் தற்போது நம்மிடம் இல்லை. ஆங்காங்குள்ள நம் படைகள் பின்வாங்கி வந்துகொண்டிருக்கின்றன, பல்லவ ராஜ்யத்துக்கு வந்திருக்கும் அபாயம் மிகப் பெரியது. ஆனாலும் நெற்றிக் கண்ணைத் திறந்து திரிபுரத்தை எரித்த பினாகபாணியின் அருளினால் முடிவில் நமக்குத்தான் வெற்றி கிடைக்கப் போகிறது அதைப் பற்றி சந்தேகம் வேண்டியதில்லை!"

தந்தை பேசி முடிக்கும் வரையில் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்த நரசிம்மர், "அப்பா! பல்லவ சைனியம் பின் வாங்கி வருகிறதா? இது என்ன அவமானம்? இப்போது எனக்கு அனுமதி கொடுங்கள். அப்பா! நம்மிடம் தற்சமயம் ஆயத்தமாயிருக்கும் படைகளை அழைத்துக் கொண்டு புறப்படுகிறேன்!" என்றார். "பொறு நரசிம்மா, பொறு! பல்லவ சைனியத்தை நீ நடத்திச் செல்லும்படியான காலம் வரும். அது வரையில் பொறுமையுடன் நான் சொல்வதைக் கேட்டு நட, இன்றிரவு ஒரு முக்கியமான வேலை இருக்கிறது என்னுடன் வருகிறாயா?" "கேட்க வேண்டுமா? வருகிறேன், அப்பா." "தேவி! நரசிம்மனை இன்று முதல் நான் 'குழந்தை'யாக நடத்தப் போவதில்லை; சகாவாகவே நடத்தப்போகிறேன். மந்திராலோசனைகளில் கலந்துகொள்ளும் உரிமையையும் இன்று முதல் அவனுக்கு அளிக்கிறேன். நீயும் இனிமேல் அவனைக் 'குழந்தை' என்று அழைக்க வேண்டாம்!" என்றார் சக்கரவர்த்தி. புவனமகாதேவியைப் படுப்பதற்குப் போகச் சொல்லி விட்டுத் தந்தையும் மகனும் அரண்மனையிலிருந்து வௌியேறிச் சென்றார்கள்.
 
ஒன்பதாம் அத்தியாயம்

விடுதலை

கயிற்றின் வழியாக மேலே ஏறிய பரஞ்சோதி கூரையை அணுகியபோது, இரண்டு இரும்புக் கரங்கள் தன் புயங்களைப் பிடித்து மேலே தூக்கிவிடுவதை உணர்ந்தான். மறுகணமே தான் மேற்கூரையில் நிற்பதையும், தனக்கு எதிரில், "பேச வேண்டாம்" என்பதற்கு அறிகுறியாக உதட்டில் ஒற்றை விரலை வைத்துக் கொண்டு புத்த பிக்ஷு நிற்பதையும் பார்த்தான். அவருக்குப் பின்னால் இன்னொரு இளம் புத்த சந்நியாசி நிற்பதும் தெரிந்தது. பெரிய பிக்ஷு ஜாடை காட்டியவுடன் இளம் புத்தன் கயிற்றை மேலே இழுத்துச் சுருட்டி ஒரு காவித் துணிக்குள் அதை வைத்துக் கட்டினான். பரஞ்சோதி கூரைமேல் நின்ற வண்ணம் சுற்றும் முற்றும் பார்த்தபோது, கண்ணுக்கெட்டிய தூரம் காஞ்சி நகரத்து மாட மாளிகைகளின் உப்பரிகைகள் வெண்ணிலாவில் தாவள்யமாய்ப் பிரகாசித்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.

இதற்குள் பெரிய பிக்ஷுவானவர் சிறைச்சாலை கூரையின் துவாரத்தை ஓடுகளைப் பரப்பி அடைத்துவிட்டு, பரஞ்சோதியை ஒரு விரலால் தொட்டுத் தம் பின்னால் வரும்படி சமிக்ஞை செய்தார். அவரைப் பின்தொடர்ந்து பரஞ்சோதியும் இளம் பிக்ஷுவும் ஓட்டுக் கூரைகளின் மேலேயும், நிலா மாடங்கள் மண்டபங்களின் மேலேயும் ஓசைப்படாமல் மெதுவாக நடந்து சென்றார்கள். வீதியில் ஏதாவது சந்தடி கேட்டால் புத்த புக்ஷு உடனே தம் பின்னால் வருவோருக்கு ஜாடை காட்டி விட்டு உட்கார்ந்து கொள்வார். சந்தடி நீங்கிய பிறகு எழுந்து நடப்பார். இவ்விதம், ஏழெட்டு கட்டிடங்களை மேற்கூரை வழியாகக் கடந்த பிறகு, ஒரு வீட்டின் முகப்பில் வீதி ஓரத்தில் பன்னீர் மரங்கள் அடர்த்தியாக வளர்ந்திருந்த இடத்துக்கு வந்தார்கள்.

பன்னீர் மரங்களின் அடர்ந்த பசிய இலைகளுக்கு இடை இடையே கொத்துக் கொத்தாகப் பூத்திருந்த பன்னீர் மலர்கள் வெண்ணிலாவில் வெள்ளி மலர்களாகப் பிரகாசித்தன. அம்மலர்களின் சுகந்த பரிமளத்தை இளந்தென்றல் நாலாபக்கமும் பரப்பிக் கொண்டிருந்தது. புத்த பிக்ஷு வீதியை இரு புறமும் நன்றாகப் பார்த்து விட்டு, அந்தப் பன்னீர் மரங்களில் ஒன்றைப் பிடித்துக் கொண்டு கீழே இறங்கினார். பரஞ்சோதியும் இளம் பிக்ஷுவும் அவ்விதமே இறங்கினார்கள். சிறிது தூரம் நடந்து கோயிலைப் போல் அமைந்த ஓர் அழகிய கட்டிடத்தின் வாசலை அடைந்தார்கள். அந்தக் கட்டிடந்தான் காஞ்சி நகருக்குள்ளிருந்த புத்த விஹாரங்களுக்குள் மிகப் பெரியது. 'இராஜ விஹாரம்' என்று பெயர் பெற்றது. கருணாமூர்த்தியான புத்த பகவானின் திருப் பற்களில் ஒன்று அந்தக் கோயிலின் கர்ப்பக் கிருஹத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது.

பல்லவ மன்னர்கள் அவ்வப்போது ஒவ்வொரு மதத்தில் பற்றுடையவர்களாயிருந்தாலும், எல்லா மதங்களையும் சம நோக்குடன் பார்த்து அந்தந்த மத ஸ்தாபனங்களுக்கு மானியம் விடுவது வழக்கம். அவ்விதம் இராஜாங்கமானியத்தைப் பெற்றது இராஜ விஹாரம். அன்றியும், காஞ்சியில் சில பெரும் செல்வர்கள் பௌத்த சமயிகளாயிருந்தார்கள். அவர்களில் ஒருவனான தனதாஸன் என்னும் வியாபாரி தன்னுடைய ஏகபுத்திரன் வியாதியாய்க் கிடந்தபோது, "பிள்ளை பிழைத்தால் இராஜ விஹாரத்தைப் புதுபித்துத் தருவேனாக" என்று வேண்டுதல் செய்து கொண்டான். பிள்ளை பிழைக்கவே, ஏராளாமான பொருட்செலவு செய்து விஹாரத்தைப் புதுப்பித்தான்.

தாவள்யமான முத்துச் சுண்ணாம்பு பூசப்பட்டிருந்த இராஜ விஹாரம் வெண்ணிலாவில் அழகின் வடிவமாக விளங்கிற்று. அதைப் பார்த்ததும் பரஞ்சோதி, "ஆஹா! என்ன அழகான கோயில்!" என்று கூவினான். புத்த பிக்ஷு சட்டென்று நின்று அவனுடைய வாயைப் பொத்தினார். அச்சமயம் அவர்கள் பன்னீர் மரங்களின் நிழலைத் தாண்டி இராஜ விஹாரத்துக்கு எதிரில் திறந்த வௌிக்கு வந்திருந்தார்கள். அதே சமயத்தில் இராஜ விஹாரத்துக்கு எதிர் வரிசையிலிருந்த கட்டிடங்களின் இருண்ட நிழலிலிருந்து இரண்டு வெண் புரவிகள் வௌிப்பட்டு வந்தன. அவற்றின் மீது இரண்டு வீரர்கள் காணப்பட்டார்கள். ஒருவர் நடுப்பிராயத்தினர், இன்னொருவர் வாலிபர். இருவரும் பெரிய முண்டாசு கட்டியிருந்தார்கள்.

இரண்டு குதிரைகளும் இராஜ விஹாரத்தை நெருங்கி வந்தன. வீரர்களில் பெரியவன், "புத்தம் சரணம் கச்சாமி!" என்றான். இளம் பிக்ஷு, "தர்மம் சரணம் கச்சாமி!" என்றார். "அடிகளே! இரவு இரண்டாம் ஜாமத்துக்கு மேல் யாரும் வௌியில் கிளம்பக் கூடாது என்று தெரியுமோ?" என்றான் முதிய வீரன். "தெரியும்; ஆனால் சந்நியாசிக்கும் அந்தக் கட்டளை உண்டு என்பது தெரியாது" என்றார் பிக்ஷு. "இந்த அர்த்தராத்திரியில் எங்கே கிளம்பினீர்களோ?" "இந்தப் பிள்ளை என்னுடைய சிஷ்யன், காஞ்சிக்குப் புதியவன்; காணாமல் போய்விட்டான் அவனைத் தேடிப் பிடித்து அழைத்து வந்தேன். "இந்த வாலிபனுக்கு எந்த ஊரோ?" "சோழ நாட்டில் செங்காட்டங்குடி." "இன்றைக்குத்தான் இருவரும் வந்தீர்களாக்கும்!" "ஆம், ஐயா!" "தங்கள் திருநாமம் என்னவோ!" "நாகநந்தி என்பார்கள்." "இனிமேல் நள்ளிரவில் கிளம்ப வேண்டாம், சுவாமி! சிஷ்யப் பிள்ளையிடமும் சொல்லி வையுங்கள்."

வீரர்கள் குதிரைகளைத் தட்டி விட்டுக் கொண்டு போனபிறகு மூவரும் இராஜ விஹாரத்துக்குள் பிரவேசித்தார்கள், அவர்கள் உள்ளே நுழைந்ததும் இராஜ விஹாரத்தின் வௌிக் கதவு சாத்தப்பட்டது. உள்ளே வெகு தூரத்தில் கர்ப்பக்கிருஹம் தீப வரிசைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்ததைப் பரஞ்சோதி பிரமிப்புடன் பார்த்துக் கொண்டு நின்றான். உள்ளேயிருந்து வந்துகொண்டிருந்த அகிற் புகையின் வாசனை அவனுடைய தலையைக் கிறுகிறுக்கச் செய்தது. புத்த பிக்ஷு அவனுடைய தலையைத் தொட்டு, "பிள்ளாய்! எப்பேர்ப்பட்ட ஆபத்து உனக்கு வந்தது! புத்த பகவானுடைய கருணையினால் தப்பினாய்!" என்றார். பரஞ்சோதி அவரை ஏறிட்டுப் பார்த்து, "அடிகளே! எந்த ஆபத்தைச் சொல்லுகிறீர்கள்?" என்று கேட்டான். "பெரிய ஆபத்து! இந்த விஹாரத்தின் வாசலிலேயே வந்தது. குதிரை மேல் வந்தவர்கள் யார் தெரியுமா?" "எனக்கு எப்படித் தெரியும், சுவாமி? காஞ்சிக்கு நான் புதிதாயிற்றே!" பிக்ஷு பரஞ்சோதியின் காதோடு, "மகேந்திர சக்கரவர்த்தியும், அவருடைய மகன் மாமல்ல நரசிம்மனுந்தான்!" என்றார். பரஞ்சோதிக்கு உண்மையிலேயே தூக்கி வாரிப்போட்டது. "நிஜமாகவா?" என்று வியப்புடன் கேட்டான். "ஆம்! இருவரும் மாறுவேடம் பூண்டு நகர் சுற்றக் கிளம்பியிருக்கிறார்கள். வேஷம் தரிப்பதில் மகேந்திர பல்லவருக்கு இணையானவர் இந்தப் பரத கண்டத்திலேயே இல்லை." பரஞ்சோதி சிறிது நேரம் ஆச்சரியக் கடலில் மூழ்கியிருந்து விட்டு, "அவர்களால் எனக்கு என்ன ஆபத்து?" என்று கேட்டான்.

புத்த பிக்ஷு ஒரு கேலிச் சிரிப்புச் சிரித்தார். "என்ன ஆபத்து என்றா கேட்கிறாய்? யானை மீது வேல் எறிந்த பிள்ளை நீதான் என்று அவர்களுக்குத் தெரிந்தால் நீ பிழைப்பது துர்லபம். அந்தச் சக்கரவர்த்திக்கு குமாரன் இருக்கிறானே, அவன் எப்பேர்ப்பட்டவன் தெரியுமா? இந்தப் பூமண்டலத்தில் தன்னைவிடப் பலசாலியோ, வீரனோ ஒருவனும் இருக்கக் கூடாது என்பது அவனுடைய எண்ணம். அப்படி யாராவது இருந்தால் அவனுடன் மல்யுத்தம் செய்து தோல்வியடைய வேண்டும்; இல்லாவிடில், யமனுலகம் போகவேண்டியதுதான்!" "சண்டை என்று வந்தால் நான் பின்வாங்க மாட்டேன் அடிகளே! சக்கரவர்த்தி குமாரனாகவே இருக்கட்டும்! யாராய்த்தான் இருக்கட்டும்!" என்றான் பரஞ்சோதி. "தெரியும் தம்பி! நீ இப்படிப்பட்ட வீரனாயிருப்பதனாலேதான் உனக்கு ஆபத்து அதிகம்; நீ வேலை எறிந்ததனாலேதான் கோயில் யானைக்கு மதம் பிடித்தது என்று பொய்க் குற்றம் சாட்டி உன்னைத் தண்டித்து விடுவார்கள்.

பரஞ்சோதிக்கு நெஞ்சில் 'சுருக்'கென்றது சுமைதாங்கியில் படுத்திருந்தபோது யாரோ பேசிக்கொண்டு போனது ஞாபகம் வந்தது. நாகநந்தியின் வார்த்தைகளில் இதுவரை நம்பிக்கையில்லாதவனுக்கு இப்போது கொஞ்சம் நம்பிக்கை உண்டாயிற்று. "அப்படிப்பட்ட அநியாயமும் உண்டா?" என்றான். பரஞ்சோதி! இந்தக் காஞ்சி பல்லவர்களின் குலத்தொழிலே அதுதான். இன்றைக்கு நூற்றைம்பது வருஷங்களுக்கு முன்னால் உன்னைப் போலவே கல்வி பயில்வதற்காக, மயூரசன்மன் என்னும் இளைஞன் இந்த நகருக்கு வந்தான். அவனுடைய வீரத்தைக் கண்டு அசூயை கொண்ட பல்லவ இராஜகுமாரன் அவன்மேல் பொய்க் குற்றம் சாட்டிச் சிறையில் அடைத்துவிட்டான்..." "அப்புறம்?" "மயூரசன்மன் சிறையிலிருந்து தப்பிக் கொண்டு போய்க் கிருஷ்ணா நதிக்கரையில் தனி ராஜ்யம் ஸ்தாபித்துக் கொண்டு, பல்லவர்களைப் பழிக்குப் பழி வாங்கினான். புத்த பகவான் அருளால் மயூரசன்மனைப் போலவே நீயும் பெரும் ஆபத்திலிருந்து தப்பினாய்!..."

பரஞ்சோதி அப்போது குறுக்கிட்டு, "அடிகளே! மற்ற ஆபத்துக்கள் ஒருபுறமிருக்கட்டும். இப்போது எனக்குப் பசி என்கிற ஆபத்துத்தான் பெரிய ஆபத்தாயிருக்கிறது! பசியினாலேயே பிராணன் போய்விடும் போலிருக்கிறது!" என்றான். நாகநந்தி அவனை மடப்பள்ளிக்கு அழைத்துச் சென்று உணவு அருந்துவித்தார். பிறகு ஒரு மண்டபத்தின் தாழ்வாரத்துக்கு அவனை அழைத்து வந்து, "பரஞ்சோதி இங்கே படுத்துக்கொள்; தூங்குவதற்கு ஒரு முகூர்த்த காலம் கொடுக்கிறேன். நிம்மதியாகத் தூங்கு உனக்கு வந்த ஆபத்து இன்னும் முழுவதும் நீங்கிவிடவில்லை. பொழுது விடிவதற்குள்ளே நாம் கோட்டையை விட்டுப் போய்விடவேண்டும்" என்றார். பரஞ்சோதி அப்படியே அந்த மண்டபத்தின் தளத்தில் சாய்ந்தான். அடுத்த நிமிஷமே நித்திராதேவி அவனை ஆட்கொண்டாள்.
 
பத்தாம் அத்தியாயம்

கண்கட்டு மாயம்

பரஞ்சோதி தரையில் படுத்தவுடனே கண்ணயர்ந்தான். ஆயினும், அவன் நல்ல தூக்கம் தூங்கினான் என்று சொல்வதற்கில்லை. ஏதேதோ பயங்கர துர்க்கனவுகள் தோன்றித் தூக்கத்தைக் கெடுத்தன. ஒரு சமயம் ஐந்தாறு புத்த பிக்ஷுக்கள் வந்து அவனைச் சூழ்ந்து நின்றார்கள். அவர்களில் ஒருவர் தம் கையிலிருந்த தீபத்தைத் தூக்கிப் பரஞ்சோதியின் முகத்தில் வௌிச்சம் விழும்படி பிடித்தார். "ஆமாம்! நாகநந்தி சொல்வது சரிதான் இவன் முகத்தில் அபூர்வமான களையிருக்கிறது. இவன் மகாவீரன் ஆவான்! அல்லது மகாத்மா ஆவான்!" என்று யாரோ ஒருவர் சொன்னது போலிருந்தது.

இன்னொரு சமயம் அவனை ஒரு மதயானை துரத்திக் கொண்டு வருகிறது. பரஞ்சோதி சட்டென்று ஒரு பன்னீர் மரத்தின் மேல் ஏறிக்கொள்கிறான். புஷ்பக் கொத்துடன் கூடிய ஒரு பன்னீர்க் கிளையை ஒடித்து யானையின் மேல் போடுகிறான். அச்சமயம் திடீரென்று இரு குதிரை வீரர்கள் தோன்றி, "அடப்பாவி! கோயில் யானையைக் கொன்று விட்டாயா?" என்று கூவிக் கொண்டே தங்கள் கையிலிருந்த வேல்களை அவன்மீது எறிகிறார்கள்! மற்றும் ஒரு பயங்கரக் கனவு! நாகநந்தியடிகள் வந்து அவன் பக்கத்தில் நின்று அவனுடைய முகத்தை உற்றுப் பார்க்கிறார். அப்படி பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவருடைய முகமானது படமெடுத்தாடும் பாம்பின் முகமாக மாறுகிறது! அந்தப் பாம்பு அதனுடைய மெல்லிய பிளவுபட்ட நாவை நீட்டி அவனுடைய முகத்தைத் தீண்ட வருகிறது!

பரஞ்சோதி அலறிப் புடைத்துக்கொண்டு எழுந்திருந்தான். பார்த்தால், நாகநந்தி அடிகள் உண்மையாகவே அவன் அருகில் நின்று அவனைக் குனிந்து பார்த்துக் கொண்டிருந்தார். "பிள்ளாய்! ஏன் இப்படிப் பயப்படுகிறாய்? ஏதாவது துர்க்கனவு கண்டாயா?" என்று பிக்ஷு கேட்டார். பரஞ்சோதி, "இல்லை, இல்லை, ஒன்றுமில்லை நீங்கள் திடீரென்று தொடவே கொஞ்சம் திடுக்கிட்டேன்" என்றான். "பொழுது விடிய இன்னும் ஒரு முகூர்த்தந்தான் இருக்கிறது. புறப்படு, போகலாம்! பொழுது விடிவதற்குள் இந்தக் கோட்டையைக் கடந்துபோய்விட வேண்டும்." "ஏன் சுவாமி?" "புத்த தேவருடைய ஆக்ஞை!" "யாருக்கு?" "எனக்குத்தான் உன்னை அபாயத்திலிருந்து தப்புவிக்கும்படி ஆக்ஞை. என்னிடம் உனக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லையா?" என்று நாகநந்தி பரிவு ததும்பிய குரலில் கேட்டார். பரஞ்சோதி மௌனமாயிருந்தான்.

"போகட்டும், இன்னும் ஒரே ஒரு முகூர்த்த காலம் இரவு கழிந்து பொழுது விடியும்வரையில் நான் சொல்கிறதைக் கேள். புத்த தேவருடைய கட்டளையை நான் நிறைவேற்றி விடுகிறேன். கோட்டைக்கு வௌியே உன்னைக் கொண்டு போய் விட்டுவிடுகிறேன் அப்புறம் உன் இஷ்டம்போல் செய்." கனிந்த குரலில் கூறிய இந்த வேண்டுகோளைப் பரஞ்சோதியினால் மறுக்க முடியவில்லை. "ஆகட்டும், அடிகளே!" என்றான். "அப்படியானால் இன்னும் ஒரு முகூர்த்த காலம் என்னிடம் நம்பிக்கை வைத்து நான் சொன்னபடி கேட்பாயல்லவா!" "கேட்கிறேன்". "உன்னுடைய கண்களைக் கட்டி இவ்விடமிருந்து அழைத்துப் போகவேண்டியதாயிருந்தால்?" பரஞ்சோதி ஒரு நிமிஷம் திகைத்து நின்றுவிட்டு, "எப்படியானாலும் சரி" என்றான்.

உடனே, நாகநந்தி அடிகள் ஒரு சிறு துண்டை எடுத்துப் பரஞ்சோதியின் கண்களைச் சுற்றிக் கட்டினார். "பிள்ளாய்! என் கையைப் பிடித்துக் கொண்டே வர வேண்டும். நான் சொல்கிற வரையில் கண்ணின் கட்டை அவிழ்க்கக் கூடாது. இப்போது நீ என்னிடம் காட்டும் நம்பிக்கையின் பலனை ஒருநாள் அவசியம் தெரிந்து கொள்வாய்!" இவ்விதம் கூறிப் பரஞ்சோதியின் கரத்தைப் பிடித்துக் கொண்டு, நாகநந்தி நடக்கத் தொடங்கினார். பரஞ்சோதியின் நெஞ்சு 'படக் படக்' என்று அடித்துக்கொண்டது. ஆயினும், அவன் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு பிக்ஷுவைப் பின்பற்றி நடந்தான்.

முதலில், புத்த விஹாரத்தின் வாசல் வழியாக வௌியேறுவது போலப் பரஞ்சோதிக்குத் தோன்றிற்று. பின்னர், வீதியோடு நடந்து போவதாகத் தோன்றிற்று. பன்னீர் புஷ்பங்களின் வாசனையிலிருந்து அன்று முன்னிரவில் மேல் மாடத்திலிருந்து வீதியில் இறங்கிய இடமாக இருக்கலாமென்று ஊகித்துக் கொண்டான். இன்னும் சிறிது தூரம் நடந்த பிறகு, போகும் திசை மாறியது. சற்று நேரத்துக்கெல்லாம் மீண்டும் பன்னீர்ப் பூவின் நறுமணம். "வந்த வழியே திரும்பிப் போகிறோமா, என்ன? ஆ! இந்தப் பொல்லாத பிக்ஷு எனக்கு வழி அடையாளம் தெரியாமலிருப்பதற்காக இப்படி இழுத்தடிக்கிறார் போலும்!" என்று பரஞ்சோதி எண்ணிக் கொண்டான்.

மறுபடியும் ஒரு கட்டிடத்துக்குள் பிரவேசிப்பது போலிருந்தது. அகிற் புகையின் மணத்திலிருந்து, "இது இராஜ விஹாரந்தான்' என்று பரஞ்சோதி தீர்மானித்தான். பிறகு சிறிது நேரம் இருளடைந்த குகைகளின் வழியாகச் சுற்றிச் சுற்றி வருவது போல் தோன்றியது. கண்ணைக் கட்டியிருந்தபடியால் வெகு நேரம் முடிவேயில்லாமல் நடந்து கொண்டிருப்பதாகப்பட்டது. "அடிகளே! இன்னும் எத்தனை நேரம் இவ்விதம் கண் கட்டு வித்தை செய்ய வேண்டும்?" என்று பரஞ்சோதி கேட்டான். "பிள்ளாய்! கிட்டத்தட்ட வந்துவிட்டோம் இன்னும் கொஞ்சம் பொறு!" என்றார் பிக்ஷு.

திடீரென்று இருட்டிலிருந்து வௌிச்சத்துக்கு வந்துவிட்டதாகப் பரஞ்சோதி உணர்ந்தான். "பரஞ்சோதி! நாம் வரவேண்டிய இடத்துக்கு வந்து விட்டோம். கண்கட்டுச் சோதனை முடிந்தது" என்று சொல்லிக் கொண்டே அடிகள் கட்டை அவிழ்த்தார். புத்த பகவான் அருளால் சொர்க்கலோகத்துக்கே வந்து விட்டோமோ என்று பரஞ்சோதிக்குத் தோன்றியது. அவன் கண் முன்னால் அத்தகைய சௌந்தர்யக் காட்சி தென்பட்டது. அகழி நீரில் அஸ்தமன சந்திரனின் வெள்ளிக்கிரணங்கள் படிந்து, உருக்கிய வெள்ளி ஓடையாகச் செய்து கொண்டிருந்தன. அகழிக்கப்பால் மரங்கள் அடர்ந்த வனப் பிரதேசம் காணப்பட்டது. மரங்களின் உச்சியில் சந்திர கிரணங்கள் இலைகளின் மீது தவழ்ந்து விளையாடின. அகழியில் ஒரு படகு மிதந்தது, பரஞ்சோதியைச் சிறை மீட்க உதவி செய்த இளம் பிக்ஷு கையில் துடுப்புடன் படகில் நின்றார்.

பெரிய பிக்ஷுவும் பரஞ்சோதியும் அகழியண்டை போய் படகில் ஏறினார்கள் படகு நகர்ந்தது. "இந்த அகழியைத் தாண்டப் படகு என்னத்திற்கு? எளிதில் நீந்திக் கடந்து விடலாமே?" என்றான் பரஞ்சோதி. "ஆம்; நீந்தத் தெரிந்தவர்கள் நீந்தலாம்." "இந்த அகழியினால் கோட்டைப் பாதுகாப்புக்குத்தான் என்ன பிரயோஜனம்? எதிரிகள் வந்தால் சுலபமாய் நீந்திவிடமாட்டார்களா?" "அதோ பார்!" என்றார் பிக்ஷு, சற்றுத் தூரத்தில் ஒரு முதலை பயங்கரமாக வாயைத் திறந்தது. "ஐயோ!" என்றான் பரஞ்சோதி. "இம்மாதிரி நூற்றுக்கணக்கான முதலைகள் இந்த அகழியில் இருக்கின்றன. சாதாரண காலங்களில் அங்கங்கே இரும்புக் கூண்டுகளில் அடைத்து வைத்திருப்பார்கள். யுத்த காலங்களில் திறந்து விட்டுவிடுவார்கள். நேற்று இரவு திறந்து விட்டிருக்கிறார்கள்." "அப்படியானால், யுத்தம் வருவது நிஜந்தானா? சுவாமி!" "பின் எதற்காக இவ்வளவு அமர்க்களமெல்லாம் என்று நினைத்தாய்!" என்றார் பிக்ஷு. பரஞ்சோதி மௌனமாயிருந்தான். படகு அகழியின் அக்கரையை அடைந்தது.
 

New Threads

Top Bottom