Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கருப்பொருள்

Ramcharan sundar

Saha Writer
Messages
31
Reaction score
0
Points
6
இந்த நாவலை மறைந்த என் தாயார் திருமதி. ருக்மிணி சுந்தர் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.



“ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை - என்றும்
அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம்
அதில் பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்”


கவிஞர் கண்ணதாசன்



முகவுரை


என்னுடைய முந்தைய நாவலை வெளியிட்ட பிறகு, அடுத்த நாவலில் ஒரு பெண்ணை மையமாக வைத்து எழுத திட்டமிட்டுருந்தேன். தோராயமாக ஜூலை மாதம், 2016 ஆம் ஆண்டு இந்த கதையை எழுத ஆரம்பித்தேன். முதலில் இந்த கதைக்கான கருவை வடிவமைப்பதில் மிகவும் தடுமாறினேன். ஒரு கட்டத்தில் என் கற்பனை திறன் எல்லாம் வடிந்து விட்டதோ என்று எண்ணத் தோன்றியது எனக்கு. பிறகு, வாழ்நாள் முழுக்க இந்த கதையையே எழுதிக் கொண்டிருந்தாலும் பரவாயில்லை, மனத்திருப்தி வரும் வரை கிழித்து கிழித்து எழுதி கொண்டிருப்போம் என்று முடிவெடுத்தேன். இரண்டு வருடங்கள் இப்படியே கழிந்தன. திடீரென்று ஒரு நாள் என் எண்ணத்தில் ஒரு கதையின் கரு உருவானது. அந்த கரு நான் எதிர்பார்த்த மனதிருப்தியை கொடுத்தது. இரண்டே மாதங்களில் இந்த கதையை தமிழில் எழுதி முடித்தேன். சகாப்தம் பதிப்பகத்தை பற்றி திருமதி. மேகலா அப்பாதுரை மூலம் தெரிய வந்தது. நான் சமீபத்தில் வெளியிட்ட இந்த நாவலை சகாப்தம் தொடர்கதை forum மூலமாக சிறு சிறு அத்தியாயமாக வெளியிட முடிவெடுத்திருக்கிறேன். எனக்கு கிடைத்த அதே மனத்திருப்தி படிக்கும் வாசகர்களுக்கும் கிடைக்கும் என்று நம்புகிறேன்.



"இந்த கதையில் வரும் கதாபாத்திரங்களும், சம்பவங்களும் கற்பனையே."
 
கருப்பொருள்

07 செப்டம்பர், 2016


மனிதனின் காலடி படாத முற் செடி புதர் மரங்கள் என வளர்ந்திருந்த ஒரு அடர்த்தியான காடு அது. அப்படிப்பட்ட இடத்தில் கனமான இரும்புக் கழி போல் ஒருவனின் கால் தடம் அழுத்தமாக பதிந்தது. கீழே இருக்கும் காய்ந்த முள் சருகுகள் அவன் பாதத்தை குத்தி புண் படுத்துவதை சற்றே பொருட் படுத்தாமல் நடந்து கொண்டிருந்தான். அவன் முன்னேறி செல்ல செல்ல முற்செடிகள் அவனின் உடம்பை கீறி உள்ளே ஓடிக் கொண்டிருக்கும் குருதியை எட்டிப் பார்க்க செய்தது. அவன் அதையும் பொருட் படுத்தாமல் முன்னேறி நடந்துக் கொண்டிருந்தான். அந்த அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் மரம் செடி கொடிகளினால் ஏற்பட்ட இருளை, சூரியன் ஆங்காங்கே உள்ள இலை தழைகளின் இடைவெளிக்குள் நுழைந்து அவனுக்கு ஒரு வெளிச்சத்தை கொடுத்தான். சில விஷப் பூச்சிகள் அவன் மீது ஏறி அவனை கடிக்கத் தொடங்கின. அவன் அந்த பூச்சிகளையும் தட்டி விடாமல் நடந்து முன்னேறிக் கொண்டிருந்தான். நிச்சயமாக, பெரும் மன உறுதி உள்ளவனால் மட்டுமே இந்த வலியையும் வேதனையையும் தாங்கி கொள்ள முடியும். அதே போல மிகுந்த மன தைரியம் உள்ளவனால் மட்டுமே இப்படி ஒரு பாதையை தேர்ந்தெடுக்க முடியும். அவனுடைய உறுதியான நடையை அந்த சரிவான பாதை பின்னே தள்ளியது. அவன் சளைக்காமல் முன்னேறிக் கொண்டிருந்தான். சில மணிநேர நடைக்குப் பின்னர் வானத்தை மூடியிருந்த இலை தழைகள் கலைந்து நீலவானம் தெளிவாக தெரிந்தது. சூரியனின் ஆதிக்கமும் அதிகரித்திருந்தது. அவன் பயணத்தை நிறுத்தி வானத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

திடீரென்று 'ஓ ஓ ஓ ...' என்று தன் அடிவயிற்றிலிருந்து மூச்சு விடாமல் ஓலமிட்டான். ஒரு நிமிடம் வரை நீடித்தது அந்த ஓலம். பிறகு வேகமாக சுவாசித்த அவன், நிதானமான பிறகு

'நீ யாரு?... நீ உண்மையா?... அப்படி உண்மையா இருந்தா ஏன் இப்படி என்னை கஷ்டப்படுத்தற?... எனக்கு ஒன்னுமே புரியல?... நான் இந்த மலை மேல ஏறி வரும்போது நிறைய முள்ளு என்னை காய படுத்திச்சு... நிறைய விஷப் பூச்சி என்னை கடிச்சிது... அதையெல்லாம் என்னால தாங்கிக்க முடியுது... ஆனா நீ கொடுக்கற வேதனையையும் வலியையும் என்னால இனிமேல் தாங்கிக்க முடியாது... நான் என் வீட்டை விட்டு ரொம்ப தூரம் வந்துட்டேன்... அவங்களால என்னை தேடி கண்டு பிடிக்க முடியுமான்னு தெரியாது... அதை நான் எதிரும் பாக்கல... என் உடம்பு யாருக்கும் தெரியாம இங்கேயே அழுகி சிதைஞ்சு போனாலும் பரவாயில்ல, நான் அவங்களுக்கு கிடைக்கவே கூடாது...... இதுக்கப்புறமா என்ன நடக்கும்னு எனக்கு தெரிய போறதில்லை... இதோட நீ என்னை விட்டுடு' என்று வானத்தைப் பார்த்து உரக்க கூறிவிட்டு பார்வையை தரையை நோக்கி நகர்த்தினான். கீழே மிக ஆழத்தில் உள்ள அடர்த்தியான காடு அவன் கண்ணிற்கு தெரிந்தது. தன் இரு கைகளை விரித்து அந்த மலை உச்சியிலிருந்து குதித்தான் அவன்.

சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னர்

08 ஜூன், 1981


உயரமான ஒரு அலுவலக கட்டிடத்தின் மாடியில் சந்திரனும் ராதாவும் மட்டும் தனியாக நின்று கொண்டிருந்த வேளையில் மிகவும் பலத்த காற்று வீசியது. புகையிலை சுருளை (CIGARETTE) தன் இரு உதடுகளுக்கு இடையே சொருகி அதன் மறுமுனையை அங்கு வீசும் வேகமான காற்றில் அணையாமல் பாதுகாப்பாக பற்றவைத்து புகையை உள்ளே இழுத்து வெளியிட்டான் சந்திரன். அந்த புகையின் வாசத்திற்கு எந்த வித அருவெறுப்பையும் காட்டாமல் அவனருகில் கையில் அழைப்பிதழை அவனிடம் நீட்டியவாறு நின்று கொண்டிருந்தாள் ராதா.

அதை பெற்றுக் கொண்ட சந்திரன் அந்த அழைப்பிதழில் மாப்பிள்ளையின் பெயரின் கீழே "ஜுனியர் என்ஜினீயர், ரயில்வேஸ்" என்று அவருடைய பணி விவரம் குறிப்பிடப்பட்டிருந்ததை பார்த்தான்.

'நல்ல படியா செட்டில் ஆயிட்டே... ரொம்ப சந்தோஷமாயிருக்கு...' - சந்திரன்.

ஒரு பெரு மூச்சை விட்ட ராதா சந்திரனிடம்

'இவ்வளவு நாள் நாம ரெண்டு பேரும் காதலர்களா இருந்தோம்... நேத்து வரைக்கும் உன் மனசு மாறிடும்னு நம்பினேன்... கடைசீல நான் மாறிட்டேன்... ' - ராதா.

சந்திரன் லேசாக நகைத்தவாறே

'நீ என்னோட பேசி பழகும் போதே சொன்னேனே... எனக்கு கல்யாணம், ஒருவனுக்கு ஒருத்தின்ற கான்செப்ட் அப்புறம் கடவுள் மேல எல்லாம் நம்பிக்கையே இல்ல... இதை என்னை லவ் பண்ற எல்லா பெண்கள் கிட்டேயும் முன்னாடியே சொல்லிடுவேன்... அப்படியிருந்தும் எல்லாரும் "உன்னை நான் மாத்தி காட்டேறேன்"னு சொல்லிட்டு என் கூட பழகுவாங்க... அப்புறம் வேற கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆயிடுவாங்க...' என்று கூறினான்.

'மனசுக்கு பிடிச்ச ஆளோட வாழணும்... அந்த வாழ்க்கை தெகட்டிட்ட பிறகு புதுசா மனசுக்கு பிடிச்ச வேற ஒரு ஆளோட வாழணும்... அதுவும் தெகட்டிருச்சா அப்புறம் வேற ஆள்னு உன் ஐடியாலஜி படி என் வாழ்க்கையை வாழணும்னு தான் ஆசை... என்ன பண்றது?... பொண்ணா பொறந்துட்டேனே... உன்னோட ஐடியாலஜி படி பெண்கள் நடந்துக்கறதை ஏத்துக்கறதுக்கு இன்னும் நம்ம சமுதாயம் பக்குவம் அடையலை... அம்மா அப்பாவுக்காகவும், சமுதாயத்துக்காகவும், என்னோட பாதுகாப்புக்காகவும் நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு தான் ஆகணும்... ஆனா உன் கடைசி காலம் வரைக்கும் நீ இப்படியே வாழ முடியாது ... நமக்குன்னு உறவுகள் தேவை... நீயும் உன் ஐடியாலஜியை மாத்திக்கிட்டு சீக்கிரம் ஒரு கல்யாணம் பண்ணிக்கோ...' - ராதா.

'எனக்குள்ள கருவா இருந்து என்னோட சொல் செயல் எண்ணத்தை ஆட்டுவிக்கறதே என்னோட இந்த ஐடியாலஜி தான்... இந்த கரு எப்படி உருவாச்சுனே தெரியலை... ஒருவேளை என் அம்மா என்னோட சின்ன வயசுலியே சாகாம இருந்திருந்தா என்னோட ஐடியாலஜி வேறமாதிரி இருந்திருக்குமோ என்னவோ... உன்கிட்ட நான் ஏற்கனவே சொல்லிருக்கேன்... சின்ன வயசுல என் அப்பா வியாபாரம்னு வெளியூர் போய்டுவாரு... நான் ஹாஸ்டல்ல தான் வளர்ந்தேன்... என் அப்பாவும் என்னை எவ்வளவோ மாத்த முயற்சி பண்ணாரு... இன்னும் பண்ணிக்கிட்டு இருக்காரு... இதுவரைக்கும் எந்த சம்பவங்களும் என் ஐடியாலஜியை மாத்திக்கற அளவுக்கு என் மனச பாதிச்சதில்ல...' - சந்திரன்.

ராதா செயற்கையாக புன்னகையை சிந்தி

'ஒரு நாள் உன் மனசை பாதிக்கற சம்பவம் ஒன்னு கண்டிப்பா நடக்கும்... அது உனக்கு அன்பு பாசம் அப்புறம் பிரிவோட வலியை உனக்கு உணர்த்தும்... நிச்சயமா நீ உன் ஐடியாலஜியை மாத்திக்குவ...' என்று கூறினாள். அப்படி கூறும் போது அவள் கண்கள் கலங்கியது. உடனே சந்திரன் தீவிரமாக

'ஹே... என்னாச்சு?' என்று கேட்டான்.

'ஒண்ணுமில்ல... தானா கண் கலங்குது... நீ இதை சீரியஸ்ஸா எடுத்துக்காதே... அவசியம் என் கல்யாணத்துக்கு வந்துடு... பயப்படாத... எனக்கு உன்னை பாத்தா எந்த குற்ற உணர்ச்சியும் வராது... உன்னோட இருந்த இந்த தற்காலிக உறவுல நான் கத்துக்கிட்டது இந்த மன பக்குவத்தை தான்... நிறைய பேர இன்வைட் பண்ணனும்... நான் கிளம்பறேன்...' என்று சந்திரனிடம் விடைபெற்று சென்றாள் ராதா.

ராதவுடனும் மற்றும் அவனின் முன்னாள் காதலிகளுடனும் நடந்த இனிமையான நிகழ்வுகளை நினைத்து பார்த்துக் கொண்டே வாயில் இருந்த புகை சுருளை முடித்து விட்டு அந்த மாடியிலிருந்து கீழே பார்த்தான். அந்த உச்சியிலிருந்து கீழே பார்க்கும் அவனை ஒரு வித பயம் பற்றிக் கொண்டது. லேசாக தலை சுற்றியது. சட்டென்று தன் பார்வையை விலக்கி அந்த இடத்தில இருந்து நகரத்தொடங்கினான். அவன் மாடி படிக்கட்டுகளில் இறங்கி கொண்டிருக்கும் போது சட்டென்று ஒருவன் முகத்தில் ஒரு வித கலக்கத்துடன் சந்திரனை வேகமாக கடந்து மாடியை நோக்கி படிக்கட்டுகளில் ஓடினான். சில நொடிகள் அவன் ஓடுவதை சந்தேகமாக பார்த்த சந்திரன் கீழே இறங்குவதை தொடர்ந்தான். சட்டென்று சந்திரனுக்கு அந்த உயரமான மாடியிலிருந்து கிழே பார்க்கும் போது உண்டான பயம் அவன் நினைவிற்கு வந்தது, அடுத்து அவனை கடந்து ஒருவன் கலக்கத்துடன் வேகமாக மாடியை நோக்கி ஓடியதும் நினைவிற்கு வந்தது. உடனே தான் நடக்கும் திசையை மாற்றி மாடியை நோக்கி சந்திரனும் ஓடினான். மாடியை அடைந்த அவன் தன்னை கடந்து வந்த ஆசாமியை தேட சற்றே சுற்றும் முற்றும் பார்வையை படரவிட்டுக் கொண்டிருக்கும் போது, சந்திரனுக்கு வந்தவன் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டானா என்ற சந்தேகம் தோன்றியது. அந்த சந்தேகத்தை போக்கி கொள்வதற்கு மாடியிலிருந்து கீழே எட்டி பார்த்தான். கிழே எந்த பதட்டமும் பரபரப்பும் இல்லை, இயல்பான நிலையில் மக்கள் நடமாடிக் கொண்டிருந்தார்கள். மறுபடி அந்த மாடியில் அவனை தேடும் போது, சந்திரனுக்கு அழுகை சத்தம் கேட்டது. உடனே அந்த அழுகை சத்தம் வரும் திசையை நோக்கி போனான். அப்படி அந்த சத்தத்தை நோக்கி சென்ற சந்திரனின் கண்களுக்கு மேலே ஓடி வந்தவன் மாடியின் நுழைவாயில் அறையின் பின்னே அமர்ந்து அழுது கொண்டிருப்பது தெரிந்தது. உடனே அழுது கொண்டிருப்பவனிடம் வேகமாக சென்று அவன் அழுவதை சில நொடிகள் பார்த்துவிட்டு அவனிடம் தயக்கமாக

'சார்... தப்பா எடுத்துக்காதீங்க... என் பேரு சந்திரன்... என்னை உங்க நண்பனா நினைச்சுக்கோங்க... உங்களோட துக்கத்தை என்கிட்ட பகிர்ந்துக்கோங்க...' என்றான். சில நொடிகளில் தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்ட அந்த நபர்

'என் பேரு விவேக்... மேனேஜர் கண்ட படி எல்லார் முன்னாடியும் திட்டிட்டார்... அந்த அவமானத்தை என்னால தாங்கிக்க முடியலை' என்றான். அவனின் பதிலை கேட்டு சந்திரன் வியப்பாக நகைத்தவாறே

'சார்... மேனேஜர் னாலே திட்டிகிட்டு தான் இருப்பாங்க... நான் என் மேனேஜர் கிட்ட டெய்லி திட்டு வாங்குவேன்... அந்த ஆள் கிட்ட திட்டு வாங்கலைன்னா எனக்கு தூக்கமே வராது... வாங்க கேன்டீன் போய் சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்...' என்று விவேக்கை சமாதான படுத்தி அந்த அலுவலகத்தின் உணவகத்திற்கு அழைத்து சென்றான்.

அங்கே அமர்ந்து உணவகத்தின் பணியாளிடம் தனக்கு வேண்டிய சிற்றுண்டிகளை எடுத்து வருமாறு கூறிக் கொண்டிருந்தான் சந்திரன். அப்போது அங்கு ஒரு அலுவலக பணியாள் விவேக்கிடம் வந்து

'சார்... உங்க அம்மா கிட்டேருந்து உங்களுக்கு போஃன் கால் வந்திருக்கு...' என்றான்.

இதை கேட்டவுடன் விவேக் கோபமாக

'நான் உயிரோட இல்ல செத்துட்டேன்னு சொல்லுங்க...' என்று சொன்னான். உடனே சந்திரன் விவேக்கிடம்

'ஐயோ... சார் ஏன் இவ்வளவு கோபம்?... அதுவும் அம்மா கிட்ட... எனக்கெல்லாம் அம்மா இல்லையேன்னு ரொம்ப வறுத்த பட்டிருக்கேன்... போய் பேசுங்க...' என்றான்.

விவேக் 'ப்ப்ச்...' என்ற சப்தத்துடன் வேறு பக்கம் திரும்பினான். அவனின் முகபாவனையை பார்த்த சந்திரன் அந்த அலுவலக பணியாளிடம்

'நான் அவங்க கிட்ட பேசறேன்...' என்று கூறிவிட்டு அங்கிருந்து அந்த அலுவலக பணியாளுடன் சென்றான். தொலைபேசியின் ஒலிக்கடத்தியை ஏந்தி

'ஹலோ அம்மா...' என்றான்.

'விவேக்கா?' என்று ஒரு தழுதழுத்த குரல் கேட்டது.

'இல்லமா... நான் அவர் ப்ரண்ட் சந்திரன்...' - சந்திரன்.

'ஓ... அவன் எப்படி பா இருக்கான்?... காலைல அவன் என் கூட சண்டை போட்டுட்டு வந்துட்டான்... அதான் எப்படி இருக்கானு கேட்கலாம்னு போஃன் பண்ணினேன்...' - விவேக்கின் தாய்.

'பரவாயில்ல மா... நார்மலா தான் இருக்காரு... என்ன? உங்க மேல தான் கோபம்... அவ்வளவுதான்... நான் அதை பேசி சரி பண்ணிடறேன்...' - சந்திரன்.

'அவனை பத்திரமா பாத்துக்கோ பா... அந்த பொண்ணு அவனை விட்டு போனதுலேருந்தே அவன் ரொம்ப சென்சிடிவ் ஆயிட்டான்...' - விவேக்கின் தாய்.

'யாரந்த பொண்ணு?... என்னாச்சு?... நான் இப்போ தான் அவரோட நட்பா பழக ஆரம்பிச்சிருக்கேன்... எனக்கு இந்த விஷயமெல்லாம் தெரியாதுமா...' சந்திரன்.

'விவேக் எங்களுக்கு ஒரே பையன்... அவன் மேல ரொம்ப அன்பையும் பாசத்தையும் கொட்டி வளத்தோம்... படிப்பெல்லாம் நல்ல படியா முடிச்சு நல்ல வேலை கிடைச்சு அவன் வாழ்க்கை நல்ல படியா போய்கிட்டு இருந்தது... அவனுக்கு சீக்கிரமா கல்யாணம் பண்ணி வெக்கணும்னு எனக்கு ஆசை... அவனும் இப்போ வேணாம் மா னு தான் சொன்னான்... நான் தான் கேக்கலை... ஒரு நாள் அவனுக்கு பொண்ணு பாக்க ஏற்பாடு பண்ணிருந்தோம்... அவன் வேணாம் எனக்கு பிடிக்கலைனு ரொம்ப அடம்பிடிச்சான்... அவனை கட்டாயப்படுத்தி பொண்ணு பாக்க கூட்டிகிட்டு போனேன்... அவளுக்கு பதினெட்டு வயசு தான்... பாக்க ரொம்ப லட்சணமா அழகா இருந்தா... இப்போ கல்யாணமே வேணாம்னு அடம்புடிச்சவன் அந்த பொண்ணை பாத்தவொடனே மனச மாத்திகிட்டான்... அவனுக்கு அவளை ரொம்ப பிடிச்சிருந்தது... அவளோட வரவு அவனுக்கு நல்லதை குடுக்கும்னு நம்பினோம்... ஆனா கல்யாணம் ஆன மூணாவது நாளே அந்த பொண்ணு அவனை விட்டுட்டு போய்டுவான்னு எதிர் பாக்கலை... பொண்ணு பாக்கும் போதே அந்த பொண்ணு பிடிக்கலைனு சொல்லி இருந்தா நாங்க அவன் கிட்ட ஏதாவது சொல்லி சமாளிச்சிருப்போம்... எல்லா சடங்கும் நடக்கும் போது மௌனமாவே இருந்துட்டு கல்யாணம் நடந்த மூணாவது நாளே அந்த பொண்ணு இப்படி பண்ணிட்டாப் பா.. அந்த சம்பவத்துக்கு முன்னாடி என் பையனை சீறாட்டி பாராட்டின சொந்தகாரங்க எல்லாம் “இவனுக்கு ஏதோ குறை இருக்கு அதான் அவ விட்டுட்டு போய்ட்டா” ன்ற மாதிரி ஜாடை மாடையா சொல்லிட்டு போறாங்க... எல்லாரோட உண்மையான முகமெல்லாம் இப்போ தான் பா எங்களுக்கு தெரிய வருது... நாங்களும் அந்த பொண்ணு வீட்டுக்கு போய் எவ்வளவோ பேசி பாத்தோம்... மொதல்ல "நாங்க எப்படியாவது பேசி அவளை அனுப்பி வெக்கிறோம்"னு சொன்னவங்க போக போக "எங்களை மன்னிச்சிருங்க... எங்க பொண்ணுக்கு இப்போ கல்யாண வாழ்க்கைல இஷ்டம் இல்லனு சொல்லிட்டா... மேற்கொண்டு காட்டாயப்படுத்தினா நான் தற்கொலை பண்ணிப்பேன்னு மிரட்டுறா... அதனால உங்க பையனுக்கு வேற கல்யாணம் பண்ணிடுங்க"னு சொல்லிட்டாங்க... நாங்களும் "இதெல்லாம் ஒன்னும் பெரிய விஷயம் கிடையாதுப்பா... நாங்க வேற நல்ல பொண்ணை பாத்து கல்யாணம் பண்ணி வெக்கிறோம்"னு சொன்னாலும் கேக்க மாட்டேங்கறான்... இதை பெரிய அவமானமா எடுத்துக்கிட்டு இதனால தான் தனக்கு நிறைய கெட்ட விஷயங்கள் நடக்குதுன்னு நினைச்சுக்கறான்...' - விவேக்கின் தாய்.

'நீங்க கவலை படாதீங்க மா... நிச்சயமா அவர் நார்மல் ஆவார்... அடுத்த வருஷம் வேற கல்யாணம் பண்ணிக்கிட்டு உங்க மனச திருப்தி படுத்துவார்... இதுக்கு நான் பொறுப்பு... நீங்க கவலை படாம போஃனை வைங்க மா. ' - சந்திரன்.

'இல்லப்பா... அவனுக்கு வர சின்ன சின்ன கஷ்டத்தையெல்லாம் பெரிசா எடுத்துக்கறான்... அவனுக்கு வர கஷ்டத்துக்கெல்லாம் நானும் அவன் அப்பாவும் தான் காரணம்னு எரிஞ்சு விழறான்... நாங்க பொறுமை இழந்து இன்னிக்கு காலைல அவனை திட்டும் போது “நான் உயிரோட இருந்தா தானே பிரச்சனை உங்களுக்கு... நான் இப்போவே போய் சாகறேன்” னு சொல்லிட்டு வீட்டை விட்டு போய்ட்டான்... அதான்பா கால் பண்ணி அவனை கொஞ்சம் ஆசுவாச படுத்தலாம்னு நினைச்சேன்... அவனை கொஞ்சம் பேச சொல்லுப்பா... அப்போ தான் எனக்கு திருப்தியா இருக்கும்...' - விவேக்கின் தயார்.

'சரிங்க மா... லைன்ல இருங்க... நான் போய் விவேக்கை கூட்டிகிட்டு வரேன்...' என்று ஒலிப்பானை மேஜையில் வைத்து விட்டு விவேக்கை அழைத்துவர அலுவலக உணவகத்தினுள் நுழைந்தான். அங்கு ஒரு ஜன்னலின் பக்கம் கூட்டம் கூடி முன்னமுனுத்து கொண்டிருந்தது. அதை பார்த்தவுடன் சில நிமிடங்களுக்கு முன் அந்த அலுவலக மாடி உச்சியிலிருந்து கீழே பார்க்கும்போது வந்த பயம் நினைவிற்கு வந்தது.

உடனே பதட்டமாக என்னவென்று ஒருவரிடம் விசாரித்தான்.

'யாரோ ஒருத்தன் நம்ம ஆபிஸ் மாடியிலிருந்து குதிச்சு தற்கொலை பண்ணிகிட்டான்...' என்று கூறியவுடன் சந்திரன் வேகமாக அந்த அலுவலக கட்டிடத்தின் கீழ் தளத்தை அடைந்து அந்த அலுவலகத்தை விட்டு வெளியே சாலைக்கு வந்தான். அங்கு கூடியிருந்த கூட்டத்தை விலக்கி அந்த சாலையின் தரையை பார்த்தான். அங்கே ரத்த வெள்ளத்தில் உயிரற்று மிதந்து கொண்டிருந்தது விவேக்கின் உடல். அதை பார்த்தவுடன் சந்திரனுக்கு, விவேக்கின் தாயிடம்

“நீங்க கவலை படாதீங்க மா... நிச்சயமா அவர் நார்மல் ஆவார்... அடுத்த வருஷம் வேற கல்யாணம் பண்ணிக்கிட்டு உங்க மனச திருப்தி படுத்துவார்... இதுக்கு நான் பொறுப்பு... நீங்க கவலை படாம போஃனை வைங்க மா. “என்று கூறியதும்

"ஒரு நாள் உன் மனசை பாதிக்கற சம்பவம் ஒன்னு கண்டிப்பா நடக்கும்... அது அன்பு பாசம் அப்புறம் பிரிவோட வலியை உனக்கு உணர்த்தும்... நிச்சயமா நீ உன் ஐடியாலஜியை மாத்திக்குவ..." என்று ராதா கூறியதும் நினைவிற்கு வந்தது. மறுபடி அந்த மாடியின் உச்சியிலிருந்து எட்டி கீழே பார்க்கும் பயம் நினைவிற்கு வந்து அவனின் சொல் செயல் எண்ணங்களின் கருவை உலுக்கி அவனுள் ஒரு அதிர்வை கொடுத்தது. கீழிருந்து அந்த கட்டிடத்தின் உயரத்தை பார்த்தவாறே மயங்கி கீழே விழுந்தான் சந்திரன்.

மேஜையில் இருந்த ஒலிப்பானிலிருந்து

'ஹலோ... சந்திரன்... ஹலோ... யாராவது ரிசீவரை எடுத்து பேசுறீங்களா?... நான் என் பையன் விவேக்கோட பேசணும்... ஹலோ... யாராவது ரிசீவரை எடுங்க ப்ளீஸ்...' என்று அந்த தாயின் குரல் கவனிப்பாரற்று ஒலித்துக் கொண்டிருந்தது.



09 ஜூன், 2016 (35 ஆண்டுகளுக்கு பின்னர்)


தூக்கம் கலைந்து ஐம்புலன்களும் சுற்றுப் புறத்தில் நடக்கும் இயக்கத்தினை மெதுவாக கிரகிக்கத் தொடங்கியது. சுப்ரஜா ராம பூர்வா சந்தியா ப்ரவர்த்ததே என்று சுப்ரபாத பாடல் லேசாக காதில் ஒலிக்க, தன் சுயநினைவு மெதுவாக விழிப்படைந்ததை உணர்ந்தாள் நந்தினி.

-தொடரும்
 
09 ஜூன், 2016 (35 ஆண்டுகளுக்கு பின்னர்)
தூக்கம் கலைந்து ஐம்புலன்களும் சுற்றுப் புறத்தில் நடக்கும் இயக்கத்தினை மெதுவாக கிரகிக்கத் தொடங்கியது. சுப்ரஜா ராம பூர்வா சந்தியா ப்ரவர்த்ததே என்று சுப்ரபாத பாடல் லேசாக காதில் ஒலிக்க, தன் சுயநினைவு மெதுவாக விழிப்படைந்ததை உணர்ந்தாள் நந்தினி. மனதில் லேசாக ஒரு பயம் கலந்த குழப்பம் வெளிப் பட்டது. சோம்பல் முறித்துவிட்டு கண்களை கசக்கிவிட்டு, இரவு விளக்கின் மங்கிய ஒளியின் உதவியால் கடிகாரத்தின் நேரத்தை பார்த்தாள். மணி காலை 6.30யை காட்டியது. படுக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்து பக்கத்தில் குறட்டைவிட்டு தூங்கிக் கொண்டிருக்கும் ரவியை பார்த்துவிட்டு, மெதுவாக படுக்கையிலிருந்து எழுந்து நடந்து அந்த அறையின் கதவை தாழிழித்து திறந்தாள்.
'ரொம்ப அவசரமா முடிவு எடுத்துட்டேனோ?... எல்லாம் உடனே சட்டுனு முடிஞ்ச மாதிரி இருக்கு?... ' என்று யோசித்துக் கொண்டு நடு கூடத்தை அடைந்த நந்தினியை
'ஏம்மா பல் தேச்சு முடிச்சிட்டு வாசல்ல போய் கோலம் போட்டுடு.' என்று ரவியின் தாய் வாசுகி கூற, அது சுருக்கென்று ஊசியை போல் நந்தினியின் மனதை குத்தியது. 'நான் படிச்சவ... ஒரு கம்பெனில வேலை பாக்கறேன்... மாசமான சம்பளம் வாங்கறேன்' என்ற எண்ணம் தோன்றி அவளை கோபமுற செய்தது. அதனை தன் முகத்தினில் வெளி காட்டாமல் மெதுவாக தலையை மட்டும் அசைத்து விட்டு சென்றாள்.
கோலம் போட்டுவிட்டு வீட்டினுள் நுழையும் போது
'போய்... பால் காய்ச்சிடு... எனக்கு சக்கரை இல்லாத ஒரு காபி' என்று கேட்டாள் நந்தினியின் மாமியார். அப்போது தூக்க கலக்கத்தில் அங்கு வந்த ரவியின் தங்கை சுமதி.
'நந்தினி... எனக்கு கொஞ்சம் சர்க்கரை தூக்கலா ஒரு காபி' என்று கேட்க, 'அண்ணின்னு மரியாதையே இல்லை' என்று நந்தினியின் கோபம் உச்சத்தை அடைந்தது. இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியாமல் குழப்பத்துடன் சில நொடிகள் மௌனமாக நின்றாள்.
'நந்தினி, என்னமா நிக்கற? போய் சுமதி கேட்டதையும் எடுத்துக்கிட்டு வா.' - வாசுகி.
'நான் என்ன வேலைக்காரியா?' என்று எண்ணத்தில் உதித்த கேள்வியை வெளிகேட்காமல் மௌனமாய் சமயலறைக்குச் சென்று இருவருக்கும் காபியை கொடுத்தாள்.
'நந்தினி... இன்னிக்கு மோர் கொழம்பு, வாழைக்காய் பொறியல்...' என்று அன்றைய தினத்திற்கு தேவையான உணவு வகைகளை கூறினாள். ஏதோ சிறையில் அடைப்பட்டதை போல மன உணர்வு அவளுக்கு, ஒரு கட்டாயத்தில் வேலை செய்யும் அடிமை போல சமைக்கத் தொடங்கினாள்.
அவசரமாக சமைத்து முடித்து விட்டு
'அம்மா சமைச்சு முடிச்சிட்டேன்... ஆபிசுக்கு டைம் ஆயிடிச்சு... நான் குளிச்சிட்டு வந்துடறேன்.' என்று கூறிவிட்டு குளியலறைக்குச் சென்றாள்.
குளிக்கும் பொழுது கஷ்டம் தெரியாமல் ஒரு பறவை போல சுதந்திரமாக தன் தாய் தகப்பன் மற்றும் தங்கையோடு வாழ்ந்த காலங்கள் அவள் நினைவில் வந்து சென்றது. அந்த நினைவுகள் கண்ணீராய் சுரந்து அவள் குளிக்கும் நீரோடு கலந்து வடிந்தது. ஒரு கனத்த மனதுடன் அலுவலகத்திற்கு புறப்பட தயாரானாள். அப்போது சமயலறையில் யாரோ கோவமாக கத்தும் சத்தம் கேட்டது. என்னவென்று சமயலறைக்கு ஓடி போய் பார்த்தாள். அங்கே ரவியின் தம்பி அருண் கோபமாக அவன் தாயிடம் கத்திக் கொண்டிருந்தான்.
'அம்மா... நான் எவளோவாட்டி சொல்லிருக்கேன்... எனக்கு மோர் குழம்பு பிடிக்காதுனு... அப்புறம் ஏன் அதையே பண்றீங்க?... எனக்கு சாப்பாடும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம்... நான் ஆபிஸ் கேண்டீனிலியே சாப்டுக்கறேன்' என்று வாசுகியிடம் கத்திவிட்டு நந்தினியை ஒரு பார்வை மெளனமாக பார்த்துவிட்டு அமைதியாய் நின்றான்.
உடனே வாசுகி நந்தினியிடம் திரும்பி
'தம்பிக்கு அப்படிதான் கோபம் வரும்... நீ ஒன்னு பண்ணு... அவன் ஆபிஸ் கிளம்பறத்துக்குள்ள நீ நாலு வெண்டைக்காயை அறிஞ்சு போட்டு கம்மியா ஒரு வெண்டைக்காய் குழம்பு வெய்' என்றாள். பொறுமையிழந்த நந்தினி
'அம்மா... எனக்கு ஆபிஸ்க்கு டைம் ஆயிடுச்சு... இத மட்டும் நீங்க வெச்சுருங்கமா' என்று கூற, உடனே அருண்
'அம்மா... நீ ஏன் மா கஷ்டப் படணும்... நான் தான் சொல்றேன்ல ஆபிஸ் கேன்டீன்ல சாப்டுக்கறேன்னு' என்று குரலை உசத்தி கூற,
'இல்லப்பா... நான் ஒரு அஞ்சு நிமிஷத்துல பண்ணிடறேன்' என்றாள் வாசுகி.
நந்தினியும் அருணிடம்
'அருண் இன்னிக்கு ஆபிஸ்க்கு டைம் ஆயிடுச்சு அதான்... இல்லனா நானே...' என்று கூறிமுடிப்பதற்குள் அருண் அவளிடமிருந்து பார்வையை திருப்பி வாசுகியிடம்
'அம்மா... நீ வயசான காலத்துல கஷ்டப்பட வேணாம்... நான் ஆபிஸ் கேண்டீனிலியே சாப்டுக்கறேன்' என்று அழுத்தமாக கூறிவிட்டு சென்றான். வாசுகியும் மௌனமாக நந்தினியை பார்த்துவிட்டு ஒன்றும் பேசாமல் நகர்ந்தாள். இப்பொழுது அவர்களின் வருத்தத்திற்கு காரணம் தான் தானோ என்று எண்ணத் தோன்றியது நந்தினிக்கு. செய்வதறியாமல் மிகுந்த மன உளைச்சலோடு வெண்டைக்காயை நறுக்க தொடங்கினாள் நந்தினி.
அவசரமாக வெண்டைக்காய் குழம்பை சமைத்து கொண்டிருக்கும் வேளையில் சுமதி சமயலறைக்குள் நுழைந்து அங்கிருக்கும் உணவுகளை சுவைக்கத் தொடங்கினாள். லேசாக நந்தினியினுள் கோபம் முளைக்கத் தொடங்கியது.
'வாழைக்காய் இன்னும் கொஞ்சம் வெந்துருக்கலாம்... ம்ம்ம்ம்... மோர் கொழம்பு கெட்டியாவே இல்லை தண்ணி மாதிரி இருக்கு...' என்று குறைகளை கூறிக் கொண்டிருந்த சுமதியினால் மேலும் எரிச்சலடைந்த நந்தினி
'என்னால அவளோ தான் முடியும் சுமதி... உனக்கு பிடிச்ச மாதிரி வேணும்னா நீயே சமைச்சிக்கோ' என்று சுமதியை பார்த்து கூறிவிட்டு அடுப்பிலிருந்த வெண்டைக்காய் குழம்பில் கவனத்தை செலுத்தினாள். அவளின் வார்த்தைகளினால் அதிர்ச்சியடைந்த சுமதி கண் இமைக்காமல் நந்தினியை சில நொடிகள் மெளனமாக பார்த்து விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
அவள் சென்றவுடன் நந்தினியின் மனது லேசாக அஞ்சத் தொடங்கியது.
'பக்குவமா பேசியிருக்கணுமோ... இவ போய் சொல்லி ஏதாவது பிரச்சனை வந்திருமோனு பயம் வேற வருது' என்று தனக்குள் பேசி விட்டு சில நொடிகள் மௌனத்திற்கு பிறகு
‘நான் எவளோ தான் பொறுமையா இருக்கறது... எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு... நந்தினி, நீ ஒன்னும் தப்பு பண்ணலை... பயப்படாதே... உன்னோட கம்பர்ட்னஸ் தான் ரொம்ப முக்கியம்' என்று தனக்கு தானே தைரியம்மூட்டிக் கொண்டு சமைப்பதில் கவனத்தை செலுத்தினாள்.
சில நிமிடங்களுக்கு பிறகு சுமதி உள்ளே வந்து
'நந்தினி... அம்மா கூப்பிடறாங்க' என்றாள்.
'சமையல் வேலை பாதியில போயிட்டிருக்கு... முடிச்சிட்டு வரேன்' - நந்தினி.
'பரவாயில்ல... கேஸை ஆப் பண்ணிட்டு வா.' என்று கூறிவிட்டு சென்றாள்.
நந்தினி கோபத்துடன் 'என்ன ரொம்ப ஓவரா போயிட்டிருக்கு' என்று அடுப்பை அனைத்து விட்டு வெளியே நடக்கத் தொடங்கினாள்.
நந்தினி வெளியே வந்தவுடன் சுமதி வாசுகியை லேசாக இடித்து
'அம்மா... அவ வந்துட்டா' என்று சொன்னாள்.
மனதை தைரிய படுத்திக் கொண்டு அவர்களை நெருங்கினாள் நந்தினி.
'கல்யாணம் ஆகி பதினைஞ்சு நாள் தான் ஆயிருக்கு... இவளோ நாள் கோயில் குலம்னு ஊரெல்லாம் சுத்திட்டு இன்னிலேருந்து எங்க வீட்ல வாழ்க்கையை தொடங்க போற... இன்னிக்கே உன் நாத்தனார் கிட்ட மரியாதை இல்லாம இப்படி நடந்துக்கலாமா?... ரொம்ப வறுத்த படறா மா...' - வாசுகி.
'நானும் அதே தான்மா கேக்கறேன்... இன்னிலேருந்து தான் என் வாழ்க்கையை உங்க வீட்ல ஆரம்பிக்க போறேன்... வீட்டுக்கு வந்த பொண்ணை இப்படி தான் வேலை வாங்குவாங்களா?... அதே மாதிரி அண்ணி ன்ற மரியாதையை நாத்தனார் கொடுத்தாங்கனா நிச்சயமா அவங்க அவங்களோட மரியாதையை பத்தி கவலை பட வேண்டியதில்லை' - நந்தினி.
வாசுகி சில நொடிகள் உக்கிரமாக நந்தினியை பார்க்க, நந்தினியும் சில நொடிகள் தன் பார்வையில் தற்காப்புக்காக திமிரை வெளிப் படுத்தினாள். இவர்கள் இருவரையும் தடுமாறியவாறு மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள் சுமதி.
சில நொடிகளுக்கு பிறகு வாசுகி மறுப்பது போல தலையை அசைத்துவிட்டு
'தப்புமா... இந்த திமிரு இருக்கக் கூடாது' என்றாள்.
'இந்த திமிரு தான் மா என்னோட மனச பாதுகாக்கற இரும்பு கதவு... அது என் மேல அன்பு காட்டறவங்களுக்கு மட்டும் தான் திறக்கும்' - நந்தினி.
இவர்களின் வாதத்தை தூரத்திலிருந்து கவனித்துக் கொண்டிருந்த ரவியின் தந்தை தேசிகன், இவர்களின் விவாதம் சூடு பிடிப்பதற்குள் அவர்களிடம் வந்து
'சரி ரெண்டு பேரும் நிறுத்துங்க' என்று பொதுவாக கூறிவிட்டு, நந்தினியிடம்
'போம்மா... போய் அவனை எழுப்புமா? இவளோ விஷயம் இங்க நடந்துகிட்டு இருக்கு, எருமை மாடு மாதிரி தூங்கிகிட்டு இருக்கான்... போ' என்று கூறினார். அவளின் கணவனை அவமதிப்பதை போல் தோன்றியது நந்தினிக்கு. மாமனார் என்றதால் அவளின் மதி எதிர்த்து பேச மறுத்தது. ஆனாலும் அவளால் அவளின் மாமனார் கடிந்து பேசியதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அப்பொழுது அந்த பக்கம் அவசரமாக நடந்து வந்து கொண்டிருந்த அருணை தேசிகன் கூப்பிட்டு
'தம்பி... என்னப்பா கிளம்பிட்டியா?... சாப்பாடு எடுத்துக்கல?' என்று கேட்டார்.
'வேணாம் பா... கேன்டீன்ல சாப்டுக்கறேன்' என்றான் அருண்.
தேசிகன் நந்தினியிடம் ஒரு விரக்தியான பார்வையை கொடுத்து விட்டு அருணிடம் சென்று அவனின் இரு தோள்களை பிடித்து
'ராஜா... உடம்ப பாத்துக்கோ... அனாவசியமா வெளியில சாப்பிடாத... நாளையிலிருந்து யாரும் உனக்கு சமைச்சு கொடுக்கலைனா அப்பா நான் உனக்கு சமைக்கறேன் பா' என்றார்.
அப்படி அவர் கூறியவுடன் அருணும் நந்தினியிடம் ஒரு விரக்தியான பார்வையை கொடுத்து விட்டு தேசிகனிடம்
'வேணாம் பா... எனக்காக யாரும் கஷ்டப் பட வேணாம்பா' என்று கூறிவிட்டு கிளம்பினான்.
இவர்களுடைய உரையாடலும் செய்கையும் நந்தினியை எரிச்சலடைய செய்தது. வெறுப்புடன் ரவியை எழுப்ப அவன் அறைக்குச் சென்றாள்.
அறையினுள் நுழைந்த பிறகு விளக்குகளை ஒளிர்த்தி விட்டு ரவியை பார்த்தாள். அவன் ஆழமான உறக்கத்தில் இருந்தான். அவனை உலுக்கி எழுப்பினாள். அவன் திடுக்கிட்டு எழுந்து, அதிர்ச்சியாய் அவளை பார்த்தான்.
'சாரி... உங்கள டிஸ்டர்ப் பண்ணிட்டேன்... எனக்கு ஆபிஸ்க்கு லேட் ஆனாலும் பரவாயில்லை... உங்க கிட்ட ஒரு விஷயத்தை சொல்லணும்...'என்று மெதுவாக அவனிடமிருந்து பார்வையை வேறுபுறம் திருப்பி
'உங்க வீட்ல என்னை சரியா நடத்த மாட்டேங்கறாங்க... அதுவும் உங்க தம்பியும் தங்கச்சியும் அண்ணி ன்ற மரியாதைய கொஞ்சம் கூட தர மாட்டேங்கறாங்க' என்று கூறிவிட்டு பார்வையை ரவியிடம் திருப்பினாள் நந்தினி. அவன் மறுபடி நன்றாக உறங்கி கொண்டிருந்தான். மேலும் எரிச்சலடைந்த நந்தினி அவனருகில் சென்று
'ப்ச்... ரவி... ரவி...' என்று பலமாக உலுக்கினாள். ரவியும் கொட்டாவி வீட்டுக் கொண்டே சோம்பல் முறித்து விட்டு நந்தினியை பார்த்து 'தூக்கம் வருது மா.' என்று முனகிக் கொண்டே எழுந்தான். நந்தினி மெளனமாக சில நொடிகள்அவனைப் பார்த்து
'ரவி... காலைலேருந்து ஒரே பிரச்சனை... தயவு செஞ்சு நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க ப்ளீஸ்.' என்று கெஞ்சினாள்.
'ம்ம்… சொல்லு.' என்றான் ரவி. ரவியின் குடும்பத்தால் தனக்கு காலையிலிருந்து ஏற்பட்ட மனப் புண்களை கூறி முடித்தாள்.
அவள் கூறியதை கேட்டு முடித்து விட்டு முகபாவத்தில் எந்த வித மாற்றமும் இல்லாமல் தூக்க கலக்கத்தோடு மெளனமாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் ரவி. அவனிடமிருந்து ஏதாவது பதிலை எதிரிபார்த்த நந்தினி, அவனின் சில நொடிகள் மௌனத்தைப் பார்த்து
'ரவி... என்ன மௌனமாவே இருக்கீங்க?... ஏதாவது பேசுங்க?' என்றாள்.
'இல்ல... இப்போ நான் என்ன பண்ணனும்?' என்று தூக்க கலக்கத்தோடு கேட்டான் ரவி. அவனின் கேள்வியும் முகபாவமும் அவளுக்கு லேசான பயத்தை உருவாக்கி, சிறையில் சிக்கிக் கொண்ட பறவையை போல் ஒரு உணர்வை ஏற்படுத்தியது. தன் கட்டுப் பாட்டையும் மீறி அழுதாள். அவள் அழுவதை பார்த்து ரவியின் தூக்க கலக்கம் நின்று முழுமையாக விழிப்படைந்தான். அவளிடம் பதட்டமாக 'என்ன ஆச்சு?' என்று கேட்டுவிட்டு அவள் பக்கத்தில் சென்றான்.
'உங்கள நம்பி தானே இங்க வந்திருக்கேன்... எங்க வீட்ல என்னை எங்கப்பா ராணி மாதிரி வளத்தாரு... இங்க உங்க வீட்ல வேலைக்காரி மாதிரி நடத்தறாங்க... என் வருத்தத்தை கூட உங்களால புரிஞ்சிக்க முடியலையா?... ஏன் மௌனமாவே இருக்கீங்க?' என்று அழுது கொண்டே கேட்டாள்.
'சரி நான் போய் என்னனு விசாரிக்கறேன்' என்று நடு கூடத்திற்கு சென்றான் ரவி. நந்தினி அந்த அறை வாயிலின் அருகே நின்றிருந்தவாறு ரவி என்ன பேச போகிறான் என்பதை கவனிக்க ஆயத்தமானாள்.
ரவி அங்கு சென்று தன் தாய் வாசுகியிடம் இதை பற்றி விசாரிக்க, உடனே அவள்
'என்னடா நேத்து வந்தவளுக்காக என்னையே கேள்வி கேக்கறியா? ... நீ இருக்கற நிலைமைக்கு உனக்கு கல்யாணம் பண்ணி வெக்கணும்னு நெனச்சேன் பாரு... என்னை பிஞ்ச செருப்பாலையே அடிக்கணும்... நீயெல்லாம் நாசமா தான்டா போவ...' என்று கோவத்தோடு கேட்க, இதை பார்த்துக் கொண்டிருந்த நந்தினிக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவனின் தந்தை தேசிகனும் அங்கே வந்து
'ஏன்டா உன்னை பெத்தெடுத்த அப்பா அம்மாவையே இப்படி கேள்வி கேக்கறியே உனக்கு வெக்கமா இல்லை? உனக்கு சோறு போட்டு வளத்து அப்புறம் படிப்பே ஏறாத உன் மரமண்டைல படிப்பு ஏற டியூஷன், அது இதுன்னு செலவு பண்ணி உன் வாழ்க்கையை குடியேத்திற்கோம்... நீ என்னடானா எங்களையே கேள்வி கேக்கற?' என்று அவனை கத்தினார்.
ரவி மௌனமாக அவரை முறைத்துக் கொண்டிருந்தான். ரவியின் தங்கை சுமதி அங்கே வந்து
'இதோ பார் ரவி... அப்பா அம்மா மட்டும் இல்லைனா நீ நடு ரோட்ல பிச்சை தான் எடுத்திருப்பே... நேத்து வந்தவங்களுக்காக நீ நன்றியை மறக்கக் கூடாது' என்று பெரிய மனுஷியை போல் தன் அண்ணனுக்கே அறிவுரை கூறினாள். இப்பொழுது ரவி சுமதியை உக்கிரமாக பார்த்துக் கொண்டிருந்தான். தேசிகன் அவன் பக்கம் சென்று
'என்னடா அவளை முறைக்கற?... போய் உன் பொண்டாட்டிக்கு மொதல்ல அறிவுரை சொல்லு...' என்று கூறியவுடன் ரவி மெளனமாக அவனின் அறையை நோக்கி நடந்தான்.
நந்தினி அங்கு நடந்த சம்பவங்களை பார்த்து உறைந்து போயிருந்தாள். ரவி மெளனமாக நடந்து வந்து, அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு, படுக்கையில் யோசனையாய் அமர்ந்தான். அவன் யோசிப்பதை பார்த்த நந்தினி அவனினுடைய அடுத்த கட்ட நடவடிக்கை தைரியமான முடிவாக இருக்கும் என்று நம்பினாள். அவன் போர்வையை போர்த்திக் கொண்டு உறங்கத் தொடங்கினான். அவனின் அடுத்த கட்ட நடவடிக்கையை பார்த்து அதிர்ந்து போன நந்தினி மனது ஆறாமல் அவனை எழுப்பி "என்ன முடிவெடுத்திருக்கீங்க?" என்று கேள்வி கேட்க ரவியை நெருங்கினாள். ரவியை நெருங்கியவுடன் அவனின் குறட்டை சத்தம் பலமாக கேட்டது. இது அவன் மிக ஆழமான உறக்கத்தில் இருக்கிறான் என்பதற்கு அறிகுறியாகும். இனிமேல் அவனை எழுப்ப முயற்சி செய்வது சாத்தியமற்ற செயல் என்ற யதார்தத்தை புரிந்து கொண்ட நந்தினி அரை மனதாய் அலுவலகத்திற்கு புறப்பட்டாள்.
அலுவலகத்தில் அமர்ந்து பணி புரிந்து கொண்டிருக்கும் போது அவளின் தோழி சங்கீதா அவளருகில் வந்து
'ஹே... நந்து... ஒரு குட் நியூஸ்... எனக்கும் மேரேஜ் பிக்ஸ் ஆயிருக்கு... மாப்பிள்ளை யு,எஸ் ல வொர்க் பண்றாரு... அப்புறம்... ஹனிமூனெல்லாம் போயிட்டு பதினைஞ்சு நாள் கழிச்சு வந்திருக்கே... சுவீட்டெல்லாம் ஒன்னும் இல்லையா?' என்று கேட்டாள்.
காலையில் நடந்த சம்பவங்கள் மனதில் ரணமாக இருக்க, சங்கீதாவை ஒரு விரக்தியான பார்வை பார்த்து விட்டு
'சுவீட் ஒன்னு தான் குறை' என்று முகத்தை திருப்பினாள்.
'என்னாச்சு...?' என்று லேசான அதிர்ச்சியை வெளிப்படுத்தி கேட்டாள் சங்கீதா.
'சங்கீ... இப்போ நான் ரொம்ப மூட் அவுட்டா இருக்கேன்... அழுகை வர மாதிரி இருக்கு... ப்ளீஸ் நம்ம டீ பிரேக்ல டிஸ்கஸ் பண்ணலாம்' என்றாள். சங்கீதாவும் தலை அசைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
சில மணிநேரத்திற்கு பிறகு தேநீர் இடைவேளையின் போது
'ம்ம்... இப்போ சொல்லு... என்ன ஆச்சு?' - சங்கீதா.
நந்தினி அன்று காலை நடந்த சம்பவங்களை அவளிடம் கூறினாள்.
அவள் கூறியதை கேட்டவுடன்
'ரவி... கொஞ்சம் கூட ரியாக்ட் பண்ணலியா?' என்று யோசனையாய் கேட்டாள்.
நந்தினியும் தலையை மறுப்பது போல அசைத்தவாறு
'அப்படியே படுத்து தூங்கிட்டாரு... நான் தப்பான முடிவு எடுத்துட்டேனோனு தோணுது சங்கீ' என்றாள்.
- தொடரும்​
 
'ரவி... கொஞ்சம் கூட ரியாக்ட் பண்ணலியா?' என்று யோசனையாய் கேட்டாள்.

நந்தினியும் தலையை மறுப்பது போல அசைத்தவாறு

'அப்படியே படுத்து தூங்கிட்டாரு... நான் தப்பான முடிவு எடுத்துட்டேனோனு தோணுது சங்கீ' என்றாள்.

'சீ... இப்போ தானே பதினைஞ்சு நாள் ஆயிருக்கு... அதுக்குள்ளே ஏன் இப்படி பேசற... இதுவரைக்கும் நீ உன் வாழ்க்கைல எடுத்த முடிவெல்லாம் கரெக்ட்டா தான் இருந்திருக்கு... இதுவும் போக போக எல்லாம் சரியா ஆயிடும்' - சங்கீதா.

‘இல்ல சங்கீ... எங்க சைட்ல மாப்பிளை வீட்ல தான் செலவு பண்ணி கல்யாணம் பண்ணுவாங்க... கல்யாணத்தப்பவே எனக்கு "தப்பான வாழ்க்கையை தேர்ந்தெடுத்துட்டேனோ" னு தோன ஆரம்பிச்சிருச்சு... ஏன்னா நான் எதிர் பாத்த அளவுக்கு க்ராண்டா நடக்கலை... ஏதோ ஏழை வீட்டு கல்யாணம் மாதிரி ரொம்ப சாதாரணமா நடந்துச்சு... என் ப்ரண்ட்ஸ் அவரோட ப்ரண்ட்ஸ் எல்லாரும் வந்து ரொம்ப கலகலப்பா இருக்கும்னு எதிர் பாத்தேன்... என் சைட்லேருந்தும் சரி அவர் சைட்லேருந்தும் சரி ப்ரண்ட்ஸ் னு யாருமே வரலை... எனக்கு ஒரே ஒரு ஆறுதல் நீ மட்டும் வந்துட்டு போனது தான்... நான் இந்த பதினைஞ்சு நாளா ரவியையும் அவர் குடும்பத்தையும் கவனிச்சிட்டு தான் வந்துக்கிட்டுருக்கேன்... அவர் அப்பாவும் அம்மாவும் அவரோட தம்பிக்கும் தங்கச்சிக்கும் தான் ரொம்ப முக்கியத்துவம் தராங்களே தவிர இவரை ரொம்ப மோசமா நடத்தறாங்க...' - நந்தினி.

'எனக்கும் தோணுச்சு... க்லாஸ் டாப்பர் நீ... நானும் நல்லா க்ராண்டா எதிர் பாத்தேன்... ஆனா நீ கல்யாண பத்திரிக்கை கொடுக்கும் போதே அந்த டிசைனை வெச்சே முடிவு பண்ணிட்டேன்... உன்னோடது சாதாரணமான கல்யாணம் தானுட்டு... நான் மட்டும் இல்ல எல்லாரும் ஈஸியா ப்ரெடிக்ட் பண்ணிருப்பாங்க... அதனால தான் யாரும் வந்திருக்க மாட்டாங்க...’ என்று கூறிவிட்டு சில நொடிகள் யோசனைக்கு பிறகு சங்கீதா மறுபடி பேசத் தொடங்கினாள்.

'அப்போ ஒன்னு பண்ணு... கொஞ்சம் கொஞ்சமா ரவி கிட்ட எடுத்து சொல்லி தனி குடுத்தனத்துக்கு ஏற்பாடு பண்ணு.' என்றாள்.

'ஐயோ ரவியை பத்தி நினைக்கும் போது தான் எனக்கு நம்பிக்கையே குறைஞ்சு பெரிய தப்பு பண்ணிட்டேனோன்னு தோணுது...' என்று நந்தினி விரக்தியாய் கூற,

'ஏன்? ரவி என்ன பண்ணாரு?' என்று வினவினாள் சங்கீதா.

'டிப்ளமோ படிச்சிட்டு வெறும் மெஷின் ஆப்பரேட்டரா எங்கேயோ அவுட் ஆஃப் சிட்டில இருக்கற ஊர் பேர் தெரியாத கம்பெனில பத்து வருஷமா வேலை செய்யறாரு... சம்பளம் ரொம்ப கம்மி வேற... சரி சம்பளம் கம்மியா இருந்தா கூட பரவாயில்ல ஆளாவது தைரியமா இருக்காறான்னு பார்த்தா?... அதுவுமில்லை... ரொம்ப பயந்த சுபாவமா இருக்காரு... எல்லாத்துக்கும் பணிஞ்சு போய்டறாரு... எனக்கு ஒரு நல்ல துணையா இருப்பாருனு நம்பிக்கையே வர மாட்டேங்குது.' என்று கூறும் பொழுது நந்தினியின் விழிகளில் கண்ணீர் சுரந்தது.

'அழாத கொஞ்சம் பொறுமையா இரு... நான் அப்போவே உங்க ரெண்டு பேரை பாக்கும் போது ரவி உனக்கு பொருத்தமான ஜோடி கிடையாதுன்னு தோணுச்சு... நீ ஏன் ரவியை செலெக்ட் பண்ணினே?... வீட்ல ரொம்ப கட்டாய படுத்தினாங்களா?' - சங்கீதா.

'இது என்னோட மிஸ்டேக் தான்... எங்கப்பா நிறைய மாப்பிளைங்களோட போட்டோவை காமிச்சாரு... அவங்க நான் கடைசி வரைக்கும் சந்தோஷமா இருக்கணும்னு நினைச்சாங்க, அதனால தான் ஒரு ஃபாரின் மாப்பிள்ளைக்கோ இல்லை நல்லா பணம் சம்பாதிக்கற ஒரு பிசினெஸ் மேனுக்கோ என்னை கல்யாணம் பண்ணி கொடுக்கணும்னு ஆசை பட்டாங்க... நான் தான் ரவியை செலெக்ட் பண்ணினேன்... என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இதுல உடன்பாடில்லை... ஏன்... என்னோட தங்கச்சி கூட "இவர் வேணாம்... சம்பளம் கம்மியா வாங்கறாரு"னு சொன்னா... நான் தான் கேக்கலை.' - நந்தினி.

'பி.ஈ பைனல் இயர் படிச்சுக்கிட்டு இருக்கற உன் தங்கச்சி கூட விவரமா தான் இருக்கா... அப்போ உன் மேல தான் தப்பு, அவங்க பாத்த மாப்பிள்ளையையே கல்யாணம் பண்ணிருக்கலாம்ல' - சங்கீதா.

'நான் என்ன பண்ணட்டும்?... எவனும் எனக்கு பிடிச்ச மாதிரி இல்லை... எல்லா பொண்ணுங்களுக்கும் அவங்க அப்பா தான் முதல் ஹீரோ... அவர்கிட்ட கிடைச்ச பாதுகாப்பையும் பாசமான உணர்வையும் ரவியோட போட்டோவை பாக்கும் போது பீஃல் பண்ணேன்... அதனால தான் அவரை பாக்க சம்மதிச்சேன்... நேர்ல பாத்து அவரோட பேசும் போது "எனக்கு வர போற கணவர் நாலு பேருக்கு வேலை தர்றவனா இருக்கணும்... இது என்னோட ஆசை"னு அவர்கிட்ட சொன்னேன்... அவரும் "எனக்கும் சின்னவயசுலேருந்தே அது தான் ஆசை ஆனா அந்த ஆசையை அடைய நான் எவ்வளவோ முயற்சி பண்ணி தோத்து தான் போயிருக்கேன்... நான் வெறும் டிப்ளோமா தான்... கம்மியான சம்பளம் தான் இப்போ வாங்கறேன்... எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு... உங்களோட வரவு என் வாழ்க்கைல புது திருப்பங்களை குடுக்கும்னு என் மனசு சொல்லுது... உங்களுக்கும் என்னை பிடிச்சிருந்தா, என் மேல நம்பிக்கை இருந்தா நான் ரொம்ப சந்தோஷ படுவேன்"னு சொன்னாரு... அவர் அப்படி சொன்ன பிறகு எனக்குள்ள ஒரு அதிர்வை உணர்ந்தேன்... அந்த அதிர்வு எனக்குள்ள ஒரு உற்சாகத்தை கொடுத்துச்சு... அந்த உற்சாகம் எனக்கு அவர் மேல அளவுக்கு அதிகமான காதலை வரவெச்சிடுச்சு... எனக்கு அவரோட வேலையோ அவர் வாங்குற கம்மியான சம்பளமோ பெருசா பாதிக்கவே இல்லை... சீக்கிரமா இவரை கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழணும்னு தான் தோணுச்சு... எங்கே எனக்குள்ள இருக்கற இந்த உற்சாகம் குறைஞ்சிடுமோன்னு அவர்கிட்ட "கல்யாணத்துக்கு முன்னாடி நாம ரொம்ப பேச வேணாம்... கல்யாணத்துக்கு முன்னாடியே எல்லாத்தையும் பேசுனா அப்புறம் கல்யாணத்துக்கு அப்புறம் பேசறதுக்கு ஒன்னும் இருக்காது... டெய்லி ஒரு அஞ்சு நிமிஷம் பேசறதோட நிறுத்திக்குவோம்"னு நான் தான் சொன்னேன்...' - நந்தினி.

'சுத்தம்...' என்று நொந்து கொண்டாள் சங்கீதா.

நந்தினியிற்கு ஒன்றும் புரியாமல்

'ஏன் இப்படி ரியாக்ட் பண்ற?' என்று வினவினாள்.

'இல்ல... பசங்க கிட்ட ஒரு வருஷம் இல்ல ரெண்டு வருஷம் பேசி பழகுனத்துக்கு அப்புறமா கூட அவனுகளோட சுயரூபம் தெரியாது... இதுல நீ இப்படி வேற சொல்லிருக்கே... சரி... இதான் பர்ஸ்ட் டைம் ஒருத்தனை லவ் பண்றியா?' - சங்கீதா.

'ஆமாம்.' என்று தலையசைத்தாள் நந்தினி.

'தெரியும்... காலேஜ்ல அடக்க ஒடுக்கமா வெறும் புக்கும் கையுமா இருக்கும் போதே நினைச்சேன்... பர்ஸ்ட் லவ் வரும் போது நம்மளால கண்ட்ரோல் பண்ண முடியாது... ஸ்கூல் டேஸ்லையோ இல்ல காலேஜ் டேஸ்லையோ ரெண்டு மூணு பசங்களை லவ் பண்ணி புட்டுக்கிட்ட பிறகு தான் ஒரு கண்ட்ரோல் இருக்கும்... அப்படி ரெண்டு மூணு பசங்களை லவ் பண்ணி கழட்டி விட்டுருந்தா வாழ்க்கைல எது முக்கியம்னு உனக்கு தெரிஞ்சிருக்கும்... அடக்க ஒடுக்கமான பொண்ணா இருந்தா இப்படி தான் ஏதாவது டப்பா குடும்பத்துக்கிட்ட போய் சிக்கி தவிக்கணும்... இப்போ கூட ஒன்னும் குறைஞ்சு போகலை... தைரியமா இரு... சீக்கிரமா டைவர்ஸ் பண்ணிட்டு நல்லா செட்டில் ஆன பையனை பாத்து கல்யாணம் பண்ணிக்கோ... இதெல்லாம் இந்த காலத்துல சகஜம் தான்... இந்த கல்யாண சந்தைல பொண்ணுங்களுக்கு தான் டிமாண்ட் அதிகம்... உனக்கென்ன... நல்லா படிச்சிருக்கே... அழகா இருக்கே... இந்த ஒரு டைவர்ஸ் உன் இமேஜை பாதிக்காது... ஆனா லேட் பண்ண பண்ண இந்த கல்யாண சந்தைல உன் மார்க்கெட் வேல்யூ குறைஞ்சுகிட்டே போகும்... சீக்கிரமா ஒரு முடிவெடு...' என்று சங்கீதா கூறியவுடன் இருவரும் தன் பணியிடத்திற்கு சென்றனர்.

இருவரும் தன் பணியிடத்திற்குச் சென்றனர். நந்தினி தன் இருக்கையில் அமர்ந்து கணிப்பொறியில் பணி புரிந்து கொண்டிருக்கும் பொழுது சங்கீதா கூறிய விஷயங்களை நினைத்துப் பார்த்தாள். சட்டென்று "இந்த பிரச்சனைக்கு தீர்வை ஆக்கப் பூர்வமாக யோசைத்துப் பார்" என்று அவள் சிந்தையில் தோன்றியது. தன் மனதோடு உரையாட தொடங்கினாள்.

'சரி... இப்போ டைவர்ஸை பத்தி யோசிக்காம பாஸிட்டிவ்வா இந்த பிரச்சனையை டீல் பண்ணி பாப்போம்... உனக்கு ரவி எப்படி இருந்தா பிடிக்கும்?' என்று தன்னை தானே கேள்வி கேட்டுக் கொண்டாள்.

'அவர் நல்லா தைரியமா ஆளா இருக்கணும், நாலு பேருக்கு வேலைக்குடுக்கற முதலாளியா இல்லனாலும் நல்ல மதிப்பான வேலையும் சம்பாத்தியமும் இருக்கணும்...'

'இப்படி ஆகணும்னா அவர் என்ன பண்ணனும்?'

'இப்போ குண்டு சட்டிக்குள்ளையே குதிரை ஒட்டிக்கிட்டு இருக்கறது தான் அவரோட பிரச்சனை... மொதல்ல ஈவ்னிங் காலேஜ்ல பி.ஈ படிக்க வெச்சு இந்த வேலையை விட்டுட்டு வேற வைட் காலர் ஜாப்ல உக்கார வெக்கணும்... இப்போ என்னோட அடுத்த வேலை அவரை ஈவ்னிங் காலேஜ்ல பி.ஈ படிக்க வெக்கறது தான்.' என்று தனக்குள் பேசி முடிவெடுத்தாள் நந்தினி.

அலுவலக பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் பொழுது ரவியை பற்றியும் தன் வருங்காலத்தை பற்றியும் சிந்தித்துக் கொண்டே நடந்தாள் நந்தினி. வீட்டை அடைந்தவுடன் காலையில் ஏற்பட்ட சம்பவங்களினால் வீட்டினுள் நுழைய கொஞ்சம் தயக்கமாக இருந்தது அவளுக்கு. தன் அறைக்குச் சென்று ஓய்வெடுக்கத் தொடங்கிய சில நிமிடங்களில் யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது. உடனே எழுந்து கதவை திறந்தாள். அங்கு அவளின் மாமியார் வாசுகி நின்று கொண்டிருந்தாள்.

அவள் களைப்பாக ' சொல்லுங்க மா' என்றாள்.

'கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்து முடிச்சிட்டு இருபத்தி அஞ்சு தோசை சுட்டு வெச்சுடு மா.' - வாசுகி.

.

.

.

நள்ளிரவு இரண்டு மணி,

நந்தினி உறங்காமல் விழித்துக் கொண்டிருந்தாள். அந்த அறையின் கதவு திறக்கப் படும் சத்தம் கேட்டது. கதவை திறந்தது ரவி. அவன் அவளை பார்த்து புன்னகைத்தவாறே

'என்ன செல்லம்... இன்னும் தூங்கலையா?' என்று கேட்டுக் கொண்டே தன் உடையை கழற்றி லுங்கியை கட்டிக் கொண்டான். அவள் பக்கத்தில் படுத்து விட்டு

'இதோ பாரு... நைட் ஷிப்ட் அப்போ நான் இத்தனை மணிக்கு தான் வருவேன்... எனக்காக இவளோ நேரம் நீ தூங்காம இருக்காத' என்றான்.

அவன் பேசியதை கேட்ட நந்தினி எரிச்சலுடன்

'மண்ணாங்கட்டி... எனக்கு தூக்கம் வர மாட்டேங்குது ரவி... நேத்து நைட் என்ன நடந்துச்சுனு தெரியுமா?' என்று வினவினாள்.

'என்ன நடந்துச்சு?' - ரவி.

'நான் இருபத்தி அஞ்சு தோசை சுட்டேன்' என்று கலக்கமாக கூறினாள்.

'ஓ... சூப்பர்டி... எனக்கு இருக்கா?' என்று அவள் கலக்கத்தை புரிந்து கொள்ளாமல் கேட்டான்.

கடுப்பாகிய நந்தினி

'ஐயோ ரவி... ஏன் என்னை புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்க... என் கைய பாருங்க?' என்று தன் கையை காட்டினாள்.

அவள் கையையே சில நொடிகள் கண்களை தூக்க கலக்கத்தில் சொக்கியவாறு பார்த்தான் ரவி.

'பாத்தீங்களா... தெரியுதா?' என்று கேட்டாள்.

'பா.. இது ... தெ... அது வந்து ரொம்ப டயர்டா இருக்கேன்... புதிர் வெக்காம நீயே சொல்லிடுமா?' - ரவி.

கடுப்பாகிய அவள் ஒரு நீண்ட உள் மூச்சை இழுத்து விட்டாள்.

'என் கையையும் சேத்து சுட்டுட்டேன்.' என்று கலக்கத்துடன் கூற,

'தோசையை மட்டும் சுட வேண்டியது தானே... ஏன் கையெல்லாம் சுட்டுக்கற' என்று கண்களை சொக்கியவாறு படுத்தான் ரவி.

'ரவி... ரவி... எழுந்திருங்க' என்று அவனை உலுக்கினாள் நந்தினி.

''ப்ப்ச்... என்னமா வேணும் உனக்கு?' என்று முனகிக் கொண்டே எழுந்து அவளைப் பார்த்தான் ரவி.

'என் கைல சூடு பட்டுடுச்சு, ரொம்ப வலிக்குதுன்னு சொல்றேன்... நீங்க என்னடான்னா கொஞ்சம் கூட பொருட்படுத்தாம தூங்கறீங்க... இந்த வீட்ல யாருக்கும் என் மேல அக்கறையே இல்ல... இதே எங்க வீடா இருந்தா...' என்று கண் கலங்கிய படி பேசிக் கொண்டிருக்கும் போதே ரவி குறுக்கிட்டு

'சாரிடி... தூக்க கலக்கத்துல இருந்ததுனால நீ பேசுனதை சரியா புரிஞ்சிக்க முடியலை... வா கைக்கு பர்னாள் போட்டு விடறேன்.' என்று எழுந்து, மருந்தை தேடி எடுத்து புண் பட்ட அவள் கையில் தடவினான். அந்த மருந்து அவளின் காயத்திற்கும், அவனின் செயல் காயப்பட்ட அவளின் மனதிற்கும் இதமாக இருந்தது. அவன் மருந்தை தடவி முடித்துவிட்டு

'நாளைக்கும் உனக்கு இந்த புண் எரிச்சல் சரியாகலைன்னா நாம டாக்டரை போய் பாத்துடுவோம்... இப்போ தூங்கு.' என்றான்.

அவள் விளக்கை அனைத்துவிட்டு, அந்த அறையில் பரவிய இருளில், இரவு விளக்கின் வெளிச்சத்தின் உதவி கொண்டு தோராயமாக படுக்கையை தேடி அவன் பக்கத்தில் படுக்கும் பொழுது, ஒரு வித சந்தோஷம் அவள் உதட்டில் புன்னகையை பூக்கச் செய்தது. அவனை மறுபடி உலுக்கினாள்.

அவனும்

'என்ன ஆச்சு?... மறுபடி எரியுதா?' என்று கேட்டான்.

'இல்ல... எனக்கு ஒரு ஆசை.' என்றாள்.

'ம்ம்ம்... சொல்லு' என்றான்.

'நீங்க ஈவ்னிங் காலேஜ்ல பி.ஈ படிக்கணும்... அப்புறம் நீங்க இப்போ பாத்துகிட்டு இருக்கற மெஷின் ஆப்பரேட்டர் வேலையை விட்டுட்டு நீங்க உங்க தொழில்லையே நல்லா பெருமைக்குரிய உத்தியோகத்துல இருக்கணும்... இது தாங்க என்னோட ஆசை.' என்று அவள் கூறி முடித்த பிறகு ரவியின் குறட்டை சத்தம் பலமாக ஒலித்தது. அதை கேட்டவுடன் சட்டென்று அவளின் சந்தோஷம் இறங்கியது. முகத்தை சுளிக்கியவாறே உறங்கத் தொடங்கினாள்.

மறுநாள் காலையில் சமைத்து முடித்துவிட்டு குளிக்கச் சென்றாள்.

'காலைல ஆபிஸ்க்கு போறதுக்கு முன்னாடி அவர்கிட்ட பி.ஈ விஷயத்தை பத்தி பேசிடணும்... அப்புறம் அவரோட ரெஸ்யூம (பணி சம்பந்தமான தற்குறிப்பு) வாங்கி நவ்கரி வெப் சைட்ல போட்டுடணும்... இதுவரைக்கும் நான் எடுத்திருக்கற முடிவெல்லாம் எனக்கு சாதகமா தான் முடிஞ்சிருக்கு... அதே மாதிரி நான் அமைச்சுக்கிட்ட இந்த வாழ்க்கையும் சரியா தான் இருக்கும்... நம்பிக்கையை மட்டும் கை விடக் கூடாது...’ என்று சிந்தித்தவாறே குளித்து முடித்தாள். அவளின் நம்பிக்கை உச்சத்தில் இருந்தது. அதே நம்பிக்கையோடு அறைக்குச் சென்று உடை மாற்றி விட்டு ரவியின் அருகில் சென்றாள். அவன் நன்றாக குறட்டை வீட்டுக் கொண்டே தூங்கி கொண்டிருந்தான். அதை பார்த்தவுடனே அவளினுள் இருக்கும் நம்பிக்கை லேசாக சரிந்தது. அவனை உலுக்கி எழுப்பினாள். அவனும் தூக்க கலக்கத்தோடு எழுந்து அவளைப் பார்த்து

'நடு ராத்திரில இப்படி டிஸ்டர்ப் பண்ணாத எதாயிருந்தாலும் நாளைக்கு காலைல சொல்லு.' என்று மறுபடி உறங்கத் தொடங்கினான். நந்தினி 'ப்ப்ச்...' என்ற சப்தத்துடன் முகத்தை சுளுக்கியவாறு

'ஐயோ ரவி... விடிஞ்சு மணி இப்போ எட்டாச்சு... நான் சொல்ல வர்றத கேட்டுட்டு தூங்குங்க.' என்று மறுமுறை உலுக்கினாள்.

சட்டென்று அதிர்ச்சியுடன் எழுந்த ரவி

'மணி எட்டாயிடுச்சா?... இப்போ தான் தூங்க ஆரம்பிச்ச மாதிரி இருக்கு... காலம் ரொம்ப வேகமா நகருது... சரி சொல்லு' என்றான்.

'அதே தான் நானும் சொல்றேன் ரவி... காலம் ரொம்ப வேகமா நகருது... இப்படி தூங்கி தூங்கியே டைமை வேஸ்ட் பண்ணாதீங்க.' - நந்தினி.

ரவி அவளை கூர்ந்து கவனிக்கத் தொடங்கினான்.

'நாட்ல விலைவாசியெல்லாம் ஏறிக்கிட்டு போய்கிட்டே இருக்கு... இப்போ நீங்க செய்யற வேலைல வர சம்பாத்தியம் பத்தவே பத்தாது... நான் கடைசி வரைக்கும் வேலைக்கு போக முடியாது... நமக்கு குழந்தை குட்டின்னு வந்துடுச்சுனா அதுங்கள நான் தான் வீட்ல இருந்து பாத்துக்கணும்... அப்போ நீங்க உங்களோட தரத்தை உயர்த்திருக்கணும்... ஒரு குடும்பத்தை சந்தோஷமா வெச்சு காப்பாத்தற அளவுக்கு நீங்க சம்பாதிக்க ஆரம்பிச்சிருக்கணும்... "எனக்கு நாலு பேருக்கு வேலை குடுக்கற முதலாளியா ஆகணும்"னு ஆசை பட்டா மட்டும் போதாது... அதை நோக்கி கொஞ்சம் கொஞ்சமா அடியெடுத்து வெக்கணும்... நீங்க சொந்தமா கம்பெனி வெக்கமுடியலைனா கூட நீங்க போடற முயற்சி உங்களை வேற ஏதாவது நல்ல நிலைமைல கொண்டு போய் நிறுத்தும்... உங்களோட ஆசைக்கு தடையா இருக்கறது வேற யாரும் இல்லை... நீங்க தான்... ஏற்கனவே லேட்டு... இப்போ தூங்காம அதுக்கு இப்போத்துலேருந்து நீங்க ஸ்டெப்ஸ் எடுக்க ஆரம்பிச்சா தான் இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சு நம்ம வாழ்க்கைல நல்ல முன்னேற்றத்தை பாக்கலாம்.' என்றாள் நந்தினி.

'நந்து... குழந்தையை பாத்துக்கறதுக்கு தான் அப்பா அம்மா இருக்காங்களே... அதுவும் இல்லாம நான் சொந்தமா கம்பெனி வெச்சு நாலு பேருக்கு வேலை தரணும்ன்ற ஆசை சின்ன வயசுல இருந்துச்சு... ஆனா என்னோட சூழ்நிலை காரணமா இப்போ இந்த ஆசை அமுங்கி போச்சு... இருக்கற வேலையே போதும் ன்ற மன நிலை தான் எனக்கு இப்போ இருக்கு... பத்து வருஷமா இந்த கம்பெனில இருக்கேன்... வேலை நல்லா செட் ஆயிடுச்சு... எந்த பிரச்சனையும் இல்லாம சுமுகமா போகுது... நீயும் வேலைக்கு போ... நாம இப்படியே ஜாலியா இருக்கலாம்' - ரவி.

'கடைசிவரைக்கும் இந்த குண்டு சட்டியிலியே குதிரை ஓட்டறது தான் உங்க ப்ளான் போல... அப்புறம் ஏன் அமுங்கி போன ஆசையை என்கிட்ட சொன்னீங்க... உங்களை கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முக்கிய காரணமே உங்களோட வாழ்க்கை பத்தின கனவும் என்னோட கனவும் ஒண்ணா இருக்கறதுனால தான்… இதோ பாருங்க ரவி... கடைசி வரைக்கும் உங்க அப்பா அம்மாவை நம்பறது உங்க முட்டாள்தனம்... உங்களுக்கு அப்புறம் உங்க தம்பி தங்கச்சி இருக்காங்க... இப்போவே உங்கள பெத்தவங்க உங்கள விட உங்க தம்பி தங்கச்சிக்கு தான் ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கறாங்க... இப்போ அவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சுனு வெச்சுக்குவோம்... உங்க அப்பா அம்மா அவங்க குழந்தைகளுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பாங்க... நம்ம குழைந்தைங்களுக்கு தர மாட்டாங்க... அவங்கள நம்பறது வேஸ்ட்... நமக்குன்னு தனியா ஒரு வீடு அதுல நீங்க நான் அப்புறம் நம்ம பசங்க மட்டும் தான்... அதுக்காக உங்க அப்பா அம்மாவை கை விட சொல்லல... ஏதாவது விசேஷமப்போ போய் பாத்துட்டு வரலாம்... அவ்வளவுதான்... இதெல்லாம் நம்ம நல்லதுக்கு தான் சொல்றேன்.'- நந்தினி.

'நந்து... இப்போ படிப்பெல்லாம் எனக்கு மண்டைல ஏறாதுமா... நான் படிச்சு பத்து வருஷம் ஆச்சு... இந்த பத்து வருஷமா குமுதம், ஆனந்த விகடனை தவிர வேற எதுவுமே படிச்சதில்லை... அதுவுமில்லாம சொந்தமா பிஸினெஸ் பண்றதுக்கு பீ.ஈ படிக்கணும்னு அவசியம் இல்லமா...' - ரவி.

'இந்த காலத்துல மினிமம் ஒரு டிகிரி கூட இல்லாம பொழைக்கவே முடியாது ரவி... ஒருவேளை உங்களால பிஸினெஸ் மேனா ஆக முடியலைன்னா நீங்க படிக்க போற இந்த பீ.ஈ ஏதாவது ஒரு விதத்துல உதவி செய்யும்... ஒரு சேஃப்டி க்காக தான் படிக்க சொல்றேன்... ' - நந்தினி.

ரவி குழந்தையை போல சிணுங்கினான்.

'அதெல்லாம் எனக்கு தெரியாது... நீங்க பி.ஈ படிக்கறீங்க... சரின்னு சொல்லுங்க' - நந்தினி.

ரவியும் 'சரி... இப்போ தூங்கட்டுமா?' என்று கேட்டான். அவனின் பேச்சை கேட்டு மீதமிருந்த நம்பிக்கையும் சரிந்தது.

நந்தினி அவனை முறைத்தவாறே 'ம்ம்ம்... நான் கிளம்பறேன்' என்று கூறிவிட்டு சிறிது தூரம் நடந்த பிறகு,

'ஐயோ ரெஸ்யூம் கேக்க மறந்துட்டேனே' என்று அவன் பக்கம் திரும்பினாள்.

அவன் நன்றாக உறங்கி கொண்டிருந்தான். அவனை போய் உலுக்கி எழுப்பினாள்.

'ஐயோ... நான் தான் பி.ஈ படிக்கறேன்ன்னு சொல்லிட்டேனே... அப்புறம் என்ன வேணும்?' என்று தூக்க கலக்கத்துடன் கேட்டான்.

'சாரி... ஒண்ணுமில்லை... உங்ககிட்ட ரெஸ்யூம் இருந்தா குடுங்க.' என்று கேட்டாள்.

'அதெல்லாம் என்கிட்ட இல்லமா... போய் கடைல வாங்கிக்கோ.' என்று படுத்து உறங்கத் தொடங்கினான்.​
 
மறுபடி அவனை உலுக்கிக் கொண்டே
'ஐயோ ரவி... ரெஸ்யூம் னா உங்க பயோ டேட்டா... இருக்கா இல்லையா?' என்று கேட்டாள்.
எழுந்து உட்கார்ந்த ரவி
'அதெல்லாம் இந்த கம்பெனில பத்து வருஷத்துக்கு முன்னாடி பேப்பர்ல எழுதி கொடுத்ததுமா... ஆமா எதுக்கு உனக்கு என்னோட பயோ டேட்டா?' என்று கேட்டான்.
'எல்லாம் நவுகரில போடறதுக்கு தான்… நவுகரினா தெரியுமா? தெரியாதா? ‘.’ - நந்தினி.
'தெ... தெரியும்' என்று திக்கியவாறு பதில் கூறினான் ரவி.
அவனை சந்தேகமாய் பார்த்துக் கொண்டே
'அப்போ உங்க பயோ டேட்டா ரெடி பண்ணிட்டு நவுகரில உங்க பயோ டேட்டாவை அப்லோட் பண்ணுங்க.' என்றாள்.
'இல்ல... இன்னிக்கு நைட் ஷிப்ட்… தூங்கணுமே.' - ரவி.
'எல்லாம் தூங்கி முடிச்சிட்டு தான்... மறக்காம பண்ணுங்க… வேலைய முடிச்சிட்டு கால் பண்ணி சொல்லுங்க' என்று கூறிவிட்டு சென்றாள்.
பணியிடத்தில் வேலை கடுமையை தளர்த்திக் கொள்ள வலைத்தளத்தில் தனக்கு பிடித்த பாடல் காணொளிகளை பார்த்துக் கொண்டிருந்தாள் நந்தினி. ஒரு பாடல் காணொளியில் காதலர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். பிறகு வாழ்க்கையில் படி படியாக முன்னேறுகிறார்கள். அவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறக்கிறது. காலங்கள் செல்ல அவர்களின் உழைப்பால் தனெக்கென்று ஒரு பெரிய வீடு, வாகனம் என்று அவர்களின் வாழ்க்கை தரம் உயர்கிறது. இதோடு அந்த ஐந்து நிமிட பாடல் காணொளி முடிவடைகிறது. இதை பார்த்த நந்தினி அந்த பாடல் காட்சியில் வரும் காதலர்களாக தன்னையும் ரவியையும் கற்பனை செய்ய தொடங்கினாள். மனதில் ஒரு இனம் புரியாத சந்தோஷம் ஏற்பட்டது நந்தினிக்கு. அப்பொழுது ரவியிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்தது. வேலை வாய்ப்பு வலைதளத்தில் தன்னுடைய சுயவிவர ஆவணத்தை பதிவேற்றி விட்டதாக கூறினான். அவளுடைய சந்தோஷம் ரெட்டிப்பானது.
அன்றிரவு ரவி தனக்கு ஒரு நிறுவனத்திலிருந்து அழைப்பு வந்ததாகவும், நாளையே நேர்காணலுக்கு வர சொல்லியிருப்பாதாக கூறினான். மறுநாள் இருவரும் ஒரு கோயிலுக்கு சென்று கடவுளை பிரார்தித்து விட்டு, நந்தினி ரவியிடம் வாழ்த்துக்கள் கூறி அனுப்பி வைத்து தன் அலுவலகத்திற்கு சென்றாள்.
நந்தினி பணி புரிந்து கொண்டிருக்கும் போது ரவியிடமிருந்து அழைப்பு வந்தது. தனக்கு வேலை கிடைத்து விட்டதாகவும் மாதம் ஐம்பதாயிரம் ரூபாய் சம்பளம் என்றும் கூறினான். சட்டென்று
'ஏய்... என்னடி ஆச்சு?' என்று சங்கீதாவின் குரல் கேட்டது.
'ஒரு ஹாப்பி நியூஸ் டி... ரவிக்கு வேலை கிடைச்சிருச்சு... லைன்ல தான் இருக்காரு... அவரோட பேசிட்டு உன்கிட்ட பேசறேன் ' என்று தன் கையை பார்த்தாள். அங்கு அவளின் அலைபேசியில்லை. அப்பொழுது தான் நந்தினியிற்கு அந்த பாடல் காணொளியையோ பார்த்து விட்டு தான் கற்பனை உலகத்தில் மூழ்கியிருந்த விஷயம் புரிந்தது. மனதில் இருந்த சந்தோஷம் குறைந்து ஒரு வித சோகம் அவளை ஆட்கொண்டது.
பக்கத்தில் இருந்த சங்கீதா நந்தினியிடம்
'நானும் உன்னை ஒரு அஞ்சு நிமிஷமா பாத்துகிட்டு இருக்கேன்... நீ என்னடானா எங்கேயோ மேல பாத்துகிட்டு உனக்கு நீயே சிரிச்சுக்கிட்டு இருக்க... என்னாச்சு.?' என்று வினவினாள்.
'ஒரு வீடியோ சாங் பாத்தேன்... அதுல லவ்வர்ஸ் வாழ்க்கைல எப்படி சந்தோஷமா செட்டில் ஆகறாங்கன்ற மாதிரி ஒரு கான்செப்ட்... அதை ரொம்ப ரசிச்சு பார்த்தேனா... அதான் கற்பனை உலகத்துல மூழ்கிட்டேன்...' என்று கூறிவிட்டு சில நொடிகள் தலையை மறுப்பது போல அசைத்துவிட்டு
'ப்ப்ச்... அந்த கற்பனை உலகம் எவ்வளோ அழகா சந்தோஷமா இருந்துச்சு... எல்லாமே அந்த அஞ்சு நிமிஷ பாட்டு மாதிரி சீக்கிரமா நடந்துச்சு... ஆனா இந்த ரியாலிட்டி தான் ரொம்ப கொடுமையா இருக்கு... ஆசை பட்ட வாழ்க்கையை வாழறதுக்கு இந்தமாதிரி ஒரு மேஜிக்கல் சாங் இருந்தா எவ்வளோ நல்லாயிருக்கும்...' என்று ஒரு சிறு நகைப்போடு கூறினாள்
சங்கீதாவும் நகைத்தவாறே
'நீ மட்டுமில்ல... எல்லா பொண்ணுங்களும் அந்த மாதிரி ஒரு மேஜிக்கல் சாங்கை தான் தேடிகிட்டு இருக்காங்க...' என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
'சரி... ரவி கிட்டேருந்து கால் வர வரைக்கும்... ஈவ்னிங் காலேஜ் பி.ஈ யை பத்தி நெட்ல பாப்போம்.' என்று வலை தளத்தில் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அந்த பாடல் காட்சியினால் உருவான ஆசை அவள் மனம் முழுவதையும் ஆட் கொண்டது. ரவி தன்னுடைய சுயவிவர ஆவணத்தை வேலைவாய்ப்பு வலை தளத்தில் பதிவேற்றிவிட்டு தன்னுடைய அலைபேசியிற்கு தொடர்பு கொள்வான் என்று மிக எதிர்பார்ப்புடன் காத்திருந்தாள்.
ரவியிடமிருந்து அழைப்பு வரும் என்று எதிர்பார்த்து ஏமாந்து போனாள்.
'நான் அவளோ தூரம் சொல்லியும் அவர் எனக்கு கால் பண்ணாம என்ன பண்றார்?... அவர் மட்டும் ரெஸ்யூமை ரெடி பண்ணி நவுக்கரில அப்லோட் பண்ணாம இருக்கட்டும்... இன்னிக்கு நைட் இருக்கு அவருக்கு' என்ற எண்ணத் தொடங்கினாள். அந்த எண்ணம் நந்தினியிற்கு ரவியின் மீது ஒரு கோப உணர்ச்சியை விதைத்தது.
அன்று நள்ளிரவு வழக்கம் போல் ரவி தன் அறை கதவை திறந்தான். விளக்கு எரிந்து கொண்டிருந்தது. நந்தினி உறங்காமல் படுக்கையில் அமர்ந்து கொண்டிருந்தாள்.
நந்தினி அவனை முறைத்துக் கொண்டே இருந்தாள். ரவி உடை மாற்றிக் கொண்டு அவளை பார்த்து ஒரு செயற்கை புன்னகையை வெளிப் படுத்திவிட்டு அவள் அருகில் படுக்க முற்பட்டான். அப்பொழுது நந்தினி குறுக்கிட்டு
'நான் கால் பண்ண சொன்னேனே... ஏன் பண்ணலை?' என்று கோபமாய் கேட்டாள்.
'அது வந்து... மறந்துட்டேன்.' என்றான்.
'பரவாயில்லை... உங்க ரெஸ்யூமை நவுகரில அப்லோட் பண்ணீங்களா?' என்று கேட்டான்.
அவனும் வாத்தியாரிடத்தில் வீட்டுப் பாடத்தை முடிக்காமல் மாட்டிக் கொண்ட பள்ளி கூட சிறுவனை போல் விழி பிதுங்கி முழித்தான்.
நந்தினிக்கு கோபம் உச்சத்தை எட்டியது. அவள் மூச்சிரைத்தவாறே
'இப்படி திரு திரு னு முழிச்சா என்ன அர்த்தம்?' என்று கேட்டாள்.
ரவி மெதுவாக இல்லை என்பது போல தலை அசைத்தான். நந்தினிக்கு இப்பொழுது வேகமாக மூச்சிரைத்தது.
'அப்போ பண்ணலை... ம்ம்ம்' என்று தலையை மேலும் கீழும் அசைத்தவாறு அழத் தொடங்கினாள். அவளுடைய உக்கிரமான செய்கையை பார்த்து ரவி 'சாரி... நந்தினி' என்று பயத்தோடு அவள் கையை தொட்டான்.
அவள் சட்டென்று கோபத்தோடு
'சீ... கைய எடு.' என்று சொன்னவுடன் ரவி பயத்துடன் வேகமாக கையை எடுத்தான். அவள் அழுதுக் கொண்டே வேறு எங்கேயோ பார்த்தவாறு பேசத் தொடங்கினாள்.
'தப்பு பண்ணிட்டேன்... அப்போவே அப்பா நல்ல பணக்கார மாப்பிள்ளை, நல்லா சம்பாதிக்கற மாப்பிள்ளையெல்லாம் காமிச்சாரு... நான் தான் உன்னை செலெக்ட் பண்ணினேன்... இத்தனைக்கும் எங்க அப்பா உனக்கு தோஷம் இருக்கு அது இதுனு பொய் சொல்லி எப்படியாவது என் மனச மாத்த முயற்சி பண்ணாரு... நான் தான் விடாப் பிடியா உன்னை தான் பண்ணிக்குவேன்னு அடம்பிடிச்சேன்... எங்க அம்மா தங்கச்சிக்கு கூட உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கறதுல உடன் பாடில்லை... சொந்தகாரங்க வேற உன்னோட சம்பளம் கம்மியா இருக்கின்றதா என் கிட்ட மறைமுகமா குத்தி காமிச்சிக்கிட்டே இருந்தாங்க... பட் நான் தான் அடமென்ட்டா இருந்துட்டேன்... ஏன்னா நான் பாத்த மாப்பிளைங்களோட போட்டோ எல்லாம் என் மனசுக்கு பிடிச்ச மாதிரி இல்ல... உன் போட்டோவை பாத்தவொடனே மனசுக்கு அவ்வளவு சந்தோஷம்... நாம ரெண்டு பேரும் நம்ம குழைந்தைங்களோட சுவர்க்கம் மாதிரி இருக்கற வீட்ல வாழற மாதிரி என்னால கற்பனை பண்ணி பாக்க முடிஞ்சுது... ஆனா நீ இப்படி இருக்கறது என் கனவு எல்லாத்தையும் சுக்கு நூறா உடைச்சு எரிஞ்சிடுது... படிப்புலேயும் வேலைலேயும் நான் தொட்ட உயரத்தை தொடாத என்னோட படிச்ச பொண்ணுங்க எல்லாம் மாடர்னா ட்ரெண்டியா லைப் பார்ட்னரை அமைச்சுக்கிட்டு ஃபாரின்ல செட்டில் ஆயிட்டாங்க.... நான் தான் என் மனசை ரொம்ப நம்பிட்டேன்... உன்னை எப்படியாவது நான் கற்பனை பண்ண ஆளா மாத்தலாம்னு தான் உங்க வீட்ல கொடுக்கற டார்ச்சரை எல்லாம் பொறுத்து கிட்டு இருக்கேன்... இதுதான் நீ உன்னை நம்பி வந்தவளுக்கு கொடுக்கற சந்தோஷமா... சொல்லு' என்று அழுவதை தொடர்ந்தாள்.
அவனும் துக்கத்தோடு
'சரி நான் பண்றேன்... நீ அழாத... நீ சொல்ற மாதிரி பி.ஈ யும் படிக்கறேன்.' என்றான்.
'இல்ல நீ பண்ணமாட்ட... இப்போ இப்படி சொல்லிட்டு நாளைக்கு நீ வேற ஏதாவது காரணத்தை சொல்லுவ.' - நந்தினி.
'சரி இப்போ என்ன பண்ணினா நீ என்னை நம்புவ?' - ரவி.
உடனே நந்தினி எழுந்து தன் பையிலிருந்து சில அச்சடித்த தாள்களை எடுத்தாள். அவனிடம் இதை நீட்டி
'இந்தாங்க பி.ஈ ஈவ்னிங் காலேஜ் படிக்கறதுக்கான அப்பிளிக்கேஷன், ஆபிஸ்ல நெட்லருந்து டவுன்லோட் பண்ணினேன்… பிஃல் பண்ணுங்க...' என்றாள்.
'நந்து... ஈவ்னிங் காலேஜ் படிக்கறதுல ஒரு பிரச்சனை... எனக்கு கம்பெனில நைட் ஷிப்ட் இருக்கு... அதனால பண்ண முடியாது... கஷ்டம்' - ரவி.
அவன் கூறியதை கேட்ட பிறகு நந்தினி மறுமுறை தன் பையிலிருந்து வேறொரு அச்சடித்த தாள்களை எடுத்தாள். இதை பார்த்த ரவி
'என்னது அது?' என்று கேட்டான்.
'நீங்க இப்படி சொல்லுவீங்கன்னு தெரியும்... இது வீக் எண்ட்ல பி.ஈ படிக்கறதுக்கான அப்பிளிக்கேஷன்.. பிஃல் பண்ணுங்க' - நந்தினி.
'அதுலேயும் ஒரு பிரச்சனை... சனிக்கிழமை ஓவர் டைம் இருக்குமே' என்று சொன்னான்.
அவன் கூறியதை கேட்டு கோபமுற்ற நந்தினி
'மண்ணாங்கட்டி... நீ ஓவர் டைம் பண்ணி கிழிச்சதெல்லாம் போதும்... இப்போ நீ பிஃல் பண்ண போறியா இல்லையா?' என்று கத்தினாள்.
ரவியும் அதை வாங்கி விண்ணப்பத்தை நிரப்பத் தொடங்கினான்.
அவன் விண்ணப்பத்தை நிரப்பிக் கொண்டிருக்கும் போது நந்தினி
'அப்படியே சேத்து ரெஸ்யூமையும் ரெடி பண்ணிடலாம்.' என்றாள்.
உடனே ரவி
'இதோ பார் நந்தினி... இப்போ தான் நைட் ஷிப்ட்லேருந்து மெஷின்ல வேலை பண்ணிட்டு வந்திருக்கேன்... மணி மூணு ஆகுது... நீ படர அவசரத்தை பாத்தா நாளைக்கே பி.ஈ முடிச்சிட்டு வர சொல்லுவ போலிருக்கு... நீ ரொம்ப அவசரப்படற... வாழ்க்கைல பொறுமையும் நிதானமும் தான் முக்கியம்... நம்ம வாழ்க்கை இந்த பூமியில முடியும் போது யாரும் அவங்க வாங்கின பி.ஈ சர்டிபிகேட்டையோ இல்ல கிடைச்ச பதவியையோ கூடவே கொண்டு போப்பறது கிடையாது... நம்ம வாழ்க்கை முடியுற வரைக்கும் நம்மளோட வர போறதெல்லாம் சந்தோஷமான நினைவுகள் தான்... அதனால இருக்கறத வெச்சு இல்லனா நமக்கு கிடைக்கறத வெச்சுகிட்டு நாம சந்தோஷமான நினைவுகளை உருவாக்கி அதை சேகரிக்க ஆரம்பிக்கணும்... இது தான் என்னோட வாழ்க்கை தத்துவம்.' என்றான்.
'நான் ஒன்ணு சொல்லட்டுமா?' என்று எரிச்சலோடு கேட்டாள்.
'ம்ம்ம்... சொல்லு.' - ரவி.
'கல்யாணத்துக்கு முன்னாடி நீ டைலி பத்து நிமிஷம் மொபைல்ல பேசுன கருத்தெல்லாம் எனக்கு ரொம்ப ஆச்சரியமா ஒரு பிரமிப்பா இருந்துச்சு... இந்த காலத்திலேயும் இப்படி ஒரு ஆளா? வாழ்க்கைல ரொம்ப அனுபவம் வாய்ந்தவர்னு நான் நினைச்சு ரொம்ப வியந்தேன்... அது எனக்கு ஒரு சந்தோஷத்தை கொடுத்தது... ஆனா நீ சொல்ற கருத்தெல்லாம் எனக்கு இப்போ போரடிக்குது...' - நந்தினி.
'ஏன்?' - ரவி.
'ஏன்னா நீ சொல்ற கருத்தெல்லாம் உன் வாழ்க்கை அனுபவம் மூலமா வந்தது கிடையாது... எல்லாமே மத்தவங்க எழுதி வெச்சது... இல்லனா காலைல டிவி சேனல்ல யாராவது ஒரு தாத்தா சொன்னதை தான் நீ சொல்ற... அவங்க எல்லாரும் வாழ்க்கைல ரிஸ்க் எடுத்து அவங்களோட இலக்கை அடைஞ்சாங்க... அப்படி அதை அடையும் போது கிடைக்கற அனுபவங்களை தான் கருத்தா வெளியே சொல்லிருக்காங்க... அது நம்ம மனச பாதிக்குது... ஆனா நீ இப்படி குண்டு சட்டிக்குள்ளேயே குதிரை ஒட்டிக்கிட்டு மத்தவங்க சொன்ன கருத்தை சொல்றது ஒன்னும் சந்தோஷமான நினைவுகள் கிடையாது... சும்மா மத்தவங்க சொல்ற கருத்தை கேட்டா மட்டும் உன் மனசு பக்குவம் அடையாது... வாழ்க்கைல கொஞ்சமாவது ரிஸ்க் எடுத்துக்கிட்டு ஓடிக்கிட்டே இருக்கணும்... அதுல வர அனுபவங்கள் தான் நம்மளோட மனசை பக்குவப்படுத்தும் நம்ம வாழ்க்கையை மேன்மை படுத்தும்... அந்த அனுபவங்கள் தான் உண்மையான சந்தோஷ நினைவுகளை குடுக்கும்... இது தான் என்னோட வாழ்க்கை தத்துவம்...' - நந்தினி.
'நாம நிதானமா அமைதியா இந்த இயற்கையை ரசிச்சுகிட்டே சந்தோஷமா வாழறதுக்கு தான் கடவுள் இந்த பூவுலகை படைச்சிருக்கார்... உன்ன மாதிரி ரிஸ்க் எடுத்துக்கிட்டு ஓடிக்கிட்டே இருக்கணும்னு நினைக்கறவங்கனால தான் எல்லாருக்கும் பிரச்சனையே.' - ரவி.
'அப்போ ஏன் உன் கடவுள் ரொம்ப சாதுவான மானையும் அத சாப்பிடணும்னு நினைக்கற புலியையும் படைக்கணும்... எல்லாரையும் சமமா படைச்சிட்டு ஜாலியா ரசிச்சு கிட்டே இருங்கப்பான்னு போக வேண்டியது தானே... நீ சொல்ற கருத்தெல்லாம் சோம்பேறிங்க அவங்க சோம்பேறித்தனத்தை நியாய படுத்தறதுக்கு உருவாக்குன கருத்து... ஏதாவது ஒரு கொள்கையை வளத்துக்கிட்டு அதுமேல நம்பிக்கையை வெச்சு முன்னாடி ரெண்டடி எடுத்து வெச்சாதான் ஏதாவது அதிசயம் நடக்கும்... எனக்குன்னு ஒரு கொள்கை அது மேல நான் வெச்சிருக்கற நம்பிக்கை தான் உன்கிட்ட என்னை கொண்டு வந்திருக்கு... நீ சொல்ற வாழ்க்கை தத்துவத்தை மட்டும் நான் பாஃலோவ் பண்ணிருந்தேன்னா யாராவது பணக்கார மாப்பிள்ளையை இந்நேரத்துக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆயிருந்திருப்பேன்.' - நந்தினி
அவள் கூறியதை கேட்ட ரவி
'இப்போ என்ன?... இந்த பாஃர்மை பிஃல் பண்ணனும் அவ்வளோ தானே' என்று விண்ணப்பத்தை நிரப்ப தொடங்கினான்.
'சரி சீக்கிரம் பிஃல் பண்ணுங்க... அடுத்தது ரெஸ்யூம் ரெடி பண்ணனும்.' - நந்தினி.
ரவி விண்ணப்பத்தை நிரப்பி முடித்தவுடன்
'நந்தினி... இத பிஃல் பண்ணிட்டேன்... இப்போ தூங்கலாமே... ப்ளீஸ்... தூக்கம் வருது... அதுவுமில்லாம எனக்கு ரெஸ்யூமை எப்படி ரெடி பண்றதுன்னு ஐடியாவே வரமாட்டேங்குது.' என்று அவளிடம் கூறினான்.
அவனை சில நொடிகள் முறைத்துவிட்டு
'சரி இப்போ தூங்கு... நாளைக்கு காலைல உன்னோட ஒர்க் பத்தி டீடைலா சொல்லு... நானே உனக்கு ரெஸ்யூமை ரெடி பண்ணி தொலைக்கறேன்.' என்று விளக்கை அணைத்தாள்.
மறுநாள்
அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு ரவியை உலுக்கினாள் நந்தினி. ரவி உறக்கத்திலிருந்து எழும் பொழுது 'ப்ப்ச்' என்ற சப்தத்துடன் தலையை சொறிந்தான்.
'சரி நீ என்ன மெஷின்ல வேலை செய்யற? எவ்வளவு மெஷின்ல வேலை செஞ்சிருக்கே? என்ன ப்ராடக்ட்? உன் டிபார்ட்மென்ட் ஓட பெயர் என்ன? அதோட ப்ராசஸ் அண்ட் பங்க்ஷன்ஸ் என்ன?... எல்லாத்தையும் சுருக்கமா சொல்லு?... நான் உனக்கு ரெஸ்யூமை ரெடி பண்ணனும்’ என்று கேட்டாள் நந்தினி.
அவள் கேள்வி என்னவென்று புரியாமல் அவளையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவனிடம் பதிலை எதிர்பார்த்து பொறுமை இழந்த நந்தினி
'இப்படி பேய் அறஞ்சா மாதிரி பாத்தா என்ன அர்த்தம்?... சீக்கிரம் சொல்லு நான் ஆபிஸ்க்கு போகணும்.' என்றாள்.
ரவி தூக்க கலக்கத்தோடு
'போரிங் மெஷின்.' என்று கூறினான்.
நந்தினி மெல்லியதாக சிரித்துக் கொண்டே
'ஆள் தான் ரொம்ப போரடிக்கறன்னு பாத்தா... நீ வேலை செய்யற மெஷினும் போரிங் மெஷினா?... பத்து வருஷமா அந்த போரடிக்கற மெஷின்ல என்ன பண்ணின... அது எங்க யூஸ் ஆகுது?' என்று கேட்டாள்.
ரவி அவளை முறைத்தவாறே, மறுப்பதை போல் தலையை அசைத்து
'டூல் ரூம் ' என்றான்.
நந்தினி கோபத்துடன்
'உன்கிட்ட எல்லா கேள்வியையும் ஒரே ஷாட்ல கேட்டேன்... நீ என்ன பதிலை இன்ஸ்டால்மென்ட்ல சொல்ற... மொத்தமா சொல்லு' என்று கேட்டவுடன்
'என் கம்பெனி பேரு வோல்கா ப்லேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட்... நான் டூல் ரூம்ல வேலை செய்யறேன்... நான் வேலை செய்யறது ஜிக் போரிங் மெஷின்... அவ்வளவு தான், இதான் க்ளூ ... இதைவெச்சு உனக்கு இருக்கற கேள்வியையெல்லாம் பதிலை நீயே கண்டு பிடிச்சுக்கோ...' என்று கூறிவிட்டு படுத்து உறங்கத் தொடங்கினான்.
அவளும் அவனை உலுக்கியவாறு
'இது என்ன புதிர் போட்டியா?... நம்ம வாழ்க்கை பிரச்சனை... எழுந்திரு... எல்லாத்தையும் தெளிவா சொல்லு...' என்று கத்தினாள்.
அவன் எழுவதாக இல்லை. சிறிது நேரம் அவனை எழுப்ப முயற்சி செய்துவிட்டு அலுவலகத்திற்கு நேரம் ஆகியது என்று புறப்பட தொடங்கினாள்.
அலுவலக வேலைகளை சீக்கிரமாக முடித்து விட்டு நந்தினி ரவி பணிபுரியும் தொழிற்சாலை பற்றியும், அந்த இயந்திரத்தை பற்றியும் வலை தளத்தில் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது அவளிடம் வந்த சங்கீதா
'என்ன நந்து... இன்னிக்கு வொர்க் லோட் கம்மி தானே... டீ ப்ரேக் கூட வரல... அப்படி என்ன மும்முரமா நெட்டை நோண்டிகிட்டு இருக்க?' என்று வினவினாள்.
'ரவிக்கு ரெஸ்யூம் ரெடி பண்றேன்... நான் ப்யூர் சாப்ட்வேரா... அதான் ஒன்னும் புரிய மாட்டேங்குது.' - நந்தினி.
'நந்து... டைவர்ஸ் பாஃர்ம பத்தி கேப்பேனு பாத்தா ரவியோட ரெஸ்யூமை ரெடி பண்ணிக்கிட்டு இருக்க... சரி... நான் உன்னோட பாசிட்டிவ் அப்ரோச்சை கெடுக்க விரும்பலை... என் ப்ரண்டு ஒருத்தன் மெக்கானிக்கல் தான்... அவனோட ரெஸ்யூமை வாங்கித்தரேன்... அதை வெச்சு வேணா ரெடி பண்ணு... ஏதாவது சந்தேகம்னா அவன் கிட்டையே கேக்கலாம்.' - சங்கீதா.
சங்கீதா கூறியதை போல் அவளின் நண்பனிடமிருந்து சுயவிவர ஆவணத்தை வாங்கி கொடுத்தாள். நந்தினியும் அதை ஒப்பிட்டு பார்த்து, புரியாத விஷயங்களை சங்கீதாவின் நண்பனின் உதவி கொண்டு ரவியின் சுயவிவர ஆவணத்தை தயாரித்தாள்.
நள்ளிரவு இரண்டு மணியிற்கு வழக்கம் போல் ரவி கதவை திறப்பதை பார்த்தாள். அவளை பார்த்தவுடன் ரவி முனகிக் கொண்டே உடைகளை மாற்றினான்.
'உன் ரெஸ்யூமை ரெடி பண்ணிருக்கேன்... வந்து பாரு... நவுகரில அப்லோட் பண்ணிட்டு சீக்கிரம் தூங்கணும்.' - நந்தினி.
ரவியும் புன்னகைத்தவாறே
'உன் வாயில சீக்கிரம் தூங்கணும்ன்ற வார்த்தையை கேக்கும் போது எவ்வளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா?' என்று அவள் பக்கம் அமர்ந்தான்.
அமர்ந்து அவனின் சுயவிவர ஆவணத்தை பார்த்தான். சில நொடிகள் அதை பார்த்த அவன்
'இது என்னோட பயோ டேட்டா வா...?' என்று வினவினான்.
நந்தினி அவனை முறைத்தவாறு
'ம்ம்ம்... இல்ல பக்கத்து வீட்டுக்காரன் கிட்டேருந்து திருடுனது.' என்றாள்.
ரவி சிரித்துக் கொண்டே
'இல்ல... எனக்கே தெரியாத நெறைய விஷயங்கள் இருக்கே... அதான் கேட்டேன்...' என்று கூறினான்.
'என்னோட ப்ரண்டோட ப்ரண்டு மெக்கானிக்கல் எஞ்சினீர் தான்... மெக்கானிக்கல்ல டிசைன் பீல்டு தான் நல்ல மதிப்பு இருக்கற வேலைனு அவன் சொன்னான்... அதான் அந்த பீல்டுக்கு தகுந்த மாதிரி அவனோட உதவியோட உன் ரெஸ்யூமை ரெடி பண்ணினேன்... ' - நந்தினி.
'எனக்கு தெரிஞ்சது நான் வேலை பாக்கற மெஷினை பத்தி மட்டும் தான்... இதுல என்னென்னமோ சாப்ட்வெர் பத்தியெல்லாம் போட்டிருக்கு... இப்போ இன்டர்வ்யூல அதை பத்தி கேட்டா நான் என்ன பண்றது?' - ரவி.
'சொல்றேன்... மொதல்ல அப்லோட் பண்ணு.' - நந்தினி.
ஒரு வழியாக ரவியின் சுயவிவர ஆவணத்தை இணையதளத்தில் உள்ள வேலை தளத்தில் பதிவேற்றினான் ரவி.
விளக்கை அனைத்து விட்டு அவள் பக்கத்தில் படுத்த பிறகு
'வேற கம்பனிலேருந்து கால் வந்தா என்னால அட்டண்ட் பண்ண முடியாதே... ஏன்னா நான் மெஷின்ல வேலை செய்யறதுனால எங்க டிபார்ட்மெண்ட்ல மொபைலை உள்ள எடுத்துக்கிட்டு போகமுடியாது' என்றான் ரவி.
'தெரியும்... அதான் என் நம்பரை கொடுத்திருக்கேன்... சனிக்கிழமை காலேஜுக்கு போய் பீஸ் கட்டப் போறோம்... நெக்ஸ்ட் மன்த்லேருந்து க்ளாஸஸ் ஆரம்பிச்சுடுவாங்க... அதே மாதிரி நீ டிசைன் பீல்டுல வேலை தேடற மாதிரி தான் நவுகரில போட்ருக்கேன்... அதனால அது சம்பந்தமான சாப்ட்வேரை எங்க படிக்கறதுனு நாளைக்கு பாத்து சொல்றேன்... அநேகமா நீ, வீக் டேஸ்ல உன் ஷிப்ட்டை பொறுத்து நீ ஈவ்னிங்கோ இல்லை மார்னிங்கோ ஒரு மாசத்துக்கு சாப்ட்வெர் க்ளாஸ் போற மாதிரி இருக்கும்... ப்ளான் பண்ணிக்கோ.' என்று அவள் கூறியதை கேட்டவுடன் ரவிக்கு தூக்கம் கலைந்து திடுக்கிட்டு எழுந்தான்.
'இப்படி எல்லாத்தையும் ஒரேடியா திணிச்சா எப்படி நான் சமாளிக்க முடியும்... எதுக்கு நீ இப்படி அவசர படுத்தற?' - ரவி.
'அதுக்கென்ன பண்றது... நான் உன்னை அப்படி கற்பனை பண்ணிட்டேன்... கஷ்டப்படு... அப்பத்தான் வாழ்க்கைல முன்னேறுவ... எனக்கு இப்போ தூக்கம் வருது எதுவும் பேசி டிஸ்டர்ப் பண்ணாத.' என்று கூறிவிட்டு உறங்கத் தொடங்கினாள்.
'அடிப் பாவி இப்படி அடி வயத்துல பீதியை கிளப்பி என் தூக்கத்தை கெடுத்துட்டு... நீ மட்டும் நிம்மதியா தூங்கறியா?... ஏய் எழுந்திருடி.... இதெல்லாம் நீ கற்பனை பண்ணதுனால செய்யறீயா இல்ல நான் வாழ்க்கைல முன்னேறனும்னு செய்யறீயா... புரிய மாட்டேங்குதே... பி.ஈ மூணு வருஷம்... இந்த கம்பெனி மாதிரி வேற வேலை செட் ஆவுமானு தெரியலையே... அதுக்கு முன்னாடி இன்டெர்வ்யூ, சாப்ட்வேர் கோர்ஸ்... இதெல்லாம் நெனச்சா தூக்கமே வர மாட்டேங்குதே.' என்று அவளிடம் அவன் கூறும் பொழுது
'நான் தூங்கிட்டேன்... இனிமே நீ பேசுறது எதுவும் என் காதுல விழாது.' என்று போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டாள்.
சனிக்கிழமை காலையில்
ரவி குளித்து முடித்துவிட்டு தன் உடையை மாற்றிக் கொண்டிருந்தான். நந்தினி ஏற்கனவே புறப்படுவதற்கு தயாராக இருந்தாள். ரவி உடை மாற்றிக் கொண்டிருக்கும் போது அவன் முதுகில் பெரிய வெட்டுத் தழும்பை பார்த்தாள். அவள் லேசான அதிர்ச்சியை வெளிப் படுத்தியவாறு அவன் அருகில் சென்று
'ரவி... ஒரு நிமிஷம்... பனியனை போடாதீங்க.' என்று கூறிவிட்டு அந்த தழும்பை தொட்டுப் பார்த்தாள்.
'என்னை பாத்தா மாதிரி திரும்பி நில்லுங்க.' என்று சொன்னாள்.
ரவியும் திரும்பி நின்றான். அவன் மார்பு பகுதிகளில் சிறு சிறு தழும்புகள். அவன் தலை முடியை ஆங்காங்கே விலக்கிப் பார்த்தாள். அங்கும் தழும்புகள் இருந்தன.
அவளுக்கு மிகவும் நெருடலாக இருந்தது. அவனிடம்
'இதுக்கு முன்னாடி நான் இதையெல்லாம் சரியா கவனிக்கல போலருக்கு... என்ன இது? உங்க உடம்பு தலைல எல்லாம் இவ்வளோ தழும்பு.' என்று கேட்டாள்.​
 

New Threads

Top Bottom