- Messages
- 79
- Reaction score
- 149
- Points
- 33
அத்தியாயம் 35
(தொடர்ச்சி...)
சரியாக ஒரு வருடம் கழித்து, பொள்ளாச்சி அரசு மருத்துவமனை பிரசவ அறை வளாகம். அமுதனும், வளையாபதியும் மாறி, மாறி நடந்துகொண்டிருந்தனர். இருவருக்குள்ளும் இரண்டு கவலைகள்.
ஒரே நேரத்தில் திருமணம், அதே போல் ஒரே நேரத்தில் தேனிலவு என்று அவர்கள் வாழ்வில் அனைத்தும் ஒன்றாய் நடக்க, அதைத் தொடந்து ஆண்டவனின் அருளால் ஐந்து மாதங்கள் கழித்து தமிழினியும், தேன்மொழியும் அதே மாதத்தில் குழந்தை ஆனதையும் உறுதிப்படுத்தி அசத்தினர்.
அவர்கள் அடைந்த சந்தோஷத்திற்க்கு அளவே இல்லை. “ஊர் கண் முழுக்க உங்க மேல தான்.” என்று அவர்கள் நால்வருக்கும் த்ருஷ்டி சுத்திப் போட்டார் கோகிலா. இதோ இப்போது ஒரே நாளில் இருவருக்கும் சொல்லி வைத்தது போல் வலி வந்திட, இருவரையும் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.
இருவரும் பதட்டமாய் இருப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த ரங்கா, “உள்ள இருக்கற அவங்களை விட, இவங்க ரெண்டு பேருடைய பதட்டம் தான் அதிகமா இருக்கு.” என்றார்.
“பின்ன இருக்காதா.? அமுதனுக்கு ஒரு பக்கம் மனைவி, ஒரு பக்கம் உயிர்த்தோழி. வளையாபதிக்கு மனைவியும், தங்கையும் ஒரே நேரத்துல பிரசவத்துக்கு இருக்காங்கன்னா யாரா இருந்தாலும் அந்தப் பதட்டம் இரட்டிப்பாத்தானே இருக்கும்.” என்றார் அழகேசன்.
“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. ரெண்டு பேரும் நல்ல படியா குழந்தைகளப் பெத்தெடுப்பாங்க. பயப்படாதீங்கப்பா.” என்று கோகிலா ஆறுதல் சொன்னாலும், அவர்கள் இருவருக்கும் உள்ளுக்குள் பதட்டம் அதிகமாகத்தான் இருந்தது.
அப்போது, குழந்தை அழும் சத்தம் கேட்டது. முதலில் யாருக்குப் பிறந்தது.? என்று தெரியவில்லை. பதட்டத்துடன் அனைவரும் இருக்க, அமுதனும், வளையாபதியும் பிரசவ அறையின் வாயிற் கதவருகேயே நின்று கொண்டு யாராவது ஏதாவது சொல்வார்களா.? என்று பார்த்துக்கொண்டிருந்தனர்.
அடுத்து பத்து நிமிடங்களில் இன்னொரு குழந்தை அழும் சத்தம். இப்போதும் யாருக்குப் பிறந்தது.? என்றும் தெரியவில்லை. அப்போது உள்ளிருந்து ஒரு நர்ஸ் வெளியே வந்து, “இதுல அமுதன் யாரு.?” என்று சொல்ல, அமுதன், “சொல்லுங்க..” என்றான்.
“உங்களுக்கு பையன் பிறந்திருக்கான். உங்க வைஃப் நல்லா இருக்காங்க. ம்ம்.. நீங்க தான் தமிழினியோட வீட்டுக்காரரா.?” என்று அவர் கேட்க, ஆமாம் என்று தலையாட்டினான் வளையாபதி.
“உங்களுக்கு பொண்ணு பிறந்திருக்கா. அவங்களும் நல்லா இருக்காங்க. இப்போ நார்மல் வார்ட்க்கு மாத்திடுவோம், குழந்தையை வந்து வாங்கிக்கங்க.” என்றார் நர்ஸ்.
அவர் சொல்லிவிட்டுப் போனதும், “மச்சான்..”, “மாமா..” என்றபடி அமுதனும், வளையாபதியும் ஒருவரையொருவர் கையைக் குலுக்கிக் கொண்டு கட்டிக்கொண்டனர். அழகேசன், ரங்கா-கோகிலா தம்பதியினர் கையைக் குவித்து கும்பிட்டபடி ஆண்டவனுக்கு நன்றி தெரிவித்தனர்.
குழந்தைகளை அவரவர் தந்தைகளின் கையில் தந்தனர். எடுத்துக்கொண்டு அவர்கள் இருவரையும் பார்க்கச் சென்றனர். நால்வரும் பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும், குழந்தைகளைக் கொஞ்சிக்கொண்டும் இருப்பதைப் பார்க்கக் கண் கோடி வேண்டும்.
அடுத்து, குழந்தைகளின் பெயர் சூட்டு விழா அவர்களின் திருமண விழா போலவே ஆரவாரத்துடன் ஆரம்பித்தது. அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தனர். அனைவருக்குள்ளும் என்ன பெயர் வைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு உண்டானது.
“டேய்.. தம்பி, உன் பையனுக்கு என்ன பேர செலக்ட் பண்ணி வைச்சிருக்க.? என் பொண்ணுகளைக் கூப்பிடற மாதிரி நண்டு, சிண்டுன்னா.?” என்று மாரி கேலி செய்தபடி கேட்க,
“அக்கா, அது நான் செல்லமா கூப்பிடறதுக்காக வைச்சது. அதப் போய் வைப்பேனா.? என் பையனுக்கு இப்போ இல்ல, எப்போவே நான் வைக்கணும்னு ஒரு பெயரை யோசிச்சு வைச்சிருந்தேன். அதையே தான் வைக்கப்போறேன்.” என்று ஆவலை எழுப்பினான் அமுதன்.
“ம்ம்.. ஏம்மா தமிழு நீ என்ன பேர் மா வைக்கப்போற.?” என்று அமுதனின் தாத்தா கேட்க,
“நானும், இந்தப் பெயரை முன்னாடியே யோசிச்சு வைச்சது தான். நான் சின்ன வயசுல இருந்தே கூப்பிடற ஒரு பேர்.” என்று அவளும் பதிலுக்கு அனைவருள்ளும் ஆவலை எழுப்பினாள்.
“சரி என்ன பேருன்னுதான் ரெண்டு பேரும் சொல்லுங்களேன்.” என்று அனைவரும் ஒன்று சேர கேட்க,
“அதை என்னோட மனைவி என் குழந்தையோட காதுல மூணு தடவை சொல்லுவா.” என்றான் அமுதன்.
அப்போதே தேன்மொழி, “தமிழ்.. தமிழ்.. தமிழ்...” என்று குழந்தையின் காதில் மூன்று முறை சொன்னாள்.
அதே போல் வளையாபதி தன் குழந்தையின் காதருகே சென்று, “அமுதா.. அமுதா.. அமுதா...” என்று சொன்னான்.
அனைவரும் கைத்தட்டி வாழ்த்து தெரிவித்தனர். ஆம், அவர்களின் நட்புக்கு மரியாதை தரும் விதமாக, அமுதன் தன் குழந்தைக்கு தமிழினியின் பெயரையும், தமிழினி தன் குழந்தைக்கு அமுதனின் பெயரையும் வைத்தார்கள்.
“ரொம்ப சந்தோஷமா இருக்கு. உங்க நட்புக்கு நீங்க ரெண்டு பேரும் எவ்வளவு மதிப்பு குடுக்குறீங்கன்னு இதுலயே தெரியுது. எப்பவும் இதே போல, எந்தக் குறைவும் இல்லாம, ஆண்டவன் அருளோட நீங்க ரெண்டு பேரும் உங்க குடும்பத்தோட சந்தோஷமா இருக்கணும்.” என்று பெரியவர் ஒருவர் வாழ்த்தினார்.
அனைவரின் வாழ்த்துக்களும் அதுவே. இப்போது அவர்கள் இருவரும் குழந்தைகளின் பெயரைக் காதில் சொன்னார்கள். அந்தப் பெயரை உச்சரிக்கும் போது ஒரு வித இனம் புரியா உணர்வு. அப்போதே, அமுதனும், தமிழினியும் ஒருவரையொருவர் சிரித்தபடி பார்த்துக்கொண்டனர். சிறிய வயதில் தாங்கள் பார்த்த அதே பார்வை. அதே போல் அங்கே அடுத்த தலைமுறைக்கான நட்புக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது.
“தமிழுக்கு அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ்
அந்த தமிழ் இன்பத் தமிழ்
எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்!”
உயிருக்கு நேர்!”
என்ற பாட்டுக்கு ஏற்றார்போல், கள்ளம், கபடமில்லா நட்பிற்க்கான இலக்கணம் படைத்த தமிழினியும், அமுதனும் என்றும் அதே நட்புடன் வாழ நாமும் வாழ்த்துவோம்.
(சுபம்)
வார்த்தைகளின் எண்ணிக்கை : 2268
வணக்கம் அன்பு உள்ளங்களே, வெற்றிகரமாக கதையை நிறைவு செய்து விட்டேன். வாசகர்களாகிய நீங்கள் தான் படித்து விட்டு உங்களின் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இதுவரை என் கதையோடு பயணித்த அன்பு உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். அதே போல், இந்தப் போட்டியில் எனக்கு வாய்ப்பளித்த நித்யா கார்த்திகன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
கதையின் கதாபாத்திரங்கள் அனைத்தும் உங்களின் இதயத்தில் நீங்கா நினைவாய் இருக்க வேண்டுகிறேன். என்றும் உங்களின் ஆதரவை எதிர்பார்க்கும்
ஆதிரை...