Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Regular-Update உயிர் துடிப்பாய் நீ! கதை திரி

உயிர் துடிப்பாய் நீ !

அத்தியாயம் 14


மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்பதைப் போல திகழொளிக்கு மிகன் ஒருபுறமுமாகவும் கதிரவன் ஒரு புறமுமாகவும் அவளை வதைத்தனர்.

மிகனின் செயல்களையும் ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை..அவனை ஒதுக்கவும் முடியவில்லை. அதுமட்டுமின்றி கதிரவனின் உரிமையான அணுகுமுறையையும் சுத்தமாக பிடிக்கவில்லை..

ஓவ்வொரு நொடியும் இருவரின் நடவடிக்கையால் நெருப்பின் மீது நிற்பது போல் துவண்டு போனாள்.

அதுவும் கதிரவன் அவளை பார்க்க வந்து போனதிலிருந்து திகழொளிக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது.நிச்சயமாக கதிரவனை தன்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது என்பது.

அவனுடன் சாதாரணமாகக் கூட தன்னால் பேச முடியவில்லையே, எப்படி வாழ்வு முழுவதும் அவனுடன் மனம் ஒத்து வாழ முடியும் என்று தவித்தாள்.

அவள் மனதிற்குள் உறுதியாக அவளுடைய மிகனைத் தவிர வேறு யாரையும் அவளால் திருமணம் செய்து கொள்ள முடியவே முடியாது என்று தன்னை அவன் அணைத்திருந்த அந்த விநாடியே நன்றாக அவளுக்கு புரிந்து விட்டது.

என்னதான் மிகன் அவள் மீது கோவப்பட்டாலும், வெறுத்தாலும் ! அவளால் அவனைத் தவிர வேறு ஒருவரை தன் கணவனாக நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

'மிகனிடம் வீராப்பாக எனக்காக என்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் நான் திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டேன்' என்று கூறிவிட்டு வந்தாலும் அவனை திருமண செய்து கொள்ள அவள் மனம் ஏங்கியது.

அவன் முகத்தை பார்த்துக் கொண்டே காலம் முழுவதும் வாழ்ந்து விடலாம் என்று நினைத்தாள்.

மிகன் மீது சாய்ந்து தன் துக்கத்தை எல்லாம் கண்ணீராக அவன் நெஞ்சில் இறக்கி வைத்துவிட்டு வந்ததிலிருந்து, அவள் மனம் லேசாக இருப்பது போல் இருந்தது.

மனது கொஞ்சம் தெளிவாக இருந்தது.அந்த தெளிவு அவள் முகத்திலும் சிறு மலர்ச்சியைக் கொடுத்து. மாலை அவளை அழைத்து செல்ல வந்த அமுதன் பார்வையிலும் அது தப்பாமல் பட்டது.


தன் தமக்கையின் மலர்ந்த வதனம் அவனையும் உற்ச்சாகப்படுத்தியது. வீடு வரும் வரை எதுவும் பேசிக் கொள்ளாமல் இருவரும் அவரவர் சிந்தனையில் மூழ்கினார்கள்.

வேலை முடிந்து வந்த மகளிடம் பெற்றவர்கள் உடனே எதுவும் கேட்கவில்லை.தங்களுக்குள் ஆயிரம் குழப்பங்களும் ,கேள்விகளும் இருந்தாலும், அமைதியாகவே இருந்தார்கள்..அவர்களுக்கும் கேட்க கொஞ்சம் தயக்கமாக இருந்தது.

மகள் என்ன சொல்லப் போகிறாளோ? என்ற தவிப்பே அவர்களை கேட்பதற்கு யோசிக்க வைத்தது.

மகள் இரவு உணவு உண்டு வரும் வரை பொறுமையாக இருந்தார்கள் . அதற்கு மேல் காத்திருக்காமல் மகளிடம் கேட்டார்கள்.

"பாப்பா உங்கிட்ட கொஞ்சம் பேசணும் .."என்று கூறிய அறவாணன் மகளை தன் அருகில் அமர்த்திக் கொண்டார்.

"சொல்லுங்கப்பா.." என்று கூறியபடியே திகழொளி தந்தையின் அருகில் அமர்ந்தாள்.

அமுதனும் சிறு யோசனையுடனே வந்து அமர்ந்தான்.பொன்னியோ உண்ட பாத்திரங்களை ஒதுக்கி வைத்து விட்டு, மகள் சொல்வதைக் கேட்க எதிர்பார்ப்புடன் வந்து அவர்கள் அருகில் அமர்ந்தார்.

சில நிமிடங்கள் அமைதியாகவே அமர்ந்திருந்த தந்தையிடம் "என்னப்பா பேசணும் .."என்றாள்.

"பாப்பா உனக்கு நிஜமாகவே கதிரவனை கல்யாணம் செய்ய சம்மதமா ? என்று கேட்டார்.

அவளோ, பதிலே சொல்லாமல் அமைதியாக இருந்தாள். 'அவள் என்ன சொல்லுவாள்? தான் நினைப்பதை பெற்றவர்களிடம் சொல்ல முடியுமா.. ?தன் நிலைமை எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது கடவுளே 'என்று மனதிற்குள் மருகினாள்.

மகளின் அமைதியை பொறுக்க முடியாமல் "பதில் சொல்லு பாப்பா.."என்றார்.

என்ன சொல்லுவாள் அவள்? அவள் வாழ்க்கை மீது மட்டும் இந்த காலத்திற்கு ஏன் இத்தனை வெறுப்பு..பெற்றவர்களுக்காக திருமணத்திற்கு சம்மதித்தாலும், காலம் முழுவதும் வேறு ஒருவருடன் தன்னால் வாழவே முடியாது என்று பெற்றவர்களிடம் சொல்ல முடியாதே..? தன் மனதை எப்படி புரிய வைப்பது என்று மனதிற்குள் மருகியவள் பதிலேதும் சொல்லாமல் கண்களில் சொல்லிடங்கா வலியுடன் தந்தையை ஏறிட்டுப் பார்த்தாள்.

மகளின் மெளனம் அவருக்கு பல கேள்விகளுக்கு மறைமுகமாக பதிலளித்து. இருந்தாலும் மகளின் மனதை முழுதாக அறிந்து கொள்ள வேண்டும் மென்று நினைத்தார்.

திகழொளியோ, தனக்குள்ளேயே போராடி போராடி களைத்துப் போனாள்.குற்றம் புரிந்தது போல் தலை நிமிராமல் அமர்ந்திருந்தாள்.

மகளின் அமைதி அவருக்கு ஒன்று மட்டும் உணர்த்தியது. மகள் ஒரு போதும் தன் மனதை சொல்ல மாட்டாள் என்று எண்ணியவர், உண்மையை அறியும்பொருட்டு பேச்சை மாற்றினார்..

"பாப்பா மிகன் உன் கூடத் தான் வேலை செய்கிறாரா..?" என்று அதிரடியாக கேட்டார்.

தந்தையின் கேள்வி தந்த அதிர்ச்சியில் திகழொளி மூச்சு விடவே மறந்தாள்.

அமுதனும் தமக்கை அளவுக்கு அதிர்ந்து தந்தையைப் பார்த்தான்.

ஒரு நொடி உலகமே இருண்டது போல் ஆனது திகழொளிக்கு.. தந்தையின் கோபத்திற்கு மீண்டும் ஆளாகப் போகிறோம் என்று பயந்தாள்.

இந்த விஷயம் தந்தைக்கு எப்படி தெரிந்தது என்று கலங்கியவள், மொழி மறந்த குழந்தை போல் தவித்தாள்.

உண்மையை சொன்னால்.. ஏன் இத்தனை நாள் சொல்லவில்லை? என்று கேட்பாரே என்று அஞ்சினாள்.குற்றயுணர்வில் தந்தையை ஏறெடுத்துப் பார்க்க கூசினாள்.

சிலையாக அமர்ந்திருந்த மகளிடம் "பதில் சொல்லுமா.." என்று மீண்டும் கேட்டார்.

குனிந்த தலை நிமிராமல் "ஆமாம் பா ..மூன்று மாதங்களுக்கு முன்பு டிரென்ஸ்பர்ரில் இங்கே வந்தார்.."என்ற மகளிடம்..

"ஏன் மா எங்கிட்ட சொல்லே..?"

"சொல்லக் கூடாதுன்னு இல்லேப்பா.. உங்க கிட்ட சொல்லி உங்களை கஷ்டப்படுத்த வேண்டாமேன்னு நினைச்சேன். அது மட்டுமில்லை வேலை செய்யும் இடத்தில் பல பேரை சந்திப்போம் .. அவர்களை எல்லாம் முக்கியமானவராக கருத வேண்டிய அவசியம் இல்லையே..! நாம் நம் வேலையை பார்த்தாலே எந்த பிரச்சினையும் வராதுன்னு நினைச்சேன்.." என்று தன் மனதை மறைத்துக் கொண்டு சொன்னாள்.


அமுதனோ, என்ன நடக்கிறது இங்கே என்று புரியாமல் விழித்தான். தன் உயிர் தமக்கை தன்னிடம் கூட இந்த உண்மையை சொல்லவில்லையே என்று வருந்தினான்.

மகளின் பதிலில் கொஞ்சம் நிம்மதி அடைந்தாலும் ,மிகன் கூறியது போல் மகள் தங்களுக்காகத் தான் கதிரவனை திருமணம் செய்யசம்மதித்து இருப்பாளா? என்ற சந்தேகம் பெற்றவர்களுக்கு வலுத்தது.

அதுமட்டுமின்றி எப்போதும் தன் முகம் பார்த்து ,விழி பார்த்து பேசும் மகள்! இன்று தன்னைப் பார்க்காமல் பதில் சொல்லும் போதே, அவருக்கு மகளின் மனம் புரிந்தது.

மனைவியை அர்த்தத்துடன் பார்த்தவர் , மகளிடம் "திகழி இன்று மிகனும், உலகமாறனும் இங்கே வந்தார்கள்.." என்று தந்தை சொன்னவுடன் சட்டென்று தலை நிமிர்ந்து தந்தையை பயத்துடன் பார்த்தாள்.

மனதிற்குள் இவன் என்னை நிம்மதியாகவே இருக்க விடமாட்டானா ? கடவுளே என்ன சொல்லி வச்சு இருக்கானோ ? என்று திகழொளிக்கு மனம் பதை பதைத்தது .

தந்தை சொன்னதைக் கேட்ட அமுதனுக்கோ, அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது.

தன் மக்கட் செல்வங்களை திகைப்பின் எல்லையில் நிறுத்தி விட்டு, பொறுமையாக அவர்கள் வந்து பெண் கேட்ட விஷயத்தை சொன்னார்.

தந்தை சொன்னதைக் கேட்ட திகழொளி உயிரற்ற சிலையாக சில நொடிகள் அமர்ந்திருந்தாள்.அவள் உலகம் சில நொடிகள் ஸ்தம்பித்து போய் விட்டது.

அதிர்ச்சி, திகைப்பு, வியப்பு என்ற கலவையான உணர்வுகளையும் மீறி.. அவள் உள்ளத்தில் மெல்லிய மழை சாரல் தூவியதைப் போல் ஆனந்தம் குடி கொண்டது.

இந்த மாதிரி தன் தந்தையிடம் அவன் வந்து பெண் கேட்க மாட்டானோ ? என்று எத்தனை நாள் ஏங்கி இருப்பாள். அவளின் தவத்துக்கு வரம் கிடைத்து விட்டது போல் மனம் ஆர்ப்பரித்தது.


ஆனாலும், சில நொடியில் மிகன் சொன்ன வார்த்தைகள் நினைவு வந்து அவளின் ஆனந்தத்தை பறித்தது.

தன்னை விரும்பி அவன் தன்னை மணம் செய்ய கேட்கவில்லை .. பிராயச்சித்தமாக தன்னை திருமணம் செய்ய கேட்டு இருப்பான் என்று தோன்றிய நிமிடம் அவள் மகிழ்ச்சி வெள்ளமாக வடிந்தது.

மகளின் முகமாறுதலைக் கூர்ந்து கவனித்த அறவாணன், "பாப்பா நீ என்ன சொல்றே ? உனக்கு இன்னும் அந்த தம்பியை பிடிச்சு இருக்கா? மிகனைக் கல்யாணம் செய்து கொள்ள சம்மதமா..? "என்று கேட்டவரிடம் பதில் சொல்லாமல் மனதிற்குள் குழப்பத்துடன் தந்தையைப் பார்த்தாள்.

"இப்படி பார்த்தாள் என்ன அர்த்தம் ? பதில் சொல்லு பாப்பா .."என்றவரிடம்.

"அப்பா எனக்கு கல்யாணமே வேண்டாம்ப்பா.. நான் இப்படியே உங்க கூடவே இருந்துக்கிறேன்.." என்று தன் மனதை மறைத்து பதில் சொன்னாள்.

தந்தையே மிகனை திருமணம் செய்ய சம்மதமா? என்று கேட்ட பின் கூட அவளால் உண்மையை சொல்ல முடியவில்லை.பல குழப்பங்கள் அவள் மனதை ஆட்கொண்டது.

மகிழ்ச்சி, பயம், தயக்கம், சந்தேகம் என்ற கலவையான உணர்ச்சிகள் அவளைச் சூழ்ந்து கொண்டு கலங்கடித்தது.

காலம் முழுவதும் திருமணமே செய்து கொள்ளாமல் அவளுடைய மிகனை நினைத்துக் கொண்டே பெற்றவர்களுடனேயே இருந்து கொள்ளலாம் என்ற எண்ணம் அவளுள் வலுத்தது.

மகளின் பதில்லைக் கேட்டு "ஏம்மா.." என்று தவிப்பாக மகளைப் பார்த்தார்.

" நான் இப்படியே உங்க கூடவே இருந்துக்கிறேனேப்பா.." என்று சொல்லியபடியே தந்தையின் தோளில் ஆதரவாக சாய்ந்தாள்.

அவரும் மகளின் தலைமீது தன் தலையை லேசாக சாய்ந்தவாரு.." இப்படியே நீ காலம் முழுவதும் இருக்க முடியாதே பாப்பா ! எங்க காலத்துக்கு பிறகு உனக்கு ஒரு துணை வேண்டுமே.." என்றார் மனக் குமறலுடன்.

தன் தமக்கையையே விழி எடுக்காது பார்த்தபடி அமர்ந்திருந்தான் அமுதன். அவன் மனதிற்குள் பெரும் புயல் அடித்தது. தன்னிடம் கூட அக்கா மிகனைப் பற்றி சொல்லவில்லையே என்ற ஆதங்கம் அவனை வாட்டியது.

திகழொளி அமைதியாகவே இருப்பதைக் கண்டு "பாப்பா இப்படி எதுவுமே பேசாமல் இருந்தால் எப்படிம்மா? உன் முடிவைச் சொல்லு..?"என்று வருத்தத்துடன் கேட்டவரிடம்..

"ப்ளீஸ்ப்பா நான் இப்படியே இருந்துக்கிறேன் ப்பா."

" திரும்ப ..திரும்ப, அதே சொல்லாதே ! காலம் பூரா அப்படி இருக்க முடியாதேம்மா.. உனக்குன்னு வாழ்க்கை வேண்டும்.. நாளைக்கு எங்களுக்கே ஏதாவது ஆகிவிட்டா? நீ தனி மரமாக நிற்பாயேம்மா.." என்று தவிப்புடன் கூறினார்.

தந்தையின் வார்த்தைகளை தாங்க முடியாமல் "ஏம்ப்பா இப்படி எல்லாம் பேசறீங்க .. எனக்கு கஷ்டமா இருக்கு.." என்று இன்னும் அழுத்தமாக தந்தையின் தோள்களில் சாய்ந்து கொண்டாள்.

"திகழி இப்போது எல்லாம் உன் வாழ்க்கையை நினைச்சா பயமா இருக்குடா.. "என்றவரிடம்..

" அப்பா நான் நல்லாத் தான் இருக்கேன் .நீங்க எதையும் போட்டு குழப்பிக்காதீங்கப்பா.."

"பாப்பா உன்னை மணக்கோலத்தில் பார்க்கனும்ன்னு ஆசையா இருக்குடா.. எங்க ஆசையை நிறைவேத்துவீயா ..? "

"அப்பா உங்களுக்கு என்ன தோணுதோ ?அதை செய்யுங்கப்பா..இத்தனை நாள் உங்களை நான் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். இனியாவது உங்களுக்கு சந்தோஷம் தர விஷயம் எதுவாக இருந்தாலும் நான் அதைச் செய்யறேன்.." என்ற மகளை உச்சி முகர்ந்து நிம்மதி பெருமூச்சு விட்டார்.

பொன்னிக்கும் மகளின் வார்த்தைகள் நிம்மதியைக் கொடுத்தது.

"திகழி எங்களுக்காக பார்க்காமல் உனக்கு மிகனைப் பிடித்து இருந்தால் சரின்னு சொல்லு! நீ ஆசைப்பட்டவனையே கல்யாணம் செய்து கொண்டு நீ நிம்மதியா சந்தோஷமா வாழனும்.அதை நாங்க கண்குளிர பார்க்கனும் .."என்றார்.

தன்னால் தன் பெற்றவர்கள் பட்ட கஷ்டத்திற்கு தன் கல்யாணம் தான் தீர்வு என்று நினைத்தவள் , " உங்களுக்கு எது விருப்பமோ? அதை செய்யுங்கப்பா ! எனக்கு நீங்க என்ன முடிவு எடுத்தாலும், முழு சம்மதம்.." என்றவள் எழுந்து தன் அறைக்குச் சென்றாள்.

மகளின் மறைமுக சம்மதம் பெற்றவர்களுக்கு மனநிம்மதியைக் கொடுத்தது.

மிகன் நடந்து கொண்டதற்கு அவனை மன்னிக்க முடியாது தான். ஆனால் ,அவன் சொன்ன காரணமும்..மகளின் ஆசையையும் கருத்தில் கொண்டு மகளுக்காக மிகனை மன்னிக் தயாரானார்கள்.

அவனால் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பு பெரிது தான்.தாங்கள் ஆசையாக வாங்கி குடி இருந்த வீட்டை இழந்து.. படக்கூடாத மனக் கஷ்டங்கள் பட்டு, ஆசை மகளிடம் பேசாமல் இருந்து.. அவர்கள் பட்ட கஷ்டம் அளவிட முடியாதது தான்.

ஆனாலும், நடந்ததையே நினைத்து எத்தனை நாள் வருந்திக் கொண்டே இருப்பது.. தப்பு செய்தவர்கள் தன் தவறை உணர்ந்தால் மன்னிப்பது தானே பெருந்தன்மை.

இன்னும் கோவத்தை பிடித்து இழுத்து வைத்து, யாருக்கு என்ன இலாபம். இனியாவது நடப்பது நல்லதாக நடக்கட்டும். என்று மனதார கடவுளை வேண்டிக் கொண்டார்கள்.

மனம் தாங்காமல் அமுதன் தன் தமக்கையின் அறைக்குச் சென்று தன் ஆதங்கத்தைக் கேட்டு விட்டான்.

தம்பியின் கோவத்தில் உள்ள நியாயத்தை உணர்ந்து திகழொளி தன் மனநிலையை மறைக்காமல் சொன்னாள்.

" அம்மு உங்கிட்ட சொல்லக் கூடாதுன்னு இல்லை டா.. ஆனால், அதை சொல்லி தேவை இல்லாமல் உன்னை கஷ்டப்படுத்த வேண்டாம்ன்னு நினைத்தேன்.ப்ளீஸ் அம்மு! அக்காவே மன்னிச்சுடு.." என்று தவிப்புடன் சொன்னாள்.

"மன்னிப்பெல்லாம் எதற்கு கா.. "என்றவனின் வேதனை மாறாத முகத்தைக் கண்டு, அவனைத் தன் அருகில் இழுத்து அமரவைத்துக் கொண்டு பேசத் தொடங்கினாள்.

"அம்மு உண்மையை சொல்லனும்ன்னா ..எங்கே உங்கிட்ட சொன்னா? நீ வேலைக்கு போக வேண்டாம்ன்னு சொல்லிடுவீயோன்னு பயமா இருந்துச்சு.." என்ற தமக்கையை வியப்பாக பார்த்தான்.

தம்பியின் வியந்த பார்வையை கண்டு மென் சிரிப்புடன், "அம்மு நான் சொல்வதைக் கேட்டு நீ என்னை என்ன நினைப்பேன்னு தெரியலே.." என்றவள் சற்று பேச்சை நிறுத்தி ஒரு பெருமூச்சுடன் தொடந்தாள்.

"எனக்கு மிகன் மீது ஏனோ கோவமே வர மாட்டேங்குது.."என்றவளை ஆச்சரியமாக பார்த்தான்.

" ஏன்னா நான் இப்ப வரை மிகனை உயிராக நேசிக்கிறேன்.அது ஏன்னு எனக்கே புரியலே.."

"ஏக்கா.. அவன் செய்ததற்கு அவன் மீது உனக்கு கொஞ்சம் கூட வெறுப்பு வரலையா..?"

"நிஜமா வரலை.. எதையோ தப்பா புரிஞ்சுட்டுத் தான் மிகன் எங்கிட்ட அப்படி நடந்து இருபபார்ன்னு, என் உள் உணர்வு சொல்லிட்டே இருக்கே அம்மு.."

"என்னால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியலே.."

"காதலித்து பார்த்தால் தான் அது புரியும்.."

"இவ்வளவு அன்பே மிகன் மீது வச்சுட்டு ! நீ எப்படி கதிரவனை கல்யாணம் செய்ய சம்மதித்தே..?"

"அப்பா, அம்மாவுக்காகத் தான் சம்மதித்தேன் டா.. ஆனால், நேத்து தான் எனக்கு மிகனைத் தவிர வேறு யாரையும் கல்யாணம் செய்து கொள்ள முடியாதுன்னு நல்லாவே உணர்ந்தேன்.." என்றவள் கதிரவன் தன்னை தேடி வந்ததையும்..தன்னால் அவனுடன் இயல்பாக பேச முடியாததையும் சுருக்கமாக தம்பியிடம் கூறினாள்.

அமுதனோ, தன் தமக்கையையே ஆச்சரியமாக பார்த்தான்.

தம்பியின் முகம் இன்னும் தெளியாததைக் கண்டு, அவன் தோள்களில் சாய்ந்தபடி "அம்மு நம்ம ஒருத்தரை மனதார விரும்பினால், அவர்கள் என்ன செய்தாலும் நமக்கு வெறுப்பு வராது டா .."

"கொஞ்சமாவது சுயமரியாதை வேண்டுமே கா.." என்றவனிடம்..

"காதலில் சுயமரியாதை பார்த்தால், அது காதலே இல்லை டா.. காதலில் ஈகோவும் பார்க்க கூடாது. சுயமரியாதையும் பார்க்க கூடாது.. நேசத்தில் அன்பு மட்டுமே நிறைந்து இருக்கனும். என் காதலில் அன்பு மட்டும் தான் இருக்கு .அந்த அன்பு தான் இத்தனை வருடம் கழித்தும் மிகனை என்னுடன் சேர்த்து வைக்கப் போகுது.."

"அன்பு உனக்கு மட்டும் இருந்தால் போதுமா ..? மிகனுக்கு இருக்க வேண்டாமா? நீ தப்பே செய்து இருக்கட்டும். அதை என்னவென்று கேட்கனும். இல்லை தன் சந்தேகத்தை யாவது உங்கிட்ட சொல்லி இருக்கனும்.காதலில் அன்பு மட்டும் இல்லைக்கா.. நம்பிக்கையும் முக்கியம்.." என்றவனை யோசனையாக பார்த்தாள்.

தம்பி சொல்வதும் உண்மை தானே! ஏன் மிகனுக்கு அந்த நம்பிக்கையை என்‌மீது வரலை? என்று யோசித்தாள்.

ஒரு வேளை தான் அந்த நம்பிக்கையை அவனுக்கு கொடுக்கவில்லையா? என்று அப்போது கூட அந்த பாலாய் போன மனம் அவன் புறம் நின்றே யோசித்து.

ஒரு காதல் என்ன செய்யும் என்றால், இப்படி தான் பைத்தியம் ஆக்கும் போல். எல்லா கேள்விகளுக்கும் ஒரு நாள் விடை கிடைத்து தானே ஆகனும்.அந்த நாளுக்காக காத்திருக்க வேண்டியது தான் என்று சலிப்புடன் நினைத்துக் கொண்டாள்.

தொடரும்..






 
உயிர் துடிப்பாய் நீ !

அத்தியாயம் 15
இரவும், பகலும் மாறி மாறி வரும் இயற்கையின் நீதியைப் போல் ,வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் மாறி மாறித் தான் வரும்.

அது போல் திகழொளிக்கு இப்போது இன்பமான காலம். கடந்த காலத்தில் அவள் பட்ட கஷ்டம் எல்லாம் கற்பூரமாய் கரைந்து காணாமல் போனது.

இரு வீட்டு பெரியவர்களும் மணமக்களின் சம்மதம் கிடைத்தவுடன் , திருமண வேலைகளை தீவிரமாக பார்க்க ஆரம்பித்தார்கள்.

உலகமாறனோ, மகனின் மனம் மாறுவதற்குள் திருமணத்தை எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ? அவ்வளவு விரைவாக முடிக்க வேண்டுமென்று அடுத்து வந்த முதல் நல்ல முகூர்த்ததில் திருமண தேதியை குறித்தார்.

மணமக்கள் இருவருமே திருமணத்தை எளிமையாக நடத்தவேண்டுமென்று வற்புறுத்தியதால் ,வேறு வழி இன்றி பெற்றவர்கள் தம் மக்ககளின் விருப்பத்திற்கு இசைந்தனர்.

அது மட்டுமின்றி திருமணத்தை விமர்ச்சியாக நடத்தினால் மகிழினியைப் பற்றி எல்லாரிடமும் விளக்கம் சொல்ல வேண்டும் என்ற நிதர்சனம் அவர்களை தங்கள் மக்களின் முடிவுக்கு தலை ஆட்ட வைத்தது.

நாம் நினைத்தது எல்லாம் நடக்கும் போது வாழ்க்கையே வண்ணமயமாக தோன்றும்.அது போல் திகழொளிக்கும் அவளுள் வசந்த காலம் பூத்து குலுங்கியது.வாழ்க்கையின் மீது பிடிப்பும், ஆசையும் தோன்றியது.

மிகன் மீது அவள் வைத்திருந்த அன்பே அவளை அவனுடன் சேர்த்து வைக்கப்போகிறது.

இத்தனை நாள்கள் அவளிருந்த தவத்தின் வரமாக ! அவளின் மனம் கவர்ந்தனை வாழ்க்கை துணையாக அடையப் போகிறோம் என்ற எண்ணமே அவளுள் மகிழ்ச்சியை மழைச்சாரலாக தூவியது.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழிக்கு ஏற்ப.. அவளின் உள்ளத்து மகிழ்ச்சி அவளின் வதனத்தில் மின்னியது.

பெற்றவர்களுக்கும் ,உடன்பிறந்தவனுக்கும் மிகனை அவள் எந்தளவு நேசித்திருக்கிறாள் என்று அவளின் முகமே உணர்த்தியது.


அவளின் மகிழ்ச்சி அவர்களுள் பெரும் நிம்மதியை கொடுத்தது. அதே நிம்மதியுடனும் ,மகிழ்ச்சியுடனும் திருமண வேலைகளை துரிதப்படுத்தினார்கள்.


திருமண வேலைகள் மிகனுக்குள்ளும் இரு வேறு மனநிலையை உண்டாக்கியது.

அவனின் உயிர் அவன் கை சேரப்போகிறது என்ற ஆனந்தம் ஒரு புறம் என்றாலும், அவளால் ஏற்பட்ட இழப்புகளின் குற்றவுணர்வு ஒரு புறம் அவனை வதைத்தது.

இரு வேறுபட்ட மனநிலையில் தவித்துக் கொண்டிருந்தான். திருமண நாள் நெருங்க நெருங்க அவனுள் சிறு பயம் அவனை குடைந்தது.

மணமக்கள் இருவரும் பணி இடத்தில் சந்தித்தாலும், வேலையைத் தவிர வேறு எதுவும் பேசிக் கொள்வது இல்லை.

திகழொளியின் முகத்தில் மின்னும் மகிழ்ச்சியை கண்டு மிகன்னுக்குள்ளும் திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது .

அவள் அறியாமல் அவளை அணு, அணுவாக ரசித்தான் .

திகழொளிக்கும் மிகன் வேலையைத் தவிர வேறு எதைப் பற்றியும் பேசாமல் இருப்பது மிகுந்த நிம்மதியைக் கொடுத்தது.

இருவரும் இப்போதாவது மனம் விட்டு பேசி இருந்தால்? திருமணத்திற்கு பின் வரும் கசப்புக்களை தவிர்த்து இருக்கலாம்.

ஆனால் ,இருவரும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த அளவு கடந்த நேசமும், அன்புமே அவர்களை பேச விடாமல் செய்தது.

அந்த வார இறுதியில் திருமணத்திற்கு பட்டுபுடவை எடுக்க இரு குடும்பமும் பிரபலமான துணிக் கடைக்குச் சென்றனர்.

திகழொளி எளிமையாக பச்சை வண்ண கைத்தறி சேலையில் வந்து இருந்தாள்.அவளின் நிறத்திற்கு அது எடுப்பாக இருந்தது.

மிகனும் சொல்லி வைத்ததைப் போல் ஆலிவ் பச்சையில் சட்டையும் ,ஆஃப் வெண்மை நிறத்தில் கால்சட்டையும் டக் இன் செய்து வந்திருந்தான். அது அவனுக்கு மேலும் கம்பீரத்தையும், வசீகரத்தையும் கூட்டியது.

இருவர் முகத்தில் தெரிந்த கல்யாணக் கலை அவர்கள் தான் மணமக்கள் என்று அனைவருக்கும் சொல்லாமல் சொல்லியது.

கடைக்கு வந்ததிலிருந்து மகிழினி திகழொளியிடம் "அம்மா ,அம்மா.." என்று அட்டையாக ஓட்டிக் கொண்டாள்.

திகழொளியைக் கண்டவுடன் மணியரசி ஆசையாக அவளின் கைகளைப் பற்றி "எனக்கு ரொம்ப சந்தோஷம் திகழிம்மா.. நான் கும்பிட்ட தெய்வம் என்னை கைவிடலே..இடையில் என்ன என்னவோ நடந்து விட்டது. இனியாவது நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா வாழனும்.." என்று மனதார வாழ்த்தினார்.

மிகனின் மாமா காஞ்சித்துரையும் திகழொளியிடம் "நல்லா இருக்கீயாம்மா.." என்று வாஞ்சையுடன் கேட்டார்.

மணியரசியும், காஞ்சித்துரையும் திகழொளியின் பெற்றவர்களிடம் சட்டென்று பேச முடியாமல் முதலில் தயங்கினார்கள்.

நடந்த நிகழ்வுகள் அவர்களிடம் பெரும் தயக்கத்தை உருவாக்கி இருந்தது. ஆனாலும், அவர்கள் கடந்து வந்த கஷ்டமான நிகழ்வுகளின் பக்குவமும் , முதிர்ச்சியும் திகழொளியின் பெற்றவர்களிடம் தயக்கத்தை மீறி பேச வைத்தது.

பொன்னியும் ,அறவாணனும் முதலில் கொஞ்சம் தயக்கம் காட்டினாலும் பின்பு அவர்களும் இயல்பாக பேசினார்கள்.

உலகமாறனோ, மனதிற்குள் அளவிட முடியாத நிம்மதியுடனும், மகிழ்ச்சியுடனும் நடப்பதை பார்த்துக் கொண்டு இருந்தார்.

கடையில் பட்டுப்புடவையை தேர்வு செய்ய
எல்லாரும் பட்டு சேலைப் பிரிவிற்கு சென்றனர்.
அங்கிருந்த இருக்கையில் திகழொளியின் ஒரு புறம் அமுதனும் ,மறுபுறம் மணியரசியும் அமர்ந்து கொண்டனர் . திகழொளியோ, மகிழினியை மடியில் வைத்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள்.

மிகனோ, திகழொளியின் கண்களில் படும்படி ஓர் ஓரமாக சென்று நின்று கொண்டான்.

கடை சிப்பந்தி பட்டுப்புடவையை எடுத்துக் காட்டும் பொழுது அமுதனும், மணியரசியும் தங்கள் பங்குக்கு, அவர்களுக்கு பிடித்த புடவையை திகழொளியிடம் காட்டி.. காட்டி, எடுக்கச் சொன்னார்கள்.

திகழொளியோ இருவரையும் சமாளிக்க முடியாமல், பேந்த.. பேந்த, விழித்த படி அமர்ந்திருந்தாள்.

மகளின் மனதை உணர்ந்து பெற்றவள் தான் "அம்மு நீ எழுந்து இங்கே வா ! மாமாவும், அக்காவும் செலக்ட் பண்ணட்டும்.." என்று மணமக்கள் இருவரின் மனதிலும் பாலை வார்த்தார்.


மிகனோ, 'ஹப்பா இப்பவாவது என்னைக் கூப்பிடனும்னு தோணுச்சே..' என்று நினைத்தபடி, அமுதன் அமர்ந்திருந்த இருக்கையில் அவன் எழுந்ததும் மிகன் அமர்ந்து கொண்டான்.

மணியரசியும், திகழொளியிடம் இருந்த மகிழினியை தூக்கிக் கொண்டு அவர்களுக்கு தனிமை கொடுத்து நகர்ந்தார்.

திகழொளியிடமிருந்து வர மறுத்த மகிழியை கட்டாயப் படுத்தி தூக்கிச் சென்றார்.

"மகிழி எங்கிட்டேயே இருக்கட்டும் அத்தை.." என்ற திகழொளியிடம் "இல்லை மா நீ ப்ரீயா பாரு ! அப்புறம் நான் உனக்கு அத்தை இல்லை. இனிமேல் அம்மான்னு கூப்பிடு.." என்று கூறிவிட்டு மகிழியை தூக்கிச் சென்றார்.

திகழொளிக்கோ, மிக அருகில் மிகனுடன் அமர்ந்து இருப்பது மனதிற்குள் இனம் புரியாத படபடப்பைக் கொடுத்தது.

மிகனோ, தனிமை கிடைத்தவுடன் "ஏண்டி கல்யாணம் நமக்குத் தானே ! கல்யாணப் புடவை நமக்கு பிடிச்ச மாதிரி எடுக்கனும்ன்னு இல்லாம உன் அருமை தம்பி கூட உட்கார்ந்து செலக்ட் பண்றே.. என்னே கூப்பிடனும்ன்னு உனக்கு தோணவே இல்லே..நல்ல வேளை என் மாமியார் தான் என் மனம் அறிந்து நடந்து கொண்டாங்க .."என்றான்‌ அடக்கிய கோவத்துடன்.

"ஏன் நான் தான் கூப்பிடனுமா? உங்க கல்யாணம் தானே ! நீங்களே வர வேண்டியது தானே..?"

"இந்த வக்கனையான பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லே.."

"பின்ன வேறு எதுக்கு குறைச்சலாமா? என்றாள் அவளும் கோபத்துடன்..

"ம்! அதை கல்யாணத்திற்கு அப்புறம் சொல்றேன்..இப்ப எங்கூட பதிலுக்கு பதில் வாயாடாம புடவையைப் பாரு .."என்றவன் கடை அலமாரியில் அடுக்கி வைத்திருந்த சில புடவைகளை எடுக்கச் சொல்லி கடை சிப்பந்தியிடம் சொன்னான்.

திகழொளியோ, அவனே தேர்வு செய்யட்டும் என்று அமைதியாக அமர்ந்து இருந்தாள்.

அவனே, ஒவ்வொரு புடவையை அலசி ஆராய்ந்து தக்காளி சிவப்பில் புடவை முழுதும் தங்க நிறச் ஜரிகையில் மின்னிய காஞ்சிப் பட்டை தேர்வு செய்தான்.

கடைப் பெண் அந்த புடவையை அவள் மேல் வைத்துக் காட்டவும் அது அவளுக்கு அத்தனை பாந்தமாக பொருந்தியது.


மிகனோ, தனது அலைபேசியில் அதை பொக்கிஷமாக சேமித்துக் கொண்டான்.

அமுதனோ, தள்ளி நின்று அவர்களையே பார்த்துக் கொண்டு இருந்தான். பிறந்ததிலிருந்து அவன் அக்காவை அவன் பிரிந்ததே இல்லை.

இப்போது, முதல் முறையாக பிரியப் போகிறோம் என்று நினைக்கையில் அவனால் ,அதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவன் முகத்தில் அப்பட்டமாக சோகம் பொங்கி வழிந்தது.

திகழொளியோ, தன் மீது வைத்துக் காட்டிய பட்டுப் புடவையை பிடித்த படியே தம்பியை தேடினாள்.அவனும் பார்த்துட்டு சொல்லட்டும் மென்று.

ஓர் ஓரமாக நின்று தன்னையே பாவமாக பார்த்ததுக் கொண்டிருந்தவனின் முகத்தில் தெரிந்த சோகம் அவளை புரட்டிப் போட்டது.


தம்பி சொல்லாமலே அவனின் மன ஓட்டத்தை புரிந்து கொண்டவள், தன் மீது கிடந்த புடவையை எடுத்து கடைப் பெண்ணிடம் கொடுத்து விட்டு தம்பியை நோக்கி ஓடினாள்.

"அம்மு, இங்கே ஏன் தனியா வந்து நிற்கிறே? உனக்கு அந்த புடவை பிடிச்சு இருக்கா ..?" என்ற கன்னம் தொட்டு கேட்ட தமக்கையிடம்.

"அக்கா உனக்கு பிடிச்சு இருந்தா போதும்.." என்று சுரத்தே இல்லாமல் சொன்னவனிடம்.

"அம்மு என் மீது ஏதாவது கோவமா டா.."

"ச்சே அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லைக்கா.." என்றான்.

மிகனுக்கோ, திகழொளி தன்னிடம் புடவை பற்றி எதுவும் சொல்லாமல் , தம்பியிடம் சென்று குலாவிக் கொண்டு இருப்பதைக் கண்டு எரிச்சல் வந்தது.

அதே எரிச்சலுடன் அவர்களின் அருகில் சென்று "புடவை பிடிச்சு இருக்கா? இல்லையான்னு சொல்லாமல் இங்கே என்ன செய்யறே ?" என்று கோவமாக கேட்டான்.

திகழொளியோ, பதில் சொல்லாமல் மெளனம் காத்தாள்.

மிகனோ, "வா..!" என்று அவளின் கைகளை உரிமையாக பிடித்து இழுத்துச் சென்றான்.

அமுதனோ, ஒன்றும் செய்ய முடியாமல் அவர்களைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

மிகனோ, "ஏண்டி இருபத்தி நாலு மணி நேரமும் அவன் கூடத்தானே பேசிட்டு இருக்கே ? இன்னைக்கு கூட எங்கூட இருக்காமல் அவன் பின்னாடி போறே.. ?"என்று கடிந்து கொண்டான்.அவனையும் மீறி அமுதன் மீது அவனுக்கு பொறாமை பொங்கியது.

திகழொளியோ, பதில் சொல்லாவும் முடியாமல் தம்பியையும் தவிர்க்க முடியாமலும் தவித்தாள்.

அவளோ, 'இது என்ன புது பிரச்சினை ..?'என்று மனம் கலங்கினாள். இதுவரை அமுதனை பிரிவோம் என்ற நிலையில் அவள் யோசிக்கவே இல்லே..

முதன் முதலாக இப்பொழுது தான் அதை உணர்ந்தாள்.

அவளை அதிகம் யோசிக்க விடாமல் அதன் பிறகு அவளின் நேரத்தை மிகனே எடுத்துக் கொண்டான்.

அவனுக்கு திருமணத்திற்கு உடை எடுக்க ..அவனுக்கும் அவளுக்கும் திருமணத்திற்கு தேவையானது வாங்க என அவளை தன் அருகிலேயே வைத்துக் கொண்டான்.

திகழொளியோ, எதிலும் முழுமனதுடன் ஈடுபட முடியாமல் மிகன் இழுத்த இழுப்புக்குச் சென்றாள்.

பெரியவர்களோ, சிறியவர்களுக்கு தனிமை கொடுத்து விட்டு, தங்களுக்கு தேவையானதையும் சீர்வரிசைகள் வாங்குவதிலும் நேரத்தை செலவிட்டனர்.

அமுதனோ, மகிழினியை தூக்கி வைத்துக் கொண்டு ஓர் ஓரமாக அமர்ந்து கொண்டான்.

திகழொளிக்கு தம்பியின் அமைதியை பார்க்க பார்க்க மனம் தாளவில்லை.. ஓடிப்போய் அவன் தோள்களில் சாய்ந்து கொண்டு, அழ வேண்டும் போல் மனம் துடித்தது.

ஒரு வழியாக தேவையானதை வாங்கி முடித்த பின் உணவு உண்ண கடைக்குச் சென்றனர்.

திகழொளியோ, மிகன் அருகில் அமராமல் தம்பியின் அருகில் அமர்ந்து கொண்டாள்.

அவர்களின் எதிரில் அமர்ந்த மிகனோ, அவளை கண்களாலேயே முறைத்துக் கொண்டிருந்தான்.

அங்கே ஒரு உரிமை போராட்டம் தொடங்கியது. திகழொளிக்கு திருமணத்திற்கு பிறகு எப்படி மிகனை இந்த விசயத்தில் சமாளிப்போம் என்ற புதுப் பயம் துளிர் விட்டது.

தொடரும்..
 
உயிர் துடிப்பாய் நீ!

அத்தியாயம் 16

வாழ்க்கையில் எத்தனையோ கஷ்டங்கள் வந்தாலும், அவற்றை எல்லாம் கடந்து வருவதற்கு யாரோ ஒருவரின் அன்பும், அரவணைப்பும் மிக முக்கிய காரணம்.

அப்படி திகழொளியின் கஷ்ட காலங்களில் பெரும் அரணாக இருந்தது அவளின் ஆரூயிர் தம்பி அமுதன் தான்.

திகழொளிக்கு தான் விரும்பியவனை மணக்கப்போகிறோம் என்ற மகிழ்ச்சி ஒரு புறம் இருந்தாலும், தன் தம்பியைப் பிரியப் போகிறோம் என்ற பெருங்கவலை அவளை புழுவாக அரித்தது.

அமுதனோ, முகத்தில் சிறு மலர்ச்சி கூட இல்லாமல் திருமண வேலையில் பங்கெடுத்தான்.

வேலை முடிந்து மாலை வீட்டுக்கு வந்ததிலிருந்தே திகழொளி தம்பியுடன் தனிமையில் பேசிவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டு இருந்தாள்.
ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லாமல் அமுதனுக்கு திருமணவேலைகளை கவனிக்கவே நேரம் சரியாக இருந்தது. திகழொளிக்கு அவனுடன் தனியாக பேச வாய்ப்பே இல்லாமல் போனது.

அன்று இரவு உணவை முடித்துக் கொண்டு, திகழொளி தன் படுக்கையில் படுத்த படியே தன் தம்பியைப் பற்றி சிந்தித்துக் கொண்டு இருந்தாள்.

அப்போது, அவளின் அருகில் இருந்த அலைபேசியின் அழைப்பு சத்தம் அவளின் சிந்தனையை தடை செய்தது.

இந்த நேரத்தில் யார் அழைக்கிறார்கள்? என்று யோசனையுடனே அலைபேசியை எடுத்து பார்த்தவளுக்கு ,இன்ப அதிர்ச்சியாக அவளின் தோழி கமலி அழைத்திருந்தாள்.

முகத்தில் சிறுமுறுவலுடன் அழைப்பை ஏற்று "ஹலோ .."என்றவளிடம் அந்தப்பக்கம் கமலியோ பொரிந்து தள்ளினாள்.

"ஏண்டி நான் ஒருத்தி இருக்கேன்னு உனக்கு நினைப்பு இருக்கா ?இல்லையா? எத்தனை நாளாச்சு ஒரு போன் செய்தீயா .."?என்று கடிந்து கொண்டவளிடம்..

" நீ ஊருக்கு போயிட்டு வரேன்னு சொல்லிட்டு போனவ ஆளையே காணோம்..சரி நீ வந்துட்டு கூப்பிடுவேன்னு இருந்தேன்.."

" ஏண்டி நான் ஊருக்கு தானே போய் இருந்தேன். செவ்வாய் கிரகத்துக்கா போனேன்..?"

" சாரி டீ, கொஞ்சம் வேலை டென்ஷன்.அதுவே சரியா இருந்துச்சு.. "

"வேலை டென்ஷனா? இல்லை மிகன் நினைப்பா ..?"

"ஏய் ஏண்டி இப்படி எல்லாம் பேசறே..?"

"வேறே எப்படி பேசச் சொல்றே? ஒரு வார்த்தை எங்கிட்ட சொன்னீயா டீ.. கல்யாணம் முடிஞ்ச பின் சொல்லனும்ன்னு இருந்தீயா? இல்லே பிள்ளையும் பெத்துட்டு சொல்லாம்ன்னு நினைச்சீயா?"

"ஏய் அப்படி எல்லாம் இல்லை டீ. உங்கிட்ட சொல்லக் கூடாதுன்னு இல்லே டீ.. அந்த நேரத்தில் நான் ரொம்ப குழம்பி இருந்தேன். அதுமட்டுமில்லை இடையில் நீ வேறு அப்பாவுக்கு உடம்பு சரியில்லைன்னு மெஸேஜ் போட்டு இருந்தீயா? உன்னே தொல்லை செய்ய வேண்டாம்ன்னு பேசலை டீ.."
‌
"சரி போன் தான் பேசலே.. டெய்லியும் மெஸேஜ்லே நலம் விசாரிப்பீயே? அப்பவாவது இதை பற்றி ஒரு வார்த்தை மெஸேஜ் செய்தீயா?"

"கமலி ரியலி சாரி டீ..நிறைய டென்ஷன், குழப்பம் அதை உங்கிட்ட சொல்லி உன்னையும் கஷ்டபடுத்த வேண்டாம்ன்னு தான் பேசாம இருந்தேன்.."

"அமுதன் மட்டும் இப்ப சொல்லலேனா, இன்னும் எனக்கு தெரியாது.சாயங்காலம் எதேச்சையாக அமுதனை பார்த்த பொழுது, அவன் தான் இத்தனை விஷயமும் சொன்னான்.." என்றவளிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதியாக அலைபேசியை காதில் வைத்திருந்தாள்.

திகழொளிக்கு குற்றயுணர்வாக இருந்தது. நாம் கஷ்டப்பட்ட பொழுதெல்லாம் ஆறுதலாக கூட இருந்தவளிடம் , எதையும் சொல்லாமல் விட்டது எவ்வளவு பெரிய தவறு என்று அவள் மனச்சாட்சியே அவளை வதைத்தது.

எதை பற்றியுமே சிந்திக்கவும், யோசிக்கவும் முடியாத அளவு மிகன் தான் அவளை முழுவதும் ஆக்கிரமித்து இருந்தானே.

இப்போது தன் தோழியை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல் அவள் தவித்துப் போனாள்.

கமலியோ, "எப்படியோ எங்கிட்ட சொல்லாட்டீயும், உன் மனம் விரும்புனவனையே நீ கைபிடிப்பது எனக்கு ரொம்ப சந்தோஷம் தான் டீ..இனியாவது நீ சந்தோஷமா வாழனும் .."என்று கமலி சொல்லவும்..அதைக் கேட்ட திகழொளிக்கு தோழியின் வாழ்த்து அவள் தவறை இன்னும் அதிகமாக உணர்த்தியது . கமலியின் தன்னலமற்ற அன்பைத் தாங்க முடியாமல்" கமலி! சாரி டீ .."என்று கதறி அழுதுவிட்டாள்.

அந்தப் பக்கம் கமலியோ, "ஏய் திகழி, எதுக்குடி இப்ப அழறே? இனி உனக்கு எல்லாமே நல்லது தான் நடக்கும் .அழாதே டீ.." என்று தோழியின் கண்ணீரை தாங்க முடியாமல் ஆறுதல் சொன்னாள்.

அது தான் கமலி! தன்னிடம் சொல்லவில்லை என்ற கோவம் இருந்தாலும், தன் தோழி எப்படியோ அவள் ஆசைப்பட்ட வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்தாலே போதும் என்ற நல்ல உள்ளம் கொண்ட பெண்.

ஒருவழியாக திகழி அழுது முடித்து, தோழியை சாமாதானம் செய்துவிட்டு , இத்தனை நாள் பேசாததற்கும் சேர்த்து பேசிவிட்டு படுக்க இரவு நெடு நேரம் ஆகிவிட்டது.

உறக்கம் வராமல் வாட்ஸ் ஆப்பை நோண்டிக் கொண்டிருந்தவளுக்கு, மிகனிடம் இருந்து அந்த நேரத்தில் குறுஞ்செய்தி வந்தது.

"என்ன டீ இன்னும் தூங்காம என்ன செய்துட்டு இருக்கே..?"என்று கேட்டு இருந்தான். அவள் ஆன்லைன்லே இருப்பதை பார்த்து விட்டு.

அவளோ, 'இவர் ஏன் இன்னும் தூங்கம இருக்கார்?' என்று நினைத்துக் கொண்டு, " நீங்க ஏன் இன்னும் தூங்கலே.." என்று பதில் அனுப்பினாள்.

மிகன் ,உடனே அவளின் செய்தியை படித்தற்கு அடையாளமாக இரண்டு நீளக் கலர் டிக் காட்டியது.ஆனால் , அவன் திருப்பி எந்த பதிலும் சொல்லவில்லை.

திகழொளி சில வினாடிகள் அவனின் பதிலுக்காக காத்திருந்து பார்த்தாள். அவனிடமிருந்து பதில் வராமல் போகவே, இணைய தொடர்பை துண்டித்து விட்டு, அலைபேசியை அருகில் இருந்த மேஜை மீது வைத்து விட்டு, படுத்துக் கொண்டே மனதிற்குள் மிகனை வறுத்து கொண்டிருந்தாள்.

'இவன் கேட்டா நான் மட்டும் பதில் சொல்லனும்.ஆனால் ,நான் கேட்டா சார் பதில் சொல்ல மாட்டாராம்.சரியான திமிர் பிடிச்சவன்..' என்று மனதில் திட்டிக் கொண்டிருந்தவளை, அலைபேசியின் அழைப்புச் சத்தம் அவளின் கவனத்தை ஈர்த்தது.

மறுபடியும் யாருடா இந்த நேரத்தில் என்று அலைபேசியை எக்கி எடுத்து, ஒளித்திரையைப் பார்த்தவளுக்கு அதில் மிகனின் பெயரை கண்டதும் மனதிற்குள் ஒரு நொடி இனம் புரியாத பரவசம் ஏற்பட்டது.


மெல்ல அலைபேசியை உயிர்ப்பித்து காதில் வைத்தவள், குரலுக்கு வலிக்காமல் மிக மென்மையாக "ஹலோ.." என்றாள்.

அந்தப்பக்கம் அவனோ, "மேடம் இன்னும் தூங்காம ஆன்லைன்லே இன்னேரத்துக்கு என்ன செய்யறீங்க.." என்றவனிடம்..

"தூக்கம் வரலே அது தான் சும்மா பார்த்துட்டு இருந்தேன்.."

"ஏன் தூக்கம் வரலே.."

"நீங்க ஏன் இன்னும் தூங்காம இருக்கீங்க.."

"கொஞ்சம் ஆபீஸ் வேலை இருந்துச்சு அதை செய்துட்டு இருந்தேன்."

"ம்! .."என்றவளிடம்..

"கல்யாண வேலை எல்லாம் எப்படி போகுது.." என்று திருமணம் உறுதியான பிறகு முதல் முறையாக அவளிடம் திருமணத்தை பற்றி கேட்டான்.

"ம் ! அப்படியே போய்ட்டு இருக்கு.."

"என்ன டீ சுரத்தே இல்லாம சொல்றே.."

"இங்க பாருங்க டீ போட்டு பேசாதீங்கன்னு நான் பல வாட்டி சொல்லிட்டேன்.இனி டீ போட்டீங்க எனக்கு கெட்ட கோவம் வரும்.."

"அப்படி தான் டீ போடுவேன், என்ன டீ செய்வே.."

"நான் போனே வைக்கிறேன்.."

"எங்கே வச்சுத் தான் பாரேன்..அடுத்த நிமிஷம் உங்க வீட்லே இருப்பேன்.."

"சும்மா மிராட்டாதீங்க..வீட்லே அம்மா, அப்பா இருக்காங்க.. ஞாபகம் வச்சுக்கோங்க.."

"இருந்தா எனக்கு என்ன?"

"இன்னேரத்துக்கு வந்தீங்கன்னா, என்ன விஷயம்ன்னு கேட்பாங்க.."

"கேட்டா, நீ தான் வரச்சொன்னேன்னு சொல்லுவேன்.." என்று அசால்ட்டாக சொன்னவனிடம்.

"ஆ!" என்று தன் அதிர்ச்சியை வெளிக்காட்டினாள்.


"என்ன வரமாட்டேன்னு நினைச்சீயா ..?"

"நான் எதுவும் நினைக்கலே சாமி..எனக்கு தூக்கம் வருது நான் தூங்கப் போறேன்.." என்றவளிடம்.

"ஓ! எங்கூட பேசுனா உனக்கு தூக்கம் வருதா? வரும்..வரும்..இன்னும் பத்து நாள் தான் டீ, அப்புறம் இங்கு வந்த பின் எங்கிட்ட பேசித்தானே ஆகனும்.." என்றான் நக்கலாக..

"நான் ஒண்ணு சொன்னா.. நீங்க ஒண்ணு புரிஞ்சுக்கிறதே உங்க வேலை .."என்றவளிடம்.

"ஆமாம். நான் உன்னளவு அறிவாளி இல்லையே.." என்றான்.

'என்னத்த பேசுனாலும் குதர்க்காமாகவே பேசறவங்க கிட்ட நாம என்னத்த பேச..'என்று மனதிற்குள் பேசியவள்,சில வினாடிகள் அமைதியாக இருந்தாள்.

அவனோ, "என்ன பேசா மடந்தை ஆயிட்டே .."என்றவனிடம்..

" நான் எது சொன்னாலும் தப்பாவே எடுத்துக்குவீங்க, அது தான் நீங்களே பேசட்டும்ன்னு அமைதியாக இருந்தேன்.."

"ஓ! "என்றவன் அதற்கு மேல் அவளை வதைக்காமல் , "சரி போனை நோண்டாம ஒழுங்கா போய் தூங்கு.."என்றான்.

"ம் ! "என்றவள், விட்டால் போதுமடா சாமி என்று அழைப்பை துண்டித்தாள்.

அந்த பக்கம் மிகனும் மென்புன்னகையுடன் அழைப்பைத் துண்டித்தான்.அவனுள்ளும் இனம் புரியாத மகிழ்ச்சி ஒட்டிக் கொண்டது.

திருமணத்திற்கு இன்னும் பத்து நாள் இருக்கே என்று சலித்துக் கொண்டே படுத்தான்.

அதன் பின்பு வந்த நாட்கள் எந்த பிரச்சினையும் இல்லாமல் நன்றாகவே சென்றது.

ஒரு வழியாக அமுதனுடன் பேசவும் திகழொளிக்கு நேரம் கிடைத்தது.

தம்பியுடன் தனிமை கிடைத்ததும் தன் மனதில் இருந்ததை எல்லாம் கொட்டித் தீர்த்தாள்.

"அம்மு என் மேல் கோவமா?"

"ச்சே! அப்படி எல்லாம் இல்லை..ஏன் இப்படி கேட்கிறே..உன் மேல் என்னால் கோவப்பட முடியுமா கா.."

"அம்மு உன்னை பிரிந்து போவது எனக்கும் ரொம்ப கஷ்டமாக இருக்கு டா.. கல்யாண நாள் நெருங்க நெருங்க எதையோ இழப்பதைப் போல் இருக்குது .."என்ற தமக்கையின் கைகளை அழுந்த பிடித்துக் கொண்ட அமுதன், தமக்கையே பேசட்டும் என்று அமைதியாக இருந்தான்.


"ஏண்டா பெண் பிள்ளைகளுக்கு மட்டும் இப்படி ஒரு நிலை. நாங்கள் மட்டும் கல்யாணம் ஆனா? பிறந்த வீட்டை விட்டு போகனும். ஆனால், ஆண்களுக்கு எந்த வித மாற்றத்தையும் இந்த கல்யாணம் தருவதில்லை.." என்று சலித்துக் கொண்டாள்.

" என்ன செய்வதுக்கா அது தானே காலம் காலமாக நடக்கிறது.நீ வேணா மாமாவே கூட்டிட்டு இங்கே வந்துரு..நாம் பிரிய வேண்டாம்.."

"அது நடக்கிற காரியமா? வேணா ஒண்ணு செய்யலாம் நீ எங்கூடயே வந்துரு.."

"எதுக்கு என்னை போட்டுத் தள்ளவா .."

"என்னடா இப்படி பேசறே..உன்னே யாருடா அப்படி எல்லாம் செய்வாங்க.."

"ம்! உன் வருங்கால புருசன் செய்வாரு..இப்பவே நான் உன் கூட பேசினால் கண்களாலேயே எரித்து சாம்பல் ஆக்குகிறார். கூட வேறு வந்துட்டேன்னு வச்சுக்கோ அப்புறம் அவ்வளவு தான்.."

"போட அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லே ..நீ எதையோ நினைச்சு சும்மா குழப்பிக்காதே.. என்னவோ போட ஒன்னு கிடைச்சா? ஒன்னு இழக்கனும் போல்.. அம்மு நான் போய்ட்டா நீ என்ன மறந்துருவீயா?"

"லூசாக்கா நீ !ஏன் இப்படி உளறறே.. உன்னை எப்படி நான் மறப்பேன்.. நீ எனக்கு இன்னொரு அம்மா .."என்றவனின் தோள்களில் ஆதரவாக சாய்ந்தபடி..

"அம்மு எனக்கு நீ எப்பவுமே வேணும் டா..எனக்கு எல்லாரையும் விட நீ தான் முக்கியம்.என் உயிர் டா நீ.." என்ற தமக்கையிடம்.

"சரி நாளைக்கு உனக்கு குழந்தை பிறந்தவுடன் இதையே சொல்றீயான்னு பார்ப்போம்.." என்றான் கேலியாக.. தமக்கையின் மனநிலையை மாற்றும் பொருட்டு..

"அதில் என்னடா உனக்கு சந்தேகம்? எனக்கு எப்பவுமே என் அம்மு தான் பர்ஸ்ட். அப்புறம் தான் மத்தது எல்லாம்.."

"ம்! அப்படியா ..பார்ப்போம் பார்ப்போம்.."

"ஏண்டா நான் உன்னை பிரியப் போறேன்னு பீல் பண்ணிட்டு இருந்தா, நீ கிண்டலா பண்றே.. உனக்கு கொஞ்சமாவது கவலை இருக்கா..?"என்று கோவமாக தம்பியின் காதுகளை பிடித்து திருகினாள்.

"அச்சோ! அக்கா வலிக்குது விடு..கவலை இல்லாமல் இருக்குமா? பிறந்ததிலிருந்து ஒரு நாள் கூட உன்னை பிரிந்ததும் இல்லே.. பார்க்காமல் இருந்ததும் இல்லே ..ஆனால் இனி அதை எல்லாம் ஏற்றுத் தானே ஆகவேண்டும்.." என்று சொன்னவனின் குரலிருந்த வேதனை அவளையும் தொற்றிக் கொண்டது.

இருவரும் எதுவும் பேசாமல் சிறிது நேரம் அப்படியே சிலையாக நின்றனர்.வாய் பேசாட்டியும் அவர்கள் மனது ஆயிரம் கதை பேசியது.

மாற்றம் ஒன்று தான் மாறாதது என்பதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.

சில வலிகளுக்கு மருந்தே இல்லையே..காலம் மட்டுமே எல்லாவற்றிக்கும் மருந்து.

எத்தனை சோதனைகள் வந்தாலும் அன்பு கொண்ட பாசப்பறவைகளுக்கு இடைவெளி இருக்கும். ஆனால், பிரிவு வராது. என்று இருவரும் தங்கள் மனதை தேற்றிக் கொண்டார்கள்.

கால தேவனை யாராலும் தடுக்க முடியாதே. அவனின் ஓட்டத்திற்கு நாம் ஈடு கொடுத்துத் தானே ஆக வேண்டும். பத்து நாளும் பத்து நிமிஷம் போல் விரைவாக கரைந்தது. இரு குடும்பமும் ஆவலுடன் எதிர்பார்த்த திருமண நாளும் அழகாக விடிந்தது.


தொடரும்.
 
உயிர் துடிப்பாய் நீ!

‌சின்ன முன்னோட்டம்

அரை மணி நேரமாக அவளை நிற்க வைத்துவிட்டு கணினியில் பார்வையை பதித்திருந்த மிகனை மனதிற்குள் வருத்தெடுத்துக் கொண்டிருந்தாள் திகழொளி.

'மூஞ்சியப்பாரு இஞ்சி தின்ன குரங்கு மாதிரியே எப்ப பாரு வச்சுட்டு இருக்கு..அப்படியே சிலுப்பீட்டு இருக்கிற அந்த முடியை பிடித்து இழுத்து நாலு கொட்டு மண்டையில் நறுக்குன்னு வைக்கனும்..'என்று மனதிற்குள் குமுறிக் கொண்டு இருந்தவளின் எண்ண அலைகள் புரிந்தது போல் கணினியில் இருந்த பார்வையை அவள் புறம் திருப்பினான் மிகன்..

திகழொளியோ ,அவன் பார்வையைக் கண்டதும் முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டாள்.

அவனோ, "என்னடி இத்தனை நேரம் என்னை தின்னுடற மாதிரி பார்த்தே..இப்ப நான் பார்த்ததும் நல்ல பிள்ளையாட்டா பார்வையை மாத்திட்டே.."

"நான் நார்மலா தான் பார்த்தேன்.."

"நீ நார்மலா பார்த்ததை நானும் பார்த்தேன்.கேமராவில் .." என்று அவன் சொன்னதும் அவளுக்கு பக்குன்னு மனசு பதறியது.

'தான் இப்போது அவனைப் பற்றி நினைத்து மட்டும் தெரிந்தால் அவ்வளவு தான் இன்னைக்கு என்னை பிரியாணி ஆக்கிடுவான்' என்று அவள் மனதிற்குள் எண்ணும் போதே..

நாற்காலியில் இருந்து சட்டென்று எழுந்து அவள் அருகில் வந்தவன், அவளின் முகத்தில் தன் ஒற்றை விரலால் கோடு வரைந்த படியே.."நீ என்ன செய்தாலும், என்ன நினைத்தாலும் உன் முகமே காட்டிக் கொடுத்துவிடும்..இப்ப என்னை மனசுக்குள் திட்டிட்டு தானே இருந்தே.."என்றவனை தன் அப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்லாமல் சொல்லியது அவள் வதனம்.

அவனோ, அவளின் முகமாறுதலைக் கண்டு தன் வெண் பற்கள் ஒளிர மென் புன்னகை சிந்திய படியே அவளின் இடையில் கை வைத்து தன் புறம் இழுத்து, "மனதில் நினைப்பதை முகத்தில் காட்டாமல் இருக்க முதலில் பழகிக் கொள் .."என்றான் குரலை உயர்த்தாமல் மென்மையாக.

திகழொளியோ, அவனின் நெருக்கத்தில் விதிர்விதித்து போனாள்.அவனின் பார்வையில் தெரிந்த மாற்றமும்,கிறங்கிய குரலும் ,அவனின் தொடுகையும் நேசம் கொண்ட அவள் மனதை அவன் பால் ஈர்த்தது.

கொஞ்சம் முன்பு அவனை மனதிற்குள் கடிந்து கொண்டவள், இப்போது அதை எல்லாம் மறந்து அவன் நெஞ்சில் சாய்ந்து கொள்ளச் சொன்ன தன் மனதுடனேயே போராடிக் கொண்டிருந்தாள்.

அவனோ, அவளின் அவஸ்தையை ரசித்துக் கொண்டு இருந்தான்.

விரைவில் யூடி உடன் வருகிறேன்..
நன்றி
இனிதா மோகன்
 
Last edited:
Hi friends, அனைவருக்கும் இனிய மகளிர் தின நல் வாழ்த்துக்கள்!❤️
இன்றிலிருந்து என் கதைகள் இனி தொடர்ந்து வரும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்..
இடையில் கதையை நிறுத்தியதற்கு என்னை மன்னிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.தொடர்ந்து படித்து உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன். இதே கதையின் அடுத்த பகுதி..


உயிர் துடிப்பாய் நீ !

அத்தியாயம் 17

பொழுது புலராத இளங்காலைப் பொழுதில் , முருகன் கோவிலில் மங்கள இசை ஒலிக்க, திகழொளியின் சங்குக் கழுத்தில் மிகன் திருமாங்கல்யத்தை மூன்று முடிச்சிட்டு தன் இல்லாள் ஆக்கிக் கொண்டான்.

இரு குடும்ப உறவுகளும் மணமக்களை மனதார அட்சதைப் போட்டு ஆசிர்வதித்தனர்.


வாழ்க்கையில் நாம் நினைத்ததும், விரும்பியதும் நம் கை சேர்க்கையில் விவரிக்க முடியாத இன்பம் நம்மை ஆட்கொள்ளும் . அது போன்ற மனநிலையில் தான் திகழொளி இருந்தாள்.

இளஞ்சிவப்பு வண்ணப்பட்டுச் சேலையில்,கல்யாணப் பெண்ணுக்கே உரிய நாணத்துடன் புத்தம் புது மலராக ஜொலித்தாள்.

மிகனோ ,எத்தனையோ இக்கட்டுக்களைக் கடந்து, தான் மனதார விரும்பியவளையே கரம் பிடித்த ஆனந்தத்திலும், பட்டு வேட்டி சட்டையிலும், இன்னும் வசீகரமாகவும் ,கம்பீரமாகவும் இருந்தான்.

மணமக்களின் பெற்றோர்கள் தம் மக்களை திருமண கோலத்தில் கண்டு பூரித்துப் போனார்கள். அவர்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் குளம் கட்டியது.

அமுதனும், கமலியும் கூட முகத்தில் மகிழ்ச்சி மின்ன வலம் வந்தார்கள்.


திருமண சடங்குகள் எளிமையாக கோவிலில் முடிந்தும், மணமக்கள் இருவரும் இரு வீட்டுக்கும் சென்று பாலும் பழமும் உண்டனர்.

திருமணத்திற்கு வெளி ஆட்கள் யாரையுமே அழைக்கவில்லை. அதனால், எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் திருமணம் மிக எளிமையாக அமைதியாக முடிந்தது.


மணமக்கள் மதியம் ஆதரவற்றோர் இல்லத்துக்கு சென்று, அவர்களுக்கு உணவு வழங்கிவிட்டு அங்கேயே அவர்களும் உணவு உண்டனர்.

மதியத்துக்கு மேல் தன் தாய் வீட்டில் இருந்து விட்டு, தன் புகுந்த வீட்டிற்கு திகழொளி கிளம்பினாள்.விடை பெறும் பொழுது தன் தாய் தந்தையிடம் ஆசிர்வாதம் வாங்கியவள், தன் ஆரூயிர் தம்பியை அணைத்துக் கொண்டு பிரிவை நினைத்து அழுது கரைந்தாள்.

இத்தனை வருடம் எல்லாமுமாக இருந்த பெற்றவர்களையும் , உடன் பிறந்தவர்களையும் பிரிவது பெண் பிள்ளைகளுக்கே உண்டான சாபம்.அதற்கு திகழொளி மட்டும் விதிவிலக்கா?

தன் தம்பியை அணைத்து அழுது கரைந்தவளை, மிகன் தான் வலுக்கட்டயாமாக பிரித்து அழைத்து வந்து மகிழுந்தில் ஏற்றினான்.

அக்கா தம்பியின் பாசப்பிணைப்பைக் கண்டு அவனுக்குள் அளவு கடந்த ஆத்திரம் பெருக்கெடுத்தது. தன்னுடன் வரப்பிடிக்காமல் தான் இப்படி அழுகிறாள் என்று அப்பொழுதும் திகழொளியை தவறாகவே நினைத்தான்.

எப்பொழுது தான் அவளுடன் தனிமை கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தவன் , தனிமை கிடைத்தவுடன் அவளை வார்த்தைகளால் நோகடித்தான்.

" ஏண்டி, என்ன செவ்வாய் கிரகத்திற்கா போறே? இப்படி அழுது கரையுறே..எங்கூட வர அவ்வளவு கஷ்டமா இருந்தா, எதுக்கு டீ என்ன கல்யாணம் செய்யனும்? உன் தம்பியோடவே இருக்க வேண்டியது தானே! .."என்று கடிந்தான்.

அவளோ, 'ஒற்றையாய் பிறந்து வளர்ந்தவனுக்கு, நாம் என்ன சொன்னாலும் புரியப் போவது இல்லை.என்னை எப்போதும் தவறாகவே புரிந்து கொள்ளும் இவனிடம் என்ன சொல்லி என்ன ஆகப் போகிறது? 'என்று நினைத்து மெளனமாகவே வெளியில் பார்த்தவாறு அமர்ந்து இருந்தாள்.

அவளின் மெளனம் அவனுக்கு மேலும் கோபத்தைக் கொடுத்து. அவளின் அருகில் நெருங்கி அமர்ந்து, அவளின் காதருகே குனிந்து, " இங்கே பாரு ! உங்க அக்கா தம்பி டிராமாவை எல்லாம் இன்னையோட நிறுத்திக்கோ..! மறுபடியும் எப்பவாவது இப்படி நடந்திட்டீனா? அவ்வளவு தான் ! சொல்லிட்டேன்.." என்றவன் அவளின் கைகளை அழுந்தப் பற்றினான்.

அவளோ , கணவனின் தொடுகையில் சட்டென்று அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

அவனோ, அவளின் விழிகளை கூர்ந்து பார்த்தபடியே, "இனி உன் சிந்தையில் நான் மட்டும் தான் இருக்க வேண்டும்.."என்றான் அதிகாரமாக.

திகழொளிக்கோ, அவனின் குரலும், விழி சொன்ன தேதியும் மனதிற்குள் ஒரு பயத்தை உண்டு பண்ணியது. 'தான் விரும்பிய மிகன் இதுவல்லவே.அந்த மென்மை இப்போது மருந்துக்கு கூட இவனிடம் இல்லையே?' என்று மனதிற்குள் கலங்கினாள்.


அதன்பிறகு வீடு வரும் வரை அவரவர் யோசனையில் அமர்ந்திருந்தனர். மிகனின் வீடு வந்ததும் பட்டுச்சேலை சரசரக்க மெல்ல இறங்கியவளை, மிகனுடன் சேர்த்து நிற்க வைத்து ஆலம் சுற்றி வரவேற்றார் மணியரசி.

திகழொளியோ, வீட்டிற்கு உள்ளே செல்லும் முன், திரும்பி எதிர் வீட்டைப் பார்த்தாள். அதைப் பார்ததும் அவளுள் பல நிகழ்வுகள் வந்து போனது.

பழைய நினைவுகள் அவளை வதைத்தது. எத்தனை இன்பமாக் வாழ்ந்த வீடு என்ற எண்ணம் நினைவுக்கு வந்து அவளை கலங்கவைத்தது.

மிகனோ, முதன் முறையாக அவளின் மனநிலையை உணர்ந்து, அவளின் கைகளைப் பிடித்து அழுத்திக் கொடுத்த படியே உள்ளே அழைத்துச் சென்றான்.

மணியரசி திகழொளியை பூஜை அறைக்கு அழைத்துச் சென்று, விளக்கு ஏற்றி சாமி கும்பிடச் சொன்னார்.

அவர் சொன்னதை அச்சு பிசகாமல் திகழொளி செய்தாள். விளக்கு ஏற்றி, மனதார தன் வாழ்வு இனியாவது சிறக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள்.

மிகனும் சாமி கும்பிட்டதும் தன் அறைக்குச் சென்று விட்டான். திகழொளி மகிழினியை மடியில் அமர்த்திக் கொண்டு, அவளுடன் பேசியபடி அமர்ந்திருந்தாள்.

மணியரசி இருவருக்கும் குடிப்பதற்கு பழரசம் எடுத்து வந்தார்.

மிகன் திகழொளியின் அருகில் இல்லாததைக் கண்டு, " திகழிம்மா இதை மிகனுக்கு கொடுத்துட்டு, நீயும் குடிம்மா..!" என்று பழரசத்தை திகழொளியிடம் கொடுத்து அவர்களுக்கு தனிமை கொடுத்து மிகன் அறைக்கு அனுப்பி வைத்தார்.

மகிழினியையும் தூக்கிச் செல்ல முயன்றவளை தடுத்து, குழந்தையை அவளிடமிருந்து வாங்கிக் கொண்டு அவளை மட்டும் அனுப்பி வைத்தார்.

திகழொளியோ, மறுக்க முடியாமல் பழரச்ததுடன் மிகனின் அறையை நோக்கிச் சென்றாள். இந்த வீடு அவளுக்கு ஏற்கனவே பழக்கமானது என்பதால், மிகனின் அறையைப் பற்றி எதுவும் கேட்காமல் சென்றாள்.

மனதிற்குள் பிரளயமே நடந்தாலும், அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் அடி மேல் அடி வைத்து மாடிப்படி ஏறிச் சென்று, அவன் அறை முன் நின்று ,மெல்ல அறைக்கதவைத் தட்டினாள்.

"கதவு திறந்து தான் இருக்கு.." என்ற மிகனின் குரல் அவளுள் லேசான பதட்டத்தைக் கொடுத்தது.

கதவை மெல்லத் திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.மிகனோ, உடை மாற்றி டீசார்ட்டும், டிராக் பேண்டும் அணிந்து இருந்தான்.

திகழொளியைக் கண்டதும் "வெல்கம் மை டியர் பொண்டாட்டி.." என்று அழுத்திச் சொன்னான்.

திகழொளியோ, அவன் வார்த்தைகளை கண்டு கொள்ளாமல் ,அவன் அருகில் சென்று பழரசத்தை நீட்டினாள் .

அதை வாங்கிய படியே " என்னங்க மேடம் பால் கொண்டு வருவீன்னு பார்த்தா.. புதுசா ஜூஸ் கொண்டு வந்து இருக்கீங்க..?" என்று கண்களில் ரசனையுடன் அவளைப் பார்த்தவாறே கேட்டான்.

"மணியம்மா தான் கொடுத்து விட்டாங்க.." என்றவளிடம் வேறு எதுவும் கேட்காமல் "உட்கார்.." என்று தன் படுக்கையை காட்டினான்.

படு நேர்த்தியாகவும், சுத்தமாகவும் இருந்த படுக்கையில் சென்று திகழொளி அமர்ந்தாள்.

மிகனோ சாளரத்தின் அருகில் சென்று நின்றுகொண்டு, அவளை விழிகளால் அளவு எடுத்தபடி அவள் கொடுத்த பழச்சாற்றை குடித்தான்.

அமைதியாக தலைகுனிந்து படி அமர்ந்து இருந்த திகழொளியிடம், " ஜூஸை குடிக்காமல் என்ன யோசனை.." என்று மிகன் கேட்டதும் ஓரே மிடறில் ஜூஸை குடித்து முடித்தாள்.

ஏனோ? அவளுள் அவன் பேசினாலே, பதற்றம் தொற்றிக் கொள்கிறது.

மிகனோ, கையிலிருந்த காலி டம்ளரை அருகில் இருந்த மேஜை மீது வைத்து விட்டு , "திகழி இங்க வா ..!"என்று அழைத்தான்.


திகழொளியோ, அவனின் அழைப்பை அலட்சியமும் செய்ய முடியாமல், எழுந்தும் செல்ல முடியாமல் காலி டம்ளரை இறுக்கி பற்றிய படி தவிப்புடன் அமர்ந்து இருந்தாள்.

அவனோ, அவள் அசையாமல் அமர்ந்திருப்பதைக் கண்டு, அவள் அருகில் சென்று அவள் கையிலிருந்த டம்ளரை வாங்கி மேஜை மீது வைத்து விட்டு, அவளின் கைப் பற்றி எழுப்பி, ஜன்னல் அருகே அழைத்துச் சென்றான். அவளோ பேசமடந்தையாக அவனுடன் சென்றாள்.

சாளரத்தின் அருகே சென்றதும் "திகழி இங்கிருந்து தான் நான் உன்னை முதன் முதலாகப் பார்த்தேன்.." என்றதும் நிமிர்ந்து அவனை விழிவிரியப் பார்த்தாள்.

அவனோ, அவளின் வியந்த பார்வையை கண்டு கொள்ளாமல், "அன்னைக்கு நீ பச்சைக் கலரில் பட்டுப் பாவாடை போட்டு இருந்தே ! இரண்டு ஜடை போட்டு தலை நிறைய மல்லிகைப் பூ வச்சு இருந்தே! அப்புறம் எங்க வீட்டை பார்த்து படி உட்கார்ந்து குனிந்து கோலம் போட்டுட்டு இருந்தே! உன் ஆசைத் தம்பி உன் பக்கத்தில் உட்கார்ந்து கோலத்திற்கு கலர் கொடுத்துட்டு இருந்தான்.அன்னைக்கு கார்த்திகை தீபம். ஏனோ உன்னை அப்படிப் பார்த்த அந்த நொடி ! நீ என் வாழ்க்கையில் ஒளியேற்ற வந்த தேவதையாய் என் மனதிற்குள் தோன்றியது.."என்று எதிர் வீட்டைப் பார்த்தவாறு சொன்னவனை ஆச்சரியமாக பார்த்தாள்.


அவனோ அவளைப் பார்க்காமல் வெளியே பார்த்தபடியே "அந்த காட்சி இப்போதும் என் கண் முன்னே வந்து போகிறது.ஆனால் , நான் பார்க்கும் இந்தப் பெண்ணால் என் வாழ்க்கையில் நான் இழக்க கூடாததை எல்லாம் இழக்கப் போகிறேன் என்று அன்று எனக்கு தெரியவில்லை.." என்றவனின் வார்த்தைகள் அவளுள் குருதி வடியச் செய்தது.

அவனோ தன்னவளை நோகடித்துக் கொண்டிருக்கிறோம் என்று உணராமல், மேலும் மேலும் அவள் நெஞ்சை புண்ணாக்கிக் கொண்டிருந்தான்.

"அன்னைக்கு மட்டும் உன்னை நான் பார்க்கவில்லை என்றால் பல பிரச்சினைகள் வராமல் போய் இருக்கும்..நானும் அனுபவிக்க முடியாத அளவு மனவேதனை அடைந்து இருக்க மாட்டேன்.."என்றான்.

அவளோ, கண்களில் நீர் கோர்க்க சிலையாக நின்றாள். பழைய நினைவுகள் அவனுள் சினத்தைக் கொடுக்க , "ஏண்டி நீ நான் எதிர்பார்த்த மாதிரி உண்மையாக இல்லாமல் போனாய்? ஏண்டி என் நம்பிக்கையை பொய்த்து போக வைத்தாய் ! நீ மட்டும் நான் நினைத்தபடி இருந்திருந்தால் நம் வாழ்க்கை எத்தனை அழகாக இருந்து இருக்கும்.." என்று‌ கூறியபடி அவள் தோளைப் பற்றிக் குலுக்கினான்.

அவளோ, அவனின் வார்த்தையாலும், செயலாலும் மனதிற்குள் புழுவாக துடித்துக் கொண்டிருந்தாள். 'நான் உங்க நம்பிக்கையை போக்கவில்லையே.. நான் உங்களுக்கு உண்மையாகத்தான் இன்று வரை இருக்கிறேன். ஆனால் ,அதை நீங்கள் தான் புரிந்து கொள்ளவே இல்லை.. இப்போது சொன்னாலும் புரிந்து கொள்ள மாட்டீங்க..' என்று அவள் மனம் கூப்பாடு போட்டது.


சட்டென்று அவளை விடுவித்து விட்டு , படுக்கையில் சென்று அவன் தலையை பிடித்த படி அமர்ந்தான்.இன்னும் சில நொடிகள் அவள் அருகில் இருந்தால், அவளை என்ன செய்வான் என்றே அவனுக்கு தெரியாது. பழைய ஞாபகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து அவனையும் வதைத்தது.

திகழொளியோ, அவன் தோளைப் பிடித்து குலுக்கியதில் தோள்களே இற்றுப் போனது போல் வலித்ததை தாங்கியபடி , சாளரத்தின் கம்பியில் சாய்ந்து கொண்டு ஊமைக் கண்ணீர் வடித்தாள்.

மிகனுக்கு கடந்த கால நினைவுகளின் தாக்கத்தால் ஏற்பட்ட வலியை பொறுக்க முடியாமல், அறையை விட்டு வெளியில் சென்றான்.

வரவேற்பறையில் அமர்ந்திருந்த பெரியவர்களிடம் "கொஞ்சம் வெளியில் போய்ட்டு வரேன்.." என்று கூறியவன், அவர்களின் பதிலை கூட எதிர்பார்க்காமல் வீட்டை விட்டு வெளியே வந்தான்.

வராண்டாவில் நின்றிருந்த தன் காரை எடுத்துக் கொண்டு , எங்கே செல்வது என்று தெரியாமல்..நன்றாக இருட்டும் வரை இலக்கற்று சுற்றிவிட்டு இருட்டிய பிறகே வீட்டிற்கு வந்தான்.

திகழொளியோ, மிகன் சென்றதும் அப்படி‌யே சுவற்றில் சாய்ந்து அமர்ந்து தேற்றுவோர் அற்று அழுது கரைந்தாள்.கடந்த கால நிகழ்வுகள் அவளுக்கும் பெரும் வேதனையை தட்டி எழுப்பியது.

எத்தனை நேரம் அப்படி இருந்தாளோ தெரியாது. மகிழினியின் "அம்மா.." என்ற அழைப்பு தான் அவளை நிகழ்வுக்கு அழைத்து வந்தது.

அழுது வீங்கி இருந்த அவளின் முகத்தை கண்டு மகிழினி மழலை மொழியில், அவளின் கன்னம் தொட்டு "தலவலிக்கா ..?"என்று கேட்டாள்.

குழந்தையின் அன்பில் தன் கவலையை ஒதுக்கி விட்டு அவளை தூக்கி தன் நெஞ்சோடு சிறிது நேரம் அணைத்துக் கொண்டாள்.குழந்தையின் பரிசம் அவளுள் மெல்ல மெல்ல அமைதியைக் கொடுத்தது.

மாலை இருட்டத் தொடங்கியதும் மணியரசி வந்து, " ஏன் மா லைட் கூட போடாமல் இருட்டில் உட்கார்ந்து இருக்கீங்க.. இந்த மிகன் வேறு எங்கு போனான்னு தெரியலே? உங்கிட்டயாவது சொல்லிட்டு போனானா..?" என்று கேட்டவரிடம் இல்லை என்று தலையை மட்டும் ஆட்டினாள்.

"எப்பத்தான் இந்த பையனுக்கு பொறுப்பு வருமோ..?" என்று புலம்பிய படியே " நீ எழுந்து கை கால் முகம் கழுவிட்டு வேறு டிரஸ் மாத்து மா.. காலையிலிருந்து பட்டுப் புடவையிலேயே இருக்கிறாயே.." என்றவரிடம் சரி என்று அதற்கும் தலையை ஆட்டினாள்.

"உன் பெட்டி கீழேயே இருக்கும்மா.. போய் எடுத்து வந்து, இங்கே வைத்துக் கொள் மா..!" என்று கூறிச் சென்றார்.

திகழொளியோ, மணியரசியுடன் சென்று அவளின் உடமைகளை எடுத்து வந்து மிகன் அறையில் வைத்தாள்.

மணியரசி சொன்னது போல் முகம் கழுவி விட்டு, மகிழினிக்கும் உடல் கழுவி வேறு உடை மாற்றி விட்டவள், தானும் கணம் அதிகம் இல்லாத ஷிப்பான் சேலை ஒன்றை எடுத்து உடுத்திக் கொண்டாள்.

அதுவரை மிகன் வராததால், குழந்தையை தூக்கிக் கொண்டு, மணியரசியை தேடிச் சென்று அவர் மறுக்க மறுக்க சமையலுக்கு காய்கறி வெட்டிக் கொடுத்தாள்.

வெளியில் சென்று விட்டு இருட்டிய பின் வந்த மிகனை, வாசலிலேயே நிறுத்தி வைத்து உலகமாறன் கடிந்து கொண்டார்.

"என்னப்பா இது! எங்கே போறேன்னு சொல்லிட்டு போக மாட்டீயா? இத்தனை நாள் எப்படியோ.. இனி உன்னை நம்பி ஒருத்தி வந்து இருக்கா.. கொஞ்சம் பொறுப்பா நட்நதுக்கோ !" என்றவரிடம் பதில் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டிச் சென்றான்.


இரவு உணவை உண்டு முடிக்கும் வரை எந்த பிரச்சினையும் இல்லாமல் சென்றது. அதன் பிறகு திகழொளியிடம் பால் சொம்பை மணியரசி கொடுத்து, மிகன் அறைக்குச் போகச் சொன்னதும், அவளுள்
பி
ரளயம் வெடித்தது.

தொடரும்..
படித்து விட்டு உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.கருத்து திரி கீழே உள்ளது.
 

New Threads

Top Bottom