2.வல்லினம்
'ஏழைகளின் ஊட்டி' என்று அனைவராலும் அழைக்கப்படும் ஏலகிரி மலை, வேலூரின் மிக முக்கியமான கோடைவாசஸ்தலங்களில் ஒன்று. ஏலகிரியின் பதினான்கு கொண்டை ஊசி வளைவுகளை அடையும் முன்பு, அம்மலையடிவாரத்தில் அமைந்துள்ள சிறிய கிராமம் தான் பொன்னேரி. பொன்னேரியின் முகப்பில் அமைந்திருந்தது, எஸ்எஸ் கிளினிக் என்று அனைவராலும் அழைக்கப்படும் சிறிய அளவிலான மருத்துவமனை ஒன்று.
அவ்விடத்தில், சீரான இடைவெளியில் காற்று பலத்த வேகத்துடன் அடித்துக் கொண்டிருக்க, வெள்ளி நிற கீற்றாய் மின்னல் வெட்டிக் கொண்டிருந்தது. காற்றின் வேகத்தில் படபடத்து அடித்துக் கொண்டிருந்த அம்மருத்துவமனையின் சாளரத்தின் சத்தம் கேட்டு, தனது இருக்கையிலிருந்து எழுந்தாள் மருத்துவர் பிரகல்யா.
படபடத்த சாளரத்தை தன் தளிர் விரல்களால் பிடித்தவளோ, சன்னலின் கதவு, அடிக்காத வகையில் தடுப்பை மாட்டிக் கொண்டிருக்க, அவளது மணிக்கட்டை அலங்கரித்தது அவளது தந்தை வாங்கித் தந்த பிரத்யேக சில்வர் நிற கைக்கடிகாரம்.
சாளரத்திலிருந்து ஊடுருவி வந்த தென்றல், வஞ்சனை இல்லாமல் அவள் முகத்தை தீண்டிச் செல்ல, பெண்ணவளின் சுருள்சுருளான முடிகள் பின்னோக்கி நகர்ந்தது. கடிகாரத்தை தவிர்த்து விலையுயர்ந்த எவ்வித நகைகளும் அவளை அலங்கரிக்கவில்லை. கூர்மையான மூக்கில் மட்டும் சிறு வைர மூக்குத்தி கண்ணுக்கே புலப்படாமல் மின்னிக் கொண்டிருந்தது.
"ரமேஷ் அண்ணா." என்றவளின் அழைப்பில் பவ்யமாக வந்தார் நாற்பத்தைந்து வயது மிக்கவர். வந்தவரோ, "சொல்லுங்க பாப்பா?" என்றார் தன்மையாக.
"அண்ணா மழை வர்ற மாதிரி இருக்கு. நீங்க வேணா கிளம்பிக்கோங்க."
"இல்லை பாப்பா. உங்களை தனியா விட்டுட்டு, நான் எப்படி போவேன்?"
"அண்ணா பிரச்சினை இல்லை. நான் கார் ஓட்டிட்டு போயிடுவேன். இன்னும் அரை மணி நேரம் தான் இருப்பேன். அதுகுள்ள யாராவது எமெர்ஜென்சினு வந்தாங்கன்னா அப்போ நான் இல்லைனா கஷ்டமாகிடும். நீங்க போங்க அண்ணா." என்றவள் மென்புன்னகையுடன் கூறும்போதே, அவர்களது கிளினிக்கின் முன்பு ஒரு மகிழுந்து வந்து நின்றது.
ரமேஷ் வெளியே எட்டி பார்க்க, சின்னஞ்சிறு குழந்தையை தூக்கியபடி காரிலிருந்து இறங்கியிருந்தனர் இருவர். பார்த்ததுமே அவர்கள் குழந்தையின் பெற்றோர் எனத் தெரிந்துவிட, அவர்களுக்கு வழியை விட்டபடி நகர்ந்து நின்றுக் கொண்டார் ரமேஷ்.
"டாக்டர், எங்க குழந்தைக்கு என்னாச்சுனு பாருங்க? இன்னைக்கு சாயங்காலமிருந்தே வாந்தி எடுக்குறா. வயிறு வலினு வேற துடிக்குதுங்க குழந்தை. ரொம்ப பயமா இருக்குங்க." என்று பதட்டத்துடன் வெளிப்பட்டது குழந்தையுடைய தந்தையின் வார்த்தைகள்.
"பயப்படாதீங்க. இங்க படுக்க வைங்க." என்றவள் குழந்தையினை அங்கிருந்த மெத்தையில் படுக்க வைக்க உதவினாள்.
"குழந்தைக்கு எவ்வளவு வயசாகுது? என்ன சாப்டாங்க? உங்க சொந்த ஊரு என்ன?" என்றவள் ஒருபுறம் கேட்டுக்கொண்டே, மறுபுறம் குழந்தையை பரிசோதனை செய்துக் கொண்டிருந்தாள்.
"நாலு வயசாகுது டாக்டர். இன்னைக்கு எதுவுமே சரியா சாப்பிடலை டாக்டர். சொந்த ஊரு திருச்சி. ஏலகிரிக்கு சுற்றி பார்க்க வந்தோம்." என்று குழந்தையின் தந்தைக் கூறும்போதே, இடையில் புகுந்தார் அவரது மனைவி.
"நான் அப்போவே, சொன்னேன் கேட்டீங்களா? பெரியவங்க நமக்கே இந்த மலை பயணம் சேராது. சின்ன புள்ளைக்கு எப்படிங்க ஒத்துக்கும்?" என்று விசும்ப, தன் மனைவியை சமாளிக்க இயலாது பரிதவிப்போடு நின்றார் குழந்தையின் தந்தை.
அவர்களது உரையாடலை சிறுதலையசைப்புடன் கடந்தவள், "பயப்பட ஒண்ணும் இல்லை. நீங்க வொரி பண்ணிக்காதீங்க." என்று சொல்லிக்கொண்டே, "ரமேஷ் அண்ணா, விளக்கெண்ணை கொண்டு வாங்க." என்றாள். அடுத்த நிமிடமே, விளக்கெண்ணையைக் கொண்டு வந்துக் கொடுத்தார் ரமேஷ்.
எம்.பி.பி.எஸ் படித்த மருத்துவர், விளக்கெண்ணையை எதற்கு கேட்கிறார்? என்று குழப்பமாக பார்த்தது குழந்தையின் பெற்றோர் மட்டுமல்ல, வெளியே இருந்த இன்னொருவனும் தான்.
"பேபி, உங்க பேர் என்ன?" என்று குழந்தையின் தலையை ஆதரவாக வருடியவள் கேட்க, "தன்யா" என்று தனது மெல்லிய இதழ்களை பிரித்து அழுதுக்கொண்டே கூறியது குழந்தை.
"தன்யா பேபி ஸ்டராங்தானே. எழுந்து நில்லுங்க பார்ப்போம்." என்றவள், குழந்தை எழுந்து நிற்பதற்கு உதவிபுரிய, குழந்தையும் வலியுடனே எழுந்து நின்றது.
குழந்தை நின்றதும் குழந்தையின் துணியினை விலக்கியவள், வயிற்றினை தட்டி பார்த்தாள். அவள் சந்தேகித்தது போன்றே குடலிறக்கம் தான் என்று அறிந்துக் கொண்டவள், இரண்டு விரல்களில் விளக்கெண்ணெயை எடுத்தபடி குழந்தையின் வயிற்றில் நன்கு தேய்த்து விட்டாள். அதன்பின் மேலிருந்து கீழாக, வயிற்றின் இருபக்கத்திலும், நடுவிலும் மெதுவாக தட்டியவள், குழந்தையை தூக்கியபடி மூன்று முறை குதிக்க வைத்தாள்.
"டாக்டர் நீங்க என்ன பண்றீங்க? நீங்க உண்மையாவே டாக்டர் தானா?" என்று சற்றுக்கடிந்துக் கொண்டே கேட்டார் குழந்தையின் தந்தை.
அதற்கு மென் புன்னகை ஒன்றை பரிசளித்தவளோ, "பேரு பிரகல்யா, சென்னை மெடிக்கல் காலேஜ்ல எம்.பி.பி.எஸ் படிச்சேன். 2015 பேட்ஜ். விசாரிச்சுக்கோங்க. உண்மையாவே டாக்டாரா? இல்லையானு தெரிஞ்சிப்பீங்க?" என்றவளின் குரலில் எந்தவித நக்கலும் தெரியவில்லை. இயல்பிலேயே மென்மையான குணம் கொண்டவளுக்கு அவர்கள் மீது கோபம் கூட எழவில்லை.
"இல்லை டாக்டர். நீங்க ட்ரீட்மெண்ட் கொடுக்காமல், இப்படி பாட்டி வைத்தியம் மாதிரி பண்ணதும், பயமா இருக்கு?" என்று குழந்தையின் தந்தை கூறும்போதே, தன்யா தனது அழுகையை மெல்ல மெல்ல நிறுத்தியிருந்தாள்.
"அப்பா அம்மா இப்போ வயிறு வலிக்கலை." என்று ஆச்சரியத்துடன் தனது கண்களை உருட்டியபடிக் கூறியது குழந்தை. அதைக் கேட்ட பெற்றவர்கள் மகிழ்ச்சியுடன் பிரகல்யாவை காண, எவ்வித சலனமும் இன்றி புன்னகை புரிந்தாள் மருத்துவர் பிரகல்யா.
"சாதாரண குடலிறக்கம் தான். அதுக்கு பாட்டி வைத்தியத்தை விட சிறந்த ட்ரீட்மெண்ட் எதுவும் இல்ல. என்னைக்குமே, நம்ம முன்னோர்கள் சொன்ன விசயங்களை குறைத்து மதிப்பிடாதீங்க." என்றாள் சிறு முறுவலுடன்.
"சாரிங்க டாக்டர்." என்று இவர்கள் மன்னிப்பைக் கேட்க, வெளியே நின்றபடி அவளது செய்கைகள் ஒவ்வொன்றையுமே கவனித்துக் கொண்டிருந்தவனது உதடுகள் அன்னிச்சையாக, "இன்ட்ரெஸ்டிங்" என்று உதிர்க்க, அவனது கண்களோ அவளை ரசித்தது.
கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே....
கை நீட்டும் போது பாயும் மின்சாரமே...
உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்...
இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்......
என்றவனின் கைபேசியின் பாடல் ஒலிக்க, அழைப்பை ஏற்றவன் அங்கிருந்து நகர்ந்து சென்று பேசத் தொடங்கினான். அவனது கைபேசி ஒலியின் சத்ததில், சாளரத்தை நோக்கினாள் பிரகல்யா.
அவனது பின்பக்கம் மட்டுமே அவளது கண்களில் தென்பட, எஸ் - கிராஸ் என்றழைக்கப்படும் மாருதி காரின் மீது சாய்ந்தபடி பேசிக் கொண்டிருந்தான் அவன். அவனை உற்று ஒருமுறை பார்த்தவள், மீண்டும் திரும்பியபடி தன் வேலைகளை பார்க்க ஆரம்பித்தாள்.
"இதுல வாமிட் வராமல் இருக்க டேப்லெட் எழுதியிருக்கேன். நைட் சாப்பிட்ட பிறகு கொடுங்க." என்றவள் பணம் எதுவும் அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளவில்லை. பின் நன்றி கூறியவர்களோ குழந்தையை தூக்கிக்கொண்டு செல்ல, குழந்தையோ, பிரகல்யாவிற்கு பறக்கும் முத்தங்களை கொடுக்க, பதிலுக்கு பறக்கும் முத்தங்களை பரிசளித்தாள் பெண்ணவள்.
அந்நேரம் சரியாக போனை வைத்தபடி திரும்பி நின்றவனது கண்களில் அக்காட்சி விழ, தன் இதழ்பிரித்து சிரித்தவனது இதழ்கள், "பிரகல்யா." என்னும் அவளது பெயரை ஒருமுறை கூறிப்பார்த்தது.
பின் அவன் காரில் ஏறிக்கொள்ள, குழந்தையை அழைத்துக் கொண்டு வந்த பெற்றோர்களும் காரின் பின்புறம் ஏறிக் கொண்டனர்.
"ரொம்ப தாங்ஸ் சார். அவசரத்துக்கு ஹெல்ப் கேட்டதும் தவறாமல் அழைச்சுட்டு வந்தீங்க." என்று குழந்தையின் தந்தை அவனைக் கண்டு நன்றிகூற, சிறுபுன்னகை மட்டுமே பரிசளித்தான் அவன்.
அதன்பின்னர், எங்கு அவர்களை ஏற்றினானோ அதே இடத்தில் கொண்டு சென்று விட்டவன், மீண்டும் தனது காரினை ஏலகிரி நோக்கி செலுத்தினான். ஒவ்வொரு வளைவுகளிலும் மெதுவாக காரினை திருப்பியவனது கண்களில், பிரகல்யாவின் முகம் வந்து சென்றது. அகன்ற விழிகளின் அழுத்தமான பார்வையும், ஒப்பனைகள் எதுவுமில்லாத அவள் பூமுகமும், என்றுமே புன்னகையை சுமக்கும் இதழ்களிலிருந்து வெளிவரும் தேன்குரலும் அவன் கண்களில் ஆழமாக பதிய, அவனது உதடுகளில் சிறு முறுவல் துளிர்த்தது.
இப்படி ஒருவன் தன்னை நினைக்கிறான் என்று விசயம் அறியாத பேதையவளோ, கிளினிக்கிலிருந்து வெளியேறினாள். ரமேஷ் கதவினை பூட்டிக் கொண்டிருக்க, லேசாக சாரல் மழை பொழிய, வானத்தை அண்ணாந்து பார்த்தவளது முகத்தின் மீதே பட்டு சென்றது மழைதுளிகள்.
பின் காரில் ஏறிய பிரகல்யா, ரமேஷினை அவரது வீட்டில் இறக்கிவிட்டபடி, தனது வீட்டை நோக்கி பயணித்தாள். அரை மணி நேரப்பயணம் ஒருவழியாக முடிவடைந்திருக்க, காரை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நுழைந்திருந்தவளை, அவள் வருகைக்காகவே காத்திருந்த அவளின் அன்னையோ சிரித்த முகத்துடன் வரவேற்றார்.
அன்னையின் சிரித்த முகமே பலகதைகளை பேச, "குட் நைட்மா." என்று இருவரிகளில் கூறிவிட்டு நகரச் சென்றவளது பாதையை மறைத்து நின்றார் பெண்ணவளின் அன்னை சரஸ்வதி.
'தயாரா இரு பிரகல்யா. இன்னைக்கு அம்மா செம ஃபார்ம்ல தான் இருக்காங்க.' என்றவளின் உள்மனம் எச்சரிக்கை மணியை எழுப்பியிருந்தது.
"ஏன்டா பாப்பா ஏன் இவ்ளோ சீக்கிரமே வந்துட்டீங்க? பாருங்க மணி பத்துதானே ஆகுது. நாளைக்கு விடிஞ்சதும் வந்திருக்கலாமேடா பாப்பா." என்று அக்கறையாக வந்த அன்னையின் வார்த்தைகளில் தெரிந்த வஞ்சப்புகழ்ச்சி அணியினை உணராமல் இல்லை பிரகல்யா.
"சாரிமா..." என்றவளின் மன்னிப்பில் சற்று கோபத்தை குறைத்தாலும், தன் மகள்களின் மீது எண்ணற்ற அன்பைக் கொண்ட தாயுள்ளமோ,
"மன்னிப்பு மட்டும் கேட்டிடு. பிரகல்யாமா. அந்த காணங்காட்டு பக்கத்துல தான் கிளினிக் வைப்பனு பிடிவாதம் பிடிச்சதுகூட பரவாயில்லைடா. ஆனால் நேரமாகும் போது எல்லாம் எனக்கு பக்குபக்குனு இருக்கு. ஏழு மணிக்கு எல்லாம் வரலாம்ல, காலையில குட்மார்னிங்னு சொல்லிட்டு போறவதான், அடுத்து நைட்தான் உன்னை பார்க்க முடியுது. எனக்கு உன்னை நினைச்சு ரொம்ப கவலையா இருக்குடா பாப்பா." என்று கவலைக்கொண்டது அன்னையின் உள்ளம்.
அவர் திட்டினால் கூட தாங்கிக் கொள்வாள் பிரகல்யா. ஆனால் சரஸ்வதியின் கவலைதான் அவளை வெகுவாக தாக்கும். அதை சரியாக உணர்ந்தவர், அவளை அன்பால் திருத்த நினைக்க, எப்படி அன்னையை சமாளிப்பது என்று தீவிரமாக யோசித்து, தன் தங்கையை பற்றி பேசி சமாளித்துவிடுவாள் பிரகல்யா.
"என் செல்ல அம்மா. நான் சின்னகுழந்தை இல்லை. அதனால என்ன நினைச்சு கவலைப்படாதம்மா. உன் சின்ன பொண்ணு என்னைவிட, ஐந்து வயசு சின்னவளையே டிரக்கிங்லாம் போக அனுப்புற? பெரியவ என் மேல மட்டும் என்ன பயம்?" என்று தன் தங்கையை நினைத்துக் கொண்டே கேட்டாள்.
"அவ வாயுள்ள புள்ளைடி. அவளை பார்த்து நாலு பேரு தெறிச்சு ஓடாம இருந்தால் சரி. ஆனால் நீ அப்படி இல்லடா பாப்பா. அதட்டி பேசக்கூட உனக்கு வராது." என்றவர் கூறும்போதே அவ்விடம் வந்தார் பிரகல்யாவின் தந்தை சத்யராஜ்.
"பாப்பா வந்துட்டியாடா. போடா போய் சாப்பிடு. என்ன சரசு மசமசனு நின்னுட்டு இருக்க? பாப்பாக்கு சாப்பாடு எடுத்து வை." என்றவரது கைகள், பிரகல்யாவின் தலையை வருடிக் கொடுக்க, தன் தந்தையின் அன்பில் நெகிழ்ந்தவள், "டாடி" என்று கட்டிக் கொண்டாள்.
"ஏங்க நீங்களாவது எடுத்து சொல்வீங்கனு பார்த்தால், செல்லம் கொடுத்தே அவளை கெடுக்குறது நீங்க தாங்க. நல்ல அப்பா. நல்ல பொண்ணுங்க." என்றவரோ முகத்தை திருப்பிக் கொண்டு செல்ல, பிரகல்யாவோ தனது அன்னையைக் கண்டு கவலைக் கொண்டவள், தந்தையைக் கண்டு, "டாடி." என்றாள் தவிப்புடன்.
"அட பாப்பா. நீ போடா தங்கம். அம்மா உன் மேல இருக்க அக்கறையில சொல்லுறா. போய் சாப்பிட்டு தூங்குடா பாப்பா. நாளைக்கு கிளினிக் போகணும்ல." என்று அன்போடு கூறவும், சரியென தலையசைத்தவள், உடை மாற்றுவதற்காக தனது அறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.
மகள் சென்றதும் தனது மனைவியின் அருகே வந்தவரோ, "சரசு.. கல்யாணம் ஆகுற வரைக்கும் அவளுக்கு பிடிச்சது செய்யட்டும்.நீ வீனா கவலைபட்டு உன் உடம்பை கெடுத்துக்காத."
"அப்போ அவளுக்கு சீக்கிரம் மாப்பிள்ளையை பாருங்க. அதுவரை என் கவலை இருந்துகிட்டேதான் இருக்கும்." என்றார் கோபமாக.
தன் மனைவியின் கோபத்தை கண்டு புன்னகைத்தவரோ, "இந்த செல்ல கோபம் கூட உனக்கு அழகு தான் சரசு." என்று கண்சிமிட்ட,
"என்ன பேச்சு வயசான காலத்துல, போங்க." என்று தலையில் அடிக்காத குறையாக அவ்விடமிருந்து சென்றார் சரஸ்வதி. அந்நேரம் கதவை திறந்து வந்த பிரகல்யாவின் முகமும் பிரகாசித்தது. தன் தந்தை தாயை போன்று, திருமணத்திற்கு பின் மனமொத்த தம்பதிகளாக தன்னவனுடன் வாழ வேண்டும் என்ற பல்வேறு கனவுகளுடன் உணவு உண்ண சென்றவள் அறியவில்லை. அவளது வாழ்வின் இரண்டாம் பாகம் அவள் நினைப்பதை விடவும் கொடூரமாக இருக்கும் என்று.
இந்த அழகிய கூட்டின், துடுக்குத் தனத்தின் செல்ல இளவரசியோ, ஏலகிரி மலையில், தனது சேட்டைகளை எல்லாம் மூட்டைக் கட்டிக்கொண்டு, போர்வையால் தன்னை மறைத்து நன்கு உறங்கிக் கொண்டிருந்தாள்.
அனைத்து மாணவர்களும் உறங்கி விட்டனரா? என்று ஒவ்வொரு கூடாரத்தையும் பரிசோதித்துக் கொண்டிருந்தனர் அவர்களது துறையின் பேராசிரியர்கள் இருவரும்.
இரவு பதினொன்று கடந்து இருக்க, அவர்களும் உறங்குவதற்காக அவர்களது கூடாரத்திற்கு சென்றனர். சில மணி நேரமுன்பு வரை மத்தியில் மூட்டப்பட்டிருந்த, கேம்ப் ஃபயர் என்று அழைக்கப்படும் நெருப்பானது முற்றிலும் அணைந்திருக்க, அதன் கங்குகள் மட்டும் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தில் பளபளப்பாக தெரிந்தது.
நித்திராதேவியின் பிடியில் உறங்கிக் கொண்டிருந்த அந்த சேட்டைக்காரியோ, உறக்கத்தில் பிதற்றிக் கொண்டிருந்தாள். "என்னைவிடு. எங்க என்னை கடத்திட்டு போற?" என்று படுக்கையில் இங்கும் அங்கும் உருண்டுக்கொண்டே இருந்ததில், அருகில் படுத்திருந்த பெண்ணவளின் தோழியான வந்தனாவோ விழித்துக் கொண்டாள்.
"அடியே கிறுக்கி. ஏண்டி என் உசுற வாங்குற?" என்றவள் அவளது முதுகில் அடிக்க, பெண்ணவளோ அவள் மீதே கைகால்களை போட்டபடி உருளத் தொடங்கினாள்.
"டேய் என்னையவே கடத்திட்ட இல்லை. உன்னை என்ன பண்றனு பாரு?" என்று கண்களை திறவாமலே வந்தனாவை நசுக்கி எடுக்க,
"அய்யோ என் கற்பை பறிக்க பார்க்குறாளே?" என்று அலறியவள், அருகில் இருந்த தண்ணீர் பாத்திரத்தை தட்டுத்தடுமாறி எடுத்தபடி பெண்ணவளின் முகத்தில் ஊற்றியிருக்க, அடித்துப் பிடித்து கண்விழித்தாள் அபூர்வா.
"என்னாச்சு?" என்றவள் மூச்சிறைக்க நாலாபுறமும் கண்களை சுழலவிட, அவளுக்கு அடியில் படுத்திருந்த வந்தனாவோ, "அடியே உருளைகட்டை எந்திரிடி என் மேல இருந்து?" என்று சத்தமாக கத்தவும்தான், அவளின் மீதிருந்து எழுந்துக் கொண்டாள் அபூர்வா.
"என்னாச்சு வந்து? ஆமா எதுக்குடி என் மூஞ்சியில தண்ணீ அடிச்ச?" என்றவளின் பார்வை அவள் கையிலிருந்த நீர் பாத்திரத்தின் மீது படிந்தது.
"சொல்லுவடி சொல்லுவ? கண்டகண்ட புக்கை படிச்சுட்டு தூங்குவ? கனவுல எதையோ கண்டுகிட்டு என்னை படுத்தி எடுப்ப? இது உனக்கே நியாயமா படுதா?" என்றவளுக்கு இன்னும் அவள் தன் மீது உருண்டது நினைவில் வர, "கருமம் கருமம்." என்று மானசீகமாக தனது தலையில் அடித்துக் கொண்டாள்.
"வந்தேன்னா அடிங்கு.. என்னை எது வேணாலும் சொல்லு. ஆனால் நான் படிக்குற ஆன்டிஹீரோ புக்கை ஒரு வார்த்தை சொன்னாலும் செவுள் பேந்திடும்." என்றவள் தனது பெரிய விழிகளை உருட்டியபடி முறைத்தாள்.
"அடிப்பாவி. அப்படி என்னத்தடி அதுல கண்ட? அது படிச்சு, படிச்சு நீ லூசானது தான் மிச்சம்."
"நான் லூசாகுறேனோ? மாஸ் ஆகுறேனோ? அது என்பாடு பேபி. நீ சத்தமில்லாமல் தூங்குற வேலையை மட்டும் பாரு." என்று அவளது கன்னத்தை தட்டியவள் படுத்துக்கொள்ள, "எல்லாம் என் கிரகம். உன்கிட்ட வந்து மாட்டிகிட்டு முழிக்கிறேன்." என்று புலம்பிக் கொண்டே சற்று தள்ளியே படுத்துக் கொண்டாள் வந்தனா.
அவளது செயலைக் கண்டு பளிப்பு காட்டிய அபூர்வாவோ, "ரொம்ப தான்." என்று முகத்தைத் திருப்பிக் கொண்டுப்படுத்தாள். கூடாரத்திற்கு இரண்டு நபர்கள் என்று பத்து கூடாரம் இருப்பதால், இவர்களது குரல் மற்றவர்களை அடையவில்லை.
அபூர்வா, பத்தொன்பது வயது நிறைந்த பாவை. அவளது ஆசைகள் மிகவும் சிறியவை தான். ஆனால் அந்த சிறிய ஆசைகள் என்று அவள் கூறுவதை கேட்டால்? யாராக இருந்தாலும் அதிர்வது நிச்சயம். ஊர் சுற்றுவதை விரும்பி செய்வாள். அதுவும் சாகசங்கள் நிறைந்த பயணம் என்றால் அலாதி பிரியம் பெண்ணவளுக்கு.
ஆதலால்தான் என்னவோ பிபிஏ டூரிசம் அண்டு மேனேஜ்மெண்ட் என்று கூறப்படும், சுற்றுலா துறை சார்ந்த படிப்பை எடுத்து தற்போது இரண்டாம் ஆண்டு படிக்கிறாள். தற்போது கூட டிரக்கிங் எனப்படும் படிப்பு சார்ந்து, மலையேற்றத்திற்காகவே அவ்விடம் வந்து தங்கியிருந்தனர் அவளது வகுப்பு மாணவர்களும், அவர்களது இரண்டு பேராசிரியர்களும் மற்றும் அவ்விடத்தை பற்றி நன்கு அறிந்த சுற்றுலா வழிகாட்டிகள் இருவரும். சுற்றுலாவை தவிர அவளது மிகப்பெரிய ஆசை. அவள் விரும்பி படிக்கும் எதிர்மறை குணம் கொண்ட நாயகனைப் போன்ற ஒருவனை தன் வாழ்வில் சந்திக்க வேண்டும் என்பதுதான்.
மறுபக்கம் திரும்பி படுத்திருந்த அபூர்வாவுக்கு உறக்கம் என்றோ தொலைந்தது. புரண்டு புரண்டு படுத்தவள், அருகில் குறட்டை விட்டபடி உறங்கிக் கொண்டிருந்த தனது தோழி வந்தனாவை பார்த்தாள்.
"என் மூஞ்சில தண்ணீ ஊத்திட்டு, ராட்சசி எப்படி தூங்குறா பாரு." என்று திட்டியவள், தான் வைத்திருந்த எதிர்மறைநாயகனின் கதை ஒன்றினை வாசிக்கத் தொடங்கினாள்.
"என்னபா இது. இன்ட்ரெஸ்டிங்காவே இல்லை. பார்த்த உடனே ஹீரோயினை தூக்கிட்டு போவானு பார்த்தால், அவளுக்கே தெரியாமல் அவளை ரசிச்சுட்டு போறான். ஒருவேளை அடுத்த சந்திப்புல தூக்குவானோ?" என்று யோசனையிலேயே இருக்க, நள்ளிரவு இரண்டு மணியை கடந்திருந்தது.
அதற்கு மேலும் தூக்கம் வராமலே போக, காற்றாட நடந்து வரலாம் என்று நினைத்தவள், யாரையும் எழுப்பாமல் சிறு சத்தமும் போடாமல் அங்கிருந்து மெல்ல அடியெடுத்து வைத்து வெளியேறினாள்.
ஏலகிரி மலையின் குளிர், அவளை சில்லிட செய்ய, தான் அணிந்திருந்த குளிராடையை தாண்டியும் அவள் மேனி குளிரில் நடுங்கியது. மெல்ல இயற்கையின் அழகினை ரசித்துக் கொண்டே சென்றவள் தனது கைகளை நன்கு உரசிக்கொண்டே வெகுதூரம் நடந்துச் சென்றாள்.
அடர்ந்த காடு அவளை வருக! வருக! என வரவேற்க, இரவு வெளிச்சத்தில் பயங்கரமாக காட்சியளித்த மரங்களைக் கண்டும், பூச்சிகளின் சப்தமும் அவளுக்கு நிதர்சனத்தை விளக்கியது.
"அய்யய்யோ ரொம்ப தூரம் வந்துட்டோம் போலவே? அபூமா அப்படியே கிளம்பிருமா." என்று தனக்கு தானே சொல்லியவள் வந்த வழியில் திரும்ப, அங்குள்ள புதர் அசைவது போல தோன்றியதில் முகம் முழுவதும் வியர்க்கத் தொடங்கியது.
"ஆளை விடுங்கடா சாமி." என்று ஓரே ஓட்டமாக ஓடியவளுக்கோ, ஓநாயின் ஊலைவிடும் சத்தம் அவளது செவி வழி நன்கு நுழைந்திருக்க, சற்று மிரண்டுதான் போனாள்.
"அய்யய்யோ.... இந்த ஓநாய்க்கு டின்னர் நான்தானோ? முருகா என்னை காப்பாற்று." என்று தெறித்து ஓடினாள்.
"ஓடினேன்... ஓடினேன் உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடினேன்." என்று அவளது வாய் அந்த நிலையிலும் பிதற்றிக் கொண்டிருக்க, காட்டினை தாண்டி உள்ள சாலையை அடைந்தவள் மேல்மூச்சிறைக்க திரும்ப, அவள் மீதே உரசியபடி நின்றது அந்த மகிழுந்து.
அவளோ அந்த திடிர் அதிர்ச்சியில் மயங்கி விழ, காரிலிருந்து இறங்கியிருந்தவனோ, அவள் மீது மோதி விட்டோமோ? என்று அதிர்ந்து போய், அவளருகே சென்று பார்த்தான்.
சிறு காயமும் இன்றி படுத்திருந்தவளை, ஓரமாக படுக்க வைத்துவிட்டு தன் வேலையைக் காண செல்ல, அவன் மனம் நினைத்தாலும், ஏதோ ஒன்று அவனைத் தடுத்தது. இருந்தும் தனக்கு சம்மந்தம் இல்லாதவளை தூக்கிக் கொண்டு திரிவதில் விருப்பம் இல்லாதவனோ, அவளைத் தனது இருகைகளால் ஏந்தியபடி, ஓரமாக அமர வைத்துவிட்டு சென்றிடலாம் என்று நினைத்தான்.
பெண்ணவளின் தளிர் மேனியை, ஏந்தியவனின் கைகளுக்குள் ஒருவித குறுகுறுப்பு தோன்றியது. அவள் மதிமுகத்தை மறைத்திருந்த கற்றைக் கூந்தல் விலகியிருக்க, அவளது அழகிய வதனம் நிலவொளியில் பிரகாசித்தது.
அதைகண்டவனது மனம் ஒருநிலையிலேயே இல்லை. "நிலாபெண்ணே உறங்கும் உன் விழிகளை திறவாயோ?" என்று கூறியவனது உதடுகள் மட்டும் ரசிக்கவில்லை அவளை. அவனது கண்களும் அவளை ரசித்துப்பருகியது. சொடுக்கிட்டால் தன் முன் படிந்து வர, எத்தனையோ அழகிகள் இருந்தும் அவன் மனம் அவளை ரசிக்க, "ஹேய் பேபி. ஏன் என் கண்ணுல பட்ட?" என்று மயங்கி இருந்தவளிடம் கேட்டான் மானசீகமாக. அவளோ அவன் மார்பின் மீதே மயக்கத்திலும் தன் முகத்தை புதைத்துக் கொண்டாள்.
அவளது செயலை வெகுவாக ரசித்தவனோ, தனது காரின் பின்புறம் அவளை படுக்க வைத்தபடி, முன்புற கதவை திறந்தவன், காரில் ஏறி அமர்ந்திட, ஒருமுறை அவளை திரும்பி பார்த்தவன் ஆழ்ந்த பெருமூச்சொன்றை விட்டான்.
அந்த பெருமூச்சில் தெரிந்தது என்னவோ வருத்தம் மட்டுமே? தேவையில்லாமல் தன் கண்களில் விழுந்துவிட்டாளே? என்று அவளுக்காக வருத்தப்பட்டது ஆணவனின் மனம்.
அந்தநொடி அவனது கைபேசி சிணுங்கியது.
கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே....
கை தீண்டும் போது பாயும் மின்சாரமே.....
உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்.....
இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்....
பாடலை ரசித்துக் கொண்டே காதில் வைத்தவன், "ருத்ரஜித் ஸ்பீக்கிங்." என்றுரைக்க, அவனது பார்வையோ மயங்கியிருந்த அபூர்வாவின் மீது படிந்து மீண்டது.
ராதையை ரசிக்கும்
மாய கண்ணன் அவன்....
ருக்மிணியை கையில்
ஏந்தும் தந்திர
கிருஷ்ணன் அவன்....
தொலைதூர பயணம்
புரிந்து வந்த வேங்கையின் கைகளில், அகப்பட்ட பாவையவளோ
மீள்வாளா...? இல்லை
சிறைக் கொள்ளப்படுவாளா..?
வேய்ந்தனனின் ஆட்டம் தொடரும்......