- Messages
- 79
- Reaction score
- 149
- Points
- 33
அத்தியாயம் 16
மாரியைப் பற்றி அழகேசன் அமுதனிடம் சொல்லிக்கொண்டிருக்க, மாரியே அவ்விடம் வந்துவிட்டாள்.
“ஏண்டா தம்பி, என்னைப் பத்திக் கேட்டிருந்தா நானே சொல்லிருப்பேனே. அத மாமாகிட்ட தான் கேட்பியா.? என்னப் பத்தி தெரிஞ்சுக்கிட்டு நீ என்ன பண்ணப் போற.?” என்று மாரி ஒரு பார்வையோடு அமுதனைப் பார்த்தாள்.
“அட, சும்மா உன்னப்பத்தி தெரிஞ்சுக்கணும்னு நினைச்சு என்கிட்ட கேட்டான். நானும் சொல்லிட்டிருந்தேன் மாரி. அதுக்கேன் நீ அவன முறைக்கற.?” என்றார் அழகேசன்.
“நான் முறைக்கறேனா.? ஏண்டா தம்பி, என்னோட பார்வை என்ன அப்படியா இருக்கு.?” என்று திரும்பவும் அவள் அமுதனைப் பார்த்துக் கேட்க, அவன் சிரித்துக்கொண்டே ஆமாம் என்று தலையாட்டினான்.
“டேய்.. பயலே, நிஜமா நான் என்ன பேய் மாதிரி பயமுறுத்துறேனா.?” என்றாள் மாரி.
“இல்ல அக்கா, மாத்தி சொல்லிட்டீங்க. நீங்க கோபத்துல இருக்கற காளி மாதிரி இருக்கீங்க.” என்று அவன் அவளைக் கேலி செய்ய,
“என்னது, காளியா.? ம்ஹூம்ம்.. காளிக்கு கோபம் வந்தா என்னாகும்னு தெரியுமா.? கோபத்துல உலகத்தையே ரெண்டாக்கிடுவா.? அதே மாதிரி தப்பு பண்ற அரக்கர்கள கால்லயே மிதிச்சி கொல்லுவா. இப்போ நீ தப்பு பண்ணிட்ட. அதனால, உன்ன என்ன பண்றேன் பார்.” என்றபடி தன் கையில் வைத்திருந்த பனம்பழம் மற்றும் சிறு கத்தியுடன், கண்களில் கோபம் தெரியுமாறு அகல விரித்துக் காட்டி அவனை பயமுறுத்தியதோடு, அவனைத் துரத்தினாள்.
“அய்யோ.. அக்கா, தெரியாம சொல்லிட்டேன். மன்னிச்சு என்னை விட்டுடுங்க.” என்று சொல்லிக்கொண்டே தென்னந்தோப்பு முழுக்க சுற்றினான். அவளும் இவன் ஓடும் பக்கமெல்லாம் துரத்தினாள்.
அதைப் பார்த்து அழகேசனும், தமிழினியும் விழுந்து விழுந்து சிரித்தனர். ஒரு வழியாக முடியாமல் சோர்ந்து ஒரு பக்கமாய் விழுந்த அமுதனைத் தூக்கி நிறுத்தி, “இனிமேல் இந்த மாதிரி பேசுவியா.? சொல்லு.. சொல்லு.?” என்று கையில் இருந்த கத்தியைக் காட்டி மிரட்டினாள் மாரி.
நிஜமாகவே காளியைக் கண்டது போல மிரண்டிருந்த அமுதனோ, “மாட்டேன். மாட்டேன்..” என்று நடுங்கிக்கொண்டே நின்றான்.
“ம்ம்ம்.. கொஞ்சமாவது பயம் இருக்கணும் என் மேல. இந்தா பனம்பழம் சாப்பிடு.” என்று அவனிடம் நீட்டினாள்.
அவனும், அதை வாங்கிக்கொண்டான். அதைப் பார்த்த அழகேசன், “மாரிக்கு ஒருத்தரப் புடிச்சிருச்சுன்னா, இப்படித்தான் நல்லா அவங்ககூட விளையாடுவா, அவங்களுக்காக எல்லாத்தையுமே பண்ணுவா.” என்று தமிழினியிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.
அவளும், அதைக் கேட்டவாறு மாரியைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அன்று முழுவதும், மாரியின் ஆவேசமான முகம் பார்த்து அமுதன் அவளிடம் சிறிது விலகியே இருந்தான். அதையும் மாரி கவனித்து விட்டாள்.
இரவு உணவு அருந்தும் போது கூட, தலையைக் குனிந்தவாறு அவன் இருந்ததைப் பார்த்து அவனைக் கேலி செய்தாள்.
“ஏண்டா, பயலே ரொம்ப பயந்துட்டியா.? நான் சும்மா விளையாட்டுக்குத்தாண்டா பண்ணேன். நீ என்ன இவ்ளோ பயந்தாங்கொள்ளியா இருக்க.? இதுல நீ வக்கீலாகப் போறன்னு வேற தமிழ் சொன்னா.?” என்று சொல்ல, அமுதன் உடனே நிமிர்ந்து தமிழினியைப் பார்த்தான். சைகையிலேயே அவளை முறைத்தான்.
“என் பேரன நீ இப்படியா பயமுறுத்துவ.? உனக்கு ரொம்பத்தான் கொழுப்பு.” என்று மாரியின் தலையில் குட்டினார் கமலம்.
“ம்ம்.. பாட்டி, என்னை எதுக்கு குட்டுறீங்க.? நான் தான் விளையாட்டுக்குப் பண்ணேன்னு சொல்றேன்ல. ஆம்பளப் பையன் இதுக்கெல்லாம் பயப்பட்டா முடியுமா.? இன்னும், எவ்ளோ பார்க்க வேண்டியிருக்கு. தைரியமா இருக்கணும்ல.” என்றாள்.
மாரியின் வாயை எவ்வாறு அடக்க வேண்டும் என்று தெரிந்த தாத்தா, “சரி மாரி. நீ வேணும்னா ஒண்ணு பண்ணு. பேசாம நம்ம ஊர் கராத்தே மாஸ்டர் கிட்ட இவனக் கூட்டிட்டு போ. இங்க இருக்கற வரைக்கும் எல்லா வித்தையும் கத்துக்கிட்டு தைரியமான பையனா வரட்டும்.” என்று சொன்னார்.
தாத்தா அப்படிச் சொன்னதுமே, மாரியின் முகம் மாறிப்போனது. சாப்பிட்டும், சாப்பிடாமல் எழுந்தாள். அதை அனைவருமே கவனித்தனர்.
உடனே கமலம் பாட்டி, “ஏங்க, நீங்க சும்மாவே இருக்க மாட்டீங்களா.? அவகிட்ட எதைப் பேசணுமோ, அதைப் பேசுங்க. தேவையில்லாததெல்லாம் பேசாதீங்க.” என்றபடி உள்ளே சென்றார்.
அப்போதைக்கு அதை அழகேசன் என்னவென்று கேட்காமல் விட்டாலும், அவருடைய அப்பா, இரவு வெளியே கட்டில் போட்டு படுத்திருக்கும் போது மெல்ல வந்து கேட்டார்.
“அப்பா, நான் சாப்பிடும் போதே இதைப் பத்தி கேட்கணும்னு நினைச்சேன். என்னாச்சு, மாரிக்கு.? நீங்க ஏதோ கராத்தே மாஸ்டர்னு சொன்னதுமே அவ ஏன் எழுந்திருச்சுப் போயிட்டா.? யார் அது.?” என்றார் அழகேசன்.
“அதுவா, அது இந்த ஒரு வருஷமாவே நடந்துட்டிருக்க கதை தான். அந்தக் கராத்தே மாஸ்டரா இருக்கற பையன் இந்த ஊருக்கு வந்து ரெண்டு வருஷமாகுது. பேரு சாமிநாதன். திண்டுக்கல் சொந்த ஊர்ன்னு சொன்னான். அவங்க அம்மா ஊர் இதுதானாம். இங்க இருக்கற அம்மாவோட நிலங்களைப் பார்த்துட்டே, ஒருபுறம் தான் கத்துக்கிட்ட கராத்தேவ சொல்லிக் கொடுக்கறதுக்கு, ஒரு காராத்தே ஸ்கூல் வைச்சு நடத்திட்டிருக்கான். ஒரு வருஷமா மாரியை அங்க, இங்க பார்த்து புடிச்சுப் போய், கடைசியா எங்ககிட்டயே வந்து அவளைக் கல்யாணம் பண்ணிக் கொடுங்கன்னு கேட்டான். ரொம்ப தைரியம் பா உனக்குன்னு நினைச்சிட்டு அவகிட்ட கேட்டா, அவ மூஞ்சில அடிக்காத குறையா அவனப் புடிக்கலன்னு சொல்லி விரட்டிட்டா. எங்களுக்கே ஒரு மாதிரியா இருந்தது. விசாரிச்சதுல நல்ல பையன் தான்னு சொன்னா, கடைசில மாரிக்கு கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லையாம். கடைசி வரைக்கும் இப்படியே இருக்கப் போறாளாம். இது என்ன புதுக்கதையா இருக்குன்னு நாங்களும் அவகிட்ட என்னென்னமோ பேசிப் பார்த்தோம். அவ, கொஞ்சம் கூட ஒத்தே வரமாட்டிங்கறா. அவனோட பேச்ச எடுத்தாலே இப்படி தான், உடனே கோவிச்சுக்கிட்டுப் போயிடுவா. அடுத்த நாள் தான் சதாரணமா இருப்பா. எங்க ஆயுசு இன்னும் எத்தனை நாளுக்குன்னு தெரியாது. அவளுக்குன்னு ஒரு துணை அமைஞ்சுட்டா பரவால்லன்னு நானும், உங்க அம்மாவும் எப்பவும் பேசிக்கிட்டே தான் இருப்போம். ஆனா, என்ன செய்ய.? இவ எதுக்கும் பிடிகொடுக்க மாட்டீங்கறா.” என்று அவர் கவலையாகச் சொல்ல,
“அவளுக்கு மனசுல என்ன இருக்குன்னு தெரியாம நாம எதையும் முடிவு பண்ண முடியாது இல்ல பா. அவளுக்கு மனச விட்டு பேச யாராவது இருந்தா சொல்லுவா. அக்காவும் இல்ல. நீங்க பெரியவங்க. அதனால தான் அவ எதுவும் சொல்லாம இருப்பா. நீங்க எதுவும் கவலைப்பாடாதீங்க நான் மாரிகிட்ட பேசறேன்.” என்று ஆறுதல் வார்த்தைகளை உரைத்தார் அழகேசன்.
அவரும் நம்பிக்கையுடன் தலையை மட்டும் ஆட்டினார். அன்று இரவு அதோடு கழிந்து விட, அடுத்த நாள் விடியற்காலையிலேயே மாரி எழுந்து குளித்து முடித்து, சாமி கும்பிட்டு விட்டு வரும் போது, தமிழினி எழுந்து விட்டாள். அவளும் குளிக்கச் சென்று விட்டாள். அனைவரும் எழுந்து விட்ட நிலையில், அமுதன் மட்டும் இன்னும் எழுந்திரிக்காமல் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தான். அவனிடம் வந்தவள்,
“டேய்.. சோம்பேறிப் பயலே. இன்னும் எழுந்திருக்காம என்னடா பண்ணிட்டிருக்க.? உனக்கு இன்னும் விடியாம இருக்கா.? எழுந்திரி. மாமா, தாத்தாவெல்லாம் ஆத்துக்குப் போயிருக்காங்க. போ, நீயும் போயிட்டு வா.” என்று அதட்டியபடி எழுப்பிக் கொண்டிருந்தாள்.
அதற்க்குள் குளித்து முடித்து அங்கே வந்த தமிழினி, “அக்கா, அவன் எப்பவும் 7 மணிக்கு மேல தான் எழுந்திருச்சு பழக்கம். அதனால தான் இன்னும் தூங்கிட்டிருக்கான்.” என்றாள்.
“இவன என்ன பண்றேன் பாரு.” என்றபடி ஒரு வாளி கிணற்றுத் தண்ணீரை எடுத்து வந்தாள். அவள் வரும் வேகத்தைப் பார்த்து, தமிழினி அவனை வேகவேகமாக எழுப்பினாள்.
“டேய்.. நண்பா எழுந்திரி. எழுந்திரி.. இல்லன்னா மாரி அக்கா உன் மேல தண்ணிய ஊத்திடுவாங்க.” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது சுதாரித்தவன், சட்டென கட்டிலை விட்டு எழுந்து விட்டான்.
அதற்க்குள் அங்கே வந்த மாரி அதை தவறி கட்டில் மேல் ஊற்றினாள். கொஞ்சம் ஏமாந்திருந்தால், அவன் மேலே ஊற்றி இருப்பாள். அமுதனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
மாரியோ மிகச் சாதாரணமாக நின்று கொண்டு சிரிக்க, அவன் அவளை முறைத்தவாறு அங்கிருந்து கிளம்பினான். ஆற்றுக்குச் சென்றான்.
கொள்ளை அழகில் அமராவதி ஆறு அமைதியாக ஓடிக்கொண்டிருக்க, அந்த ஊரில் உள்ள பாதி பேர் அந்த ஆற்றில் தான் குளித்துக்கொண்டிருந்தனர். அழகேசனையும், தாத்தவையும் தேடினான் அமுதன். அழகேசன் அவனைப் பார்த்துவிட்டு சைகை காண்பிக்க, அவன் அவர்களைப் பார்த்து அங்கே சென்றான்.
மாரியின் மேல் இருந்த கோபத்தில் வந்தவன், ஆற்றின் அழகில் தன்னை மறந்து ஆனந்தமாய்க் குளித்தான். அன்று அழகேசன் அவர்களிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.
“மாரி, பசங்கள இன்னைக்கு டேமுக்கு கூட்டிட்டுப் போயிட்டு வரியா.? அமுதா கேட்டுட்டே இருந்தான்.” என்று சொல்ல, அமுதனோ அழகேசனைப் பார்த்து விழித்தான்.
“அப்படியாடா தம்பி. டேமுக்குப் போலாமா.?” என்று அவனைப் பார்த்துக் கேட்டாள். அமுதனோ பேசாமல் அமைதியாய் இருக்க, “போலாம் கா. நாங்க ரெடி.” என்று தமிழினி சொல்ல, அமுதன் அவளையும் பார்த்து முறைத்தான். இதுவரை தமிழினியின் மேல் வராத கோபம் கூட வந்தது.
ஏனோ, அழகேசன் மாரியைப் பற்றி நல்லவிதமாகவே சொன்னாலும், அமுதனுக்கோ தன்னிடம் நடந்துகொள்ளும் விதத்தில் அவளைப் பிடிக்காமல் போனது.
அழகேசன் சொன்னதினால் மாரியுடனும், தமிழினியுடனும் கிளம்பினான் அமுதன். இருந்தாலும் பேசாமல் உம்மென்று வந்தான். தமிழினிக்கே அவனின் செயல் புதிதாகத் தெரிந்தது.
அவர்கள் பேருந்து நிறுத்தத்தில் நின்ற சில நிமிடங்களில் அணைக்கட்டுக்குச் செல்லும் பேருந்து வந்தது. சில இடங்கள் மட்டுமே அமருவதற்க்கு இருந்த நிலையில், அவர்கள் இருவரையும் இடம் பார்த்து அமரவைத்து விட்டு நின்றபடி வந்தாள் மாரி.
அப்போதுதான் பேசினாள் தமிழினி, “ஏண்டா நண்பா, எதுக்கு நீ இவ்ளோ கோபப்படற.? நானும், நேத்திலிருந்து பார்த்துட்டுத்தான் வரேன். என்ன பிரச்சினை உனக்கு.? அந்த அக்காவப் பார்த்தாலே முறைக்கற.? எழுந்து போயிடற.?” என்றாள்.
“ஆமா, எனக்கு அந்த அக்காவப் புடிக்கல. அப்பா என்னவோ நல்லவிதமாத்தான் எல்லாத்தையும் சொன்னார். ஆனா, அந்த அக்கா என்கிட்ட நடந்துக்கிறதப் பார்த்தயில்ல.? எனக்கு எரிச்சலா வருது. வந்ததில இருந்து என்னைக் கேலி பண்ணிட்டே இருக்காங்க. பயந்தாங்கோலின்னு சொல்றாங்க, தண்ணி எடுத்து என் மேலயே ஊத்த வராங்க. இதெல்லாம் பாத்தா யாருக்கு தான் கோபம் வராது.?” என்று அதுவரை அடக்கி வைத்திருந்த கோபத்தையெல்லாம் கொட்டினான்.
“டேய். இதெல்லாம் போய் பெருசா எடுத்துப்பியா.? அவங்க உன்னத் தம்பி மாதிரி நினைச்சு உன்கூட விளையாடறாங்க. அதுகூட உனக்குத் தெரியலையா.? நமக்கு கூடப்பிறந்தவங்கன்னு யாரும் கிடையாது, அந்த அக்காவுக்கும் அப்படித்தான். அதனால தான், நாம வந்ததும் நம்ம கூட விளையாடறாங்க. இது புரியாம நீ ஏண்டா நண்பா கோபப்படற.? நீ அந்த அக்கா மாதிரியே விளையாட்டா எடுத்துக்கிட்டா விளையாட்டு. நீ அதைப் பெரிய விஷயமா எடுத்துக்கிட்டா, என்ன பண்ண முடியும்.? இப்போ இல்லன்னாலும், சீக்கிரமே அந்த அக்காவப் பத்தி நீ புரிஞ்சுக்குவ பாரு.?” என்று அவளும் செல்லமாகக் கோபித்துக்கொண்டாள்.
இதுவரை அவனக்கு உயிர்த்தோழியாய் அனைத்திற்க்கும் அவனுக்காகப் பரிந்து பேசியவள், திடீரென்று மாரிக்காகப் பேசியதை அமுதனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சிறிது நேரம் இருவரும் எதுவும் பேசாமல் மௌனமாக வந்தனர். அதற்க்குள் அமராவதி அணைக்கான நிறுத்தம் வந்ததும், மாரி அவர்களைப் பார்த்து எழுந்து வருமாறு சைகை காட்ட, இருவரும் எழுந்து சென்றனர்.
அப்போதைய அமராவதி அணைக்கட்டு கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்தது. அங்கே உள்ள அணையில் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்க்காகவே அழகிய பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அங்கே நுழைந்துதான் அணைக்கட்டிற்க்குச் செல்ல வேண்டும். அதற்க்கு டிக்கட் எடுக்கப் போனாள் மாரி.
எடுத்துக்கொண்டு வரும் போது, அமராவதி அணையின் வரலாற்றைப் பற்றி சொல்ல ஆரம்பித்தாள்.
“இங்க பாருங்க பசங்களா, இந்த அணை தான் அமராவதி அணை. இது 1957-ஆம் வருஷம் காமராஜர் முதலமைச்சரா இருக்கும் போது கட்டுனது. திருமூர்த்திமலை அணையிலிருந்து வர, அமராவதி ஆறுக்கு குறுக்கால தான் இந்த அணையக் கட்டுனாங்க. அப்பல்லாம் இந்த அணை இல்லாதப்போ நிறைய வெள்ளம் வருமாம். அப்போவெல்லாம் நம்ம தாத்தாங்க பிறந்த காலம். அவங்களத் தூக்கிட்டு நடையா நடப்பாங்களாம். எங்க போறதுன்னு தெரியாம ரொம்ப கஷ்டப்பட்டாங்களாம். அப்போதான் கர்ம வீரர் காமராஜர் இந்த அணையைக் கட்ட ஏற்பாடு பண்ணாராம். அவர மாதிரி ஒரு முதலமைச்சர் நம்ம தமிழ்நாட்டுக்கு அப்போ கிடைக்க எல்லாரும் குடுத்து வைச்சிருக்கனும்.” என்றாள் மாரி.
அவளின் பேச்சை உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டே வந்தாள் தமிழினி. ஆனால், அமுதனோ எரிச்சலில் அமைதியாகவே பின்தொடர்ந்தான் அவர்களை.
“இந்த அணைய வெள்ளத்தக் கட்டுப்படுத்தறதுக்காக மட்டும் கட்டல. நம்ம விவசாயிங்களுக்கு தேவைப்படும்போது, தேவையான அளவு தண்ணீரை பாசனத்துக்காக திறந்து விடறது மூலமா சரியான விளைச்சலை நம்ம விவசாயிகளால பாக்க முடியும். அதுக்காகவும் தான் இதைக் கட்டினாங்க.” என்று சொல்லிக்கொண்டே அவர்களை அணைக்கு மேலே செல்லும் படிக்கட்டுகளுக்கு அழைத்துச் சென்றாள் மாரி.
“ம்ம். இங்க வாங்க பசங்களா. இங்கிருந்து பார்த்தா, அதோ அங்க தெரியுது பாரு அது என்ன மலைன்னு உங்களால யூகிக்க முடியுதா.?” என்று புதிர் போட்டாள்.
“ம்ம்ம்.. தெரியலையே அக்கா. நீங்களே சொல்லுங்க.” என்றாள் தமிழினி. அமுதனிடமிருந்து எந்த பதிலும் இல்லை.
“அது பழநி மலை. அதே மாதிரி இந்தப் பக்கம் தெரியுது பாருங்க அது ஆனைமலை பொள்ளாச்சியில இருக்குதே. அதுதான்.” என்றாள் மாரி.
“ஓ.. அப்படியா அக்கா.” என தமிழினி ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டே வந்தாள்.
“அதே மாதிரி, இங்க தமிழ்நாட்டுலயே முதலைகளுக்குன்னு இருக்கற ஒரு பண்ணை இங்க தான் இருக்கு. இந்திரா காந்தி வன-விலங்குகள் சரணாலயம் இங்க இருக்கு. நிறைய விலங்குகளைப் பார்க்கலாம்.” என்று அவர்களைக் கூட்டிக்கொண்டு அந்த சரணாலயத்துக்குள் நுழைந்து சுற்றிப் பார்த்தனர்.
அவர்களுடன் பேசாமல் வந்தாலும், அமுதனுக்கு கொஞ்சம் பொழுது போனது, மனது ஆறுதலாக இருந்தது. சுற்றிப் பார்த்தவர்களை அழைத்து வந்து, ஒரு மீன் கடையில், அப்போதுதான் அணையில் பிடித்து பொறித்த மீன் வறுவல் வாங்கித் தந்தாள். மீன் மிகவும் சுவையாக இருக்க, இருவரும் நன்றாகச் சாப்பிட்டனர். அதைப் பார்த்து ரசித்தாள் மாரி.
நன்றாக சுற்றிவிட்டு, மூவரும் பேருந்தில் பயணித்து வீடு வந்து சேர்ந்த போது, அங்கே விசாலாட்சி, குமரேசன், மற்றும் கோலாவும் வந்திருந்தனர். அதைப் பார்த்த அமுதனுக்கு இன்னும் பயமும், வெறுப்பும் அதிகமானது. அப்படியே அதிர்ச்சியில் நின்று கொண்டிருந்தவனைப் பார்த்தனர் மூவரும்.
(தொடரும்...)
வார்த்தைகளின் எண்ணிக்கை : 1389
உங்களின் விமர்சனங்களை கீழே உள்ள கமென்ட்ஸ் லிங்கில் தரவும் நட்புக்களே...
தமிழுக்கு அமுதென்று பேர் - Comments
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏, வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை...
