Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

Status
Not open for further replies.
"சரி விடு அதிதி. நம்ம எல்லாரும் கோவிலுக்குப் போகலாம். அவன் மட்டும் தனியா இங்க கிடக்கட்டும்." என கீர்த்தி சொல்லவும், பதறிய ப்ரஜீன் வேறு வழியில்லாமல் தன் தாய் போட்டு விட்ட சிவப்பு நிற ஜட்டியுடன் வேஷ்டி அணிந்து வெளியே வந்தான்.


அனைவரும் ஒரு சேரக் கிளம்பி காரில் தங்கள் குலதெய்வக் கோவிலுக்குச் சென்றனர்.


அதிதி, கீர்த்தி, ஸ்ருதி என அனைவரும் ரங்கோலியிட்ட பின், நாச்சியம்மையின் குடும்பத்தின் சார்பில் மூன்று பொங்கல் வைக்கப்பட்டது.


நாச்சியம்மையின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் அந்த பொங்கல் விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.


ராதா தன் வயிற்றில் பிறவாத மூன்று மகள்களுக்கும் அறிவுரை வழங்கிக்கொண்டு அவர்களின் அருகிலேயே நின்று கொண்டார்.


முதன்முதலாக இவ்வாறு ஒரு அடுப்படியில் அமர்ந்து சமைப்பதால் பழக்கமில்லாத அதிதிக்கு புகையில் கண்கள் கலங்கின.


ராதா பக்கத்திலிருந்த கீர்த்தி, ஸ்ருதிக்கு உதவிக் கொண்டிருந்ததால் இவளுக்கு உதவி புரிய இயலவில்லை.


அவளின் கஷ்டத்தை உணர்ந்த விக்ரமன், யாரையும் கண்டுகொள்ளாமல் தானே தனது வெள்ளை வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டு அவளின் அருகில் அமர்ந்து, அடுப்பு சரியாக எரிய உதவி புரிந்தான்.


அனைவரின் பொங்கலும் இறைவனுக்கு படைக்கப்பட்டு, பின் அங்கிருந்தவர்களுக்கு பகிரப்பட்டது.


அதிதி கையில் சிறு தீக்காயம் பட்டதைப் பார்த்த விக்ரமன் தானே அவளுக்குப் பொங்கலை எடுத்து ஊட்டிவிட, அவர்களை கவனித்துக் கொண்டிருந்த நாச்சியம்மையின் உறவுக்காரப் பெண்மணி ஒருவர் புகையத் துவங்கினார்.


"என்ன நாச்சியம்மா? உன் தங்கச்சி மகனை அவம் பொண்டாட்டி தன் முந்தானையில முடிஞ்சி வச்சிருக்கா போல? அவளை இந்தத் தாங்கு தாங்குறான்?" எனக் கேட்கவும்,


தானும் அவர்களைப் பார்த்தவர், "அவ முந்தானைல என்ன? தன் தலை முடியிலேயே முடிஞ்சி வச்சிருந்தாலும் என் பேச்சுக்கு மறு பேச்சு பேச மாட்டான் என் புள்ள" என்று பெருமை பேசினார்.


ஆனால், பிற்காலத்தில் தான் நம்பும் தன் தங்கை மகனே கேள்விக் கணைகளால் தன்னை திணறடிக்கப் போவதை அப்போது அவர் அறிந்திருக்கவில்லை.


"ஆமா நாச்சியம்மா வீட்டுல தான் உன் தங்கச்சி அலமேலுவோட நகைகள் எல்லாம் இருக்குமே? அதை இவளுக்கு கொடுக்கலையா? புள்ள வெறும் கழுத்தோட வந்திருக்கு?" என்றதும்,


"இப்படி ஒண்ணும் போடாம இருக்கறது தான் இப்ப நாகரீகமாம் அண்ணி. அதான் எல்லாம் இருந்தும் ஒண்ணும் போடாம இருக்கா. நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன். நம்ம சொல்றதை இப்ப இருக்க இளவட்டம் எங்க கேட்குது?" என பொய்யுரைத்து சமாளித்து வைத்தார் நாச்சியம்மை.


"படிச்ச புள்ள, நல்லா கண்ணுக்கு அடக்கமாக புடவை கட்டிட்டு வரும்னு பார்த்தா, தக தகன்னு என்னவோ ஆட்டக்காரி கணக்கா இல்ல புடவை கட்டிட்டு வந்திருக்கா" என இன்னொருவர் வாயை வைத்துக்கொண்டு சும்மாயிராமல் கேட்கவும்,


அருகில் தன் அண்ணன் பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டிருந்த கௌதமன், "இங்க ஒருத்தன் இருபத்தொன்பது வயசாகியும் தனியா இருக்கானே, அவனுக்கு ஏன் இன்னும் கல்யாணம் பண்ணலைனு ஒன்னாவது கேட்குதா பாரு? எவ என்ன போட்டிருக்கான்னு புறணி பேசுறதுலயே எல்லாம் குறியா இருக்குதுகளே" எனத் தன் தலையில் அடித்துக் கொண்டான்.
 
அவனின் கூற்றில் அவனது இரண்டு அண்ணன்மார்களும் விழுந்து விழுந்து சிரித்தனர்.


அவர்களின் கேள்விகளைக் கேட்டு பொறுக்க முடியாத நாச்சியம்மை, 'பொங்கல் தின்னுட்டு போறாளுகளான்னு பாரேன். கேள்வி மேல கேள்வியாக் கேட்டு கொல்றாளுக' என மனதில் நினைத்துக்கொண்டே, "நானும் எவ்வளவோ நல்ல நல்ல கலர்ல எல்லாம் புடவையை எடுத்து காட்டினேன் அண்ணி. இப்படி கலர்ல கட்டினா தான் நவீன காலத்துக்கு ஏத்த மாதிரி இருக்கும்னு தேடிப்பிடிச்சு எடுத்தா. விக்ரமனும் வேண்டாம் நல்லாயில்ல, வேற கலர்ல எடுனு சொன்னான். ஆனா இந்தக்குட்டி கேட்கவேயில்ல" என்று கதை விடவும்,


"என்ன நாச்சியம்மா சொல்ற? அவன் பேச்சை இந்தப் புள்ள கேட்காதா? அப்போ எப்போ அத்துட்டு அப்பன் வீட்டுக்கு போவான்னு தெரியலனு சொல்லு. அவளே தன் தலையில் மண்ணள்ளி போட்டுக்கிருவா போலயிருக்கே. என்ன புள்ளையோ?" என வந்திருந்த ஒருவர் நாச்சியம்மையின் திட்டபடி அங்கலாய்த்தார்.


அதிதி தான் வைத்தப் பொங்கலை மரத்தின் பின்புறம் உட்கார்ந்திருந்த சில முதியவர்களிடம் கொடுத்துவிட்டு திரும்பிய போது, அவளைப் பார்த்த ஒரு பெண்மணி, "என்ன தாயி நல்லா இருக்கியா?" என்று கேட்க,


“நீங்க யாரு?” எனத் திரு திருவென விழித்தவளைக் கண்டு, "என்ன நாச்சியம்மா? உன் மருமவ இந்த முழி முழிக்கிறா. நான் யாருன்னு சொல்லு இவளுக்கு!" என்றார் அந்தப் பெண்மணி.


"அடடே! வாங்க அண்ணி. அண்ணா வரலையா? நீங்க வர ஏன் இவ்ளோ நேரமாச்சி?" என நலம் விசாரித்தவர்,


பின் அதிதியிடம், "இவங்க பேரு அன்னக்கொடி. எனக்கு அண்ணி முறை. உனக்கு பெரியம்மா முறை வரும்." எனவும்,


"வாங்க பெரியம்மா. நல்லாயிருக்கீங்களா?" என்றாள் அதிதி.


அவள் முறை வைத்து கூப்பிட்டதில் மனம் பூரித்துப் போனவர், "எனக்கென்ன தாயி? நல்லா இருக்கேன். ஒரு மாசத்துக்கு முன்னாடி பார்த்தது. இப்போ தான் பாக்கேன். அம்மாடி! இப்போ தான் புள்ள முகமே பூரிச்சுப்போய் கிடக்கு" என அவள் முகத்தை வழித்து நெட்டி முறித்தார்.


பின், "விக்ரமன் உன்னை நல்லா பார்த்துக்கிறானா தாயி? நான் ஒரு கேனச்சிறுக்கி. உன் முகத்தை பார்த்தாலே தெரியுதே விக்ரமனோட அனுசரனைப் பத்தி. உன் வீட்ல இருக்கறவங்கக் கிட்டயிருந்து தகவல் ஏதாவது வந்துச்சா தாயி?" எனக் கேட்கவும், கேவி கேவி அழுதாள் அதிதி.


அழுகையினூடே தன்னைப் பார்த்து 'இல்லை' என தலையாட்டியவளின் கரம் பிடித்து, "கவலப்படாத தாயி. சீக்கிரமே பேசிடுவாங்க. அதான் தை பொறந்திருச்சில்ல? இனி வழியும் பிறக்கும்" என்றவரை ஆச்சரியமாகப் பார்த்த அதிதி, திரும்பி அங்கு கொலுவீற்றிருந்த அம்மனை மனமுருக வேண்டிக் கொண்டாள்.


இறுதியில் அனைவரும் மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு வீடு நோக்கி புறப்பட்டனர். வீட்டிற்கு வந்த ராதாவிற்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.


வீட்டிற்குள் நுழைந்த ராதா வரவேற்பறையில் அமர்ந்திருந்த தன் கணவர் ஹரியைக் கண்டு மகிழ்ச்சியில் உறைந்து போனார்.


பின்னால் வந்த அனைவரும் அவரை நலம் விசாரிக்க தன்னிலை மீண்ட ராதா, "என்னங்க! வேலை இருக்கு. இப்போதைக்கு எங்கயும் நகர முடியாதுனு சொன்னீங்க? இப்போ சர்ப்ரைஸா இங்க வந்து நிற்கறீங்க?" என ஆனந்த அதிர்ச்சியில் வினவவும்,


"நீ பொங்கல் சாப்பிட்டியா?" என சம்பந்தமில்லாமல் கேட்டார் அவர்.


"நீங்க இல்லாம நான் என்னைக்குங்க பொங்கல் கொண்டாடியிருக்கேன்?" என கண்கள் கலங்கிய ராதாவை, இவ்வளவு நேரம் வற்புறுத்தியும் இவர் பொங்கல் உண்ணாததற்கு காரணம் தன் கணவர் அருகில் இல்லாதது தானா? என அனைவரும் ஆச்சரியமாய் பார்த்தனர்.


"நீ நான் இல்லாம எதுவும் சாப்பிட்டிருக்க மாட்டேனு தெரியும். அதான் நாச்சியக்கா நேத்து போன் பண்ணி, நீ வரலைன்னதும் உன் பொண்டாட்டி முகமே தொங்கிப் போச்சு. உடனே வாடானு சொன்னதும் முக்கியமான வேலையெல்லாம் முடிச்சி கொடுத்துட்டு, உடனே கிளம்பி வந்துட்டேன்." என ஹரி கூறவும், அதைக்கேட்ட அதிதிக்கு தான் நாச்சியம்மை மேல் வைத்த மதிப்பு பன்மடங்காகியது.

ஆனால், அவள் விஷயத்தில் இந்த ஏங்குதலையெல்லாம் அவர் பொருட்படுத்தப் போவதில்லை என்பதை எந்த அசரீரியும் அதிதிக்கு உரைக்கவில்லை, பாவம்!
 
நாவல் பிடிச்சிருந்தா லைக் பண்ணவும் கமெண்ட் பண்ணவும் மறக்க வேண்டாம் குண்டுமல்லீஸ்❤️
 
அத்தியாயம் 6


ராதாவிற்கு சந்தோசம் பிடிபடவில்லை.


"இருங்க கோவில்ல செஞ்ச பொங்கலை எடுத்துட்டு வர்றேன்" என்றவர் குடுகுடுவென உள்ளே ஓடினார்.


"நான் நம்ம ரூமுக்குப் போறேன் ராதா. நீ அங்க கொண்டு வந்திரு" என்று விட்டு வரவேற்பறையில் உள்ள அனைவரிடமும் பேசிவிட்டு தன்னறைக்குச் சென்றுவிட்டார் ஹரிகிருஷ்ணன்.


அவருக்குப் பின்னேயே பொங்கலுடன் வந்த ராதா அதனை அவருக்கு ஊட்டிவிட, ஆ வாங்கியவர் தானும் அவருக்கு ஊட்டிவிட்டார்.


"பேரன் பேத்தி எடுத்தாச்சு. இன்னும் என்ன ராதா சின்ன குழந்தை மாதிரி எனக்காகவே காத்திட்டிருக்க?" என ஹரி அவரின் மூக்கை பிடித்து ஆட்டவும்,


"நான் எப்போதுமே சின்ன குழந்தை தான் உங்களுக்கு." என அவரின் தோளில் வாகாக சாய்ந்துகொண்டார் ராதா.


"தை மாசம் மட்டும் என் வாழ்நாள்ல மறக்கவே முடியாதுங்க. நமக்கு கல்யாணமானது தை மாசம் தான். நம்ம மாயா பிறந்ததும் தை மாசம் தான்" என மகிழ்ச்சியுடன் கூறியவர்,


பின், "முத்து அண்ணாவும், அலமேலு அண்ணியும் இறந்ததும் கூட இந்த தை மாசம் தான்" எனத் தன் துக்கம் தாளாமல் தன் கணவரின் மார்பில் சாய்ந்தழுதார்.


"சரிம்மா விடு. அதையே நினைச்சிக்கிட்டு இருந்தா எப்படி? இப்போ விக்ரமனைப் பார்த்து முத்துவும், அலமுவும் சந்தோசமாத் தான் இருப்பாங்க." என ஆறுதல் உரைத்தார் ஹரி.


"ஆனா, அந்த சந்தோசம் ரொம்ப நாள் நிலைக்கப் போறதில்லையேங்க? பெரிய பாவத்தை இல்லைங்க நம்ம செய்ய இருக்கோம்?" எனத் தன்னால் முடிந்த மட்டும் அழுது ஓய்ந்தார் ராதா.


அவரின் தலையை தடவிக் கொடுத்து தேற்றுவதை தவிர ஹரிக்கும் வேறு வழி தெரியவில்லை.


நாச்சியம்மை இரவு உணவை முடித்துக்கொண்டு அறைக்குச் செல்ல முற்படும் பொழுது, அவரின் வழியில் வந்து நின்றான் விக்ரமன்.


"நாச்சூம்மா, நான் ஒரு ஒரு வாரம் அதிதியோட நம்ம தோட்டத்து வீட்டுக்குப் போயிட்டு வரலாம்னு இருக்கேன். அது உங்களுக்கு பிரச்சினை இல்லையே?" என அனுமதி கேட்க,


நமட்டுச்சிரிப்பு சிரித்தவர், "உன் இஷ்டம், போயிட்டு வா." என்றார்.


அவர் அனுமதியளிக்கவும், மறுநாளே அதிதியை அழைத்துக்கொண்டு மூன்று செட் உடைகளுடன் புறப்பட்டுவிட்டான் விக்ரமன்.


அந்தத் தோட்டத்து வீடானது சிறுகுடில் போல் அழகாயிருந்தது. சிறுவயதில் தன் பெற்றோருடன் அந்த தோட்டத்திற்கு வந்திருந்த நினைவுகள் எல்லாம் இன்னும் அவனின் ஞாபக அடுக்கில் பொக்கிஷங்களாய் இருப்பதால் அந்த இடத்தை மிகவும் நேசித்தான் விக்ரமன்.
 
அவனது தோட்டம் அந்த குடிலைச் சுற்றி நூறு ஏக்கர் அளவிற்கு அமைந்திருந்ததால் ஆர்வமாக அதனைச் சுற்றிக்காட்ட அவளை அழைத்தான் விக்ரமன்.


ஆனால், அதிதியோ குடிலின் வெளியேயிருந்த பம்புசெட் மோட்டாரையே ரசித்துப் பார்த்துக் கொண்டு, அவனுடன் வர மறுத்தாள்.


பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவன் அந்த மோட்டார் பம்பின் தண்ணீர் தொட்டிக்குள்ளேயே அவளைத் தள்ளி, தானும் அதில் குதித்தான்.


"என்னங்க? இப்படி தள்ளி விட்டுட்டீங்க?" என சிணுங்கியவளிடம்,


"ஆமா, உன்னை முழுகாம ஆக்கிட்டேன்னு நாளப்பின்னே எவனும் குறை சொல்லிறக்கூடாது பாரு அதான்." எனக்கூறி அவளை தண்ணீருக்குள்ளேயே வைத்து இதழ்களில் அமிழ்தம் பருகினான் தாகம் அடங்காமல்.


அடுத்தக்கட்டமாய் அவளை தண்ணீரிலிருந்து அள்ளியதில், அவளின் ஆடைகள் எல்லாம் எக்குத்தப்பாக விலகியிருக்க, அதைப் பார்த்து பித்தம் கொண்டவன், அவளை குடிலுக்குள் தூக்கிச்சென்று ஆட்கொண்டான்.


அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபியாக அவன் கைகளில் அட்சயப் பாத்திரமானாள் அதிதி.


முன் கூட்டியே தன் வரவை அறிவித்து, வேலையாட்களுக்கு ஊதியத்துடன் விடுமுறையும் அளித்திருந்ததால் அனைத்தும் வசதியாய் போனது அவர்களுக்கு.


சாயங்காலம் அவளை நெல் விளையும் தோட்டப்பகுதிக்கு அழைத்துச் சென்றவன் வரப்பில் நடந்து இருமுறை கால் வழுக்கியவளை தன் கைவளைவுக்குள் கொண்டுவர, கூச்சத்தில் பதறி விலகிய அதிதி அக்கம் பக்கம் பார்த்து பெருமூச்சு விட்டாள்.


சுற்றிலும் அனைத்து திசைகளிலும் இருந்த பசுமை கண்ணுக்கு குளிர்ச்சியைத் தந்தது. நெல்மணிகளை சுமந்து பால்கொடுக்கும் தாயாய் கூன் வளைத்து நின்ற நெற்கதிர்களை கைகளில் ஏந்தும் போது புல்லரித்தது அதிதிக்கு.


அனைத்துப் பயிர் வகைகளைப் பற்றியும் அவன் பாடம் எடுத்துக்கொண்டு வர, அவனை ஓரிடத்தில் நிறுத்தி‌ வரப்பிலமர்ந்து, நீரோடும் வாய்க்காலில் கால்களை விட்டு தன்னருகில் அமரச்சொன்னாள் அதிதி.


அருகில் அமர்ந்தவனின் மடியில் தன் தலையை சாய்த்தவள் வியப்பாய் கேட்டாள்.


"உங்களுக்கு லேப்டாப் பத்தி மட்டும் தான் தெரியும்னு நெனச்சேன். இதெல்லாம் கூட தெரியுமா? எப்படிங்க?" என்றாள்.

"எங்கப்பாவுக்கு விவசாயத்துல ரொம்ப ஆர்வம் அதிதி. அதான் அவரைப் பார்த்து எனக்கும் இது மேல ரொம்ப நாட்டமாகிடுச்சி" என்றதும்,


"என்னங்க, இந்த இடம் ரொம்ப அழகா, மனசுக்கு இதமா, அமைதியா இருக்குல்ல? ச்சே, இங்க மட்டும் தான் இந்த பசுமையெல்லாம் பார்க்க முடியுது. சென்னைல நாங்க தங்கியிருந்த எடத்துல எல்லாம் ஒரே புகையையும் பிளாட்டையும் மட்டும் தான் பார்க்க முடியும்" என அயற்சியாக சொன்னதும்,


"இருக்குற காட்டையும் ஏரியையும் அழிச்சு வீடு கட்டினா எங்க பசுமையை பார்க்க முடியும் அதிதி? பசியையம் வறட்சியையும் தான் பார்க்க முடியும். அங்கங்க மீத்தேன் எடுக்கறேனு விவசாயிகளை மீளாத் துயர்ல தள்ளிட்டோம். காட்டை கொளுத்தின நம்மளை இப்ப கோடை வெயில் கொளுத்துது. இயற்கையை அழிச்ச நமக்கு இப்ப செயற்கை கேன் தண்ணீர் கூட கிடைக்க மாட்டேங்குது" என பொங்கியவனின் கூற்றை ஆமோதிக்கும் விதமாய் வானம் தன்னொலியை எழுப்பியது.


வானைப் பார்த்தவன், "வா அம்முக்குட்டி! நம்ம புலம்பி என்னாகப் போகுது? வானம் இருட்டிட்டு வருது பாரு. லேசாத் தூறல் வேற போடுது. மழை பெருசா வர்றதுக்குள்ள நம்ம நம்மோட குடிலுக்கு போயிடலாம்." என முஸ்தீபு காட்டினான்.
 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom