Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BL NOVEL நாரிகை - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
983
Reaction score
588
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:
நாரிகை



கதைசுருக்கம்

அன்பு கிடைக்காவிட்டாலும் துன்பம். அளவுக்கு அதிகமாக கிடைத்தாலும் துன்பம். வித்தியாசமான காதல் கதையாக அமையும் புது அனுபவம் கொடுக்கும்

பூவை 1

வந்தவர்களை வாழவைக்கும் சென்னையில் அது இப்போது தான் டெவலப் ஆகி கொண்டே இருக்கும் ஏரியா. அந்த ஏரியாவில் அமைந்திருக்கின்றன ஐம்பதுக்கும் மேற்பட்ட கம்பக்ட் ஹோம். “தனி வீடு, உங்களோட கனவு வீடு நினைவாகனுமா உடனே எங்க கிட்ட வாங்கன்னு", டிவிலயெல்லாம் விளம்பரம் பண்ணி மக்கள ஈர்ப்பாங்களே அந்த மாதிரி வரிசைகட்டி அமைந்திருக்கின்ற வீடுகள். ஹாலிவுட் விவரியம் படத்தில் வரமாதிரி எல்லாத்துக்கும் ஒரே பெயிண்ட் அடிச்ச மாதிரி ஒரே வீடாகவும் ஒரே கலராகவும் இருந்தது. தெரியாதவன் எவனும் இரவில் வந்தால் தன் வீடு எதுவென்று தெரியாமலே குழம்பி விடுவான். அந்த படத்தில் வருவது போல சுத்தி சுத்தி திரும்ப தொலைந்து போவது போல அப்படி ஒத்தார் போல அமைந்து இருந்தது.

ஐம்பது வீட்டில் ஒரு வீட்டின் வாசலில் யாரோ காலிங் பெல்லை கைவிடாமல் அழுத்திக்கொண்டே இருந்தனர்.

டோடக்.. கதவு திறக்கும் சத்தம் கேட்டது. ஷார்ட்சும், டீ சர்ட்டும் அணிந்திருந்த முப்பத்தி ஐந்து வயதை கடந்திருந்த ஒருவன் பல நாள் வெட்டாத தாடியுடன் நின்று கொண்டிருந்தான். ஐம்பது ஈன்ச் யெல்இடி டிவியில் காலை செய்திகள் வெளியில் நிற்பவன் காதை கிழிக்கும் வண்ணம் ஓடிக்கொண்டு இருந்தது.

“யார் வேணும்??“ என்றான் அதட்டல் மொழியில்

“51, வெஸ்ட் அவென்யூ“

டுர்..கதவை நன்றாக திறந்துக்கொண்டு வெளியில் வந்தான். அட்ரஸ் கேட்ட ஆளும் பின்னாலயே வந்தான் இப்போது சிறிதாக இருந்த வீட்டின் முன்பக்க கார்டனை கடந்து வீட்டின் கேட்டை திறந்து ஆளு உயர காம்பவுண்ட் அதை அடைந்து முகப்பு பக்கம் இருந்த அட்ரஸ் போர்டை காட்டினான்.

“இத படிங்க?“

“15, வெஸ்ட் அவெண்யூ“

“ம்.. இப்போ தெரியுதா?“

“ஸாரி சார்…“

“உங்கள பார்த்தா ரொம்ப பதற்றமா இருக்கிங்க. உதடு மட்டும் தான் சிரிக்குது, ஆனா அந்த சிரிப்பு முழுக்க ஏதோ பயமும் பதற்றமும் படிஞ்சி இருக்கு. பேச்சில தடுமாற்றம். பதற்றம், தடுமாற்றம் இதுயெல்லாமே மனிதர்களோட இயல்பு. உங்க வயசு எப்படியும் ஐம்பது இருக்கும், அதனால இந்த அளவு பதற்றம் உங்களோட இதயத்துக்கு நல்லது இல்ல“

அவன் சொல்லும் அனைத்தையும் வாயை பிளந்து “ஆ..“என்று கேட்டு கொண்டு நின்றான் அட்ரஸ் கேட்க வந்தவன்.

தன்னை எழுப்பி கொண்டு “உண்மை தான் சார், இவ்வளவு சொல்றிங்க நீங்க??“

மீண்டும் போர்டை காட்டினான். அதில் “சத்தியேந்திரன், அரசு மனநல மருத்துவர்.“ என்று இருந்தது.

“ரொம்ப சரியா சொன்னிங்க டாக்டர் நான் ராஜா ராம்.. பிரைவேட் ஆபிஸ்ல கிளர்க்கா இருக்கேன். என் தம்பி வீட தான் தேடிகிட்டு இருக்கேன். அவனுக்கும் எனக்கும் எட்டு வருஷமா பேச்சு வார்த்தை இல்ல, திடீர்னு நேத்து போன் பண்ணி பச்ச புள்ள மாதிரி அழுதான். என்னன்னு கேட்ட அவனோட ஒய்ஃப் க்கு ரொம்ப உடம்பு முடியலயாம். அவனுக்கு குழந்தைங்க இல்ல, நான் தானே பாக்கனும் பதறி போயிட்டேன். சார் விடிஞ்சதுல இருந்து அட்ரஸ் தேடிட்டு இருக்கேன் சரியா பிடிபடல வீட்டுல இருக்கவங்களுக்கு எதாவதுன்னா பொண்டாட்டி பாத்துப்பா சார் ஆனா அதே பொண்டாட்டிக்கு எதாவதுன்னா...“, அவன் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

சத்தியேந்திரன் தனக்குள் எதையோ யோசித்துக்கொண்டு “சரி தான்..“ என்று முணங்கி கொண்டான். ஏதோ யோசனையில் மீண்டும் உள்ளே வந்து கதவை சாத்தினான்.

ராஜா ராம், சத்தியேந்திரனிடம் விடைபெற்று கொண்டு தெருவின் முனைக்கு வந்தான்.

அங்கு ஒரு பெண் இவனுக்காகவே காத்து கொண்டிருப்பது போல மிக ஆவலுடன் இவனை எதிர்நோக்கினாள்.

“வாங்க... போன விஷயம் என்னாச்சி??“

“நீ சொன்னது போலவே போய் பேசினேன். நீ சொன்ன படியே அவரும் பேசுனாரு“

“ம்ம்..“

“சரிமா நான் ஒன்னு கேட்பேன் நீ தப்பா நினைக்ககூடாது. அதுவும் என் பொண்ணோட தோழிங்கிறதுனால கேட்குறேன்.“

“அந்த மனுசன இந்த அளவுக்கு புரிஞ்சி வச்சிருக்க?? அதுவும் அவரோட விழி அசைவு வரைக்கும் தெரிஞ்சி வச்சிருக்க ஆனா அவரு உன்ன பத்தி யோசிக்கிற மாதிரியே தெரியலயே?? இப்படி உன்ன பத்தி நியாபக படுத்துன அவரு மாறிடுவாருன்னு நினைக்கிறியா??“

அவளின் கருவிழிகள் சற்று விரிந்து எதையோ யோசிக்க தொடங்கியது.

நடுகூடத்தில் தனியே ஆடிக்கொண்டு இருந்த ஊஞ்சலுக்கு துணை செய்வது போல அமர்ந்துக்கொண்டான்.

டிவியில் காலை செய்திகள் இன்னும் முடியாமல் ஓடிக்கொண்டு இருந்தது.

“சைதாப்பேட்டை அருகே எலி மருந்தை கொடுத்து தன் ஒரு வயது குழந்தையை கொன்று விட்டு தாயும் தற்கொலைக்கு முயற்சி. இது கொலையா? தற்கொலையா? இதற்கு காரணம் தகாத உறவா, ஒரு அலசல் இன்று இரவு ஒன்பது மணிக்கு உங்கள் குற்றமே குற்றம் காணத்தவறாதீர்கள்.“ என்ற இடைவேளை விளம்பரம் ஓடிக்கொண்டு இருந்தது.

சத்தியேந்திரன் ஊஞ்சலில் ஆடிக்கொண்டே அந்த செய்தியை கவனிக்காமல் அவனின் சிந்தனையை எங்கோ சிதற விட்டு கொண்டிருந்தான்.

வீட்டில் இருந்த ஒரு அறையில் இருந்து பெண்மணியின் முனகல் சத்தம் கேட்டது, அதனுடன் இருமலும் அதிகமாக இருந்தது.

சத்தியேந்திரன் மெல்லமாய் அசைந்து கொண்டு இருந்த ஊஞ்சலை கால்களை ஊன்றி நிறுத்திவிட்டு எழுந்து சத்தம் வந்த அறையை நோக்கி சென்றான். கதவு நிலையில் சாய்ந்து கொண்டு உள்ளே அறையை பார்த்தான். இரண்டு மூன்று நாட்கள் சுத்தம் செய்யபடாமல் கிடந்தது. பழச்சாறு பிழிந்துவிட்டு அப்படி அப்படியே பழதோல்கள் கிடந்தது. சாப்பிட்ட தட்டுகள் அங்கங்கு கிடந்தது. கட்டிலில் படுத்த படுக்கையில் கிடந்தார் சத்தியேந்திரனின் அம்மா பாக்யவதி.

அந்த அம்மாவை சுற்றி ஈக்கள் மொய்த்து கொண்டு இருந்தது. பாக்யவதி முகம் ரொம்பவும் வாடிபோய் வாட்டமாக இருந்தது. கட்டிலின் அடியில் தொங்கி கொண்டு இருந்த யூரின்பேக் நிரம்பி போய் இருந்தது. மெல்ல கட்டிலின் அருகே சென்று பாக்யவதி நெற்றியை வருடி கொடுத்தான். உடைந்து அழ தொடங்கினாள். யூரின் பேக்கை ரிமுவ் செய்து விட்டு வேறு பேக் மாற்றிவிட்டான். பாக்யவதி மெல்லமாய் ஆரம்பித்தார் “இதெல்லாம்..“

“அம்மா வேண்டாம் இது என்னோட கடமை, நான் குழந்தையா இருக்கும் போது என்ன நீ தானே பார்த்துகிட்ட இப்போ நீ எனக்கு குழந்தை நான் உன்னோட அம்மா..“ பாக்யவதி மீண்டும் அழுதார். அழுதுகொண்டே “உன்னோட முடிவு??“

“அத பத்தி மட்டும் பேசவே பேசாத என்னோட முடிவு எப்போதும் ஒரே முடிவு தான் அத மாத்தவே முடியாது “ சொல்லிவிட்டு வெளியில் வந்தான். தன் பிள்ளையை நினைத்த பாக்யவதி மீண்டும் கலங்கினாள்.

சத்தியேந்திரன் கிட்சனுக்கு சென்றான். பிரிட்ஜை திறந்து பால் பாக்கெட்டை தேடினான். பால் இல்லை, கிட்சனே தலைகீழாக இருந்தது. சிங் நிறைந்துகிடந்த சாமான்கள் சமையல் மேடை முழுக்க குப்பைகள் பார்க்கவே குப்பைகிடங்கை போல இருந்தது. சில மணி துளிகள் சில நினைவுகள் பற்றி கொள்ள அதை களைந்து விட்டு கிண்டிலில் சுடுநீரை சுடவைத்து கப்பில் ஊற்றி தேயிலைகளை போட்டு கலக்கி பிளாக் டீயை தயார் செய்தான்.

மீண்டும் பிரிட்ஜை திறந்து இரண்டு முட்டைகளையும் ஒரு பிரட் பாக்கெட்டையும் எடுத்து பிரட்டை ரோஸ்டருக்குள் திணித்தான். முட்டைகளை உடைத்து கல்லில் ஊற்றினான் அது ஊச்ச்..என்று பொரிந்தது. பிளாக் டீ ஆவி பறந்தது அடங்கி போய் இருந்தது அதை எடுத்து உதடுகளில் வைத்து ஒரு உறிஞ்சினான் துவர்பு தன்மை அதிகமாக இருந்தது.

“நீ போடுற டீ மட்டும் எப்படி இத்தனை ருசியா இருக்கு??“ தனக்கு தானே பேசிக்கொண்டான். அந்த பிளாக் டீயை அப்படியே கவுண்டர்டாப்பில் வைத்துவிட்டு பிளேட்டில் முட்டையையும் பிரட்டடையும் எடுத்து கொண்டு தன் அம்மாவின் அறைக்கு சென்றான். பாக்யவதி உறங்கி கொண்டு இருந்தார். அதனால் டேபிளில் மூடிவைத்தான். யாரோ கதவு தட்டு சத்தம் கேட்டது.

“மெர்ஸி..“ என்று சொல்லிக்கொண்டே வாசல் பக்கம் வந்து டர்ர்..கதவை திறந்தான்.

“மெர்ஸி..நீ??“

“என்ன சார் கொலைகாரிய பார்த்தமாதிரி இத்தனை அதிர்ச்சி கொடுக்குறிங்க.“

“நீ முழு??இன்னைக்கு??“

“என்ன சார் பாதி கேள்விய முழுங்குறிங்க??“

“யேய் கம் ஆன் நீ லீவ் தான சொன்ன அப்பறம் ஏன் வந்த?“

“ஏன் லீவ் சொல்லிட்டு வரகூடாதா??“

“டிரீட்மென்ட் பண்ணிருக்க இல்ல, கம்பிளிட் ரெஸ்ட் எடுக்க வேண்டாமா?? பேசி கொண்டே ஊஞ்சலை பார்க்க நடந்தான்.

ஊஞ்சலில் அமர்ந்து கொண்டான். அவள் ஊஞ்சலின் சங்கிலியை தடவி கொடுத்தபடியே நின்று பதில் சொன்னாள். “ஒரு நாள் லீவு போட்டா யாரு இந்த மாசம் கிரெடிட்கார்ட் ஈம்ஐ.. லோன்லாம் கட்டுறது.“

“என்ன மெர்ஸி ஒரு நாள் தானே??“

“இல்ல சார் இது சம்பளத்துக்காக மட்டும் இல்ல சிலமணி நேர மனஅமைதிக்காகவும் தான்.“

“யாரோட வந்த, எப்படி வந்த“

“பெர்னட் தான் கொண்டு வந்து விட்டான்.“

“அவன் எப்படி உன்ன அலோவ் பண்ணுனான்.“

“அவன் என்ன பண்ணுவான் பாவம், வேலையும் இல்ல, குழந்தையும் இல்ல ரொம்ப விரக்தியா பேசுறான் சார். அவன இப்போல்லாம் ரொம்ப மிஸ் பண்றன். எப்போதுமே சிரிச்சிட்டு அடுத்தவங்களை சிரிக்க வச்சிட்டு இருக்க பெர்னட்ட பார்க்க முடியுறது இல்ல“

“மெர்ஸி ஏன் இப்படி வாழ்ந்து முடிச்ச மாதிரி பேசுறிங்க?? வாழ்க்கையில பார்க்கவேண்டியது எவ்வளவோ இருக்கு?? உனக்கு டிரீட்மென்ட் கொடுத்த டாக்டர் கிட்ட பேசிருக்கேன். கவலைபட வேண்டாம்னு சொல்லிருக்காங்க இந்த மந்த் கன்பார்ம் ஆகிடுமாம்.. அதுக்கு நீ ரெஸ்ட் எடுக்கனும் மெர்ஸி“

“விடுங்க சார் நான் யாருக்காக கஷ்டபடுறனோ அவங்களே என்ன புரிஞ்சிக்கள அப்பறம் ஏன்?? போங்க சார்?? இந்த பொம்பளைங்க பொழப்பே இப்படி தான்.“

விரக்தியாக பேசிவிட்டு பாக்யவதி அறையை நோக்கி நடந்தாள்.

கதவை திறந்து பார்த்துவிட்டு தலையில் கைவைத்து நின்றாள். பின்னால் இருந்து சத்தியேந்திரன் மெல்லிய புன்னகை வீசி நின்றான்.

“சிரிக்க தெரியுது எங்க டாக்டருக்கு?? ஒரு பேசண்ட் இருக்க ரூம் இப்படி தான் இருக்குமா? வர வர நீங்க ஒரு சைக்காலஜிக்கல் டாக்டர் மாதிரி இல்ல பழைய இரும்பு கடையில வேலை பார்க்குற மாதிரி இருக்கு??“

இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போதே டிரிங்..டிரிங்… என்று சத்தியேந்திரன் மொபைல் போன் ஒலித்தது.

மெர்ஸியிடம் ஒன்மினிட் என கைவிரலை காட்டிவிட்டு கொஞ்சம் தள்ளி வந்து மீண்டும் ஸ்கீரினை பார்த்தான் அன்நோன் நம்பராக இருந்தது யோசித்து கொண்டே மொபைலை ஆன் செய்து காதில் ஒற்றினான்.

“சத்தியேந்திரன் சார்..“

“யெஸ் சொல்லுங்க“

“நான் கிண்டி ஆர்3 ஸ்டேசனுக்கு புதுசா வந்து இருக்க சப்-இன்ஸ்பெக்டர் மைதின்.. இன்ஸ்பெக்டர் காந்தி சார் தான் உங்ககிட்ட பேச சொன்னாரு‘‘

“சொல்லுங்க சார்??“

“முக்கியமான கேஸ் நீங்க தான் கவுன்சிலிங் கொடுக்கனும்னு ஆர்டர் வந்து இருக்கு. பேசண்ட் இப்போ ஹாஸ்பிட்டல்ல இருக்காங்க இன்னும் இரண்டு நாள் கழிச்சி தான் டிரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணனும். அதுக்கு முன்னாடி நீங்க உங்க புரோசிஜர்ஸ்ச கம்பிளிட் பண்ணிட்டிங்கன்னா??“

சத்தியேந்திரன் பக்கம் பதில் ஏதும் இல்லை அமைதியாக இருந்தான்.

“சார்..சார்..“

“இருக்கேன்.“

“என்ன சார் பதில காணும்?“

“ஒன்னும் இல்ல? இன்னைக்கு நான் வரமுடியாது கொஞ்சம் ஒர்க் இருக்கு??“

“ஓ.கே. சார் நீங்க என்னைக்கு வரிங்கன்னு சொல்லுங்க“

“மைதின் சார் நாளைக்கு பார்க்கலாம்.. ஆனா நீங்க இன்ஸ்பெக்டர்கிட்ட ஏதும் சொல்லிக்க வேண்டாம் நான் இன்னைக்கு வரேன்னு சொன்னதாவே சொல்லுங்க லாஸ்ட் மினிட்ல கேன்சல் ஆனா மாதிரி காட்டிக்கலாம்.“

“சார்..“ யோசித்துவிட்டு “சரி சார் சொல்லிக்கலாம்..“

“ஓ.கே. மைதின் சார் நாளைக்கு நம்ப மீட் பண்ணலாம்..“

“சரி சார் நான் லொக்கேசன் ஷேர் பண்றன்.“ கனக்சனை கட் செய்தான். மெர்ஸியும் பாக்யவதியும் எதையோ சீரியஸ்சாக பேசிக்கொண்டு இருந்தனர். சத்தியேந்திரனின் தலை தெரிந்ததும் பேச்சை நிறுத்திவிட்டனர்.

“என்ன என்ன கண்டதும் பேச்சை நிறுத்திட்டிங்க..“

“எதபத்தி சார் பேசபோறோம் உங்க லைப் பத்தி தான், அம்மா ரொம்ப வருத்தபடுறாங்க சார்.“

“மெர்ஸி பிளீஸ் நீயும் ஆரம்பிச்சிடாத. இதபத்தி பேசி நான் ரொம்ப டயர்ட் ஆகிட்டேன்.“

“அது இல்ல“

“பிரட் ஆம்ப்லேட் செஞ்சி வச்சிருக்கேன் அம்மாவுக்கு கொடு..ஹவுஸ் கிளினிங்கு ஆள் சொல்லிருக்கேன் பத்துமணிக்கு மேல வருவாங்க..நீ ரெஸ்ட் எடு மதியத்துக்கு எதாவது ஆர்டர் பண்ணிக்கோ நான் பே பண்ணிக்கிறேன்.“

“டயப்படிஸ் பேசண்ட்டுக்கு பிரட்டா?? போங்க சார் நான் எதும் டிபன் செஞ்சி கொடுக்குறேன்.“

“மெர்ஸி நீ எதாவது செய் ஆனா ரொம்ப ஸ்டெர்ய்ன் பண்ணிக்காத..“

“எப்போதும் நமக்கு கிடைக்கிற அக்கறை வெளியில இருக்கவங்ககிட்ட இருந்து தான் அதிகமா கிடைக்குது.“ மெர்ஸி சிரித்தாள்.

சத்தியேந்திரன் தன் அறைக்கு சென்று குளிக்க டவலை எடுத்து கொண்டு பாத்ரூமிற்கு சென்றான். வாஸ்பேசன் அருகே இருந்த கண்ணாடியை பார்த்தான் அடர்ந்து கிடந்த தாடியும், சிவந்து போய் கிடந்த கண்களும் ஏதோ பல நாள் கோமாவில் இருந்தவன் போல காட்டியது. அடையாளேமே தெரியலையே சத்யா இப்படி இருக்க இப்போ தான் இந்த ஒரு வாரகாலமா தான் இப்படி ஆகிட்டேன். தனக்கு தானே பேசிக்கொண்டான். கண்ணாடி ஓரம் அதில் ஒட்டி இருந்த ஸ்டிக்கர் பொட்டை பார்த்தான். தன் இருவிரல்களால் மெல்ல வருடினான். அந்த ஒற்றை பொட்டு யாரையோ தொலைத்து அவர்களின் வருகைக்கு காத்திருப்பது போல ஒட்டி இருந்தது. சத்தியேந்திரன் தொண்டைக்குழிக்குள் சோகமும், துக்கமும், அழுகையும், அறியாமையும் உமிழாய் வலியுடன் இறங்கியது. பெரும் மூச்சொன்றை விட்டான். குளித்து முடித்துவிட்டு தலையை துவட்டி கொண்டே தன் மொபைலை எடுத்து ஏதோ நம்பரை தேடி டயல் செய்தான்.

டிரிங்..டிரிங்.. எதிர் முனையில் ரிங் போனது.

“ஹலோ சத்தியேந்திரன்..“

“மார்னிங் திருமலை சார்..“

“மார்னிங் ஸார்ப்பா பதினோரு மணிக்கு வந்துடுங்க.“

“அதகேட்க தான் போன் பண்ணினேன். சரி சார் நான் கிளம்பிட்டேன் வந்துடுறேன்.“

“நேர்ல மீட் பண்ணலாம் சத்தியேந்திரன்.“

உடை மாற்றி தன்னை தயார் படுத்திக்கொண்டு அறைக்கதவை திறந்து கொண்டு வெளியில் வந்தான். மெர்ஸி கிட்சனில் ஏதோ செய்து கொண்டு இருந்தாள்.

“மெர்ஸி நான் கிளம்புறேன்.“

“சார் உப்புமா சாப்பிட்டு போங்க??“

“வேண்டாம் மெர்ஸி நீங்க சாப்பிடுங்க..அப்பறம் மெர்ஸி நான் உன்ன ரொம்ப கஷ்டப்படுத்துறேன். இன்னும் கொஞ்சநாள் தான் அம்மாவ ஹோம்ல சேர்க்கபோறேன்.“

“ஏன் சார் இப்படி பேசுறிங்க உங்க பிரச்சனையெல்லாம் தீர்ரவரைக்கும் நான் அம்மாவ பார்த்துக்குறேன். நான் உங்க அசிஸ்டண்ட் சார் ஆனா என்ன அசிஸ்டண்ட் மாதிரியா பார்த்துக்குறிங்க. உங்க குடும்பத்துல ஒரு பொண்ணு மாதிரி பார்த்துக்குறிங்க“

“டேக்கேர் மெர்ஸி..“

வாசலுக்கு வந்தான் கிரில் கேட்டை திறந்தான் தன் இன்டிகா காரை எடுத்தான் சாலையில் நிறுத்திவிட்டு மீண்டும் இறங்கி கேட்டை மூடிவிட்டு காரை ஸ்டார்ட் செய்தான்.

கார் சாலையில் தன் சக்கரங்களை இயக்கி முன்னேறி கொண்டு இருந்தது. சாலை இருபுறமும் இரைச்சலும், மக்களின் ஓட்டமும் அதிகமாக இருந்தது. காரில் இருந்த எப்ம்ஐ ஆன் செய்தான்.

“ஹலோ ஹாய் மக்களே நான் உங்கள் ஆர்ஜே தேஜு. இது உங்கள் காதலுடன் நிகழ்ச்சி காலைபொழுது அழகாக்க நான் வந்துட்டேன். நீங்க அழகாகனுமா காதல் பண்ணுங்க சார்.. முதல்ல நான் தான் பேசுவேன்னு ஒத்த கால்ல நிக்கிறாரு நம்ப வாடிக்கை காலர் காஞ்சிபுரம் கார்த்தி. சொல்லுங்க கார்த்தி இந்த காதல பத்தி நீங்க என்ன நினைக்கிறிங்க??“

“தேஜீ மேடம் காதல்னு சொன்னால ஆயிரம் வாட்ஸ் பிரைட் வந்துடும் நமக்கு. நான் கல்யாணதுக்கு அப்பறமா என்னோட மனைவிய என்னோட காதலியா நினைக்கிறேன் நான் அவள ரொம்ப நேசிக்கிறேன். கல்யாணத்துக்கு அப்பறம் வர காதல் தான் பெஸ்ட்“

“இடியட்“ சத்தியேந்திரன் முணங்கிவிட்டு எப்எம்ஐ ஆப் செய்தான்.

“என்ன சத்தியேந்திரன் சார் காதல்னா அத்தனை வெறுப்பு நீங்க காதல பத்தி என்ன நினைக்கிறிங்க சார்..“ பின் சீட்டில் இருந்து எழுந்த குரலை தன் முன் இருந்த கண்ணாடியை அட்ஜஸ்ட் செய்து சீட்டின் பின்பக்கம் பார்த்தான் பதுமை போல ஒரு பெண் தலையை விரித்து போட்டு அமர்ந்து இருந்தது. சத்தியேந்திரனின் ஸ்டியரிங்கை வளைத்து நெழித்தான் கார் சாலையில் தரிகெட்டு ஓடியது.​
 
பூவை 2

“யோவ் கார்ல போறியா கப்பல்ல போறியா?? பணம் படைச்சவைங்களுக்கு தான் இந்த ரோடு சொந்தம்கிற மாதிரி ஆகிடிச்சி. சர்ருன்னு போறாயிங்க வராயிங்க எங்கள மாதிரி ஏழைங்க எங்க நடமாடுறதுன்னு தெரியல“ சத்தியேந்திரன் காரை மறைத்து கொண்டு காட்டுகத்தலாக கத்திக்கொண்டிருந்தான் இளைஞன் ஒருவன்.

சத்தியேந்திரன் அவனுக்கு எந்த பதிலும் சொல்லவில்லை. காரை ரிவர்கியர் போட்டான். மீண்டும் தன் வலகை பக்கம் திருப்பி சல்லென்று பறந்தான்.

“எப்புடி போறான் பாரு பைத்தியகாரன்…“ என்று மீண்டும் கடிந்தான் அந்த இளைஞன். அங்கிருந்த கூட்டம் சமாதானம் செய்து அந்த இளைஞனை அனுப்பி வைத்தது.

கொஞ்சதூரம் வந்து திரும்பி சீட்டின் பின்னால் பார்த்தான் சத்தியேந்திரன். இப்போது அந்த பெண் அங்கு இல்லை திரும்பி திரும்பி சீட்டின் பின்பக்கம் பார்த்தான் யாரும் இல்லை நிம்மதி பெருமூச்சு விட்டான்.

சிறிது நேரங்களில் எல்லாம் சத்தியேந்திரன் கார் நீதிமன்ற வளாகத்தை அடைந்தது. சத்தியேந்திரன் காரை லாக் செய்து விட்டு நீதிமன்ற வாசலை நோக்கி நடந்தான். எதிரே திருமலை நின்று கொண்டிருந்தார்.

என்ன என்பது போல் ஜாடையாக கேட்டான் சத்தியேந்திரன்.

திருமலை இல்லை என்பது போல் உதடுகளை பிதுக்கினார். சத்தியேந்திரன் மீண்டும் காரை நோக்கி சென்றான். திருமலை வேகமாக சத்தியேந்திரனை நோக்கி ஓடி வந்து கார் டோரை திறந்து ஏறி கொண்டார்.

“சார் அவ மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கா??இப்போ என்ன ரீசன்?“

“கார எடுங்க சத்தியேந்திரன் போகிட்டே பேசலாம்.“

சத்தியேந்திரன் காரை ஸ்டார்ட் செய்தான். கார் நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறி வீல்கள் சாலையில் ஓடியது.சிறிது நேர அமைதி திருமலை பேச்சை தொடர்ந்தார்.

“முப்பது வருஷம் இந்த வக்கீல் தொழில்ல இருக்கேன் இந்த கேஸ் எனக்கு ரொம்ப வித்தியாசமானது. மிஸ்டர் சத்தியேந்திரன் இன்னைக்கும் அவங்க நம்பள ஏமாத்திட்டாங்க ஜட்ஜ் கடுப்பாகிட்டாரு நல்ல வேளை அவர போய் ஒய்வு அறையில சந்திச்சி பேசினேன். எல்லாருக்கும் முன்னாடியும் ஜட்ஜ் பேசிருந்தா என்னோட மானமே போயிருக்கும்.“

“என்ன காரணம் வராததுக்கு?“

“லோ பிரஸ்சராம் ஹாஸ்பிட்டல்ல அட்மீட் ஆகியிருக்காங்களாம். அவங்க வக்கீல் தான் சொன்னாரு“

“எந்த ஹாஸ்பிட்டலாம்?“

“ஹச்.எம்.ஏ“

கார் சாலையில் தன் சக்கரங்களை இயக்கிகொண்டிருக்கும் போது அவன் நினைவுகளும் அவன் மூளையை இயக்கிகொண்டு இருந்தது.

கல்லூரி படிப்பை முடித்து, தன் பயிற்சிகளை முடித்து அரசு மனநலமருத்துவராக நியமனம் ஆகும் முன்பு தன் வீட்டில் சின்னதாக கிளினீக்கை வைத்து நடத்தினான். அப்போது தான் அவளை முதலில் சந்தித்தான். முதல் பேசண்ட்டும் அவள் தான் பேசண்ட் காத்திருப்பு அறையில் அமர்ந்திருந்தாள் அந்த அழகான இருபத்திரண்டு வயது தக்க இளம் பூவை. மிகவும் பதற்றமாக கைகளை பிசைந்துக் கொண்டும் நகங்களை கடித்து கொண்டும் நொடிக்கு ஒரு முறை நெற்றியில் படியும் வியர்வையை கைகளால் துடைத்தபடியும். அப்போது அருகில் ஒரு குரல் “எஸ் கியூஸ் மீ“ பூக்கள் மெல்ல காம்பை வளைத்து காற்றுக்கு இசைவது போல வந்த குரலுக்கு திரும்பினாள்.

“என் பேரு சத்தியேந்திரன்..“

“ஹாய் ஐ அம் கண்மணி“

“ஏன் இவ்வளவு பதற்றம், கை நகம் முழுக்க கடிச்சி துப்பிட்டிங்க“

கடித்துக்கொண்டிருந்த விரல்களை சுடிதாரின் துப்பட்டாவிற்குள் மறைத்துக்கொண்டாள்.

“எனி திங் சீரியஸ்?“

“நத்திங்“

“அப்போ கூல்…“

“எப்படி?“

“என்ன எப்படி?“

“இல்ல இந்த டாக்டர் எப்படி? பணம் நிறையா புடுங்குவாறா, எங்க பார்த்தாலும் மெடிக்கல் மாஃபியா வேற சொல்லுறாங்க சரியா கவுன்சிலிங்கெல்லாம் கொடுப்பாரா“

“ஏன்ங்க உங்க கற்பனைக்கு ஒரு அளவு இல்லையா கவுண்சிலிங் கொடுக்குற டாக்டர் மெடிக்கல் மாஃபியாவுல இருந்து உங்கள ஹிப்னோயிட்டைசம் பண்ணி உங்க கிட்டினிய எடுக்க போறாரா..“

“இல்ல, சரி நீங்க ஏன்?“

கேள்வியை அவள் கேட்பதற்குள்ளேயே,“சார் உள்ள போங்க?“ என்றாள் அங்கு வரவேற்பறையில் அமர்ந்திருந்த பெண்.

சத்தியேந்திரன் உள்ளே சென்று சில மணி துளிகள் கடந்தது.

அந்த பெண் கண்மணியை பார்த்து “நீங்க போங்க மேடம்…“.

“இல்ல அந்த சார்..“ என்று ஏதோ சொல்லி தயங்கினாள்.

“போங்க மேடம்..“ அவள் அழுத்தி சொல்லவே எழுந்து உள்ளே சென்றாள்.

உள்ளே சென்ற கண்மணிக்கு பெரும் அதிர்ச்சி டாக்டர் சீட்டில் அமர்ந்திருந்தது சத்தியேந்திரன்.

“வாங்க கண்மணி உட்காருங்க?? நான் மாஃபிய ஹெட்டெல்லாம் கிடையாது பயப்புடாதிங்க?? கம் சிட்“
கண்மணி அசட்டு சிரிப்பை சிந்திக்கொண்டு எதிரே வந்து அமர்ந்தாள்.

“நீங்க டாக்டர்??“

“ஆமாங்க நான் தான் டாக்டர். நீங்க என்னோட முதல் பேசண்ட். இது ஒரு அனலைசிஸ் தான், பேசண்டோட ப்ரண்டா இருந்து பார்க்குறப்போ அவங்களோட பிரச்சனை இன்னும் ஈசியா புரியும்.“

“வித்தியாசமான டாக்டர் தான். என்னோட ப்ராப்ளம்..."

“உங்களோட ப்ராப்ளம் அதிகப்படியான ஸ்ட்ரஸ், நீங்க சரியா தூங்கியே வாரத்துக்கு மேல இருக்கும். சூஸைட் அட்டண்ட் பண்ணிருக்கிங்க பட் அவ்வளவு தைரியம் இல்லாத பொண்ணு“

“தைரியம் இல்லாம இல்ல.. தைரியமெல்லாம் நிறையா இருக்கு? மனசு தான் வரல“

சத்தியேந்திரன் சின்னதாக சிரித்தான்.

“சரி..சரி..எப்படி இது உங்களுக்கு??“

“உங்க முகத்துல உள்ள டயர்ட் சொல்லுது கண்கள் சிவந்து போய் இருக்கு. பிளேட், கத்தியோ இல்ல பிளேடு தான். அதுவும் ரொம்ப பழைய பிளேட் போல ஆழமா வெட்டமுடியாம மேலோட்டமா அதுவும் நரம்புகளே இல்லாத இடமா பார்த்து கிழிச்சி கிழிச்சி வச்சிருக்கிங்க.“

கண்மணி வாயை பிளந்து கேட்டு கொண்டு இருந்தாள்.

“ரெண்டு காரணம் தான் ஒன்னு லவ் பெய்லியர், இல்ல ஒர்க் டென்ஸன்..“

“எல்லாம் சரியா சொல்லிட்டு காரணத்தை தப்பா சொல்லிட்டிங்களே டாக்டர்.. கவுன்சிலிங் வந்தா இந்த ரெண்டு காரணம் தானா இருக்கும்..“

“சரி, உங்க மனசுல இருக்கத பேசுங்க ஏன்னா மனுசங்களுக்கு இப்போ மனம்விட்டு பேச தான் யாரும் கிடைக்கிறது இல்ல. மனம்விட்டு தெளிவா பேசுறவங்கள இந்த உலகம் பைத்தியம்னு சொல்லிடும்..“

“சரி தான்..என்னோட பிரச்சனை எங்க அப்பா தான்.“

“இன்ட்ரஸ்டிங்..“

“என்ன கல்யாணம் பண்ணிக்க சொல்லி டார்ச்சல் பண்றாரு“

“உகூம்..“

“எனக்கு விருப்பம் இல்ல...எங்க அப்பாவ பயமுறுத்த தான் கைய கட்பண்ணி...இல்ல கீரிவிட்டு...“

சத்தியேந்திரன் சிரித்தான்.

“எனக்கு விருப்பம் இல்ல“

“சரி, பிடிக்கலன்னு ஆணிதனமா சொல்ல வேண்டியது தானே“

“சொன்னா கேட்க மாட்டாரு அவரோட பிடிவாதம் தான் அவருக்கு பெருசு“

“கல்யாணம் வேண்டாம்னா எதும் காதல்“

“நோ..அதெல்லாம் ஒன்னும் இல்ல. பெண்கள்னா கல்யாணம் பண்ணிக்கனும், கல்யாணம் பண்ணுனதும் புள்ள பெத்துடனும், அந்த புள்ள, புருஷன்னு வாழ்க்கையை ஓட்டனும். சுத்த நான்சன்ஸ், எனக்குன்னு சில கனவுகள் இருக்கு சில காலமாவது அந்த கனவ நினைவாக்கி வாழ்ந்துடனும்..“

“சூப்பர்..உங்களோட கனவு அது ஸ்ட்ராங்க இருந்தா நீங்களும் ஸ்ட்ராங்கா இருப்பிங்க உங்க அப்பா பிடிவாதைத்தை காட்டிலும். எந்த குழந்தையுமே பிறந்ததும் நடக்குறது இல்ல, மெல்ல விழுந்து, எழுந்து தான் நடக்க ஆரம்பிக்கும். கனவுகளும் அப்படி தான் விழும், எழும். ஆனா விடக்கூடாது கால்கள ஊணி நடக்க ஆரம்பிச்சிடனும். முதல நல்லா தூங்குங்க தெளிவு கிடைக்கும். தூங்குறதுக்கு மட்டும் டேபிடல்ட. தரேன் அதுவும் ஒரு நாளைக்கு மட்டும் தான் அதுக்குள்ள உங்க பிரச்சனைய தீர்த்துக்கோங்க..“

“இப்பவே கொஞ்சம் தெளிவா தான் இருக்கேன்.“

பிரிஸ்கிரிப்சனை நீட்டினான்.

கண்மணி வாங்கி கொண்டு பீஸ்சை கேட்டுவிட்டு கொடுத்தாள்.

“தேங்யூ..“என்று சொல்லிவிட்டு எழுந்து கதவருகே வந்தாள். திறக்க முற்படும்போது “ஐ இம்ப்ரஸ்டு“ என்றான் சத்தியேந்திரன்.

கண்மணி திரும்பி பார்த்து சிரித்தாள்.

கார் சாலையில் வளைந்து நெழிந்தது. வக்கீல் திருமலை சத்தியேந்திரன் தோள்களை குலுக்கினார். திடீரென்று சத்தியேந்திரன் பூமிக்கு வந்தவன் போல தூக்கி போட்டு எழுந்தான் காரை சடன் ப்ரேக் அடித்து நிறுத்தினான்.

“என்ன சத்தியேந்திரன்..எனிதிங்..“

“நத்திங் சார்..“

“நான் டிரைவ் பண்ணவா…“

“வேண்டாம் ஐ அம் ஆல்ரைட்…“

காரை இப்போது தெளிவாக ஓட்டினான். கார் நேராக ஹச்.எம்.என் மருத்துவமனை வாசலை வந்தடைந்தது. காரைவிட்டு இருவரும் இறங்கினார்கள். சத்தியேந்திரன் முன் சென்று ரிசப்சனில் இருந்த நர்ஸிடம் விசாரித்தான்.

“நார்மல் வார்டுல இருக்காங்க சார்.. நேரா போய் லேப்டு எடுங்க“

“தேங்யூ, வாங்க சார்..“

இருவரும் நார்மல் வார்டை நோக்கி நடந்தனர்.

கதவை திறந்த போது இரண்டு மூன்று பேசண்டுகள் அங்கு இருந்தனர்.

முதல் படுக்கையில் ஒரு சிறு குழந்தைக்கு வயிற்றில் தையல் போட்டு படுத்து இருந்தது அது சத்தியேந்திரனை வைத்த கண்வாங்காமல் பார்ப்பது போல இருந்தது. அவன் அதை கவனிக்காதவன் போல நடந்தான். அடுத்து பெட்டில் இளம் வயது பெண் ஒருத்தி படுத்துகிடந்தாள். அடுத்த பெட் காலியாக கிடந்தது. கடைசி பெட்டில் முப்பது வயது பெண் ஒருத்தி கைகளை முகத்திற்கு கொடுத்தபடியே முகத்தை மறைத்து படுத்துகிடந்தாள். அவளின் ஒரு கையில் டிரிப்ஸ் ஏரி கொண்டு இருந்தது.

சத்தியேந்திரன் திருமலையிடம் ஜாடை காட்டினான்.

“மேடம்..“ திருமலை அழைத்து அழைத்து பார்த்தார் அந்த பெண் எழும்புவது போல இல்லை. சத்தியேந்திரன், திருமலையை மறைத்து விட்டு.

“கண்மணி…“ என்று அழைத்தான்.

இதழ்கள் விரித்த செந்தாமரை போல இருந்தது அவள் கைகளை விலக்கி அவள் முகத்தை காட்டிய போது.

“வாங்க..“ எதுவும் அலட்டிகாதவலாக அழைத்தாள்.

“வாட் இஸ் திஸ்“

“எது இதுவா என்ன நீங்க ஒரு டாக்டர் இல்ல....இல்ல நீங்க எவ்வளவு பெரிய டாக்டர் இது என்னன்னு கூடவா தெரியல… இது டிரிப்ஸ் மயக்கத்துக்காக போட்டுருக்காங்க. ஆனா அவங்களுக்கு தெரியவே தெரியாது, இந்த மயக்கம் தெளியவே போறது இல்லன்னு“ கண்களை சுருக்கி சத்தியேந்திரனை பார்த்தாள்.

“சிட்..நான் உன்னோட டிராமாவ என்னன்னு கேட்டேன்.“

“இது டிராமாவா போயி டாக்டர்கிட்டு பேசு மேன்..“

“கண்மணி அடுத்த ஹியரிங் ப்ரைடே அதுக்குள்ள அடுத்த டிராமாவ ஸ்டார்ட் பண்ணிடுவியா??“
கண்மணி மெல்ல சிரித்தாள்.

கண்மணியின் வக்கீல் வேகவேகமாக அங்கு வந்து சேர்ந்தார். “என்ன என்னோட கிளைண்ட மிரட்டிகிட்டு இருக்கிங்க.“

“யோவ் சதா நீ யாருன்னு எனக்கு தெரியாதா“ என்றான் திருமலை.

“வக்கீல் சார் உங்கள பத்தியும் எனக்கு தெரியும் நான் சேர்த்து வைக்கனும்னு நினைக்கிறேன் நீங்க பிரிச்சி வைக்கனும்னு நினைக்கிறிங்க.“

“விடுங்க வக்கீல் சார் அவருக்கு கல்யாணம், குடும்பம்னு ஒன்னு இருந்தாதனே பிரிவோட வலி என்னன்னு தெரியும்.“ என்றாள் கண்மணி.

திருமலை முகம் சுருங்கி போனது.
“நீங்க வாங்க சார்“என்று சத்தியேந்திரன் திருமலை கையைபிடித்து அழைத்துகொண்டு கிளம்பினான்.

“ஏய் மேன் நில்லு..“ சத்தியேந்திரன் நின்று திரும்பி கண்மணியை பார்த்தான்.

“நான் உனக்கு டிவோர்ஸ் கொடுக்கமாட்டேன்..ஏன்னா…ஐ அம் இம்ப்ரஸ்ட்..“ சொல்லிவிட்டு கண்அடித்தாள்.

சத்தியேந்திரன் பல்லை கடித்துவிட்டு இறங்கி கீழே வந்தான்.

காரின் அருகே வந்தான். கார் மீது கைகளை வைத்துகொண்டு “இப்போ என்ன சார் பண்றது..“என்று திருமலையை பார்த்து கேட்க முற்படும் போது திருமலையின் பின்னால் காரில் பின்சீட்டில் அமர்ந்திருந்த அந்த பதுமை நின்று கொண்டிருந்தாள்.
சத்தியேந்திரனுக்கு மூச்சு வேகமாக வாங்கியது. திருமலை “சத்தியேந்திரன் என்ன??என்ன??“ என்றார். சிறிது நேரத்தில் சத்தியேந்திரன் மயங்கி சரிந்தான். அங்கு நின்று கொண்டிருந்த நர்ஸ் ஓடி வந்து பார்த்தாள்.

“என்னாச்சி சார்..“

“தெரியலமா பேசிகிட்டு இருந்தவரு மயங்கிட்டாரு“

“தண்ணீயிருந்தா எடுங்க??“ திருமலை காரை திறந்து தண்ணீர் பாட்டிலை தேடினார். சீட்டின் கீழே விழுந்து கிடந்த பாட்டில் தண்ணீரை கைளில் ஊற்றி வேகமா சத்தியேந்திரன் முகத்தில் அடித்தார். அதற்குள் கூட்டம் சிறிதாக கூடியது. சத்தியேந்திரன் மெல்லமாக கண்களை திறந்தான்.

“சத்யா..“ என்று கணமாக அழைத்தார்.

மெல்ல மெல்ல நினைவு வந்து எழுந்து அமர்ந்தான்.

“என்னாச்சி..“ இப்போது கூட்டம் கலைந்து கொண்டு இருந்தது. அந்த கூட்டத்திற்குள் நின்று கொண்டிருந்த அந்த பதுமை இமைக்காமல் இவனையே பார்த்துகொண்டு நின்றாள். விரிக்க விரிக்க சத்தியேந்திரனும் பார்த்தான்.

கைகளை உயர்த்தி அவளை திருமலையிடம் காட்டினான். திருமலை உற்று அவன் காட்டும் இடத்தை பார்த்தான். கூர்மையான பார்வையால் திருமலை சத்தியேந்திரன் காட்டிய இடத்தை நோக்கினார்.​
 
பூவை 3

திருமலை இப்போது காரை தான் ஓட்டுவதாக கூறி சத்தியேந்திரனை ஓய்வு எடுக்க சொல்லிவிட்டு அவர் காரை ஓட்டிக் கொண்டு வந்தார். சத்தியேந்திரன் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தான். “நான் இதுக்காக தான் கண்மணிய டிவொர்ஸ் பண்ண நினைக்கிறேன்.“ திருமலை எதுவும் பேசவில்லை. கார் சாலையில் ஓடும் சத்தத்தை தவிர இருவருக்குள்ளும் எந்த சத்தமும் கேட்கவில்லை. திருமலை இறங்கும் இடம் வந்தது.

“நான் வந்து டிராப் பண்ணவா சத்யா“ சத்தியேந்திரன் யோசனையாக இருந்தான்.திருமலை சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தார்.“என்ன சத்யா எதுவும் பேசமாட்டைங்கிறிங்க“

“வேண்டாம் சார் நான் பார்த்துக்குறேன். எனக்கு யாரோட உதவியும் வேண்டாம்“, பட்டென்று பேசினான். இவன் பட்டும்படமால் பேசுவது திருமலைக்கு ஏதோ செய்தது. ஆனால் அது அவன் நிலமை என்பதை புரிந்துக்கொண்டார். “கேர்புல் அண்ட் டேக்கேர்..“,ஆறுதலாக சில வார்த்தைகளை சொல்லிவிட்டு தான் இறங்கும் இடத்தில் இறங்கி கொண்டார். சத்தியேந்திரன் இப்போது காரைவிட்டு வெளியில் வந்து டிரைவர் சீட் பக்கமாக உட்கார்ந்துக்கொண்டான். காரை இயக்கினான், அதன் இயக்க.வேகத்தில் அமைதியாக பயணம் தொடர்ந்தது.

டு…டு..டூ..டு.. ஆட்டோ வந்து வாசலில் நிற்கும் சத்தம் கேட்டு லதா வேகவேகமாக ஓடிவந்து வாசல்கதவை திறந்தார். தெருவிற்கு உள்ளடங்கி அமைந்திருந்த தனி ஓட்டுவீடு. பழையகாலத்து வீடாக இருந்தாலும் கம்பீரமாக நின்றது. ஆட்டோவில் இருந்து கண்மணி இறங்கினாள். ஆட்டோகாரரிடம் எந்த பேரமும் பேசும் நிலமையில் அவள் இல்லை. அவன் கேட்கும் பணத்தை கொடுத்துவிட்டு தன் வீட்டின் முன் வாசலை நோக்கி நடந்தாள்.

“பாப்பா..எங்க போன காலையில இருந்து“ பெண்பிள்ளை காலையில் சொல்லாமல் வெளியே சென்று விட்டால் ஒரு பெற்றவளின் பரிதவிப்பு எப்படி இருக்கும் அப்படி தான் துடித்து போய் கேட்டார் லதா.
“அம்மா..அது..வா முதல உள்ள போய் பேசலாம் ரொம்ப டயர்டா இருக்கு“ என்று மறித்து தன் அம்மாவை உள்ளே அழைத்து சென்றாள் கண்மணி. லதா வாசல் கதவை மூடிவிட்டு கண்மணியின் பின்னால் வேக வேகமாக நடந்து போய் கேட்ட கேள்வியையே மீண்டும் கேட்டார்.

“கேஸ் விசயமா அழைஞ்சிட்டு இருந்தேன்.“ லதாவின் முகம் சுருங்கியது. தன் பெண்பிள்ளை இப்படி கஷ்டபடுவது எந்த தாயிக்கு தான் நிம்மதியை தரும். லதா தன்னுடன் வாழ்ந்து தனக்கு முன்னே கடவுளிடம் சேர்ந்துவிட்ட தன் கணவனின் சுவற்றில் மாட்டியிருந்த புகைப்படம் வழியே நினைவுகூர்ந்தாள். அவளின் பார்வையும், பரிதவிப்பும் ‘நீங்களாவது நம்ப பொண்ணுக்கு உதவ கூடாதா‘ என்பது போல் இருந்தது. லதா, கண்மணியிடம் எந்த பதிலும் கூறவில்லை அமைதியாக கிட்சனை நோக்கி சென்றார். கண்மணி மெல்ல வந்து அங்கு இருந்த தன் அப்பாவின் புகைப்படத்தை பார்த்தாள். தெய்வதிரு.மகேந்திரன் என்ற பெயருக்கு பின்னால் பிறப்பு, இறப்பு என்ற செய்திகள் இருந்தது. எந்த கவலையும் கிடையாது யார் கவலையை பற்றிய நினைப்பும் தேவையில்லை. மனிதன் பிறக்கும் போது கவலையோ துன்பமோ இன்றி பிறக்கிறான், இறந்த பின்பு அவனுக்கு கவலைகள் என்பது ஏது. சாந்தமாக தெரிந்த தன் தந்தையின் முகத்தை கண்களை மூடி நினைத்துக்கொண்டாள்.

தன் அறைக்கு சென்றாள். சிறிது நேரத்தில் தன் உடைகளை மாற்றிக்கொண்டு தன்னை ரெப்ரஸ் செய்துக்கொண்டாள். லதாவின் குரல் அடுப்பாங்கரைவாட்டில் இருந்து ஒலித்தது. “பாப்பா தோசை எடுத்துட்டு வரவா..“ கண்மணி ஏதோ பலத்த சிந்தனையில் இருந்தாள். அவள் காதில் தன் அம்மா கத்தி கேட்பது கூட ஏறவில்லை. தன் ஹேண்ட் பேக்கில் இருந்த செல்போன் ரிங்டோனை எழுப்பியது டுடுடிங்..டுடுடிங்..டுடுடிங்.. முதல் முறை முழுவதுமாக ரிங்டோனை எழுப்பி அடங்கியது. லதா தட்டில் தோசையை எடுத்து வைத்துக்கொண்டு கண்மணி அறைக்கு வந்தார். இப்போது மீண்டும் மொபைல் சினுங்கியது. "என்ன போன் அடிக்கிறது கூட காதுல விழாம உட்காந்திருக்கா", என்ற யோசனையோடு அவள் கைபையில் இருந்து மொபைலை எடுத்தார். விடியோகாலிங் வந்தது, ஆன் செய்தார். “முகில்..“ தன் இளையபிள்ளையை பார்த்த மகிழ்ச்சி முகத்தில் கொப்பளித்தது. மிகுந்த சந்தோஷத்துடன் “என்னடா இளைச்சிட்ட“ அம்மாக்களுக்கே உரிய தன் பிள்ளையின்பால் கொண்ட அன்பின் மிகுதியால் ஏற்படும் உணர்வு தான் அது. அவன் குண்டாகவே இருந்தாலும் இளைத்து துரும்பென தான் தாயின் கண்களுக்கு தெரிவான்.

“அம்மா நான் நல்லா தான் இருக்கேன். உன் கண்ணு தான் பிரச்சனை“,பிள்ளைக்கே உரிய நக்கலுடன் பதிலை சொன்னான். “அக்காகிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்“,லதா இப்போது கண்மணியை பார்த்தார். கண்மணி தன் நினைவுக்கு வந்திருந்தாள். கண்களை சிமிட்டி போனை தன் வசம் ஆக்கினாள். “ரெண்டு புள்ள பெத்தேன் ரெண்டும் ரெண்டு பக்கம் கிடந்து சீரளியுதுங்க..கடவுளே…“ பொங்கி கொண்டு வந்த கோபத்தை வார்த்தைகளை விட்டு ஆற்றி கொள்பது தானே மனித மனம், புலம்பி கொண்டே கிட்சனை பார்க்க சென்றார்.

“சொல்லுடா நல்லாயிருக்கியா“ பாசமாக கேட்டாள்.

“ம்.. என்னாச்சி?? மாமாகிட்ட எதும் சேஞ்சஸ் இருக்கா??“

“நத்திங்..வேலைக்கு போகலாம்னு இருக்கேன்.“

“ஏன்கா ஏன் நான் தான் லண்டன்ல கைநிறைய சம்பாதிக்கிறேன்ல.. அப்பறம் எதுக்கு“

“இல்லடா இது ஒரு சேஞ்ச்க்காக அதே சமயம் அவருக்கு நான் வேலைக்கு போகனும் தான் விருப்பம்.“

“அத சொல்லு.. இருந்தாலும் உனக்கு அந்த மனுசன் மேல இவ்வளவு காதல் ஆகாது.“ தன் அக்காவை செல்லமாக கண்டித்தான். இருவரும் சில மணி நேரங்கள் தங்கள் வாழ்வில் நடந்த சின்ன சின்ன நிகழ்வுகளை பேசி சிரித்து கொண்டனர். கண்மணி காலையில் நடந்தவற்றை எல்லாம் மறந்து சிறு புன்னகை செய்தாள். “சரிக்கா லேட் ஆகிட்டு நான் நாளைக்கு கால் பண்றேன்.“ வைக்க மனம் இல்லாமல் தளர்ந்த குரலில் சொன்னான் முகில்.

“உம்..டேக்கேர்..“என்று கண்மணியும் பரஸ்பரமாக அன்பை பறிமாறி இணைப்பை துண்டித்தாள். மேசையின் மீது தோசைகள் ஆறிகொண்டு இருந்தன. அருகில் இருந்த இன்னொரு தட்டை வைத்து அதனை மூடிவைத்தாள். அம்மா அடுப்படி வேலையெல்லாம் முடித்து விட்டாள் போலும் கிட்சனில் லைட் எறியாததை வைத்து கண்டுக்கொண்டாள். அவள் அறைக்கு நேர் எதிராகவே கிட்சன் இருந்தது. நடுவில் இருந்த கூடத்தில் அம்மா பாயை உதறி விரித்துக்கொண்டு இருந்தாள்.

“எதுவும் வேணுமா பாப்பா?“

“நீ படுத்துக்கோமா..“

“முருகா..“ அவனாவது தனக்கு ஆறுதல் தந்து உறக்கத்தை தருவானா என்ற வண்ணம் ஏங்கி அழைத்துகொண்டார். கண்மணி அந்த கூடத்தையே விரிக்க பார்த்தாள். அவள் மனம் சொல்லியது இந்த கூடத்தில் தானே எல்லோரும் சந்தோஷமாக சிரித்து பேசி அன்பை பரிமாறி கொண்டு நிம்மதியாக இருந்தோம். இந்த கூடம் தானே என்னையும் சத்தியேந்திரனையும் இணைத்து வைத்தது எல்லாமே எங்கே போனது, தனக்குள்ளயே கேட்டுக்கொண்டாள். அவளின் மனம் மெல்ல தொலைந்த நினைவுகளில் தன் பயணத்தை தொடங்கியது.

சத்தியேந்திரனை, கண்மணி சந்தித்து ஆறு மாதங்கழித்து மீண்டும் சந்தித்தாள். பீனிக்ஸ்மால் வளாகத்தில் சத்தியேந்திரன் காரில் சாய்ந்த வண்ணம் நின்று பிரம்மிப்பாக இருந்த அந்த கட்டிடத்தையும், போய் கொண்டும் வந்து கொண்டும் இருந்த மக்கள் கூட்டத்தையும் பார்த்துக்கொண்டு இருந்தான். எத்தனை முறை சென்றாலும் சலிப்பே தராது போல ஷாப்பிங் போகும் பெண்களுக்கு, காதலுனடன் கைகோர்த்த வண்ணம் கொஞ்சி பேசி போகும் பெண்களையும், தன் பிள்ளைகளை அந்த பொம்மை வேண்டாம் அப்பறம் வாங்கி தரேன் என்று அதட்டி இழுத்துவரும் அன்னைமார்களையும் ரசித்தான். பட்டென்று அவன் கண்டு ஏற்கனவே பதிந்த உருவம் அவனை கடந்தது. சற்று நிதானித்து மீண்டும் அது நமக்கு தெரிந்த உருவம் தானா என்று மனதை பரிசீலனை செய்தான். “கண்மணி..“ என்று ஆழ்மனம் சொன்னது. அவன் எப்போது பெயரை சொல்லி அழைப்பான் என்று காத்துக்கொண்டு நடப்பவள் போல அன்னநடை போட்டு கொண்டிருந்தாள் கண்மணி. அப்படி என்றால் அவள் முன்னமே அவனை கண்டுவிட்டாள். முதலில் இருந்தே அவனை கவனித்திருந்தவள் போல அவன் ‘கண்மணி‘ என்று முதல் தடவை அழைத்ததுமே வேகமாக திரும்பினாள்.

அவன் கண்மணியை நெருங்கி நடந்தான். “ஹாய்..“ அவன் சொன்னதும் சிறு புன்னகை சிந்திக்கொண்டாள். “நீங்க இங்க?? நான் எதிர்பார்க்கல?“

“நானும் தான்.“

“ஷாப்பிங்கா..“

“ஆமாம்.. இது என் தம்பி முகில் டிவல்த் ஸ்டாண்டடு.“ இப்போது தான் சத்தியேந்திரன் அவளுக்கு பக்கத்தில் இன்னொரு உருவம் நிற்பதையே கவனித்தான்.

“ஹலோ..“என்று இருவரும் மனமாற கைகளை குலுக்கிகொண்டனர்.

“அப்பறம்..“

“அப்பறம்..“ இருவரும் மாறி மாறி குழைந்தனர்.

“என்னோட பேர் எப்படி உங்களுக்கு நியாபகம் இருந்தது. உங்களுக்கிட்ட வர பேசண்ட் எல்லாரையும் இப்படி தான் நியாபகம் வச்சிப்பிங்களா??“
குதர்க்கமான கேள்வியை கேட்டாள்.

“அப்படி இல்ல சில பேர்கள் மட்டும் மனதுல பதிஞ்சிடுது“ அவளை ஈர்க்கும் வண்ணம் மென்பதிலை சொன்னான்.

“ஓ.கே.ஓ.கே..‘'

“சரி அதவிடுங்க உங்க டீரிம் என்னாச்சி?“

“நான் இப்போ ஒரு ஐடி கம்பெனில வேலை பார்க்குறேன்.“

“சூப்பர், உங்க அப்பா உடனே சம்மதம் சொல்லிட்டாரா.“

“ஒரு வருஷத்துக்கு அக்ரிமென்ட் போட்டுருக்கேன். ஒரு வருஷம் முடிஞ்சதும் உடனே கல்யாணம்.“

“இன்ட்ரஸ்டிங்.“

“என் கனவோட சிலகாலம் வாழும் சந்தோஷம் போதும்.“

அவளின் பேச்சில் ஆழ்ந்து போய் இருந்தான். அவனை இடைஞ்சல் செய்யும் வண்ணமோ பாக்யவதி அவ்விடம் வந்தார். இருவரும் பேசிக்கொண்டு இருப்பதை தூரத்தில் இருந்தே கவனித்துவிட்டார். அருகே வந்து இருவரையும் மாறி மாறி பார்த்தார். சத்தியேந்திரன் பாக்யவதியை கவனித்து சிரித்தான். தன்னை இப்படி யாரோ உற்று உற்று பார்ப்பது கண்மணியை குறுக செய்தது. சத்தியேந்திரன் கவனித்துவிட்டான்.

“நெர்வர்ஸ் ஆகாதிங்க? இது என்னோட அம்மா.“

“ஓ“ இப்போது தான் அவள் கொஞ்சம் நிம்மதி அடைந்தாள். கைகளை கூப்பி வணக்கம் சொன்னாள். பதிலுக்கு பாக்யவதியும் வணக்கம் சொன்னார். “இது??“ என்று இழுத்தார்.

“என்னோட ப்ரண்ட்மா“

“அப்படியா?“ கண்மணியை மீண்டும் ஏற இறங்க பார்த்தார்.

“சரிப்பா நீ பேசிட்டுவா நான் கார்ல வெயிட் பண்றேன். வரேம்மா..ஒரு நாள் வீட்டுக்கு வா..“, அழைத்துவிட்டு இருவருக்கும் நடுவில் நாம் எதற்கு குறுக்கே என்று காரில் போய் ஏறிக்கொண்டார்.

“ஏன் என்ன உங்க பேசண்ட்டுன்னு சொல்லல“

“அம்மா கொஞ்சம் ஓல்ட் டைப் உங்கள என்னோட பேசண்ட்ன்னு சொன்னா? வேற மாதிரி நினைப்பாங்க அப்பறம் முதல் கோணல் முற்றிலும் கோணல் தான்.‘'

“அவங்க என்ன அப்படி நினைச்சா என்ன?“ அவள் அப்படி கேட்பாள் என்று தெரியும், ஆனால் அவளிடம் எதை சொல்வது, எப்படி சொல்வது. என்னவோ அவளை தனக்கு பிடித்து இருப்பதை சத்தியேந்திரன் அசைப்போட்டு கொண்டான். மழுப்பலாக ஒரு பதிலை சொன்னான்.

“சொல்ல வேண்டாம்னு தோணுச்சி?“

சத்தியேந்திரனை உன்னிப்பாக கவனித்தாள், அவன் முகம் மலர்ச்சியாக இருந்தது. ஆனால் கண்மணியை நேருக்கு நேராக பார்க்க முடியாமல் ஒரு வித நாணமாக நின்றான். வந்த சிறு புன்னகையை தனக்குள்ளயே மறைத்துக்கொண்டாள். அவன் தலையை தூக்கி பார்க்கும் போது அவள் சிறிது தூரம் சென்றிருந்தாள். “அய்யோ தப்பா எதும் சொல்லிட்டோமா சொல்லாம கொள்ளாம கிளம்பிட்டாளே“ அவன் மனம் பதைபதைத்தது. சிறிது தூரம் சென்றதும் முகில் மட்டும் சத்தியேந்திரனை நோக்கி ஓடி வந்தான். ஒரு துண்டு சீட்டை சத்தியேந்திரன் கையில் கொடுத்தான். “இது எங்க அட்ரஸ் ஒரு வருஷம் முடிஞ்சதும் அப்பாகிட்ட வந்து பேச சொன்னா“, சொல்லிவிட்டு படபடவென்று ஓடினான். கண்மணி திரும்பி பார்க்காமல் தனக்குள்ளயே சிரித்து கொண்டாள். சத்தியேந்திரனுக்கும் தாழா மகிழ்ச்சியாக இருந்தது.

சரியாக ஒருவருடம் கடந்தது. அன்று சத்தியேந்திரன் கண்மணியை பெண் கேட்க பாக்யவதியை அழைத்துக்கொண்டு கண்மணி தந்த அட்ரஸிற்கு வந்தான். இருவரும் காரை விட்டு இறங்கி தயக்கத்துடன் நின்று கொண்டு இருந்தனர். “அம்மா உள்ள போய் பார்க்கலாம்.“ சத்தியேந்திரன் சொன்னதும் “சரிப்பா“ என்று இருவரும் உள்ளே சென்றனர். உள்ளே சென்றதும் தான் தெரிந்தது எல்லாம் தலைகீழாக நடந்து கொண்டு இருந்தது. சத்தியேந்திரனும், பாக்யவதியும் அதிர்ந்து போய் நின்றனர். சத்தியேந்திரனின் முகத்தில் ஈ ஆடாமல் விழிபிதுங்கி நின்று கொண்டு இருந்தான்.​
 
பூவை 4

சத்தியேந்திரன் எதிரே நடப்பவை எல்லாம் தலைகீழாக நடந்து கொண்டிருந்தது. ஏற்கனவே அங்கு பெண் பார்க்கும் படலம் அரங்கேறிக்கொண்டு இருந்தது. பாக்யவதியும், சத்தியேந்திரனும் திரு திருவென்று விழித்துக்கொண்டு இருந்தனர். எதிர்பாராமல் தீடீரென்று வீட்டிற்குள் இருவர் நுழைந்ததும் அங்கிருந்தவர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை மாறி மாறி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு ஏதோ முனுமுனுத்தனர். பாக்யவதி, சத்தியேந்திரன் காதருகே மெல்லமாக, “தப்பான நேரத்துல வந்துட்டோமோ“ என்றார்.

“இல்லமா சரியா தான் வந்திருக்கோம்.“ என தைரியம் கொடுக்கும்படி அழுத்தி சொன்னான். அதற்குள் அங்கு அமர்ந்திருந்த ஒருத்தர் “தம்பி நீங்க யாரு?? உங்களுக்கு வேண்டியவங்களா“ என்றவாறு மற்றொருவரை பார்த்துக்கேட்டார். அவன் தலையை சொறிந்துக் கொண்டு ஞாபகப்படுத்தி பார்ப்பது போல யோசித்தார்.

“இல்லையே…“இழுத்து சொன்னார்.

“கோகுல் உனக்கு தெரிஞ்சவங்களா?“ அங்கு கிப்டாக்காக அமர்ந்திருந்த இளைஞனிடம் கேட்க அவன் உடனடி பதிலை சொன்னான்.

“தெரியலப்பா?..“

“இல்ல நாங்க வந்தது… கண்மணி.. கண்மணி..“, சத்தியேந்திரன் இழுத்து யோசித்து என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்து தயங்கி தயங்கி மந்திரம் போல அவள் பெயரை அழைத்து நின்று கொண்டிருந்தான். பாதி அலங்காரத்திலேயே அறையை விட்டு வேகமாக வெளியே வந்தாள். எதை பற்றியும் யோசிக்கவில்லை சுற்றி இருப்பவர்களை பற்றிய எந்த கவலையும் இல்லை அசையாமல் நின்ற சிலையென ஸ்தம்பித்து நின்றாள் அவனை கண்டு. அவனும் அலங்கரிந்து வந்து நிற்பது யார் தேவலோக அழகியோ என மெய்மறந்து ரசித்து கொண்டு நின்றான். இருவரின் பார்வைக்கும் வேறு எதுவும் தெரியவில்லை அவனுக்கு அவள் அவளுக்கு அவன் மட்டுமே தெரிந்தனர். சோபாவில் அதுவரை அமைதியாக அமர்ந்திருந்த மனிதர் இப்போது பொறுமை இழந்து காட்டு கத்தலாக கத்தினார். “கண்மணி..கண்மணி..“ சத்தம் போட்டு அழைத்தார். அவள் காதில் ஏறவில்லை காதல் தலைகேறினால் மற்றது எவையேனும் தெரியுமோ? காதல் பூஜையில் குறுக்கே கரடிகள் என்று தோன்றியது சத்தியேந்திரனுக்கு. மீண்டும் ஒலித்த அந்த குரல் அவளின் புத்தியை தெளிய செய்தது. “அப்பா..“ என்றாள்.

“என்னமா யாரு இது?“ மீண்டும் கேள்விகளை கேட்க தொடங்கினார்.

“நான் சொல்றேன் மகேந்திரன்.“ இத்தனை நேரமாக பக்கத்தில் அமர்ந்திருந்தவர் சொன்னார். “நீங்க எங்கள பொண்ணு பார்க்க வர சொல்லிருக்கிங்க? பொண்ணு அவங்கள வரசொல்லிருக்கு, சரி தானமா“ பக்கத்தில் இருந்து பார்த்தவர் போல சரியாக போட்டு உடைத்தார்.

“கரெக்ட்.. உங்க பையனுக்கு அவரு அப்பாயிண்ட் மெண்ட் தான் கொடுத்தாரு. ஆனா கண்மணி எனக்கு அப்பாயிண்ட் மெண்ட் ஆர்டரே கொடுத்துட்டாங்க.“ அன்று தந்த துண்டு சீட்டை அத்தனை பத்திரமாக வைத்திருந்து அதை எடுத்து கூட்டத்தில் காட்டி கண்மணியை நாண வைத்தான் சத்தியேந்திரன். கண்மணியை பார்த்து மெல்ல கண்களை மேல் ஏற்றி தலையை அசைத்தான். அவளும் தலையை அசைத்தாள். அவன் தொடர்ந்தான் “ஒரு வருஷம் கழிச்சி வந்து பேச சொன்னாங்க நான் ஒரு வருஷம் முடிஞ்சி ஒரு நாள் தள்ளி வந்தது தப்பா போச்சி? நீங்க ரொம்ப பாஸ்ட்..“ குறும்பாக பேச அங்கிருந்த பெண்கள் சிலர் மெல்ல சிரித்தனர்.

“என்னமா இது??“

“அப்பா, எனக்கு பிடிச்சி இருந்தது ஆனா உங்களுக்கு பிடிச்சா மட்டும் தான் கல்யாணம். இது காதல் இல்ல அவரு மாப்பிளையா வந்தா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன் அவ்வளவு தான்.“

சத்தியேந்திரன், கண்மணியின் அந்த பதிலை கேட்டு சற்று பயந்து போனான். வந்த மாப்பிளை வீட்டு ஆட்கள் கிளம்பினார்கள்.

“மகேந்திரன் நீ என்னோட சிநேகிதன் நீயும், நானும் சம்மந்தம் செஞ்சா நல்லா இருக்கும்னு நினைச்சோம் ஆனா கடவுள் வேற ஒன்னு நினைச்சிட்டான் விடு, பையன் நல்லவனா தான் இருக்கான் பேசி பாரு. நாங்க கிளம்புறோம்.“ மகேந்திரனால் பதில் ஏதும் சொல்ல முடியவில்வலை தலையை மட்டும் அசைத்தார். எல்லோரும் வெளியேறினர். மகேந்திரன் அமைதியாக சோபாவில் அமர்ந்து எதையோ யோசித்தார். லதா ஒருபக்கம் சித்தபிரம்பை பிடித்தவர் போல நின்றார். மகேந்திரனின் பலத்த யோசனைக்கு பிறகு “வாங்க வந்து உட்காருங்க?“ என்று வரவேற்றார். “லதா காபி கொண்டு வா.“ தன் மனைவியை பார்த்து சொன்னார். பாக்யவதியும், சத்தியேந்திரனும் அமர்ந்தனர்.

“நீங்க என்ன சாதி?“ முதல் கேள்வியே சத்தியேந்திரனை தூக்கிவாறி போட செய்தது. கண்மணியும் தன் அப்பாவை வித்தியாசமாக பார்த்தாள். சாதிகள் இல்லைன்னு அடிக்கடி சொல்லும் அப்பா இப்போது சாதியை பற்றி பேசுகிறாரே. இவரும் மனிதன் தானே என்று யோசித்தாள்.

“அப்படி நான் எதுவும் கேட்க போறது இல்ல.. சாதி, மதம் பார்க்குற ஆளுங்க நான் இல்ல ஆனா கல்யாணத்தை பத்தி யோசிப்பேன். இது சினிமா இல்ல எடுத்ததுமே என் பொண்ணுக்கு பிடிச்சி போச்சி அடுத்த முகூர்த்தத்துலேயே கல்யாணத்தை வச்சிகலாம்னு என்னால சொல்லமுடியாது, கொஞ்சம் யோசிக்கனும் அது..ஆங்…தம்பி என்ன பண்ணுறிங்க“.

சத்யேந்திரன், பாக்யவதியை பார்த்துவிட்டு “அங்கிள் நான் சைக்காலஜிக்கல் டாக்டர், கவர்மண்ட் ஜாப். அப்பா கிடையாது, அம்மா தான் இப்போ தான் ஜாப் கிடைச்சிருக்கு சொந்தவீடு வாங்க டிரை பண்ணிகிட்டு இருக்கேன் திரிமந்த்ல வாங்கிடுவேன். உங்க பொண்ண நல்லா பார்த்துக்குவேன். வேற என்ன நான் சொல்லுறது..“

அவன் பேசி கொண்டிருக்கும் போதே லதா காபி கப்பை நீட்டினார்.

“தேங்ஸ்“ பவ்யமாக காபியை எடுத்துக்கொண்டான். பாக்யவதி காபியை எடுத்துக்கொண்டு அவர் பேச தொடங்கினார். “என் பையன பத்தி நான் சொன்னா அது எப்படி உங்களுக்கு தெரியும்னு தெரியல ஆனா நான் சொல்லி தான் ஆகனும். அவனோட அஞ்சுவயசுல அவனோட அப்பா இறந்துட்டாரு நம்ம என்ன தான் கண்ணும் கருத்துமா வளர்த்தாலும் சில பிள்ளைங்க வழிதவறி போயிடுவாங்க. அம்மா அரவணைப்பு தான் கொடுப்பா, ஒரு அப்பா தான் கண்டிப்பு கொடுப்பாரு. கண்டிப்பு இல்லாம வளருறானே என்ன ஆவான் நினைச்சேன்? சத்தியமா என் புள்ள மாதிரி ஒரு புள்ளைய நீங்க பார்க்கவே முடியாது. நான் இங்க வந்தது முழுக்க முழுக்க என் புள்ளையோட ஆசைக்காக மட்டும் தான். அவனுக்கு உங்க பொண்ண ரொம்ப பிடிச்சிருக்கு ரொம்ப நல்லா பார்த்துக்குவான். உங்க முடிவ நல்லதா சொல்லுங்க..“ பாக்யவதி சொல்லிவிட்டு எழுந்தார்.

மகேந்திரனும் எழுந்துக்கொண்டார் “உங்க பதிலுக்காக காத்துகிட்டு இருப்போம், சத்யா போகலாமா?“

“சரிமா“ சத்தியேந்திரன், மகேந்திரனிடமும், லதாவிடமும் சொல்லிக் கொண்டான். கண்மணியின் அருகே வந்தான்.

“உன்னோட அந்த பதில் என்ன பயமுறுத்திட்டு“

“எனக்கு நம்பிக்கை இருந்தது இன்னும் நம்பிக்கை இருக்கு“

அவளின் கண்களை ஐந்து நொடிக்கு மேல் பார்க்கவே முடியவில்லை. அத்தனை ஆயிரம் அம்புகள் பாய்ந்தது போல இருந்தது. பாக்கெட்டில் இருந்த கூலிங்கிளாசை கண்களுக்கு எடுத்து பொருத்திக் கொண்டான்.
“இதே நம்பிக்கையோட காத்துகிட்டு இரு நான் உன்ன வந்து அழைச்சிட்டு போயிடுவேன்.“ சொல்லிக்கொண்டே அவள் கைகளுக்குள் எதையோ திணித்தான். அவள் விருட்டென்று கைகளை இழுத்துக்கொண்டு விரித்து பார்த்தாள் அதில் இன்னொரு துண்டு சீட்டு இருந்தது அதை விரித்து பார்த்தாள் அவனின் விலாசம் எழுதி இருந்தது. அவள் பயந்ததை நினைத்து சத்தியேந்திரன் புன்னகை சிந்தினான். அவனின் அந்த புன்னகை அவளுக்குள் ஆயிரம் மயக்கங்களை தந்தது. அவன் அவளை கடந்து போனான் வாசலுக்கு சென்று காரில் ஏறி போகும் வரை பாதையையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.

நாட்கள் வாரங்களாகின, வாரங்கள் மாதமும் ஆகியது மகேந்திரனிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. கண்மணியும் அதை பற்றி ஒரு வார்த்தைகூட கேட்டதில்லை. சத்தியேந்திரனும் போன் செய்தோ நேரிலோ மீண்டும் மகேந்திரனை சந்திக்கவே இல்லை. ஏன் திரும்ப கண்மணியை கூட அவன் பார்க்கவில்லை. கண்மணியும் வேலை உண்டு, வீடு உண்டு என்று இருந்தாள். ஆபிஸ் போகும் போது எங்கோ நின்று சத்தியேந்திரன் அவளை பார்ப்பது போலவே பல நாட்கள் தோன்றியதுண்டு. அவளும் திரும்பி திரும்பி தேடி பார்ப்பாள், அவன் புலப்பட்டதில்லை இப்படியாக தன் நாட்களை கழித்து கொண்டு இருந்தாள்.

ஒரு நாள் ஞாயிற்றுகிழமை, பொழுது விடிந்த கையோடு மகேந்திரன் செய்திதாளை திருப்பி கொண்டு இருந்தார். லதா அருகே அமர்ந்து காபியை ஆற்றி கொண்டு இருந்தார். திடீரென்று பேப்பரை மடக்கி விட்டு, “அந்த பையன் போன் நம்பர்? அட்ரஸ் ஏதும்?“ அப்படி தான் தன் வார்த்தையை கூட முடித்து இருக்கவே மாட்டார். எங்கு நின்றாளோ தெரியவில்லை கண்மணி விடுவிடுவென்று ஓடி போய் தன் தலையணை அடியில் புதைத்து வைத்து இருந்த டைரியில் அவன் தந்த துண்டு சீட்டு உறங்கி கொண்டு இருந்தது அதை கையில் எடுத்து ஒரு முறை தடவினாள். மீண்டும் மகேந்திரனை நோக்கி திடுதிடுவென்று ஓடி வந்தாள். முகிலிடம் அந்த துண்டு சீட்டை கொடுத்து கொடுக்க சொன்னாள். அவன் துண்டு சீட்டையும் அவளையும் ஒரு முறை பார்த்தான். ‘கொடுடா‘ என்பது போல் கண்களால் கெஞ்சினாள். அவனும் வாங்கி மகேந்திரனிடம் நீட்டினான். லதாவும், மகேந்திரனும் மாறி மாறி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு மூவரும் சேர்ந்தார் போல் கண்மணியை பார்த்தனர்.

அவள் முகம் வெளிரி போனது. பேய் அறைந்தது போல் அவள் இருந்ததை பார்த்ததும் மூவருக்கும் சிரிப்பு முட்டிக்கொண்டு வந்தது. நான்கு பேருமே சேர்ந்து சிரித்தனர். முதல்நாள் பெண் அழைப்பு மறுநாள் திருமணம். அன்று தான் மீண்டும் சத்தியேந்திரனை பார்க்கிறாள். இப்போது ஆள் அடையாளம் தெரியவில்லை தாடியுடன் இருந்தான். கண்மணி திருமணமண்டபத்தில் தன் அறையை விட்டு வெளியில் அமர்ந்திருந்தாள். சத்தியேந்திரன் அவள் அருகே வந்து அமர்ந்தான். சிறிது நாணத்தில் சிவந்தாள் “ஹோய்..“ அவள் தலைகுனிந்து இருந்ததை அவனும் தலையை குனிந்து பார்த்தான். அவள் பட்டென்று தன்று தலையை நிமிர்த்து அவள் தலை அவனை மோதியது. “ஆ..“ என்று கத்தினான். பதறிபோனாள் “அய்யோ ஸாரி..ஸாரி..“ என்று ஆயிரம்முறை கெஞ்சினாள்.

“சும்மா..“ என்று கண்களை அடித்தான். கண்மணி பெருமூச்சொன்று விட்டாள். “என்ன தாடி ஆளே அடையாளம் தெரியல?“

“இதுவா?“ என்று தன் தாடியை தடவினான்.

“உங்க அப்பா ஒத்துக்கலன்னா இப்படியே தாடிய வளர்த்து சாமியாரா போயிடலாம்னு நினைச்சேன். பட் என்னோட நல்ல நேரம் ஒத்துகிட்டாரு. அப்பறம் அம்மா சொன்னாங்க உன் மாமனாரு கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாருடா தாடிய எடுத்துடுன்னு நான் சொன்னேன் அம்மா நான் அவள எவ்வோளோ காதிலிக்கிறேன்னு இந்த தாடி தான் அவளுக்கு புரியவைக்கும்னு.‘‘

“என்னால நம்ப முடியல?“

“எத தாடியவ“

“ம்ச்..அது இல்ல இந்த காதல? பார்த்ததும் காதல் வந்துட்டா?“

“எவன் சொன்னா பார்த்ததும் காதல் வந்துட்டுன்னு. காதலுக்கு நான் புது அர்த்தம் சொல்லவா. ஒருத்தவங்கள பார்த்ததும்லா பிடிச்சிடுமா அது எந்த அளவு உண்மைன்னு எனக்கு தெரியல உன்ன பார்த்ததுல இருந்து உன்ன நியாபகபடுத்திக்கிட்டே இருக்ககூடிய சம்பவங்கள் என்ன சுத்தி நடந்தது. திரும்ப திரும்ப எனக்குள்ள உன்ன யாரோ விதைச்சாங்க அது கடவுளா கூட இருக்கலாம். எக்ஸாம்பிலுக்கு எங்க வீட்டுல வேலை செய்யவர அக்காவுக்கு ஒரு பெண்குழந்தை இருக்கு அதோட பேரு உன்ன பார்க்குற வரைக்கும் கண்மணின்னு தெரியாது உன்ன பார்த்ததுக்கு மறுநாள் அவங்க அந்த குழந்தைய கண்மணின்னு கூப்பிடுறாங்க எதார்த்தமா நான் அதை கவனிக்கிறேன். இப்படி ஏதோ ஒன்னு உன்ன எனக்கு ஞாபகபடுத்துனிச்சி அப்போ தான் முடிவு பண்ணுனே நீ எனக்கு மனைவியா வந்தா நல்லா இருக்கும்னு.“

“எனக்கு அப்படி எதுவும் நடக்கலையே??“

“ஏன் பொய் சொல்லாத அப்படி நடக்காமலையா ரோட்டுல போகையில சுத்தி சுத்தி திரும்பி திரும்பி பார்த்துக்கிட்டே போவ நான் நின்ன மாதிரி பீளிங் வந்தது தானே?“

“ஆமாம் அது??“ கண்மணி ஆச்சரியமாக கேட்கும் போது சத்தியேந்திரன் வாயை மூடி சிரித்தான். கண்மணிக்கு புரிந்து போனது “அடப்பாவி..“என்று முணங்கி கொண்டு அவளும் சிரித்தாள்.

“உனக்கு இனி நான் எனக்கு இனி நீ. இந்த உறவு வலிமையாதாகவும், பெருமையானதாகவும் அமையும்.

எந்த நேரதிலும் உன்னை எவரிடத்திலும் விட்டு கொடுக்க மாட்டேன். இந்த அக்னியின் சாட்சியாக..“ என்பதை உணர்த்துவது போல் அவள் கைகளை பிடித்திருந்தான். ஐயர் தாலியை கொடுத்ததும் கைகளை விலக்கி அவன் கைகளில் வாங்கி கொண்டான். தலைகுனிந்து திருமாங்கல்யத்தை ஏற்று தன் நெஞ்சில் சுமந்து கொண்டாள். தன் பக்கமாக அணைத்து அவள் வகுட்டில் குங்குமம் இட்டான் கண்மணியின் கண்கள் கலங்கி போயின. லதாவும் ஆனந்த கண்ணீர் சிந்தினார். எல்லோர் மகிழ்ச்சியும் நிரம்ப திருமணம் இனிதே முடிந்தது. கண்மணி சத்தியேந்திரன் வீட்டில் தன் வலதுகாலை வைத்தாள். “இப்போ தான் வீடே நிறைஞ்சிருக்கு“ பாக்யவதி தன் மருமகளை புகழ்ந்துக்கொண்டார்.

கண்மணியும், சத்தியேந்திரனும் மாறி மாறி பார்த்துக்கொண்டனர்.
“பரவாயில்லை சார்.. பேசண்டா வந்தவங்களையே உங்க பொண்டாட்டியா ஆக்கிட்டிங்க“ நேரம் காலம் தெரியாமல் குண்டை தூக்கி போட்டாள் சத்தியேந்திரனின் ரிசப்சனிஸ்ட். பாக்யவதியின் விழிகள் மேல் எழும்பியது. சத்தியேந்திரனும், கண்மணியும் திரு திருவென்று விழித்தனர்.
“என்னது பேசண்டா??“ குழப்பத்துடனும், அதிர்ச்சியுடனும் கேட்டார் பாக்யவதி.​
 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom