Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


GY NOVEL நானும் ஆன்டி ஹீரோ தான் - Tamil Novel

Status
Not open for further replies.
2.2:

“எதுக்குக் கூப்ட்ட தளிர்” என்று லெனின் நிரஞ்சன் கேட்க, “அண்ணா. அது...” என்றுத் தயங்கினாள் தளிர்.

கைக்கடிகாரத்தைப் பார்த்தவன், “எனக்கு நேரம் அதிகம் இல்ல” என்றுச் சொல்ல, “அது வந்து. இன்னைக்கு எனக்கு முதல் நாள் காலேஜ். நீயும் டெய்லி காலைல காலேஜுக்குத் தான போற. நானும் உன் கூடவே வரவா!” என்றாள் தளிர்.

“எதுக்கு?” என்றான் அவன், அவளை ஆழமாகப் பார்த்து.

“எதுக்கா? டேய். இப்போ காலேஜ் அட்மினிஸ்ட்ரேஷன் உன் கைல தான் இருக்கு. அதனால, நீ தினமும் காலேஜ் போற தானே. அப்படியே அவளைக் கூட்டிட்டுப் போனா என்ன?” என்றார் பூங்கொடி.

“எனக்குக் கூட்டிட்டுப் போக இஷ்டமில்ல” என்றான் லெனின். கேட்டது தாய் என்பதால் இந்தப் பதில். வேறு யாரேனுமாக இருந்திருந்தால், பதிலளிக்காமல் எழுந்துச் சென்றிருப்பான்.

“என்ன டா இஷ்டம்? அவ உன் தங்கச்சி தான! நீ தான்...” என்று பூங்கொடி தொடங்கும்போதே, “அம்மா ஸ்டாப்” என்றான் லெனின் நிரஞ்சன்.

“ஒரே வயித்துல பிறந்த காரணத்துக்காக எல்லாம் அவங்க இஷ்டம் போல என்னால செய்ய முடியாதும்மா” என்றான்.

“என்னைப் பொறுத்தவரை தளிர், சந்தோஷ் யாரா இருந்தாலும். அவங்கள எனக்குப் போட்டியா தான் பார்ப்பேன்.

அப்பாவோட தொழில்ல எல்லாம் எனக்கு எந்த அளவுக்கு உரிமை இருக்கோ, அதே அளவுக்கு அவங்களுக்கும் இருக்கே. அதைப் பங்கிட்டுக் குடுக்கறதுல எனக்கு இஷ்டமில்ல.

இந்தச் சொத்து, பணம் இதெல்லாம் பங்குப் போட்டுக்கறதுல எனக்கு எதுவும் பிரச்சனை இல்ல.

ஆனா, இந்தத் தொழில், தலைமை எல்லாம் என்கிட்டயே தான் இருக்கணும். ஒரு காட்டுக்கு ஒரு ராஜா. அது நானா தான் இருக்கணும்” என்று சொன்னவன் கண்களில் அத்தனை வெறி.

“நிரஞ்சா. சம்பந்தமே இல்லாம பேசற நீ. அவ சின்னப் பொண்ணு டா. அதுவும் உங்க அப்பா என்ன தொழில் பண்றாரு? கொலை தான! ரத்த வெறிப் புடிச்சத் தொழில். அதுல என்ன இவ உனக்குப் போட்டியா வந்தா நிக்கப் போறா?

அதுலயும் அவளுக்கு நீன்னா கொள்ளப் பிரியம் டா” என்றார் பூங்கொடி.

“ஆமாம். அவளுக்கு என் மேல ரொம்ப ஆசை. நீங்க சொல்ற மாதிரி அவ சின்னப் பொண்ணு. இந்தக் கொலைப் பண்ற தொழிலுக்கு எல்லாம் போட்டிக்கு வர்ற அளவுக்கு அவளுக்கு உடம்புல சக்தி இல்ல. வரவும் மாட்டா.

ஆனா, அவளுக்கு மனசுல உறுதி அதிகம். ரொம்ப அதிகம்.

அந்த உறுதியும், பாசமும் சேர்ந்து என்ன செய்யும் தெரியுமா?” என்றவன் தந்தையைப் பார்த்தான்.

“இதோ. இந்த மனுஷன். ரெண்டு வருஷம் முன்ன வர, வெட்டு குத்து எல்லாம் தான் இவருக்கு மூச்சா இருந்துச்சு. ஆனா, இன்னைக்கு இந்தத் தொழிலை விட என்னவெல்லாம் சாத்தியக்கூறு இருக்குன்னு யோசிச்சிட்டு இருக்காரு. அதுக்குக் காரணம் யாரு.

இதோ இவ தான்” என்று தளிரைக் கை காட்டினான்.

“டேய். இதுக்கும், நீ அவளைக் காலேஜ் கூட்டிட்டுப் போறதுக்கும் என்ன டா சம்பந்தம்?” என்றார் பூங்கொடி.

“என்ன சம்பந்தமா?

ஏன் மா. புகைப் பிடிச்சா நுரையீரல் வீணாப் போகும். தண்ணி அடிச்சா லிவர் வெந்துப் போகும்ன்னு உனக்குத் தெரியும் தான?

அப்பா தண்ணி அடிக்கும்போதும், சிகரெட் பிடிக்கும்போதும், நீயும் இதெல்லாம் நல்லதில்லைன்னு சொல்லியிருப்ப. ஆனா, எத்தனை தடவ? ஒரு மூணு தடவ? நாலு தடவ? அதுக்கப்புறம் அப்பா கேக்கலைன்னதும் சொல்றதை நிறுத்திட்ட.

ஆனா, இவளுக்கு அதெல்லாம் கெட்டதுன்னு தெரிஞ்ச வயசுல என்ன செஞ்சா தெரியுமா? ‘இது கெட்டது. இது தப்பு’ன்னு அப்பாகிட்ட சொன்னா. தினமும் சொன்னா. அவர் நிறுத்துற வரைக்கும். ஏன்னா, அவ உறுதியா நம்புனா, அவரை அந்தப் பழக்கத்திலிருந்து வெளியவர வைக்கத் தன்னால முடியும்ன்னு உறுதியா நம்பனா.

அந்த மனவுறுதி அவளை என்ன வேணும்னா செய்ய வைக்கும்.

அதே மனவுறுதியால தான். அப்பா கைல இருக்கக் கத்தியோட ஆயுசு குறைஞ்சிக்கிட்டே இருக்கு. இப்பவோ அப்பவோன்னு கீழ விழக் காத்துக்கிட்டு இருக்கு.

இவளை நான் தினமும் காலேஜுக்குப் கூட்டிட்டுப் போனா, அவ என் கூட இருக்க அந்தக் கொஞ்ச நேரம் போதும். அவ என் மனச கலைக்க.

என்னை வீக் ஆக்குற யாரையும் நான் கிட்ட சேக்குறதில்ல” என்றான் லெனின் நிரஞ்சன்.

“அவ சொல்றது உன் நல்லதுக்குத் தான!” என்று பூங்கொடி சொல்ல, “நல்லது கெட்டது. அதெல்லாம் நான் யோசிக்கறதில்ல. நான் ராஜாவா இருக்கணும். நான் சிங்க ராஜாவா இருக்கணும்” என்றவனை ஒரு ஓரமாக நின்று கமலியும், பாட்டியும் பார்த்துக்கொண்டு தான் இருந்தனர்.

“சுயநலவாதி!”, பாட்டியின் இதழ்கள் முனுமுனுத்தது.

அடுத்த நொடி அதே வார்த்தையைச் சொன்னார் பூங்கொடி.

“சுயநலம் பிடிச்சவன்டா நீ. சின்னப் பொண்ணோட ஆசையை நிறைவேத்தாம ஏதேதோ காரணம் சொல்ற. ஆனா, அந்தக் காரணத்தில் எல்லாம் உன்னைப் பற்றிய யோசனை மட்டும் தான் இருக்கு” என்றார் பூங்கொடி.

“ஆமாம்!” என்றான் லெனின் நிரஞ்சன் சாதாரணமாக.

இதே முறையும் அதே வார்த்தையைச் சொன்னார் பாட்டி. ஆனால், கமலிக்குக் கேட்கும் வகையில்.

“யார சொல்ற பாட்டி?” என்றாள் அவள்.

“லெனின் நிரஞ்சனை. உன் ஹீரோவை” என்றார் பாட்டி.

“ஓஹ்! சுயநலவாதியா இருக்கறது தப்பில்லையே!” என்றாள் கமலி.

“சுயநலம் தப்பில்ல. சுயநலம், மனிதாபிமானம் இரண்டுக்கும் நடக்கும் போட்டியில் மனிதாபிமானம் ஜெயிக்கும் வரை சுயநலம் தப்பில்ல” என்றார் பாட்டி.

“அப்போ! என் ஹீரோ மனிதாபிமானம் இல்லாதவன்னு சொல்ல வரியா?” என்ற கமலியின் கேள்விக்கு, “எனக்குத் தெரியல. அதற்கான பதில் அவன் கிட்ட தான் இருக்கு. அவன் தான் சொல்லணும். இல்ல உணர்த்தணும்” என்றார் பாட்டி.

இவர்களின் பேச்சு சத்தம் கேட்டு, லெனின் நிரஞ்சனின் பார்வை இவர்கள் மீது விழுந்தது.

அதைக் கவனித்த பூங்கொடி, “உன்னைப் பார்க்கணும்ன்னு தான் டா காத்திருக்காங்க” என்றார்.

அவன் அவர்களைப் பார்க்க, “நாங்க வந்து...” என்றுத் தொடங்கினாள் கமலி.

“அவன் கேள்வியே கேக்கல. நீ எதுக்குப் பதில் சொல்ற?” என்று பாட்டி இடிக்க, “ஆன்ட்டி-ஹீரோ தான அவன். அவன் வாயைத் தொறந்து எல்லாம் அதிகம் பேசமாட்டான். அவன் கண்ணால தான் கேள்விக் கேட்பான்” என்று கமலி பதில் சொன்னாள்.

“இவ்ளோ நேரம் ரெண்டு பக்கத்துக்கு வசனம் பேசுனான். இப்போ வந்து அதிகம் பேசமாட்டான்னு சொல்ற?” என்று பாட்டி கேட்க, “இப்படியெல்லாம் சொன்னா தான் இவன ஆன்ட்டி-ஹீரோன்னு ஒத்துப்பாங்க. சும்மா இரு பாட்டி” என்றாள் கமலி.

அதற்குள் லெனின் இவர்களுக்கு அருகில் வந்திருந்தான்.

“யார் நீங்க?” என்று அவன் கேட்க, அவன் காதுக்கருகில் சென்று, “நான் தான் இந்தக் கதையோட ரைட்டர். நீங்க எல்லாம் என் கதைக்குள்ள இருக்கீங்க” என்று விளக்கினாள் கமலி.

“ஓஹ்! நீ தான் இந்தக் கதையோட எழுத்தாளர்ன்னா! அப்போ, நான் நீ சொல்ற மாதிரி தான்......” என்று அவன் புருவம் உயர்த்த, “நோ நோ நோ நோ... அப்படியெல்லாம் இல்ல. நான் சொல்ற மாதிரி தான் நீ கேட்கணும்ன்னு அவசியமில்ல. நான் அப்படிப்பட்ட ரைட்டர் இல்ல லெனி. நீ உன் இஷ்டம் போல பண்ணு. நான் உன் போக்குலே கதை எழுதுவேன்” என்றாள் கமலி.

“நைஸ். ஆமா, நீ என்னன்னு கூப்ட்ட?” என்று லெனின் கேட்க, “லெனி!” என்றாள் கமலி கண்ணடித்து.

“ஐ லைக் யு” என்றவன் பாட்டியைப் பார்த்தான். “இது யாரு?” என்று அவன் கேட்க, “அதுவா! என்னோட மனசாட்சி” என்றாள் கமலி.

“உன் மனசாட்சி ஏன் இவ்ளோ வயசாகி இருக்கு?” என்று லெனின் கேட்க, “அந்தச் சோகத்தை ஏன் லெனி கேட்கற. வெள்ளிக்கிழமை காலைல எங்க அம்மா பூஜைப் பண்ணாங்களா, சரி நம்பப் பங்குக்கு ஏதாவது வேண்டுவோம்ன்னு ஒரு வேண்டுதல் வச்சேன்” என்று சொல்ல, “என்ன வேண்டுதல்?” என்று கேட்டான் லெனின்.

“எனக்கு வயசு கம்மியா இருந்தாலும் நானும் மெச்சூர்டா கதை எழுதணும். அதுக்கு எனக்குத் துணைப் புரி ஆண்டவான்னு வேண்டிக்கிட்டேன்.

அந்த வேண்டுதலைக் கேட்ட கடவுள் இப்படி ஒரு வயசான மனசாட்சியை எனக்குக் குடுத்துட்டார் போல” என்றாள் கமலி.

“ஓஹ்! ஸோ ஸேட்!” என்ற லெனின், “உனக்கு ஒரு ஃப்ரீ அட்வைஸ். இந்த மனசாட்சி ந்யுஸன்ஸ் எல்லாம் நம்மளோடவே ஒட்டிக்கிட்டு இருந்தா நம்ப நெனச்சதைச் செய்யவே முடியாது.

நான் என்னோட மனசாட்சி எல்லாம் எப்போவோ கொன்னுட்டேன். இப்போ என்னோட முடிவு எல்லாம் இங்கிருந்து மட்டும் தான் எடுப்பேன்” என்றான் தலையில் கை வைத்து.

“இதோ இங்க. இங்க, நிமிஷத்துக்கு எழுபத்திரெண்டு முறைத் துடிச்சி, என்னை உயிரோட வச்சிக்கற வேலை மட்டும் தான் நடக்குது. வேற எந்தப் பாரத்தையும் நான் இங்கக் குடுக்கறதில்ல” என்று சொல்லும் போது அவன் கை நெஞ்சின் மீதிருந்தது.

“எது? என்னைக் கொல்லச் சொல்றானா? டேய்! பீஸ்ட்(Beast). உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா என்னைக் கொல்லச் சொல்லுவ!” என்று படபடப்பாகக் கேட்டார் பாட்டி.

“இங்க பாரு. இந்த மனசாட்சி எல்லாம் இதோ இப்படித் தான் கிய்யா முய்யான்னு சத்தம் போட்டுக்கிட்டே இருக்கும்.

ஓஹ்! என்னை நீ என்னன்னு சொன்ன? பீஸ்ட். அந்தப் பேர் கூட எனக்குப் பிடிச்சிருக்கு பியுட்டி” என்றான் லெனின்.

“ரொம்ப திமிர் உனக்கு. நீ வேணும்னா பாரு. இந்தக் கதையோட முடிவுல நீ செத்து தான் போவ” என்று பாட்டி சொல்ல, “ச்ச! ச்ச! அப்படியெல்லாம் நடக்கவிட மாட்டேன் லெனி. எனக்குக் கதைல வர்ற ஸைட் கேரக்டர கூடக் கொன்னு பழக்கமில்ல. நீ ஹீரோ உன்னைப் போய் கொல்வேனா” என்று வழிந்தாள் கமலி.

“ஐ லைக் யூ மோர்!” என்றான் லெனின் நிரஞ்சன் கமலியிடம்.

“என்ன சொன்ன? செத்துப்போவேனா? யார் தான் செத்துப்போக மாட்டா?

ஆனா, நான் சாகுறவரை எனக்குப் பிடிச்ச மாதிரி இருந்துட்டு சாவேன். மத்தவங்க என்னை மனுஷனா பாக்கறாங்களா? இல்ல பீஸ்ட்டா பாக்கறாங்களான்னு கவலை இல்லாம சாவேன்.

எனக்கு நான் ராஜாவா சாவேன்” என்று சொன்னவனை, ‘மரணம்’ என்ற வார்த்தை ஒருபோதும் அச்சுறுத்தப் போவதில்லை என்று உணர்ந்துக்கொண்டார் பாட்டி.

“இப்போ நான் போகணும். எனக்கு நேரமாச்சு” என்று லெனின் சொல்ல, “நானும் உன் கூடத் தான் வரணும். ஹீரோ இருக்க இடத்துல தான் எனக்கும் வேலை” என்று கமலியும் அவனுடன் நடக்க, பின்னால் சென்றார் பாட்டியும்.

வெளியே போகும் அண்ணனையே பார்த்துக்கொண்டு நின்றாள் தளிர்.

பெயருக்கு ஏற்றார் போல், அவள் மென்மையானவள். ஆனால், அழுது வடிபவள் அல்ல.

லெனின் சொன்னது போலவே அவள் உறுதியானவள். தேகம் உறுதியாய் இல்லாவிடில் என்ன? மனதின் திடம் போதாதா? நினைத்ததைச் சாதிக்க.

மனதில் உறுதியாகப் பதியவைத்துக்கொண்டாள் தளிர். ‘கால் மீ லெனி’ என்று உறுமிய இந்த அண்ணனை, அவள் ‘லெனி’ என்று ஒருபோதும் அழைக்கப்போவதில்லை என்று.

அழிக்க முடியாத அளவுக்குப் பதியவைத்துக்கொண்டாள். இன்று, ‘இவளை என்னோடு என் காரில் அழைத்துச் செல்லமாட்டேன்’ என்று சொல்லிவிட்டு, வெளியேறும் இதே லெனின் நிரஞ்சனின் மகிழுந்தில் ஒரே ஒரு முறையேணும் பயணித்துவிடுவேன் என்று.

அந்த இல்லத்தை விட்டு வெளியே நடந்தவன் எண்ணமெல்லாம், ‘நான்... நான்.. நான்...’ என்ற வார்த்தையைச் சுற்றியே.

அவனையே பார்த்து நிற்கும் தளிரை அவன் திரும்பியும் பார்க்கவில்லை.

:: :: :: :: :: :: :: ::
 
அத்தியாயம் – 3 :

அஸ்லான் லெனியைச் சோதனைக்கு உட்படுத்தி, அவன் உடல் பலத்தையும், மனப் பலத்தையும் உணர்ந்து, மைலோ பாப்பி இருவரையும் அவனிடமிருந்துப் பிரித்து ஒரு இரவு, ஒரு பகல் கடந்திருந்தது.

அதுவரை அஸ்லான் இரண்டு குட்டிகளையும் லெனியின் அருகில் விடவேயில்லை. லெனியும் அவரிடம் சண்டைக்கு நிற்கவில்லை.

இன்று இரவோடு, ஆஸ்கர் குடும்பத்துச் சிங்கங்கள் உணவு உட்கொண்டு முழுதாக இரண்டு நாட்கள் ஆகியிருந்தது. ஆஸ்கர் சிங்கங்களுக்கு மீண்டும் பசிக்கத் தொடங்கியிருந்தது.

இன்று இரவு சிங்கங்கள் வேட்டையாடுவது உறுதி. காட்டில் உள்ள ஏதோ ஒரு விலங்கு இந்தச் சிங்கங்களின் பாய்ச்சலில் வீழ்ந்து, பற்களில் சிக்கி, உயிர் துறக்கப்போவது உறுதி. அதைப்பார்க்கும் கண்களெல்லாம் சிங்கங்களுக்கும் பசிக்கும் என்ற உண்மையை மறந்து, அவர்களின் உணவுத் தப்பித்துவிட வேண்டும் என்றுப் பதறப்போவது உறுதி.

வானம் மெல்ல இருட்டத் தொடங்கியது. சிங்கங்கள் வேட்டைக்குப் புறப்படத் தொடங்கின.

வளர்ந்த பெண் சிங்கங்களும், இளம் பெண் சிங்கங்களும் புறப்பட்டன. ஆண்பாலோ, பெண்பாலோ. அனைத்துச் சிங்கங்களும் பிறந்து பதினெட்டு மாதங்களிலேயே தன் குடும்பத்தின் மற்றச் சிங்கங்கள் வேட்டையாடுவதைக் கவனிக்கத் தொடங்கிவிடும். கொஞ்சம் கொஞ்சமாக யாரும் அழைக்காமலேயே வேட்டையாடுதலில் ஈடுபடத் தொடங்கிவிடும்.

ஆனால், நம் ‘லெனி’ தான் வித்தியாசமானவனாயிற்றே. மற்றச் சிங்கங்கள் போல் இருந்திருந்தால் அவன் லெனி அல்லவே. மூன்று வயது ஆகியும் இன்னும் தன் தாய்மார்கள் வேட்டையாடுவதை வேடிக்கைப் பார்க்கக் கூட ஆர்வமில்லாமல் அமர்ந்திருப்பவன் தான் லெனி.

இன்றும் அதே போல், அம்ராவும் மற்றப் பெண் சிங்கங்களும், அஸ்லானும் அவரின் இரண்டு சகோதரர்களும் மைலோவையும் பாப்பியையும் தங்கள் இருப்பிடத்திலேயே விட்டுவிட்டுச் செல்ல, லெனி அங்கேயே இருந்தான்.

மற்ற அனைவரும் என்றால்? ஆண் சிங்கங்களுமா? அஸ்லானும் அவரின் சகோதரர்கள் கூடவா?

பெண் சிங்கங்கள் தான் வேட்டையாடும். ஆண் சிங்கங்கள் உழைக்காமல் பெண் சிங்கங்களால் வேட்டையாடப்படும் உணவை நோகாமல் உண்டு உறங்கும் என்று தானே கேள்விப்பட்டிருப்போம்.

இதென்ன விந்தை? ஆண் சிங்கங்களும் வேட்டையாடச் செல்லுமா?

ஆம். ஆண் சிங்கங்கள் வேட்டையாடும்.

வேட்டையாடவேண்டிய விலங்கு அத்தனைப் பலமாக இருந்தால்!

அந்தப் பலத்தை வீழ்த்தப் பெண் சிங்கங்களின் பலம் போதவில்லை என்றால்!

இரையை வீழ்த்த ஆண் சிங்கத்தின் பலம் கட்டாயம் தேவை என்றால்!

ஆண் சிங்கங்கள் வேட்டையில் இறங்கும்.

‘ஆஸ்கர்’ குடும்பம் இப்போது பதினான்கு உறுப்பினர்களைக் கொண்டது. அந்தப் பதினான்கில் மைலோவும் பாப்பியும் மட்டும் சமீபத்தில் பிறந்த குட்டிகள். மாமிசம் உண்ணும் அளவிற்கு அவர்கள் இன்னும் வளரவில்லை என்பதால், மாமிசம் உண்ணும் வயதிலிருக்கும் சிங்கங்களின் எண்ணிக்கைப் பன்னிரெண்டு.

அந்த எண்ணிக்கையிலிருந்து லெனியை விளக்கிவிட்டால், பதினொன்று.

மொத்தம் பதினோறு சிங்கங்களின் வயிறுகள் நிறையும் அளவிற்கு இறைச்சி வேண்டுமே. அதற்கு ஒரு மானையோ, மயிலையோ வேட்டையாடினால் போதாதே. அரை வயிறுக் கூட நிரம்பாதே.

அனைவரின் வயிறுகளும் நிறைய வேண்டுமெனில், அதோ ஆங்காங்கு நீர்த்தேங்கியிருக்கும் பகுதிகளில் மேய்ந்துக்கொண்டிருக்கும் காட்டெருமைகளில் ஒன்றை வேட்டையாட வேண்டும்.

பெண் சிங்கங்கள் நுட்பமாக வேட்டையாடக்கூடியவை. வேகமாக ஓடக்கூடியவை. ஆனால், எடை அதிகமானக் காட்டெருமைகளை வீழ்த்தப் பெண் சிங்கங்களின் உடல் எடைப் போதுமானதல்ல. காட்டெருமைகளைத் துரத்திப் பிடித்துத் தாக்கி ஓரிடத்தில் நிற்க வைப்பது பெண் சிங்கங்கள் தான் என்றாலும், அதைத் தரையில் சாய்க்க ஆண் சிங்கத்தின் பலமும், உடல் எடையும் நிச்சயம் தேவை. அதே நேரம், உடல் எடை அதிகமாக இருக்கும் காரணத்தால் ஆண் சிங்கங்கள் வேகமாக ஓடமுடிவதில்லை.

வேட்டைத் தொழிலில், இருபால் சிங்கங்களுக்கும் தத்தம் பணிகள் உண்டு. ஆண் சிங்கங்கள், உட்கார்ந்து உண்பவையல்ல.

மைலோ, பாப்பி மட்டும் ஆஸ்கர் குடும்பத்தின் இருப்பிடத்திலேயே இருக்க, லெனியைத் தவிர, மற்றச் சிங்கங்கள் அவ்விடத்தைவிட்டு நகர்ந்தாயிற்று.

மற்றச் சிங்கங்கள் கண்ணைவிட்டு மறைந்ததும், வேகமாக எழுந்த லெனி, வேறு திசையில் விரைவாக ஓடலானான்.

வேட்டைக்கும் தனக்கும் பல மைல் தூரம் என்று ஒதுங்கியிருக்கும் லெனி, இந்த இரவு நேரத்தில், மணிக்கு நாற்பது மைல் வேகத்தில் ஓடுவதெங்கே!

வேட்டையாடவா?

வேட்டையாடப்படுவதில் இருந்து காப்பாற்ற.

யாரை?

தன் மான்குட்டி நண்பனான மெல்வினை.

தன் குடும்பத்தினர் வேட்டைக்குக் கிளம்பும் ஒவ்வொரு முறையும், மெல்வினை எச்சரிப்பதும், அவன் ஆபத்தில் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு வருவதும் லெனியின் வழக்கம்.

பின்னே! லெனியின் ஒற்றைத் தோழனல்லவா மெல்வின்.

தாவரங்கள் உண்ணும் லெனியைப் பார்த்தால் ஆஸ்கர் குடும்பத்துச் சிங்கங்களுக்கு வெறுப்பு. அதனால், லெனியின் நிலை, ‘தனிமை’.

தாவரங்கள் உண்பதால் மட்டும், ஒரு சிங்கத்தைத் தன் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளுமா மற்ற விலங்குகள்? இவனால் நமக்கு ஆபத்து இல்லை என்று நம்பிவிடுமா?

உருவத்தில் மாமிசவுண்ணியாகவும், உணவுப்பழக்கத்தில் தாவரப் பட்சினியாகவும் இருக்கும் லெனியைத் தன்னோடு சேர்த்துக்கொண்டு நண்பனாக ஏற்றுக்கொண்ட ஒரே உறவு மெல்வின் மட்டும் தான்.

அதனாலேயே மைலோவையும், பாப்பியையும் தனியே விட்டுவிட்டு நண்பனின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள ஓடினான் லெனி.

சிங்கக்குட்டிகள் இதுபோல் தனித்துவிடப்படுவது அபூர்வம் இல்லை. வழமை தான். மனிதர்கள் போல் பிறந்த குழந்தையைக் கைக்குள்ளும், கண்ணுக்குள்ளும் வைத்துப் பார்த்துக்கொள்ளும் அளவிற்கு, சிங்கங்கள் தம் குட்டிகளைப் பார்த்துக்கொள்வதில்லை. கங்காருக்கள் போல் மடியிலேயே தூக்கிக்கொண்டு அலைவதில்லை.

சிங்கக்குட்டிகளுக்குப் பெற்றோரிடமிருந்துக் கிடைக்கும் அக்கறையும் கவனமும் (Parental Care) ரொம்பவும் குறைவு.

இதுபோல் பல இரவுகள் குட்டிச் சிங்கங்களைத் தனியே விட்டுவிட்டுத் தாய்மார்கள் வேட்டைக்குச் செல்வதுண்டு.

அவ்வேளைகளில் சிங்கங்களின் எதிரிகளிடம் மாட்டி, உயிர்துறக்கும் குட்டிகள் பல.

அதனாலேயே, ஒரு வயதைத் தாண்டி உயிர்வாழும் சிங்கங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

காடு கும்மிருட்டைத் தத்தெடுத்திருக்க, காடெங்கும் பூச்சிகளின் கீச்கீச் ஒலி நிறைந்திருந்தது. அந்த இருட்டிலும், மரத்தின் மேல் நின்றிருந்தவனின் கண்களுக்கு நடப்பவை அனைத்தும் தெள்ளத்தெளிவாகத் தெரிந்தது.

லெனி அங்கிருந்துச் செல்வதைப் பார்த்த அவ்விருவிழிகளின் பார்வைத் தனியே விடப்பட்ட மைலோ, பாப்பி மீது நிலைத்து நின்றது.

அப்பார்வையில் சிக்கிய மைலோவும், பாப்பியும் தப்புவரா?

அந்தக் கண்களுக்குரியவன் செய்யப்போகும் காரியம் ‘ஆஸ்கர்’ குடும்பத்தின் எதிர்காலத்தை எப்படி புரட்டிப்போடுமோ?

** ** ** ** ** **

வீட்டைவிட்டு வெளியேறிக் கப்பல் போன்ற மகிழுந்து ஒன்றின் ஓட்டுநர் இருக்கையில் லெனின் நிரஞ்சன் ஏற, கமலியோடு பாட்டியும் பின் இருக்கையில் ஏறிக்கொண்டனர்.

வாயைப் பிளந்து மகிழுந்தைப் பார்த்தப் பாட்டி, “இது இம்போர்ட்டெட் கார் இல்ல!” என்று கேட்க “ஆமாம்” என்றாள் கமலி.

“இப்போல்லாம் எல்லா ஹீரோவும் இந்த மாதிரி விலையுயர்ந்த ஃபாரின் கார் தான் வச்சிருக்காங்க. என் ஹீரோ மட்டும் ஹோண்டா சிட்டி, ஸ்விஃப்ட்ன்னு வச்சிருந்தா நல்லாவா இருக்கும். அதான் கூகிள்ல தேடி ஒரு காஸ்ட்லி கார் ஒன்னைக் கண்டுபிடிச்சி, என் ஹீரோ அதை வச்சிருக்க மாதிரி கற்பனைப் பண்ணிட்டேன்” என்றாள் கமலி.

“அடிப்பாவி. இவ்ளோ விலைக் குடுத்து காரை வாங்கி வச்சிருக்கானே. இவனோட மாச வருமானம் எவ்ளோ? சொத்து மதிப்பு எவ்ளோ?” என்று பாட்டி கேட்க, “ஹான்... அது? மாச வருமானத்துக்கு ஒன்னுக்குப் பக்கத்துல ஒரு ஆறு, ஏழு சைஃபர் போட்டுக்கோ. சொத்து மதிப்புக்கு ஒரு பத்துப் பன்னெண்டு சைஃபர் போட்டுக்கோ” என்றாள் கமலி.

“அவ்ளோவா???” என்று பாட்டி அதிர, “என்ன நீ? இதுக்கே வாயைப் பொளக்கற? இதைவிட அதிகமா சொத்து வச்சிருக்க ஹீரோ எல்லாம் இருக்காங்க தெரியுமா?” என்று பதிலளித்தாள் கமலி.

“நீ பாட்டுக்கு உன் இஷ்டத்துக்கு சைஃபர் சேர்க்கறியே. இதுக்கெல்லாம் என்ன Source of Income? எப்படிச் சம்பாரிக்கறாங்க?” என்று பாட்டி கேட்க, “நீ மனசாட்சி தான. அப்புறம் ஏன் இன்கம் டேக்ஸ் ஆஃபிசர் மாதிரி பேசற?” என்று முறைத்தாள் கமலி.

“அது ஏன்? இப்படி வருமானம் பல சைஃபர்ல இருக்க மாதிரித் தான் ஹீரோ இருக்கனுமா? மிடில் க்ளாஸ் ஹீரோ எல்லாம் இருக்கக் கூடாதா?” என்று பாட்டி கேட்க, “இருக்கலாம். ஆனா, அந்த மாதிரி ஹீரோ எல்லாம் குடும்பக் கதைக்குத் தான் சரிப்பட்டு வருவான். ஆன்ட்டி-ஹீரோவா எல்லாம் போட முடியாது” என்றாள் கமலி யோசித்துவிட்டு.

“ஏன்?” என்று பாட்டி மெய்யாகவே புரியாமல் கேட்க, “என்ன பாட்டி கேக்கற நீ? இப்போ ஹீரோ போய் ஹீரோயின பார்ப்பான். அவ பிடிக்கலன்னு சொன்னா அவளைக் கடத்தனும். கடத்துற அடியாளுக்குப் பேமென்ட். அப்புறம் ஹீரோயின ஒரு பங்களால அடைச்சி வைக்கணும். பணக்காரன்னா அவனுக்கே சொந்தமா ஆள் நடமாட்டமில்லாத இடத்துல பங்களா இருக்கும். மிடில் க்ளாஸ் ஹீரோன்னா, அப்படி ஒரு பங்களா பார்த்து, வாடகைக்கு எடுத்து காசு குடுக்கணும். அங்க காவல் காக்குறவங்களுக்குப் பேமென்ட் வேற.

ஹீரோயினோட அப்பா அம்மா பொண்ணைக் காணோம்ன்னு கம்ப்ளைன் குடுப்பாங்களா இல்லையா!. அதைக் கண்டுக்காம இருக்க போலிஸை வேற கவனிக்கணும். கடத்துறதுக்கே இவ்ளோ செலவு.

கடத்திக் கல்யாணம் பண்ணி, ஹீரோயின் Pregnant ஆனப்புறம், இல்லைன்னா குழந்தைப் பிறந்ததுக்கு அப்புறம் ஹீரோ திருந்துவான்.

அப்போ எம்புட்டு செலவு இருக்கு. ஹீரோயினுக்கு டைமண்ட் நகை முதற்கொண்டு வாங்கி, உச்சி முதல் பாதம் வரை அலங்கரிக்கணும். கால்ல கொலுசு போட்டா கூட, அதுல கோஹினூரை மாட்டி விடணும்.

எந்திரன் படத்துல வர்ற சிட்டி ரோபோ சனாக்கு வாங்கி வச்ச மாதிரி, சிவாஜி ரஜினி ஸ்ரேயாவுக்கு வாங்கி வச்ச மாதிரி, ட்ரெஸ், நகை, குழந்தைக்குத் தேவையானதுன்னு எல்லாம் வாங்கி வீட்ல அடுக்கி வச்சு ஹீரோயினைச் சமாதானம் செய்யணும். மிடில் க்ளாஸ் ஹீரோவா இருந்தா கடன்ல மூழ்கி, EMI கட்டியே நொந்துட மாட்டான்?” என்று திடீரென படு லாஜிக்காகப் பேசினாள் கமலி.

“இவ்ளோ இருக்கா? அதெல்லாம் சரி. ஆனா, ஹீரோயினுக்குத் தான் கல்யாணத்துலயே இஷ்டமில்லையே. அப்புறம் எப்படி...! கர்ப்பம் கொழந்தை எல்லாம்?” என்று பாட்டி கேட்க, “அவளுக்கு இஷ்டமில்லைன்னா என்ன? அதான் ஹீரோவுக்கு இஷ்டமிருக்குல்ல...” என்றாள் கமலி.

“ஓஹ். அப்போ ஹீரோவுக்கு இஷ்டமிருக்கு. அதுக்காக எல்லாம் நடந்துடுமா?” – பாட்டி

“ஆமாம். நடக்கும்” – கமலி.

“எல்லாமா?” – பாட்டி

“ஆமாம். எல்லாம்!” – கமலி.

“அப்படி ஹீரோயினுக்கு இஷ்டமில்லாம நடந்தா அதுக்குப் பேரு...” என்று பாட்டி முடிக்கும் முன்னரே பாட்டியின் வாய் மீது கை வைத்துப் பொத்தியிருந்தாள் கமலி.

“அதெல்லாம் நீ சொல்லக் கூடாது. எதுக்குச் சொல்ற நீ?” என்று மிரட்டினாள் கமலி.

“சொல்லுவேன். இதெல்லாம் அநியாயம்” என்றார் பாட்டி.

“Everything is Fair in Love and War” என்றாள் கமலி.

“எது? ரேப்பா?” என்று பாட்டி கேட்க, “ஹீரோ பண்ணா அது பேர் ரேப் இல்ல பாட்டி. அது கொஞ்சம் ஓவர் லவ்வுல ஹீரோ கொஞ்சம் அப்டி இப்டி தான் நடந்துக்குவான்” என்று நியாயப்படுத்தப் படாதப்பாடுபட்டாள் கமலி.

“இதனால பாதிக்கப்படுறது அந்தப் பொண்ணு தான!” என்று பாட்டி வருத்தப்பட, “அதான் அவனே அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிப்பான்ல” என்றாள் கமலி.

“இதென்ன நியாயம்? திருடுனவன் பேர்லயே வீட்டை எழுதி வைக்கற மாதிரில இருக்கு. இந்தக் காலத்துல கிராமத்துப் பஞ்சாயத்துல கூட இப்படியெல்லாம் தீர்ப்புக் குடுக்க மாட்டாங்க!” என்று பாட்டி சொல்ல, “அட. என்ன பாட்டி உனக்கு நாட்டு நடப்பே தெரியல. இப்போயெல்லாம் சுப்ரீம் கோர்ட்ல கூட, ரேப் பண்ணவனைப் பார்த்து, இவனைக் கல்யாணம் பண்ணிக்கறியான்னு தான் கேக்கறாங்களாம்” என்றாள் கமலி.

“என்ன சொல்ற?” என்று பாட்டி அதிர, “நாம இறங்க வேண்டிய இடம் வந்துடுச்சு. இன்னும் என்ன குசுகுசுன்னு பேசிக்கிட்டு இருக்கீங்க” என்று லெனின் நிரஞ்சன் பின்னால் திரும்ப, “ஒன்னுமில்லையே” என்று ஒருசேரத் தலையாட்டினர் கமலியும், பாட்டியும்.

“ம்ம்ம்” என்றவன், மகிழுந்தின் பின்னோக்குக் கண்ணாடியில் முகத்தைப் பார்த்து, அதில் பத்து நிமிடங்களாய் தலையைச் சீவுவதும், கலைப்பதுமாக இருந்தான்.

“கார்ல கண்ணாடி எதுக்கு வச்சா. இவன் எதுக்குப் பயன்படுத்தறான் பாரு” என்று பாட்டி லெனினுக்குக் கேட்கும்படியே சொன்னார்.

“என் கார். என் கண்ணாடி. என் தலை. என் முடி” என்று அவன் சொல்லிய வார்த்தைகளைக் கேட்ட பாட்டிக்கு, ‘என்ன வேணும்னா பண்ணுவேன். உனக்கென்ன’ என்று அவன் சொல்லாமல் விழுங்கிய வார்த்தைகளும் சேர்ந்தே புரிந்தது.

‘அதான! எனக்கென்ன! ஆனா, இவன் என்ன பண்ணாலும் எனக்கு ஏன் இவ்ளோ இரிட்டேட் ஆகுது? எல்லாம் இவ குடுக்கற பில்ட்-அப்’பால தான்” என்று பாட்டி கமலியை முறைக்க, அவளோ பாட்டியைத் திரும்பியும் பார்க்காமல் லெனினை ரசித்துக்கொண்டே, தன் கற்பனைத் திறனை நினைத்துப் பிரமித்துக்கொண்டிருந்தாள்.

‘ஐயோ கமலி. நீ கற்பனைப் பண்ண ஹீரோ இவ்ளோ அழகா இருக்கானே! இந்தக் கதை ஹிட்டாகி ஒருவேள படமா எடுத்தா என்ன பண்றது? கோலிவுட், பாலிவுட், டோலிவுட்ன்னு எந்த வுட்லயும் இவன் அளவுக்கு எந்த ஹீரோவும் அழகா இல்லையே. ஹீரோவுக்கு நான் என்ன பண்ணுவேன்!’ என்று தன் கதைக்கு Cast & Crew தேர்வில் இறங்கிவிட்டவளை நடப்புக்கு அழைத்து வந்தது லெனினின் அழைப்பு.

“ஹேய் டெடி!” என்று லெனின் அழைக்க, “என்னையா?!” என்று திரும்பிப் பார்த்த கமலி, அவன் மகிழுந்தின் கதவைத் திறக்கக் கீழே இறங்கினாள்.

“ஆமாம். யூ லுக் லைக் டெடி பியர்” என்று லெனின் சொல்ல, அந்த வார்த்தைகளில் மயங்கிக் கிடந்த கமலியைப் பார்த்துத் தலையில் அடித்துக்கொண்டார் பாட்டி.

‘பார்க்கக் கரடி மாதிரி இருக்கன்னு சொல்றான். அதுக்குப் போய் இப்படி ரியாக்ஷன் குடுக்கறா பாரு!’ என்று நினைத்துக்கொண்டார்.

“டெடி. இப்போ நம்ப காலேஜ் உள்ள போகப் போறோம். அங்க என் ஆளு இருப்பா. அவளைப் பார்க்கவேண்டியது இருக்கும். இந்தப் பாட்டி பியுட்டி கண்டிப்பா உள்ள வந்தே ஆகணுமா? இங்கேயே கழட்டி விட முடியாதா?” என்று லெனின் அவள் காதில் கேட்க, “எனக்கும் ஆசை தான் லெனி. ஆனா, அது மனசாட்சியாச்சே. அதைக் கழட்டிவிட வழியில்ல. என் கூடவே தான் வரும்” என்று பதிலளித்தாள் கமலி.

வேறு வழியில்லாமல் பாட்டியையும் மகிழுந்தை விட்டு கீழே இறக்கி மகிழுந்து நிறுத்துமிடத்திலிருந்து அந்தக் கல்லூரியின் மேலாண்மைக் கட்டிடத்தை நோக்கி நடக்கத் தொடங்கினர்.

இவர்கள் இறங்கிய நேரம் தளிர் ஓட்டுநருடன் வேறொரு மகிழுந்தில் வந்திறங்க, அவளைத் திரும்பியும் பார்க்காமல் நடந்தான் லெனின்.

தளிர் லெனினையே பார்த்துக்கொண்டிருப்பதையும் லெனின் நிரஞ்சன் அவளைக் கண்டும் காணாமல் நடந்துச் செல்வதையும் அங்கிருந்த வேறொரு மகிழுந்தினுள் அமர்ந்திருந்தவனின் கண்கள் நோட்டமிட்டது.

லெனின் நிரஞ்சனைக் கண்காணிக்க வந்த அக்கண்களில் சிக்கினாள் தளிர்.

அந்தக் கண்களுக்குரியவனின் மூளை இப்போது சொல்லும் யோசனையை அவன் செயல்படுத்தினான் என்றால், அது தளிரையும், லெனின் நிரஞ்சனையும், அவர்கள் குடும்பத்தையும் எவ்வாறெல்லாம் பாதிக்குமோ?

 
அத்தியாயம் – 4 :



தன் குடும்பத்தினருக்குத் தெரியாமல் அவர்களைப் பின்பற்றி, அவர்களின் குறி எருமைகள் மேல் தான் உள்ளது, தன் மான் நண்பனின் உயிருக்கு ஆபத்தில்லை என்பதை முடிவு செய்து கொண்டு தங்கள் இருப்பிடத்திற்குத் திரும்பினான் லெனி.

வந்தவன் முதலில் தேடியது மைலோவையும், பாப்பியையும் தான். புற்களுக்கு நடுவே, புதர்களுக்கு நடுவே என்று எங்குத் தேடியும் காணவில்லை.

இரு குட்டிகளும் வழக்கமாக அமரும் இடம், உறங்கும் இடம், உலாவும் இடம் என்று எங்குத் தேடியும் காணவில்லை.

லெனி தேடி ஓயவும், மற்ற சிங்கங்கள் வேட்டையாடி, உண்டு முடித்துத் திரும்பவும் சரியாக இருந்தது. அவர்கள் வந்ததும் லெனி அம்ராவிடம் சென்று முறையிட, அம்ரா தேடத்தொடங்கினார்.

அங்கும் இங்கும் தேடியவர், கர்ஜித்துத் தன் குட்டிகளை அழைக்க, பதிலில்லை. மற்றப் பெண் சிங்கங்கள் எதுவும் தேடுவதில் ஆர்வம் காட்டவில்லை. மற்ற இரண்டு ஆண் சிங்கங்களும் கண்டுக்கொள்ளாமல் இருக்க அஸ்லான் மட்டும் சத்தமாக ஒரு கர்ஜனையை வெளியிட்டார்.

ஒருவேளை மைலோவும், பாப்பியும் இங்கு இருந்தார்களானால், அந்தக் கர்ஜனையைக் கேட்டதும், பெற்றோர் தன்னை அழைப்பதை உணர்ந்து ஓடி வந்திருப்பர். ஆனால், அப்படி நடக்கவில்லை. அவர்கள் வரவில்லை.

எங்குச் சென்றிருக்கக்கூடும்? அவர்களாக எங்கும் சென்றிருக்கமாட்டார்கள். யாரோ தூக்கிச் சென்றிருக்க வேண்டும்.

யார் தூக்கிச் சென்றிருப்பார்கள்? லெனி யோசித்தான். அம்ராவும், அஸ்லானும் யோசிக்கவில்லை. அவர்களுக்குத் தெரியும். இரண்டு நாட்கள் முன்பு இரண்டு குட்டிகளையும், தூக்கிச் செல்ல முயற்சித்த சிறுத்தை ‘நமிர்’ தான் தூக்கிச்சென்றிருக்கக்கூடும்.

நமிர் இரண்டு நாட்கள் முன்பு, இதே போல் மற்றச் சிங்கங்கள் வேட்டைக்குச் சென்றிருந்த போது குட்டிகளைத் தூக்கிச் செல்ல முயற்சித்தான். ஆனால், அதற்குள் வேட்டைக்குச் சென்ற சிங்கங்கள் திரும்பி வந்துவிட்டதால் அதன் முயற்சி வீணானது.

தூக்கிச் செல்வதற்காக இரண்டு குட்டிகளையும் கவ்விய நேரம், அஸ்லானின் கண்ணில் பட்டுவிட்டான் நமிர். அதன் பின் உயிருக்குப் பயந்துத் தப்பித்து ஓடி ஒரு மரத்தின் மேலேறி நின்றது.

அன்று நமிர் அஸ்லானிடம் மாட்டாமல் உயிர் தப்பியதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று. சிங்கங்களை விட சிறுத்தைகள் வேகமாக ஓடக்கூடியவை. இன்னொன்று. சிறுத்தைகள் நன்றாக மரம் ஏறக்கூடியவை.

ஒரு வளர்ந்த சிங்கத்துடன் சிறுத்தை எப்போதும் மோதிப்பார்க்க ஆர்வம் காட்டுவதில்லை. ஏனெனில், வளர்ந்த சிங்கங்கள் பலம் பொருந்தியவை. ஆனால் குட்டிகள் தனியே சிக்கினால் சிறுத்தைகள் விடுவதில்லை.

‘இவர்கள் வளர்ந்து எதிர்காலத்தில் நம் உணவில் பங்குப்போடுவர்’ என்பது மட்டுமே சிங்கங்களின் குட்டிகளைப் பார்த்ததும் சிறுத்தைகளுக்குத் தோன்றுவது. அதனாலேயே, கண்ணில் பட்டால் அவர்களைக் கொன்றுவிடுவது.

நமிர் தான் குட்டிகளைத் தூக்கிச்சென்றிருக்க வேண்டும் என்று முடிவுசெய்துவிட்டு, அம்ரா ஒரு திசையில் அவர்களைத் தேடிச்செல்ல, லெனி அதற்கு எதிர்திசையில், அவர்களைத் தேடி நடக்கத்தொடங்கினான்.

அம்ராவையும், லெனியையும் தவிர, வேறு எந்தச் சிங்கங்களும் இதைப் பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

ஏனெனில், பிறந்து ஒரு வருடத்திற்குள் குட்டிகள் மற்ற விலங்குகளிடம் சிக்கி உயிர்துறப்பது வெகு இயல்பு.

மைலோ, பாப்பியைத் தேடும் பயணத்தில் லெனி விடிவதற்குள் அவர்களின் இருப்பிடத்தை விட்டு வெகுதூரம் வந்திருந்தான்.

ஆஸ்கர் குடும்பத்திற்கென இருந்த நிலப்பரப்பை விட்டு வெளியே வந்திருந்தான். அஸ்லானின் கண்காணிப்புக்கு உட்பட்டு, அவரின் பாதுகாப்புக்கு கீழிருந்த இடத்தைவிட்டு வெளியே வந்திருந்தான்.

அங்கு அவன் கண்டது வல்லூறுகளைத் துரத்திவிட்டு, அவைகளின் உணவை உண்டுக்கொண்டிருந்த வேறு இரண்டு சிங்கங்களை. அவை, வீனஸ் மற்றும் சரபி.

வேறு ஏதோ மிருகம் வேட்டையாடி உண்டு மீதம் வைத்திருக்கும் உணவை உண்பதை வைத்தும், எந்தச் சிங்கக்குடும்பங்களின் கண்காணிப்புக்குக் கீழும் வராத நிலங்களில் சுற்றித் திரிவதை வைத்தும், அவை இரண்டும் நாடோடி சிங்கங்கள் என்று புரிந்துக்கொண்டான் லெனி.

நாடோடி சிங்கங்கள்.

மூன்று வயதானதும் குடும்பங்களை விட்டு வெளியே துரத்தப்படும் சிங்கங்கள் அவை. அவைகளில் சில ஐந்து அல்லது ஆறு வயதில் சிங்கக்குடும்பத்தின் தலைமை ஆண் சிங்கத்துடன் சண்டையிட்டு தலைமையைக் கைப்பற்றும்.

அப்படிக் கைப்பற்ற முடியாத சிங்கங்கள் காலம் முழுதும் நாடோடிகளாகவே கழிக்கும். தலைமைப் போட்டியில் தோற்று கூட்டத்தை விட்டு வெளியேறும் முதிர்ந்த சிங்கங்களும் தங்கள் இறுதிக்காலத்தை இப்படி நாடோடிகளாகவே கழிக்கும்.

இப்படி நாடோடிகளாகக் கழிக்கும் காலத்தில் இந்த ஆண் சிங்கங்கள் மற்ற விலங்குகளின் உணவைத் திருடி உண்பதும், மற்ற விலங்குகள் மீதம் வைத்த உணவை உண்பதும் வழக்கம் தான்.

வீனஸ் மற்றும் சரபியைப் பார்த்தால், அவர்களுக்கு லெனியை விட ஒன்றிரண்டு வயது தான் அதிகமாக இருப்பது போல் தெரிந்தது.

அந்நேரத்தில், அவ்விடத்தில் தனியாகச் சுற்றிய லெனியைப் பார்த்து வீனஸும், சரபியும் கூட அவன் நாடோடி சிங்கம் என்று தான் நினைத்தனர்.

நாடோடி சிங்கங்களுக்கு உணவுக் கிடைப்பது அரிது. லெனி தங்கள் உணவில் பங்குக்கு வந்துவிடுவானோ என்று வீனஸும் சரபியும் ஒருசேர கர்ஜிக்க, அந்த உணவு, கர்ஜனை இரண்டையுமே பொருட்படுத்தாமல் அவ்விடம் விட்டு அகன்று தன் வழியில் பயணப்பட்டான் லெனி.

அவன் கண்பார்வையை விட்டு அகலும் வரை, அவனையே பார்த்து எடைப்போட்ட வண்ணம் நின்றிருந்தனர் வீனஸும், சரபியும்.

லெனி கண்ணைவிட்டு அகன்றதும், மீண்டும் உணவில் கவனம் செலுத்தத்தொடங்கினர். ஆனால், ‘லெனி’ யார் என்றக் கேள்வி அவர்களுக்குள் ஓடிக்கொண்டு தான் இருந்தது. அதுவும் உணவைப் பார்த்த ஒரு ஏளனப் பார்வை. நிச்சயம் அவன் நாடோடி சிங்கமாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், நாடோடி சிங்கங்கள் சரியான உணவுக் கிட்டாமல் தவிப்பவை. லெனி நாடோடி சிங்கமாக இருந்திருந்தால், இந்நேரம் இவர்களுடன் சண்டையிட்டாவது அதை உண்ண முயற்சித்திருப்பான்.

ஆனால், லெனியின் உருவத்தை வைத்து கணித்தோமானால், அவனுக்கு மூன்று வயதுக்கு மேல் இருக்கும் என்றே தோன்றியது. அந்த வயதில் ஒரு ஆண் சிங்கம் குடும்பத்தோடு சேர்ந்திருக்கவும் வாய்ப்பில்லையே. லெனியைப் பற்றி எதுவும் கணிக்க முடியவில்லை அவர்களால்.

அவன் கடந்துச் சென்றும் கூட ஏன் அவனைப் பற்றிய யோசனையைக் கலைக்க முடியவில்லை இவர்களால்? ஒருவேளை, அவனுடனான முக்கியமானச் சந்திப்பு எதிர்காலத்தில் நிகழவிருப்பதை அவர்களின் உள்ளுணர்வு இருவருக்கும் தெரிவிக்க முயற்சிக்கிறதோ என்னவோ!

ஆனால், லெனியோ இவர்களைப்பற்றி யோசிக்காமல் தன் தம்பி தங்கையைத் தேடி நடக்கலானான்.

இந்த நொடி, அவர்களைத் தவிர வேறு யாரைப்பற்றியும் யோசனை இல்லை அவனுக்கு.

அடுத்து அவன் யாரைச் சந்திக்கப்போகிறான்... அந்தச் சந்திப்பு அவன் வாழ்வை எப்படி திருப்பிப்போடப் போகிறது என்பதைப் பற்றியும் தான் எந்த யோசனையும் இல்லை அவனுக்கு.

** ** ** ** ** **

பல ஏக்கர் நிலங்களைத் தன்னுள் அடக்கியிருந்தக் கல்லூரி வளாகம் அது.

பொறியியலும், கலை அறிவியல் படிப்புகளும் ஒருசேர இருந்தக் கல்லுரி அது.

கொலை, கடத்தல் என சிங்கமுத்து சம்பாதித்த அத்தனைப் பணத்தையும் கொட்டிக் கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கிய கல்லூரி அது.

ஆடம்பரமானக் கல்லூரி வளாகம். கொஞ்சம் அழகானதும் கூட. அந்த அழகும் ஆடம்பரமும் திரைப்படத்துறையினரை ஈர்க்க, அடிக்கடிப் படப்பிடிப்புகள் நடக்கும் கல்லூரியானது.

அடிக்கடிப் படங்களில் காட்டப்படுவதால், Upper Middle Class மக்களின் கவனத்தை ஈர்த்தது.

Upper Middle Class மாணவர்கள் அதிகமாகப் படிக்கும் அந்தக் கல்லூரியில் தகுதி உதவித்தொகையில் படிக்கும் சில ஏழை மாணவர்களும் உண்டு. Ragging தொல்லைகள் தாங்காமல் அவர்களுள் சிலர் மனவுளைச்சலுக்கு ஆளாவதும் உண்டு.

அந்தக் கல்லூரியின் மொத்தப் பொறுப்பையும் மூன்று வருடங்களுக்கு முன் லெனினின் கையில் கொடுத்துவிட்டார் சிங்கமுத்து.

பதின்ம வயதில் பெற்றோரை இழந்து, பிழைக்க வழியில்லாமல் சுற்றித் திரிந்தவர் கையில் யாரோ கத்தியைத் திணித்து ‘இதைப் பிடித்துக்கொண்டால் காசும் சோறும் கிடைக்கும்’ என்றுச் சொல்லவும், அதை விடாமல் பிடித்துக்கொண்ட சிங்கமுத்துவுக்கும் கடத்தலும், கொலையும் சோறு போடும் புண்ணியத்தொழில் ஆகிப்போனது.

பயமறியா வயதில் தொடங்கியதாலும், எடுத்துக்கூறி நல்வழிப்படுத்த யாருமில்லை என்பதாலும் பிடித்துக்கொண்ட கத்தியைக் கீழே விடுவதைப் பற்றி அவர் யோசிக்கவே இல்லை. திருமணமான புதிதில் சில முறை பூங்கொடி சொல்லிப்பார்த்துவிட்டு அதன்பின் இவர் இப்படித்தான் என்று விட்டுவிட்டார்.

சிறுவயதிலிருந்தே கொலையையும், ரத்தத்தையும் பார்த்து வளர்ந்த லெனினுக்கு அதெல்லாம் தவறே இல்லை என்று பதிந்துப்போனது. ஆயினும், அவனுக்கு இப்படிக் கொலை செய்துத் தான் பிழைக்க வேண்டும் என்று அவசியமாகி விடக்கூடாது என்று தான் அவனைப் பெரிய பள்ளி, கல்லூரி என்று சேர்த்து நன்கு படிக்க வைத்தது. அவன் படித்து முடிப்பதற்குள் கல்லூரி சாம்ராஜ்ஜியம் உருவாக்கி அவன் கையில் ஒப்படைத்திருந்தார் சிங்கமுத்து.

ஆனால், லெனினுக்கோ இதில் ஈடுபாடு இல்லை. கல்லூரியில் தலைமைப் பொறுப்பில் இருப்பதால் அவனுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகமாகவே கிடைத்தது. ஆனால், அவன் மனம் எதிர்பார்த்த வேறொன்று அவனுக்குக் கிடைக்கவில்லை.

பயம்.

அவன் தந்தையைப் பார்ப்போர் கண்ணில் தெரியும் பயம் இவனைப் பார்க்கையில் இருப்பதில்லை. மற்றவர்கள் தன்னைப் பார்த்துப் பயப்பட வேண்டும், நடுங்க வேண்டும் என்று நினைக்கும் அசுர குணம் அவனுக்கு இயல்பாகவே இருந்தது.

அதனாலேயே, சிங்கமுத்துவின் சட்டத்துக்குப் புறம்பான மற்றத் தொழில்களையும் கையில் எடுத்துக்கொள்ளத் துடித்துக்கொண்டிருந்தான்.

வாகனங்கள் நிறுத்துமிடத்தில் இருந்து கல்லூரியின் நிர்வாகக் கட்டிடத்துக்குள் நுழைந்தான் லெனின்.

அந்தக் கட்டிடத்தில் வகுப்புகள் எதுவும் இல்லை. அலுவலகப்பணிகளுக்கென இருந்த கட்டிடம் அது. அதோடு கலையரங்கம், மருத்துவ அறை ஆகியனவும் இருந்தது.

லெனினின் அறை இருந்ததும் அதே கட்டிடத்தில் தான். லெனின் அவனறைக்குள் நுழைய அவன் பின்னேயே சென்றனர் கமலியும் பாட்டியும்.

அவனுடைய நாற்காலியில் அமர்ந்துக்கொண்டு, அவன் மேசையில் அவனுக்காக காத்திருந்தக் கோப்புகளைப் புரட்டத்தொடங்கினான் லெனின்.

“என்ன லெனி? வேலைப் பாக்குற?” என்று கமலி கேட்க, “வேலை இருக்கு கொஞ்சம்” என்றான் லெனி.

“ஐயையே! வேலை இருக்கா. நீ நம்ப நாவல் ஹீரோவா இருக்க எல்லாம் சரிப்பட்டு வர மாட்ட” என்றாள் கமலி.

“ஏன்? ஹீரோன்னா வேலைப் பார்க்கக் கூடாதா?” என்று லெனி கேட்க, “பின்ன? நீ வேலைப் பார்க்கறதை வேடிக்க பார்க்கவா எல்லாரும் நாவல் படிக்கறாங்க. இப்படி எல்லாம் பண்ணிட்டு இருந்தா அவ்ளோ தான். இந்தக் கதை எழுதிட்டு நான் தலைல துண்ட போட்டுட்டு உக்கார வேண்டியது தான்” என்று சொல்லிச் சோகமானாள் கமலி.

கோப்புகளை மூடி வைத்தவன், “சரி சொல்லு. இப்போ நான் ஹீரோவா என்ன பண்ணனும்???” என்று கேட்க, “ஹீரோயின பார்க்கணும்” என்றாள் கமலி.

“சரி. வா பாப்போம்” என்று லெனி தன் இருக்கையை விட்டு எழும்ப, “எனக்குத் தெரியும் லெனி. நான் கேட்டா நீ செய்வன்னு. சரி சொல்லு. நீ யாரை ஹீரோயினா செலெக்ட் பண்ணியிருக்க?” என்று வினவினாள் கமலி.

“என்ன நீ அவனைக் கேட்கற? உனக்குத் தெரியாதா? உன் கதைல யார் ஹீரோயின்னு?” என்று பாட்டி கேட்க, “நான் தான் சொன்னேனே. நான் முன்னாடியே முடிவுப் பண்ணிட்டு எல்லாம் எழுதுறதில்ல. கதையோட போக்கிலேயே அப்படியே எழுதுறது தான். இப்போ என் ஹீரோ யாரை ஹீரோயினா செலெக்ட் பண்றானோ அவளை நானும் ஏத்துக்குவேன்” என்ற கமலி லெனியிடம் திரும்பினாள்.

“சொல்லு லெனி. யாரை லவ் பண்ணப் போற? இந்தக் காலேஜ்ல படிக்கற ஸ்டுடன்ட் யாராவதா? இல்ல இங்க வேலை செய்ற பொண்ணுங்களா? இல்ல இங்க வேலை செய்றவங்களோட பொண்ணுங்களா?” என்று கமலி கேட்க, “ஏன்? நீ சொல்ற மூணு கேட்டகரில தான் ஹீரோயின் இருக்கணுமா?” என்று கேட்டார் பாட்டி.

“அதான் பாட்டி சரியா வரும். இந்தக் கேட்டகரி பொண்ணுங்களா இருந்தா தான் ஆண்ட்டி-ஹீரோ கதைய கொண்டு போகச் சரியா இருக்கும்” என்று கமலி கேட்க, “எப்படிக் கொண்டு போவ? சொல்லு பாப்போம்” என்றார் பாட்டி.

“இப்போ அந்தப் பொண்ணு இவனுக்குக் கீழ வேலை செய்ற யாரோவோட பொண்ணா இருந்தான்னு வையேன். இவன் அவங்க அப்பா கிட்டப் போய் பொண்ண கட்டி வைன்னு கேட்பான். அவங்க அப்பா ‘உன்ன மாதிரி ரவுடி குடும்பத்துக்கு எல்லாம் பொண்ணைக் குடுக்க முடியாது’ன்னு சொல்லுவார். ‘அது எப்டி நீ எனக்கே பொண்ணு குடுக்க மாட்டேன்னு சொல்லலாம்’ன்னு இவனுக்குக் கோவம் வந்து, அந்தப் பொண்ணைக் கட்டாயக் கல்யாணம் பண்ணி, அந்தப் பொண்ணைக் கொடுமைப்படுத்தி, அப்படியே ஒரு ஆண்ட்டி-ஹீரோவா டெவலப் ஆகிடுவான்” என்று கமலி சொல்ல,

“அவன் அந்தப் பொண்ணைப் புடிச்சி தான கல்யாணம் பண்ணிக் குடுக்கக் கேட்டான். அப்புறம் ஏன் அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணதும் கொடுமைப்பண்ணனும்?” என்று கேட்டார் பாட்டி.

“அவங்க அப்பா தான் இவனுக்குப் பொண்ணு குடுக்க மாட்டேன்னு சொல்லி அவமானப்படுத்திட்டார்ல. அவங்கக் குடும்பத்துல யார் என்ன தப்புப் பண்ணாலும், நாங்க ஹீரோயினைத் தான் கொடுமைப்படுத்துவோம். ஏன்னா, அவ தான் பூமித்தாய் மாதிரி பொறுத்துக்குவால்ல” என்றாள் கமலி.

“ஏன்ம்மா. ரவுடி குடும்பத்தை, ரவுடி குடும்பம்ன்னு சொன்னது ஒரு குத்தமாம்மா!

சரி. மத்த ரெண்டு கேட்டகரி?” என்று கேட்டார் பாட்டி.

“ஹான். ஒருவேள. அந்தப் பொண்ணு இங்க படிச்சிட்டு இருக்கு, இல்ல வேலை செஞ்சிட்டு இருக்குன்னு வையேன். இவன் தினந்தினம் அந்தப் பொண்ணைப் பார்த்து மீட் பண்ணி காதலிச்சு, அந்தப் பொண்ணு பிடிக்கலன்னு சொன்னதுக்கு அப்புறம் தொல்லைப் பண்ண ஏதுவா இருக்கும். அப்போ தான ஹீரோயின் இவனைத் தவிர்க்க வழியில்லாம தவிக்க முடியும். அப்போ தான் படிக்கறவங்களுக்கு ஹீரோயின் மேல அனுதாபம் வரும். அப்படியே ஹீரோ மேல கோவம் வரும். அப்படியே ஒரு ஆண்ட்டி-ஹீரோவா ஃபார்ம் ஆய்டுவான்” என்று கமலி சொல்ல பாட்டிக்குத் தலையே சுற்றியது.

“வேலை செய்யற இடத்துல நடக்கற Abuse-க்கு எல்லாம் எப்போடா காதல்ன்னு பேர் வச்சீங்க? Abuse பண்றவன் எல்லாம் எப்போடா ஹீரோவானான்” என்று புலம்பித் தள்ளினார் பாட்டி.

‘இந்தப் பாட்டி எப்போவும் இப்படித் தான் புலம்பிட்டு இருக்கும்’ என்று கண்டுக்கொள்ளாமல் விட்ட கமலி, லெனினிடம் திரும்பி, “நீ சொல்லு லெனி. மூணு கேட்டகரில ஹீரோயின் எந்தக் கேட்டகரி?” என்று கேட்டாள்.

“மூணும் இல்ல” என்று சொல்லி கமலி தலையில் ஒரு செங்கல்லைத் தூக்கிப் போட்டான் லெனி.

“என்ன சொல்ற லெனி? நான் சொல்ற மாதிரி இருந்தா தான கதைக்கு செட் ஆகும். சரி வேற யாருன்னு சொல்லு?” என்று கமலி கேட்க,

“என் அப்பாவோட தொழில் கூட்டாளியோட பொண்ணு அனிக்கா” என்றப் பதில் கமலியின் தலையில் பெரிய பாறாங்கல்லாய் வந்து விழுந்தது.

“எது! பிஸ்னெஸ் பார்ட்னரோட பொண்ணா. இல்ல இல்ல இது சரிப்பட்டு வராது” என்றாள் கமலி.

“ஏன்?” என்று லெனி கேட்க, “பிஸ்னெஸ் பார்ட்னர் பொண்ணு எல்லாம் டாம் & ஜெர்ரி ஜோடி கதைக்குத் தான் சரியா வரும். ஆண்ட்டி-ஹீரோவுக்கு செட் ஆகாது” என்றாள் கமலி.

“சரி. ஆள் எப்டி? ரொம்ப அமைதியா மென்மையா. அவ பேசுறது அவளுக்கே கேக்காத மாதிரி பேசுறவளா இருப்பாளா?” என்று கமலி கேட்க, “நீயே வந்து பார்த்துத் தெரிஞ்சிக்கோ” என்று கமலியை இழுத்துச் செல்ல, பாட்டியும் சென்றார்.

“இதான் அவ ரூம்” என்று லெனின் அனிக்காவின் அறை வாசலில் நின்று கமலியிடம் சொல்ல, அந்த அறையிலிருந்து “கெட் அவுட். ஐ செட் கெட் அவுட்” என்று சத்தமாகக் கத்திக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் குரல் கேட்டது.


“இது!” என்று கமலி கேட்க, “நம்ப ஹீரோயின் வாய்ஸ் தான்” என்றான் லெனின்.
 
“இவ செட் ஆக மாட்டா லெனி. இவ செட்டே ஆக மாட்டா” என்று கமலி லெனினை அவ்விடம் விட்டு இழுத்துச் செல்லப் பார்க்க, “ஏன் செட் ஆக மாட்டா?” என்று கேட்டார் பாட்டி.

“பாட்டி. அவ வாய்ஸ் கேட்டியா. எவ்ளோ சத்தம். சரிப்பட்டு வர மாட்டா பாட்டி. நாளைக்கு நம்ப ஆண்ட்டி-ஹீரோ ஏதாவது கொடுமைப் படுத்தினா, போலிஸ், மாதர் சங்கத்தை எல்லாம் கூப்பிட இவளுக்கு ஃபோன் தேவையே இல்ல பாட்டி. கத்தியே கூப்ட்டுடுவா போல. நம்ப ஹீரோ ரோல் அப்புறம் மொக்கையாகிடும் பாட்டி” என்றாள் கமலி.

“வேற எப்படி இருக்கணும் ஹீரோயின்?” என்று பாட்டி கேட்க, “பார்க்க முயல்குட்டி மாதிரி இருக்கணும். ஓடுறது மான்குட்டி மாதிரி இருக்கணும். முக்கியமா வாய்ஸ் பூனைக்குட்டி மாதிரி இருக்கணும்” என்றாள் கமலி.

பாட்டியிடம் திரும்பிய லெனின், “நீ சொல்லு பாட்டி. பொண்ணு எப்டி. பார்க்க அழகா க்யூட்டா தான் இருப்பா. ஆனா, பார்வை தான் எப்போவும் திமிராவே இருக்கும். பேச்சும். வாய்ஸ்தான் கேட்டீங்கல்ல. போல்ட் வாய்ஸ். யாரும் அவ்ளோ சீக்கிரம் அவளை ஏமாற்ற முடியாது” என்று லெனின் சொல்ல, “சூப்பர். இவ தான் உனக்குச் சரியான ஜோடி” என்றார் பாட்டி.

“அப்படியா பாட்டி” என்று பாட்டியைப் பார்த்து இளித்த லெனின், “இல்ல. இல்ல. இவ சரிப்பட்டு வர மாட்டா” என்று சொன்ன கமலியை முறைத்தான்.

“அவ ஏன் சரிப்பட்டு வர மாட்டா? உன் ஹீரோ சிங்கம் தான. அப்போ ஹீரோயின் அவனுக்குப் பொருத்தமா தான இருக்கணும். இப்படித் திமிரா பெண் சிங்கம் மாதிரி இருக்க பொண்ணை லவ் பண்ணா தான் உன் ஹீரோ சிங்கம்.

இந்த மான்குட்டி, முயல்குட்டி எல்லாம் சிங்கத்துக்கு இரையா இருக்கறது தான் சரி. இணையா இருக்க இல்ல” என்று கமலியிடம் பாட்டி சொல்ல, “ஆமாம் ஆமாம்” என்றான் லெனின்.

“இவன் என்ன இப்போ இந்த பாட்டிக்கு சப்போர்ட் பண்றான். இதுக்கு தான் இந்த ஆன்ட்டி-ஹீரோவை எல்லாம் நம்பவே கூடாது” என்று நினைத்தவள்,

“டேய். இப்போ இந்தப் பாட்டி சொல்றதுக்கு எல்லாம் தலையாட்டு. நாளைக்கு நீ ஏதாவது பண்ணா, இவ உன்ன கோர்ட் கேஸ்ன்னு இழுத்து நிக்க வைப்பா. பாத்துக்க” என்றாள் கமலி.

அந்த நேரம், அனிக்காவின் அறையிலிருந்து இரு ஆஜாகுபானுவாக ஆண்கள் வெளியேற, அவர்களைப் பார்த்து முறைத்தான் லெனின். பதிலுக்கு அவர்களும் முறைத்துக்கொண்டே சென்றனர்.

அவர்கள் சென்றதும், “அனிக்காவோட அண்ணனுங்க இவனுங்க” என்றான் லெனின் பாட்டியிடமும், கமலியிடமும்.

“அப்படியே அவங்கக் குடும்பக் கதையைக் கொஞ்சம் சொல்லிட வேண்டியது தான?” என்று பாட்டி கேட்க, “சொல்லலாமே?” என்று லெனியும் தொடங்க, “இங்க என்ன பண்றீங்க?” என்று கேட்டவாறே அங்கு வந்து நின்றாள் அனிக்கா.

ஐந்தடி உயரம். ப்ளூ ஜீன்ஸும், கருப்பு நிற ஷார்ட் டாப்ஸ் அவளின் மாநிறத் தோளுக்கு அழகாகவே இருந்தது. தோள் தாண்டிக் கொஞ்சம் வளர்ந்திருந்த முடி, திருத்தமாக லேயர் கட் செய்யப்பட்டிருந்தது. கையில் வெள்ளி நிறப் பெரிய கைக்கடிகாரமும், காதோடு ஒட்டியக் குட்டி வளையமும் அணிந்திருந்தாள். நெற்றியில் ‘எங்கே’ என்று தேட வைக்கும் அளவிற்குக் குட்டியாய் ஒரு கருப்புப் பொட்டு.

அவளைப் பார்த்துப் பாட்டி, “வாவ். அழகா இருக்காளே!” என்று வாய் பிளக்க, “ஆமா. அழகா இருக்கா” என்று ஜொள்ளு விட்டான் லெனினும்.

ஆனால் கமலியோ, ‘ஆறு மொழம் சேலை எங்கடா? இடைவரை நீண்டிருக்கும் கூந்தல் எங்கடா? நெற்றியில் திருநீறு கீற்று எங்கடா? கையில் வளையல் எங்கடா? ஜல் ஜல் கொலுசு எங்கடா? காதுல ஜிமிக்கி கம்மல் எங்கடா?’ என்று உள்ளுக்குள் புலம்பிக்கொண்டிருந்தாள்.

“டேய் லெனி. என்ன டா இது ஹேர் கட்? ஜீன்ஸ்? அதுவும் ஷார்ட் டாப்ஸ். ஹீரோயின் எல்லாம் ஜீன்ஸ் போட்டாலும் குர்த்தி தான் டா போடணும். இப்படியெல்லாம் இருந்தா ஹீரோயின்னு ஒத்துக்க மாட்டாங்க டா. அதுவுமில்லாம, லிப்ஸ்டிக் வேற போட்டிருக்கா. லிப்ஸ்டிக் எல்லாம் தமிழ் கதைல வில்லிங்க ப்ராப்பர்ட்டி டா. ஹீரோயின்னா இயற்கையாவே ஆரஞ்சு சுளை போல, இல்லனா ரோசாப்பூ இதழ் போல உதடு இருக்கணும் டா” என்று சொல்ல, அதையெல்லாம் கேட்கும் நிலையில் லெனின் இருந்தால் தானே.

அப்போது தான் லெனினைப் பார்த்தவள், “ஐயோ. ஐயோ” என்று தலையில் அடித்துக்கொண்டாள்.

“டேய் லெனி. நீ ஆண்ட்டி-ஹீரோடா. இப்படியெல்லாம் ஜொள்ளு விடக் கூடாது டா. ஹீரோயினைக் கூட டெரரா தான்டா பாக்கணும்” என்று புலம்பும் போது, கமலியின் இரத்த அழுத்தத்தைக் கணக்கிட்டிருந்தால் உச்சத்தில் இருந்திருக்கும்.

ஆனால், கமலியின் புலம்பலைக் காதில் வாங்காமல், ஹீரோயினை ஸைட் அடிப்பதில் குறியாக இருந்தான் லெனின்.

“டேய். ஆண்ட்டி-ஹீரோன்னா, ஹீரோயின தான் டா அடிக்கணும். இப்படி ஓப்பனா அவள ஸைட் அடிக்கக் கூடாது டா” என்று கமலி கதறுவதைப் பற்றி அவனுக்கு எந்த யோசனையும் இல்லை.

“சார். உங்களைப் பார்க்கப் போலீஸ் ஒருத்தர் வந்திருக்கார். உங்க ரூம்ல உக்கார வச்சிருக்கேன்” என்று அங்கு ஒரு ஊழியர் வந்து சொன்னதைக் கூட அவன் கவனிக்கவில்லை.

அந்தப் போலீஸால், அவன் வாழ்வு எப்படி மாறப்போகிறது என்பதைப் பற்றியும் தான் யோசனை இல்லை அவனுக்கு.

:: :: :: :: :: :: :: ::

 
அத்தியாயம் – 5:



லெனி, அந்த இரண்டு நாடோடி சிங்கங்களைக் கடந்து, நடந்துக்கொண்டிருந்தான்.

இந்தச் சவானா புல்வெளியில் இதுவரை அவன் கண்டிராத நிலங்களை இன்று அவன் கடந்துக்கொண்டிருந்தான்.

காணாத பல புதிய காட்சிகளையும், சில நீர்நிலைகளையும் கண்டிருந்தான்.

அப்படி அவன் இந்தப் பயணத்தில் புதிதாய் ஒன்று சேர்ந்துக்கொண்டது. இதுவரைப் பார்த்திராத ஜீவராசி ஒன்று.

மனிதன்.

காடுகளுக்கு நடுவே வாழும் லெனி, இதுவரை ஊர்களைப் பார்த்திடாத லெனி, இந்தப் பயணத்தில் பார்த்தது ஒரு மனிதனை.

அந்தப் புதிய காணாத அறியவகைக் காட்சிகள் பட்டியலில் சேர்ந்துக்கொண்டது, ஒரு மனுஷி அங்கு ஓடிக்கொண்டிருக்கும் ஒரு சின்ன முயலைக் கொல்ல முயற்சிக்கும் காட்சி.

தூரத்தில் தெரிந்தாள் அவள்.

அவள் எமிலியா.

எமிலியா ரோஸ்.

அளவான உயரம். பால் வெள்ளை நிறம். தோளைத்தாண்டி முதுகில் படர்ந்திருக்கும் ப்ரவுன் நிற வழவழ கூந்தல். அடர்த்தியானக் கண்ணிமைகள் அழகான நீல நிற கண்மணிகளைப் பாதுகாத்துக்கொண்டிருந்தன.

அழுக்கான வெள்ளை நிற சட்டையும், தொளதொளவென நீல நிற ஜீன்ஸும், காலில் ஷூவும் அணிந்திருந்தவள் கையில் ஒரு குத்துக்கத்தி இருந்தது. கண்களில் அகோரப் பசி தெரிந்தது. அந்த முயலைத் தப்பவிடக்கூடாது என்ற தீவிரமும் இருந்தது.

சற்றுத் தொலைவில் மரத்துக்கடியில் ஒரு பையும் இருந்தது. அது அவளுடையதாகத் தான் இருக்கும் என்று யூகிக்க முடிந்தது.

அத்தனையும் கவனித்தபடி அவளை நெருங்கினான் லெனி. ஒரு புதருக்குள் மேய்ந்துக்கொண்டிருந்த முயலைக் குறிப் பார்த்திருந்த எமிலியாவின் பின்னால் நின்றிருந்தான் லெனி.

அப்படி ஒரு உயிரினத்தை முதல் முறையாகப் பார்ப்பவனாதலால் அவள் நிற்பது, நடப்பது, பார்ப்பது என அனைத்தும் விசித்திரமாக, அதைப் பார்க்க ஆர்வமாக இருந்தது லெனிக்கு.

தன் பின்னால் நிற்கும் லெனியை உணரும் நிலையில் இல்லை எமிலியா. அவள் முதுகில் படரும் லெனியின் வலுவான மூச்சுக்காற்றைக் கூட உணராமல் அந்த முயலைக் கொல்வதில் கவனமாக இருந்தாள்.

ஆனால், அத்தனையும் அடுத்த நொடி வீணானது.

இத்தனை நேரம் எமிலியாவைக் கவனிக்காமல் தன்னுடைய உணவின் மீது கவனமாக இருந்த முயல் ஏதோ சத்தம் கேட்டு நாலா பக்கமும் விழித்து விழித்துப் பார்த்து ஓடியே விட்டது.

‘இதோ கொன்றுவிடலாம்’ என்ற நிலையில் கொல்ல முடியாமல் போகவும், பெருத்த ஏமாற்றம் எமிலியாவுக்கு. அந்த ஏமாற்றத்தின் காரணமாக ‘ப்ச்!’ என்று தானாக அசைந்தது அவள் இதழ்கள். இயற்கையிலேயே ரோஜா வர்ணத்திலான இதழ்கள்.

‘ப்ச்!’ என்ற சத்தம் தான் அவள் இப்போது வெளியிட்டது. அதன்முன் அவள் சத்தமாக மூச்சும் விடவில்லையே.

வேறு எந்தச் சத்தம் கேட்டு அந்த முயல் ஓடியிருக்கும். ஒருவேளை, இரண்டு நாட்களாகப் பசித்திருக்கும் அவள் வயிறு கதறியச் சத்தமோ அது?

இல்லை. இல்லை. சத்தம் அவளிடமிருந்து வரவில்லை. அவளுக்குப் பின்னால் இருந்தல்லவா வந்தது. அதையே அவள் இப்பொழுது தான் உணர்ந்து, பின்னால் திரும்பிப் பார்த்தாள்.

திரும்பிப் பார்த்தவள், முகத்துக்கு நேரே இருந்தது லெனியின் முகம். சற்று முன் கேட்ட சத்தம், லெனியின் மூச்சுச் சத்தம்.

இதற்க்கு முன் எமிலியா சிங்கத்தைப் பார்த்ததெல்லாம் புகைப்படங்களிலும், உயிரியல் பூங்காவின் கூண்டுகளிலும் தான்.

முதன் முறையாகக் காட்டுக்குள் ஒரு சிங்கத்தைப் பார்க்கிறாள். அதுவும் இத்தனை நெருக்கமாக.

அவள் முகத்துக்கும், அந்தச் சிங்கத்தின் முகத்துக்கும் இருந்த இடைவேளை ரொம்பவும் குறைவு. அத்தனை நெருக்கத்தில் ஒரு சிங்கத்தை முதன் முறையாகப் பார்த்தவள் உடலில் நடுக்கம்.

‘ஐயோ சிங்கம். எத்தனை வேகமாக ஓட முடியுமோ அத்தனை வேகமாக ஓடிவிடு’ என்று அவளை ஓடச்சொல்லித் துரத்தியது அவள் மனம்.

ஆனால், அந்தப் பதட்டமான நேரத்திலும் எங்கெங்கோ படித்தச் செய்திகளையெல்லாம் அவளின் மூளைத் திரட்டி, யோசித்து, “ஓடாதே!” என்றது அவளை.

அவளும் மனதின் வார்த்தைகளில் மயங்காமல், மூளையின் பேச்சைக் கேட்டு ஓடாமல் அங்கேயே நின்றாள்.

அப்படி அவள் ஒரு சிங்கத்தை இத்தனை நெருக்கத்தில் கண்டும், ஓடாமல் நிற்கும் அளவிற்கு அவள் மூளை என்ன சொல்லியது என்றால், ‘ஒரு சிங்கத்திற்கு நாம் அதைப் பார்த்துப் பயந்துவிட்டோம் என்று தெரிந்துவிட்டால், நாம் அதைப் பார்த்துப் பயந்து ஓடினால், நம்மை விடாமல் துரத்தும்' என்பது தான்.

‘ஓடாமல் வேறு என்ன செய்வது?’ என்று எமிலியா யோசிக்க, அவள் மூளை அதற்கும் பதிலை எடுத்து வீசியதே.

ஒரு சிங்கத்திடமிருந்துத் தப்பிக்க வேண்டுமெனில், நாம் அதைப் பார்த்துப் பயப்படவில்லை என்று அது நம்பும்படி நடந்துக்கொள்ள வேண்டும். ஒரு அடியேனும் பின்னால் எடுத்து வைத்துவிடாமல், அதை நேராகப் பார்த்து நிற்க வேண்டும். அதோடு, நம்மைப் பெரிய உருவமாகக் காட்டிக்கொள்ள வேண்டும். அதற்காகக் கைகளைப் பக்கவாட்டில் நீட்டி, அதை மேலும் கீழுமாக விசுற வேண்டும். அச்செயல் நம்மைப் பெரிய உருவமாகக் காண்பிக்கும்.

இவர்கள் நம்மைப் பார்த்துப் பயப்படவில்லை என்று தெரிந்ததும் சிங்கங்கள் நம்மிடம் சண்டையிடும் எண்ணத்தையும், நம்மைத் துரத்தும் எண்ணத்தையும் கைவிட வாய்ப்புண்டு.

எமிலியா அவள் மூளைச் சொல்வதை அப்படியே செய்ய, அவளின் விசித்திரமானச் செய்கைகளை அங்கேயே நின்று பார்த்துக்கொண்டிருந்தான் லெனி.

சில நிமிடங்கள் அப்படியே நின்று அவள் செய்கைகளைப் பார்த்துக்கொண்டிருந்த லெனிக்கு, தான் எதற்காக இவ்விடம் வந்தோம் என்று நினைவு வர, அங்கிருந்து அகன்றான்.

அவன் சென்றதும் தான் சீராக மூச்சு விட முடிந்தது எமிலியாவுக்கு. அவன் அங்கிருந்துச் சென்றதும் அவ்விடம் விட்டு ஓடிவிட வேண்டும் போலிருந்தது அவளுக்கு.

ஆனால், வழித் தவறி இந்தக் காட்டுக்குள் வந்து சிக்கி இரண்டு நாட்கள் ஆனதல்லவா. இரண்டு நாட்களாகத் திரும்பவும் ஊருக்குள் செல்லும் வழியை முனைப்போடு தேடி அலைந்ததில், அவளுடைய கால்கள் வெகுவாகக் களைத்திருந்தது. இதற்கு மேல் ஒரு அடிகூட எடுத்து வைக்கவே முடியாது என்று அடம்பிடித்தது. இரண்டு நாட்களாக ஏதும் உண்ணாததால், அவள் வயிற்றில் சுரந்த அமிலம் வேறு அவள் வயிற்றிலிருந்த திசுக்களையே அரித்துக்கொண்டிருந்தன.

இந்நிலையில் வேறு எங்கும் செல்ல முடியாமல், அவள் பையை வைத்திருந்த மரத்தின் அடியிலேயே அமர்ந்துவிட்டாள் எமிலியா.

லெனி, எமிலியாவைச் சந்தித்த இடத்திலிருந்து இன்னும் கொஞ்ச தூரம் நடக்க, யாரோ அழும் குரல். ஒருவேளை தன் தங்கையின் குரலாக இருக்குமோ என்ற யோசனையில் குரல் கேட்ட திசையை நோக்கி நடந்தான் லெனி.

அங்கு அவன் பார்த்தது ‘நமிர்’ சிறுத்தையை. நமிருக்கு எதிரில் ஒரு குட்டி உருவம். தூரத்திலிருந்து பார்த்ததில், அது என்ன உருவம் என்று தெளிவாகத் தெரியவில்லை. அடர்த்தியாக வளர்ந்த புட்கள் அந்த உருவம் அவன் கண்ணில் படுவதிலிருந்து தடுத்தது. ஆனால், அது சிங்கக்குட்டி அல்ல என்பது மட்டும் தெரிந்தது.

அந்தச் சிறுத்தையிடம் சிக்கப்போகும் குட்டி, தன் தங்கையோ, தம்பியோ இல்லை என்று உறுதியானதுமே, வேறு திசையில் திரும்ப எத்தனித்த லெனியைத் தடுத்து நிறுத்தியது அழுகுரல்.

அந்த அழுகுரலைக் கேட்டவன் கால்கள் அங்கிருந்து நகர மறுக்க, அந்த உருவம் இருக்குமிடத்தை நெருங்கி அங்கு இருப்பது யார் தான் என்று பார்த்தான் லெனி.

அங்கிருந்தது ஒரு மனிதக் குட்டி. அந்தக் குட்டிக்குச் சற்றுத் தொலைவில் அதன் மீது பாயத் தயாராக இருந்தான் நமிர்.

அந்த மனிதக் குட்டி லெனியைக் கண்டு இன்னும் அழுக, அப்படியே விட்டுச் செல்ல மனமின்றி அவள் அருகில் நின்றான் லெனி.

அந்தக் குழந்தைக்கு அருகில் சிங்கத்தைக் கண்டு நமிர் ஒரு நொடி தயங்கினாலும், அந்தச் சிங்கம் இன்னும் சீரவோ, கர்ஜிக்கவோ இல்லையே.

கர்ஜனை தானே சிங்கம் எதிர்ப்பதையும், எச்சரிப்பதையும் உணர்த்துவது. லெனி தான் கர்ஜிக்கவில்லையே.

அதனால், லெனியின் இருப்பைக் கண்டுக்கொள்ளாமல், அந்தக் குழந்தை மீது பாயத் தயாரானான் நமிர்.

நமிர் நெருங்குவதையும், லெனி தன்னருகில் நிற்பதையும் பார்த்த அந்த மனிதக் குட்டி, “காப்பாத்து ப்ளீஸ்” என்றது லெனியின் பாதத்தை நீவியபடி.

கிட்டத்தட்ட ஏழு, எட்டு வயது இருக்கும் அந்தக் குழந்தைக்கு. உருவத்தை வைத்து, இது சிங்கம், இது சிறுத்தை என்று புரிந்துக்கொள்ள முடிந்த அந்தக் குழந்தைக்கு, சிறுத்தையைப் போல் சிங்கமும் மாமிசம் உண்ணும் மிருகம் தான் என்று தெரியும் தான்.

ஆயினும், நமிரின் கண்களில் தெரியாதக் கருணையும், இரக்கமும் லெனியின் கண்களில் கண்டுக்கொண்டதாலோ என்னவோ! சிறுத்தையிடமிருந்துக் காப்பாற்றச் சொல்லி சிங்கத்திடம் மன்றாடியது குழந்தை.

லெனியின் பாதத்தைப் பிஞ்சு கையால் நீவி, கலங்கியக் கண்களுடன் அவனை நோக்கிய அடுத்த நொடி, சிறுத்தையின் சீறல் சத்தம் கேட்டதாலோ, இல்லை காலையிலிருந்து வெயிலில் ஓய்வில்லாமல் ஓடித் திரிந்ததாலோ அக்குழந்தை மயங்கிச் சரிந்தது.

அதைக் கண்ட லெனியின் மனம் பதைப்பதைக்க, அந்தக் குழந்தையை நெருங்கி வரும் நமிரை அங்கேயே நிற்கும்படி எச்சரித்தான் லெனி.

எப்படி எச்சரித்தான்?

கர்ஜனை வழியாக.

ஆம். பிறந்து மூன்று வருடங்களில் ஒரு முறையேனும் கர்ஜிக்க முயற்சிக்காத லெனி, முதன் முறையாகக் கர்ஜித்தான்.

முன்னேறி வரும் சிறுத்தையை நிறுத்தி வைக்கும் அளவிற்கு ஆதிக்கம் செலுத்தும் கர்ஜனை அது.

** ** ** ** ** **
 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom