Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed ஆர்கலி ஈன்ற அற்புதமே..! - ரம்யா சந்திரன்

Status
Not open for further replies.
அற்புதம் - 4

தனக்கு கிடைத்திருக்கும் புதிய பெண்ணின், அதுவும் சாதாரண மானுடப் பெண்ணின் அறிமுகத்தைத் தன் தங்கைக்கும் தெரிவித்து, கூடவே அவளை அழைத்துக் கொண்டும், தங்கள் உலகில், தாங்கள் மிகவும் உயர்வாகக் கருதும் உயர்ந்த வகை நவரத்தின கல் பதிக்கப்பட்ட பிரத்யேக மாலை ஒன்றையும் அவளுக்கு பரிசாக அளித்து அவளைத் தங்கள் நட்பில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தான் அதிசாந்திரன். அந்த நினைவோடு தான் அவளிடம்,‘திரும்பி வருகிறேன் இங்கேயே காத்திரு எங்கும் சென்று விடாதே’ என்று கூறி விட்டு கடலுக்குள் நுழைந்தான். ஆனால் கடலுக்குள் அவன் விழுந்த மறுகணம் அவனது கால்களிரண்டும் மறைந்து நீந்துவதற்கு ஏதுவாக வால்பகுதி முளைத்தது. அவன் எண்ணிய எண்ணமெல்லாம் நொடியில் தவிடு பொடியாகி விடும் அளவிற்கு,‌ தன் இனத்தைச் சேர்ந்த பல வீரர்களால் சுற்றிவளைக்கப்பட்டு கையில் விலங்கிடப்பட்ட நிலையில் இழுத்துச் செல்லப்பட்டான். தன் கையில் விலங்கு பூட்டியவரை அதிர்வுடன் நோக்கியவன், “ஏன் இவ்வாறு செய்து கொண்டிருக்கிறீர்கள் சிறிய தந்தையே?” என்று குழப்ப மிகுதியில் அவன் கேட்க.

அவன் மொழிந்ததைக் கேட்டு சினம் மிகுந்த வதனத்தோடு அவனை ஏறிட்டுப் பார்த்து கடுமையாக முறைத்த அவனது சிறிய தந்தை அரிணாங்கன், “வேண்டாம் அதி தேவையற்ற வார்த்தைகளை என்னிடம் உரைத்திடாதே? மிகுந்த சினத்தில் இருக்கிறேன், மீண்டும் மீண்டும் எதையேனும் உலறிக் கொண்டிருந்தாயேயானால் கன்னங்கள் சிவக்கும் அளவிற்கு அடி வாங்கிடுவாய் என்பதை நினைவில் கொள். நமது சட்டதிட்டங்கள், வழிமுறைகள் யாவற்றையும் மீறி நீ நடந்து கொண்டிருப்பது எனக்கு ஏற்கனவே அதிகளவு சினத்தையும், எரிச்சலையும் கொடுத்துள்ளது. இதில் மீண்டும் மீண்டும் நீயுரைக்கும் வார்த்தைகள் என் சினத்தை அதிகரிப்பதோடு உன்னை காயப்படுத்திடவும் எண்ண வைக்கின்றது ஆகையால் அமைதியாக வா! அதுவே உனக்கு நல்லது”என்றிட.

“தாங்கள் என்னிடம் ஏன் இவ்வாறு உரையாடுகிறீர்கள் சிறிய தந்தையே? ஒரு முறையை கூடத் தாங்கள் இவ்வாறு என்னிடம் கடுமையாக உரையாடியது இல்லை. அப்படியிருக்க இப்பொழுது மட்டும் என்னவாயிற்றென்று இப்படி எவரிடமோ வேண்டா வெறுப்பாக உரையாடுவது போல் உரையாடிக் கொண்டிருக்கிறீர்கள்?”

“மீண்டும் ஒருமுறை இது போல் தேவையில்லாத வார்த்தைகளை உதிர்த்தாயேயானால் இளவரசனென்று கூட பார்க்க மாட்டேன், அறைந்து வாயில் இருக்கும் பற்கள் அனைத்தையும் கீழே உதிர வைத்துவிடுவேன் நினைவில் கொள்!” என்று எச்சரித்துவிட்டு தன் கடல் குதிரையை அதிவேகத்தில் விரட்டியவாறு முன்னே சென்றார் அரிணாங்கன்.

முழுதாகப் பத்து அகவை மட்டுமே நிரம்பிய அதிசாந்திரனுக்கோ தன் சிறிய தந்தையின் செயலும்,‌ அவர் உரைக்கும்‌ வார்த்தைகளும் எதற்கென்று புரியவில்லை. ‘அவர் தன் மீது சினம் கொள்ளும் அளவிற்கு தான் என்ன தவறிழைத்துவிட்டோம்?’ என்றும் அவனுக்கு புரியவில்லை. இருந்தும் ஒரு இளவரசனாகிய தன் கரங்களில் விலங்கிட்டு அழைத்துச் செல்வது ஏனோ அவனது மனதை புண்படுத்த எதுவும் பேசாமல் அமைதியாக அவர்களுடன் சென்றான். அவர்கள் அவனை அழைத்துச் சென்றது அவனின் தந்தையும்,‌ தற்போது அவர்கள் வாழும் பகுதியை ஆட்சி செய்யும் அரசருமான அரிச்சிகனிடம் தான்.

கடல் கற்களினால் உருவாக்கப்பட்டு, முத்து, பவளம், நவரத்தினம், இன்ன பிற உயர்ந்தரக கற்களைக் கொண்டு அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்த அரியணையில் அமர்ந்து இருந்தார் அரிச்சிகன். அவரது அருகில் அவரது துணைவியார் சந்திரமதியும் கலக்கத்துடன் அமர்ந்திருக்க. அவர்கள் முன்பு இழுத்துக்கொண்டு நிறுத்தப்பட்டான் அதி.

மகனை அந்நிலையில் கண்டதும் பெற்றவள் துடிதுடித்து பதறியவராய் தன் மகனின் அருகில் சென்று அவன் தலையை வருடி கொடுத்தவாறு, “ஏன் கண்ணா இவ்வாறெல்லாம் செய்து கொண்டிருக்கிறாய்? உன்னை யார் மேற்பரப்பிற்கெல்லாம் செல்ல சொன்னது? நம் இனத்தில் குறிப்பிட்ட அகவை நிரம்புவதற்கு முன் சிறு பாலகர்கள் யாரும் நிலப்பரப்பிற்கு செல்லக்கூடாது என்று விதிக்கப்பட்டிருந்த கட்டளையை மீறுவது தவறு தானே?” என்று சற்று சினம் கலந்த கவலையோடு கேட்டிட.

“சிறிய தந்தை போல், தாங்களும் ஏன் இத்தனை கடினமாக என்னிடம் உரையாடுகிறீர்கள் அன்னையே? நான் வேண்டுமென்றே அங்கு செல்லவில்லை தாயே! தங்கைக்கு அவ்விடத்தை காண்பிக்க வேண்டும் என்பதற்காகவும், தங்கையின் பிறந்த தினத்தை கொண்டாடுவதற்காகவும் சென்றேன். இதில் தவறேதும் இருப்பதுபோல் எனக்கு தெரியவில்லையே?” என்று கூறியவனை முறைத்து பார்த்த அவனது தந்தை, “இங்கு எவர் தவறு செய்தாலும் அனைவருக்கும் வழங்கப்படும் அதே தண்டனைகள் தான் கொடுக்கப்படும். இங்கு எவருக்கும் பாரபட்சம் பார்ப்பது கிடையாது, அனைவருக்கும் ஒரேமாதிரியான தண்டனை வழிமுறைகள் தான்” என்றுரைத்து விட்டு காவலாளிகளை அழைத்து, “இளவரசனென்று பாராதீர்கள் இவனை இழுத்துச் சென்று அவனது அறையிலேயே ஒரு மண்டலம் சிறை வையுங்கள்” என்று கட்டளையிட.

அதிர்ந்து தன் கணவரை ஏறிட்டுப் பார்த்த சந்திரமதி,“இவன் நம் தமயன் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு தாங்கள் தண்டனையை வழங்கலாமே அரசே?” என்று கலக்கமாய் விளித்திட.

மிகுந்த சினத்தோடு தன் மனைவியை ஏறிட்டுப் பார்த்தவர்!“இல்லாளாக இருந்தாலும் சரி, பெற்ற பிள்ளையாக இருந்தாலும் சரி, சாதாரண குடிமக்களாக இருந்தாலும் சரி தவறிழைத்தோர்கள் அனைவரும் அரசரின் பார்வையில் குற்றவாளிகளாகத் தான் கருதப்படுவார்கள். நான் கொடுத்த தண்டனையில் எவ்வித மாற்றமுமில்லை.‌ சிறுவன் என்று பாரபட்சம் பார்க்க வேண்டாம் இவனை இழுத்துச் சென்று அறையிலேயே சிறை வைத்திடுங்கள். அப்போதுதான் இனிமேல் எவரும் கட்டளையை மீறி மேற்பரப்பிற்கு செல்ல முனைய மாட்டார்கள். அங்கு நிலவும் ஆபத்துக்களையும், அதன் தீவிரத்தையும் அறிந்து கொள்ளும் வயது அவர்களுக்கு இல்லை.‌ எடுத்துச் சொன்னாலும் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு அனைவரும் சிறுபிள்ளைகள். ஆதலால் இப்படியாவது அவர்கள் புரிந்து கொள்வதற்கு ஒரு வழி வகை கிடைக்கட்டும்” என்றிட. காவலாளிகளைத் தடுத்து நிறுத்திவிட்டு தானே தன் மகனை அழைத்துச் சென்றார் சந்திரமதி..

ஆழ்கடலின் மையிருளிலும் ஜொலித்தது அவர்களது அந்த அற்புத கடல்மாளிகை. இறந்த கடல் வாழ் உயிரினங்களின் ஓடுகளைக் கொண்டு சுற்றிலும் அரண் எழுப்பி, இடையிடையே துளை விட்டு, அதன் மேற்பரப்பிலெல்லாம் இலை தழைகள் கொண்டு பின்னிப் பிணையப்பட்டிருக்க, அவ்விடத்தின் நுழை வாயில்களும் நீளவடிவிலான இலைத்தழைகளாலேயே அமைக்கப்பட்டிருந்தன. தழைகளை விலக்கிக்கொண்டு மகனுடன் உள்ளே நுழைந்தவர், அங்கே தூங்கியெழுந்து அழுது கொண்டிருக்கும் மகளைக் கண்டு துணுக்குற்றவர், மகனை அவனுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் அழைத்துச் சென்று அவன் எப்போதும் உவகையோடு உறங்கும் சிற்பிகளால் ஆன படுக்கையில் அமர வைத்து, கண் கலங்க அவனை ஏறிட்டுப் பார்த்தவர் எதுவும் பேசாமல் அவனை அதில் படுக்க வைத்துவிட்டு சிற்பியினாலான கதவைச் சாத்தி திறவுகோல் கொண்டு பூட்டிவிட்டு, தன் பின்னால் நின்ற காவலாளிகளிடம் திறவுகோலைக் கொடுத்து விட்டு அழும் மகளைத் தேற்றச் சென்றார். இப்போது இவர்கள் வாழும் இப்பகுதியை குறிப்பிட்ட தொலைவு வரை பாதுகாப்பதும், இங்கு வாழ்பவர்களுக்கு தேவையானவற்றை செய்வதும் அதிசாந்திரனின் தந்தை - அரிச்சிகன் தான்.

கடல் தன்னுள் அதிகளவு நீரை மட்டும் அல்ல எண்ணற்ற கடல்வாழ் உயிரினங்களையும் கொண்டிருக்கிறது.. கடலின் சூரிய ஒளி மண்டலத்திற்குக் கீழே வாழும் உயிரினங்கள் ஆழ்கடல் உயிரினங்களாகும். இந்த உயிரினங்கள் நூற்றுக்கணக்கான பார் (அளவை) அழுத்தம், மிக சிறிய அளவு ஆக்சிஜன், மிக சிறிய உணவு, இருட்டு, அதீதக் குளிர் என கடினமான நிலைமைகளைச் சமாளிக்க வேண்டும் அதற்காகவே சில உடல் தகவமைப்முகளைப் பெற்றிருக்கிறன. அதாவது கடலின் 1000 மீ ஆழத்தில், 3 முதல் 100C வெப்ப நிலையில், 2 முதல் 1000 பார் (அளவை) அழுத்தத்தில் இந்த உயிரினங்கள் வாழ்கின்றன.

புதிதாக கிடைக்கபெற்ற புதைபடிவத்திலிருந்து முற்றாக தாவரங்களை மட்டுமே உண்டு வாழ்ந்த மிகப்பழமையான கடல்வாழ் விலங்கினமும் வாழ்ந்ததாக இக்கால அறிவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் கிடைத்த புதைபடிமங்களை ஆராய்ந்த அவர்கள், வினோதமான வகையில் சுத்தியல் போன்ற தலைவடிவம் கொண்ட அந்த உயிரினம், கடல்நீருக்கு அடியில் இருந்த தாவரங்களையே உணவாகக் உட்கொண்டனவாம்.

அடோபொடெண்டாடஸ் என அழைக்கப்படும் அந்த உயிரினம், அகண்ட தாடைகளையும், பட்டையான கூர்வடிவப் பற்களையும் கொண்டுள்ளன. அக்கூர்மையான பற்களைக் கொண்டு கடலுக்கு அடியில் இருந்த பாறைகளைச் சுற்றி வளர்ந்திருக்கும் தாவரங்களை சுரண்டி அவை உணவாக உட்கொள்ளுமாம்.

இந்த உயிரனத்துடன் சமகாலத்தில் வாழ்ந்த ஊர்வன விலங்கினங்கள் மீன் மற்றும் இதர உயிரனங்களை அல்லது தமது இனத்தையே அடித்து உண்ணும் வழக்கத்தைக் கொண்டிருந்தன எனவும் கூறுகின்றனர் ‌

இங்கு வாழும் உயிரினங்களுக்கு இருட்டினில் உணவினைக் கண்டுபிடிக்கவும் மற்ற உயிரினங்களிடமிருந்து தப்பிக்கவும் , சிறப்புத் தகவமைப்பும் தேவைப்படுகிறது. பெரும்பாலான உயிரினங்கள் மிகப் பெரிய கண்களும், கூம்பு போன்ற அமைப்பும் மற்றும் அதிக உணர்திறன் கொண்டதாகவும் இருக்கின்றன. இதில் சில வகை உயிரினங்கள் புறப்பார்வைக்குப் பதிலாக பெரிய உணர்வுப்புழைகளையும் (கரப்பான் பூச்சியின் மீசை போன்ற அமைப்பு) கொண்டுள்ளன. மேலும் இவை இனப்பெருக்கம் செய்ய தனது துணையைக் கண்டுபிடிக்கும் தேவையை நீக்குவதற்காக பெரும்பாலும் இருபால் உயிரினங்களாகவே உள்ளன. சில உயிரினங்கள் தனது துணை உயிரினம் வெளியிடும் இரசாயன வாசனையைக் கண்டறிய வலுவான உணர்திறனைப் பெற்றுள்ளன.

இந்த ஆழ் பகுதியில், ஒளிச்சேர்க்கை செய்ய போதுமான சூரிய ஒளியும் மீன்களின் உயர் வளர்சிதை மாற்றத்திற்குத் தேவையான ஆக்சிஜனும் போதுமானதாக இல்லை. ஆதலால் ஆக்சிஜன் பயன்படுத்துவதைக் குறைப்பதற்கு ஏற்ப அவைகளுக்கு மெதுவாகவே உயர் வளர்சிதை மாற்றம் நடைபெறுகிறது. மேலும் பல மாதங்கள் கூட உணவு இல்லாமலும் இங்குள்ள உயிரினங்கள் வாழ்கின்றன. பெரும்பாலான உணவு கடலின் மேல் பகுதியில் இருந்து விழும் கரிம பொருட்களாலும் அல்லது கடலில் வாழும் உயிரினங்கள் இறந்து விழும்பொழுதும் கிடைக்கின்றது. இறந்த உயிரினங்களின் உடல் சிதையும் பொழுது சிறிதளவு ஆக்ஸிஜனும் இவற்றிற்குக் கிடைக்கும். மேலும், உணவு தேட ஆற்றலை வீணாக்காமல் இருக்க பதுங்கியிருந்து இரையைத் தாக்குகிறன.

ஆராய்ச்சியாளர்கள் ஆழமான கடல் தரையில் இரண்டு சதவீதத்திற்கும் குறைவான உயிரினங்களை மட்டுமே இதுவரை ஆராய்ந்துள்ளனராம். இன்றளவும் ஒவ்வொரு புதிய ஆராய்ச்சியின் போதும் பல புதிய இனங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன தான். ஆனால் அவை பற்றிய முழுத் தகவலையும் அறிந்து கொள்வது சற்று சிரமமாகத் தான் உள்ளது. கடலில், தரை மற்றும் மேற்பரப்பிற்கு இடையே தீவிர அழுத்த வேறுபாடு உள்ளதால் இந்த ஆழ்கடல் உயிரினங்கள் மேற்பரப்பிற்கு வந்து வாழ்வது சாத்தியமற்றது. இதே காரணத்தால் இந்த உயிரினங்களை மேலே கொண்டு வந்து ஆராய்ச்சி செய்யவும் இயலாது. எனவே நாம் கடலின் உள்ளே சென்றுதான் ஆராய முடியும்.

மரியானா அகழி என்னும் ஆழ்கடல் உலகம், பசுபிக் கடலின் அடியில், 7 மைல் ஆழத்தில் உள்ளது. உலகில் மிகவும் ஆழமான பகுதி இது. இந்த ஆழமான பகுதியில் வசிப்பதற்கு ஏற்ற சில பல வித்தியாசமான உடல் அமைப்பையும், செயல்திறனையும் இங்குள்ள உயிரினங்கள் பெற்றிருக்கின்றன. அதேபோல்தான் கிட்டத்தட்ட மனிதனின் முகமும் மிருகங்களின் உடலமைப்பையும் பெற்ற அதிசாந்திரனின் இனமும் இங்கு வாழ்வதற்கான தகவமைப்புகள் பலவற்றைப் பெற்றிருக்கின்றன..

இங்கு அதிசாந்திரனோ பெற்ற தந்தையாலையே சிறை வைக்கப்பட்டிருக்க, அங்கே நிலப்பரப்பில், தன்னிடம் ‘இங்கேயே இரு.. வந்து விடுகிறேன்‌' என்று சொல்லிவிட்டு செல்பவனை அதிர்வோடு பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த தன் தங்கையை நெருங்கிய மிகிரன்‌, “நீ இங்கே இந்த சமயத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறாய் அந்தரி? எங்கள் பின்னே எங்களுக்கே தெரியாமல் பின் தொடர்ந்து வந்தாயா? இது மட்டும் நமது தாய், தந்தையருக்கு தெரிந்தால் உன்னோடு சேர்ந்து நாங்களும் அல்லவா மாட்டிக்கொண்டு விழி பிதுங்கி கைகட்டி நிற்கவேண்டும். ஆமாம் இந்த வேளையில் நீ எங்கள் பின்னால் எதற்கு வர வேண்டும்? நீ எப்படி கடலுக்குள் சென்றாய்? உன்னை தூக்கி கொண்டு வந்தது யார்? எதற்காக இப்படி எதையோ வயிறு புடைக்க தின்று விழுங்கிவிட்டு திணறிக்கொண்டிருக்கும் மலைப் பாம்பு போல் அசையாமல் இருக்கிறாய்? என்ன இது உன் தேகமெல்லாம் அணிகலன்களாக இருக்கின்றது? இதையெல்லாம் யார் உனக்கு கொடுத்தது?என் வினாவிற்கானப் பதிலைக் கூற போகிறாயா இல்லையா? நான் கேட்டவைகளுக்கு பதிலுரைக்காமல் கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதன் அர்த்தம் என்ன? உன்னை தூக்கிக் கொண்டு வந்து இங்கு விட்டு விட்டு சென்றவன் வருவானென்று காத்திருக்கிறாயா? அல்லது என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் சிந்தித்துக் கொண்டிருக்கிறாயா?” என்றிட.

அவனோ தன் தொண்டையில் இருக்கும் தண்ணீர் அனைத்தும் வற்றும் அளவிற்கு வினாக்களை எழுப்பிக் கொண்டிருக்க, விடையளிக்க வேண்டியவளோ இன்னும் வெறித்து நோக்கிக் கொண்டிருந்தால் நீலவண்ணக் கடல் அலைகளையே..!

கடல் அலைகளை வெறித்துக் கொண்டிருந்தவளுக்குத் தன் கண்ணத்தில் ஏதோ படுவது போலிருக்க சட்டென்று இமைகளைக் கொட்டி கண்களை அழுந்த மூடி திறந்து தன்னை மீட்டுக் கொண்டவள் தன்னை அடித்து விட்டு கைகளை உதறிக் கொண்டு இருக்கும் தன் தமையனை நிமிர்ந்து அச்சத்துடன் பார்த்தவளது விழிகளில் இருந்து கண்ணீர் கரகரவென்று வெளியேறியது

ஆனால் அதன் பிறகு ஒரு வார்த்தையும் பேசாமல் எழுந்து நின்றவள் தன் மேல் இருக்கும் நகைகள் அனைத்தையும் பரபரவென்று கழட்டினாள் ஆனால், அவளையுமறியாமல் அவளுக்கே தெரியாமல் பவளமணி மாலையொன்று அறுந்து அவளுடைக்குள் விழுந்திருந்தது, அதை அவள் அறிந்திருக்கவில்லை. அனைத்தையும் கழட்டி வைத்துவிட்டு அவள் முன்னேறி நடக்க ஆரம்பிக்க, மிகிரனோ தங்கையின் செயலில் அதிர்ந்து இருந்தவன் அவள் பின்னே ஓடினான்..

“இப்போது எங்கே செல்கிறாய் அந்தரி? நான் கேட்டவைகளுக்கு பதில் கூறாது, ஏன் இப்படி மௌனித்திருக்கிறாய்? உனது இந்நிலையைக் கண்டு எனக்கு அச்சமாக உள்ளது, எதுவாக இருந்தாலும் இதழ் திறந்து வார்த்தைகளை கொட்டி விடு அந்தரி. பிறகு தான் என்னால் ஏதேனும் செய்ய இயலும். இப்போது என் தோழர்கள் அனைவரும் அங்கு இருக்கிறார்கள்? இப்போது நீ அங்கு சென்றால் அனைவரும் உன்னைக் காண நேரிடும். இப்போது யாரும், எதுவும் சொல்லா விட்டாலும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் எங்களுக்குள் பிரச்சினை வரும் போது இதை அவர்கள் சுட்டிக் காட்ட நேரிடலாம். அப்போது அனைவரும் உன்னை கேள்விக்குறியோடும், என்னை சந்தேகக்கண்கொண்டும் பார்க்க நேரிடலாம். அதனால் தான் சொல்கிறேன், என் சொல் பேச்சை கேள் அந்தரி, முதலில் அவர்களை அழைத்துச் சென்று விட்டு விட்டு அதன் பிறகு உன்னை வந்து அழைத்துச் செல்கிறேன். என் மீது நம்பிக்கை இருந்தால் இங்கேயே இரு” என்று சொல்லிவிட்டு அவன் முன்னே செல்ல.

மீண்டும் அந்தக் குடிலுக்குள் வந்து அமர்ந்துவிட்டாள் அந்தரி. வேகமாக தன் தோழர்கள் இருந்த இடத்திற்கு சென்றவன் அனைவரும் கடலில் கால்களை நனைத்து விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டு விட்டு,“விரைவில் நாம் அனைவரும் இங்கு இருந்து கிளம்ப வேண்டும். சூரியன் உதிக்கும் நேரத்தில் நாம் இங்கு இருக்கக் கூடாது என்பது ஏற்கனவே என் தந்தையார் உரையாடிக் கொண்டிருந்ததிலிருந்து நான் அறிந்துக்கொண்டது. விரைந்து செல்லலாம் வாருங்கள்” என்று சொல்லி அனைவரையும் அழைத்துச் சென்றவன் எந்த இடத்தில் இருந்து வெளியேறினோம் என்பதை சரியாக நினைவில் வைத்து அந்த இடத்தில் சென்று மரத்தின் மீது விரல்களைப் பதித்திட மீண்டும் நுழைவாயில் திறந்தது. முதலில் அவர்களை உள்ளே இறக்கிவிட்டவன் பின்னால் திரும்பிப் பார்க்க ஒரு மரத்துக்கு பின்னால் தன் தங்கை நிற்பதைப் புரிந்து கொண்டவன், ‘வா’ என்று சைகை செய்துவிட்டு அவர்கள் பின்னே தானும் இறங்கினான். அவர்கள் சிறிது தூரம் சென்றதும் சரியாக முன்புபோலவே வாயில் மூடும் சொற்ப நிமிடங்களுக்குள் தானும் உள்ளே இறங்கி இருந்தாள் அந்தரி..

இறுதியாக அவளது விழிகள் கடல் அலையை வெறுத்து நோக்கிவிட்டு அதன்பிறகே முன்புறம் திரும்பியது. அவள் இறங்கி உள்ளே ஓர் அடி எடுத்து வைத்த அடுத்த கணம் நுழைவாயில் மூடிக்கொண்டது..

எவ்வாறு வந்தார்களோ அதேபோல் அனைவரும் சத்தமில்லாமல் தங்களது இல்லத்திற்கு கிளம்பினார்கள். அதுமட்டுமின்றி அங்கிருந்து பறித்து வந்த கனிகளில் மீதம் இருந்ததை அனைவரும் உண்டு கொண்டே இல்லம் சென்று சேர்ந்தனர்.‌

பிரிவதற்கு முன்பு அனைவரையும் ஓரிடத்தில் ஒன்று கூட்டிய மிகிரன், “நாம் வெளியுலகிற்கு சென்றது பற்றி யாரும் எவரிடமும் கூறக்கூடாது. அதேபோல் இனிமேல் எவரையும் நான் இதுபோல் அழைத்துச் செல்ல போவதும் இல்லை. இப்படி எவருக்கும் தெரியாமல் நாம் செல்வது என்றும் பிரச்சனைகளையே கொண்டு வரும். ஆதலால் இதற்கு ஒரு முடிவு கட்டிய பின் நாம் செல்லலாம்” என்று சொல்லி அனைவரையும் அனுப்பி வைத்தவன் அவர்கள் அனைவரும் அவரவர் இல்லத்திற்குள் நுழைந்ததை உறுதிப்படுத்திக் கொண்டு தன் தங்கையின் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு தன் இல்லம் நோக்கி நடையைக் கட்டினான்..

எவரென்றே தெரியாத
போதும்..!
எத்துணை அக்கறை
என்மீது இருந்திருந்தால்
உன்னுயிரில் பாதியை
பகிர்ந்தளித்திருப்பாய்..!
இதற்கு உபகாரமாய்
இன்னுயிரையும்
இழந்திடுவாள் உன்
உயிரை கடனாய் பெற்ற
அந்தரியிவள்...!!!!

- அற்புதமது பிறக்கும்..



https://www.sahaptham.com/community/threads/ஆர்கலி-ஈன்ற-அற்புதமே-comments.389/
 
அற்புதம் -5

எவரேனும் தங்களை கவனிக்கிறார்களா? இல்லையா? என்று பார்த்தவாறே எச்சரிக்கை உணர்வுடனேயே தான் நடைபயின்றான் மிகிரன். அவன் அருகில் அமைதியாக நடந்து வந்த அந்தரியை அவ்வப்போது திரும்பி பார்த்தவன் அவளிடம் அதற்குப் பிறகு எதுவும் கேட்கவில்லை. ஆனால் அவளோ பிரமை பிடித்தவள் போல் தான் நடந்து வந்தாள். இருவரும் இல்லத்திற்குள் அந்த நேரத்தில் நுழைந்த போதும் அவர்களைப் பெற்றவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் தான் இருந்தார்கள். தங்களது தாய் தந்தை இருவரும், கதவு திறந்த சத்தத்தில் கூட விழி திறவாது ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைக் கண்டு குழம்பியவன், “நம் தாயும் தந்தையும் இந்த அளவிற்கு ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்வதற்கு நீ ஏதேனும் செய்தாயா?” என்று கேட்டிட.

தன் தமயனின் குரலில் அவன் புறம் திரும்பியவள், “இருவரையும் ஆழ்ந்த மயக்கத்திற்கு செல்லும் மூலிகைகளைக் கொண்டு சுவாசிக்க வைத்ததால் அவர்கள் இவ்வாறு உறங்குகிறார்கள். விடிந்ததும் எப்போதும் போல் எழுந்து விடுவார்கள்..” என்று கூறிவிட்டு அறைக்குள் நுழைந்தவள் உடைகளை மாற்றும் வேளையில் தான் தன் உடைக்குள் இருந்து அந்த பவள மணி மாலை விழுந்ததைக் கண்டாள். அதன் பிறகு அவனுரைத்துவிட்டு சென்ற வார்த்தைகளும், நீருக்கடியில் தான் எவ்வாறு சுவாசித்தோம்? அவன் ஏன் தன்னை அங்கு அழைத்து சென்றான்? என்ற வினாக்களோடு, அங்கு தான் கண்ட காட்சிகளுமே அவள் நினைவில் நின்றன..

தனது அறைக்கு வந்த மிகிரனுக்குமே இன்னும் குழப்பமாகத் தான் இருந்தது. எதற்காக தன் தங்கை அங்கு வர வேண்டும்? தன் தங்கையை தூக்கி கொண்டு வந்தவன் யார்? அவள் எவ்வாறு கடலுக்கு சென்றாள்? கடலுக்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன வந்தது? என்ற வினாக்களோடு இன்னும் ஏகப்பட்ட வினாக்கள் அவனை குழப்பத்தில் ஆழ்த்த இதற்கெல்லாம் விடை தெரியாமல் தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தான்..

மறுநாள் பொழுதும் புலர்ந்தது. ஆனால் அந்தரியிடம் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. எப்போதும் போல் எழுந்து தன் அன்றாடக் கடமைகளைச் செய்தாள். ஆனால் அதன் பிறகு மற்றவர்களிடம் தேவையில்லாமல் உரையாடுவதைக் குறைத்துக்கொண்டாள். மிகிரனோ அவளிடம் தனிமையில் உரையாடுவதற்கான கால நேரத்தை எதிர்பார்த்து காத்திருக்க, அந்தோ பரிதாபம் அவனுக்கு அப்படி ஒரு தனிமை கிடைக்கவே இல்லை. நாட்களும் அதன் போக்கில் நகர்ந்திட.. மேலும் ஒரு வார காலம் கடந்து சென்ற பிறகு அவர்கள் இனத்தில் இருபதாம் அகவை முடிந்த பெண்ணொருத்திக்கு ஏற்கனவே மன்றல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமையால் அன்று மன்றல் நிகழ்த்தப்பட்டது.. அன்று கிடைத்த தனிமையைப் பயன்படுத்தி தன் தங்கையிடம் தோண்டித் துருவி கேள்வி எழுப்பினான்..

அதற்கு அவளோ, “தங்களின் நண்பர்களோடு தாங்கள் உரையாடுவதைக் கேட்டதால் எனக்கும் வெளியுலகத்தைப் பார்க்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டது. அதனால் தான் தாய்,தந்தையருக்கு தெரியாமல், தாங்களே அறியாமல் தங்களைப் பின்தொடர்ந்து வந்தேன். எதேச்சையாக அவ்விடங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த நான் ஆர்வமிகுதியில் அந்த குடிலுக்குள் இருந்த கனிகளை‌ ருசித்து விட்டேன். அதை உண்டதும் எனக்கு ஏதோ போலிருக்க கடலலைகளை நோக்கி சென்றவள் தவறுதலாய் ஆழமான பகுதிக்குள் சென்று விட்டேன். அப்போது தான் யாரோ ஒருவர் என்னை காப்பாற்றிக் கொண்டு வந்து கரையில் விட்டு விட்டு சென்றார்.‌ இவ்வளவு தான் நடந்தது போதுமா! இதற்கு மேல் இதைப் பற்றிப் பேச வேண்டாம் தமயனே!” என்றிட.

மிகிரனும் அதன் பிறகு அதைப்பற்றி தன் தங்கையிடம் வினா எழுப்பவில்லை. அதன்பிறகு தன் தோழர் படைகளையும், இன்னபிற அகவையில் மூத்த இளைஞர்களையும் பேசி தனது திட்டத்திற்கு சம்மதிக்க வைத்து தன் தந்தையிடம் சென்று முறையிட்டான், வெளி உலகைக் காண வேண்டுமென்று.‌ அதன் பிறகு மிகப்பெரிய சொல்லாடலும், வாக்கு வாதங்களும் நிகழ்ந்ததற்குப் பிறகே அவர்களுக்கு மேலே செல்வதற்கான அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட கால நேரத்திற்குள் தான் சென்று விட்டு வர வேண்டுமென்று வரையறையும் விதிக்கப் பட்டது..

நாட்கள் மாதங்களாக உருண்டோட.. மாதங்களும் வருடங்களாய் விரைவில் கடந்து சென்றிருந்தன.. இதோ 25-ந்தாம் அகவை பூர்த்தியடைந்த மிகிரன் கட்டிளங்காளையாக வளர்ந்து நிற்க. அவனது சகோதரி அந்தரியோ? 23 ஆம் அகவையில் பாதம் பதித்து அரிவையானாள்...
சிறுவயதில் இருந்த சுட்டித்தனங்கள் அனைத்தும் மறையப் பெற்று புத்திக்கூர்மையும், தேகத்தில் வலிமையையும் கூட்டி ஆளுமை மிக்க ஒரு இளைஞனாக உருமாறியிருந்தான் மிகிரன். வார்த்தை மொழியாடல்கள் மட்டுமல்ல அவனது செயல்களும் கூட அவனது புத்திக்கூர்மையை பறைசாற்றுவது போல் தான் இருக்கும். ஆனால் அவனுக்கு இன்னும் புரியாத புதிர் என்றால் சிறுவயதில் இருந்தே கலகலப்புடன் இருந்த தன் தங்கை அந்த நிகழ்வுக்குப் பிறகு அமைதியாக இருப்பதும், எப்போதும் தனியையை மட்டுமே நாடி கொண்டிருப்பதும் தான்.‌ ஒரு கட்டத்திற்கு மேல் தங்கையின் நிலையைக் காண சகிக்காதவன் சில வருடங்களுக்கு முன் அவளிடம் இதழ் பிரித்து இது சம்பந்தமாக கேட்டே விட.‌

அவள் தயக்கத்துடன் தன் தமையனின் முகம் பார்த்தவள், “என் உயிரை மீட்ட அவரின் மீது நேசம் என்ற பூ மலர்ந்து விட்டது தமயனே! அவருடன் தான் என் எதிர்காலமானது அன்பென்ற மாயக் கயிற்றால் கட்டப்பட்டுள்ளது” என்று மொழிந்திட.

அதைக் கேட்டு முதலில் அதிர்ந்த மிகிரனோ தங்கையின் மேல் கட்டுக்கடங்காத சினம் கொண்டவன் அவளை வார்த்தையால் காயப்படுத்தினான். ஆனால் நாளடைவில் அவள் உண்ணா நோன்பிருந்து தன் நேசத்தின் அளவை தமயனுக்கு புரியவைத்தாள்.

அதன் விளைவு என்ன செய்ய வேண்டும் என்று அவன், தானே முன்வந்து கேட்க. எவருக்கும் தெரியாமல் அந்த இரவு வேளையில், அவன் ‘திரும்பிவரும் வருவேன், இங்கேயே காத்திரு’ என்று சொன்னதற்காகவே அவனுக்காக் காத்திருக்க துவங்கினாள்.‌ முதல் ஒரு வார காலம் இவ்வாறு கடந்து சென்று இருக்க, இரவில் உறங்க செல்லும் போது நன்றாக இருக்கும் தாங்கள் எழும்போது உடல் களைப்பின் காரணமாக அவதி படுவதை உணர்ந்த சௌபர்னிகா மறுநாளில் இருந்து உறங்காமல் விழித்திருக்க. அன்று வெளியே செல்ல முடியாமல் தவித்துப் போனாள் அந்தரி. ஆனால் இதே போல் தினமும் தாய் மிகவும் கவனமுடன் தங்களை கண்காணிப்பதை உணர்ந்தவள் அதன்பிறகு வெளியே செல்ல முடியாமல் தன் தமையனை அனுப்பி வைத்திட. ‘தன் தங்கையின் உண்மை நேசத்திற்கு கண்டிப்பாக ஒருநாள் அவள் எண்ணியது கைகூடும் அல்லது எப்பாடுபட்டாவது தான் அவள் நேசித்தவருடன் அவளை சேர்த்து வைக்க வேண்டும்’ என்ற திண்ணத்துடன் தினமும் இரவில் அதே கடற்கரையில் அதே இடத்தில் வந்து அமர்ந்து கண்காணிக்க ஆரம்பித்தான். ஓரிரு மாதங்கள் தொலை தூரத்திலிருந்தே கடலலையை வெறித்திருந்தவன் அதன்பிறகு பரண் ஒன்றை அமைத்து அதன் மீதிருந்து கண்காணிக்க ஆரம்பித்தான்..

நாட்கள் செல்லச் செல்ல இரவு வேளையில் அவன் இல்லத்தில் இல்லை என்பதை உணர்ந்து அவன் தாய் ஓர் தினம் அவனைப் பின் தொடர்ந்து வந்து அவனது செயலைக் கண்டு கொண்டார். ஆனால் வேறு எதற்காகவாவது அவன் காத்திருக்கக் கூடும் என்று அதனை சாதாரணமாக விட்டுவிட்டார். ஆனால் நாளடைவில் அவனது செயலில் ஏதோ வித்தியாசத்தை கவனித்தவர் அண்ணன்,தங்கை இருவரும் உரையாடுவதை மறைந்திருந்து கேட்டு விட்டார். அதன் பிறகு எவரோ ஒருவருக்காகத் தன் தலைமகன் காத்திருக்கிறான் என்பதை உணர்ந்தவர் தன் மகன் வெளியே செல்வதை கணவருக்கு தெரியாமல் மறைத்து விட்டார். ‘ஆனால் இது எவ்வளவு காலம் ஒரு நாள் அவருக்கு தெரிய வரும்போது அனைவருக்கும் அல்லவா ஆபத்து’ என்பதை உணர்ந்தவர் இதோ இன்று அவனிடம் அதை பற்றி உரையாடி அவனை மிரட்டி வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார். ஆனால் அவர்களே எதிர்பாராத ஒன்று விடிந்ததும் அரங்கேற காத்திருந்தது..

மறுநாள் அதிகாலைப் பொழுது ரம்மியமாக புலர்ந்திட. எழுந்து குளித்து முடித்து தங்களது கடவுளை வணங்குவதற்காக அவரது உருவச்சிலை இருக்கும் இடத்திற்கு சென்ற மிகிரன் விழிகள் மூடி பிரார்த்தனை செய்து முடித்துவிட்டு விழிகளைத் திறந்திட.‌ அவனது தோழர் படைகள் அனைவரும் அருகே நின்றிருந்தனர்.

அவர்களைக் கண்டு கொள்ளாதவனாய் நிலத்தில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து எழுந்து, கைகூப்பி மீண்டுமொருமுறை கடவுளிடம் தன் தங்கைக்காக வேண்டுதல் வைத்தவன், “என்ன அனைைவரும் காலையிலேயே என்னைத் தேடி வந்திருக்கிறீர்கள் ஏதேனும் பிரச்சனையா?” என்று கேட்டவாறு அங்கிருந்து நகர்ந்திட.

“ஏதோ விசித்திர ஜந்து ஒன்றும், குடுவை ஒன்றும் நம்மிடத்திற்குள் புகுந்துள்ளதாம். இவையிரண்டும் மண்ணில் புதைத்து இருந்ததா? அல்லது எவர் மூலமேனும் இங்கு அனுப்பி வைக்கப்பட்டதா என தெரியவில்லை.‌ நமது லோகத்திற்குள் நுழைவதற்கான நுழைவாயிலின் அருகில் இவை கிடந்ததாகவும், அதை சிறு பாலகன் ஒருவன் எடுத்துக்கொண்டு வந்து கொடுத்ததாகவும் சொல்லி ஊர் மந்தையில் கூட்டம் போட்டிருக்கிறார்கள். அங்கே தான் அவையும் வைக்கப்பட்டிருக்கின்றன. உன் தந்தை உன்னை விரைவாக அழைத்து வரச்சொன்னார்..” என்று கூறினான் மணிமான்..

‘நேற்று நான் சென்று விட்டு வரும் போது கூட அப்படி எதையும் பார்க்கவில்லையே? அப்படி இருக்கும்போது இது என்ன புதிய பிரச்சினையென்று தெரியவில்லையே?' என்று சிந்தித்தவாறே அவன் நடக்க. அவன் பின்னே வந்த அவன் தோழர்களோ ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி வினாவினை எழுப்பினார்கள்.

“ஏனடா மிகிரா நீ தினமும் இரவில் வெளி உலகிற்கு சென்று விட்டு வருகிறாயாமே? உண்மையா?” என்று பாமன் கேட்க.

“என்னது? யாரடா கூறியது இதை? அது சரி, நான் வெளி உலகிற்கு செல்கிறேன், செல்லாமல் இருக்கிறேன் அதெற்கு உனக்கு? அதைக்கேட்டு தெரிந்து கொண்டு நீ என்ன செய்யப் போகிறாய்?” என்று மிகிரன் கேட்க.

“வெளி உலகிற்கு சென்று விட்டு வருகிறாயா என்று தானே கேட்டான். அதுக்கு ஏனடா அவன் மீதிப்படி பாய்கிறாய்? நாங்கள் ஒன்றும் இல்லாததைத் திரித்துச் சொல்லவில்லை. உன் தாயார் தான் என் மகன் தான் இரவில் சொல்லாமல் கொள்ளாமல், வெளியுலகிற்கு செல்கிறான். ஒரு வேலை அவனுக்கே தெரியாமல் அவனுடன் யாராவது நம் இடத்திற்குள் நுழைந்து இருக்கிறார்களோ என்னவோ? என்று பிதற்றிக் கொண்டு இருந்தார்கள்.‌ அதைக் கேட்டு விட்டு தான் இவன் இப்படி கேட்கிறான் இதிலென்னடா தவறைக் கண்டாய்? நீ இவனிடம் பாய்வதற்கு பதில் அவரிடம் சென்று உன் சினத்தைக் காட்டேன் பார்ப்போம்”என்று பர்க்கன் கூறிட.

“என்னது, என் தாய் இவ்வாறு கூறினார்களா? இவர்கள் எதற்கு தேவையில்லாதவற்றைக் கூறி இந்த சிக்கலில் என்னை மாட்ட வைக்கிறாரென்று புரியவில்லை. ஏனடா அவர்கள் தான் அப்படி விவரமின்றி கூறினாரென்றால், பதிலுக்கு நீங்களும் என்னைச் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பீர்களா? இது தான் மெய்யான நட்பின் இலக்கணமா? இவ்வளவு தானா நீங்கள் என்னை புரிந்து கொண்டது?” என்று வருத்தம் தோய்ந்தக் குரலில் கூறிட..

“யாருடா உன்னைச் சந்தேகக் கண் கொண்டு பார்த்தது? எங்களுக்கு தெரியாமல் அவ்வாறு சென்றாயோ என்னமோ என்றொரு ஆர்வத்தில் அவ்வாறு கேட்டு விட்டானே ஒழிய,‌ உன்னை‌ சந்தேகிக்கவில்லையடா! இதைக்கூட புரிந்து கொள்ளாமல் அவனிடம் கோபம் கொள்வாயா?” என்று பங்கயாசனன் கேட்க.

“ஏனடா... ஏனடா..! அனைவரும் இப்படி என்னையே குற்றவாளி ஆக்குகிறீர்கள்? நான் சென்றேனா? செல்லவில்லையா? என்பது பற்றி தெரிந்து கொள்ளவே நீங்கள் விரும்புகிறீர்கள்! அது உங்களது வதனத்தில் மிளிரும் ஆர்வ மிகுதியைக் கொண்டே என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அதை விடுத்து வேறு ஏதேனும் பேசுங்களேனடா. இன்னும் சிறிது தூரத்தில் மந்தைவெளி வந்து விடும். அங்கே சென்றால் அனைவருக்கும் எல்லாம் தெரிந்து விடும் பிறகேனடா இப்படி கேள்வி கேட்டே என்னை சாகடிக்கிறீர்கள்?”

“நீ மழுப்பலாக பதில் உரைப்பதிலேயே ஏதோ பொருள் மறைந்து இருப்பது போல் தெரிகிறது.‌ ஏனடா தவனா நீயே சொல் இவன் எதையோ நம்மிடம் இருந்த மறைப்பது போல் தானே தோன்றுகிறது!” என்று
தாமனும் தன் பங்கிற்கு கேட்டிட..

“நீ சொல்வது சரிதான் தாமா! இவன் எதையோ நம்மிடமிருந்து மறைக்கிறான், அதனால் தான் நள்ளிரவு நேரத்தில் எங்கோ உலா சென்றுவிட்டு அதிகாலை சற்று தாமதமாக எழுந்து மந்தைக்கு வருகிறான். இவன் எதையோ நம்மிடமிருந்து நிச்சயம் மறைக்கிறான் பிடித்து விசாரிங்களடா இவனை?” என்று தவனனும் உரைத்திட.

“ஆமாம் ஆமாம்.. நிச்சயம் உன் பேச்சில் ஏதோ முரண்பாடு தெரிகிறது மிகிரா! உண்மையை ஒப்புக் கொண்டாயேயானால் மந்தையில் மற்றவர்களுக்கு முன்னால் உனக்கு உறுதுணையாக நாங்கள் இருப்போம். இல்லையெனில் நீ ஒருவனே எந்த பிரச்சினை வந்தாலும் பார்த்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும் எப்படி வசதி?” என்று சௌரன் கூறிட.

“என்னடா அவனிடம் போய் உண்மையைச் சொல்ல சொல்லி கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? அதான் நம்மினத்தோர் அனைவரும் பேசிக் கொள்கிறார்களே! இவனுக்கு வெளி உலகத்தில் ஏதோ பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு அப்பெண்ணை பார்ப்பதற்காகத் தான் அர்த்த சாமத்தில் சென்று விட்டு வருகிறேனென்று.‌ பிறகேன் அவனை விசாரித்துக் கொண்டிருக்கிறீர்கள்? எனக்கு என்னவோ அவர்கள் சொல்வதுபோல் அதுதான் உண்மையாக இருக்குமோ என்று தோன்றுகிறது. இதுதான் உண்மையா மிகிரா? ஏதேனும் பெண்ணை காணவா நீ நள்ளிரவில் சென்று விட்டு வருகிறாய்?” என்று சுரன் கூற மிகிரனுக்கு கடுகடுவென சினம் மிகுந்தது.

“என்னடா நீ ஒரு புது கதையைத் திரித்து கூறுகிறாய். ஒருவேளை இப்படியும் இருக்குமோ என்று எனக்கே நினைக்கத் தோன்றுகிறது.‌ நானறிந்தவரை மிகிரனுக்கு பெண்களின் மேல் ஈடுபாடு கிடையாது. அப்படியிருக்கும் போது நமக்குத் தெரியாமல் எப்படியடா ஒரு பெண்ணுடன் இவனுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கும்? எதற்கடா கல்லை விழுங்கி விட்டு செரிக்காமல் திணறுபவன் போல் இப்படி அமைதியாக இருக்கிறாய்! உண்மை என்னவென்று எங்களிடமாவது தெரிவித்துவிடடா நாங்கள் உன் நண்பர்கள் தானே?”என்று கனலோன் கேட்டிட.

அவர்கள் அனைவரும் முறைத்துப் பார்த்த மிகிரன்,
“இப்பொழுது அனைவரும் வாயை மூடிக்கொண்டு வருகிறீர்களா இல்லை ஆளுக்கு நான்கு அடி வாங்கிக் கொண்டு இங்கேயே உருளப் போகிறீர்களா? நானே அங்கு என்ன பிரச்சனை முளைத்திருக்கிறதென்று தெரியாமல் குழப்பத்துடன் செல்கிறேன், இதில் நீங்கள் வேறு எதையாவது உளறிக் கொட்டிக் கொண்டு இருக்கிறீர்கள். நான் அப்படி எந்த பெண்ணையும் பார்க்கப் போகவில்லை போதுமா! தேவையில்லாமல் எதுவும் பேசாமல் வருவதாயின் என்னுடன் வாருங்கள், இல்லையேல் இப்படியே தெரித்து ஓடி விடுங்கள், தேவையில்லாமல் எதையாவது கூறி என்னிடம் வாங்கிக் கட்டிக் கொள்ளாதீர்களடா” என்று சற்று கோபத்துடன் மொழிந்ததற்குப் பிறகே அவன் தோழமை கூட்டம் சத்தமில்லாமல் அவனைப் பின் தொடர ஆரம்பித்தார்கள். இவனோ இவர்களிடம் சிக்கி அல்லோலப்பட்டுக் கொண்டிருக்க, அங்கே மந்தையில் மூக்கு விடைக்க மீசையும் தாடியும் துடிதுடிக்க, கையில் கூரிய ஆயுதங்களுடன் உச்சகட்ட கோபத்தில் ருத்ரனாய் மாறி அமர்ந்திருந்தார் அவனது தந்தை விரோசனன்.

தங்கையின் வாழ்க்கைக்கொரு விடியலை எதிர்பார்த்து
இவன் காத்திருக்க..!
இவன் வாழ்க்கலயே ஒரு விடியலாய் வந்து சேர்கிறாள் பொண்ணொருத்தி..!


- அற்புதமது பிறக்கும்..



 
அற்புதம் -6

தன் நண்பர்கள் அனைவரையும் திட்டி தீர்த்தவாறு, சற்று குழப்பமான மனநிலையோடும், அதேநேரம் புதிதாக என்ன பிரச்சினை ஆரம்பித்திருக்கிறதென்று தெரியவில்லையே? ஒருவேளை இப்பிரச்சினையால் தன் தங்கைக்கு ஏதேனும் கெட்ட பெயர் வந்து விடுமோ? அவள் மனம் புண்படும் படியான நிகழ்வுகள் ஏதேனும் நிகழ்ந்துவிடுமோ? என்ற அச்சத்துடனே தான் மந்தைவெளிக்கு வந்து சேர்ந்தான் மிகிரன்..

அவனது முகம் கடுகடுவென்று இருப்பதைக் கண்டதால் அதன் பிறகு அவன் தோழர்கள் எதுவும் வாய் திறந்துப் பேசவில்லை. ஆனால் அவர்களுக்குள்ளேயே எதையோ விவாதித்தவாறு வந்தனர். அது மிகிரனுக்கும் தெரிந்தாலும் இப்போது தன் தங்கைக்கு எந்த அவப்பெயரும் வந்து விடாதவாறு ஏற்ப்பட்டிருக்கும் பிரச்சினையை தீர்க்கவேண்டும். கூடவே தன் தங்கையின் பிரச்சனையின்றி, வேறு ஏதேனும் பிரச்சனையாக இருந்தாலும் எக்காரணத்தைக் கொண்டும் தான் எதற்காக நள்ளிரவு நேரத்தில் வெளியுலகிற்கு சென்று விட்டு வருகிறோம் என்பதை யாருக்கும் சொல்லக்கூடாது என்று சிந்தித்து முடிவெடுத்தவாறு தான் மந்தையை அடைந்தான்..

மந்தை வெளியில் கூடியிருந்த அவன் இன மக்கள் அனைவரும் அவனைப் பார்த்து விட்டு தங்களுக்குள் ஏதோ பேசிக் கொள்ள, இன்னுமே மிகிரனுக்கு நெஞ்சில் கலக்கம் கூறியது. வரவழைத்த தைரியத்தோடு மந்தையின் மத்தியில் மரத்தினால் எழுப்பப்பட்டிருந்த மேடையில் கம்பீரமாக அமர்ந்திருந்த தன் தந்தையை நெருங்கியவன்,
“அழைத்தீர்களா தந்தையே? ஏதேனும் பிரச்சினையா என்ன? ஏன் அனைவரும் இங்கு ஒன்றாகக் கூடி இருக்கிறார்கள்?” என்று எதுவும் அறியாதவனாய் கேட்டிட.

அவன் தந்தையோ விருட்டென்று எழுந்து நின்றவர்,
“என்ன பிரச்சினையென்று உனக்கு தெரியாதா? அல்லது உனக்கு தெரியாமல் தான் ஏதேனும் பிரச்சனை இங்கு வரக் கூடுமா? என்னிடம் எதையும் அவ்வளவு எளிதில் மறைக்க இயலாது மிகிரா? ” என்று பாறைகளுக்கிடையில் கஷ்டப்பட்டு புகுந்து வெளிவருவதை போல் அத்தனை கடினமான குரலில் வெளிவந்தது அவர் உதிர்த்த வார்த்தைகள் யாவும்.

அதை சிறிதும் இலட்சியம் செய்யாத மிகிரன், அதை அலட்சியப்படுத்திவிட்டு,
“பிரச்சினை என்னவென்று தெரியாததால் தானே தங்களிடம் அதை பற்றி அறிந்து கொள்வதற்கான வினாவை எழுப்பிக்கொண்டு இருக்கிறேன்.‌ பிரச்சினை என்னவென்று தெரிந்திருந்தால் அதற்கான தீர்வையும் நானே கண்டறிந்திருப்பேனே தந்தையே! உங்கள் செவியிற்கு இதை வரவிட்டுருக்க மாட்டேனே!”என்று எப்போதும் போல் துடுக்குத்தனமாகச் சொன்னவன் கூரிய கம்பு ஒன்று தன் நெஞ்சில் ஆழப் புதைந்து நிற்பதை உணர்ந்து சடாரென்று விடைத்த நெஞ்சோடு உடலை முறுக்கிக் கொண்டு நிமிர்ந்து பார்த்தான்..

அவனின் தந்தை தான் தன் கையிலிருந்த கூரிய செங்கோல் என்று விளிக்கப்படும் பழுக்கக் காய்ந்த சலாகையை அவன் நெஞ்சுப் பகுதியில் வைத்து அழுத்தம் கொடுத்தவர்,“கூறடா நள்ளிரவு நேரத்தில் நீ வெளியில் சென்று வருவதற்கான காரணம் என்ன? நீ சென்றது நன்மைக்கே என்றாலும் இப்போது புதியதொரு பிரச்சினை உன்னால்தான் முளைத்திருக்கிறதென்று அனைவரும் நம்பும்படியான ஒரு சூழ்நிலை அமைந்து விட்டதே இதை எப்படி மாற்ற போகிறாய்? இப்பிரச்சினையை எப்படி நிவர்த்தி செய்யப் போகிறாய்?” என்றிட.

“என்ன தந்தையே இதெல்லாம்? பிரச்சனை என்னவென்று கூறாமல், பிரச்சனையை நிவர்த்தி செய்ய வேண்டுமென்று கேட்டால் என்னால் என்ன செய்திட இயலும். பிரச்சனை என்னவென்று தெளிவாக உரைத்திடுங்கள். பின் அதனை நிவர்த்தி செய்யும் முறைகள் என்ன என்பது பற்றி சிந்திக்கலாம்” என்று இன்னும் விடாப்பிடியாக எதுவும் அறியாத சிறு பாலகன் போல் பேசியவனைக் கண்டு சினம் மிகுந்தது அவன் தந்தைக்கு.

அவன் கரத்தை பிடித்து இழுத்துக்கொண்டு மரமேடைக்குப் பின்புறமிருந்த காலி இடப்பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கே பிரத்தியேகமான‌ முறையில் மரத்திலிருந்து பிரிக்கப்படும் நார்களிலிருந்து, கயிறு போல் பின்னப்படும் வலைப்பின்னல்களுக்குள் இருந்தவற்றை கைநீட்டி காண்பித்தவர்,
“அவை என்ன என்பதை தெளிவாக எங்களாலையே ஆராய முடியவில்லை? முடிந்தால் நீ ஆராய்ந்து இது எந்த மாதிரியான பிரச்சினை என்பதை கண்டறிந்து அதற்கான தீர்வுகளையும் கண்டறி. எனக்கு பின் இப்பொறுப்புகளை கையில் எடுக்கப் போவது நீ தான். அப்படி இருக்கையில் உன் திறமைக்கு இது ஒரு சோதனை. கூடவே இரவு வேளையில் எவருக்கும் தெரியாமல் உலா செல்வதற்கான தண்டனையுமாகவும் இதுவே இருக்கட்டும்” என்று தீர்க்கமாக உரைத்ததைக் கேட்டு ஒரு நிமிடம் சிந்தனையில் ஆழ்ந்த மிகிரன் நொடியில் அவருடைய சவாலை ஏற்றுக் கொண்டவனாய்,
“நிச்சயமாக இந்த ஜந்து எங்கிருந்து வந்திருக்கிறது? எதற்காக வந்திருக்கிறது? கூடவே குடுவையில் என்ன இருக்கிறது? இதெல்லாம் எங்கிருந்து வந்ததென்பதையும் கண்டறிந்து உங்களனைவருக்கும் தெரியப்படுத்தவில்லை எனில் நான் உங்கள் மைந்தன் மிகிரன் இல்லை என்பதை அனைவருக்கும் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சொல்லி விடுகிறேன்” என்று நிமிர்வுடன் கூறியவன் மற்றவர்கள் அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அந்த குடுவையும் விசித்திர ஜந்துவும் இருந்த இடத்தை நெருங்கினான்.

அவன் அவற்றை தொடுவதற்கு முன்பு தகவலறிந்த அந்தரி ஓடிச்சென்று மூலிகை வகைகள் சிலவற்றை பறித்துக் கசக்கி கொண்டு வந்தவள் அதை தன் தமயனின் கைகளில் தடவினாள்.கூடவே கை முட்டி வரை தடவி விட்டவள்,
“இப்பொழுது எந்த வித நஞ்சும் தங்களை தாக்காது தமயனே! தைரியமுடன் எதுவாக இருந்தாலும் கையாளுங்கள். எனக்கு தாங்கள் எத்தனையோ நல்லது செய்து இருக்கிறீர்கள்! அதற்கெல்லாம் பிரதி உபகாரமாக என்னால் இதை மட்டும் தான் செய்ய முடிந்தது மன்னித்துவிடுங்கள். ஒருவேளை தங்களுக்கு ஏதேனும் அவப்பெயர் வருவதுபோல் இருந்தால் நிச்சயம் என்னைப் பற்றிய அனைத்து உண்மைகளையும் அனைவரிடமும் எடுத்தியம்பி இருப்பேன். எப்படியாவது அதை அனைவருக்கும் புரிய வைத்து தங்களை இந்த இக்கட்டிலிருந்து காத்திருப்பேன்.. அதனால் தைரியமாக நீங்கள் செய்ய நினைத்ததை செய்யுங்கள்” என்று அவன் செவி அருகே குனிந்து மூலிகைச் சாற்றைத் தடவும் போது உரைத்தவள், அவனது புன்சிரிப்பைக் கண்டு முகம் மலர்ந்து தானும் புன்னகைத்தவள், அனைவருடனும் சென்று நின்று கொண்டாள்..

மிகிரனோ குனிந்து அவற்றை தன்னில் அடக்கிக் கொண்டிருந்த வலைப் பின்னல்களை மெதுவாக விடுவித்தவன், தன் விரல் கொண்டு அது எந்தவகை ஜந்து என்பதை ஆராய்ந்தான். அது நான்கு கால்களையும், முதுகெலும்புகளையும் கொண்ட ஜந்துவாக இருக்க, விழிகளிரண்டும் மூடிய நிலையில் மரணிக்கும் தருவாயில் இருந்தது. மேலும் வலைப்பின்னலில் இருந்து தப்பிக்க முயற்சி செய்திருக்கும் போல, அதன் மேற்புறமெங்கும் காயங்களும்‌, கீறல்களுமாய் ரத்தச் சுவடுகளோடு இருந்தன..

மீண்டும் ஒரு முறைக்கு இருமுறை அதைத் திருப்பித் திருப்பிப் பார்த்தும் அது எந்த வகை உயிரினம், எங்கு வாழக்கூடியது? எதற்கு இங்கே வந்தது என்பதை அவனால் கண்டறிய முடியவில்லை.‌ அதே நேரம் அவர்கள் இனத்தில் மிகப்பழமை வாய்ந்த மூத்த குடியானவர் ஒருவர் இன்னும் உயிர்த்திருக்க, அவரிடம் இவ்வுயிரினத்தைப் பற்றி விசாரித்தால் ஏதேனும் விளக்கங்களும், செய்திகளும் கிடைக்கக் கூடும் என்று சிந்தித்த மிகிரன் அவரை நாடிச் சென்றான்..‌

கிட்டத்தட்ட தனது 90வது அகவையை எட்டியிருந்தார் அந்த மூத்த குடிமகன்.‌ மூப்பின் காரணமாக தேகத்தளர்வுகள் இருந்தபோதும் சற்று எழுந்து நடமாடும் அளவிற்கு திடகாத்தரமாகத் தான் இருந்தார் அவர். தன் குடிலில் அமர்ந்து மூங்கில் மரங்களை வளைத்து கூடைப் புனைந்துக் கொண்டிருக்கும் தன் பெயர்த்திக்கு கூடை பின்னும் செயல்முறையை விளக்கிக் கொண்டிருந்தவர் குடிலின் வாசலில் நிழலாடுவதை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தார். அதற்குள் மந்தையில் இருந்து திரும்பி வந்துவிட்டார்களா? தன் மகளும், மருமகனும் என்ற நினைவில் நிமிர்ந்து பார்த்தவர் அங்கு நின்றிருந்த மிகிரனை சற்றும் எதிர்பார்க்கவில்லை..

அவரைக் கண்டதும் அவர் பாதம் பணிந்து ஆசி பெற்று, அவரை வெளியில் அழைத்து வந்தவன் அந்த உயிரினத்தைக் காட்டி அதைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று கூறிட. அவரோ தன்னிடமிருந்த மிகப் பழமையான செப்பேடுகளை அவன் கையில் ஒப்படைத்தார்..
‘இவையனைத்தும் தங்களது மூதாதையர்களிடமிருந்து கிடைத்ததாகவும், இதில் ஏதேனும் தகவல் குறிப்புகள் இருந்தாலும் இருக்கலாம்’ என்றவர் கூற. அவனும் அவ்வாறே அதை ஆராய்ந்தான்.

அவற்றை எவ்வளவு ஆராய்ந்தாலும் அதில் எந்த குறிப்புகளும் இல்லை என்றதும் தளர்வுடன் தன் இல்லம் வந்தவன் தன் தந்தையிடம்,
“இங்கிருந்தே என்னால் எதையும் கண்டறிய முடியாது தந்தையே. வெளியில் சென்றால் தான் கண்டறிய முடியும் என்ற சூழ்நிலை வந்துவிட்டது, நான் சென்று வர அனுமதி கொடுத்திட இயலுமா தந்தையே?” என்றிட.

“கண்டிப்பாக அனுமதியுண்டு மிகிரா. கவனமுடன் சென்று விட்டு வருவாயாக.!” என்று அனுமதி அளித்து அவனை அனுப்பி வைத்தார். பெரும்பாலும் பகல் வேளையில் யாரும் அங்கிருந்து வெளியே வருவதில்லை. ஆனால் இம்முறை வெளியே செல்ல வேண்டிய கட்டாயம் இருந்ததால் பகல் வேளையிலேயே பாதாள லோகத்திலிருந்து வெளியுலகிற்கு வந்தான் மிகிரன்..‌

பெரும்பாலும் அவர்கள் இருக்கும் பகுதிக்கு சூரியனின் ஒளிக் கற்றைகள் பாய்ந்து பூமியை துளைத்து ஊடுருவிச் செல்வது என்பது அவ்வளவு எளிதல்ல. ஆகையால் பெரும்பாலும் அவர்கள் மங்கிய செந்நிறத்திலோ, அடர் கருமை நிறத்திலோ அல்லது வெளிர் பழுப்பு நிறத்திலேயோ தான் இருப்பார்கள். தற்போது பகல் வேளையில் அதுவும் மனிதர்கள் நடமாடும், வாழும் இப்பகுதியில் மிகிரன் செல்கையில் அவனை அவர்கள் காண வாய்ப்புகள் இருக்கிறது. ‘அவ்வாறு அவர்கள் தன் தோற்றத்தைக் காண நேரிட்டால் அச்சம் கொண்டு தன்னை தாக்கவோ? அல்லது இன்ன பிற தேவையற்ற குழப்பங்களோ வந்தால் என்ன செய்வது?’என்று எண்ணி சில பல மூலிகைகளைக் கண்டறிந்து பறித்து, கசக்கி சாறெடுத்து தன் தேகத்திலும், வதனத்திலும் தடவி கொண்டவன்‌, மானுடர்களைப் போல் தன் தேகம், சற்று மாநிறமாக மாறியதை நீரின் பிம்பத்தில் கண்டறிந்து விட்டு அதன் பிறகே வெளியே வந்தான்..

ஒரு கரத்தில், பின்னப்பட்ட வலையில் அந்த உயிரினத்தை போட்டுக்கொண்டு, இன்னொரு கரத்தில் அந்தக் குடுவையை பிடித்துக்கொண்டு நடந்தான். அந்த குடுவைக்குள் இருந்து ஏதோ ஓசை கேட்டுக் கொண்டே இருந்தது. ஆனால் மிகிரன் அதை லட்சியம் செய்யவில்லை. சரியாக அந்த வனப்பகுதியில் அவன் நடந்து சென்று கொண்டிருந்த போது, அவன் பாதத்தில் ஏதோ ஊர்வது போல் இருக்க சட்டென்று குடுவையைக் கீழே வைத்துவிட்டு காலைத்தடவிப் பார்த்துக் கொண்டிருந்தான். அவ்வனப்பகுதிகளில் சிறிய விலங்கினங்கள் முதற்கொண்டு பெரிய விலங்கினங்கள் வரை பாரபட்சமின்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அது என்னென்ன விலங்கினங்கள், எத்தகைய சாராம்சம் கொண்டவை என்பது பற்றி இன்று வரை எவராலும் துல்லியமாகக் கண்டறிய முடியவில்லை. இவை உயிரினங்கள் தானா? என்று கண்டறிய முடியாத அளவிற்கு கூட சில பல அரிய வகை உயிரினங்களும் இந்த மாதிரியான வனங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. வனம் என்பது ஒரு உயிரினம் உயிர் வாழ்வதற்கான அனைத்து சாராம்சத்தையும் கொண்டதாக இருக்கும்.

சிறு குரங்கு ஒன்று அவன் அசந்த நேரம் பார்த்து அவன் கீழே வைத்திருந்த குடுவையை லாவகமாக கைப்பற்றிக் கொண்டு ஒரே ஓட்டமாக ஓடி விட்டது. அதை அறிந்தவன் அதை துரத்திக் கொண்டு ஓட முற்பட்ட வேளையில், பெரிது பெரிதாக வளர்ந்திருந்த மரங்களின் வேர்த்தண்டுகள் தடுக்கி கீழே விழுந்து விட்டான். அதில் அவன் வசம் இருந்த அந்த உயிரினத்தை அடைத்து வைத்திருந்த வலை சட்டென்று சிறிது தூரம் சென்று விழுந்தது. கீழே விழுந்த மிகிரன் எழ முயற்சித்தான். ஆனால் அவனது கால்கள் இரண்டும் செழிப்பாக வளர்ந்து இருந்த ஒருவகைக் காட்டு கொடியால் கட்டுண்டு நகர முடியாதவாறு மாட்டிக்கொள்ள, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி கையறு நிலையில் கிடந்தான்.

ஆனால் அவ்வுயிரினமோ?காயம்பட்டு இருந்தாலும் திறந்திறந்த வலையின் வாயில் வழியாக மெல்ல மெல்ல தண்ணீரை நோக்கி நகர்ந்தது. தன்னுடல் நகர்வதற்கு ஒத்துழைக்கவில்லை என்ற போதும் அந்த வனத்தில் இருந்து மெதுவாக வெளி வந்து கடலை நோக்கி நகர்ந்தது. அதைப் பார்த்தும் தன்னால் எதுவும் செய்ய முடியாதவாறு கால்களில் மாட்டியிருந்த கொடிகளை காலில் இருந்து அகற்றும் பணியில் இருந்தான் மிகிரன்.‌ சிறியதொரு மரக்கிளையொன்று அவன் கையில் அகப்பட அதை கொண்டு வேர்களை அறுத்திட முயன்றான். அதைக்கொண்டு தடுத்த, பெருத்த வேர்த்தண்டுகளை அறுக்க முடியாததால், அதை தூர எறிந்து விட்டு கரத்திற்கு அகப்பட்ட கற்களை ஒன்றுடன் ஒன்று உரசி தன்னெதிரே இருக்கும் மரத்தின் மேல் விளிம்பில் வைத்து தேய்த்து கூர்மையாக்கியவன், மீண்டும் ஒரு முறை அதே போல் முயற்சி செய்து இன்னும் கூர் தீட்டியவன் வேர்களை பரபரவென்று அறுத்து விட்டு தட்டுத்தடுமாறி எழுந்தவன் ஒரே ஓட்டமாக ஓடி அந்த உயிரினத்தைப் பற்றிட முனைவதற்குள் நீருக்குள் மூழ்கி கடலுக்குள் சென்றிருந்தது அது..

நீர், நிலம் என இரண்டிலும் வாழக்கூடிய இத்தகைய விலங்குகள் ஈரூடகவாழிகளென அழைக்கப்படுகின்றன.
இவை குளிர் குருதி வகையைச் சேர்ந்த முதுகெலும்புடைய நான்கு கால்கள் அமைந்த இருவாழி வகுப்பைச் சார்ந்த விலங்குகளாகும். தற்பொழுது வாழும் இருவாழ்விகள் அனைத்தும் இலிசாம்பிபியா எனும் உள்வகுப்பைச் சார்ந்தவை. இவற்றின் வாழிடங்கள் தரைச் சூழல், புதர்ச் சூழல், மரச் சூழல், நன்னீர்ச் சூழல் ஆகிய சூழல் அமைப்புகளில் அமைகின்றன. இருவாழ்விகள் தம் வாழ்க்கைச் சுழற்சியை நீரில் வாழும் இளவுயிரிகளாகத் தொடங்கினாலும், சில இருவாழ்விகள் இவற்றைத் தவிர்க்கும் தகவமைப்பைப் பெற்றுள்ளன.

செவுள்களால் மூச்சுயிர்க்கும் இந்த இளம் உயிரிகள், மெல்ல மெல்ல நுரையீரலால் மூச்சுவிடும் வளருயிரி வடிவத்துக்கு உருமாற்றம் அடைகின்றன. இவை துணை மூச்சுயிர்க்கும் பரப்பாகத் தன் தோலையே பயன்படுத்துகின்றன. சில தரைவாழ் சலமாண்டர்களும் தவளைகளும் நுரையிரல் இல்லாமலே தம் தோலால் மட்டுமே மூச்சுயிர்க்கின்றன. இவை புறவடிவில் பல்லிகளைப் போலவுள்ளன என்றாலும், இவை பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன போல முட்டையிடும் விலங்குகள். ஆகையால் இனப்பெருக்கத்துக்காக நீரூடகம் ஏதும் இவ்வகை உயிரினங்களுக்கு தேவையில்லை. சமீபகாலமாக உலகெங்கும் இருவாழி இனங்களின் தொகை அருகிவருகிறது.
மிகப் பழைய வாய்ந்த தொடக்கநிலை இருவாழிகள் (நில, நீர் வாழ் உயிரினங்கள்) நுரையீரலும் என்புமுள்ளாலான துடுப்பும் அமையப்பெற்ற இதழ்த்துடுப்பு மீன்களில் இருந்து தோன்றிப் படிமலர்ந்தனவென கண்டறியப்பட்டுள்ளது.

இவை தான் நில வாழ்க்கைக்கு ஏற்ற தகவமைப்புக்கு உதவின. இருவாழிகள் கரியூழிக் காலத்திலும் பெர்மியக் காலத்திலும் பல்கிப் பெருகி உலகெங்கும் ஓங்கலான வீச்சுடன் வாழ்ந்தனவாம். ஆனால் பின்னர் இவை ஊர்வனவற்றாலும் முதுகெலும்பிகளாலும் பதிலீடு செய்யப்பட்டனவெனவும் கூறப்படுகிறது. கால அடைவில், இருவாழிகள் அளவில் சுருங்கி, பன்முக வளர்ச்சியையும் இழந்தன. இப்போது இலிசாம்பிபியா உள்வகுப்பு சார்ந்த இருவாழிகள் மட்டுமே இறுதியாக தப்பிப் பிழைத்துள்ளன.

மிக நீண்டகாலம் வாழும் இருவாழ்வி, ஆந்திரியாசு தேவிதியானசு எனும் சீனப் பெருஞ்சலமாண்டர் தான். இதன் நீளம் 1.8 மீ ஆகும். இதுவும் கூட 9 மீ நீளமுள்ள அழிந்துவிட்ட பிரியோனோசச்சசு எனும் இருவாழியின் குறுவடிவமே.

இருவாழிகளின் உடலானது, தலை, உடம்பு எனும் இரு பகுதிகளாக உள்ளது. இவை வழுவழுப்பான ஈரமான தோலையும், மூன்று அறைகளைக் (இரு மேலறைகளும் ஒரு கீழறை யும்) கொண்ட இதயத்தையும் பெற்றுள்ளன..

தன் கையிருப்பில் இருந்த குடுவையும் காணாமல் சென்று விட்டது, அதேபோல் அந்த உயிரினமும் நழுவிச் சென்று விட்டதே என்று திகைத்துப் போய் நின்றிருந்த மிகிரனுக்கு அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. குழப்பத்துடன் அதே இடத்தில அவன் கற்சிலையென நின்றிருக்க. அவனிடம் இருந்து தப்பிச்சென்ற உயிரினமோ தன் இருப்பிடம் சென்று சேர்ந்ததோடு தான் சேகரித்த தகவல்களையும் உரியவரிடம் சேர்ப்பித்தது..

அதேபோல் மிகிரனிடமிருந்து குடுவையை பிடுங்கிச் சென்ற சிறு குரங்கானது ஒரு மரத்தின் அருகில் அமர்ந்து குடுவையை மரத்தின் மீது மோதச்செய்ததில் அக்குடுவை உடைத்து அதிலிருந்து அசரீரியாக வார்த்தைகள் ஒலித்தன. சுயவடிவமான சரீரத்தைக் காட்டாமல் வெறும் ஒலி வடிவில் வார்த்தைகள் மட்டும் ஒலிப்பது அசரீரியாகும்.

“உரிய இடத்தை விட்டு விட்டு வேறெங்கோ உயிர் வாழும் உன்னத கோமனே! உனக்காக ஓர் உலகே காத்திருக்க..!
ஓர் இனமே தவித்திருக்க..!
ஓர் குலமே அழிந்திருக்க..!
விரைந்து வாராய்! உன்னுலகை, உறவை, குலத்தைக் காத்திட!” என்று வெளி வந்த வார்த்தைகள் யாவும் எதுவும் புரியாத குரங்கின ஜீவனிடம் எவ்வித மாற்றத்தையும் தோன்றுவிக்கவில்லை. மாறாக இவை சேர வேண்டிய இடத்தில் சேராமலேயே பயனற்று போனது..!

மரணமதை வென்ற ஓர்
ஜீவனது ஜீவித்திருக்கும்
இனமும் இடமும்..!
உலகும் வேறென்று
அறிந்திடுகையில்
உளமார அவ்வுண்மையை
ஏற்றிடுமா? அன்று
புதுவுலகின் உறவை
வெறுத்து வளர்த்தோரின்
நிழலில் தங்கிடுமா?

- அற்புதமது பிறக்கும்..



 
Last edited by a moderator:
அற்புதம் -7

கரத்தில் இருந்தவற்றை நழுவ விட்டு விட்டு இப்போது எந்த முகமதை வைத்துக் கொண்டு தன் இல்லம் திரும்புவது என்ற தவிப்புடனும், அடுத்து என்ன செய்வது என்று தெரியாத ஒரு குழப்பமான நிலையிலும் நின்றிருந்தான் மிகிரன். அடுத்து என்ன செய்வது என்று சிறிது கூட அவனால் சிந்திக்க முடியவில்லை.‌ வெறுங்கையோடு தன் இருப்பிடத்திக்கு செல்லவும் முடியாது. ஏற்கனவே தன் மீதிருக்கும் தவறின் அளவும், நம்பிக்யின்மையும் இன்னும் வேறு அதிகமாக கூடிவிடும் என்பதால் தவிப்போடும்,குழப்பத்தோடும் நின்றிருந்தவனின் பாதத்தை வந்து தழுவியது நஞ்சினைக் கொண்ட சர்ப்பமொன்று. சர்ப்பத்தைக் கண்டு அஞ்சி நடுங்காமல், எட்டி தள்ளி நிற்காமல் லாவகமாக அதைத் தன் கையில் பிடித்து ஒரு மரத்தின் மீது படர விட்டவன் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கடலை நோக்கி நடந்தான்..
கடலலையில் தன் பாதங்களை பதித்த மறுகணம் அவனது விழிகள் முதற்கொண்டு தேகம் வரை அனைத்தும் திடீரென்று நீல நிறத்தை ஏந்திக்கொள்ள, யாரோ இருவர் அவனது தலையின் மீது ஒரு வகை தலைப்பாகையை அணிவித்திட. அத்தலைப்பாகையிலிருந்து ஒரு வகைவாயு வெளியேறிய மறுகணம் விழிகளிரண்டும் திறந்திருந்த நிலையிலேயே சுயநினைவற்றவனாய் ஆழமான கடல் பகுதிக்குள் ஆயாசமாக நடந்து சென்றான் மிகிரன்.



ஆழ்கடல் ராஜ்ஜியம்..
இளவலின் அந்தரங்க அறை.
பெரிய அளவிலான முத்துச் சிப்பிக்குள் படுக்கை ஒன்று விரிக்கப்பட்டிருக்க, அதில் ஆயாசமாக உறங்கிக் கொண்டிருந்தான் அதிசாந்திரன்.. இல்லை இல்லை உறங்குவது போல் அனைவருக்கும் போக்குக் காட்டிக் கொண்டு மனதிற்குள் எதையோ நினைத்து மறுகிக் கொண்டிருந்தான்‌. விழிகளிரண்டும் கண்ணீரில் நனையவில்லை தான். ஆனால் உள்ளமோ, அதற்கு சொந்தக்காரியானவளை நினைத்து அளவில்லா துயரத்தில் மூழ்கியிருந்தது. நித்தம் ஒரு பிரச்சனை! நித்தம் ஒரு கவலை! நித்தம் ஒரு துரோகம்! என முடிவில்லாத இடர்களில் மூழ்கியிருந்த அவனுக்கு, எப்போதும் ஒரே ஆறுதல் அவனது உள்ளமதைக் கவர்ந்து சென்ற மங்கையவள் மட்டுமே..

இளங்காளையென செழித்து வளர்ந்திருந்த நீல நிறத்திலான உடற்கட்டும், ஒப்பனைகளற்ற எளிய தோற்றமும் அவனைக் காண்போரை ரசித்திட வைக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் காண்போரையெல்லாம் கவர்ந்திழுக்கும் தோற்றம் கொண்ட போதும் இவனது உள்ளமோ ஒருவளை மட்டுமே நித்தமும் நேசித்து சுவாசமாய் மாற்றி தன்னுள் பூட்டி வைத்திருக்கிறது. என்றோ ஒரு நாள் தன் உயிரினுள் பாதியைக் கடனாகப் பெற்ற கடன்காரியவள், கடனைத் திருப்பி தருவதற்கு பதில் காதலை கொடுத்து விட்டு சென்று விட்டாள். அவளால் தோன்றிய அக்காதலால் தினம் தினம் ஒரு பிரச்சனைகளில் சிக்கி சிதைந்து துவண்டு போகிறான் இவன்...

விழிமூடி தீராத கவலையில் ஆழ்ந்திருந்தவனின் சிகையை மென் கரம் ஒன்று ஆறுதலாய் வருட.. இதுவரை அடக்கி வைத்திருந்த சோகமெல்லாம் அவனுள் இருந்து தலை தூக்க ஆரம்பித்தது. அக்கரங்களுக்கு சொந்தமாவனரை அடையாளம் கண்டு கொண்டவனது விழிகளானது துயரத்தை தாங்க இயலாமல் கரகரவென்று கண்ணீரைச் செறிந்திட, தன்னையுமறியாமல் வாய்விட்டே கதறியழுதவன், சிறிது நேரத்தில் சடக்கென்று எழுந்தமர்ந்து தன் அருகில் அமர்ந்து தன்னை ஆறுதலாய் பார்த்துக் கொண்டிருப்பவளைக் கண்டு தாங்க முடியாதவனாய் மீண்டும் அவள் மடி சாய்ந்து கதறிவிட்டான். அவளது கரங்களோ நிறுத்தாமல் ஆடவனவனின் சிகை கோதிட, தன் துக்கங்கள் தீரும் வரை அழுது தீர்த்தான் அவன்.‌ அவனது கண்ணீனானது கன்னத்தைத் தாண்டியதும் வைரமாய் மாறி கீழே விழ, அதன் பளபளப்பே, அதன் மதிப்பைச் சொன்னது..

சிறிது நேரத்தில் தன்னைத் தேற்றிக் கொண்டவன் தன் மனதில் உள்ளவற்றை எல்லாம் சொல்லி விடும் எண்ணத்தில் அவள் முகத்தை பார்த்து எழுந்தமர்ந்தவாறு,“நான் என் மனமதில் வாசம் செய்பவளுக்கு ஒரு போதும் துரோகமிழைத்திட எண்ணமாட்டேன்.‌ என் உடலில் உயிர் நிலைத்து நிற்கும் வரை அவள் மட்டுமே என் உள்ளத்திற்கும் சரி, தேகத்திக்கும் சரி உரிமையாக இருப்பாள்! அவள் வேண்டுமென்றால் என்னை வேண்டாமென்று தூக்கி எறிந்திருக்கலாம். ஆனால் நான் அவளை நேசித்தது உண்மை! அவ்வாறிருக்க நான் எப்படி அவளைக் காயப்படுத்துவேன். நேசம் என்பது எத்தகைய உயிர்களின் மீதும் வரக் கூடிய ஒன்றுதானே அப்படி இருக்கும் போது என் நேசத்தினை மட்டும் ஏன் எவரும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்? ஒரு கணமேனும் அவள் வதனத்தை அருகில் பார்த்து நிம்மதியடைந்து, ஓரிரு வார்த்தைகள் பேசி விட்டேனென்றால் அக்கணமே எந்தன் உயிர் பிரிந்து சென்றாலும் எனக்கு மகிழ்ச்சியே!” என்று அவன் தன் மனக் குமுறல்களை இறக்கி வைக்க.

அவன் உதிர்த்த வார்த்தைகளைக் கேட்டு எதிரில் இருந்தவள் துடித்துப் போய் விட்டாள். “என்ன வார்த்தை கூறிவிட்டீர்கள் தமயனே? தங்களுக்காக எதையும் செய்ய இப்படியொரு தங்கை இருக்கும் போது, தாங்கள் ஏன் இவ்வாறு கலக்கமாய் வார்த்தைகளை உகுக்குகின்றீர்கள்?” என்றவள் சொல்லி முடிக்கும் முன்பே அவளது பின்னந் தலையில் ஏதோ அழுத்தமாகப் பதிய நொடியில் மயங்கி சரிந்தாள் அதிசாந்திரனின் ஆரூயிர் தங்கை முளரிப்பாவை..
அவளைக் கண்டு அவனும் கதறியவாறு, ஏதோ பேச முற்பட அதே நேரம் அவனது உடலையும் ஏதோ கூரிய ஆயுதம் ஒன்று துளைத்திட, அடுத்த கணம் அவன் உடலிலிருந்து பச்சை நிற திரவம் வெளியேறத் துவங்கியது..

தன் மகனின் உடலில் இருந்து வெளியேறும் அவனது திவ்ய சக்திகள் அனைத்தையும் விழி கொண்டு பார்த்தவாறு, அவன் தந்தை சற்றும் கலங்காது கல்நெஞ்சோடு நின்றிருந்தார். எவ்வளவு நேரம் அதே நிலையிலேயே நின்றிருந்தாரோ மெல்லிய விசும்பல் ஒலி கேட்டு தன்னிலைப் பெற்றவர் எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்தார்.‌

சிறிது தூரம் கூட நகர்ந்து சென்றிருக்க மாட்டார் விசும்பல் ஒலி சற்று அதிகமாக கேட்கவும் தன் பின்னால் திரும்பியவர் அழுது கொண்டிருக்கும் தன் மனையாள் சந்திரமதியிடம்,
“உன் மைந்தனையும், மகளையும் உயிர்ப்புடன் மீட்க வேண்டும், அவர்களை இந்த இக்கட்டிலிருந்து காத்திட வேண்டுமென்று எண்ணினால் அதற்கு நீ ஒன்றை செய்ய வேண்டும்”

“என்ன செய்ய வேண்டுமென்பதைக் கூறுங்கள்?”

“பெரிதாக ஒன்றுமில்லை. அவர்கள் நினைவுகளிலிருந்து கடந்து சென்ற இறந்தகால நிகழ்வுகளை மறக்கச் செய்ய வேண்டும். அதற்கு உண்டான மூலிகைகளை அவர்களுக்கு கொடுத்து விட்டு, அதன் பிறகு அவர்கள் உயிர் மீட்பதற்கான மாற்று மருந்தை என்னிடம் வந்து கேள், கொடுத்தனுப்புகிறேன்” என்று கூறி விட்டு அவர் அங்கிருந்து நகர்ந்து சென்றிட.

அழுது வடிந்த வதனமது அத்தனை சோகத்தை பிரதிபலிக்க. ஓடிச்சென்று தன் மக்களை அள்ளி அணைத்துக் கொண்டார் சந்திரமதி. அதிசாந்திரனின் உடலிலிருந்து குபுக் குபுக் என்று கொந்தளித்து வெளிவரும் திரவத்தை நிறுத்தும் வழியறியாது அவர் விழிபிதுங்கி, செய்வதறியாது கைகளைப் பிசைந்துக் கொண்டிருக்கும் போது அவரிருக்கும் திசைக்கு இடப்புறம் ஏதோ ஒருவகையான சப்தமிட்டு யாரோ அவரை அழைப்பது போலிருந்தது.

அதைக் கேட்டுணர்ந்தவர், தன் மக்களிருவரையும் வேகமாக சிப்பியின் மீதிருந்த பாசிகளின் படுக்கையில் படுக்க வைத்துவிட்டு வேகமாக சத்தம் வந்த திசையை‌ நோக்கி நகர்ந்திட. அங்கே அதிசாந்திரனின் ஒரே ஒரு நண்பனும், அவனது ஆஸ்தான விசுவாசியுமான ஆலோன் மறைவாக நின்று இருந்தான்.

அவனைக் கண்டு சற்றே குழம்பிய சந்திரமதி,“நீ இவ்விடத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறாய்? இளவரசனின் அறைக்கே வரும் அளவிற்கு துணிவு வந்துவிட்டதா? நண்பனென்றால் வெளியில் நின்றே எதுவாக இருந்தாலும் எடுத்துரைத்து விட்டுச் செல்லவேண்டும் என்பது உனக்குத் தெரியாதா? அனைத்துக் காவல்களையும் மீறி நீ இங்கே எவ்வாறு வந்தாய்?” என்று சூழ்நிலை என்னவென்றறியாமல் கூறிட.

அவனும், ‘நிலைமை தெரியாமல் இவர்கள் வேறு இவ்வாறு தேவையற்றவற்றை உரையாடிக் கொண்டு இருக்கிறார்களே?’ என்று தனக்குள் புலம்பியவனாய்,
“தாங்கள் கூறியவை எனக்கும் புரிகின்றது மகாராணி அவர்களே! நான் இவ்விடம் வந்தது தவறுதான் இல்லையென்று கூறவில்லை. ஆனால் இங்கு இவ்வேளையில் வர வேண்டிய சூழ்நிலை அமைந்து விட்டது. ஏற்கனவே இளவரசரவர் என்னிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத்திருந்தார். அதை நான் முடித்து விட்டேன் அதைக் கூறி விட்டுச் செல்லலாமென்று வந்தேன். எப்பொழுதும் இந்த வழியாகத்தான் வந்து அவரை சந்தித்து, அவர் கட்டளையிட்டு கூறும் சில பணிகளைச் செய்து தருவேன்.‌ இப்பொழுதும் அதே போல் தான்,‌ அவரிட்ட பணியைச் செய்துவிட்டு அதை கூறலாமென வந்த போதுதான் அரசர், இளவரசர் செய்யாத தவறுக்காக தண்டனை அளித்து விட்டு செல்வதைக் கண்டேன். அதனால் தான் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாற்றத்துடன் இங்கேயே நின்றுவிட்டேன்.”

“என்ன கூறுகிறாய் நீ? கிட்டத்தட்ட பல வருடங்களாக என் மைந்தன் இவ்வறையை விட்டு செல்லாமல் இருக்கின்றான். அவ்வாறு இருக்கையில் அவன் என்ன தவறு செய்ததற்காக, என்னவர் தண்டனை விதித்தாரென்று கூறுகிறாய்? எதையும் தெளிவாகக் கூற மாட்டாயா? முன்னுக்கு முரணாக கூறிவிட்டு நீ சென்று விடுவாய்! ஆனால் அதற்குப் பின் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பி தவிப்பது நான்தானே. ஒழுக்கமாக உண்மையைச் சொல், என் மகன் உன்னிடம் என்ன பணியை ஒப்படைத்தான்? ஏதேனும் தகவலை அறிந்து விட்டு வரச் சொன்னானா? ஆமாம் நீ என்ன செய்தியை கொண்டு வந்திருக்கிறாய்? அதையேனும் கூறித்தொலையேன்.”

“இல்லை அரசியாரே இதை நான் கூறினால் தாங்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பீர்களென்று எனக்கு தெரியவில்லை?”

“நான் எதுவும் நினைக்க மாட்டேன் முதலில் நீ அந்தத் தகவலை தெளிவாக கூறு, பிறகு அது எந்த மாதிரியான தகவல்! அதற்கு நான் எந்த மாதிரியான பதில் மொழியைக் கூற வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்கிறேன்” என்றுரைத்திட.

ஆலோன் கைகூப்பி சந்திரமதியை வணங்கி நின்றவன் தன் இடுப்புக் கட்சையில் இருந்த ஒரு சிறிய அளவிலான குடுவையை எடுத்து அவர் கையில் கொடுத்தவன்,
“என்ன தகவல் என்பதை நான் பின்பு உரைக்கிறேன் முதலில் இளவரசர் மற்றும் இளவரசி இருவருக்கும் இதை கொடுத்திடுங்கள்.‌ இப்படியொரு சூழ்நிலை வருமென இளவரசரவர் ஏற்கனவே என்னிடம் உரைத்தது மட்டுமின்றி இம்மருந்தையும் என்னிடம் கொடுத்து வைத்திருந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலை வரும்போது இதை தனக்கு கொடுத்து தன் கடந்தகால நினைவுகள் யாவும் அழியாமல் பாதுகாக்க வேண்டுமென்றும் கூறியிருந்தார். ஆதலால் முதலில் இதை அவர்களுக்கு புகட்டுங்கள். அரசரின் கொடும் நஞ்சு கொண்ட செங்கோல் இளவரசரின் மீது ஒருவகை திரவத்தை உட்செலுத்தியுள்ளது. அதன் விளைவாக அவரது நினைவுகள் யாவும் சிறிது சிறிதாக இழக்கத் தொடங்கியுள்ளன” என்றுரைத்திட..

தன் மகனின் புத்திக்கூர்மையை நினைத்து மெச்சிக் கொண்ட சந்திரமதி, அதை வாங்கிக்கொண்டவர் வேகமாக படுக்கையை நெருங்கியவர் முதலில் தன் மகனை மடியில் ஏந்தி மெதுவாக அவன் தலையை தன் தோளில் சாய்த்துப் பிடித்துக் கொண்டு அவன் இதழ் வழியாக குடுவையில் இருந்த திரவத்தை அவன் உடலுக்குள் செலுத்தினார்.‌ பின்பு அவனை படுக்கையில் கிடத்தி விட்டு,‌ சிறிது மருந்தை தன் மகளுக்கும் புகட்டியவர் இருவரையும் மீண்டும் படுக்க வைத்து விட்டு ஆலோனை ஏறிட்டுப் பார்த்து,
“இப்போதாவது உண்மையைக் கூறு. அப்படி என் மகன் உன்னிடம் எந்த பொறுப்பை ஒப்படைத்திருந்தான்?”

‌ சிறிது நேர மௌனத்திற்கு பிறகு நன்றாக நிமிர்ந்து நின்ற ஆலோன், “இதை நான் கூறியதற்கு இளவரசர் என் மீது கோபம் கொண்டாலும் பரவாயில்லை. ஆனால் நான் தங்களிடம் இதைக் கூறியே ஆக வேண்டும். ஏனெனில் அரசரின் சினமானது நாளுக்கு நாள் அதிகரிப்பதோடு, இளவரசரின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும் கட்டாயம் அரசர் தடையாக வருவார்.‌ ஆதலால் தாங்கள் தான் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்..

தங்களுக்கே தெரியும் எனக்கும் இளவரசருக்கும் கிட்டத்தட்ட ஒரே அகவை தானென்று. சிறுவயதில் அவர் சிறுபிள்ளைத்தனமாக மேற்பகுதிக்கு சென்றாரென்று ஒரு மாத காலம் அவரை அவரது அறையிலேயே சிறை வைத்திருந்தார் அரசர்.‌அதை தாங்களுமே அறிவீர்கள்! அதன்பிறகு இளவரசரிடம் ஏற்பட்ட மௌனம், அவரது செய்கைகளில் ஏற்பட்ட சிறு சிறு மாற்றங்களென அனைத்தும் நீங்கள் அறிந்திருந்தீர்களோ இல்லையோ? நான் அறிந்திருந்தேன். ஏன் இந்த மாற்றமென நான் அவரிடம் வினவிய போது அதைப்பற்றி அவர் இதழ் திறவாதிருந்தார்.

ஒரு கட்டத்திற்கு மேல் அவரது மௌனம் அவரை ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கும், இன்னல்களுக்கும் உள்ளாக்கியது. சிறு பாலகர்களுக்கு உண்டான மகிழ்வும், குறும்பும்,விளையாட்டு குணமுமின்றி எப்போதும் எதையோ சிந்தித்தவாறே அமர்ந்திருக்கும் அவரது நிலை கண்டு சற்றே பயம் கொண்ட எனது தாயார் என்னை இளவரசரிடம் உரையாடச் சொன்னார். நான் அவரிடம் இதைப்பற்றி இலை மறைக்காயாக வினவிய போதும் அவர் எதையும் கூற மறுத்துவிட்டார்.‌ பின்பு மெல்ல மெல்ல அவரிடம் நட்பு பாராட்டி உற்ற நண்பனாய் மாறியதற்குப் பிறகு அவரிடம் நான் இதுபற்றி நேரடியாகவே வினா எழுப்பும் போது எங்கள் இருவருக்கும் இருபதாம் அகவையே எட்டியிருந்தது..

தங்களிடமும் சரி, மற்றவர்களிடமும் சரி தேவைக்கு அதிகமாக அவர் எந்த வார்த்தைகளையும் உதிர்த்தது கிடையாது, அதை நானே பலமுறைக் கண்கூடாக கண்டிருக்கிறேன். இதற்கு காரணம் என்னவென விசாரித்ததில் ஒரு பெண்ணின் மீது தோன்றிய காதலின் காரணமாகத் தான் இளவரசருள் இத்தகைய மாறுதல்கள் வந்துருக்கிறது என்பதை அறிந்து கொண்டேன்” என்று கூறி சிறிது இடைவெளி விட.

அதைக் கேட்டு அதிர்ந்திருந்த சந்திரமதி, “என்ன கூறிக் கொண்டிருக்கிறாய் ஆலோன்? நீ சொல்வதெல்லாம் உண்மையா?” என்று கலக்கத்துடன் கேட்டிட.

“நான் கூறுவதெல்லாம் உண்மையா அல்லது உண்மைக்கு புறம்பானதா என்பதை இளவலிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அது மட்டுமின்றி கிட்டதட்ட கொஞ்ச நாட்களுக்கு முன்பு எவருக்கும் தெரியாமல் இளவரசர் என்னை நீீரின் மேற்பகுதிக்கு அனுப்பி வைத்தார். அங்கு எவரேனும் ஒரு பெண் தனித்திருக்கிறாரா? எவரையாவது எதிர்பார்த்துக் காத்திருக்கிறாளா? என்று பார்த்து விட்டு வரச் சொன்னார்.

அனைத்து தடைகளையும் மீறி, பாதுகாப்புகளையும் தாண்டி நானும் அங்கு சென்று பார்த்துவிட்டு வந்தேன். அவர் சொன்னது போலவே ஒரு பெண் காத்திருந்தார்,‌அதுவும் கடல் அலைகளை பார்த்தவாறே எவரையோ எதிர் நோக்கி காத்திருந்தார். அதை கண்டு ஒருவேளை இளவரசர் நேசித்த மங்கை அவராக இருக்கக் கூடுமோ? என்ற ஐயம் எனக்கு ஏற்பட மிக விரைவாக இதை இளவலிடம் கூற வந்த போதுதான் காவலாளிகளிடம் மாட்டிக் கொண்டு இரு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தேன்..‌

அதன்பிறகு இளவசரிடம் அத்தகவலை நான் தெரிவித்திட , அவரும் மிக கவனமாக தன் உடைகளை மாற்றிக்கொண்டு சாதாரணமானவரைப் போல் இங்கிருந்து நள்ளிரவில் கிளம்பி நீரின் மேற்பரப்பிற்கு சென்றார். ஆனால் அவர் அங்கு சென்ற போது முதலில் எந்த பெண்ணும் இல்லையாம் ஆனால் பின்னர்?” என்று கூறி நிறுத்த.

சந்திரமதிக்கோ,‘ஏற்கனவே இவன் கொடுத்த அதிர்ச்சி போதாதென்று இன்னும் என்ன அதிர்ச்சி கொடுக்கக் காத்திருக்கிறானோ?’ என்று நினைத்தவாறு,‌“ஆனால் என்ன?” என்று சற்று பதற்றத்துடன் கேட்டிட. அதற்குப் பிறகு ஆலோன் தெரிவித்த ஒவ்வொன்றும் சந்திரமதிக்கு அதிர்ச்சியோடு கிட்டத்தட்ட மயக்கத்தையே வரவழைத்திருந்தது..

அவர்கள் இருவரும் உரையாடிக் கொண்டிருந்ததை இவர்களை தவிர இன்னும் ஒருவரும் கேட்டதோடு மட்டுமின்ற அடங்காத சினத்தோடும், ஆர்ப்பரித்திடும் வஞ்சினத்தோடும் அங்கிருந்து நகர்ந்தது. அதோடு நில்லாமல் இத்தகவலை யாரிடம் சேர்க்க வேண்டுமோ? அவர்களிடம் சேர்த்திட, அடுத்தகணம் அடங்காத சினத்தோடு விழிகளிரண்டும் ஆத்திரத்தில் அனலென தகிக்க, ஏமாற்றத்தின் சாயலாய் உள்ளமது அடங்காத துவேஷத்தை வளர்த்திட, அவர்கள் இருந்த அறையை நோக்கி கிளம்பினார் அரிச்சிகன். அவர் பின்னே மட்டற்ற மகிழ்வோடு அந்த நபரும் செல்ல, இதையெதையும் அறியாமல் ஆலோசனை அனுப்பி வைத்துவிட்டு அயர்வாய் தன் மக்களின் அருகில் அமர்ந்தார் சந்திரமதி.

என்னவளின் கரம் பற்ற
ஆயிரம் தடைகள் வந்தாலும்
அத்தனையையும் எளிதில்
கடந்து சென்றிடுவேன்..!
ஆனால் உயிர்தந்த
உறவே தடையாய் நின்று
எனை தடுமாறச் செய்திட..!
வழியறியா குகையில்
மாட்டிக்கொண்டது போல்.!
விழிபிதுங்கி நிற்கின்றேன் எத்திசையில் பயணித்து
இதிலிருந்து மீள்வதென்று
தெரியாமல்..!

- அற்புதமது பிறக்கும் ‌..

 
அற்புதம் -8

ஆழ்கடலுக்குள் தன்னையும் அறியாமல் சுயநினைவற்ற நிலையில் நடந்து சென்ற மிகிரனை ஒரு கரம் தடுத்து நிறுத்தியது.‌ நிறுத்தியதோடு மட்டுமின்றி அவன் தலையிலிருந்த கிரீடத்தை கையில் எடுத்துக்கொண்டு தன் பின்னால் நின்றவர்களிடம்,
“சீக்கிரம் இவரைத் தூக்கிக்கொண்டு வாருங்கள்” என்று சொல்ல. 4 பேர் அவனை தூக்கிக்கொண்டு கடலிலிருந்து நிலப்பரப்பிற்கு வந்தார்கள். அப்போதும் மிகிரனிடம் எந்த மாற்றமும் இல்லை, சுயநினைவற்ற நிலையில் தான் இருந்தான் ஆனால் பட்டென்று அவன் விழிகள் மூடிக் கொண்டன..

அவனைக் கடல் நீரில் இருந்து கரைக்குத் தூக்கி வரச் சொல்லி கட்டளை பிறப்பித்தவர் தன் கையிலிருந்த பூமாலையை அவன் தலை வழியாக அணிவித்து விட்டு,‌ “தூக்கிச் செல்லுங்கள். அந்தி சாயும் பொழுதிற்குள் நம் இருப்பிடத்திற்கு சென்றாக வேண்டும். இவர் நிச்சயம் இன்று இரவு நமது பூஜையில் கலந்து கொண்டே ஆக வேண்டும் அதுவும் இந்த நிலையிலேயே. சீக்கிரம் தூக்குங்கள்” என்று சொல்லிவிட்டு முன்னே செல்ல அவரைப் பின்பற்றி மற்றவர்களும் அந்த அடர்ந்த வனத்திற்குள் நுழைந்தார்கள்.
மிகிரனை ஐந்தாறு பேர் தூக்கிக் கொள்ள அவர்கள் பின்னே, 20க்கும் மேற்பட்டோர் கரிய வண்ணச்சாந்தினை உடல் முழுவதும் பூசியிருந்தவர்கள் விழிகளின் கீழ்புறத்திலும் , கையின் முடிவில் இருக்கும் கைவிரல்களிலும், காலின் முடிவில் இருக்கும் கால் விரல்களிலும் மட்டும் செஞ்சாந்தைக் குழைத்து அப்பியிருந்தார்கள்..

அந்த வனத்தின் நடுப்பகுதி வரைக்கும் மிகிரனைத் தூக்கிச் சென்றவர்கள் அதன் பிறகு அப்படியே நின்றார்கள். தலைவனைப் போல் அவர்களை முன்னின்று வழி நடத்திச் சென்றவர் இதழ்களை குவித்து ஏதோ சங்கீத ஒலியை எழுப்பிய அடுத்தகணம் ஆங்காங்கே செழித்து ஓங்கி உயர்ந்து வளர்ந்திருந்த மரங்களின் இடையே மறைந்திருந்த அவர்கள் இன மக்கள் அனைவரும் அவர்களை நோக்கி படையெடுத்து வந்தனர். கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்டோர் அவ்விடத்தில் வந்து குழுமிட. காடுகளில் வளர்ந்திருக்கும் மரங்களை விடவும் அவர்களின் தலைகள் தான் அங்கே அதிகமாக தெரிவது போல் இருந்தது..

கடிமான‌ நார்களைக் கொண்டிருக்கும் இலைகளையும், மூங்கில்களையும் கொண்டு பின்னி பிணையப்பட்டிருந்த, ஒரு ஆளை படுக்கவைத்து தூக்கும் அளவிற்கு உருவாக்கப்பட்டிருந்த ஒருவித சிவிகையில் (பல்லக்கில்) நீள வாக்கில் படுக்க வைக்கப்பட்டிருந்த மிகிரனை தூக்கிக் கொண்டு வந்து கீழே கிடத்தினார்கள்.‌ பின்பு அவனைச்சுற்றி நான்கடி ஆழத்திற்கு பள்ளம் பறித்தார்கள். நீள் வட்டவடிவில் பள்ளம் பறிக்க பட்டிருக்க அதன் மத்தியில் இருந்த மண்மேட்டில் படுக்க வைக்கப்பட்டிருந்தான் மிகிரன். பின்பு மரத்தூள்களையும், காய்ந்த இலைத்தழைகளும் இன்னபிற மரத்துண்டுகளையும் கொண்டு குழியை நிரப்பியவர்கள் நள்ளிரவு வரும் வரைக்கும் காத்திருந்தார்கள். இடையில் மிகிரனுக்கு மயக்கம் தெளிந்து கண்களைத் திறக்க முயல, மீண்டும் அவன் தலையில் ஏதோ ஒரு வித செடியின் வேரைச் சுற்றி கொண்டு வந்து வைத்திட, மீண்டும் விழிகளை மூடி சுயநினைவற்ற நிலைக்கு சென்றான்..

இங்கு அவன் இல்லத்திலோ வெளியில் சென்றவன் இன்னும் திரும்பி வரவில்லை என்று அவன் தாய் தவித்துக் கொண்டிருக்க, தந்தையும் வெளியில் சொல்லாவிட்டாலும் உள்ளுக்குள் தவித்துக் கொண்டுதான் இருந்தார். ஆனால் அவன் வயதை ஒத்த அவன் தோழர்களோ, ‘நிச்சயம் நல்ல செய்தியுடன் தான் என் நண்பன் திரும்பி வருவான் அதுவரை பொறுமை காத்திடுங்கள்’ என்று கூறி அனைவரது தேவையற்ற வாக்குவாதங்களுக்கும், தேவையற்ற ஏச்சு பேச்சுகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருந்தார்கள்.‌

ஆழ்கடல் ராஜ்ஜியம்..
அந்த குடுவையில் இருந்த மருந்தை கொடுத்ததற்கு பிறகு முதலில் மெல்ல மெல்ல மயக்கம் தெளிந்து எழுந்து அமர்ந்தாள் அதிசாந்திரனின் ஆருயிர் தங்கை முளரிப்பாவை. அவள் எழுந்து விட்டதைக் கண்டு உள்ளம் பூரித்துப் போன சந்திரமதி. மகளை வாரி அணைத்து உச்சி முகர்ந்தவர்,
“இப்போது உனக்கு ஒன்றும் இல்லை தானே பாவை? இப்போது உனக்கெப்படி இருக்கின்றது? எங்கேனும் வலிக்கின்றதா?” என்று பதைபதைப்புடன் கேட்க.

தன் தாயை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தவள் ஏதும் பேசாது படுக்கையில் சலனமின்றி கிடக்கும் தன் தமயனை நோக்கி ஓடினாள்.. அவன் தலையைத் தன் மடி தாங்கியவள்,‌“விழி திறந்து பாருங்கள் தமயனே? ஏன் இவ்வாறு விழிகளை மூடி படுத்திருக்கிறீர்கள்? கண்ணை திறந்திடுங்கள் தமயனே?” என்று கூறியவள் அவன் கன்னங்களை தட்டி எழுப்ப முயன்றிட.

ஏற்கனவே கொடுத்திருந்த மருந்து வேலை செய்ய ஆரம்பித்து இருந்ததால் அவன் உடலில் இருந்து வெளியேறிய பச்சை நிற திரவம் நிற்கத் துவங்கியிருந்தது. தற்போது தங்கையின் குரலைத் தொடர்ந்து, அவளது கதறலும் செவிகளில் விழுந்ததும் விழிப்பாவைகளை அசைத்து விழிகளைத் திறக்க முயன்றான். மிகவும் கடினப்பட்டு விழிகளைத் திறந்தவன் தன் முன் அழுது வடிந்து,‌ சோகத்தின் வடிவில் சிற்பமாய் அமைந்திருக்கும் தங்கையைக் கண்டு புன்னகைக்க முயன்று தோற்றவன் பின்பு நிதானமாக அவள் மடியிலிருந்து எழுந்து அமர்ந்தான்..

அதைக் கண்டதும் முகமும் அகமும் மலர்ந்தவள் வேகமாக அவனை நெருங்கி,‌“தங்களுக்கு இப்பொழுது பரவாயில்லையா தமயா? ஏதாவது பேசுங்களேன். ஏன் அமைதி காக்கின்றீர்கள்” என்று வினவிட.

அவனோ எதுவும் பேசமுடியாமல் திணறியவன் மண்டியிட்டமர்ந்து, தன் கண்களை அழுந்த மூடி, தன் தந்தையின் செங்கோல் தன்னை எந்த இடத்தில் குத்தியோ அந்த இடத்தில், தன் வலது கையின் நடுவிரலை வைத்து உள்ளே நுழைத்து ஏதோதோ வார்த்தைகளை முனுமுனுப்பாய் உச்சரித்து விட்டு விரலை 'சரக்' என்று வெளியே இழுத்துக் கொள்ள அந்த இடம் சட்டென்று மூடிக்கொண்டது..

அவன் செய்வதையும், அதனால் அவனுக்கு ஏற்பட்டிருந்த காயம் நொடியில் மறைந்து விட்டதையும் அம்மா, மகள் இருவரும் அதிர்வோடு பார்த்துக் கொண்டிருக்க. சட்டென்று எழுந்து நின்றவன் தன் தாயை நோக்கி விழிகளைத் திருப்பி, “இதற்கு மேல் நான் இங்கு இருப்பது சரி வராதென்றே தோன்றுகிறது அன்னையே! நான் இங்கிருந்து கிளம்புகிறேன். நான் இங்கிருந்து இக்கணமே சென்றால் மட்டுமே என்னவளை நான் சந்திக்க நேரிடும். என்னவள் யார், எங்கிருக்கிறாள்? எப்படிப்பட்டவள் என்பதெல்லாம் எனக்கு தெரியாது. அதனால் தான் தங்களிடம் இதைப்பற்றி நான் உரையாடவில்லை. தயைகூர்ந்து நான் இவ்வாறெல்லாம் மொழிவதற்கு மன்னித்துக்கொள்ளுங்கள். இப்படியொரு இக்கட்டான சூழ்நிலையில் என்னை தந்தை நிற்க வைத்து விட்டார் இல்லைைைையேல் நானெதற்கு இவ்வாறு உரையாடப்போகிறேன்? அவர் தான் என்னை நித்தம் நித்தம் சித்ரவதை செய்து கஷ்டப்படுத்திக் கொண்டிருக்கிறார். ”

“என்ன பேசிக் கொண்டிருக்கிறாய் அதி. இங்கிருந்து செல்கிறேன் என்றால், எங்கு செல்வாய் நீ. யாரை கேட்டு இங்கிருந்து செல்கிறேனென்று பிதற்றிக் கொண்டிருக்கிறாய். இது மட்டும் உன் தந்தையாருக்கு தெரிந்தால் என்ன செய்வாரென்றே தெரியாது? ஏற்கனவே பிரச்சினைக்கு மேல் பிரச்சினை நடக்கின்றது.‌ உன் தந்தைக்கு கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் யாரோ உள்ளனராம்.‌ அவர்கள் நம் அனைவரையும் தாக்குவதற்காக ஆயத்தமாகிக் கொண்டு இருப்பது போல் தகவல் வந்து சேர்ந்திருக்கிறது. தந்தைக்கு துணையாக தலை மைந்தன் இருக்க வேண்டிய இந்த சமயத்தில் இப்படி அனைத்தையும் உதறி விட்டு செல்கிறேனென்று கூறினால் என்ன அர்த்தம்? எதை மனதில் வைத்துக்கொண்டு இவ்வாறு பேசிக் கொண்டிருக்கிறாய்?”

“நான் இப்பொழுதும் பொறுமையாக இருக்க வேண்டுமென்று தான் தாங்கள் நினைக்கிறீர்களா தாயே? பெற்ற மகனென்றும் பாராமல் என் உடலில் இருக்கும் திவ்ய சக்திகள் யாவும் வெளியேற வேண்டும் என்ற எண்ணத்துடன் தந்தை என்னைத் தாக்கியிருக்கிறார்.‌அப்படி இருக்கும் போது அவருக்கு நான் எந்த விதத்தில் துணையாக இருப்பேனென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? என்னையும் தங்கையையும் தாக்கியதற்குப் பிறகும் நாங்கள் இங்கிருப்போம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா?”

“என்ன, சிறிது நேரத்திற்கு முன்பு நீ மட்டும் செல்வதாகக் கூறினாய். இப்போது தங்கையையும் அழைத்துச் செல்வதென கூறிக் கொண்டு இருக்கிறாய்? உன் மனதில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கின்றாய் அதி. இதோ உன் தந்தை வரும் நேரமாகிவிட்டது, ஒருவேளை நீ பேசிய யாவும் அவர் செவியில் விழ நேர்ந்தால் இன்னும் அதற்குண்டான தண்டனைகளை பெறுவாய். சற்று சிந்தித்துப் பார் இது நம் இருப்பிடம். இங்கிருந்து நீ வேறெங்கு செல்வாய்? யாரைத் தெரியும் உனக்கு? நீரில் மட்டுமே நீ வாழ முடியும்.‌ அப்படி இருக்கும் போது நிலப்பகுதிக்கும் உன்னால் செல்ல முடியாது, வேறெங்குதான் நீ செல்வாய்? நீ எந்த மூலையில் இருந்தாலும் எப்பேர்ப்பட்ட நீர் நிலையினுள் இருந்தாலும் உன் தந்தை உன்னை கண்டுபிடித்து விடுவார் என்பதை நீ மறந்து விட்டாயா?”

“எப்பேர்பட்ட நீர் நிலையில் இருந்தாலும் தந்தை என்னை கண்டறியும் அளவிற்கு, அவருக்கு ஆத்ம சக்தியும், திவ்ய சக்திகளும் இருப்பதை நானும் அறிவேன் தான்.‌ அதற்கான காரணம் என்ன என்பதையும் நானறிவேன். ஆனால் அதற்காகவெல்லலாம் அவருக்கு பணிந்து நடப்பேனென்று எண்ணாதீர்கள்? கூடவே என்னையும் தாங்கள் எளிதில் எடை போட்டு விட்டீர்களே அன்னையே. எனக்கும் சில திவ்ய சக்திகள் இருக்கின்றது. அதிலும் எப்போது என்னவள் நிலப்பகுதியை சேர்ந்தவளென்று என் உள்ளம் உணர ஆரம்பித்ததோ? அந்த நிமிடத்திலிருந்து நிலப்பகுதியில் வாழ்வதற்கான முயற்சிகளை நான் எடுத்துக் கொண்டிருக்கிறேன்..

முயற்சிகள் மட்டுமே மேற்கொண்டேனே தவிர முழுமையாக அதனை இன்னும் பரிசோதித்துப் பார்க்கவில்லை. ஆனால் பரிசோதித்துப் பார்க்கும் முன்பு எனது இந்த நடவடிக்கைகளை தந்தை கண்டு கொண்டு விட்டார். அதனால் தான் என்னை முன்பு போல் சிறையிலடைத்து வைக்க முடியாதென்ற எண்ணத்தில், நான் உயிருடன் இருக்கக்கூடாது என்று முடிவெடுத்து எனைக் கொன்றிடத் துணிந்து விட்டார். பெற்ற மகனையே கொன்றிடும் அளவிற்கு கல்மனம் கொண்ட தந்தையை மீண்டும் ஒருமுறை பார்க்க மட்டும் அல்ல, இனி அவரிருக்கும் திசைப் பக்கம் கூட திரும்பி பார்க்கக் கூடாதென்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.‌ ஆதலால் தான் இங்கிருந்து செல்கின்றேன். என்னை தடுக்காதீர்கள், முடிந்தால் என்னுடன் வர முயற்சி செய்யுங்கள் இல்லையெனில் எங்களிருவரையுமாவது செல்ல விடுங்கள்?”

“நீங்களே செல்லக்கூடாதென்று நான் கூறிக் கொண்டிருக்கிறேன் இதில் என்னையும் வேறு துணைக்கழைக்கின்றாயா? நீங்கள் இருவரும் எங்கும் செல்லக்கூடாது.‌என் சொல்லை மீறினால் என்ன செய்வேனென்று எனக்கே தெரியாது..” என்று கோபமாக உரைத்து விட்டு வாயிலை நோக்கி சென்றார்.

அதற்குள் தன் தங்கையை நெருங்கி இருந்த‌ அதிசாந்திரன்,
“பாவை நீ சொல் என்னுடன் வருகிறாயா அல்லது இங்கே இருக்கின்றாயா?”

“நான் வருவதைப் பற்றி ஒன்றும் பிரச்சினை இல்லை தமயா. ஆனால் தாய் தனித்திருப்பது ஆபத்தல்லவா. நமது தந்தையின் கடுஞ்சினத்தைப் பற்றி நாம் இருவரும் அறிந்ததே. அவ்வாறு இருக்கையில் தாயை மட்டும் தனித்து விட்டுச் செல்வது நல்லதென்று எனக்குப் படவில்லை. வேண்டும் என்றால் தாங்கள் சென்றுவிட்டு வருகிறீர்களா? நான் இங்கேயே இருக்கின்றேன்” என்று மழுப்பலாக பதிலுரைத்த தன் தங்கையையும் ஏறிட்டு பார்த்தவன், “நான் கூறுவதை நன்றாக புரிந்து கொள் பாவை. நான் இப்பொழுது சென்றால் திரும்பி வருவேனென்று எனக்கு நம்பிக்கையில்லை. முடிந்தால் என்னுடன் வா இல்லையென்றால் எனை நீ எப்பொழுதும் பார்க்கமுடியாது என்ற எண்ணத்தை மனதில் ஆழமாகப் பதித்துக் கொள்” என்று கூறிவிட்டு ஈரடி எடுத்து வைப்பதற்குள் ஓடி வந்து தமயனவனை அணைத்திருந்தாள் தங்கையவள்.

அவளை தன்னிடமிருந்து பிரித்து தள்ளி நிறுத்தி தன் தங்கையின் முகத்தை கைகளில் தாங்கி அவள் கண்களை நேராகப் பார்த்தவன்,‌“இங்கே பார் பாவை. நான் செல்கையில் இவ்வாறு நீ கலங்கினால் என் மனம் தாங்கிடுமா? ஒன்று என்னுடன் வர முயற்சி செய். இல்லையேல் இங்கேயே இரு சிறிது காலம் தங்கியிருந்து இங்கு நடப்பவற்றை எனக்கு அவ்வப்போது தெரியப்படுத்து, அதற்கு ஆலோன் உனக்கு உறுதுணையாக இருப்பான்.

நான் அவனிடம் நிலவரத்தை சொல்லி விட்டு செல்கிறேன். ஒன்றை மட்டும் புரிந்து கொள், எத்தகைய சூழ்நிலையிலும் என்னைப் பார்க்க முயற்சி செய்யாதே! என்னை எப்படி தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை ஆலோன் கூட அறியமாட்டான். நானே அவனைத் தொடர்பு கொண்டால் மட்டுமே அவனால் இங்கிருந்து செய்திகளை என்னிடம் சேர்ப்பிக்க இயலும்.‌ சென்று வருகிறேன் பாவை, தாயைப் பத்திரமாக பார்த்துக்கொள். அப்படியே என் பின்னால் ஒருத்தி சுற்றிக் கொண்டிருப்பாளே அவளுக்கும் சொல்லி புரிய வை.‌ என் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் அவளொருத்தியைத் தவிர வேறு எந்த மங்கையையும் நான் கனவிலும் ஏறெடுத்துப் பார்க்கமாட்டேன் என்று புரிகின்றதா!” என்று உரைத்து விட்டு ஆலோன் எந்த வழியாக வந்தானோ, அதற்கு அருகில் கீழ்ப்பகுதியில் படர்ந்திருந்த பாசிகளை விலக்கி விட்டு மண்ணைத் தோண்ட ஆரம்பித்தான்.‌ அவன் தோண்ட தோண்ட குகை போலொரு வழிப்பாதை உருவாகிக் கொண்டே இருந்தது. பெருங்குழி ஒன்று உருவானதும், தன் தங்கையிடம் தலையசைத்து விட்டு அதற்குள் குதித்து விட்டான் அதிசாந்திரன். அதைப் பார்த்துக்கொண்டிருந்த முளரிப்பாவை அதிர்ச்சியில் ஏதோ கூற வருவதற்குள் அவ்விடம் அடியோடு மூடிக்கொண்டது..

இவ்வளவு நேரம் எவ்வாறு இப்படியொரு வாயில் உண்டானது? அதற்குள் எப்படி தன் தமையன் செல்வான்? என்ற சிந்தனையில் நின்றிருந்திருந்தவள், அதிசாந்திரன் அதற்குள் குதித்த மறுகணம் அவ்வாயில் மூடிக்கொண்டதைக் கண்டு பதறியவளாய் வேகமாக அந்த இடத்தை நெருங்கி மூடியிருந்த குழியைத் தோண்ட முயன்றாள். ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் அவள் தோண்டத் தோண்ட மண் தான் வந்ததே தவிர வாயிலெதுவும் உருவாகவில்லை.

வெளியில் சென்றிருந்த சந்திரமதி தன் எதிரே வந்து கொண்டிருக்கும் கணவரை கண்டு அதிர்ந்தவராய் திரும்பி உள்ளே வருவதற்குள் அவரை நெருங்கி இருந்த அரிச்சிகன்,
“இங்கே நின்று என்ன செய்து கொண்டிருக்கிறாய் சந்திரா?” என்று கர்ஜனையோடு உறுமியவர் வலுக்கட்டாயமாக சந்திரமதியின் கரங்களைப் பிடித்து இழுத்துக்கொண்டு அந்த அறைக்குள் நுழைந்தார். தன் மகள்விழிநீரோடு மண்ணைத் தோண்டி கொண்டிருப்பதை யோசனையோடு கண்டவர் அவளை நெருங்கி,“இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய் முளரிப்பாவை? எங்கே உன் தமயன்? அவனது செய்கைகள் யாவும் முன்னுக்கு முரணாக உள்ளன. அவனை விசாரித்திட வேண்டும் எங்கே அவன்?” என்று கேட்டிட. பதில் கூற முடியாது திருதிருவென்று விழித்தாள் பாவை.

அவள் விழிப்பதைக் கண்டு சினம் கொண்டவராய் மீண்டும் அவளிடம், “எங்கே உன் தமையன்?” என்று கேட்டிட.

“தமயன் இங்கிருந்து சென்று விட்டார் தந்தையே” என்றவள் அச்சத்துடன் கூறியதுதான் தாமதம் அவள் கன்னத்தில் கை விரல்களின் அச்சு யாவும் பதியும் அளவிற்கு ஓங்கி ஒரு அறை கொடுத்து கீழே தள்ளியவர் தயக்கத்துடன் தன் பின்னே நின்றிருக்கும் பெண்ணைத் திரும்பிப் பார்க்க.

அவளோ ஆத்திரத்திலும், கோபத்திலும் செஞ்சாந்தைப் பூசினாற் போன்றதொரு முக பாவனைகளுடன் நின்றிருந்தவள் அனைவரையும் உறுத்து விழித்து விட்டு, “என்னதிது அரசரே? இது தான் உங்கள் பிள்ளைகளது லட்சணமா? பெற்றோர் சொல் கேளாத பிள்ளைகள் எப்படி ஒழுக்கத்துடனும், நல் நெறிகளுடனும் வளர்ந்திருப்பார்கள்.‌ என் தந்தைக்கு தாங்கள் அளித்த வாக்குறுதி என்னவாயிற்று? தங்கள் மகனுக்கு என்னை மணம் முடிக்கிறேனென்று கூறி தானே இக்கட்டான சூழ்நிலையில் உதவி கேட்டிருந்தீர்கள். இப்போது அதுவே இல்லை என்றான பிறகு என் தந்தை எப்படி தங்களுக்கு உதவி செய்திடுவார். காத்திருங்கள் எதிர்வரும் எதிரிப்படைகளோடு எம் படைகளும் கைகோர்க்கும். கைதாகி எம் சிறையில் வாசம் செய்திட இப்பொழுதிருந்தே தயாராகிக் கொள்ளுங்கள்” என்று கோபமாக மொழிந்து விட்டு அங்கிருந்து சென்றவளை கவலையுடன் பார்த்திருந்தார் அரிச்சிகன்.

சந்திரமதியோ கீழே விழுந்து இன்னும் எழாமல் இருக்கும் தன் மகளை தூக்கி மடியில் கிடத்தி அவளை விழி திறக்க வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்.
இதோ இங்கிருந்து புறப்பட்ட அப்பெண்ணவள் நேராக சென்றது தன் ராஜ்ஜிய பகுதிக்குத் தான். அழுகையும் ஆத்திரமுமாக தங்களுக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை அவள் அத்தனை விரிவாக விளக்கிட அடுத்த நிமிடம் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றார் அவளின் தந்தையாகப்பட்டவர்.
அடுத்தென்ன அரிச்சிகனின் ராஜ்ஜியத்தின் மீது போர் தொடுப்பதற்கான அனைத்து ஆயத்தப் பணிகளும் துரிதகதியில் துவங்கப்பட்டன.

ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்பதை இயற்கை உணர்ந்து கொண்டதாலோ? என்னவோ? வானம் கருமை நிறத்தை பூசிக்கொண்டு தன் ஆதங்கத்தை மழைத்தூறல் வழியாக கொட்டி தீர்க்க. காற்றும் கூட அதற்கு துணை சேர்ந்து பெரும் புயலாய் உருவெடுத்திருந்தது.. தன் பங்குக்கு தன் இருப்பை காட்டிவிட்டு செல்வதற்காக நிலமும் நிலநடுக்கத்தை ஏற்படுத்தியிருக்க, உலகத்தின் பெரும்பாலான பகுதிகள் சற்றே ஆட்டம் கண்டன. மரங்கள் வேரோடு சாய்ந்து மண்ணுக்குள்ளேயே புதைந்து போக, பாளம் பாளமாக வெடித்த பூமியானது காண்பதற்கு கோரமாக காட்சி அளித்தது, கூடவே எரிமலைகளும் தங்களை ஆக்ரோஷத்துடன் வெளிப்படுத்தி லாவாக்குழம்புகளை வெடித்துச் சிதற செய்திருக்க, அதைக் கண்டு அலறும் பறவைகள் மற்றும் விலங்கினங்களின் சப்தமும் செவிமடல்களை செவிடாக்கியது. இக்காட்சிகள் யாவும் காண்போரையும் கேட்போரையும் கதிகலங்கிட வைத்தது. அந்த அளவிற்கு ஒரு கோர தாண்டவத்தை இயற்கை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது. கூடவே கடலலைகளும் தன் ஆக்ரோஷத்தை காட்டுவதற்காக தயாராகத்தான் இருந்தது..
அலைகள் ஒவ்வொன்றும் சீற்றத்துடன் மேலெழுந்து வெகுதூரம் காற்றில் பயணித்து, பின்பு மெல்ல கீழிறங்கி தண்ணீரை பொங்கிய நுரையுடன் கரை சேர்த்துக் கொண்டிருந்தது. கூடவே கடல் அலைகள் காற்றுடன் கைகோர்த்து நீரின் மேல்மட்டத்தில் பெரும் சூறாவளிகளையும், சூழல்களையும் உருவாக்கிட, உலகமே அழிந்து விடுமோ? என்று அனைவரும் என்னும் அளவிற்கு ஒவ்வொரு நிகழ்வும் நடந்தேறியது..

அதே நேரம் கடலின் ஆழத்தில் பெரும் போருக்கான ஆயத்த பணிகள் செவ்வனே தயாராகிக் கொண்டிருந்தன. அனைவரும் தங்களது கூர்மையான ஆயுதங்களுடன், நொடியில் எவரையும் மயக்கமுறச் செய்யும் மீன்களின் விஷ வாயுக்களையும், திரவங்களையும் கைவசம் வைத்திருக்க. மதிதனை மயக்கக் கூடிய செடிகளின் வேர்களையும், மூலிகைகளையும் எவருக்கும் தெரியாமல் பத்திரப் படுத்திக் கொண்டிருந்தனர்.. உடலில்களையும் இன்னதென்று சொல்ல முடியாத நஞ்சு கலந்த திரவம் தைக்கப்பட்ட உடைகள் அலங்கரித்திட, அவர்களுக்கு துடிப்பாய், எடுப்பாய் பயணித்திட கடல் குதிரைகள் தயாராய் காத்திருந்தன..

கரம் சேரத்துடித்த
கள்ளமில்லா அன்பு
கொண்ட உள்ளங்கள்
இரண்டும் விதியென்ற
சதிகாரனின்
கோரப்பிடியில் சிக்கி
சீரழிந்து இணை
சேராது இன்னுயிரை
நீத்ததேனோ?

தாயின் நிழலாய் தனை
தாங்கிடும் தங்கைக்கென்று
ஒருவனும்..
தந்தையென்னும் சாயலாய்
தன்னைத் தாங்கிடும் தமயனுக்கென்று ஒருத்தியும்..
தாமாக முன்வந்து
இன்னுயிரை படையலிட.
தன் கோரப்பசி தீர்க்க
இயற்கையும் விதியோடு
கரம் கோர்த்து அவ்வுயிர்களை
இரையாக்கி இளைப்பாறியதேனோ?

- அற்புதமது பிறக்கும்..


கருத்துக்களை கீழே இருக்கும் திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி

 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom