- Messages
- 79
- Reaction score
- 149
- Points
- 33
அத்தியாயம் 6
அன்று கோடை விடுமுறை முடிந்து அனைவரும் பள்ளிக்கு திரும்பவும் வரும் நாள். தமிழினி இரண்டு வருடங்களாக உற்சாகமாய் சென்றாள். ஆனால், இன்றோ அவளுக்கு பள்ளிக்கு செல்வதற்க்கு ஏனோ மனம் ஒப்பவில்லை.
காரணம் தெரிந்தது தானே, அமுதன் இனிமேல் வரமாட்டான் என்பதால் சோகமாகவே இருந்தாள். பள்ளிக்கு கிளம்பி நடந்து செல்லும் வழியில், அன்று அமுதன் அவளிடம் வந்து கேட்டது அவளுக்கு திரும்பவும் நினைவுக்கு வந்தது.
அப்பொழுது தமிழினி மாடுகளுக்கு கழனித் தண்ணீரை குடிக்க கலந்து கொண்டிருந்தாள். அமுதன் ஓடி வருவதைப் பார்த்தாள்.
மூச்சிரைக்க ஓடி வந்தவன், “தமிழு.. தமிழு..” என்றான்.
“ஏண்டா நண்பா, இப்படி ஓடி வர.? என்ன விஷயம்.?” என்று அவனைப் பார்த்துக் கேட்டாள்.
“உன்கிட்ட.... கொஞ்சம்... பேசணும்..” என்று அவனுக்கு இன்னும் மூச்சு வாங்கிக்கொண்டிருக்க.
“இரு.. நீ முதல்ல தண்ணி குடி வா..” என்று சொன்னவள், கைகளைக் கழுவிக்கொண்டு அவனை அழைத்துக்கொண்டு போய் திண்ணையில் அமர வைத்தாள்.
உள்ளே சென்றவள், அவன் குடிக்க தண்ணீரை எடுத்துக் கொண்டு வந்து தந்தாள். அதை வாங்கி மடக், மடக்கென்று குடித்தவன், தன்னை சிறிது ஆசுவாசப்படுத்திக்கொண்டிருந்தான். அவனிடம் சொம்பை வாங்கி வைத்தவள்,
“இப்போ சொல்லு டா நண்பா..” என்றாள்.
“தமிழு.. எங்க அத்த ஊர்ல இருந்து வந்திருக்காங்க. என்னை அவங்க கூட கூட்டிட்டு போறாங்களாம். அங்கயே என்னை பள்ளிக்கூடத்துல சேர்த்து விடறாங்கன்னு அப்பாகிட்ட சொல்லியிருக்காங்க. அப்பாகிட்ட கேட்டேன், அவர் உன் இஷ்டம். நீயே முடிவெடுன்னு சொல்றார். நான் இப்போ என்ன பண்றது தமிழு.? எனக்கு உன்னை, அப்பாவ, நம்ம ஊர விட்டுட்டு போக மனசே இல்ல. எனக்கு இங்க இருக்கறதுதான் பிடிச்சிருக்கு. ஆனா, அத்த கேட்க மாட்டங்க. அப்பாதான் நீ அங்க போய் இருந்துட்டு அப்பறமா அவங்க கிட்ட பேசுன்னு சொல்றார். நான் என்ன பண்ணட்டும்.?” என்றான் பாவமாக.
அமுதனை நினைக்கையில் பாவமாய் இருந்தது தமிழினிக்கு. சிறிது நேரம் யோசித்தவள், “அய்யா சொல்றதுதான் சரி. நீ அங்க போயிட்டு உனக்கு என்ன தோணுதோ அதையே செய். நீ எந்த முடிவெடுத்தாலும் எனக்கு சரிதான் நண்பா.” என்றாள் சிரித்துக்கொண்டே.
“எனக்கு உன்னை நினைச்சா தான் பாவமா இருக்கு தமிழு. நான் மட்டும் தான் உனக்கு ஃப்ரெண்டா இருக்கேன். வேற யாருமே உன்கிட்ட பேசமாட்டிங்கறாங்க. நானும் அங்க போயிட்டா, நீ என்ன பண்ணுவ.?” என்று வெள்ளந்தியாய் கேட்ட அமுதனை நினைத்து அவளுக்கு உள்ளுக்குள் அழுகையே வந்தது. ஆனால், அதை வெளிப்படுத்தினால் எங்கே அவன் செல்ல மாட்டானோ என்று நினைத்தவள்,
“இல்லடா நண்பா. இப்போ கொஞ்சம் பேரு என்கிட்ட நல்லா தான் பேசறாங்க. விளையாடறாங்க. நான் சமாளிச்சுக்குவேன். நீ நல்லபடியா போயிட்டு வா. நீ இங்க வந்தா நாம் ரெண்டு பேரும் பார்க்கலாம். சரியா.?” என்று அவனை சமாதானப்படுத்தும் நோக்கில் பேசினாள்.
“சரி, தமிழு. நான் அங்க போயிட்டு சொல்றேன். நீ பார்த்து இரு. அம்மா, அப்பாவப் பார்த்துக்கோ. எங்க அப்பாவையும் பார்த்துக்கோ. அப்பா, நான் இல்லைன்னா ரொம்ப கஷ்டப்படுவார்.” என்று கண்கள் கலங்கினான்.
“டேய்.. எதுக்கு டா அழுகுற. நான் அய்யாவ பார்த்துக்கறேன். நீ பத்திரமா போயிட்டு வா.. நல்லா படி. என்னை மறந்துடாத டா நண்பா..” என்று அவளும் சற்று கண்கள் கலங்க,
“அப்படியெல்லாம் சொல்லாத தமிழு. என்னோட சிறந்த தோழி நீதான். உன்னை எப்படி நான் மறப்பேன். நான் இங்க வந்தா கண்டிப்பா உன்னைப் பார்க்க வரேன்.” என்றான்.
“சரிடா நண்பா..” என்று முதன் முறை பேசிய போது செய்தவாறே, தலையை ஒருபுறமாய் ஆட்டிச் சிரித்தாள் தமிழினி.
அதைப் பார்த்ததும் அமுதன் சிரித்துவிட்டான். அவளும் சிரித்து அவனை வழியனுப்பினாள். அதை நினைத்துப் பார்த்துக்கொண்டே பள்ளிக்கு வந்து சேர்ந்தாள்.
மூன்றாம் வகுப்பில் இருந்த அனைவரும், இப்போது அப்படியே நான்காம் வகுப்புக்கு சென்றிருந்தனர். அனைத்து பிள்ளைகளும் அவர்வர் இடத்திலேயே மாறாமல் அமர்ந்திருக்க, அவள் எப்போதும் அமரும் கடைசி பென்ச்சில் சென்று அமருவதற்க்காக குனிந்து கொண்டே வந்தவள், அங்கே இன்னொரு பை இருப்பதைப் பார்த்தாள்.
நிமிர்ந்தவளுக்கு ஆச்சர்யம், அமுதன் அங்கே சிரித்துக்கொண்டே அமர்ந்திருந்தான். “தமிழு..” என்றான். தமிழினிக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.
தான் அணிந்திருந்த பள்ளிப்பையை அவசரமாகக் கழட்டியவள், “டேய் நண்பா.. வந்துட்டியா.? எப்போ வந்த.? அங்கயே பள்ளிக்கூடத்துல சேர்ந்துடுவேன்னு சொன்ன.?” என்றாள்.
“ஆமா, தமிழு..” என்று அவன் சொல்ல ஆரம்பிக்கும் போதே, “டிங்டிங்டிங்டிங்டிங்...” என்று மணி ஒலிக்க, அனைவரும் காலை பிரார்த்தனைக்கு ஓடினர்.
“சரி வா போலாம். மணி அடிச்சிடுச்சு. நான் உனக்கு சாயங்காலம் சொல்றேன்.” என்று சொல்ல, இருவரும் சேர்ந்து சென்றனர். எப்படியோ அவன் வந்துவிட்டான் என்ற உற்சாகமும், சந்தோஷமும் அவள் முகத்தில் நன்றாகவே தெரிந்தது.
அன்று உற்சாகமாய் முதல் நாள் பள்ளி வகுப்பை ஆரம்பித்தனர். புதிதாய் ஒரு ஆசிரியை வந்திருந்தார் வகுப்புக்கு.
“வணக்கம் பசங்களா, நான் தான் உங்களோட வகுப்பு ஆசிரியை வடிவுக்கரசி. நான் இப்போதான் புதுசா உங்க பள்ளியில் சேர்ந்திருக்கேன். உங்களுக்கு பாட்த்துல ஏதாவது சந்தேகம் இருந்தா கண்டிப்பா என்கிட்ட தைரியமா கேட்கலாம். நான் எதுவும் சொல்ல மாட்டேன். நீங்க என்னப் பார்த்து பயப்படத் தேவையில்ல. உங்களுக்கு நிறைய விஷயங்கள தினமும் கத்துக் கொடுப்பேன். நீங்க எல்லாரும் என்ன பண்ணனும்னா அதை தினமும், வீட்டுக்குப் போய் படிக்கணும். சரியா..” என்று அவர் சொல்ல,
அனைத்து பிள்ளைகளும் ஒன்று சேர, “சரிங்க டீச்சர்..” என்று கத்தினர்.
“சரி.. எனக்கு ஒவ்வொருத்தரா உங்கள அறிமுகப்படுத்திக்கோங்க. அப்போதான, நான் உங்கள பேர் சொல்லிக் கூப்பிட முடியும்.” என்று அவர் சொல்ல, அவர் பேசும் விதம் அனைவருக்கும் பிடித்துப் போனது.
ஒவ்வொருவராய் ஆரம்பித்து சொல்லி முடிக்க, கடைசி பென்ச்சில் இருந்த அமுதனும், தமிழினியும் அவர்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர்.
“நீங்க ரெண்டு பேர் மட்டும் ஏன் தனியா உட்கார்ந்து இருக்கீங்க.? நீ பொண்ணுங்க இருக்கற இடத்துலயும், நீ பசங்க இருக்கற இடத்துலயும் தான உட்காரணும்.?” என்று தன் கேள்வியை முன் வைத்தார் அவர்களிடம்.
அமுதன் எழுந்து நின்று, “இல்ல டீச்சர். இவ கிட்ட யாருமே பேசமாட்டாங்க, உட்காரமாட்டாங்க. அவ பாவம் தானே டீச்சர். எங்க அப்பாதான் இனிமேல் நீ அவகூட தான் உட்காரணும்னு சொன்னார். அதானால தான் டீச்சர் அவ கூட உட்கார்ந்திருக்கேன்.” என்றான்.
அப்போதுதான், அழகேசன் அவரிடம் தமிழினியைப் பற்றி கூறியது நினைவுக்கு வந்தது. “நீ தான் அழகேசன் வாத்தியாரோட பையனா.?” என்றார் அவர்.
“ஆமாங்க டீச்சர்.” என்றான் அமுதன் கைகளைக் கட்டிக்கொண்டு பவ்யமாக.
“இங்க பாருங்க, பள்ளிக்கூடத்துக்கு வந்துட்டா, நீங்க எல்லாரும் ஒண்ணுன்னு நினைக்கனும். கூட படிக்கற எல்லா பிள்ளைங்களையும் ஒண்ணாதான் பார்க்கணும். அப்பா, அம்மா சொல்றாங்கன்னு யாரையும் ஒதுக்கி வைக்கக் கூடாது. சில சமயம் அம்மா, அப்பா கூட தப்பு பண்ணுவாங்க. அதனால, நீங்க எல்லாருமே தமிழினி கூட நல்ல ஃப்ரெண்ட்ஸ் ஆ இருக்கணும். சரியா.. நீங்க யார் யாரெல்லாம் அவ கூட ஃப்ரெண்ட் ஆகறீங்களோ அவங்களுக்கு ஒரு பரிசு குடுப்பேன். இப்போ பாருங்க, அமுதன் தான் முதல்ல என்கிட்ட இருந்து பரிசு வாங்கப் போறான். இங்க வா அமுதன். நீயும் வா தமிழினி.” என்று அவர்களை அழைத்தவர் இருவரையும் கைகள் கொடுத்து குலுக்கச் சொன்னார். பிறகு, இருவருக்கும் தன் பையில் வைத்திருந்த ஒவ்வொரு லெட் பேனாவை அளித்தார்.
“எல்லாரும் இப்போ அமுதனுக்கு கைத்தட்டுங்க.” என்று சொல்ல, அனைவரும் கைத்தட்டினர்.
“அவன் தான் தமிழினியோட முதல் ஃப்ரெண்ட். இதே போல யாரு யாரெல்லாம் தமிழினிகிட்ட தினமும் கைக்கொடுத்து ஃப்ரெண்ட் ஆகறீங்களோ அவங்களுக்கும் இதே மாதிரி பரிசு கொடுப்பேன்.” என்று சொன்னதும், இந்த முறை பிள்ளைகள் அனைவரும் சொல்லாமலேயே கைத்தட்டினர். அவர் சிரித்தார். தமிழினியின் மனதில் அன்று முதல் வடிவுக்கரசி டீச்சர், எவரெஸ்ட் சிகரத்தைப் போல் உச்சியில் அமர்ந்து கொண்டார். தெய்வமாக நினைத்தாள் அவரை.
அவரிடம், “ரொம்ப நன்றி டீச்சர்..” என்று கண்கள் கலங்க சொன்னவளின் கண்களைத் துடைத்து விட்டு, அவளைத் தழுவிக் கொண்டார். இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை அவளும், எந்தப் பிள்ளைகளும். அதே போல், அனைத்தையும் வெளியே நின்று பார்த்துக் கொண்டிருந்தார் அழகேசன்.
இது அனைத்துமே, அவர் சொல்லியே வடிவுக்கரசி செய்தார். தமிழினியை இன்றும் அனைவரும் ஒதுக்கி வைப்பதற்க்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றே இந்த ஆண்டு முடிவெடுத்திருந்தார். புதிதாக வந்த வடிவுக்கரசியோ மிக எளிமையாகவும், நன்றாகவும் பேசவே இவர்களைப் பற்றி அவர் சொன்னார். அப்போதே, அவரும் கண்டிப்பாக அவளுக்கு உறுதுணையாய் நிற்பேன் என்று வாக்களித்தார். அதன் படி இன்று பிள்ளையார் சுழி போடப்பட்டது.
மதிய உணவு வேளை முடிந்து வந்த போது, சில மாணவர்கள் புத்தகங்களை கொண்டு வந்து ஓரமாய் வைத்தபடி இருந்தனர். அனைவருக்கும் புதிய புத்தகங்கள் அளிக்கப்பட்டது. அனைவரும் புதிய புத்தகத்தின் வாசனையை உணர்ந்தவாறே, ஆவலுடன் ஒவ்வொரு பக்கங்களாய் பார்த்துக்கொண்டிருந்தனர்.
அனைவரின் பெயரையும் அவர் எழுதிக்கொள்ளச் சொல்ல, பென்சிலில் பெயரை எழுதிக்கொண்டனர். என்னென்ன நோட்டுகள் வாங்க வேண்டுமென்று போர்டில் எழுதினார் வடிவுக்கரசி. வழக்கம் போல் அமுதன் மட்டுமே எழுதிக்கொண்டான். ஏனென்றால், அதை எப்பொழுதுமே வாங்கிக்கொடுப்பது அழகேசன் தான்.
முதல் வகுப்பில் ஆரம்பித்து, இப்போது வரை அழகேசன் தான் தமிழினிக்கு நோட்டுகள் வாங்கிக் கொடுத்தது. அதனால், அமுதன் தான் அனைத்தையும் எழுதிக்கொள்வான். அதை முன்னரே ரங்காவிடமும், கோகிலாவிடமும் சொல்லிவிட்டார்.
அவர்கள் ஒத்துக்கொண்ட பிறகே, அவர் அவளுக்கு எல்லாம் செய்தார். பள்ளிக்கு அவள் போடும் சீருடை முதற் கொண்டு, பள்ளிக்குத் தேவையான பொருட்கள், பள்ளிக்கு கொண்டு செல்லும் பை, என்று அனைத்தையுமே இரண்டாகவே வாங்கி விடுவார் அழகேசன்.
தன்னால் முடிந்தது என்று அவரால் இயன்ற உதவிகளை அவளுக்கென்று செய்து வந்தார். இப்போது, வடிவுக்கரசியும் அவளுக்கென்று உதவி செய்ய முன் வந்ததைக் கண்டு அவள் மிகவும் சந்தோஷப்பட்டாள்.
இருவரும் பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது, இருவரும் அன்று நடந்தவைகளை இருவரும் அசை போட்டபடி நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போதுதான் நினைவு வந்தவளாய் தமிழினி கேட்டாள், “டேய் நண்பா என்னதான் ஆச்சு.? அத்தை எப்படி உன்னை அனுப்பினாங்க.?” என்று கேட்க,
அமுதனோ, “நான் வீட்டுக்குப் போயிட்டு துணி மாத்திட்டு தோப்புக்கு வரேன். அங்க உட்கார்ந்து நாம் ஜாலியா பேசலாம். சரியா.?” என்றான் ரகசியத்துடன்.
“ஹூம்ம். ஏண்டா, இப்பவே சொன்னா ஆகாதா.? தோப்புக்கு போய் தான் சொல்லுவியா.?” என்று அவனைத் திட்டிக் கொண்டே அடிக்க வர, அவன் ஓடியே விட்டான்.
“டேய்ய்.. நில்லுடா எருமை..” என்று கோபத்தில் விடும் மிருக வார்த்தைகளை உபயோகித்தாள்.
அவன் தயாராகி தோப்புக்கு வந்து விட்டான். அவளும் ஒரு கரும்பு கட்டையை எடுத்துக்கொண்டே தயாராக வந்தாள்.
“எதுக்கு தமிழு, இந்தக் காஞ்ச கரும்பு கட்டை.? ஏதாவது புலியோ, நரியோ வந்துடும்னு எடுத்துட்டு வந்தியா.?” என்றான்.
“ம்ம்.. வாடா. உனக்காகத்தான் எடுத்துட்டு வந்தேன். அப்போ ஓடிட்ட இல்ல. அதான் எடுத்து வந்தேன் உன்னை அடிக்க.” என்று அவள் அதை வைத்து ஓங்க, அவன் அதை பிடுங்கிக் கொண்டான்.
“டேய். குடுத்துடு. இல்ல, அய்யாகிட்ட சொல்லிடுவேன்.” என்றாள் மிரட்டலாக.
அவனோ சிரித்துக்கொண்டே சென்று ஒரு பக்கமாய் அமர்ந்து கொண்டு கொக்கனித்தான். அவள் அவனை முறைத்தாள்.
“தமிழு நான் அங்க நடந்தத சொல்லட்டுமா.?” என்றதும், அவள் சிலுப்பிக்கொண்டே திரும்பினாள்.
“ஏய்.. கோச்சுக்காத தமிழு. நான் உனக்காகத்தான் வந்துட்டேன் தெரியுமா.? ஆனா, நீ கோவிச்சுக்கற.?” என்றான் பாவமாக.
கொஞ்சம் சமாதானமாய், “சரிடா சொல்லு.” என்றாள்.
அமுதன் நடந்ததை விவரித்தான். அங்கே சென்று இருந்த மூன்று நாட்கள் மட்டுமே அவனுக்கு எப்பொழுதும் போல் இருந்தன. அதன் பிறகு ஒவ்வொருவரும் ஒவ்வொரு தடவை அவனிடம் நடந்து கொண்டவை அவனுக்குப் புதிதாய் தெரிந்தன.
அத்தை அவரது வேலையாக இருப்பார். அமுதனும், கோலாவும் இதுவரை பக்கத்து வீட்டுப் பிள்ளைகளோடு விளையாடுவர். குமாரசாமியோ, பெரிய பசங்களோடு கிரிக்கெட் விளையாடக் கிளம்பி விடுவான்.
இந்த முறை அமுதன் அங்கே உள்ள பெண் பிள்ளைகளோடு விளையாடுவதைப் பார்த்தால், கோலாகலம் அந்தப் பிள்ளைகளை அடித்து விடுவது, கிள்ளி விடுவது, என்று ஒரே ரகளையானது. அமுதனுக்கு வெளியே போய் விளையாட முடியாமல் போனது.
கோலாவோ, அவளோடு மட்டுமே விளையாட வேண்டும் என்று சொல்ல, அவனுக்கு அவளைப் பிடிக்கமலே போனது. அவளோடு பேசவே இல்லை. அவள் அழுது, ஆர்ப்பாட்டம் செய்து வீட்டில் உள்ள அனைவரிடமும் சொல்ல, பெரியவர்களோ நன்றாகவே அமுதனைத் திட்டி விட்டனர்.
“எங்க கோலாவையே நீ வேணாம்னு சொல்றியா. உனக்கு எவ்வளவு திமிர் இருக்கும்.? உன்னையெல்லாம் வைச்சிருக்க வேண்டிய இடத்துல வைச்சிருக்கனும். உன்னைக் கூட்டிட்டு வந்தாள்ல அவள சொல்லணும்.” என்று நடேசனின் அம்மா சொல்ல அமுதன் அழுதே விட்டான்.
விசாலாட்சி சமாதானம் செய்தும் அவன் அதை கண்டுகொள்ளவே இல்லை. அவனுக்கு உடனே ஊருக்கு வந்து விட வேண்டும் போல் இருந்தது. அன்று முழுக்க, யாருடனும் பேசாமல், சாப்பிடாமல் இருந்தான்.
(தொடரும்...)
வார்த்தைகளின் எண்ணிக்கை : 1280
உங்களின் விமர்சனங்களை கீழே உள்ள லிங்கில் தரவும் நட்புக்களே,
தமிழுக்கு அமுதென்று பேர் - Comments
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏, வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை...
