பூவை 4
சத்தியேந்திரன் எதிரே நடப்பவை எல்லாம் தலைகீழாக நடந்து கொண்டிருந்தது. ஏற்கனவே அங்கு பெண் பார்க்கும் படலம் அரங்கேறிக்கொண்டு இருந்தது. பாக்யவதியும், சத்தியேந்திரனும் திரு திருவென்று விழித்துக்கொண்டு இருந்தனர். எதிர்பாராமல் தீடீரென்று வீட்டிற்குள் இருவர் நுழைந்ததும் அங்கிருந்தவர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை மாறி மாறி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு ஏதோ முனுமுனுத்தனர். பாக்யவதி, சத்தியேந்திரன் காதருகே மெல்லமாக, “தப்பான நேரத்துல வந்துட்டோமோ“ என்றார்.
“இல்லமா சரியா தான் வந்திருக்கோம்.“ என தைரியம் கொடுக்கும்படி அழுத்தி சொன்னான். அதற்குள் அங்கு அமர்ந்திருந்த ஒருத்தர் “தம்பி நீங்க யாரு?? உங்களுக்கு வேண்டியவங்களா“ என்றவாறு மற்றொருவரை பார்த்துக்கேட்டார். அவன் தலையை சொறிந்துக் கொண்டு ஞாபகப்படுத்தி பார்ப்பது போல யோசித்தார்.
“இல்லையே…“இழுத்து சொன்னார்.
“கோகுல் உனக்கு தெரிஞ்சவங்களா?“ அங்கு கிப்டாக்காக அமர்ந்திருந்த இளைஞனிடம் கேட்க அவன் உடனடி பதிலை சொன்னான்.
“தெரியலப்பா?..“
“இல்ல நாங்க வந்தது… கண்மணி.. கண்மணி..“, சத்தியேந்திரன் இழுத்து யோசித்து என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்து தயங்கி தயங்கி மந்திரம் போல அவள் பெயரை அழைத்து நின்று கொண்டிருந்தான். பாதி அலங்காரத்திலேயே அறையை விட்டு வேகமாக வெளியே வந்தாள். எதை பற்றியும் யோசிக்கவில்லை சுற்றி இருப்பவர்களை பற்றிய எந்த கவலையும் இல்லை அசையாமல் நின்ற சிலையென ஸ்தம்பித்து நின்றாள் அவனை கண்டு. அவனும் அலங்கரிந்து வந்து நிற்பது யார் தேவலோக அழகியோ என மெய்மறந்து ரசித்து கொண்டு நின்றான். இருவரின் பார்வைக்கும் வேறு எதுவும் தெரியவில்லை அவனுக்கு அவள் அவளுக்கு அவன் மட்டுமே தெரிந்தனர். சோபாவில் அதுவரை அமைதியாக அமர்ந்திருந்த மனிதர் இப்போது பொறுமை இழந்து காட்டு கத்தலாக கத்தினார். “கண்மணி..கண்மணி..“ சத்தம் போட்டு அழைத்தார். அவள் காதில் ஏறவில்லை காதல் தலைகேறினால் மற்றது எவையேனும் தெரியுமோ? காதல் பூஜையில் குறுக்கே கரடிகள் என்று தோன்றியது சத்தியேந்திரனுக்கு. மீண்டும் ஒலித்த அந்த குரல் அவளின் புத்தியை தெளிய செய்தது. “அப்பா..“ என்றாள்.
“என்னமா யாரு இது?“ மீண்டும் கேள்விகளை கேட்க தொடங்கினார்.
“நான் சொல்றேன் மகேந்திரன்.“ இத்தனை நேரமாக பக்கத்தில் அமர்ந்திருந்தவர் சொன்னார். “நீங்க எங்கள பொண்ணு பார்க்க வர சொல்லிருக்கிங்க? பொண்ணு அவங்கள வரசொல்லிருக்கு, சரி தானமா“ பக்கத்தில் இருந்து பார்த்தவர் போல சரியாக போட்டு உடைத்தார்.
“கரெக்ட்.. உங்க பையனுக்கு அவரு அப்பாயிண்ட் மெண்ட் தான் கொடுத்தாரு. ஆனா கண்மணி எனக்கு அப்பாயிண்ட் மெண்ட் ஆர்டரே கொடுத்துட்டாங்க.“ அன்று தந்த துண்டு சீட்டை அத்தனை பத்திரமாக வைத்திருந்து அதை எடுத்து கூட்டத்தில் காட்டி கண்மணியை நாண வைத்தான் சத்தியேந்திரன். கண்மணியை பார்த்து மெல்ல கண்களை மேல் ஏற்றி தலையை அசைத்தான். அவளும் தலையை அசைத்தாள். அவன் தொடர்ந்தான் “ஒரு வருஷம் கழிச்சி வந்து பேச சொன்னாங்க நான் ஒரு வருஷம் முடிஞ்சி ஒரு நாள் தள்ளி வந்தது தப்பா போச்சி? நீங்க ரொம்ப பாஸ்ட்..“ குறும்பாக பேச அங்கிருந்த பெண்கள் சிலர் மெல்ல சிரித்தனர்.
“என்னமா இது??“
“அப்பா, எனக்கு பிடிச்சி இருந்தது ஆனா உங்களுக்கு பிடிச்சா மட்டும் தான் கல்யாணம். இது காதல் இல்ல அவரு மாப்பிளையா வந்தா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன் அவ்வளவு தான்.“
சத்தியேந்திரன், கண்மணியின் அந்த பதிலை கேட்டு சற்று பயந்து போனான். வந்த மாப்பிளை வீட்டு ஆட்கள் கிளம்பினார்கள்.
“மகேந்திரன் நீ என்னோட சிநேகிதன் நீயும், நானும் சம்மந்தம் செஞ்சா நல்லா இருக்கும்னு நினைச்சோம் ஆனா கடவுள் வேற ஒன்னு நினைச்சிட்டான் விடு, பையன் நல்லவனா தான் இருக்கான் பேசி பாரு. நாங்க கிளம்புறோம்.“ மகேந்திரனால் பதில் ஏதும் சொல்ல முடியவில்வலை தலையை மட்டும் அசைத்தார். எல்லோரும் வெளியேறினர். மகேந்திரன் அமைதியாக சோபாவில் அமர்ந்து எதையோ யோசித்தார். லதா ஒருபக்கம் சித்தபிரம்பை பிடித்தவர் போல நின்றார். மகேந்திரனின் பலத்த யோசனைக்கு பிறகு “வாங்க வந்து உட்காருங்க?“ என்று வரவேற்றார். “லதா காபி கொண்டு வா.“ தன் மனைவியை பார்த்து சொன்னார். பாக்யவதியும், சத்தியேந்திரனும் அமர்ந்தனர்.
“நீங்க என்ன சாதி?“ முதல் கேள்வியே சத்தியேந்திரனை தூக்கிவாறி போட செய்தது. கண்மணியும் தன் அப்பாவை வித்தியாசமாக பார்த்தாள். சாதிகள் இல்லைன்னு அடிக்கடி சொல்லும் அப்பா இப்போது சாதியை பற்றி பேசுகிறாரே. இவரும் மனிதன் தானே என்று யோசித்தாள்.
“அப்படி நான் எதுவும் கேட்க போறது இல்ல.. சாதி, மதம் பார்க்குற ஆளுங்க நான் இல்ல ஆனா கல்யாணத்தை பத்தி யோசிப்பேன். இது சினிமா இல்ல எடுத்ததுமே என் பொண்ணுக்கு பிடிச்சி போச்சி அடுத்த முகூர்த்தத்துலேயே கல்யாணத்தை வச்சிகலாம்னு என்னால சொல்லமுடியாது, கொஞ்சம் யோசிக்கனும் அது..ஆங்…தம்பி என்ன பண்ணுறிங்க“.
சத்யேந்திரன், பாக்யவதியை பார்த்துவிட்டு “அங்கிள் நான் சைக்காலஜிக்கல் டாக்டர், கவர்மண்ட் ஜாப். அப்பா கிடையாது, அம்மா தான் இப்போ தான் ஜாப் கிடைச்சிருக்கு சொந்தவீடு வாங்க டிரை பண்ணிகிட்டு இருக்கேன் திரிமந்த்ல வாங்கிடுவேன். உங்க பொண்ண நல்லா பார்த்துக்குவேன். வேற என்ன நான் சொல்லுறது..“
அவன் பேசி கொண்டிருக்கும் போதே லதா காபி கப்பை நீட்டினார்.
“தேங்ஸ்“ பவ்யமாக காபியை எடுத்துக்கொண்டான். பாக்யவதி காபியை எடுத்துக்கொண்டு அவர் பேச தொடங்கினார். “என் பையன பத்தி நான் சொன்னா அது எப்படி உங்களுக்கு தெரியும்னு தெரியல ஆனா நான் சொல்லி தான் ஆகனும். அவனோட அஞ்சுவயசுல அவனோட அப்பா இறந்துட்டாரு நம்ம என்ன தான் கண்ணும் கருத்துமா வளர்த்தாலும் சில பிள்ளைங்க வழிதவறி போயிடுவாங்க. அம்மா அரவணைப்பு தான் கொடுப்பா, ஒரு அப்பா தான் கண்டிப்பு கொடுப்பாரு. கண்டிப்பு இல்லாம வளருறானே என்ன ஆவான் நினைச்சேன்? சத்தியமா என் புள்ள மாதிரி ஒரு புள்ளைய நீங்க பார்க்கவே முடியாது. நான் இங்க வந்தது முழுக்க முழுக்க என் புள்ளையோட ஆசைக்காக மட்டும் தான். அவனுக்கு உங்க பொண்ண ரொம்ப பிடிச்சிருக்கு ரொம்ப நல்லா பார்த்துக்குவான். உங்க முடிவ நல்லதா சொல்லுங்க..“ பாக்யவதி சொல்லிவிட்டு எழுந்தார்.
மகேந்திரனும் எழுந்துக்கொண்டார் “உங்க பதிலுக்காக காத்துகிட்டு இருப்போம், சத்யா போகலாமா?“
“சரிமா“ சத்தியேந்திரன், மகேந்திரனிடமும், லதாவிடமும் சொல்லிக் கொண்டான். கண்மணியின் அருகே வந்தான்.
“உன்னோட அந்த பதில் என்ன பயமுறுத்திட்டு“
“எனக்கு நம்பிக்கை இருந்தது இன்னும் நம்பிக்கை இருக்கு“
அவளின் கண்களை ஐந்து நொடிக்கு மேல் பார்க்கவே முடியவில்லை. அத்தனை ஆயிரம் அம்புகள் பாய்ந்தது போல இருந்தது. பாக்கெட்டில் இருந்த கூலிங்கிளாசை கண்களுக்கு எடுத்து பொருத்திக் கொண்டான்.
“இதே நம்பிக்கையோட காத்துகிட்டு இரு நான் உன்ன வந்து அழைச்சிட்டு போயிடுவேன்.“ சொல்லிக்கொண்டே அவள் கைகளுக்குள் எதையோ திணித்தான். அவள் விருட்டென்று கைகளை இழுத்துக்கொண்டு விரித்து பார்த்தாள் அதில் இன்னொரு துண்டு சீட்டு இருந்தது அதை விரித்து பார்த்தாள் அவனின் விலாசம் எழுதி இருந்தது. அவள் பயந்ததை நினைத்து சத்தியேந்திரன் புன்னகை சிந்தினான். அவனின் அந்த புன்னகை அவளுக்குள் ஆயிரம் மயக்கங்களை தந்தது. அவன் அவளை கடந்து போனான் வாசலுக்கு சென்று காரில் ஏறி போகும் வரை பாதையையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.
நாட்கள் வாரங்களாகின, வாரங்கள் மாதமும் ஆகியது மகேந்திரனிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. கண்மணியும் அதை பற்றி ஒரு வார்த்தைகூட கேட்டதில்லை. சத்தியேந்திரனும் போன் செய்தோ நேரிலோ மீண்டும் மகேந்திரனை சந்திக்கவே இல்லை. ஏன் திரும்ப கண்மணியை கூட அவன் பார்க்கவில்லை. கண்மணியும் வேலை உண்டு, வீடு உண்டு என்று இருந்தாள். ஆபிஸ் போகும் போது எங்கோ நின்று சத்தியேந்திரன் அவளை பார்ப்பது போலவே பல நாட்கள் தோன்றியதுண்டு. அவளும் திரும்பி திரும்பி தேடி பார்ப்பாள், அவன் புலப்பட்டதில்லை இப்படியாக தன் நாட்களை கழித்து கொண்டு இருந்தாள்.
ஒரு நாள் ஞாயிற்றுகிழமை, பொழுது விடிந்த கையோடு மகேந்திரன் செய்திதாளை திருப்பி கொண்டு இருந்தார். லதா அருகே அமர்ந்து காபியை ஆற்றி கொண்டு இருந்தார். திடீரென்று பேப்பரை மடக்கி விட்டு, “அந்த பையன் போன் நம்பர்? அட்ரஸ் ஏதும்?“ அப்படி தான் தன் வார்த்தையை கூட முடித்து இருக்கவே மாட்டார். எங்கு நின்றாளோ தெரியவில்லை கண்மணி விடுவிடுவென்று ஓடி போய் தன் தலையணை அடியில் புதைத்து வைத்து இருந்த டைரியில் அவன் தந்த துண்டு சீட்டு உறங்கி கொண்டு இருந்தது அதை கையில் எடுத்து ஒரு முறை தடவினாள். மீண்டும் மகேந்திரனை நோக்கி திடுதிடுவென்று ஓடி வந்தாள். முகிலிடம் அந்த துண்டு சீட்டை கொடுத்து கொடுக்க சொன்னாள். அவன் துண்டு சீட்டையும் அவளையும் ஒரு முறை பார்த்தான். ‘கொடுடா‘ என்பது போல் கண்களால் கெஞ்சினாள். அவனும் வாங்கி மகேந்திரனிடம் நீட்டினான். லதாவும், மகேந்திரனும் மாறி மாறி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு மூவரும் சேர்ந்தார் போல் கண்மணியை பார்த்தனர்.
அவள் முகம் வெளிரி போனது. பேய் அறைந்தது போல் அவள் இருந்ததை பார்த்ததும் மூவருக்கும் சிரிப்பு முட்டிக்கொண்டு வந்தது. நான்கு பேருமே சேர்ந்து சிரித்தனர். முதல்நாள் பெண் அழைப்பு மறுநாள் திருமணம். அன்று தான் மீண்டும் சத்தியேந்திரனை பார்க்கிறாள். இப்போது ஆள் அடையாளம் தெரியவில்லை தாடியுடன் இருந்தான். கண்மணி திருமணமண்டபத்தில் தன் அறையை விட்டு வெளியில் அமர்ந்திருந்தாள். சத்தியேந்திரன் அவள் அருகே வந்து அமர்ந்தான். சிறிது நாணத்தில் சிவந்தாள் “ஹோய்..“ அவள் தலைகுனிந்து இருந்ததை அவனும் தலையை குனிந்து பார்த்தான். அவள் பட்டென்று தன்று தலையை நிமிர்த்து அவள் தலை அவனை மோதியது. “ஆ..“ என்று கத்தினான். பதறிபோனாள் “அய்யோ ஸாரி..ஸாரி..“ என்று ஆயிரம்முறை கெஞ்சினாள்.
“சும்மா..“ என்று கண்களை அடித்தான். கண்மணி பெருமூச்சொன்று விட்டாள். “என்ன தாடி ஆளே அடையாளம் தெரியல?“
“இதுவா?“ என்று தன் தாடியை தடவினான்.
“உங்க அப்பா ஒத்துக்கலன்னா இப்படியே தாடிய வளர்த்து சாமியாரா போயிடலாம்னு நினைச்சேன். பட் என்னோட நல்ல நேரம் ஒத்துகிட்டாரு. அப்பறம் அம்மா சொன்னாங்க உன் மாமனாரு கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாருடா தாடிய எடுத்துடுன்னு நான் சொன்னேன் அம்மா நான் அவள எவ்வோளோ காதிலிக்கிறேன்னு இந்த தாடி தான் அவளுக்கு புரியவைக்கும்னு.‘‘
“என்னால நம்ப முடியல?“
“எத தாடியவ“
“ம்ச்..அது இல்ல இந்த காதல? பார்த்ததும் காதல் வந்துட்டா?“
“எவன் சொன்னா பார்த்ததும் காதல் வந்துட்டுன்னு. காதலுக்கு நான் புது அர்த்தம் சொல்லவா. ஒருத்தவங்கள பார்த்ததும்லா பிடிச்சிடுமா அது எந்த அளவு உண்மைன்னு எனக்கு தெரியல உன்ன பார்த்ததுல இருந்து உன்ன நியாபகபடுத்திக்கிட்டே இருக்ககூடிய சம்பவங்கள் என்ன சுத்தி நடந்தது. திரும்ப திரும்ப எனக்குள்ள உன்ன யாரோ விதைச்சாங்க அது கடவுளா கூட இருக்கலாம். எக்ஸாம்பிலுக்கு எங்க வீட்டுல வேலை செய்யவர அக்காவுக்கு ஒரு பெண்குழந்தை இருக்கு அதோட பேரு உன்ன பார்க்குற வரைக்கும் கண்மணின்னு தெரியாது உன்ன பார்த்ததுக்கு மறுநாள் அவங்க அந்த குழந்தைய கண்மணின்னு கூப்பிடுறாங்க எதார்த்தமா நான் அதை கவனிக்கிறேன். இப்படி ஏதோ ஒன்னு உன்ன எனக்கு ஞாபகபடுத்துனிச்சி அப்போ தான் முடிவு பண்ணுனே நீ எனக்கு மனைவியா வந்தா நல்லா இருக்கும்னு.“
“எனக்கு அப்படி எதுவும் நடக்கலையே??“
“ஏன் பொய் சொல்லாத அப்படி நடக்காமலையா ரோட்டுல போகையில சுத்தி சுத்தி திரும்பி திரும்பி பார்த்துக்கிட்டே போவ நான் நின்ன மாதிரி பீளிங் வந்தது தானே?“
“ஆமாம் அது??“ கண்மணி ஆச்சரியமாக கேட்கும் போது சத்தியேந்திரன் வாயை மூடி சிரித்தான். கண்மணிக்கு புரிந்து போனது “அடப்பாவி..“என்று முணங்கி கொண்டு அவளும் சிரித்தாள்.
“உனக்கு இனி நான் எனக்கு இனி நீ. இந்த உறவு வலிமையாதாகவும், பெருமையானதாகவும் அமையும்.
எந்த நேரதிலும் உன்னை எவரிடத்திலும் விட்டு கொடுக்க மாட்டேன். இந்த அக்னியின் சாட்சியாக..“ என்பதை உணர்த்துவது போல் அவள் கைகளை பிடித்திருந்தான். ஐயர் தாலியை கொடுத்ததும் கைகளை விலக்கி அவன் கைகளில் வாங்கி கொண்டான். தலைகுனிந்து திருமாங்கல்யத்தை ஏற்று தன் நெஞ்சில் சுமந்து கொண்டாள். தன் பக்கமாக அணைத்து அவள் வகுட்டில் குங்குமம் இட்டான் கண்மணியின் கண்கள் கலங்கி போயின. லதாவும் ஆனந்த கண்ணீர் சிந்தினார். எல்லோர் மகிழ்ச்சியும் நிரம்ப திருமணம் இனிதே முடிந்தது. கண்மணி சத்தியேந்திரன் வீட்டில் தன் வலதுகாலை வைத்தாள். “இப்போ தான் வீடே நிறைஞ்சிருக்கு“ பாக்யவதி தன் மருமகளை புகழ்ந்துக்கொண்டார்.
கண்மணியும், சத்தியேந்திரனும் மாறி மாறி பார்த்துக்கொண்டனர்.
“பரவாயில்லை சார்.. பேசண்டா வந்தவங்களையே உங்க பொண்டாட்டியா ஆக்கிட்டிங்க“ நேரம் காலம் தெரியாமல் குண்டை தூக்கி போட்டாள் சத்தியேந்திரனின் ரிசப்சனிஸ்ட். பாக்யவதியின் விழிகள் மேல் எழும்பியது. சத்தியேந்திரனும், கண்மணியும் திரு திருவென்று விழித்தனர்.
“என்னது பேசண்டா??“ குழப்பத்துடனும், அதிர்ச்சியுடனும் கேட்டார் பாக்யவதி.