Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed மல்லிச்சரம் -கதைப்பகுதி

மல்லிச்சரம்-6



அந்தக் கான்பரன்ஸ் ஹாலில் எம்.டி.யைத் தவிர எல்லா முக்கியஸ்தர்களும் வந்து அமர்ந்து விட்டனர். எதற்காக இந்த மீட்டிங் என்பது மாதவி உட்பட யாருக்குமே தெரியாது தான்.ஒவ்வெருவரும் ஒவ்வொறு விஷயத்தை யூகித்து பரிமாறிக் கொண்டார்கள். லேசான சலசலப்பு அந்த ஏசி அறையை நிறைத்தது. கதவு திறந்து தயாநிதியின் பின்னால் உள்ள நுழைந்தான் சத்யன். அவனை பார்த்ததும், சட்டென எழுந்து நின்றால் மாதவி, ஆயிரம் வாட்ஸ் பல்ப் போட்டது போல், அவள் முகம் பளபளத்தது.ஆனால் சதியன் மாதவியை ஏறெடுத்தும் பார்க்க வில்லை .மனதில் அதிக வலியை உணர்ந்தாள்



எல்லோரையும் வணங்கிவிட்டு தன் இருக்கையில் அமர்ந்தார் தயாநிதி . ஆரம்ப விசாரிப்புகளை முடித்துக் கொண்டு எழுந்து நின்றார்.



"முக்கியமாக இந்த மீட்டிங் எதற்கென்றால் இன்றிலிருந்து இந்தக் கம்பெனியின் அத்தனை பொறுப்புகளையும் என் மகனிடம் ஒப்படைக்கிறேன். எனது உடல் நிலையை முன்னிட்டு இந்த மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறேன்.இனி இந்த "சத்யன் இன்டஸ்ட்ரீஸிக்கு "எம்.டி.சத்யன் தான். இனி உங்கள் கருத்தைக் கூறலாம்"



எல்லோருடைய முகமும் மலர்ந்தன. அதில் ஒருவர் மட்டும் "சத்யன் எங்களுக்கு எம்.டியாக வருவதில் எங்கள் எல்லோருக்கும் சந்தோஷமே " என்றார். அதைத் தொடர்ந்து அனைவரும் அவரை ஆமோதித்தனர்.



பல வண்ணக்கனவுகளோடு அன்று அலுவலகம் கிளம்பினாள் மாதவி .பொதுவாக ஞாயிறு அன்று தான் பொறுமையாக தலைக்குளிப்பாள். ஆனால் இன்று அலாரம் வைத்து, அது அடிக்கும் முன்பே அணைத்து விட்டு குளியலறைக்குள் புகுந்தாள். அவளுக்கு மிகவும் பிடித்தமான ஊதா நிறப்புடவையை உடுத்திக் கொண்டாள். தளரப் பின்னிய கூந்தலில் மல்லிகைப்பூ ஒரு சரம் வைத்துக்கொண்டாள். லேசான ஒப்பனையை முடித்துவிட்டு பீரோ கண்ணாடியில் தன்னை ஒரு முறை நன்றாகப் பார்த்துக் கொண்டாள். திருப்தியாக இருந்தது. ஆசை ஆசையாக அலுவலகம் கிளம்பினாள்.



எம்.டியின் அறை கதவைத்திறக்க யத்தனிக்கையில் கைகள் நடுங்கியது. உள்ளம் படபடத்தது நா உலர்ந்தது. லேசாக தன் உதடுகளால் நாவை ஈரப்படுத்திக் கொண்டு கைகளால் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றாள். ஆனால் அவளின் படபடப்புகள் அத்தனையும் வேஸ்ட். காரணம் சத்யன் அங்கு இல்லை. எனவே தன் ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு தன் இருக்கையில் சென்று அமர்ந்தாள்.



ஒரு மணி நேரத்திற்குப் பிறகு தான் சத்யன் தன் அறைக்குள் நுழைந்தான். அவனை எதிர்பார்த்துத் தவித்த மாதவி. உடனே எழுந்து நின்று “குட்மார்னிங் சார்" என்றாள் சந்தோஷக் குரலில் .அவளை ஒரு முறை புருவம் தூக்கி நோக்கினான் சத்யன்.தலை முதல் கால் வரை அவளை அளவெடுத்தான் .பிறகு ஏதோ கடமைக்கு கூறுபவன் போல் "குட்மார்னிங்” என்றான். எந்த உணர்ச்சியும் இல்லாமல் இறுகின முகத்துடன் , அவள் கனவுகள் புஸ்வானமாகி விட்டது.



தான் கடைசியாக பார்த்த சத்யனுக்கும் இந்தச் சத்யனுக்கும் நிறையவே வேறுபாடுகளை உணர்ந்தாள்.அப்போது பார்வையில் ஒரு காதல் இருந்தது, இப்போது ஒர் வெறுப்பு தோன்றுகிறது. அப்போது இதழ் கிடையில் ஒரு குறுநகை எப்போதும் தவழ்ந்து கொண்டே இருக்கும். இப்போது ஜிப் போட்டு மூடியது போல இறுக்கமாக இருக்கிறது. அப்போது வந்த வார்த்தைகள் நெகிழ வைத்தன. இப்போது பேச வேண்டுமே என்று வெளியே வந்தன.கடவுளே இதற்கெல்லாம் எது காரணம் ?நான் ஏதேனும் தவறு செய்து விட்டேனா? அதற்கான தண்டனை தானா? தலை வலித்தது. மாதவிக்கு கண்டிப்பாக டீ தேவைப்பட்டது. கடிகாரத்தைப் பார்த்தாள் சோனாவுக்கு எஸ். எம். எஸ்.அனுப்பி விட்டு கேன்டினை நோக்கி நடந்தாள்.



" என்ன மேடம் இன்னிக்கு டச் அப் கொஞ்சம் அதிகமா இருக்கு போல. எல்லாம் உன் பாஸ் வந்த சந்தோஷமா? " ஏற இறங்க மாதவியை அளவெடுத்தாள் சோனா.



"ம் ....சொல்லுங்க மேடம் " நச்சரித்தாள். மாதவியின் மனநிலையைப் புரிந்து கொள்ளாமல் அளவளாவிக் கொண்டிருந்தாள்.



"அப்படியே சும்மா ஜொலிக்கிற மாதவி" என்று மனப்பூர்வமாக பாராட்டினாள்.



மாதவியின் மனதிலே மின்னலடித்தது ஒரு வேளை இந்த ஒப்பனை அவனுக்குப் பிடிக்கவில்லையோ, நான் சிம்பிளாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறானா நான் ஒன்றும் அப்படி அதிகமாக எதுவும் செய்யவில்லையே லேசாக பவுடர் பூசி, மேட்சாக பொட்டு வைத்திருக்கிறேன் .தலைக்கு குளித்ததால் கொஞ்சம் முகம் பளபளக்கிறது .அவ்வளவே இது கூட தவறா.? சரி சத்யனுக்கு பிடிக்கவில்லை என்றால் மாற்றிக் கொள்ளவேண்டியது தான். மனதிற்குள் இப்படி நிறைய யோசித்தாள் வெகு நேரமாக அவளிடம் எந்தப் பதிலும் இல்லாமல் போகவே அவள் தோள்களை தொட்டால் சோனா. தன் நிலைக்கு வந்தால் மாதவி



" இதெல்லாம் சரிபார்க்க வேண்டிய ஃபைல்ஸ் சார்" நான்கு தனித்தனி கோப்புகளை மேஜை மீது வைத்த மாதவியை நோக்கினான் சத்யன்.



அவள் இரண்டு நாட்களாக கற்ற பாடத்திலிருந்து முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமலே அவன் கண்களை சந்தித்தாள். சட்டென மனதில் பூ மாரி பொழிந்தது. காரணம் சத்தியனின் கைகள் அவள் கரத்தைப் பூப்போன்று பற்றி இருந்தன. அவன் கண்களிலிருந்து வந்த மின்சாரத்தில் இருந்து அவளால் விடுபடவே முடியவில்லை .அவள் கரத்தைப் பற்றியவாறு எழுந்தவன் அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான். தான் ஏதோ மேகங்களின் நடுவே பயணிப்பது போன்ற ஓர் சிலிர்ப்பை ஏற்படுத்தியது மாதவிக்கு .



"மாதவி .... "அவனது அழைப்பு அமிர்தமாய் கேட்டது.



"ம் ...." குரலே எழவில்லை அவளுக்கு



“இன்று உனக்கு தோதுபடும் என்றால் தாஜில் ஒரு ரூம் போட்டு விடவா?" என்றவனின் பேச்சின் பொருள் புரியவே சில வினாடிகள் தேவைப்பட்டது மாதவிக்கு .



அவன் வார்த்தை புத்திக்கு எட்டியதும் தீயைத் தொட்டவள் போல விலகி நின்றாள். முகமெல்லாம் வியர்த்து விட்டது.



"நீங்கள் .... நீங்கள் ---என்ன சொன்னீர்கள் "குரலில் அதிக நடுக்கம் இருந்தது. தன் காதுகளை அவளால் நம்பவே முடியவில்லை .



இறுகிய முகத்தோடும் வெறித்த பார்வையோடும் அவளை அளவெடுத்தான் சத்யன்.



உடம்பெல்லாம் கூசியது மாதவிக்கு .அருவருப்பு அவளின் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.



" ஏதோ, கேட்கக்கூடாததை கேட்டது போல இப்படி முழிக்கிறாயே இது ஒன்றும் உனக்கு புதிதல்லவே " என்றான் அலட்சியமாக .



சப்த நாடிகளும் அடங்கிவிட்டது மாதவிக்கு . "ச்சே" இவ்வளவுதானா கடைசியில் பணக்கார புத்தியைக் காண்பித்து விட்டானே.சோனா கூறியது எவ்வளவு உண்மை. இத்தனை நாள் அவன் கண்களில் காதலைக் கண்டதாக எண்ணி என் மனதையும் மாசு படுத்திக் கொண்டேனே. காதலுக்கும், காமத்திற்கும் கூட வா எனக்கு வேறுபாடு தெரியவில்லை ?அந்த அளவு தரம் இறங்கி விட்டோமா ? அவன் மீது இருந்த காதலில் மயங்கியதற்கு தக்க தண்டனை .தேவை தான். ‘கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை' உடலைப் பற்றி யோசிப்பவனுக்கு மனதின் வலி தெரிவது எங்கே? இப்படி எல்லாம் மாதவியின் மனம் "ஓ"வென அலறியது.



" என்ன சத்தத்தையே காணோம்"



கண்கள் சிவந்து விட்டது மாதவிக்கு .



"நான் ..... நான்.. உங்களை....ம் ....அதை உங்களிடம் கூறி ஒரு பயனும் இல்லை. நீங்கள் நினைக்கும் பெண் நான் இல்லை .நீங்கள் அப்படி நினைக்கும்படி நான் ஏதேனும் தப்பு செய்திருந்தால் மன்னித்து விடுங்கள். நான் கிளம்புகிறேன்" கண்களில் நீர் வழிய வேகமாக தன் உடமைகளை அள்ளிக் கொண்டு கதவை நோக்கி விரைந்தாள்.



" ஒரு வேசியின் மகளுக்கு இத்தனை நெஞ்சழுத்தம் இருக்கக் கூடாது தான் " என்று உரக்கவே முணுமுணுத்தான் .

கதவைத் திறந்தவள் அவனை ஒருமுறை முறைத்து விட்டு அதற்கு மேல் தன் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் அழுது விடுவோமோ என்று பயந்து அவசரமாக வெளியேறினாள்.
 
மல்லிச்சரம்-7

தலைமாட்டில் கைபேசி அலறியது வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து போனை எடுத்தாள் மாதவி.அதில் தெரிந்த எண்கள் "ஆபீஸ்" என்று பளிச்சிட்டது.

"சத்யனா?" நினைக்கும் போதே அழுகையும், கோபமும் ஒன்று. சேர்ந்து வந்தது.

முதல் முறை தானாக நின்று விட்டது. மறுமுறை தொடர்ந்து ஒலித்தது. அப்போதும் கைபேசியை வெறித்துக் கொண்டே இருந்தாள்.



மூன்றாம் முறை அது அலறியது

“ அதை எடேன் மா ஓயாமல் அடித்துக் கொண்டே இருக்கிறது பார்" என்று குரல் கொடுத்தாள் அம்மா.



எப்படியும் அவள் எடுப்பது வரை இந்த அலறல் நிற்கப் போவதில்லை .எனவே வேறு வழியின்றி எடுத்து காதுக்குக் கொடுத்தாள்.



"ஹலோ ...." அவள் வார்த்தைகள் பிசிரடித்தன.



" ஏன் இன்று அலுவலகம் வரவில்லை ?" அவன் குரலில் அதட்டல் தெரிந்தது.



"அதான் உடம்புக்கு முடியலை என்று மாலினியிடம் "அவள் முடிக்கு முன் இடைமறித்தான்.



" உனக்கு எம்.டி நானா? அல்லது அந்த மாலினியா?"



உதட்டைப்பற்களால் கடித்து அழுகையை விழுங்கினாள்.



"சரி .... உங்களிடமே சொல்கிறேன். எனக்கு ஒரு வாரம் விடுப்பு வேண்டும்" என்றாள் ஈன சுரத்தில் .



" ஒரு வாரம் விடுப்பு மட்டும் தானா? அல்லது ராஜினாமா கடிதம் எதுவும் வந்து சேருமா?" குத்தலாக வார்த்தைகள் வெளிவந்தன.



‘யூகித்து விட்டான் அறிவாளி தான். ‘இந்த நிலையிலும் அவளால் அவனை பாராட்ட முடிந்ததை நினைத்து அவளுக்கே அசிங்கமாக இருந்தது.



அவளின் அமைதியை தொடர்ந்து " இங்கே பார் மாதவி, சொந்த விஷயம் வேறு அலுவல் வேறு ,.ஏன் குழப்பிக் கொள்கிறாய்?"



" அதை எல்லோரும் உணர்ந்தால் நன்றாகவே இருக்கும் "



"சரி ஒரு வேலையை இப்படி அரைகுறையாக நிறுத்தி விட்டு ஓடுவது தான் உன் பெற்றோர்கள் உனக்கு சொல்லிக் கொடுத்த வழக்கமா?நீ ஆரம்பித்த அந்த ரகுராம் ஆட்டோ மொபைல்ஸ் கம்பனிக்குத் தகுந்தபடி பொருளைக் கொடுத்து கணக்கு முடித்தால் தானே முழுமை பெறும்.வேண்டும் என்றால் இனி வரும் ஆர்டர்ஸை நானே கவனித்துக் கொள்கிறேன். இந்த ஒரு ஆர்டரை மட்டும் முடித்தால் போதும் "



'இந்த ஆர்டர் முடியவே இன்னும் மூன்று மாதம் ஆகும்.அதுவரை அவனுடன் - அவன் அலுவலகத்தில் அவன் அறையில் இருக்க வேண்டுமே! கடவுளே இது என்ன சோதனை '



நீ தயங்குவதைப் பார்த்தால் உன் மனம் என்னைப் பார்த்து சலனப்படுமோ என்று அஞ்சுகிறாயா?" என்றவளின் குரலில் எகத்தாளம் இருந்தது.



"ச்சே - -.."அருவறுப்பாக உச்சரித்தாள்.



" அப்படியானால் என்ன தயக்கம்? வேண்டுமானால் மூன்று நாள் விடுப்பு எடுத்துக் கொள் வெச்சிடவா?"



வரவழைத்துக்கொண்ட தைரியத்துடன் ஒரு நிமிஷம் " என்றாள்.



" என்ன ?"



"என் அம்மாவைப் பற்றி " என்று பேச ஆரம்பித்தவளை இடைமறித்தான்



" இப்போது போனில் அது பற்றி பேச வேண்டாம்.வெச்சுடறேன் "தொடர்பை துண்டித்தான்.



‘என்ன திமிர் - - - ?இவனைக் கண்டு நான் மயங்கி விடுவேன் என்று வெளிப்படையாக கூறுகிறான். ச்சே.. இவனையா என் மனம் காதலித்தது. உருகியது, மருகியது. என் கால் தூசிக்குக் கூட அவன் சமம் ஆக மாட்டான். பணம் இருந்தால் போதுமா .செய்யும் தவறெல்லாம் மறைந்து விடுமா? இல்லை மறக்கத்தான் முடியுமா? எத்தனை முறை அழுதும், இன்னும் மனதில் இருப்பவன் கரைந்த பாடில்லை .குழம்பிப் போனாள் மாதவி.



பூஜை அறைக்குச் சென்றாள். கடவுளை ஒருமுறை மனமார வேண்டினாள்.



கடவுளே என் மனம் என் கட்டுப்பாட்டில் இல்லை. எனக்கே தெரியாமல் எனக்குள் என்னென்னவோ நிகழ்கிறது. அதனால் இரண்டு சீட்டு எழுதி இருக்கிறேன்." வேலைக்குப் போவது"" ராஜினாமா செய்வது" இவற்றை குலுக்கிப் போட்டு கண்களை மூடி ஒன்றை எடுக்கிறேன். நீ தான் நல்ல முடிவு சொல்ல வேண்டும். அது எதுவானாலும் நான் கட்டுப்படுகிறேன். நான் இந்த வேலையை தொடர்வதற்கு சில முக்கிய காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம் மணியின் படிப்பு. இரண்டாவது -குடும்பச் செலவுகள், மூன்றாவது - செய்வன திருந்தச் செய் என்று சொல்லி சொல்லி வளர்த்த தந்தையின் வளர்ப்பு தவறாவதா ?நான்காவது -பணத்திமிரைக் காண்பித்து ஒரு பெண்ணின் இதயத்தைப் பெற முடியாது என்று சத்யனுக்கு ஆணி அடித்தாற்போல புரியவைக்க வேண்டும். ஐந்தாவது -அம்மாவைப் பற்றி அவதூறாக பேசியவனை அதற்காக மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும்.



ஆனால் ராஜினாமா செய்வதற்கு இவை எல்லா காரணங்களையும் விட மிக முக்கியமான மானப்பிரச்சனை .தன்மானத்தை இழந்து அவன் குத்தல் பேச்சுகளை எல்லாம் சகித்துக் கொண்டு இருக்க முடியாமல் தான் இந்த முடிவு .ஏதேனும் அவன் தவறாக நடக்க முயற்சித்தால் ?அப்படி என்னை மீறி எதுவும் நடந்து விடாது தான். இருப்பினும் அந்த சிக்கல் தேவையா? இப்படி இரு முடிவுகளில் உள்ள நன்மை, தீமையை அலசி அலசி என்னால் முடிவெடுக்கவே முடியவில்லை - நீ தான் எனக்கு நல்லதோர் வழியைக் காட்டவேண்டும்.



தன் கையில் இருந்த இரண்டு சீட்டுகளையும் குலுக்கிப் போட்டாள்.இரு கண்களையும் மூடி கடவுளை மனதில் நிலை நிறுத்தி இரண்டில் ஒன்றை எடுத்தாள். கைகள் நடுங்க அதைப் பிரித்துப் பார்த்தாள். வேலையை தொடர்வது என்ற அவளது கையெழுத்தையே அவளால் நம்ப முடியவில்லை .ஓரத்தில் ஒரு மகிழ்ச்சி படர்வதை அவளால் தடுக்க முடியவில்லை .



மூன்று நாள் ஓய்வுக்குப் பிறகு உடலும் மனதும் சற்று தெளிவடைந்தது போல் இருந்தது மாதவிக்கு அவள் தொடங்கிய வேலையை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ முடித்து கொடுக்க வேண்டும்.அதற்கிடையில் வேறு வேலைக்கு முயற்சிக்க வேண்டும். எப்படியும் இவள் தகுதிக்கும் முன் அனுபவத்திற்கும் கூடிய விரைவில் வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதற்கு நடுவில் அவன் என்ன பேசினாலும், அதனை சட்டைசெய்யாமல் இருந்து விடவேண்டும். பல்லைக் கடித்துக் கொண்டு இந்த மூன்று மாதத்தை ஓட்டி விடவேண்டும்.முக்கியமாக மனதை அலைபாய விடக் கூடாது. இப்படி தனக்குள்ளேயே நினைத்து நினைத்து தன் மனதை நிலைப்படுத்திக் கொண்டாள் மாதவி.அதற்காக தினமும் செய்யும் தியான நேரத்தை அதிகரித்தாள்



இவளின் உணர்வுகளை புரிந்துகொண்டதாலோ என்னவோ அதிகமா எதுவும் பேசவில்லை சத்யன். தான் உண்டு தன் வேலை உண்டு என்று கடமையே கண்ணாய் இருந்தாள் மாதவி அவன் கண்களைத் தவிர்த்தாள் .அப்படியே பார்க்க நேர்ந்தாலும் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் கவனமாக பார்த்துக் கொண்டாள்.



மூன்றாம் நாள் அவள் வேலைய முடித்து விட்டு கோப்புகளை அவன் பார்வைக்கு வைத்தாள்.



" எல்லாம் முடிச்சிட்டேன் சார். நான் கிளம்பறேன்" அதில் ஒரு கோப்பை எடுத்து பிரித்தவன்.



"மாதவி" என்றான்.



இரண்டடி எடுத்து வைத்தவள் திரும்பி "என்ன சார் ?"என்றவளின் பார்வை அந்தக் கோப்பில் இருந்தது .கடவுளே ஏதேனும் தவறாக அடித்து விட்டோமோ !போச்சு, பேசியே கொல்வானே உள்ளுர வெலவெலத்தது.



" நான் நேற்று சிலப்பதிகாரம் படித்தேன்" என்றான் சற்றும் தேவையில்லாத ஒரு தலைப்பை எடுத்து



கண்களை இடுக்கினாள் மாதவி இவனுக்கு பித்துகித்து பிடித்து விட்டதா? மனம் நினைத்தாலும் உதடு " ஓ......." என்றது. அவன் கூறியதற்கு அவளால் இப்படித்தான் பதிலளிக்க முடிந்தது.



" ரொம்பவும் அருமை, இளங்கோவடிகள் பிச்சு உதறிட்டார் "



"ம்.." -



“எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். மாதவி என்று உனக்கு ஏன் பெயர் வைத்தார்கள் என்று ?'ஒரு வேளைஅது உன் மூதாதையர்கள் பெயரோ?" அவனே சிந்திப்பது போல் மேல பார்த்தான்



போச்சுடா ஆரம்பித்து விட்டான். இதற்கு தான் இவ்வளவு முன்னுரையா நான் தேவதாசியின் பரம்பரையில் வந்தவள் என்று குத்திக்காட்டுகிறானாம். இது போல் பல அடிகளை எதிர்பார்த்து தான் இவள் வேலையில் சேர்ந்தாள். எனவே மனதின் வலியை ஓரம் தள்ளி விட்டு,

\

" பெயரில் என்ன சார் இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மனம் தான் முக்கிய காரணம், என்னுடையது குலப்பெயராக இருந்தால் என்ன இல்லாவிடில் அதைப்பற்றி உங்களுக்கு என்ன கவலை? எனக்கு பார்க்க ஆயிரம் வேலை இருக்கிறது. அதை விடுத்து இந்தப் பெயர் ஆராய்ச்சிக்கு நான் தயார் இல்லை. நான் கிளம்புகிறேன் "வேகமாக நடந்து வெளியேறினாள். சத்யனின் வெறித்த பார்வை அவளை பின் தொடர்ந்தது.



ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாக கடந்தது மாதவிக்கு அவன் பார்வை அம்புகள் ,சொல் அம்புகள், இவற்றிலிருந்து காயப்படாமல் தப்பிப்பதே பெரும்பாடாகி விட்டது என்ன தான் அவன் முன் கவலையே இல்லாதவள் போல் காட்டிக் கொண்டாலும் இரவு அவள் தலையணை நனையாமல் அவள் தூங்கவில்லை​
 
மல்லிச்சரம் - 8

"ஓ.கே சார் இன்னும் பத்து நிமிஷத்துல ஸ்டாக் டீடெய்ல்ஸ் உங்க பி.ஏ.மாதவி கிட்ட ஒப்படைச்சிடுறேன் சார்"

"ஓ.கே.சார்"

"வச்சிடறேன் சார்" என்று பேசிக் கொண்டிருந்த சோனா, மாதவி அவளை நோக்கி வரவும், பட்டனை அணைக்காமல் "வா மாதவி" என்று அவள் புறம் திரும்பினாள்.



சத்யன் அணைத்திருப்பான் என்ற நம்பிக்கையில் அவள் கைபேசியை டேபிள் மீது வைத்தாள்.



மாதவி என்ற பெயரை கேட்டதும் சத்யன் போனை கீழே வைக்கவில்லை .



" என்ன மாதவி ரொம்ப டல்லா இருக்க"



" இல்லையே “



" பொய் .. உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதா சொல் "



உதட்டைக் கடித்து ஆத்திரத்தை விழுங்கினாள் மாதவி



" இந்த ஆண்களைக் கண்டாலே வெறுப்பாக வருகிறது. கண்கள் கலங்கி இருந்தாலும் குரலில் ஆத்திரம் தெரிந்தது.



"ஏய், என்னாச்சு டி "



கோபத்தை தண்ணீர் குடித்து சமன்படுத்த முயன்றாள் கண்கள் கன்றிச் சிவந்தன.



" அந்த தனபால் மறுபடியும் வாலாட்டினானா? அவள் முகத்தை படித்தது போல் கேட்டாள் சோனா.



"ம்" என்று தலையசைத்தாள்.



"பளார் என்று விட வேண்டியதை விட்டுவிட்டு இப்படி கண்ணீர் விடுகிறாயே அசிங்கமா இல்லை ?"



என்ன செய்வது சோனா பெண் பிறப்பே பாவம் தான் போலும், வேலைக்கு வருவதே நம் குடும்பநிலைக்காக நம் உடல் உழைப்பையும் நம் அறிவையும் விற்று பணமாக்குகிறோம். இதில் உடம்பையும் விற்கச் சொல்லும் உலகமிது வேலைக்கு வந்தாலே எல்லாவற்றிற்கும் தயார் என்று விளம்பரப்படுத்துவதாக இவர்களுக்கு எண்ணம் .கற்பை ஏன் பெண்களுக்கு மட்டும் படைத்தான் ஆண்டவன் அவனும் ஒரு ஆண் என்பதாலா. இந்த உலகில் யாருக்கும் மனம் என்று ஒன்று இருப்பதே தெரியாதா?அவர்கள் நடவடிக்கையால் வெறுப்பாக உள்ளது. இப்படிப்பட்ட உலகில் வாழவே பிடிக்கவில்லை " பொரிந்து தள்ளினாள் மாதவி.



" உனக்கு என்னவாயிற்று மாதவி, தனபால் ஏதேனும் தவறாகப் பேசினால் உடனே பதிலடி கொடுக்காமல் நீ வருவதில்லையே.இப்போது உன் தைரியம் எங்கே சென்றது. இல்லை நீ கொஞ்ச நாளாக சரி இல்லை .உனக்கு வேறு ஏதோ பிரச்சனை என்று தோன்றுகிறது சரிதானா?"



இப்படி நேரடியான கேள்வியில் சற்று கலங்கித்தான் போனாள் மாதவி.



சோனா சொல்வது சரிதான்.தனபால் வாலாட்டுவது இது ஒன்றும் புதிதல்ல. ஒவ்வொரு முறையும் அவன் மூக்கை ஒட்ட நறுக்காமல் விடமாட்டாள் மாதவி. ஆனால் இப்போது அவள் அழுகைக்கும், ஆத்திரத்திற்கும் சத்யனே முழு காரணம். ஆனால் அதை சோனாவிடம் எப்படிச் சொல்வது?தவறு இவளிடமும் இருக்கிறது தானே. இதில் அவனை குறை கூற ஒன்றும் இல்லையே . கல்லூரி காலத்தில் வந்து தொலையாத காதல் இப்போது ஏன் வந்தது. அதுவும் போயும் போயும் இவன் மீது ஏன் தோன்றியது. ச்சே . . . . எல்லாம் விதி 'மனம் பலவாறு யோசித்தது. உதடுகள் சோனாவின் கேள்விக்குப் பதில் கூறின.



அதெல்லாம் இல்லை .சோனா, எத்தனை நாள் தான். இந்த இம்சையை தாங்குவது எதற்கும் ஒரு எல்லை உண்டல்லவா,என்னால் இதற்கு மேல் முடியவில்லை கண்கள் மீண்டும் கலங்கின.



"ம் .....சரி ..சரி ....நான் வேண்டுமானால் எம்டியிடம் கூறி ..." வாயெடுத்தவளை இடைமறித்தாள் மாதவி வேறு வினையே வேண்டாம், ஆண்கள் எல்லோரும் ஒரே விதம் தான். இதில் எம். டி... மட்டும் என்ன ராமாவதாரமா?



"நீயா நம் எம்.டியைப் பற்றி இப்படி பேசுவது ?" ஆச்சர்யத்தில் விழி விரித்தாள் சோனா.



"ம் . . . . . ச்சே.... விடு சோனா வேறு பேசலாம்" பேசிசை திசை திருப்பினாள்.



அவள் உணவு இடைவேளை முடிந்து தன் இடத்திற்கு திரும்பியதும் அவளை அழைத்தான் சத்யன். அவளிடம் ஒரு பேப்பரை நீட்டி " இதில் இருப்பதை ஒரு லெட்டர் வடிவில் தயார் செய்து நம் லெட்டர் பேடில் பிரிண்ட் செய்து கொண்டு வா. இன்று மாலையே நான் கையெழுத்திட வேண்டும்" என்று அவசரப்படுத்தினான்.

அதில் இருப்பதை டைப் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து முடித்து சரி பார்ப்பதற்காக பார்த்த போதுதான் அது தனபாலுக்கான மாற்றல் கடிதம் என்ற உண்மை உரைத்தது. மனதில் லேசாக சந்தோஷம் படர்ந்தது. ‘சனியன் விட்டது' என்று உள்ளுர எண்ணினாள். ஆனால் இது என்ன திடீர் இடமாற்றம் ஒரு வேளை அந்த தனபால் என்னை வழிமறித்து வம்பிழுத்ததை பார்த்திருப்பானோ? இருக்கலாம். ஆனால் இவன் எதற்காக என்னிடம் கரிசனம் காட்ட வேண்டும். இது ஏதோ வேறு பிரச்சனை. அந்த ஜொள்ளு பார்ட்டி ஏதேனும் வேலையில் பெரிய தவறு செய்திருக்கும் அதனால் இந்த இடமாற்றமாக இருக்கலாம். சரி இப்போது காரணம் எதுவானால் என்ன நம் வேலையை நாம் பார்ப்போம். நாய் இடம் போனால் என்ன வலம் போனால் என்ன. நம்மை கடிக்காமல் போனால் சரிதான். வேலையில் ஆழ்ந்தாள்.



வேலை முடிந்ததும் வீட்டிற்கு கிளம்பும் நோக்கத்தோடு அத்தனையையும். எடுத்து வைத்தாள் மாதவி



“மாதவி ஒரு நிமிஷம்" என்ற சத்யனின் குரலுக்கு மெல்ல நடந்து அவன் அருகே சென்றாள்.



அவளை ஒரு முறை ஏற இறங்க பார்த்தவன் " உன் வேலையை அலுவலகத்திலும் காட்ட ஆரம்பித்துவிட்டாயா.?" கண்களை சுருக்கிக் கொண்டு கேட்ட விதம் அவளுக்கு கூசியது.இருப்பினும் முகத்தில் எதையும் காட்டாமல்,



"புரியவில்லை " என்றாள்.இரு புருவம் உயர்த்தி.



" நீ தனபாலுடன் அளவளாவியதையும், அவன் உன்னை பார்வையால் அளவெடுத்ததையும் பார்த்து தான் கேட்கிறேன்" என்றான் எதையோ நிரூபித்து விட்ட தோனியில் இப்போது அவளின் முகத்தில் அருவருப்பு அப்பட்டமாகத் தெரிந்தது.



" கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்டதும் பொய் ,தீர விசாரிப்பதே மெய். என்று உங்கள் பெற்றோர் சொல்லிக் கொடுக்க மறந்து விட்டார்கள் போலும் பாவம் நீங்கள் " என்றாள் உச்சு கொட்டிக்கொண்டே



"தவறை மறைப்பதற்கும் ஒரு திறமை வேண்டும். அதுவும் அடுத்தவர் வாய் அடைத்து விட்டு இதை உன் பெற்றோர் உனக்கு நன்றாகவே சொல்லிக் கொடுத்திருகிறார்கள் போல" என்றான் ஏளன நகையோடு .



உங்கள் வாயை அடைத்து நான் என்ன செய்யப்போகிறேன் சார். நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் பேசிக்கொள்ளுங்கள்.உங்களிடம் நான் இப்படித்தான் என்று நிரூபிக்கும் எண்ணம் எனக்கு துளியும் இல்லை. அதற்கு அவசியமும்இல்லை. இந்த உலகில் இருக்கும் அனைவருக்கும் நல்லவளாக இருக்க முடியாது. அப்படி இருக்க வேண்டும் என்ற எண்ணமும் எனக்கு இல்லை . நான் என்ன சீரியல் ஹீரோயினா? எல்லா நல்ல குணங்களுக்கும் நானே ராணி என்பதை பறைசாற்றிக் கொள்ள நான் நானாக இருக்க ஆசைப்படுகிறேன். யார் என்ன நினைத்தாலும் சரி எனக்கு நேரமாகி விட்டது. நான் வருகிறேன் "பதிலுக்கு காத்திராமல் தன் உடமைகளுடன் வெளியேறினாள்.



பேருந்தில் அமர்ந்த மாதவியின் மனம் மிகவும் குழம்பி இருந்தது. இந்த சத்யனின் நடவடிக்கைகளை புரிந்து கொள்ளவே முடியவில்லை .யாரையும் பார்த்த சில நிமிடங்களிலேயே ஓரளவு யூகித்து விடுவாள்.



இரண்டு நாள் பழகினால், ஓரளவு நன்றாகவே புரிந்துகொள்வாள். ஆனால் இந்த சத்யன் விதிவிலக்காகவே இருக்கிறான்.அவனாகவே ஏதேதோ பேசினான். குழம்பினான். பிறகு அவனாகவே கோபப்பட்டான் ,தவறாக பேசினான்.அம்மாவை அவன் அவ்வளவு கேவலப்படுத்தியும் எனக்கு என் அவனிடம் கேள்வி கேட்க தோன்றவில்லை .ஒரு வேளை அவளுக்கே அப்பா,அம்மாவை பற்றி நிறைய தெரியாததாலா .அம்மா அப்பா உடையது காதல் திருமணம் என்ற அவளது பத்தாம் வயதிலேயே தெரியும். அப்பா அம்மாவை கிண்டல் செய்வார். அவர் மனதை அவர் கூறியதும், அம்மா ஒத்துக் கொள்ளவே இல்லையாம். ஒருவருடம் அலைக்கழித்த பின் தான் ஒத்துக் கொண்டார்கள்.

"காக்கிச்சட்டை காரனான என்னையே உன் அம்மா தன் இதயச்சிறையில் வைத்து விட்டாள் மாதவி. அந்த ஒரு வருடம் மூச்சு முட்டி விட்டது எனக்கு " என்று செல்லமாக மனைவியை சீண்டுவார். விவரம் தெரியாத வயதில் ஏதோ சொல்கிறார்கள் என்று கேட்டுக் கொள்வாள் மாதவி –



அது இருவருக்குமான அன்பு பரிமாற்றம் என்று மட்டும் தெரியும். அப்பாவின் மறைவுக்குப் பிறகு ஓரளவு விவரம் .தெரிந்ததும் ஒரு நாள் அம்மாவிடம் நன்றாக அரட்டை அடித்துக் கொண்டிருந்த போது சட்டென" அப்பாவை முதன்முதலில் எங்கே பார்த்தீர்கள் அம்மா " என்று சிரிப்பினுடே கேட்டாள் மாதவி



அவ்வளவு நேரம் சிரித்த தாயின் முகம் சட்டென கறுத்தது. பாவம் அம்மா, அப்பாவின் நினைவு வந்தது போலும் ஏன் இப்படி கேட்டு விட்டேன் என்று தன்னைத்தானே கடிந்து கொண்டாள். அத்தோடு அப்பா அம்மா காதலை பற்றி பேசுவதை அறவே நிறுத்திவிட்டாள். இப்போது ஏனோ மறுபடியும் ஆரம்பிக்க வேண்டும்' இது தாயின் மீது கொண்ட அவநம்பிக்கையால் எடுத்த முடிவில்லை , எதுவும் எனக்குத் தெளிவாக தெரிந்தால் தானே. சத்யனோடு வாதாடுவதற்கு இல்லாவிட்டால் அவன் கூறுவதை ஒத்துக் கொண்டதாக தானே பொருள். கூடாது அம்மாவுடன் நிறுத்தத்தில் இறங்கினாள்.கால்களை தூர வீசி வேகமாக நடந்து வீட்டை அடைந்தாள்.



" அம்மா, அம்மா" கூவியவாறே உள்ளே நுழைந்தாள்.



"ஏண்டி வரும் பொழுதே ஏலம் விடர" உள்ளிருந்து கழுவிய முகத்தை துடைத்தவாறே வந்தாள் கமலம்.



" உங்கள் கையால் சூடா இஞ்சி டீ தாங்க அம்மா ரொம்ப டயர்டா இருக்கு" சோபாவில் சரிந்தாள். டிவிக்கு உயிர் கொடுத்ததும்அது தம்பி மணி கடைசியாக பார்த்த சன் மீயூசிக்கில் நின்றது. சத்தமும் சற்று அதிகமாகவே இருந்தது. இந்த வாலு படிக்கறதைவிட்டுட்டு .கூத்தடிக்கு தாக்கும் எவ்வளவு சொன்னாலும் அடங்க மாட்டேங்குது.கேபிள் டிவியை கட் பண்ணிட்டா கூட தேவலை என்று யோசித்தவாறே ஒலியை ரீமோட் கண்ட்ரோல் மூலம் குறைத்தாள் .அதில் வந்த பாடல் கருத்தைகவர லேசான சத்தத்தோடு கண்களை மூடி கேட்டாள் .இசை பல மனக்கவலைகளை போக்கும் சக்தியை கொண்டது என்று நிறைய பேர்சொல்ல கேட்டிருக்கிறாள் , பார்ப்போம்.அந்த இசைக்கு அவள் கவலை மறக்கிறதா என்று சிந்திக்க காதுகளில் பாடல் வரிகள்



வேணாம் வேணான்னு நான் இருந்தேன்.

நீதானே என்ன இழுத்து விட்ட,

போடி போடின்னு நான் துரத்த

வம்புல நீதானே மாட்டி விட்ட



இதை ஒரு பெண் பாடி இருந்தால் என் நிலைக்கு ஏற்ற பாட்டு தான் இந்தச் சிச்சுவேஷன் சாங் என்பார்களே அது போல கன்னங்களின் சில்லிப்பை உணர்ந்த போது தான் அழுகிறோம் என்றே மாதவிக்கு உரைத்தது.



ச்சே ....சே இது என்ன அசிங்கமாக அழுகை . கண்ணீர் எப்போதும் நம் பிரச்சனைகளுக்கான தீர்வு அல்ல என்று அடிக்கடி அப்பா கூறுவார். புலிக்குப் பிறந்தது பூனை ஆகுமா என்று அடிக்கடி அப்பா கூறுவார். புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்று வேறு உரம் ஏற்றி இருக்கிறார். வர வர நம் கண்களும் மனதும் நம் பேச்சை கேட்பதே இல்லை .தன் விருப்பம் போல் நடக்கிறது. அதற்கு அனுமதிக்கவே கூடாது. அம்மா இந்த அழுகையை பார்த்தால் ? சட்டென கண்களை துடைத்தாள்.



ச்சே ... இசையை கேட்டால் மனபாரம் குறையும் என்று எந்த மடையன் சொன்னது. இல்லாத தலைவலி தான் உண்டாகி இருக்கிறது. அவசரமாக டி.வி.யை அணைத்தாள்.



சூடான டீயை பருகிய போது லேசாக மனம் தெளிவடைந்தது .



"அம்மா இன்னிக்கு சிவன் கோவிலுக்குப் போகலாமா? ஏனோ கோவிலுக்கு போக வேண்டும் போல இருக்கிறது" பூ கட்டிகொண்டிருந்த கமலத்தின் மடியில் தலைவைத்துப் படுத்தாள் மாதவி.



"ம் போகலாமே மாதவி, நான் கூட போய் ரொம்ப நாள் ஆகிவிட்டது. இந்தப் பூ வை கட்டி முடித்ததும் கிளம்பி விடலாம் என்ன"என்று ஆசையாக மகளின் கன்னதைத் தடவிக் கொடுத்தாள்



"சரி அம்மா அதுவரை நானும் உங்கள் மடியிலேயே படுத்துக்ககிறேன் " வசதியாக படுத்துக் கொண்டு இமைகளை மூடினாள் மாதவி.



ஆஹா, அத்தை மடி மெத்தை என்று எப்படி பாடலாம் அம்மாவின் மடியல்லவா மெத்தை போல் ஏன் அதை விடவும் சுகமாக இருக்கிறது. எத்தனை ஆயிரம் செலவு செய்தாலும் எத்தனை ஸ்பிரிங் உள்ள மெத்தை தயாரித்தாலும் இதற்கு ஈடாகுமா. ஆஹா இது சொர்க்கமல்லவா. இதைப்போய் சத்யனின் தேவையற்ற நினைவுகளால் கெடுத்துக் கொள்கிறோமே என்ற குற்றவுணர்வு அவளை காயப்படுத்தியது.​
 
மல்லிச்சரம் - 9

விடுமுறை நாளும் இல்லாமல் விசேஷ நாளும் இல்லாததால் கோவிலில் அதிக கூட்டம் இல்லை . கூட்டமாக இருக்கும் நாளில் கோவிலுக்குப் போக மாதவிக்கு பிடிக்காது. கூட்ட நெரிசலில் நிம்மதிக்குப் பதிலாக எரிச்சலே மிஞ்சும் என்பது அவள் கருத்து.



வாசலில் செருப்போடு சேர்த்து தன் மனப் புலம்பலையும் கழற்றி விட்டு ஈஸ்வரனின் மீது கவனத்தைப் பதித்து உள்ளே சென்றாள்.அர்ச்சனை கூடை வாங்கி விட்டு அதற்கான டோக்கனையும் பெற்றுக்கொண்டு கற்பகிரத்தை நோக்கி நடந்தார்கள்.



எல்லாம் வல்ல அந்த ஈசனின் லிங்க வடிவத்தைகாண இரு கண்கள் போதவில்லை கைகளை கூப்பி கண்களை மூடி மனதை ஒரு நிலைபடுத்தி எங்கோ மெல்லியதாக கேட்ட' ஓம்" மந்திரத்தை கவனத்தில் நிறுத்த முயன்றாள் . அங்கு நிறைந்திருந்த திருநீற்றின் வாசனையும் கதம்பமாக வீசிய புஷ்ப வாசனையும், எரியும் தீபத்தில் இருந்து எண்ணெய் வாசனையும் கற்பூரத்தின் கார வாசனையும், குங்குமத்தின் வாசனையும் ஒன்று சேர்ந்து மனதை என்னவோ செய்தது. இடையில் மணியின் ஓசை வேறு இதெல்லாம் சேர்ந்து மாதவியின் மனதை லேசாக்கியது. நல்ல தரிசனம் கிடைத்த நிம்மதியில் இருவரும் வெளியே வந்து அமர்ந்தனர்.

கூடையில் இருந்த வாழைப்பழத்தை எடுத்து கமலத்திடம் தந்தாள். எப்படிஆரம்பிப்பது என்று புரியாமல் யோசித்தாள்.கமலமும் அமைதியாக கண்களைமூடி தூணில் சாய்ந்திருக்க யோசிப்பதற்கு அவகாசம் நிறையவே கிடைத்தது."அம்மா" மென்மையாக அழைத்தாள்.



" சொல் மாதவி" இமைகளைத் திறக்காமலே கேட்டாள் கமலம்.



" அந்தக் குழந்தையைப் பாருங்களேன் எப்படி விளையாடுகிறது என்று "தூரத்தில் விளையாடிய குழந்தையைக் காட்டினாள்.



கண்களைத் திறந்த கமலம் மாதவியின் கண்கள் சென்ற திசையை நோக்கினாள். பட்டுப் பாவாடை கட்டிய சின்னஞ்சிறு குழந்தை தத்தக்காபித்தக்கா நடையில் ஓடிப் பிடித்து விளையாடியது. அது பிடிக்க முயற்சித்தது கிட்டத்தட்ட அவள் தந்தையின் வயதுள்ளவரை , ஏன் அவர் தந்தையே தான் "அப்பா அப்பா " என்ற அவளது கீச்சுக்குரல் கேட்டது வேண்டுமென்றே மெதுவாக ஓடி தன் குழந்தையின் கையில் தொடப்பட்டு தோற்க மிகவும் பிடித்தது. அந்தத் தந்தையை பார்க்கையில் மனம் மகிழ்ந்தது இதழ்கிடையில் புன்னைகை அரும்பியது கமலத்திற்கு

" நம் அப்பாவும் இப்படித்தான் எங்களுடன் இந்தக் கோவிலில் விளையாடி இருக்கிறார் இல்லையா அம்மா ரொம்பவும் ஜாலியாக இருக்கும் "ஓரக்கண்ணால் தாயின் முக பாவத்தைப் பார்த்தாள் லேசாக புன்னகை கலந்த சோகம் தெரிந்தது தொடர்ந்தாள்.

" நான் பார்த்த தம்பதிகளிலேயே நீங்களும் அப்பாவும் தான் மேட் ஃபார் ஈச்அதர். அப்படி ஒரு ஒற்றுமை உங்களுக்குள்" இப்போது பெருமை கலந்த சோகம் தென்பட்டது தாயிடம் அப்பாடா அப்பாவின் பேச்சு அம்மாவை பலகீனப்படுத்தவில்லை தொடர்ந்தாள்.

"வெகுநாட்களாகவே எனக்கு ஒரு சந்தேகம் அம்மா உங்களின் லவ்ஸ் ஸ்டோரி பற்றி நீங்கள் சொன்னதே இல்லையே'! சொல்லுங்களேன்" ஆர்வமாக இரு கைகளையும் கன்னத்தில் வைத்து கதை கேட்கும் ஆர்வத்தோடு தயாரானாள். லேசாக கமலத்தின் முகம் சிவந்தது

அம்மாவுக்கு வெட்கம் போலும். ஆரம்பிக்க சிரமப்படுகிறாள் .நாமே எடுத்துக் கொடுப்போம் என்று எண்ணி "முதன் முதலாக நீங்கள் இருவரும் எங்கு சந்தித்தீர்கள் ?" என்று ஆசையாய் வினவினாள்



உடனே தாயின் முகம் வெளிறியது .பயமா அதிர்ச்சியா என்று புரியவில்லை மாதவிக்கு . அடுத்து என்ன பேசுவது என்று தெரியவில்லை. நெற்றியில் வியர்த்து விட்டது அம்மாவிற்கு. அவள் முகத்தையே விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தாள் மாதவி சட்டென சுய நினைவிற்கு வந்த கமலம் தன் முக பாவத்தை மாற்றிக் கொண்டு.



" மாதவி சில விஷயங்களை மறப்பது நல்லது என்று உன் அப்பா அடிக்கடிசொல்லுவார். அப்படி நான் மறக்க துடிக்கும் விஷயங்களில் இதுவும் ஒன்று.தயவு செய்து இது போன்ற கேள்விகள் கேட்டு என் மனதை காயப்படுத்தாதே வா கிளம்பலாம்" கூடையுடன் எழுந்தாள் வேறு வழியின்றி கமலத்தைப் பின் தொடர்ந்தாள் மாதவி



பெயருக்கு ஒரு தோசையைப் பிட்டு வாயினுள் போட்டுக்கொண்டு எழுந்துவிட்டாள் மாதவி.படுக்கையில் விழுந்தவளுக்கு இரவு முழுவதும் யோசிக்க நிறைய விஷயம் இருந்தது



அம்மாவை கலங்க வைப்பது அப்பாவின் நினைவுகள் அல்ல என்பது அவளது கோயில் உறையாடலில் இருந்து தெரிகிறது. முன்பும் சரி இப்போதும் சரி அவர்களது முதல் சந்திப்பு தான் அம்மாவை பாதித்திருக்கிறது போலும் அப்படி அந்த முதல் சந்திப்பில் என்ன தான் நிகழ்ந்திருக்கும்?



ஒரு வேளை நாவல்களில் படிப்பது போல் ஏதேனும் பெரிய விபத்தில் சிக்கிக்கொள்ளும் போது சந்தித்தால் அவர்களுக்கு அந்த விபத்தின் தாக்கம் தான் தோன்றுகிறதா? அல்லது ரொம்பவும் முக்கியமான வரை மருத்துவமனையில் சேர்க்கும் போது உதவி புரிந்து மனதில் இடம்பெறும் எத்தனை காதல்களை பார்த்திருப்போம். அப்படி இருந்த அந்த நபர் இறந்தால் அவர்களின் முதல் சந்திப்பு கசப்பையே வெளிப்படுத்துகிறதா? இப்படி பல யூகங்கள் தோன்றி மறைந்தன தலையை பிய்த்துக் கொள்ளலாம் போல இருந்தது மாதவிக்கு .



"ச்சே"இந்த சத்யனின் தேவையற்ற பேச்சுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தன் நிம்மதியை குலைத்துக் கொள்கிறோமோ?என்ற வெறுப்பு மேலோங்கியது இருப்பினும் அவளது அறிவு.



சத்யன் என்ன என் ஜென்ம விரோதியா ?இல்லையே எதற்காக இந்தச் சுடுசொற்களை உபயோகிக்க வேண்டும். ஒரு வேளை ஞாயிற்றுகிழமை டீவியில் பார்த்த படத்தில் வருவது போல என் அப்பாவின் ஒன்று விட்ட அக்கா மகனோ சத்யன் நான் அவனது மாமன் மகள் என்பதாலும் என் அம்மா அப்பாவை காதல் திருமணம் செய்து கொண்டதாலும் அம்மாவிற்கு இந்த அவச்சொல் வந்திருக்குமா? பொதுவாக பையன் வீட்டில் இருப்போர் அவன் காதலித்தபெண்ணை திட்டுகிற வார்த்தை தானே அது சத்யனின் மனதில் பதிந்திருக்குமோ ? இப்படி எண்ணுகையில் அவளுக்கு சிரிப்பே வந்துவிட்டது. ச்சே... அதிக நாவல் படித்து என் மூளைக்கு பித்து பிடித்துவிட்டது போலும் இது எல்லாம் கதைகளில் தான் நடக்கும் அப்புறம் வேறு என்னவாக இருக்கும். இந்த யோசனையில் கூட சத்யனை அத்தை மகனாக கற்பனை செய்து பார்த்த மனதைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டாள் மாதவி



ஒரு வேளை நாயகன் படத்தில் வருவது போல் அப்பா அந்த மாதிரி இடத்திற்கு சென்று |அம்மாவை காதலித்து மணந்தாரோ என்று யோசிக்கும் பொழுதே பிடிக்கவில்லை. மாதவிக்கு ச்சே இது என்ன கற்பனை அப்பா அப்படிப்பட்ட இடங்களுக்குப் போக மாட்டார் அம்மாவும் தான் அப்படிப்பட்ட இடத்தில் இருந்திருக்க மாட்டாள். இப்படி ஏதேதோ அவளுக்குள் நினைத்து அவளே அதைத் தவறு என்று குட்டிக் கொண்டு பாதி இரவு தாண்டித்தான் கண் அயர்ந்தாள். தூக்கத்திலும் தேவையற்ற கனவுகள் வந்து நிம்மதியான தூக்கத்தைக் கலைத்தது



காலையில் எழுந்தவளுக்கு கண்கள் ரொம்பவும் எரிந்தன போதாக்குறைக்கு சிவப்புத் தன்மை வேறு​
 
மல்லிச்சரம் - 10



குட் மார்னிங்க் சொல்லும் போதே சத்யன் அவள் கண்களை உற்று நோக்குவது தெரிந்தது. இருப்பினும் அதை சட்டை செய்யாமல் தன் வேலைகளில் ஆழ்ந்தாள்.



எந்த நேரத்தில் இந்தத் தேள் எப்படி கொட்டுமோ என்று மனம் குறுகுறுக்கத்தான் செய்தது.




ஒரு கோப்பில் ஏற்பட்ட சந்தேகத்தை தீர்க்க வந்தவளை ஒரு முறை பார்த்து விட்டு கோப்பினுள் முகம் புதைத்தபடி கேட்டான். நேற்று ராத்திரி ரொம்ப நேரம் வேலை பார்த்தீர்கள் என்று நினைக்கிறேன் "



போச்சு வேதாளம் மறுபடி முருங்கை மரம் ஏறுகிறது. சற்று நேர அமைதியின் பின்.



"அம்மாவின் வாரிசோ .. .. ?" என்று புருவம் உயர்த்தினான்.



"எல்லாக் குழந்தைகளும் அப்பா அம்மாவின் வாரிசுகள் தான் சார். இது கூடத் தெரியாதஉங்களுக்கெல்லாம் எவன் பட்டம் கொடுத்தான் அவனைச் சொல்ல வேண்டும்" ஏளனப்புன்னகை அவள் இதழில் குடிக்கொண்டிருந்தது.



" நான் கூறும் வாரிசு ..." என்று ஆரம்பித்தவனை இடைவெட்டினாள் " என் சொந்த விஷயங்களை அலுவலகத்தில் பேச எனக்கு விருப்பம் இல்லை. கோப்பின் sசந்தேகத்தைத் தீர்த்து என்னை அனுப்பினால் தேவலை " என்று சிடுசிடுத்தாள்



"எனக்கும் தான் ஆயிரம் சந்தேகம் மாதவி அதைத் தீர்க்க ஆளில்லையே சரிபோகிறது உன் சந்தேகத்திற்கு வருவோம்". அவள் சந்தேகத்தைத் தீர்த்து அவளை அனுப்பினான்.



ச்சே இவனிடம் பேசினாலே தலைவலி தான் மிச்சம் அதற்காக டீ குடித்து டீ குடித்து உடல் நலம் தான் கெடுகிறது. இவனால் உடலுக்கும் மனதுக்கும் கேடு தான் இன்னும் இரண்டு மாதங்கள் ஓட்ட வேண்டுமே கடவுளே !



வழக்கம் போல் எழுந்தாள். சோனாவுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள்.இவள் இருப்பது நான்காவது தளம் சோனா இருப்பது இரண்டாவது தளம். பெரும்பாலும் அவர்கள் மின் தூக்கியை பயன்படுத்துவது இல்லை.உடல் நலத்தை முன்னிட்டு படிகளில் தான் ஏறி இறங்குவார்கள்.




அப்படித்தான் இப்போது படிகளில் இறங்கிக் கொண்டிருந்தார்கள்.



"ஏய் அந்த தனபால் தொல்லை எப்படி டிரான்ஸ்பர் ஆச்சுங்கிற ஸ்டோரியை நான் கண்டுபிடித்து விட்டேன்."



" ஓ"



"என்ன ஓ.... ங்கிற நம்ம எம். டி. தான். அந்த தனபாலை லெப்ட் ரைட் விட்டு ஒரு பெரிய லெக்சரே கொடுத்து பெண்கள் மென்மையானவர்கள். அவர்கள் மனதை புண்படுத்தக் கூடாது. நீங்கள் எதிர்பார்க்கும் பெண்களும் நாட்டில் இருக்கிறார்கள். அவர்களை நாடுங்கள் நல்லவர்களை விட்டு விடுங்கள். இப்படி ஒரே டயலாக் மழை தான். எனக்கு என்னவோ அந்த தனபால் உன்கிட்ட ஜொள்ளுவிட்டதை பார்த்துட்டு தான் நம் எம்.டி'இப்படிசெய்திருக்காருன்னு தோணுது. அப்படித்தான் இருக்கும்னு அந்தப் பிரான்ச் சரிகா சொன்னாள்.



ஆச்சரியமாய் விழிகள் விரித்த மாதவி பின்புறம் படிகளில் நிழலாட திரும்பி பார்த்தாள். மெல்ல படிகளில் இறங்கிக் கொண்டிருந்தான் சத்யன். அவன் முகத்தில் இருந்த பெருமிதம் உதட்டோர சிரிப்பு அவன் அனைத்தையும் கேட்டிருப்பான் என்று தோன்ற உடனே குரலை உயர்த்தி,

"ம் ....ஏதோ ஒரு பழமொழி சொல்வார்களே ....ஆ..ங்...வேதம் ..இல்லை இல்லை சாத்தான் வேதம் ஓதுச்சாம். தேவையில்லாத பேச்சு நமக்கு எதற்கு சோனா சீக்கிரம் வா போகலாம்"



"ஏய் யாரை சாத்தான் என்கிறாய். நம்ம எம்.டி.யையா அப்படியே கண்ணாலேயே பேசினீங்க . அவரைப் பார்த்தாலே சொக்கி போய் உருகி நின்ன, எப்போலேருந்து சாத்தான் ஆனார் எம்.டி. வர வர உன் போக்கே சரியில்லை . எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்க "



" போதும் போதும் இப்போ இதை எல்லாம் கேட்கும் மனநிலையில் நான் இல்லை வா போகலாம்" தன் குட்டு வெளிப்பட்டு விட்ட பதட்டத்தில் வேகமாக படியிறங்க முயற்சித்து கால்கள் தடுமாறி படிகளில் உருண்டாள் மாதவி.



"மாதவி .... மாதவி ..." என்று பின்னே |வேகமாக படிகளில் தொடர்ந்த சோனாவை தாண்டி இரண்டு எட்டில் மாதவியை அடைந்தான் சத்யன். அதற்குள் கடைசி படிகளில் உருண்டு குப்புற விழுந்து கிடந்தாள் மாதவி.



தன்னிச்சையாக அவளை திருப்பியவன் மூடி இருந்த அவளது விழிகளைப் பார்த்து கலவரமானான். லேசாக கன்னத்தைத் தட்டினான்.



" மாதவி ... .மாதவி - - - ..இங்கே பார் ..." அவனின் குரலுக்கு அசைவில்லை .



“ஐயோ சார் என்னாச்சு சார் மாதவிக்கு " பயத்தில் படபடத்தாள் சோனா.



அவளுக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் மாதவியை ஒரு பூங்கொத்தை தூக்குவது போல தூக்கிக் கொண்டு படி இறங்கினான் சத்யன்.



கீழ் தளத்தில் உள்ள சோபாவில் படுக்க வைத்தவன் "தண்ணி கொண்டு வாங்க சோனா " என்று சோனாவை அவசரமாக ஏவினான். அவள் அகன்றதும் அவன் பார்வை மாதவியை வருடியது. மூடிய இமைகளுக்கு இத்தனை வசீகரமா . ஆனால் ஏதோ ஒரு சோகம் அவள் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. ஏதோ சோகம் என்ன? எல்லாம் தன்னால் வந்த சோகம் தான். பாவம் அவள் மனதை நோகடிக்கிறேன் . இருப்பினும் உடல் சரியாக வேண்டும் என்றால் சில கசப்பு மாத்திரை போடத்தான் வேண்டும். தேவைப்பட்டால் ஊசியும் கூட என்னை மன்னித்து விடு கண்ணம்மா என்று மனதினுள் நினைத்தவன் அவள் நெற்றியில் லேசாக இதழ்பதித்தான்.



சற்று நேரத்தில் சோனா பாட்டிலுடன் வந்து சேர்ந்தாள்.அவள் கொண்டு வந்த தண்ணீர் பாட்டிலை பிடுங்காத குறையாக வாங்கி உள்ளங்கை குழியில் சாய்த்து அந்தத் தண்ணீரை மாதவியின் முகத்தில் அடித்தான். லேசாக கருவிழிகள் மூடிய இமைகளுக்குள் அசைந்தன. ஆனால் அவளால் கண்களை திறக்க முடியவில்லை . இன்னும் சிறிது குளிர்ந்த நீரை அவள் முகத்தில் தெளித்தான். இப்போது லேசாக இமைகள் படபடத்தன. மறுபடியும் அவள் கன்னங்களை லேசாக தட்டினான் சத்யன். "மாதவி ....என்னைப் பார் .உனக்குஒன்றும் ஆகவில்லையே ?" மிகவும் கஷ்டப்பட்டு அவள் விழிகளை விரிக்க முயன்றாள். சில நொடி போராட்டத்திற்குப் பிறகு அவளால் விழிகளை திறக்க முடிந்தது. அவள் முதலில் பார்த்தது சத்யனைத்தான். அதுவும் அத்தனை அருகாமையில் இதயம் படபடத்தது சட்டென எழுந்து அமர்ந்தாள்.



" அப்பாடி கொஞ்ச நேரத்தில் பயப்படுத்தி விட்டாயே மாதவி " நிம்மதி பெருமூச்சு விட்டாள் சோனா.



இவள் எழுந்து அமரவும்.அவள் அருகில் இருந்த இடத்தில் சத்யன் அமர்ந்தான். அவன் அருகில் அமர்வது என்னவோ செய்ய சட்டென எழுந்தாள் மாதவி. ஆனால் கால்களில் சுத்தமாக வலுவில்லை . அவளால் நிற்கக்கூட முடியவில்லை . தடுமாறியவனின் கைகளைப் பற்றி அவனருகில் அமர வைத்தான்." என்ன மாதவி கால் தடுமாறுகிறது. காலில் எங்கேனும் வலிக்கிறதா? வேண்டுமானால் டாக்டரிடம் போகலாமா? என்றான் அக்கறையாய் .



கண்களை மூடி உதட்டைக் கடித்து கண்ணீரைக் கட்டுப்படுத்தினாள்.அவன் பால் சென்ற மனதையும் சேர்த்துத்தான்.



அதை வேறுவிதமாக எடுத்துக்கொண்ட சத்யன் .... மாதவிக்கு அதிக வலி போல் இருக்கிறது சோனா. நீங்கள் உடனே நம் டிரைவரிடம் சொல்லி என்னுடைய காரை எண்ட்ரன்ஸில் விடச் சொல்ல முடியுமா?உடனே மாதவியை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்" சட்டென கண்களைத் திறந்தவள் " எனக்கு ஒன்றும் இல்லை சோனா வா போகலாம்" என்று எழமுயன்றவளால் முடியவில்லை காரணம் அவள் இடதுகையை தன் வலது கையால் அழுந்த பற்றியிருந்தான் சத்யன்.



" நீங்க போங்க சோனா சீக்கிரம் " துரிதப்படுத்தினான் இவர்களுக்குள் இருக்கும் மனப்பொருத்தம் ஓரளவு தெரிந்ததால் சோனா விலகிச் சென்றாள்.அவள் மறைந்ததும்.

" எனக்கு ஒன்றும் இல்லை. ஹாஸ்பிடல் எல்லாம் வேண்டாம் "எங்கோ வெறித்தபடி பேசினாள்.



"முரட்டு பிடிவாதம் பிடிக்கும் நேரம் இதுவல்ல"அவள் முகத்தை ஆழமாக பார்த்து மென் குரலில் கூறினான்



"முரட்டு பிடிவாதம் எனக்கல்ல "மறைமுகமாக சாடினாள் . புரிந்து கொண்டவனாய்" மற்றதை இப்போது பேச வேண்டாம் முதலில் உன் காலை பார்ப்போம் " என்று திட்டவட்டமாக கூறி எழுந்தான். வாயிற்புரம் திரும்பி கார் வந்து நிற்கிறதா என்று பார்த்தான்.



சில நோடிகளில் கார் வேகமாக வந்து பிரேக் அடித்து நின்றது.



"வா மாதவி நம் கார் வந்து விட்டது. எழுந்து கொள்ள முடியுமா? என் கையை வேண்டுமானால் பற்றிக்கொள்" அவன் கையை அவள் முன் உயர்த்தினான். ஆனால் அவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்.



அவனுக்கும் கோபம் வரத்தானே செய்யும். முகம் கடுகடுக்க வேகமாய்ச் சென்று ரிசப்சன் கவுண்டரில் இருந்த பெண்ணிடம் ஏதோ சொன்னான்.



உடனே அவள் வேகமாக மாதவியிடம் விரைந்தாள். அதற்குள் சோனாவும் வந்து விட இருவரும் கைத்தாங்கலாக மாதவியை அழைத்துச் சென்று காரினுள் ஏற்றினார்கள்.



டிரைவரிடம் பேசியபடி நின்ற சத்யனை ஒருமுறை பார்த்து விட்டு பின் சீட்டில் ஏறி வலி தாங்காமல் கண்களை மூடிக்கொண்டாள்.



அவள் நினைத்தது போல் சாதாரண அடி இல்லை என்று தோன்றியது. காலை தரையில் வைத்தாலே விண்விண் என்று வலித்தது. கார் மெல்ல ஊர்ந்தது. ஏசியின் ஜில்லிப்பில் வலி தந்த சோர்விலும் படிகளில் உருண்ட களைப்பும் ஒன்று கூடி லேசாக கண்ணயர்ந்தாள் மாதவி.



யாரோ தட்டியெழுப்பும் உணர்வு தோன்றவும் திடுக்கிட்டு விழித்தாள். எதிரில் சத்யனை பார்த்ததும் மிரண்டுவிழித்தாள்.



“நீ .... நீங்கள் "குளறியது அவள் நாக்கு"கூல் ....கூல் ... ஏன் இவ்வளவு டென்ஷன் ஹாஸ்பிடலுக்கு தான் வந்திருக்கிறோம் , லாட்ஜுக்கு அல்ல" என்றான் சிறு நகையோடு .



அவன் பேச்சிலிருந்த இருபொருளை விடுத்து சுற்றும் முற்றும் பார்த்தவள்.



"டிரைவர் --- எங்கே?" என்று கேட்கவும்



"டிரைவரா ...ஓ...." என்று யோசித்தவன் "இந்தக் காரை ஆபீசிலிருந்து ஹாஸ்பிடல் வரை ஓட்டிக் கொண்டு வந்த டிரைவர் நான். அப்படியென்றால் என்னை தான் தேடுகிறாயா?" குறும்பாய் அவளை பார்த்தான்.



அப்போது தான் புரிந்தது மாதவிக்கு டிரைவரை அனுப்பி விட்டு இவன் ஓட்டிக் கொண்டு வந்திருக்கிறான் என்று.. எதற்காக இவன் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும். அதுவும் சாதாரண ஒரு பி.ஏ.விற்காக மனதில் உள்ளதை கேட்டே விட்டாள்.



"பி.ஏ. என்றால் என்ன மாதவி ?" அவளிடமே கேள்வி கேட்டான்.



குழம்பிய போதும்" பர்சனல் செக்ரட்டரி " என்று உதடுகள் தானேபதில் சொன்னது.

"ம் ..அப்போஉனக்கு அடிபட்டால் நான் தானே பர்சனலாக பார்க்க வேண்டும்" கண்களைச் சிமிட்டி அழகாக சிரித்தான்.



" நீங்கள் " என்று ஏதோ கூற வந்த மாதவியின் உதட்டின் மேல் விரல் வைத்து.



" இந்த வாக்கு வாதத்தை எல்லாம் குணமானதும் நம் அலுவலகத்தில் வைத்துக் கொள்வோமே .இப்போது வேகமாக சென்று மருத்துவரைப் பார்த்து விட்டு உன் வீட்டில் கொண்டு உன்னை விட்டுவிடுகிறேன் சரிதானா?"



அவன் விரலை உதட்டிலிருந்து எடுத்தவாறு கீழே இறங்க முயற்சித்தாள் மாதவி. மனதில் பல எண்ணங்கள் இன்னும் இவனுடன் பேசிக் கொண்டிருந்தால் ஏதேனும் விபரீதத்தில் தான் போய் முடியும். எப்படி இயல்பாகத் தொட்டுப் பேச ஆரம்பித்து விட்டான். அதற்கு இடம் கொடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தாஜில் ரூம் போட வா என்று கேட்டவன் தானே இவன்.'மாதவி ஜாக்கிரதை " என்று அவள் பெண் மனம் அவளை எச்சரித்தது.



அவள் இறங்குவதற்குள் அவளுக்காக ஒரு வீல் சேர் காத்திருந்தது. கேள்வியாய் சத்யனை பார்த்தாள்.

மேடம் தான் என் கையைப் பிடிக்க ரொம்ப சங்கடப்படுவீர்களே , அதனால் தான் இந்த ஏற்பாடு உட்காருங்கள். இந்தக் கம்பியை மட்டும் பிடித்து நான் தள்ளி வருகிறேன் "



நல்ல வேளையாக எலும்பு மற்றும் தசை சம்பந்தமான மருத்துவர்கள் இருந்தார்கள். சில சின்ன பரிசோதனைகளுக்குப் பிறகு மருந்து மாத்திரைகள் எழுதிக் கொடுத்தார்கள்.



"பெரிதாக பயப்பட எதுவும் இல்லை. நாங்கள் நன்றாக மசாஜ் செய்திருக்கிறோம். அதனால் நடக்க முடியும். லேசாக வலி மட்டும் இன்னும் இரண்டு நாட்கள் இருக்கலாம். பிறகு எல்லாம் சரியாகி விடும்" என்று கூறி வழி அனுப்பினார் மருத்துவர்



லேசாக தாங்கித் தாங்கி நடந்தாள் மாதவி .வலி இருக்கத்தான் செய்தது, ஆனாலும் சத்யனின் உதவியை நிராகரித்தாள்.



காரின் கதவைத் திறந்தவனிடம் " என்னை ஆட்டோவில் ஏற்றி விட்டு விடுங்கள் சார். நான் சமாளித்துக்கொள்வேன் " என்றாள் தயங்கியபடி.



அவன் பார்வையில் சினம் அப்பட்டமாய் தெரிந்தது.



" இல்லை வந்து ....வந்து ... அங்கு வந்தால் என் .... அம்... என் அம்மாவை பார்க்க நேரிடும். நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு, ஏதேனும் கூறிவிட்டால் என் அம்மாவால் தாங்கமுடியாது.உங்கள் கருத்து எப்படியோ எங்களுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அவர் சிறந்த தாய் அதனால் ... "



திறந்த கதவை ஓங்கி அறைந்தவன் அவள் அருகில் வந்தான்.



" இப்போது நீ என் பி.ஏ.அதனால் உன்னை வீட்டில் விடுவது என் கடமை .மற்ற சொந்தவிஷயத்தை பேசுவதற்கல்ல. நான் அந்தளவு மரியாதை தெரியாதவனும் அல்ல. தயவுசெய்து விதண்டாவாதம் செய்யாமல் வண்டியில் ஏறு" பதிலை எதிர்பாராமல் வேகமாகச் சென்று டிரைவர் சீட்டில் அமர்ந்தான். சற்று தயங்கிய போதும் வேறுவழி தெரியாமல் பின் சீட்டில் ஏறி அமர்ந்தாள்.

​
 

New Threads

Top Bottom