NYD-83
வசந்தி தன் இருப்பிடத்திற்கு சென்றவுடன் கௌசிக்கின் வாழ்க்கை சற்று அமைதியாகவேதான் சென்று கொண்டிருந்தது.அன்று கடையில் பார்த்த அழகியை அவன் அநேகமாக தினமும் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் அவனுக்கு புரியாதது ஒன்று. அன்று கடையில் அவனுக்கு நன்றி உரைத்து சிரித்து பேசியவள் அடுத்த சில நாட்களில் பேருந்து நிறுத்தத்தில் சந்தித்த போது முழுவதுமே அவனை அறியாதவள் போல நடந்து கொண்டது ஏன் ? அவனுக்கு தெரியவில்லை. இருப்பினும் ஏனோ அவளை அப்படியே விடவும் விரும்பவில்லை. சரி என்னதான் நடந்தது ?
கார்த்திக் அதோ பறப்பது வெள்ளை நிற காக்கை என்றாலும் இவள்தான், ஆமாமா! என்று சொல்பவள் ஆயிற்றே ! அதேபோல் தான் அன்று இவர்கள் இருவரையும் நகரும் படிக்கட்டில் பார்த்தவன் அதற்க்கு பல தப்பு அர்த்தங்களைக் கூறினான்.
எனக்கு தெரியும், உன் மேல எந்த தப்பும் கிடையாது. ஆனா நாம ஜாக்ரதையா இருக்கணும். உனக்கு தெரியலைன்னாலும் அத நாந்தான் சொல்லி தரணும். இங்க எத்தனையோ பேர் இருக்கும்போது அவன் மட்டும் உனக்கு எதுக்கு உதவிக்கு வர்ரான்? உனக்கு ஏன் சந்தேகமே வரல ?
இவன் அபாண்டமாக பேசுகிறான் என்று முதலில் மூளை சொன்னாலும், இறுதியில் வழக்கம்போலவே, அவள் முகம் சுருங்குவதை பார்த்தவன், வழக்கம்போலவே தன்னுடைய குரலை மாற்றிக் கொண்டு மெதுவாக மிக மெதுவாக பேசிய வார்த்தைகள் அவளின் மனதை நன்றாகவே மாற்றியது. விதி வலியது என்பதை இருவருமே அறிய மாட்டார்கள். இன்று கார்த்திக்கின் பேச்சை கேட்டுக் கொண்டு நிற்கும் இந்த பேதை ஒரு நாள், என்னை திருமணம் செய்து கொள்வீர்களா என்று கௌசிக்கிடம் கேட்கப்போகிறாள்.
அப்போது இதே கார்த்திக் என்ன செய்து கொண்டிருப்பான்? இன்னும் கொஞ்சம் வசதி படைத்த பெண்ணிடம் வழிந்து கொண்டிருப்பான் என்பதை பாவம் இந்த சின்னப்பெண் அறிய மாட்டாள் .
அதற்க்கு அடுத்த சில நாட்களில்தான் அந்த திருமணம் நடந்தது. அந்த மணப் பெண் இவளுக்கு தோழி, என்றால் கார்த்திக்கிற்கு உறவுப் பெண். கார்த்திக்கின் உறவுகளும் இவளுக்கு பரிச்சயம் என்பதால் இவளால் அந்த திருமணத்தில் வெகு இயல்பாக இருக்க முடிந்தது. ஆனால் அதுவரை இவளை அழகாக இருக்கிறாள் என்று சொன்னவர்கள் சத்யாவை புகழ்ந்தது சற்றே பொறாமையை உண்டு பண்ணியது. ஆனால் கார்த்திக் எதை பற்றியும் கவலை படவில்லை. தன் தோழர்களுடன் இருந்தாலும் அவ்வபோது இவளையும் கண்களால் கபளீகரம் செய்து கொண்டிருந்தான், மற்றவர்களுக்கு தெரியாமல்.
இவளும் ஒரு மாதிரி வானத்தில் இருக்கும் தேவதை போலவே உணர்ந்தாள். எப்போது மற்றவர்கள் சத்யாவை பார்க்க ஆரம்பித்தனரோ அப்போதுதான் இவள் தரைக்கு வந்தாள் , வெறுப்புடன். இதை பற்றி எதுவும் தெரியாமல் சத்யா தன் உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள்.
முத்துவை வழி அனுப்பியவள் தன் அறைக்குள் வந்து உடல் கழுவி தனது மொபைலை எடுத்து பார்க்கலானாள் . மனம் அதில் ஈடுபடவில்லை. மாறாக அவள் மனம் முத்துவையே நினைத்துக் கொண்டிருந்தது. அவன் கன்னத்தில் முத்தம் வைக்கும் அளவுக்கு தனக்கு எங்கிருந்து தைரியம் வந்தது? அவளுக்கே சிரிப்பு வந்தது. அதற்க்கு காரணம் அவன் சொல்லவில்லை என்றாலும் ருக்கு தான் சொல்லிவிட்டாளே ?
ஒரு நாள் மதிய வேளையில் மருத்துவமனைக்கு எதிரில் ஒரு சிறிய விபத்து ஏற்பட்டு வாட்டசாட்டமாக இருந்த ஒருவன் ஒரு பெண்ணை கையில் ஏந்திக் கொண்டு பதட்டத்துடன் வந்தான். வருண் தான் வந்து அவளுக்கு மருத்துவம் பார்த்தான். காலில் பெருத்த காயம் ஏற்பட்டிருந்தது. அவள் சுடிதார் போட்டிருந்தாள். நர்ஸின் உதவியுடன் அதை எடுக்க முற்பட்ட போது அவள் வருணை அனுமதிக்க வில்லை . அப்போது சாப்பிட போகலாம் என்று அழைக்க வந்த சத்யாதான் அவளுக்கு மருத்துவம் பார்த்தாள் . அது வேறு யாரும் இல்லை ருக்குதான். ருக்குவும் அவள் அத்தை மகனும் வண்டியில் வந்தபோதுதான் இந்த விபத்து நிகழ்ந்தது. ருக்குவின் அண்ணனுக்கும் திருமணம் நடந்து விட்டது. அண்ணி வந்ததும் அண்ணனுக்கு தங்கையின் நினைவே சுத்தமாக இல்லாமல் போனது அவளின் கெட்ட நேரம்தான். திருமணமாகிய நாத்தனாருக்கு அண்ணி தந்த மரியாதை வேறு. இவளுக்கு தந்த மரியாதை வேறு. அவள் சொல்லும் அனைத்து வேலைகளையும் இவள் செய்தாள் தான். ஆனால் வீட்டு பெண் போல இல்லாமல், வேலைக்காரியாக. அதை அன்னையிடம் கூறியபோது அவளாலும் ஒன்றும் சொல்ல முடியவில்லை. பெரிய இடத்து பெண் என்பதால் தந்தையாலும் வாயை திறக்க முடியவில்லை. அண்ணிக்கு பெரியதாக எதுவும் தெரியாது என்றாலும் இவள் முத்துவை நினைத்துக் கொண்டு திருமணம் வேண்டாம் என்று சொல்வது எந்த விதத்தில் சரி என்பதே அவள் அண்ணனின் வாதம். இவள் ஒரு பாரம் என்பதை அவன் மனைவி அவனுக்கு விளக்கி இருந்தாள் , அவனுக்கு புரியும்படி மிக நன்றாகவே. இப்போது இத்தனை நல்லவனாக தங்கை வேறு யாரையாவது திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று அக்கறையாக கூறும் இதே அண்ணன்தான் அன்று அவளை முத்துவுடன் சேர்க்க திட்டம் தீட்டினான். அதற்கென்று பெரிய காரணம் இல்லை. இப்போது அவன் அறிவுரை கூறுவதற்கும் பெரிய காரணம் எதுவும் இல்லை. சில பேர் அப்படித்தான். எந்த விஷயத்தையும் பெரியதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அந்தந்த நேரத்திற்கு ஏற்றபடி மாறிக் கொள்வார்கள். நல்லது தீயது பற்றி எல்லாம் பெரியதாக கவலை இல்லை. ஆனால் அவன் மனைவி எல்லாவற்றையும் சிந்தித்து முடிவெடுக்கும் புத்திசாலி. இல்லை என்றால் இன்று ருக்கு தன்னை மாற்றிக் கொண்டிருக்க மாட்டாள். ஆனால் என்னதான் புத்திசாலியாக இருந்தாலும் எல்லா எண்ணங்களும் எல்லா நேரங்களிலும் வெற்றி அடைவதில்லை . எத்தனை புத்தி சொல்லியும் திருந்தாதவள், மற்றவரின் ஒதுக்கலினால் திருந்துவாளோ என்றுதான் எண்ணினாள் . ஆனால் நினைத்தது வேறு நடந்தது வேறு. இவர்கள் அனைவரும் சொந்தக்காரரின் வீட்டிற்கு விருந்துக்கு சென்றனர். வழக்கம்போல இவள் வர வேண்டாம் என்று அண்ணி கூட சொல்லவில்லை. அண்ணனே சொல்லி விட்டான். அவமானமாக உணர்ந்த அவள் எப்பாடு பட்டாவது முத்துவிடம் இருந்து தாலியை வாங்கி விட வேண்டும் என்று அவன் வீட்டை அடைந்தவளுக்கு அதிர்ச்சி. ஏனெனில் அவன் சத்யாவின் புகைப்படத்தை வைத்து பேசிக் கொண்டிருந்தான், அதுவும் கொஞ்சும் மொழிகளில்.
அந்த நொடியே அவனுக்கென்று அவள் தந்த இதயம் சுக்கு நூறாக நொறுங்கியது. அதை தாங்காதவள் அப்படியே ஓடி சென்று அங்கிருந்த கிணற்றில் விழ போனவளை அங்கிருந்தவர்கள் தான் காப்பாற்றினார்கள். அதன் பின் அங்கிருந்த வள்ளிதான் இவளுக்கு அறிவுரை கூறினாள் .
வள்ளியின் கணவன் அவளை விட்டு வேறு ஒரு பெண்ணுடன் சென்று விட்டான். அப்போதும் ஊர் முழுவதும் அவளைத்தான் தவறாக பேசியது. யாரையும் அவள் மதித்ததில்லை. அவள் உயிர் அவளின் மகளுக்காகவே. எப்பாடு பட்டாவது மகளை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும். மற்றவர்களுக்காக தன்னுடைய உயிரை அவள் விட தயாராக இல்லை . அப்படி விட்டால் தன்னை ஏமாற்றியவனுக்கே அது கொடுத்ததாக ஆகி விடும். அதற்க்கு பதிலாக ஒவ்வொரு அவமானத்தையும் ஒவ்வொரு படி கல்லாக மாற்றி வாழ்க்கையில் முன்னேறவே அவள் துடித்தாள். தன் மகளையும் முன்னேற்றவே அவள் விரும்பினாள். தன் உயிரை கொடுத்து, ரத்தத்தை கொடுத்து பெற்ற மகளை அவளே அழிக்க விரும்பவில்லை. தாய்மை அடைவது எத்தனை பெரிய விஷயம் என்பது அவளுக்கு தெரியும். தாய்மை என்பது வெறும் பெற்று போடுவதில் மட்டும் அல்ல. பொறுப்பாக வளர்பதிலும்தான் இருக்கிறது என்பதை அவள் நன்றாகவே அவள் அறிவாள் . சொந்த தந்தையுடனே சிறிது நேரத்திற்கு கூட பெற்ற மகளை விட்டு விட்டு போக முடியாத இந்த காலத்தில் அவளால் எப்படி பெற்ற மகளை பற்றி கவலை கொள்ளாமல் தன் உயிரை விட முடியும்? உயிரை கையில் பிடித்துக் கொண்டாள் . இதில் வியப்பு என்னவென்றால் மொத்த தப்பையும் செய்தவன் நன்றாகவே வாழ்ந்துக் கொண்டிருக்கிறான். ஏனென்றால் அவன் ஆண் பிள்ளை. அவன் அப்படித்தான் இருப்பான். சொன்னது வேறு யாரும் இல்லை, அவனை பெற்ற பெண்மணி யேதான். அவளேதான் அவனோட ஒழுங்கா குடித்தனம் பண்ண தெரியல. புருசனை முந்தானைல புடிச்சு வச்சுக்க தெரியல.. இன்னும் எத்தனையோ தெரியல....
சில நேரங்களில் சில மனிதர்களின் வார்த்தைகள்தான் நம்மை வாழ வைக்கும். வள்ளியின் வார்த்தைகள் இன்று ருக்குவை வாழ வைக்கிறது.
இங்க பாரு ருக்கு, பொம்பளைங்களுக்கு என்னதான் இருந்தாலும் அவவ புருசனோட இருந்தாதான் மதிப்பு. நீ இப்படியே அந்த முத்து பின்னாடியே சுத்திகிட்டு இருந்தீனா உனக்கு மருவாத இல்ல. அதுக்காக சாகறதுதான் எல்லாத்துக்கும் முடிவுன்னா இந்த உலகத்துல ஒரு உசுரு கூட நிக்காது. திங்க சோறு கூட கிடைக்காத நாயி நரி கூட வாழுதுங்க. நமக்கென்ன ? இவன் இல்லாட்டி உன்னால சந்தோசமா இருக்கவே முடியாதா ? வாழ்ந்துதான் பாரு!
மரியாதையா வீட்டுல பாக்கறவன கட்டிக்கோ. கட்டிக்க பிடிக்கலையா, வேற ஏதாவது படி. அந்த டாக்டருக்கும் முத்துவுக்கும்தான் பொருத்தம். உன்னைய தங்கச்சியாதான் பாக்கறேன், வேற விதத்துல பாக்க முடியலன்னு அவன்தான் சொல்லறான் . உனக்கு ஏன் புரியல? சரி, ஒரு வேளை அவன் உனக்கு தாலி கட்டினாலும் உன்ன பொண்டாட்டியா ஏத்துக்குவானா ? எல்லாத்தையும் யோசி ருக்கு. உனக்கு எதுன்னாலும் நானிருக்கேன். கவலை படாத . வீட்டுக்கு போ .
எதையெதையோ யோசித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தவளுக்கு இன்ப அதிர்ச்சி. அவள் அத்தையும் அத்தைமகனும் வந்திருந்தனர். விருந்திற்கு சென்றவர்கள், சிறிது நேரத்திலேயே வந்து விட்டனர். அத்தை அண்ணனை பார்த்து வெகு நாட்கள் ஆனதால் பார்க்க வந்திருந்தாள் . அப்படியே தன் மகன் வாங்கி இருந்த புது காரையும் காட்ட வந்தாள் . கிளம்பும் நேரத்தில், ருக்குவ கூட அனுப்பேன் . நாலு நாள்ல இவனும் ஊருக்கு போறான். எனக்கும் கூட ஒத்தாசையா இருப்பா . இவன் ஊருலேர்ந்து வந்ததுக்கப்புறம் கொண்டாந்து விடுவான்.
தந்தை இவள் முகத்தை பார்த்தார். இவளுக்கும் அந்த சிறு மாற்றம் தேவையாக இருந்ததால் சரி என்று சென்னைக்கு வந்தவள்தான்.
அவள் அத்தைக்கு பெண் குழந்தைகள் இல்லையென்பதால் இவளை கொஞ்சாத குறைதான். அதற்க்கு இன்னொரு காரணம், மகனுக்கு ருக்குவை கட்டி வைக்க ஆசை. அவளுக்கு மட்டுமா ? மகனுக்கும்தான். அவளும் ருக்கு இங்கு வந்ததில் இருந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறாள் . மகன் அவளுக்கு தினமும் பூ வாங்கி வந்தான். அருகில் இருக்கும் கடையில் கை நிறைய கண்ணாடி வளையல் வாங்கி தந்தான். இன்னும் பட்டணத்து பெண்கள் போட்டுக் கொள்ளும் அழகு சாதனங்களை வாங்கி தந்தான். அன்னை இருக்கும்போதும் அவளை கள்ள பார்வை பார்த்தான்.
மகனின் மனம் அன்னைக்கு தெரியாதா? மகனிடம் நேரடியாகவே கேட்டு விட்டாள் .
உங்களுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே தாம்மா.
அது இருக்கட்டும் அவ ஒன்னும் பெரிசா படிக்கலையே ? ஒனக்கு பரவல்லையா தம்பி!
படிப்பு இருக்கட்டும்மா. உங்கள, என்ன, எங்களோட குழந்தைங்களை அன்பா ஆசையா பார்த்துக்கணும். அதுக்கப்புறம்தான் எல்லாமே. இவ நல்லா பார்த்துக்குவான்னு எனக்கு தோணுது. உங்களுக்கு அந்த நம்பிக்கை இருந்ததுன்னா அவ கிட்ட பேசுங்க.
ருக்குவிடம் கேட்டதற்கு, எனக்கு கொஞ்ச நாள் டைம் வேணும் அத்த.
அத்தைக்கு சப்பென்று ஆகி விட்டது. அண்ணன் மகள் என்பதை விட வேறு ஒன்றும் அவளிடம் பெரியதாக இல்லை. சரி பாப்போம் என்று ஊருக்கு சென்ற மகனுக்காக காத்து கொண்டிருந்தாள் . ஊருக்கு சென்றவன் அவன் கை பையுடன் சேர்த்து ருக்குவின் மனதையும் எடுத்து சென்று விட்டான். அது அவளுக்கே தெரியவில்லை. ஆச்சர்யமாக அவன் சென்ற அடுத்த சில தினங்களிலேயே அவன் எப்போது திரும்பி வருவான் என்று எதிர் பார்க்க தொடங்கினாள். அதுதான் காதல் என்பது அவளுக்கு புரியவில்லை. அதிசயமாக அவள் முத்துவை பற்றி சிந்திப்பதை கூட மறந்து விட்டாள் . அதுவும் அவளுக்கு மறந்தே போனது. அந்த அளவுக்கு அத்தை மகன் அவளை மனதில் ஆக்ரமித்திருந்தான். முத்து என்ன தன்னை ஒதுக்குவது? நானே அவனை நிராகரிக்கிறேன் என்று நினைத்தவளுக்கு, முத்துவின் இடத்தை சத்தமில்லாமல் அவன் நிரப்பினான். அதற்க்கு அத்தையும் ஒரு காரணம். அவளின் அன்பும் அரவணைப்பும்தான் அவளுக்கு வாழ்க்கை என்பது ஒரு சுவர்க்கம் என்று புரியவைத்தது. மறுநாள் தான் பிறந்தகத்திற்கு செல்ல வேண்டும் இவள். தம்பி, ருக்கு பாவம்டா எங்கியாவது வெளில கூட்டிட்டு போயா . வந்ததுலேர்ந்து வீட்டிலையே அடைஞ்சு கிடக்குது.
சரிம்மா,என்றவன் அன்று அவள் போட்டுக் கொள்ள சில சுடிதார்களை வாங்கி வந்தான்.
இது எதுக்கு ?
இந்த மாதிரி துணியெல்லாம் வண்டில ஏறும்போது மாட்டிக்கும், இல்ல கீழ விழுந்துருவ அதுக்குதான்.
அத்தனையும் அவளுக்கு பொருத்தமான அளவில் பொருத்தமான கலரில் இருந்தது. புடிக்கலன்னா சொல்லு வேற மாத்திக்கலாம்.
இல்ல பரவால்ல.
மேகத்தின் நிறத்தில் ரோஜா வண்ண பூக்கள் வரைந்த சுடிதாரை போட்டுக் கொண்டு வந்தாள். அது அவளுக்கு மிக பாந்தமாக இருந்தது. இருவரும் சேர்ந்து அருங்காட்சியகத்திற்கு சென்று வந்தார்கள். வரும் வழியில் தான் புதியதாக பாலம் கட்டிக் கொண்டிருக்கும் இடத்தில், வண்டி சறுக்கி இருவரும் கீழே விழுந்தனர். இவன் மிகவும் கவனமாகத்தான் வந்தான். எதிரில் ஒரு குழந்தை வரவும் இவனால் பாலன்ஸ் செய்ய முடியாமல் போயிற்று. அவளும் முதல் முறையாக வண்டியில் வருவதால், டக்கென பாலன்ஸ் செய்ய முடியவில்லை. அதில் வண்டி இவள் காலில் விழுந்தது. காலில் சதை பேந்து விட்டது. இவள் காலில் ரத்தத்தை பார்த்தவுடன் அவன் மிகவும் பதட்டமானான். அவன் அவளை கையில் ஏந்தி ஓடும் நேரத்தில் ஆணின் இதய படபடப்பை உணர முடிந்தது. இவள் பயத்தில் அரை மயக்கத்தில் இருந்தாள். ஆனால் அவனின் பதட்டம் அவளுக்கு புரிந்தது. தன் கையிலும் நெற்றியிலும் வரும் ரத்தத்தையும் அவன் கவனிக்கவில்லை. அவன் நெற்றியின் வியர்வையும், ரத்தமும் அவன்தான் தனக்கானவன் என்பதை புரிய வைத்தது. இவளுக்கு மருத்துவம் பார்த்தவள் அவனுக்கு கையிலும் நெற்றியிலும் மருந்திட்டாள். இவங்க இங்கையே இருக்கட்டும். போய் ஏதாவது பிரெஷ் ஜுஸ் வாங்கிட்டு வாங்க. ஆ!மிஸ்டர், நீங்களும் ஏதாவது குடிங்க. ரொம்ப சோர்வா இருக்கீங்க. இப்போது அவள் நார்மலாக இருந்தாள் . மெதுவாக தானே பாண்டை மாட்டிக் கொண்டாள், சத்யாவின் உதவியுடன். முத்து ஏன் இவளை இத்தனை விரும்புகிறான் என்பது ருக்குவுக்கு இப்போது புரிந்தது. அதிலும் அவளை அருகில் இருந்து பார்த்த போதுதான் அவளின் அக அழகும் புற அழகும் சேர்ந்து தெரிந்தது. அப்போதுதான் அவள் தன்னை பற்றிய விவரங்களைச் சொன்னாள் .
அது தவிர அவள் இன்னொன்றும் சொன்னாள் . முத்துவின் காதல். ருக்குவின் வார்த்தைகள் சத்யாவுக்கு இன்பத்தை தந்தது. மகிழ்ச்சியின் வெளிப்பாடு முகத்திலும் பிரகாசித்தது. ருக்குவின் அத்தை மகன் வந்ததும் மெதுவாக அவளுக்கு ஜூஸை ஊட்டினான் . பின்னர் இருவரும் விடை பெற்றனர். டூ வீலர் வேண்டாம் ஏதாவது ஆட்டோ புடிச்சு போங்க.
ஒகே டாக்டர். மறுபடியும் அவளை அலேக்காக கையில் தூக்கிக் கொண்டான். இப்போது சொல்லாமல் எப்போது காதலை சொல்லுவாள் ருக்கு? தூக்கியவனின் கன்னத்தில் நச்சென இதழ் பதித்தாள். இப்போது புரிந்திருக்குமே இதெல்லாம் யார் சொல்லிக் கொடுத்தது என்று ?
மீண்டும் வருவாள் தேவதை.................