Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வசீகரனின் யாழ் நீ!

யாழ் 18
"சோரமிழைத்திடையர் பெண்களுடனே - அவன் சூழ்ச்சித் திறமை பல காட்டுவதெல்லாம்
வீர மறக்குலத்து மாதரிடத்தே
வேண்டியதில்லையென்று சொல்லிவிடடீ!"
தனது அறையில் நாற்காலியில் அமர்ந்து மேஜை மீது இருந்த பேப்பரில் ஒரு பெண் உற்சாகமாக ஊஞ்சலாடும் ஓவியத்தை வரைந்துக் கொண்டு இருந்தாள் யாழினி.
வசீகரன்-யாழினி திருமணம் முடிந்து ஒரு மாதம் ஓடிவிட்டது. திருமணம் முடிந்து கோவில் வேண்டுதல்கள், உறவினர் விருந்துகள் எல்லாம் முடிவதற்குள் ஒரு மாதம் ஆகிவிட்டது. வந்தனாவின் வீட்டுக்கும் விருந்துக்கு சென்றனர். ஆனால் வந்தனா தனிகுடித்தனமாக இருந்ததால் அங்கு எந்த அசவுகரியங்களும் ஏற்படவில்லை. வந்தனாவின் மாமியார் ஒருமுறை கடமைக்கு வந்து இவர்களை பார்த்துவிட்டு போனார். ஆனால் அனாவசியமாக எதுவும் பேசவில்லை.

இந்த ஒரு மாதத்தில் யாழினி புகுந்த வீட்டில் நன்றாக பழகிவிட்டாள். பார்வதி பூரணி போல் கண்டிப்பாக இல்லாமல் செல்லம் கொஞ்சியதால் அவருடன் மிகவும் நெருங்கிவிட்டாள். வந்தனா அவளுக்கு எப்போதும் நெருங்கிய தோழி தான். தினமும் இரண்டு மணி நேரமாவது இருவரும் போனில் பேசி கொள்வார்கள். வசீகரன் கூட,"மாமியார், நாத்தனார் மேல் இருக்கும் அன்பில் கொஞ்சம் இவங்க கிடைக்க காரணமான உன் ஹஸ்பண்ட் என் மேலே காட்டக்கூடாதா? " என யாழினியிடம் கேட்டான்.

அவனுக்கு எதுவும் பதில் சொல்லாமல் வந்தனாவிற்கு போன் போட்டு, "அண்ணி , உங்க தம்பி உங்க கிட்ட நா பேச கூடாதுனு சண்டை போடுறாரு.என்னன்னு நீங்களே கேளுங்க" என போட்டு கொடுத்துவிட்டாள்.

வந்தனாவோ,"வீட்டு பெண்கள் ஒண்ணா இருக்க மாட்டாங்களானு எல்லா ஆண்களும் ஆசைப்படுவாங்க. நீ என்னடான்னா எங்களை பிரிக்க பாக்குரியா? எவ்ளோ பொறாமைடா உனக்கு? இனி நாங்க ரொம்ப நேரம் பேசுவோம். அதுவும் நைட்ல தான் பேசுவோம். உன்னால முடிஞ்சத பாத்துக்கோ" என்றுவிட்டாள்.

வசீகரன் அதிர்ச்சியின் எல்லைக்கே போய்விட்டான். அதிலிருந்து அதை பற்றி பேசவே இல்லை அவன். அதற்கு காரணம் பயமோ கோபமோ இல்லை. எந்த கணவனுக்கும் தன் மனைவி , தன் தாயிடமும் சகோதரியிடமும் அன்பு பாராட்டினால் மனைவியின் மீது அன்பும் பெருமிதமும் தான் வரும். வசீகரனும் அதே மனநிலையில் தான் இருந்தான்.

பூரணியிடம் கூட மாமியாரின் புகழை தான் பாடுவாள் யாழினி. பூரணிக்கு தன் மகளின் வாழ்வு நன்றாக அமைந்ததில் ஆனந்தம். மாதவனின் துறையில் அவனுக்கு இருக்கும் அறிவை அறிந்த வசீ, சொந்தமாக தொழில் தொடங்க அவனுக்கு ஊக்கம் தந்தான். ஆனால் மாதவன் தான் அதில் நாட்டம் இல்லாமல் இருக்கிறான். இருந்தும் வசீ சந்திக்கும் போதெல்லாம் மாதவனுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டு இருக்கிறான். வசீயின் இந்த குணம் யாழினிக்கு பிடித்து இருந்தது. தன் அண்ணன் மீது கணவன் காட்டும் அக்கறை அவளுக்கு இதமாக இருந்தது. இருப்பினும் அவன் ஏன் தன்னை திருமணம் செய்துக்கொண்டான் என்பதை அறிந்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவளுக்குள் இருந்து கொண்டே இருந்தது.

அதற்காகவே தினமும் ஏதேனும் ஒரு காரணம் வைத்து வசீகரனிடம் சண்டையிடுவாள். பதிலுக்கு வசீகரன் சண்டையிடாமல் கொஞ்சிவிட்டு போவான். யாழினி தான் குழம்பி போவாள்.

ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஒருவழியாக தன் ஓவியத்தை முடித்தவள், அதை தான் செய்தித்தாள் கொண்டு செய்து வைத்திருந்த போட்டோ பிரேமுக்குள் நுழைத்தாள். பார்வதி மதியம் கொஞ்சம் நேரம் ஓய்வு எடுப்பார்,அப்போது யாழினி பொழுதுப்போக்காக கைவினை பொருட்கள், ஓவியம் ஆகியவற்றை செய்வாள். வசீகரனின் அறையை தனது அறையாக முழுமையாக மாற்றிக்கொண்டாள். வசீ இவளது செயல்களை ரசிப்பான்,பாராட்டுவான்.

இன்று பால்கனியில் வசீ வேலை செய்யும் சிறு மேஜை மீது அவளது ஓவியத்தை வைத்தாள். 'நிச்சயமா இதை பார்த்ததும் பாராட்டுவான்' என்று நினைத்துக்கொண்டாள். லேசாக புன்னகை வந்தது அவள் முகத்தில். அதே நேரம் அவளின் போன் ஒலித்தது. ' அண்ணியா தான் இருக்கும்' என எண்ணி உள்ளே போனாள். இரவில் பேசுவோம் என்று தம்பியை மிரட்டினாலும் ஒரு நாளும் இரவில் அழைக்கமாட்டாள். இது போல் பகல் பொழுதில் தான் பேசுவாள். சிரித்த முகத்தோடு போனை எடுத்தவளின் முகம் சுருங்கியது.ஏதோ புது எண்ணில் இருந்து அழைப்பு வந்து இருந்தது.

அழைப்பை ஏற்று ,"ஹலோ" என்றாள். மறுபுறம் பதில் இல்லை. மீண்டும் "ஹலோ" என்றாள் எரிச்சலுடன்.
இப்போது மறுபுறம் "ஹலோ" என்றது ஒரு ஆண்குரல்.
"ஹலோ யார் பேசுறது?" என்றாள் யாழினி கடுப்பாக.
"நா ஆகாஷ் பேசுறேன் யாழினி"
யாழினி அதிர்வுடன்,"எந்த ஆகாஷ்?" என்றாள்.
"எங்கேஜ்மெண்ட் வரை வந்து உன்னை மிஸ் பண்ண ஏமாளி ஆகாஷ்" என்றான் அவன்.
யாழினி உறைந்து விட்டாள்.' இவனை எப்படி மறந்தோம்? என்ன தான் தற்பெருமை பேசுபவன் என்றாலும், அவனும் ஒரு மனிதன் தானே! எத்தனை கனவுகளோடு நிச்சயம் செய்ய வந்து இருப்பான்? ஒரே நிமிடத்தில் தனக்கு நிச்சயம் செய்ய இருந்த பெண் தன் நண்பனின் மனைவியாக மாறி இருந்தால் எவ்வளவு துயரமாக இருக்கும்? நம்மை பற்றியே எண்ணிக்கொண்டு இருந்தோமே! இவனை பற்றி சிந்திக்கவே இல்லையே! அவ்வளவு சுயநலமா எனக்கு?' என்று தனக்குள் போராடினாள் யாழினி.
அதற்குள் "ஹலோ யாழினி,லைன்ல இருக்கியா?" என்று கேட்டான் ஆகாஷ்.
"ஆங் இருக்கேன் ஆகாஷ். சொல்லுங்க"
"எப்படி இருக்க யாழினி? வாழ்க்கை எப்படி போகுது" நட்பாக விசாரித்தான்.
"நல்லா இருக்கேன் ஆகாஷ். நீங்க எப்படி இருக்கீங்க?"
"நல்லா இல்லை யாழினி. என் சந்தோஷமே போயிடுச்சு. பார்க்குரவன் எல்லாம் என்னடா உனக்கு பார்த்த பொண்ணு உன்னை வேணாம்னு சொல்லிட்டு உன் பிரெண்ட கல்யாணம் பண்ணிக்கிச்சாமே? னு நக்கலா கேக்குறானுங்க. சொந்தகாரங்க எல்லாம் கேவலமா பாக்குறாங்க. "
"உனக்கு தெரியுமா? எங்க உறவுமுறையில எனக்கு பொண்ணு குடுக்க போட்டி போட்டாங்க. உன்னை எனக்கு பிடிச்சதுனால தான் எங்க சொந்தகாரங்க எல்லாரையும் சமாளிச்சி நா உன்கூட கல்யாணம் முடிவு பண்ணேன். ஆனா இப்போ என் சொந்த காரங்க எல்லாம் என்னை கேவலமா பார்க்குறாங்க" என்றான் துக்கமாக.
யாழினிக்கு வேதனையாக இருந்தது. ஒருவனின் சுயநலத்திற்காக இன்னொருவரின் வாழ்க்கையை இப்படி நாசமாக்கிட்டானே. வசீகரனின் மீது இப்போது வெறுப்பு வந்தது.
ஆகாஷின் மனநிலையை மாற்றுவதில் தனக்கு கடமை இருக்கிறது என எண்ணியவள்,"ஆகாஷ் நா சொல்றேன்னு தப்பா நெனைக்காதீங்க, நடந்தத இனிமே மாத்த முடியாது. அதனால உங்க மனசை கொஞ்சம் ப்ரீயா விடுங்க. பிடிச்ச விஷயத்துல உங்க நேரத்தை செலவு பண்ணுங்க.கொஞ்ச நாள்ல உங்களுக்கு பிடிச்ச மாதிரி ஒரு பெண்ணை பார்த்து மேரேஜ் பண்ணிக்கோங்க" என்றாள்.

"நோஓஓஓ" தமிழ் பட கதாநாயகி போல் கத்தினான் ஆகாஷ். "என்னால உன்னை மாதிரி மனசை மாத்திக்க முடியாது. நீ அவனோட பணத்தை பார்த்து மயங்கி அவன் கூட வாழலாம். பட் என்னால உன்னை தவிர வேற ஒருத்தியை கனவுல கூட ஒய்ப்பா நினைக்க முடியாது" என்றான் கோபமாக.

யாழினிக்கு கோபமாக வந்தது. "இங்க பாருங்க ஆகாஷ். அளவா பேசுங்க. யாரைப்பார்த்து பணத்தை பார்த்து மயங்கினனு சொல்றீங்க? நா எப்பவுமே யார் மேலயும் ஆசைபட்டது இல்ல. என் மேரேஜ்கு அப்புறம் என் ஹஸ்பண்டை தான் லவ் பண்ணனும்னு இருந்தேன். அதனால தான் உங்ககிட்ட கூட நா போன்ல பேச முடியாதுனு சொன்னேன். இப்போ வசீகரன் தான் என் ஹஸ்பண்ட் அதனால அவரோட வாழுறேன். அதோட பணத்துக்காக தான் அவரோட ஒரு பொண்ணு வாழனும்னு இல்ல.
புரிஞ்சிக்கோங்க" என்றாள்.

கொஞ்ச நேரம் ஆகாஷ் எதுவும் பேசவில்லை. யாழினிக்கு பாவமாக இருந்தது. 'சே அவனே வருத்ததுல இருக்கான். நா இப்படி கோபப்படலாமா?' என எண்ணியவள், "ஆகாஷ் , நா சொல்றத புரிஞ்சிக்க ட்ரை பண்ணுங்க. ஏதோ வசீ என்னை பிடிச்சதால தப்பு பண்ணிட்டாரு. உங்க மனசை மாத்திக்கிட்டு, வேற நல்ல பொண்ண பார்த்து மேரேஜ் பண்ணிக்கோங்க " என்றாள் இதமாக.

ஆகாஷ் இப்போது சிரித்தான். "என்ன சொன்ன யாழினி? வசீகரன் உன்னை பிடிச்சதால கல்யாணம் பண்ணிக்கிட்டானா? குட் ஜோக். என்னை பழிவாங்க உன்னை யூஸ் பண்ணிக்கிட்டான்" என்றான்.

யாழினி அதிர்ச்சியில் சிலையானாள்.
"என்ன சொல்றீங்க ஆகாஷ்? உங்களை பழிவாங்கவா?" அதே அதிர்ச்சியுடன் கேட்டாள்.
"ஆமா பழிவாங்க தான். அதுவும் காலேஜ்ல நடந்தத இத்தனை வருஷமா ஞாபகம் வச்சிக்கிட்டு பழிவாங்கிட்டான்" என்றான் வேதனையான குரலில்.
யாழினிக்கு மனது வலித்தது. அவன் ஏன் தன்னை திருமணம் செய்துக்கொண்டான் என்று தெரிந்துக்கொள்ள பல முறை முயற்ச்சித்தாள் தான். ஆனால் அது இப்படி பழிவாங்க செய்யப்பட்டது என கொஞ்சமும் யோசிக்கவில்லை. ஏனோ அவளே அறியாமல் கண்ணில் இருந்து கண்ணீர் வந்தது.


உங்கள் அன்பு சகோதரி,
லாவண்யா தயூ
 
யாழ் 19
"சொன்ன மொழி தவறும் மன்னவனுக்கே - எங்கும்
தோழமையில்லையடி தங்கமே தங்கம்;
என்ன பிழைகளிங்கு கண்டிருக்கின்றான்? - அவை
யாவும் தெளிவுபெறக் கேட்டுவிடடீ!"

கண்ணில் வழியும் கண்ணீரை துடைக்கும் எண்ணம் சிறிதும் இல்லாமல் அதிர்ச்சியில் அமர்ந்திருந்தாள் யாழினி. அவளின் அதிர்ச்சியை உணராமல் ஆகாஷ் தொடர்ந்தான்.

"நான் வசீகரனோட காலேஜ் பிரென்ட்னு உனக்கே தெரியும். வசீகரன் பர்ஸ்ட் வேற காலேஜ்ல தான் சேருவதா இருந்ததாம்.பட் ஏதோ காரணத்தால் எங்க காலேஜ்ல சேர்ந்துட்டான்னு சொன்னாங்க. அவன் காலேஜ் கூடைப்பந்து டீம் கேப்டன் எங்க போனாலும் கப்போட தான் வருவான். படிப்பிலும் பர்ஸ்ட் வருவான். அதனால காலேஜ்ல நெறைய பெண்களுக்கு அவன் மேல கிரேஸ் இருந்துது. அதுலயும் அவன் பணக்காரன், அழகா வேற இருக்கான். பசங்களே அவன் ஸ்டைல ரசிப்பானுங்க. சோ வசீகரனுக்கு ரொம்ப கர்வம் இருக்கும். நம்மளை மாதிரி மிடில் கிளாஸ் பசங்களை மதிக்கவே மாட்டான். அவனை புகழ்ந்து பேச போனா கூட கண்டுக்காம போய்டுவான்.இந்த கோகுல் தான் அவன் கூடவே இருப்பான்.அவனுக்கும் திமிர் அதிகம்" என்று பேசிக்கொண்டே இருந்தவனை தடுத்தது யாழினியின் குரல்.

"கோகுல் அண்ணா கூட நம்மளை மாதிரி தான? அவரை மட்டும் எப்படி சேர்த்துகிட்டாங்க?"என்று கேட்டாள்.

"அவன் தான் வசீகரனுக்கு பி.ஏ. வேல செய்வான். அவனுக்கு ஜால்ரா தட்டியே கோகுல் வளர்ந்துட்டான். இப்பவும் அவன் ஆபீஸ்ல கோகுலுக்கு நல்ல வேலை , சம்பளம். அந்த விசுவாசத்துக்காக தானே என் வாழ்க்கைல மண் அள்ளிப்போட கூட்டு சேர்ந்துகிட்டு வந்து இருக்கான்." என்று ஒரு நிமிட அமைதிக்கு பின் தொடர்ந்தான்.

"வசீகரனும் கோகுலும் சிவில் டிபார்ட்மெண்ட், நான் கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்ட். என் டிப்பார்ட்மெண்ட்ல ஆஷானு மலையாளி பொண்ணு படிச்சா. பார்க்க ரொம்ப அழகா இருப்பா. அவளும் ஓரளவு பணக்காரபெண் தான்.கார்ல தான் காலேஜ் வருவா. அவ ஏற்கனவே வசீகரன் கூட ஸ்கூல்ல படிச்சவ. பிரென்ட் வேற. அவள் வசீகரன் கோகுல் கூட பிரேக்ல பேசுவா. அவங்க எல்லாரும் லீவ்ல வெளியே சுத்துவாங்க. அவ்ளோ க்ளோஸ்.அந்த ஆஷா கிளாஸ்ல என் பக்கத்து டெஸ்க் தான். எங்க எல்லார்கிட்டயும் நல்லா பேசுவா. காலேஜ் லாஸ்ட் இயர்ல ஒரு நாள் ஆஷா என்கிட்ட வந்து ப்ரபோஸ் பண்ணினா. பட் நா அக்சப்ட் பண்ணல. எனக்கு என் குடும்பம் ரொம்ப முக்கியம். எங்க குடும்பத்தை இன்னும் நல்லா உயர்த்தனும்னு எனக்கு ஆசை. அதுக்கு தடையா நா எதுவும் பண்ணக்கூடாதுனு நெனச்சேன்"

"ஒன் வீக் அப்புறம் யாரோ சில ஆட்கள் வந்தாங்க. ரோடுல என்னை பிடிச்சி அடிச்சாங்க. என் கையை ஒடச்சிட்டாங்க, நா ஹாஸ்பிடல்ல இருந்து வந்ததுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது இந்த வேலையை செஞ்சது வசீகரன்னு " என்று ஆகாஷ் அமைதியாக, யாழினியின் மனமோ அமைதியை இழந்தது.

"ஏன் ஆகாஷ் அப்படி செய்தார்?" மெதுவான குரலில் கேட்டாள்.
"வேற எதுக்கு? அந்த ஆஷாவுக்காக தான். அவன் அவளை ஸ்கூல்ல இருந்து லவ் பண்ணி இருக்கான். அவளுக்காக தான் எங்க காலேஜ்கு வந்து சேர்ந்து இருக்கான். அப்படி இருக்கும் போது அவ என்னை லவ் பண்றானு தெரிஞ்சா சும்மா இருப்பானா? எல்லா பொண்ணுங்களும் தன்னை சுத்தி வராங்கனு கர்வமா இருந்தவனுக்கு தான் லவ் பண்ற பொண்ணு வேற ஒருத்தனை லவ் பண்றானு கேள்விப்பட்டதும் தாங்க முடியல. எனக்கு தண்டனை குடுத்துட்டான். ஆஷாவையும் ஏதோ சொல்லி மிரட்டி இருப்பான் போல. அவ என்கிட்ட கடைசியா வந்து , என்னால தான் உனக்கு இந்த கஷ்டம். என்னை மன்னிச்சிடுனு சொல்லிட்டு போய்ட்டா" என்றான்.

"அதுக்கு அப்புறம் எக்ஸாம் வந்துடுச்சி. நா காலேஜ் முடிஞ்சதும் வேலைல பிசி ஆகிட்டேன். அப்புறம் வசீகரன் பாரின்லாம் போய் படிச்சி, பெரிய பிசினஸ் மேன் ஆகிட்டான். இப்போ நம்ம எங்கேஜமெண்ட் முடிவானப்போ தான் அவனை பார்த்தேன். அவனை இன்வைட் பண்ணி, நானே என் தலையில மண்ணை அள்ளி போட்டுக்கிட்டேன்" என்றான் சோகமாக.
"அவர் தான் உங்களுக்கு இவ்ளோ ப்ராப்ளம் குடுத்து இருக்காரே, நீங்க ஏன் அவரை கூப்பிட்டிங்க?"என்றாள் யாழினி.

" இத்தனை வருஷம் அவன் அதெல்லாம் ஞாபகம் வச்சிருப்பான்னு நா நெனைக்கலையே. தெரிஞ்சி இருந்தா நா ஏன் கூப்பிட போறேன்?"என்றான் எரிச்சலுடன்.

பிறகு அவனே,"யாழினி, இதெல்லாம் நா உன்கிட்ட சொல்லணும்னு நெனச்சி கால் பண்ணல. எனக்கு மனசுக்கு கஷ்டமா இருந்துது. அதான் உன்கிட்ட பேசலாம்னு நெனச்சேன். நீ அவன் உன்னை பிடிச்சி போய் கல்யாணம் பண்ணான்னு சொன்னதால எமோஷனலாகி உண்மையை சொல்லிட்டேன். யோசிச்சி பார் யாழினி.எங்க வீடு உங்களை விட கொஞ்சம் தான் வசதி அதிகம்.பட் எங்க அம்மாவும், அக்காவுமே உன்னை நா கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்பட்டதுக்கு, வசதி கம்மினு பீல் பண்ணாங்க. வசீகரன் பெரிய பணக்காரன். அவன் ஏன் உன்னை மேரேஜ் பண்ணனும்? அதுவும் அவ்ளோ அவசரமா? இத்தனை வருஷம் வன்மத்தோட இருக்கான்னா, அப்போ அவனுக்கு எவ்ளோ பழி உணர்ச்சி இருக்கும்? வசீகரனுக்கு கோபம் வந்தா, அவன் ஒரு ராட்சசன். பார்த்து பத்திரமா இரு.நா உன்கிட்ட இதெல்லாம் சொன்னேன்னு அவனுக்கு தெரிஞ்சா, என்னை கொல்ல கூட தயங்கமாட்டான்" என்றான் தயக்கத்தோடு.

யாழினிக்கு அவன் சொல்ல வருவது புரிந்தது."டோன்ட் ஒர்ரி ஆகாஷ். அவர்கிட்ட நீங்க எனக்கு கால் பண்ணத நா சொல்ல மாட்டேன். நீங்க சீக்கிரம் இந்த மனநிலையில் இருந்து வெளியே வாங்க. நல்லபடியா உங்க வாழ்க்கையை அமச்சிகோங்க" என்றாள்.

"முயற்சி பன்றேன் யாழினி" என்றுவிட்டு குரூர திருப்தியோடு போனை வைத்தான் ஆகாஷ்.

அவனிடமிருந்து யாழினியை தட்டிப் பறித்தவணை பழிவாங்க எண்ணி பல நாளாக யோசித்துக் கொண்டு இருந்தான். அவனை நேரடியாக ஒன்றும் செய்ய முடியாது.எனவே குறுக்கு வழியில் அவன் யோசித்து தயாரித்த கட்டுக்கதையை யாழினியிடம் சொல்லி வசீகரனின் குடும்ப வாழ்வில் கலவரம் செய்ய முடிவெடுத்தான். இது முழுக்க அவனது கற்பனை அல்ல. நடந்த கதையில் தனக்கு வேண்டியபடி சில திருத்தங்கள் மட்டும் செய்துக் கொண்டான். இதில் இரண்டு வகையில் லாபம். ஒன்று தன்னை ஏமாற்றிய வசீகரனின் வாழ்வை ஆட்டிப்படைக்கலாம். இன்னொன்று தன்னை விட்டுவிட்டு வசீகரனை ஏற்றுக்கொண்ட யாழினியையும் பழி தீர்க்கலாம். யாழினி அடக்கமான பெண். அவளுக்கு தன் கணவன் பழிவாங்க திருமணம் செய்தான் என தெரிந்தால், தாங்க மாட்டாள். நிச்சயம் இருவருக்கும் சண்டை வரும் என தெளிவாக சிந்தித்து முடிவெடுத்தான். அதற்கான சரியான வாய்ப்பிற்காக காத்திருந்தான். இன்று அவன் உணவுண்ண வந்த ஹோட்டலில் வசீகரன் மீட்டிங் ஹாலில் நுழைவதை பார்த்ததும் ஜாக்பாட் அடித்த குஷியில் யாழினியின் மனதை குழப்பிவிட்டான். இவனது குணம் தெரியாத யாழினியோ அங்கு கொதித்துக்கொண்டு இருந்தாள்.

உங்கள் அன்பு சகோதரி,
லாவண்யா தயூ
 
யாழ்-20
"மையல் கொடுத்துவிட்டுத் தங்கமே தங்கம் - தலை மறைந்து திரிபவர்க்கு மானமுமுண்டோ ?
பொய்யையுருவமெனக் கொண்டவனென்றே - கிழப்
பொன்னியுரைத்ததுண்டு தங்கமே தங்கம்"

யாழினியை கோபமும் துக்கமும் போட்டி போட்டு துன்புறுத்தின. ஒரு பெண்ணின் காதலுக்காக, அவள் நேசிப்பவனின் கையை உடைத்திருக்கிறான் என்றால், அவனுக்குள் எவ்வளவு வெறி இருக்கும். இத்தனை ஆண்டுகள் கழித்தும் ஆகாஷின் மீது கோபம் இருக்கிறது என்றால், அந்த பெண்ணை அவன் இன்னும் மறக்கவில்லை என்று தானே அர்த்தம். ஆகாஷை பழிவாங்க திருமணத்தை நிறுத்தியதும் இல்லாமல், அவனுக்கு மனைவியாக வேண்டியவளையே திருமணம் செய்வது என்பது ஒரு கொடூர புத்தி கொண்டவனால் தான் முடியும் என்று மேலும் மேலும் சிந்தித்து தன்னை குழப்பிக்கொண்டாள் யாழினி.

'யாரையோ பழிவாங்க என்னை மேரேஜ் பண்ணி இருக்கான். எனக்கு இதை விட வேற அவமானமே இல்ல. எவளோ ஒருத்திய நெனச்சிக்கிட்டு என்னை எப்படி கல்யாணம் பண்ணலாம்? இதுல காதல் கணவன் மாதிரி கொஞ்சல் வேற'.அவன் தன்னிடம் இழைந்ததை எண்ணும் போது கண்ணீர் வந்தது அவளுக்கு. அவன் மீது கொலை வெறியோடு காத்திருந்தாள்.

இதை ஏதும் அறியாத வசீகரன் தனது வசீகர புன்னகையுடன் வீடு வந்தான். அவன் இன்றைய தொழில் மீட்டிங்கில் அவனுக்கு பெரும் லாபம் தரும் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டிருந்தான். தனது பெற்றோரிடம் இனிப்புடன் சொல்லிவிட்டு , யாழினியைக் காண அறைக்கு வந்தான். "டார்லிங் டுடே மீட்டிங் சக்ஸஸ்" என்றபடி அவளின் நெற்றியில் செல்லமாக முட்டிவிட்டு தான் வாங்கி வந்த இனிப்பை அவளிடம் தந்தான்.

ஏற்கனவே ஏக கடுப்பில் இருந்த யாழினி," என்ன இது?" என்றாள் நிதானமாக.
"மில்க் ஸ்வீட் டா. நம்ம சக்சஸ செலபிரேட் பண்றதுக்கு" என்று கண்சிமிட்டினான்.
"அல்வா குடுக்கறது தான உங்க ஸ்பெஷல்? இது என்ன புதுசா?"
"அல்வாவா? ஹே யூ மீன் மல்லிகைபூ, அல்வா? டா...ர்லிங்" என்று என்று அவள் அருகில் வந்தவன், அவளது இறுகிய முகத்தைப் பார்த்து புருவத்தை சுருக்கியபடி அவளை ஆழ்ந்துப் பார்த்தான்.
"என்ன ஆச்சு யாழி? ஏதாவது ப்ராப்ளமா?" என்றான் அவளை பார்த்தபடி.
"எனக்கு ஒரு உண்மை தெரியணும்."
" என்ன?" என்றான் இறுக்கமாக.
"நீங்க ஏன் என்னை மேரேஜ் பண்ணிங்க?"
"ம்ச்... இப்படி என் கூட சண்டை போட ஆள் இல்லை. அதனால" என்றான் சிறு சிரிப்புடன்.
"எதுக்கு மேரேஜ் பண்ணிங்கனு உங்களால என்கிட்ட சொல்ல முடியாத அளவுக்கு ஒரு மோசமான ரீசன் இருக்கோ?" என்றாள் குதர்க்கமாக.
" அதை இப்போ சொல்ல முடியாத அளவுக்கு என் சூழ்நிலை இருக்கு"
" சூழ்நிலை? அதை பத்தியெல்லாம் யோசிக்கிற ஆளா நீங்க? சொந்தமெல்லாம் கூடி இருக்கும்போது ஒரு எங்கேஜமெண்ட நிறுத்த தாலி கட்டுன நீங்க சூழ்நிலைய பத்தி யோசிக்கிறீர்களா? குட் ஜோக்" என்று நக்கலாக சிரித்தாள்.
வசீகரன் பல்லைக் கடித்தான்." ஏய்! என்னடி சும்மா சும்மா அதையே சொல்லி காட்டிட்டு இருக்க? இப்போ நா தாலி கட்டுனதால உனக்கு என்ன குறை? நா உன்னை நல்லா பார்த்துக்கலையா?" என்றான் கோபமாக.
"அந்த எங்கேஜமெண்ட்ல நா மட்டும் தான் சம்மந்தப்பட்டு இருக்கேனா? ஆகாஷோட நெலைமைய யோசிச்சி பாருங்க"
" ஹேய் அவன் பேச்சு உனக்கெதுக்கு? அவனுக்கு ஒரு கேடும் இல்ல. நல்லா ஜாலியா சுத்திட்டு தான் இருக்கான்"
"பின்னே? நிச்சயம் நின்னதால தற்கொலை பண்ணிப்பார்னு எதிர்ப்பார்த்திங்களோ? எவ்ளோ கெட்ட புத்தி! என்ன கேட்டிங்க? அவர் பேச்சு எனக்கெதுக்கா? உங்களை மாதிரி கல்நெஞ்சமா என்னால இருக்க முடியாது"
"யாழினி போதும். நீ ரொம்ப பேசுற! தேவை இல்லாம பேசுற. போய் தூங்கு" என்றான் கோபத்தை அடக்கியபடி.
" தூக்கமா? நீங்க செஞ்சிருக்க வேலைய நினைக்கும் போது மொத்தமா தூங்கிட்டா நல்லா இருக்கும்னு தோணுது" அவள் சொல்லி முடிக்கும் முன் "யாஆஆழினி" என்று கர்ஜித்தான் வசீகரன்.
அவளது கழுத்தை ஒற்றை கையால் பிடித்து அவளை சுவற்றோடு ஒட்டி நிறுத்தியவன்,"என்ன வார்த்தை டி சொல்லிட்ட? நா அப்படி என்னடி பண்ணிட்டேன்? உன்னை கல்யாணம் தானே பண்ணேன். கல்யாணத்துக்கு அப்புறம் கூட நீ எவ்ளோ சண்டை போட்டாலும் உன்கிட்ட ஆசையா தானே நடந்துக்குறேன்? ஏதோ கொடுமைக்காரன் கூட வாழுற மாதிரி என்ன வார்த்தை பேசிட்டடி?" என்று கோபமாக ஆரம்பித்து ஆதங்கமாக முடித்தவன், அவளை இழுத்து இறுக அணைத்துக்கொண்டான்.

அவனது இதயம் வேகமாக துடித்துக்கொண்டு இருந்ததை அவன் நெஞ்சில் சாய்ந்திருந்தவளால் உணர முடிந்தது. அவளுக்கு மேலே எதுவும் பேச தோன்றவில்லை. அவனது அணைப்பு அவளின் இத்தனை நேர தவிப்புக்கு மருந்தாக இருந்தது.
'இவனையா ராட்சசன்னு ஆகாஷ் சொன்னான்? என் ஒரு வார்த்தைக்கு இப்படி துடிக்கிறானே!' என அவள் சிந்திக்க, 'ஒருவேளை நா எதுவும் கேள்வி கேட்டு உண்மைய இவன் வாயாலேயே சொல்ல வச்சிடுவேன்னு இப்படி ஆக்ட் குடுக்குறானோ?' என அவளுக்குள் இருந்த சாத்தான் மனது கூக்குரலிட்டது.

உடனே அவனை விட்டு வேகமாக விலகியவள், படுக்கையில் போய் படுத்துக்கொண்டாள். வசீயும் குழப்பமான மனநிலையுடன் சோஃபாவில் அமர்ந்து தனது மனைவியை பற்றி யோசித்தபடியே உறங்கிவிட்டான்.

மறுநாள் காலை கண்களை திறந்து பார்த்த வசீகரனுக்கு குளித்து முடித்து அழகான மெரூன் நிற சுடியில் கண்களுக்கு மையிட்டு கொண்டு இருந்த மனைவியின் தரிசனம் கிடைத்தது. "நைட்டெல்லாம் சண்டை போடுறது, காலையில எழுந்து கண்ணுக்கு மை போடுறது" என்று அவளை கிண்டலிடித்தான். அவனை நன்றாக முறைத்தவள்,அறையிலிருந்து வெளியே போனாள்.

வசீகரன் அலுவலகம் கிளம்பி வந்தபோது, பெட்டியை கையில் பிடித்தபடி யாழினி நின்றிருந்தாள்.
"யாழி எங்க போற?" என்றான் குழப்பமாக
"நா எங்க வீட்டுக்கு போறேன் மிஸ்டர்.வசீகரன்" என்றாள் திமிராக.
"அங்க தான் ஆல்ரெடி இருக்கீங்க மிசஸ். வசீகரன்" என்றான் அவனும் தீர்க்கமாக.
"என்மேல உண்மையா அன்பு வச்சிருக்க எங்க அம்மா அப்பா அண்ணா இருக்குற எங்க வீட்டுக்கு போறேன்"என்றாள்.
"எனக்கு உன்மேல உண்மையான அன்பு இல்லனு சொல்றியா?"
"ஆமா. உங்களுக்கு என் மேல அன்பு இல்ல. நீங்க திருடிட்டு வந்த பொருளை உங்களுக்கு ஏத்த மாதிரி ட்ரெயின் பண்றீங்க. இதுக்கு பேர் அன்பு இல்ல மிஸ்டர்" துணிச்சலாக பேசினாள்.
வசீகரன் உஷ்ணமானான்.
"என்ன சொன்ன திருடினேனா? யார்கிட்ட இருந்து திருடினேன்?"
"ஆகாஷ் கிட்ட இருந்து"
"ஹலோ மேடம்! பொருளை அதோட சொந்தக்காரங்க கிட்ட இருந்து தான் திருட முடியும்? மைண்ட் இட்!"
"சொந்தமாகிட கூடாதுனு தான நீங்க தாலி கட்டினீங்க?"
"ஆமா"தைரியமாக சொன்னான்.
"என்ன? ஆமாவா? அப்படி என்ன ஆகாஷ் மேல பழிஉணர்ச்சி உங்களுக்கு? பழிவாங்க தாலி கட்டுற அளவுக்கு?"
"பழியா? நா பழி வாங்குர அளவுக்கு அவன் எனக்கு ஈகுவளா டி?"
"ஈகுவள் இல்ல தான். உங்களை விட பெட்டர் ஆப்ஷனா அவர் ஆகிட்டார்னு கோபத்துல தான எல்லாம் செஞ்சிங்க?" என்றாள். அவள் ஆஷா ஆகாஷை பெட்டராக நினைத்தாள் என்பதை உணர்த்தவே அப்படி சொன்னாள். ஆனால் வசீகரன் யாழினி தன்னை பற்றி சொல்கொள்வதாக எண்ணியவன் கடும்கோபத்துடன்,"ஏய்!!!!" என்றபடி கையை ஓங்கினான்.

அவன் தன்னை அடித்துவிடுவானோ என்ற அச்சத்தில் ஓரடி பின்னால் எடுத்து வைத்தவள் பதற்றத்தில் கால்தடுக்கி பின்னால் இருந்த படுக்கையில் போய் விழுந்தாள். அதை பார்த்த வசீகரன் கோபத்தை விட்டு ,"ஹா ஹா ஹேய் , கையை ஓங்குனதுக்கே கீழ விழுற! உனக்கு ஏன்டி இவ்ளோ வாய்? உன்மேல செம்ம கோபத்துல இருந்தேன் டி. ஒரே செகண்ட்ல சிரிக்க வச்சிட்ட. சோ ஸ்வீட்" என்றான்.

யாழினிக்கு அவமானமாக இருந்தது. "சிரிங்க நல்லா சிரிங்க. என்னை ஏமாத்தி கூட்டிட்டு வந்துடீங்கல? உங்களுக்கு என்னை பார்த்தா,சிரிப்பா தான் இருக்கும்" என்றாள் கண்ணீருடன்.
"ஏய் லூசாடி நீ? பழி வாங்குறேன்னு சொல்ற! எனக்கு உன் மேல அன்பு இல்லனு சொல்ற! ஏமாத்தி கூட்டிட்டு வந்தேன்னு சொல்ற! என்ன வேணும் உனக்கு?" மறுபடியும் கோபமானான்.
"எனக்கு உங்களை பார்க்கவே பிடிக்கல. உங்க நடிப்பு பேச்சு பிடிக்கல. உங்க தொல்லை இல்லாம கொஞ்ச நாள் நிம்மதியா இருக்கலாம்னு தான் எங்க வீட்டுக்கு போறேன். என்னை விட்டுடுங்க" என்றாள்.
அவளது முகம் நோக்கி குனிந்தவன்,"என்னை பார்க்கலனா நீ நிம்மதியா இருப்பியா? அதுக்கு நீ வீட்டை விட்டு போகணும்னு எந்த அவசியமும் இல்லை. இது உன் வீடு.இங்க உன் நிம்மதிக்கு எந்த குறையும் வராது" என்றவன் வேகமாக வெளியே போனான்.
அவன் என்ன சொன்னான் என்று அவள் உணர்வதற்குள் அவன் சென்றுவிட்டான்.
உங்கள் அன்பு சகோதரி,
லாவண்யா தயூ
 
யாழ்-21
"நேர முழுவதிலுமப்பாவி தன்னையே - உள்ளம்
நினைத்து மறுகுதடி தங்கமே தங்கம்,
தீர ஒருசொலின்று கேட்டு வந்திட்டால் - பின்பு தெய்வமிருக்குதடி தங்கமே தங்கம்! "
தூக்கம் கண்களை சொருக தொடங்கவும் படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை வைத்துவிட்டு கடிகாரத்தைப் பார்த்தாள் யாழினி. இரவு 11 என காட்டியது கடிகாரம். இன்னும் வசீகரன் வரவில்லை. எப்போதும் 9 மணிக்கு முன்னாடியே வந்து குளித்து இரவு உணவை முடித்துவிட்டு 11 மணிக்கு உறங்கி விடுவான். 'ஒருவேளை கீழே தந்தையும் மகனும் தொழில் தொடர்பாக பேசிக்கொண்டு இருப்பார்களோ?' என எண்ணியவள் கீழே இறங்கி வந்தாள். கீழே இருந்த அலுவலக அறை பூட்டி இருந்தது. பார்வதி அம்மாவின் அறையிலும் விளக்கு அணைக்கப்பட்டு இருந்தது. 'மகனுக்கு உணவு பரிமாறாமல் அவர் உறங்க மாட்டாரே! ஒருவேளை அவன் வந்து விட்டானோ?' என்று எண்ணி அவனுக்கு தனது போனிலிருந்து அழைத்தாள். மறுமுனையில் ரிங் போய்க்கொண்டே இருந்தது, எடுக்கவில்லை. மீண்டும் முயற்சித்தாள் பலனில்லை. ஏனோ அவளுக்கு பதற்றம் தொற்றிக்கொண்டது. மீண்டும் ஒருமுறை அழைத்து பார்த்துவிட்டு, பார்வதிக்கு போன் போட்டாள்.
போனை எடுத்த பார்வதி குரலில் பதற்றத்தோடு,"என்னமா யாழினி?" என்றார்.
'அச்சோ பயந்துட போறாங்க, நிதானமா சொல்வோம்' என்று எண்ணி, "ஒண்ணும் இல்லமா, உங்க மகன் இன்னும் வீட்டுக்கு வரல. நா உங்க ரூம் கிட்ட தான் நிக்குறேன்" என்றாள்.
"ஒன் மினிட் மா" என்றவர், கதவை திறந்து வெளியே வந்தார். அவரை கண்டதும் வேகமாக அருகில் சென்றாள் யாழினி. "யாழினி, வசீக்கு இன்னிக்கு ஏதோ அதிகமான ஒர்க் இருக்காம். முடிய டைம் ஆகும்,நைட் ஆபீஸ்லயே ஸ்டே பண்ணிடுவேன்னு எனக்கு போன் பண்ணி சொன்னான் டா. உன்கிட்ட சொல்லலையா?" என்றார்.
யாழினிக்கு அப்போது தான் உயிரே வந்தது. "இல்லமா என்கிட்ட சொல்லல. கால் பண்ணாலும் எடுக்கல"என்றாள். அவளின் முக வாட்டத்தை கவனித்தவர், "உனக்கு கால் பண்ணி இருப்பான். சிக்னல் கெடச்சி இருக்காது. அதான் என்னை கூப்பிட்டு சொல்லி இருக்கான். நீ கூப்பிடும்போது அவன் பிசி ஆகிட்டு இருப்பான். இவனுக்கு வேலைனு வந்துட்டா, உலகத்தையே மறந்துடுவான்.உன் மிஸ்டு கால் பார்த்ததும் கூப்டுவான். நாளைக்கு வந்ததும் நல்லா முதுகுல ரெண்டு போடு. இப்போ போய் தூங்கு" என்று சொல்லி சிரித்தார். அவருக்காக சிரித்தவள், அறைக்கு திரும்பினாள்.
அவனுக்கு என்ன ஆனதோ? என பதறிப்போய் இருந்தவளுக்கு பார்வதியின் பதில் ஆறுதல் தந்தாலும், 'அவன் ஏன் என்கிட்ட சொல்லல? ஏன் நா கூப்பிட்டும் போன் எடுக்கல? காலையில சண்டை போட்டதால கோபமா? நா தினமும் தான் சண்டை போடுறேன். இது என்ன புதுசா?' என்று எண்ணியபடியே சென்றவளுக்கு இப்போது அவன் கடைசியாக சொல்லிவிட்டு போன வார்த்தைகள் நினைவு வந்தது.
'என்னை பார்க்கலனா நீ நிம்மதியா இருப்பியா? அதுக்கு நீ வீட்டை விட்டு போகணும்னு எந்த அவசியமும் இல்லைனு சொன்னானே'. அதுக்காக தான் வீட்டுக்கு வரலையா? அவன் வீட்டுக்கு வரலானாலும் நா அவனை பார்க்க முடியாதுல? பண்ணது எல்லாம் தப்பு. கேட்டா கோபம் வருதோ? எப்படி எல்லாம் யோசிக்கிறான் பாரு, அப்படியே எவ்ளோ நாள் ஆபீஸ்ல தங்குவான்? கோட்டான்' என்று அவனை திட்டியபடியே தங்கள் அறைக்கு சென்றவள் வெகுநேரம் முழித்திருந்தாள்.
மறுநாள் காலையில் எழுந்ததும் அறையை சுற்றி பார்த்தாள். வசீகரன் வந்த அடையாளமே இல்லை. அவளது போனை எடுத்து பார்த்தாள். அவனிடமிருந்து அழைப்பும் இல்லை. கோபம் தலைக்கு ஏற சீக்கிரமே கிளம்பி கீழே போனாள். பார்வதியிடம்,"அம்மா ! அவர் இன்னுமா வரல? விடிஞ்சி எவ்ளோ நேரம் ஆகுது? இன்னும் என்ன பன்றாரு?" என்றாள்.
பார்வதியும் குழப்பதுடனே, " என்னனு தெரியலையேடா. நைட் ஆபீஸ்ல ஸ்டே பண்ணா மார்னிங் சீக்கிரமே வந்துடுவான்.இன்னிக்கு என்னனு தெரியலையே"என்றார்.யாழினி கோபமாக,"என்னமா இப்படி சொல்றீங்க? ரொம்ப தான் செல்லம் குடுக்குறீங்க உங்க பையனுக்கு. நைட் அவர் ஆபீஸ்ல தான் தங்கினார்னு நமக்கு எப்படி தெரியும்? அது என்ன அப்படி வேலை? வீட்டுக்கு கூட வராம? எனக்கு ஒண்ணும் சரியா படல"என்றாள்.
"அவன் அதிகமா வேலை இருக்கும் போது இப்படி ஆபீஸ்ல தங்குறது வழக்கம் தான்டா. கூட கோகுல் இருப்பான்" என்றபடியே அவனை அழைத்து ஸ்பீக்கரில் போட்டார். உடனே மறுமுனையில் வசீகரன் பேசினான்."குட் மார்னிங் மா. சாரி நெறய ஒர்க். என்னால வர முடியல.இன்னிக்கும் ஸ்டே பண்ற மாதிரி தான் இருக்கும்" என்றான்.
பார்வதி,"டேய் என்ன திமிரா? ஆல்ரெடி என் மருமக நீ வரலனு கோபத்துல இருக்கா? இன்னிக்கும்னா அவ்ளோ தான்" என்றார்.
ஓரிரு நொடி அமைதி காத்தவன்,"மா கோகுல் கூட என்கூட தான் இருக்கான். டோன்ட் ஒர்ரி, ஒர்க் முடிச்சதும் வந்துடுவேன். பை மா " என்று விட்டு போனை வைத்துவிட்டான்.
"சொன்னேன்ல இவனுங்க எல்லாம் ஒண்ணா தான் இருப்பானுங்க" என்று சமாதானமாக சிரித்தார். யாழினி சமாதானம் ஆகவில்லை. மீண்டும் அவனுக்கு போன் போட்டாள். அவன் எடுக்கவே இல்லை.கோகுல் எண்ணும் அவளிடம் இல்லை. பர்வதியிடமும் கேட்க முடியாது.அவனை போன் எடுக்க வைத்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் வந்தது.எனவே,"இப்போ நீங்க போன் எடுக்கலனா, நா எங்க வீட்டுக்கு போய்ட்டே இருப்பேன் மிஸ்டர்.வசீகரன்" என வாட்ஸ்ஆப்பில் மெசேஜ் அனுப்பினாள்.
ஒரு நிமிடத்தில் அவன் மெசேஜ் படித்ததை நீல நிற டிக் காட்டியது. உடனே அவனுக்கு அழைத்து,"ஹலோ" என்றாள். அவன் பேசவே இல்லை. "ஹலோஓஓஓ" கத்தினாள்.
"ஹலோ" இறுக்கமாக ஒலித்தது அவன் குரல். "என்ன மிஸ்டர்? ஆபீஸ்ல ஒர்க் இருந்தா, போன் பண்ணி இன்பார்ம் பண்ணனும்னு தெரியாதா?"என்றாள் நக்கலாக.
"அம்மா கிட்ட இன்பார்ம் பண்ணிட்டேன்"
"என்கிட்ட ஏன் சொல்லல? நா போன் பண்ணாலும் எடுக்கல. என்ன பழிவாங்குறிங்களா?"
"பழிவங்குறத தவிர எனக்கு வேற வேலையே இல்லனு நெனச்சிட்டியா? அதை விட முக்கியமான வேலையெல்லாம் இருக்குமா.அதான் வீட்டுக்கு கூட வர முடியல" அவனும் நக்கலாக சொன்னான்.
"உங்களுக்கு முக்கியமான வேலை இருக்கா? பொய் சொல்லாதீங்க! முக்கியமான வேலைனா, வீட்டுக்கு வந்து ரெபிரஷ் ஆகிட்டு கூட போக முடியாதா? உங்க அம்மா போன் பண்ணா எடுக்குரீங்க,வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் வந்த உடனே பாக்குரீங்க! அப்போலாம் உங்களுக்கு வேலை இல்லையா?" கேள்வியால் மடக்கினாள்.
"ஏய் என்னடி? ரொம்ப தான் கேள்வி கேக்குற? ஆமாடி நா பொய் தான் சொல்றேன். எனக்கு இங்க ஒருவேளையும் இல்ல,என் பிரண்ட் கூட வீட்டுக்கு போய்ட்டான். நா இங்க என் ரூம்ல ரெஸ்ட் தான் எடுத்துட்டு இருக்கேன். என்ன இப்போ? நீ தான் என்னை பார்க்கவே பிடிக்கலனு சொல்லிட்டல? அப்புறம் எதுக்கு கேள்வி கேக்குற? என் தொல்லை இல்லாம நிம்மதியா இரு.போ!" என்றுவிட்டு போனை வைத்துவிட்டான். யாழினி ஸ்தம்பித்துவிட்டாள்.
அவளுக்கு அவன் மீது கோபம் இருக்கிறது தான். அவன் மனதை கஷ்டப்படுத்த எண்ணிதான் அவள் வீட்டை விட்டு போக போவதாக சொன்னாள். ஆனால் அவனை விட்டு பிரிய நினைக்கவில்லை. ஒருவேளை அவள் வீட்டை விட்டு சென்றிருந்தாலும் அன்று மாலையே திரும்பி வந்திருப்பாள். இவன் அவள் சொன்னதற்காக அலுவலகத்தில் தங்கிவிட்டான்.
'அவன் உண்மையில் பழிவாங்க தான் மேரேஜ் பண்ணானா? அப்படினா என்கிட்ட எப்டி இவ்ளோ அன்பா இருக்கான்? எனக்கு பிடிக்கலனு தன் சொந்த வீட்டுக்கு வராமல் இருக்கானே? நா எவ்ளோ சண்டை போட்டாலும் கொஞ்சுறான். ஒருவேளை ஆகாஷ் பொய் சொன்னானா? ஆனா இந்த வசீகரனும் ஏன் என்னை கல்யாணம் பண்ணான்னு சொல்ல மாட்டேங்குறானே!' என குழம்பித் தவித்தாள்.
ஒரு இரவு, இரு பகல் பிரிவையே அவளால் தாங்க முடியவில்லை. அதன் முடிவு, மாலை ஆறு மணிக்கு பார்வதியிடம் வெளியே செல்வதாக சொல்லிவிட்டு காரில் அவனது அலுவலகம் நோக்கி கிளம்பிவிட்டாள்.
பிரம்மாண்டமான அந்த அலுவலகத்தின் வாசலில் கார் நின்றது. காரில் இருந்து இறங்கும்போதே தனது பைக்கை கிளப்பிக்கொண்டு இருந்த கோகுல் அவளை பார்த்துவிட்டு ஓடி வந்தான். "வணக்கம் சிஸ்டர்" என்று சிரித்தபடி அருகில் வந்து நின்றான். அவனை முறைத்தவள்,"எங்கே உங்க பிரென்ட்?" என்றாள்.
"உள்ளே இருக்கான். வாங்க சிஸ்டர்" என்றபடி முன்னே நடந்தான்.
அலுவலத்திற்குள் வந்ததும்,"சிஸ்டர்னு சொல்றதெல்லாம் சும்மா தானா? உங்க நண்பர் வீட்டுக்கு வராம இங்கேயே கிடக்குறாரு. அவரை விட்டுட்டு நீங்க வீட்டுக்கு கிளம்பி போய்ட்டு இருக்கீங்க?"என்றாள்.
கோகுல் அதிர்ச்சியோடு திரும்பி பார்த்தான். "இல்ல சிஸ்டர் இப்போவே வீட்டுக்கு போய்ட மாட்டேன். டின்னர் வாங்கி குடுத்துட்டு 8 மணிக்கு தான் போவேன்" என்றான்.
யாழினி அவனை நன்றாக முறைத்தாள்."மொதல்ல நர்ஸ் மாதிரி சிஸ்டர்னு சொல்றத நிறுத்துங்க. யாழினினு கூப்பிடுங்க.'ங்க' விகுதி எல்லாம் விட்டுட்டு 'வா போ' னு சொல்லுங்க.உங்களுக்கு மேரேஜ் ஆகிடுச்சா?" என்றாள்.
"ஆகிடுச்சி மா.வசீ தான் பண்ணி வச்சான்"
"உங்களுக்கு ஒருத்தருக்கு ஒருத்தர் மேரேஜ் பண்ணி வைக்கிறது தான் வேலையா?" என்று முறைப்பாக சொன்னவள்,"உங்க ஒய்ப்பை நா ஒருநாள் பாக்கணும்"
"பாக்கலாம் மா. நானே வீட்டுக்கு கூட்டிட்டு வரேன்" என்றான் உற்சாகமாக.
"வரும் போது சொல்லிட்டு வாங்க. அவங்களுக்கு ஒரு பூரிக்கட்டை வாங்கி ப்ரெசென்ட் பண்ணனும்" என்றாள் சீரியஸாக.
குழப்பத்துடன்,"ஏன் மா?" என்றவனிடம்,"வேற எதுக்கு? உங்களை அடிக்க தான். அவரை வீட்டுக்கு வெரட்டி விடாம, நீங்களும் இங்க 8 மணி வரைக்கும் இருப்பேன்னு சொல்றீங்களே! அதுக்கு பனிஷ்மெண்ட் வேணாம்?" என்றாள்.
கோகுல் சிரித்தான்."அவன் நா சொன்னா கேக்க மாட்டான் மா. நீ தான் அவன் முதலாளி, உன்னை கூட்டிட்டு போய் அவன் முன்னாடி நிறுத்துறேன். நீயே அவனை கவனிச்சிக்கோ. என் ஒய்ப்க்கு எந்த ஆயுதமும் தந்துடாத மா. ஏற்கனவே அடி தாங்கலை" என்று மீண்டும் சிரித்துவிட்டு வசீகரனின் அறை முன்பு நின்று, "நா கிளம்புறேன். ரொம்ப அடிச்சிடாத, என் நண்பன் பாவம்" என்று விட்டு புறப்பட்டான்.
யாழினி மெதுவாக கதவை திறந்தாள். உள்ளே வசீகரன் அவன் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து,ஒரு கையை மடக்கி நெற்றியில் வைத்தபடி கண்களை மூடி இருந்தான்.
யாழினி அவன் முன் சென்று கைகளை கட்டியபடி நின்றாள். அவளது காலடி ஓசையில் கண் திறந்தவன், அவளை கண்டதும் அதிர்ச்சியுடன் எழுந்து நின்றான். அவள் கண்கள் கலங்கியது.
உடனே சுயநினைவு பெற்றவன்,"யாழி, மை டார்லிங்!" என்றபடி மேஜையை சுற்றிக்கொண்டு அவள் அருகில் வந்தான். இரண்டு நாளாக அவனை காணாது தவித்தவள், அவன் அருகில் வந்ததும் வேகமாக அவனை அணைத்துக்கொண்டாள். ஒரு நொடி இன்ப அதிர்ச்சி அடைந்தவன் தானும் அவளை அணைத்து கொண்டான்.
உங்கள் அன்பு சகோதரி,
லாவண்யா தயூ
 
யாழ்-22
"ஓய்வு மொழிதலுமில்லாமல் - அவன்
உறவை நினைத்திருக்கும் உள்ளம்;
வாயு முரைப்பதுண்டு கண்டாய் - அந்த
மாயன் புகழினையெப் போதும் "
மனைவியின் முதல் அணைப்பில் நெகிழ்ந்து இருந்த வசீ அவளின் கண்ணீரின் ஈரத்தை உணர்ந்ததும் அவள் முகத்தை நிமிர்த்திப் பார்த்தான். "யாழி, ஏண்டா அழற?" என்றான்.
"நா சண்டை போட்டா, வீட்டுக்கு வராம இங்கேயே தங்கிடுவீங்களா? பொண்டாட்டியை சமாதானம் பண்ணனும்னு தெரியாதா?" கோபமாக கேட்டாள்.
"இந்த நியாயம் எல்லாம் உங்களுக்கு இல்லையா மேடம்? நீ மட்டும் சண்டை வந்ததும் பெட்டியை தூக்கிட்டு வீட்டை விட்டு கிளம்பலாமா?" அவனும் கேட்டான்.
ஒரு நொடி அதிர்ந்தாலும் உடனே,"உங்க மேல தப்பு இருக்குனு நா சண்ட போட்டேன். நீங்க தான் எனக்கு விளக்கம் சொல்லணும். அதை விட்டுட்டு தப்பிச்சி ஓடிவந்துடுவீங்களா?"என்றாள்.
அவளை கூர்ந்து பார்த்த வசீ,"நீ என்ன எந்த கேள்வியும் கேட்கல. உனக்கு என்னை பார்க்கவே பிடிக்கலைனு சொன்ன, எனக்கு உன் மேல அன்பே இல்லனு சொன்ன, என் தொல்லை இல்லாம கொஞ்ச நாள் நிம்மதியா இருக்கணும்னு சொன்ன.அதான் உனக்கு கொஞ்ச நாள் நிம்மதி கொடுக்கலாம்னு தான் நா ஆபீஸ்லயே இருக்கேன்.நீ ஏன் என்னை தேடி வந்த? " என்றான்.
கீழுதட்டை பற்களால் கடித்தவள்,"உங்களுக்குஎன்மேல அன்பு இருக்கோ இல்லையோ, எனக்கு உங்கமேல அன்பு இருக்குனு புரிஞ்சிடுச்சி. அதான் வந்தேன்" என்றாள்.
வசீகரன் கண்களை விரித்து ஆச்சர்யமாக அவளை பார்த்தேன்."யாழி, மை லவ். என்னடி சொன்ன? கம் அகய்ன்?" என்றான் குதூகலமாக.
சின்ன வெட்க சிரிப்புடன்,"ஒரு நாள் கூட உங்களை பார்க்காம இருக்க முடியல. அதான் வந்தேன்"என்றபடி அவன் மார்பில் சாய்ந்தாள்.
வசீகரன் தன் இருகைகளையும் விரித்து ,"ஹேஏஏஏ!!!"என கத்தினான். அவளை இறுக்கமாக அணைத்து முத்தம் வைத்தான். " லவ் யூ யாழி!உருக்கமாக கேட்டது அவன் குரல்.
பின் மெதுவாக,"நா பழிவாங்க உன்னை மேரேஜ் பண்ணேன்னு சொன்னியே!" என்றான்.
"பழி வாங்க பண்ணிங்களோ, பலகாரம் வாங்க பண்ணிங்களோ, ஆனால் நம்ம மேரேஜ்கும் எனக்கும் மரியாதை குறையாம பார்த்துக்குறீங்க. என்மேல அன்பா இருக்கீங்க. அதை நான் உணர்ந்துட்டேன். அதுவே எனக்கு போதும். அதோட நீங்க பழிவாங்க மேரேஜ் பண்ணி இருப்பீங்கனு எனக்கு இப்போ தோணல. உங்க மேல இருந்த கோபத்துல நா தப்பா முடிவு பண்ணிட்டேனோனு நெனைக்கிறேன்." என்றாள்.
வசீகரன் பேச்சிழந்தான். "இதை விட என் காதலுக்கு பெரிய அங்கீகாரம் குடுக்க முடியாதுடி" என்று உணர்ச்சி பூர்வமாக சொல்லியபடி அவள் முகம் நோக்கி குனிந்தான்.
சில நிமிட உணர்வு பூர்வ பரிமாற்றங்களுக்கு பிறகு,"நா உன்னை ஏன் மேரேஜ் பண்ணேன்னு தெரியுமாடி?"என்றான் கொஞ்சலாக.
"சொன்னா தான தெரியும்"என்றாள் வெட்கத்துடன்.
"உன்னை விட பெட்டர் ஒய்ப் எனக்கு கிடைக்க மாட்டானு தோணுச்சி. அதான்"என்றான் சிரித்தபடி.
"உங்களை!!!" என்று செல்ல கோபத்துடன் ஒரு கையால் அவன் சட்டை காலரைப் பற்றி தன்புறம் இழுத்தவள், மறுகையால் அவன் காதைப் பற்றி திருகினாள். "வீட்டுக்கு வாங்க இருக்கு உங்களுக்கு" என்று கூறி முன்னால் நடந்தாள். அவன் அவளை பின் தொடர்ந்தான்.
வீட்டிற்கு மகனோடு திரும்பிய மருமகளை கண்டதும் சிரித்த பார்வதி,"அதுக்கு தான் கேக்க வேண்டிய ஆள் இருக்கணும்னு சொல்றது" என்றார். வெட்கப்புன்னகையுடன் யாழினி அவரை அணை த்துக்கொண்டாள். அவர்கள் இருவரும் பேசிகொண்டு இருக்கும் போது வசீகரன் தன் அறைக்கு சென்று இரவு உடைக்கு மாறினான். யாழினி அவனுக்கு உணவு எடுத்துக்கொண்டு அறைக்கு சென்றாள்.
அவளை பார்த்து கண்ணடித்தவன்,
"என்ன டார்லிங் கோகுல வீட்டுக்கு வர சொன்னியாம்?"என்றான் சிரிப்புடன்.
"ஆமா முக்கிய குற்றவாளியையே மன்னிச்சாச்சு.கூட்டு களவாணிகளை மட்டும் தண்டிக்கவா முடியும்?"என்றாள்.
"நீ அவனை மன்னிச்ச மாதிரி தெரியலையே, ஆஷாவுக்கு பூரிக்கட்டை குடுக்க போறியாமே!"என்றான்.
அதிர்ச்சியாக பார்த்த யாழினி,"ஆஷாவா? எந்த ஆஷா?" என்றாள்.
"கோகுல் ஒய்ப், அவ பேரு ஆஷா" என்றான்.
"உங்க காலேஜ் பிரென்ட் ஆஷாவா?"என்றாள்.
"நாட் ஜஸ்ட் காலேஜ் பிரென்ட்! என் க்ளோஸ் பிரென்ட் பிரம் ஸ்கூல்.பட் உனக்கு அவளை எப்படி தெரியும்? நா சொன்னது இல்லையே" என்றான் புன்னகை முகமாக.
யாழினி அவனை தயக்கமாக பார்த்தபடி,"ஆகாஷ் சொன்னான்"என்றாள்.
"ஆகாஷா? அவன் என்ன சொன்னான்? எப்போ சொன்னான்?" என்றான் கோபமாக. "ரெண்டு நாள் முன்னாடி ஆகாஷ் எனக்கு கால் பண்ணான்"என்றாள்.
"அவன் எதுக்கு கால் பண்ணான்? காலேஜ்லயே என்கிட்ட செமத்தியா வாங்கவேண்டியது , தப்பிச்சிட்டான். இப்போ அதை வாங்கிடலாம்னு முடிவு பண்ணிட்டான் போல" என்றான்.
"ஏங்க இவ்ளோ கோபம்? காலேஜ்ல அவனுக்கும் உங்களுக்கும் பிரச்சினையா?"
"என்கூட பிரச்சினை பண்ணலாம் அவனுக்கு தில் இல்லடி. அவன் ஆஷாகிட்ட தான் வம்பு பண்ணான்.அதுக்கு தான் கோகுல் அவன நல்லா மிதிச்சான்" என்றான்.
ஏதோ புரிவது போல் இருந்தது யாழினிக்கு.
அவளது குழம்பிய முகத்தைப் கண்டவன்,"என்ன ஆச்சுடி?" என்றான்.
உடனே யாழினி ஆகாஷ் போனில் பேசியது எல்லாவற்றையும் சொன்னாள்.
"ஓ அதனால தான் பழிவாங்க மேரேஜ்னு உளறிட்டு இருந்தியா? நா கூட நம்ம மேரேஜ் அப்போ கோவிலில் ஆகாஷ் அக்கா கோபமா பேசினத வச்சி, நீயே கற்பனை பண்ணிக்கிட்டு கேக்குறனு நெனச்சேன்"
"உண்மையில என்ன தாங்க நடந்தது?"என்றவளிடம், "ஒன் மினிட்"என்றவன் கோகுலுக்கு போன் போட்டான்.
மறுமுனையில் கோகுல் வந்ததும்,"கோக்,உன் தங்கச்சி ஆகாஷை நீ அடிச்சதை பத்தி கேக்குறா. கொஞ்சம் சொல்லுடா"என்றான்.
கோகுல்,"என் வீரசாகசங்களை நானே சொன்னா எப்படிடா? என் ரசிகைய சொல்ல சொல்றேன் இரு"என்றுவிட்டு ஆஷாவை அழைத்தான். போனை ஸ்பீக்கரில் போட்டுவிட்டு ,"மிசஸ்.வசீ லைன்ல இருக்காங்க. நம்ம காதல் கதையை பத்தி தெரிஞ்சிக்கணுமாம் , சோ நீயே சொல்லு. ஆகாஷை நா மிதிச்சதை பத்தியும் சொல்லு" என்றான்.
பரஸ்பர நலம் விசாரிப்புகளுக்கு பிறகு ஆஷா உண்மையை சொல்ல ஆரம்பித்தாள்.

உங்கள் அன்பு சகோதரி,
லாவண்யா தயூ
 

New Threads

Top Bottom