6
சான்ட்ரோ சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. ஆனால் செல்வாவின் மனம் சீராக இல்லை. எண்ணங்கள் சூழ்ந்து புகைந்து கொண்டிருந்தது. ‘ஏன் குருகிட்ட மறைக்கணும்’ செல்வாவின் உள்மனது கேட்டது’
‘எப்படி அப்பாவைப் பத்தி தப்பா சொல்ல முடியும். அதான் பழியை நான் ஏத்துகிட்டேன்’ வெளிமனம் சமாதனப்படுத்த முயன்றது.
உள்மனம் ’இதுல என்ன இருக்கு. அவன் உன் உயிர்த்தோழன் தானே?’
வெளிமனம் ‘எப்படி மறக்க முடியும். நான் நம்பி ஏமாந்த நாள். செல்வா சிந்திக்கலானான். குருவிடம் அவன் கூறியது பாதித்தான் உண்மை, மீதியை இப்போது அவன் மனம் அசைப் போட்டது’
அதிகாலையில் தந்தையிடம் வாக்குவாதம் செய்தது உண்மைதான். நான்கு நாளில் பணத்தை சுந்தரேசன் கொடுக்கவில்லை என்றால் தானே அவரைப் போலீஸிடம் பிடித்துக் கொடுப்பதாக செலவ சொன்னதும் வேணுகோபால்.’சரி என்னமோ செய், நான் தலையிடலை’ என்று விலகிக் கொண்டார்.
காலை 8.30 சுந்தரேசன் வீட்டு திருமணத்திற்கு ரெடியானான் செல்வா. தன் தாயிடம் கொடுத்து வைத்திருந்த மோதிரத்தை வாங்கிக் கொண்டான். அது அழகாக பேக் செய்யப்படிருந்தது. வெளியில் இறங்கி காரருகில் வந்தவனை வேணுகோபாலின் குரல் தடுத்தது.
‘கடையில் ஒரு சின்ன லேபர் பிரச்சனைப்பா.. கொஞ்சம் என்னன்னு பார்த்துட்டு வாயேன்’
‘அது..அப்பா அங்கிள் வீட்டு கல்யாணத்துக்கு போயிக்கிட்டு இருக்கேன்பா’
‘ஆபீஸ்லயிருந்து அப்படியே போயிட்டு வாடா’
‘இல்ல..9.௦௦-10.30 முகூர்த்தம்....’
’10.30க்குள் வந்துடலாம்டா. எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு. உனக்கு ரொம்ப அவசரம்னா.. நானே போறேன்’ என்று தன் காரை நோக்கி நடந்தவரைத் தடுத்தான்.
‘இல்லப்பா... நானே போறேன்’
அவனை வழியனுப்பிவிட்டு வேணுகோபால் தொலைபேசியை எடுத்து 100 ஐ தட்டினார்.
*****
டிராபிக் அதிகப்படியாக இருந்ததால் கார் ஊர்ந்து சென்று கடையை அடைந்தபோது 10.00 மணி. உள்ளே சென்ற செல்வா மணிவண்ணனை அழைத்து விசாரித்தான்.
எந்தப் பிரச்சனையும் இல்ல தம்பி’ என்றார் சர்வசாதாரணமாக, செல்வா குழம்பினான். ஏதோ உள்ளுக்குள் உறுத்த, வேகமாக காரை எடுத்தான். அவன் மண்டபத்திற்கு செல்லும் போது மணி 11.00 மண்டப்பத்தில் ஓரிரண்டு பேரே இருந்தனர். அந்த காட்சி, செல்வாவின் அடிமனதைப் பிசைந்தது. வாசலில் நின்ற ஒருவரிடம் விசாரித்தான். கல்யாணம் நின்னு போச்சு தம்பி, சுந்தரேசன் ஏதோ ஆபீஸ் பணத்தை கையாடி விட்டதாக. போலீஸ் வந்து கையில் விலங்கு மாட்டினாங்க. தன் பொண்ணு கல்யாணம் முடிந்த பிறகு வரேன்னு சொன்னாரு. அவனுங்க கேட்கவேயில்லை. உறவினர்கள் கூட்டத்துல தன் மானம் போய்விட்டதை நினைத்து நெஞ்சுவலி வந்ததா. இல்ல பொண்ணு கல்யாணம் நின்னு போச்சுன்னு வந்ததான்னு தெரியல. நெஞ்ச பிடிச்சிக்கிட்டு உட்கார்ந்தவர் தான். அப்படியே அதிர்ச்சியில் இறந்துவிட்டார். பாவம், இன்னும் மூணு மணி நேரம் கழிச்சு அந்த போலீஸ் வந்திருக்கக் கூடாதா...’ தன் பாட்டுக்கு புலம்பிக் கொண்டு போனார் அந்த பெரியவர்.
அதிர்ச்சியில் உறைந்தான் செல்வா, கண்கள் கலங்கின. அங்கிள் என்னை நம்பினீங்களே, உங்க நம்பிக்கையை என்னால காப்பாத்த முடியலையே. பதறிய உள்ளத்தோடு அவர் வீட்டை நோக்கி வண்டியை விட்டான்.
அவனைக் கண்டதும் கற்பகம் புலம்பியதும், அங்கு நடந்த அனைத்தும் செல்வா குருவிடம் கூறியதுதான் நடந்தது.
சுந்தரேசனின் உடல் அருகில் நின்று மனதார பேசினான். ‘அங்கிள் என்ன மன்னிச்சிடுங்க. உங்க முன்னாடி நம்பிக்கைத் துரோகியா நிக்கிறேன். உங்க குடும்பத்துக்கு நான் பொறுப்பேத்துகிறேன். இப்போ நான் எது சொன்னாலும் கேட்கக் கூடிய மனநிலைல இங்க யாரும் இல்ல. ஒரு வாரம் கழிச்சு வந்து பேசுறேன் அங்கிள். என் அப்பா ஸ்தானத்துல இருக்கிறவரு நீங்க, உங்க மானசீக மகனா நான் இருப்பேன். இதுக்கு மேல நான் இங்கே இருக்கிறத இங்க யாரும் விரும்ப மாட்டாங்க. நான் கிளம்புறேன் அங்கிள்’
விருட்டென்று சென்றுவிட்டான்.
அவன் கோபத்தைப் போலவே விர்ரென்று கார் வராண்டாவில் வந்து நின்றது. அவசரமாக இறங்கியவன், செருப்பை பறக்க விட்டுவிட்டு வீட்டினுள் நுழைந்தான்.
‘அப்பா!!!’ கிட்டத்தட்ட அலறினான்.
இரண்டு நிமிடத்தில் வேணுகோபால் செல்வாவின் முன் நின்றார்.
‘ஏம்பா இப்படி செஞ்சீங்க...’ அழுகை, கோபம் ,பதட்டம், ஏமாற்றம்.. இப்படி பற்பல உணர்ச்சிகள் அவன் முகத்தில் வினாடிக்கு ஒன்றாக மாறிக் கொண்டிருந்தது.
‘ஓ... சுந்தரேசன் விஷயத்தைப் பத்தி கேட்கறியா? தப்பு செஞ்சவன் தண்டனை அனுபவிக்கிறான்’
‘போதும்பா.. ப்ளீஸ்.. நேத்து எனக்கு வாக்கு கொடுத்துட்டு இப்படி செஞ்சிட்டீங்களேப்பா’
‘டேய்.. ஒரு விஷயம் நல்லா புரிஞ்சிக்கோ, வேலைக்காரனை எந்த இடத்துல வைக்கனுமோ அப்படித்தான் வைக்கனும்’
‘வேலைக்காரன் மாதிரியா அங்கிள் நம்ம பேமிலிக்கு உழைச்சார்... இது தப்புப்பா... நாலு நாள் பொருத்திருக்கலாமே’
‘உனக்கு விவரம் பத்தல செல்வா. பண விஷயத்துல கொஞ்சம் கவனமா இருக்கனும். இந்த எடுத்துக்காட்டே போதும். இனி நம்ம கடையில எல்லோரும் நாணயமாக நடந்துப்பாங்க’
‘அட்லீஸ்ட் ஒரு மூணு மணி நேரம் கழிச்சு கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கக் கூடாதா. அந்த அப்பாவி பெண்ணோட கல்யாணம் நின்னதுக்கு என்ன நியாயம் சொல்லப் போறீங்க’
வேகமாக பொரிந்து தள்ளினான். இவர்கள் வாக்குவாதத்தை பயத்தோடு பார்த்துக் கொண்டு நின்றாள் செல்வாவின் தாய் தனலட்சுமி.
‘வேலைக்கார நாயோட குட்டியை பத்தி எனக்கென்ன கவலை. நாய் தப்பு செஞ்சது சாவடிச்சிட்டேன், குட்டியப் பத்தி எனக்கென்ன கவலை, குட்டிய வேணும்னா ஏதாவது வண்டில விழுந்து சாகச் சொல்லு’ கொடூரமாக வந்த வார்த்தைகளைக் கேட்டு அருவருத்துப் போனான் செல்வா.
‘ஸ்டாப் இட்.. இதுக்கு மேல பேசி என்ன கொலைகாரனா ஆக்கிடாதீங்க. நம்பிக்கைன்னா என்னன்னு தெரியாத உங்ககிட்ட, ஒரு உயிரை துச்சமாக மதிக்கிற உங்ககிட்ட என் உயிர் உள்ளவரை பேசமாட்டேன், இது சத்தியம்’
பேசியவன் விருட்டென்று அவன் அறையை நோக்கி நடந்தான். இதயம் கனப்பதைப் போல் இருந்தது. படுக்கையில் விழுந்தான். தன் படபடத்த இதயத்தை அடக்க முயன்றான். கண்களை மூடினான், சுந்தரேசன் கலங்கிய முகத்துடன் தெரிந்தார். உங்களை மலை போல நம்பினேனே தம்பி இப்படி செய்துட்டீங்களே. சட்டென்று கண்களை திறந்தான். அவரது ஆத்மா கூட என்னை மன்னிக்காது. கடவுளே! மறுபடியும் கண்களை மூடினான். ஒரு முகம் தெரியாத பெண் மணக்கோலத்தில் விசும்பி அழுது கொண்டிருந்தாள். ‘என் வாழ்க்கையை அழித்த பாவி நீ. எனக்கு என்ன பதில் சொல்லப் போற’ நீதி கோரி வாதாடினாள். மீண்டும் கண்களைத் திறந்தான். கடவுளே இனி என் வாழ்வில் நிம்மதியே கிடையாதா? எப்போது தூங்கினான் என்று அவனுக்கே தெரியவில்லை. கனவுகள் பயங்கரமாக வந்தது. அலறி எழுந்து மணியைப் பார்த்தான். காலை 6.30 வேகமாக எழுந்து கிளம்பினான். தன் சர்டிபிகேட்ஸ் எடுத்துக் கொண்டு, காரை எடுக்காமல் நடந்தே சென்றான்.
பேங்க் பேங்காக ஏறி இறங்கினான். ஸ்சூரிட்டி போட யாராவது வேண்டும் என்றார்கள். யாரிடம் சென்று கேட்பான், பணக்கார வீட்டுப் பிள்ளைக்கு எதற்கு கடன் என்று யோசிக்க மாட்டாங்களா? இப்படியே ஒரு வாரம் ஓடி விட்டது.. சுந்தரேசன் வீட்டை நோக்கி நடந்தான் செல்வா. மனசு பதைபதைத்தது. அவர்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம். எப்படிப் பேசப் போகிறோம் என்று ஓர் குழப்பமாக நடந்தவனுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. வீட்டில் ஒரு பெரிய பூட்டு தொங்கியது.
பக்கத்தில் விசாரித்தான்.
‘நேத்து நைட்டோட நைட்டா காலி பண்ணிட்டு போயிட்டாங்க தம்பி. பாவம் அவங்களும் எவ்வளவு தான் மோசமான பேச்சைத் தாங்குவாங்க. ஊரே அவர்களைத் தப்பா பேசியது. அதான் யாரிடமும் சொல்லிக்காம கிளம்பி போயிட்டாங்க’
கனத்த மனதுடன் வீடு திரும்பினான். சோபாவில் சரிந்து அமர்ந்திருந்தவனை தனலட்சுமியின் குரல் எழுப்பியது.
‘காப்பி குடிக்கிறியாப்பா’
‘வேண்டாம்மா’
‘ஏன்பா ஒரு மாதிரியா இருக்க’
‘அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா...’ சிறிது யோசித்தவன் ஏதோ பொறிதட்ட அம்மாவை ஏறிட்டான்.
‘சுந்தரேசன் அங்கிள் வீட்டேலிருந்து யாராவது வந்தாங்களா?’
‘ம்.. ஆமாம்பா, நேத்து ஒரு பொண்ணு வந்துச்சு’
‘யாரும்மா பிரியாவா?’ கேட்டான்.
‘இல்லப்பா அந்தக் கல்யாணப் பொண்ணு ஓவியா. பொண்ணாப்பா அவ.. உங்க அப்பாகிட்ட எப்படி பேசுனா தெரியுமா? வயசுக்குக் கூட மரியாதை கொடுக்கலை’
‘இந்தாங்க உங்க ரெண்டு லட்சம். எங்க அப்பா சொன்ன வாக்கை நான் காப்பாத்திட்டேன். உங்கள மாதிரி நம்பிக்கைத் துரோகம் பண்றவங்க நாங்க இல்ல. உங்க மகன் கிட்ட சொல்லிவைங்க, நாங்க சொன்ன சொல்லை மீற மாட்டோம்னு. பணக்காரங்கன்னா, தலைல என்ன கொம்பா மொளச்சிருக்கு. மனசுன்னு ஒன்னு இருக்கா இல்லையா, இதயமே இல்லாத உங்க மகனை பார்க்க கூட எனக்கு விருப்பம் இல்லை. நீங்கல்லாம் பெரிய மனுசுங்க,ச்சே.. ‘ என்றவள் விருட்டென்று கிளம்பிவிட்டாள்.
முகம் கன்றிப் போயி அமர்ந்திருந்தான் செல்வா, நிறைய பேரிடம் சொல்லி வைத்தான். இருப்பினும் அவர்களைப் பற்றி ஒரு விபரமும் தெரிந்து கொள்ள முடியவில்லை.
அந்த ஊரில் இருக்கவே அவனுக்கு பிடிக்கவில்லை. உடனே குருவின் நினைவு வந்தது. புறப்பட்டான் சென்னைக்கு. குருவின் அப்பாவிடம் தான் அப்பா துணையின்றி தன் காலில் நிற்க ஆசைப்படுவதாக கூறி வங்கிகளில் லோன் வாங்க உதவி கேட்டான். செல்வாவின் தன்னம்பிக்கையும், சுயகவுரவத்தையும் பார்த்து வியந்தவர். அவனுக்கு ஸ்சூரிட்டி போட்டார். கிடைத்த லோனை வைத்துக் கொண்டு தி.நகரில் ஒரு கடையை லீசுக்கு வாங்கினான். அதில் துணிகளை வாங்கிப் போட குருவின் அப்பா பணம் கொடுத்து உதவினார். இந்த மூன்று வருடத்தில் அல்லும் பகலும் உழைத்து, கடையை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்தான். இப்போது அவனது கடைக்கு என்று ஒரு நல்ல பெயர் எடுத்துவிட்டான். வங்கிக்கடனும் முடியப் போகிறது. குருவின் அப்பாவிடம் வாங்கிய பணத்தை கொடுத்து விட்டான். தனக்கென்று தனி வீடும், காரும் வாங்கிவிட்டான். இடையில் திருச்சியில் உள்ள நண்பர்களிடம் சுந்தரேசன் குடும்பத்தைப் பற்றி விசாரிக்காமல் இல்லை. எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.