NYD-90
இல்லத்திற்கு வந்தவர்கள் மிகவும் சோர்ந்து போயிருந்தார்கள்,
வா கௌசிக் , வா சத்யா ரெண்டு டயர்டா இருக்கீங்களே, போய் குளிச்சுட்டு சாப்பிட வாங்க,
இல்லப்பா ரொம்ப பசியா இருந்ததுன்னு வர்ற வழிலேயே சாப்ட்டுட்டோம்.
சரி, குளிச்சுட்டு ரெஸ்ட் எடுங்க, எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம்.
குட் நைட் அங்கிள், குட் நைட் ஆன்டி, விட்டால் போதுமென்று ஓடியே விட்டான். வெண்ணீரில் குளித்து விட்டு வந்தவளுக்கு ஏதேதோ நினைவுகள். அதனூடே எப்போது தூங்கினாள் என்று அவளுக்கே தெரியாது. ஆழ்ந்த உறக்கம் அவளை தழுவியது. மறு நாள் காலை கதிரவன் ஒளி முகத்தை மெல்ல தழுவியது. அதன் ஒளியில் லேசாக கண் விழித்தவள், வழக்கம்போலவே உள்ளங் கைகளை விரித்து இஷ்ட தெய்வத்தின் பெயர்களை சொல்லியவள், இன்றைய பொழுது நல்லதாக இருக்க வேண்டும் என்று கடவுளை பிரார்தித்து கொண்டாள் . மெதுவாக எழுந்து பூமலர் பாதங்களை வைத்து குளியல் அறைக்கு சென்றவள், கீழே சென்று தனக்கும் மற்றவர்களுக்கு காபி கலங்கினாள் . அதற்குள் சிமி வந்துவிடவே இவள் அமைதியாக சென்று அமர்ந்து கொண்டாள் . அன்னையும், மகளும் சிறிது ஓய்வாக பேசிக் கொண்டே காபி அருந்தினர்.
சிமிக்கு மனதில் அரித்து கொண்டிருந்த விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்து நிதானமாக ஆரம்பித்தார். வீட்டுல சிவா இல்லாதது ஒரு மாதிரி இருக்குல்ல.
ம்ம் ஆமாம்மா, ஆனா இது ஒன்னும் புதுசு இல்லையே. அவன் எப்பையோ வெளிஊருக்கு வேலைக்கு போனவர்தானே?
ம்ம் அவனுக்குன்னு ஒரு கல்யாணத்த பண்ணி வக்கனுன்னு பார்த்தா எதுவுமே சரியாஅமைய மாட்டேங்குது.
அம்மா நான் ஒன்னு சொல்லட்டுமா?
நீங்க எப்பேர்ப்பட்ட பொண்ண பார்த்தாலும் அண்ணன் கல்யாணம் பண்ண மாட்டாரு. உங்களுக்கு தெரியாதா ?
அங்கே பேரமைதி நிலவியது.
நீங்க கங்காவை வேண்டான்னு சொல்லறதுக்கு என்ன காரணம்? எதுவா இருந்தாலும் மனசுல இருக்கறத சொல்லுங்கம்மா.
மகள் அன்னையின் கரங்களை பிடித்து வினவினாள்.
அது நிறைய காரணங்கள் இருக்கு, இவனுக்கும் அவளுக்கும் எந்த விதத்துல பொருத்தம் ? அழகு, பணம், படிப்பு, அந்தஸ்து, எல்லாத்துக்கும் மேல வயசு ? பதிமூணு வருஷம். சின்ன இடைவெளியா என்ன ?
நீங்க சொல்லறது எல்லாமே சரிதாம்மா. ஆனா அவங்க ரெண்டு பேரும் உருக்குயிரா காதலிக்கறாங்க. நாம ஒன்னும் அண்ணனுக்கு ஏமாத்தி சின்ன பொண்ண கட்டி வைக்க பாக்கலியே ? அது அவளுக்கும் தெரியும் அண்ணனுக்கும் தெரியும். நீங்க உங்களுக்கு புடிச்ச பொண்ண அண்ணனுக்கு ஏதாவது பண்ணி மிரட்டி கட்டி வைக்க பார்த்தாலும் அது நடக்காது. நீங்க அப்படியே கல்யாணம் பண்ணி வச்சாலும் அண்ணாவோட வாழ்க்கைல சந்தோஷம் இருக்காது. கங்காவும் அண்ணனும் விரும்பறாங்கன்னு சொன்னா அது சாதாரணம்தான். அவ அண்ணனோட உயிரணு சொல்லறதவிட அவதான்மா அண்ணனோட உயிர்ப்பு. அவ இருந்தாதான் அண்ணாவால் சிரிக்க முடியும். வாழ்க்கையை ரசிக்க முடியும். நீங்களே யோசிச்சு பாருங்கம்மா. எனக்கு தெரிஞ்சதை நான் சொல்லிட்டேன், இதுக்கு மேல உங்க இஷ்டம்.நான் மருத்துவமனைக்கு கிளம்பறேன்.
இவங்க எல்லாருமே என்னோட குடும்பம்தானே ? எதுக்கு எல்லாருமே சிவாவுக்கு சப்போர்ட் பண்ணறாங்க? எல்லாருக்குமே கங்காவை புடிச்சிருக்கா? என்னை தவிர? இல்ல சில விஷயங்கள்ல நமக்கு ஆப்ஷனே இல்லையா ? சத்யாவ கூடத்தான் நம்ம பொண்ணா வளர்த்தோம். ஆனா எங்கையோ போய் யாரையோ கல்யாணம் பண்ணிக்கிட்டு. ஏன் இந்த வீட்டுல இப்படி?
குளித்துவிட்டு வந்தவர் வேகமாக சமையலை முடித்துவிட்டு, தன்னுடைய மன குழப்பங்களுக்கு என்னதான் தீர்வு ? கோவிலுக்கு சென்றால் மனம் அமைதி அடையும் என்று நினைத்தார். அதன்படியே கணவனுடன் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சென்றார். அங்கே இருந்த கற்பகாம்பாள், கற்பகமே அல்லவா ? வா வா இப்பதான் ஒனக்கு பெத்தவளை பார்க்க தோன்றியதா ? என்று அன்னை அழைப்பது போலவே எப்போதும் தோன்றும். இந்த முறையும் தோன்றியது. தன் துன்பங்களே கண்ணில் நிறைந்திருந்தது,கண்ணில் குளமாக. குழந்தைகள் பெற்றத் தாயிடம்தானே தன் மனக் குறைகளை சொல்லி அழ முடியும்.
ஏம்மா என்னோட குழந்தைகளுக்குனு கல்யாண வாழ்க்கை சரியாய் அமைய மாட்டேங்குது? சிவாவுக்கும் நிச்சயம் ஆகி நின்னு போச்சு. இந்த பொண்ணுக்கும் அவனுக்கும் எத்தனை வயசு வித்தியாசம்? அவளை
போய் விரும்பறதா சொல்லறான் . சத்யாவுக்கு அவளுக்கு தெரியாமலே கல்யாணம் யாரோ ஒரு படிக்காத வனோட, முரடனோட நடந்திருக்கு. எதுக்கும் எதுக்கும் சம்மந்தம்? ஏன் இப்படி? நீதான்மா எல்லாத்துக்கும் வழி காட்டணும். கற்பூரத்தை தொட்டு கண்ணில் ஒற்றிக் கொண்டு, குங்கும பிரசாத்தை வாங்கி கொண்டு, கபாலியையும் தரிசித்து வீடு திரும்பியவருக்கு உண்மையிலேயே மனம் லேசானது போல இருந்தது.
மனைவியின் முகத்தில் நேற்று முதல் இருந்த குழப்பங்கள் தீர்ந்தது போல இருந்தது தியாகுவுக்கு.
இருவரும் அமைதியாகவே உண்டு முடித்தனர். அப்போது சத்யாவிடம் இருந்து அழைப்பு வந்தது.
என்ன சத்யா இந்த நேரத்துல கூப்பிட்டுருக்க ?
அம்மா அப்பா கிட்ட குடுங்க,
ம்ம் , அவள் குரலில் இருந்த பதட்டம் இவரை கலக்கமடைய செய்தது.
சரிம்மா, நாங்க இப்பவே வரோம்.
என்னங்க ? நீ நாம மூணு பேருக்கு ஒரு செட் டிரஸ் எடுத்துக்கிட்டு உடனே புறப்படு . முத்துவோட பாட்டி இறந்துட்டாங்களாம்.
ஆச்சியா !
இல்ல அவங்க இல்ல. அப்பாவோட அம்மா.
என்ன என்ன ஆச்சு ?
அதெல்லாம் தெரியாது. உடனே கிளம்பு, நாம சத்யாவை கூட்டிட்டு கிளம்பனும்.
என்னதான் நடந்தது?
அன்று காலை கணவனுக்கு கஞ்சியும், வேக வைத்த பயறும் கொடுத்து விட்டு மகனை கிளப்பி பள்ளியில் விடுவதற்காக சென்ற போது , அவசர அவசரமாக காரமாய் மட்டன் குளம்பு வைத்து, மகனுக்கு தயார் செய்தார் அன்னை.
எங்கையாவது புருசனுக்கு ஆக்கி போடணுன்னு இந்த பொட்டச்சிக்கு நினைப்பு இருக்கா ? மேக்கப்பை போட்டுக்கினு கிளம்பி போய்ட்டா எவனையோ பாக்க. கூறு கெட்டவ என்று திட்டி கொண்டே மகனை மெதுவாக எழுப்பினார்.
என்னம்மா, உங்களுக்கு ஏதாவது வேணுமா ?
இல்ல ராசா, இத்தனை நாளு ஆஸ்பத்திரிலேயே இருந்து இருந்து நாக்கு செத்து போய் இருக்கும். ஆத்தா உனக்கு ஆசையா மட்டன் குழம்பு காரசாரமா செய்ஞ்சு வச்சுருக்கேன், ஒருவா சாப்பிடு ராசா,
வேண்டாம் என்று சொல்ல மனமில்லாதவர், இல்ல ஆத்தா இப்பதான் அவ எனக்கு கஞ்சியும் சுண்டலும் குடுத்துட்டு போனா. நான் அப்புறமா சாப்பிடறேனே ,
சரி,
மீண்டும் அடுத்த சில நிமிடங்களிலேயே திரும்பி வந்தார் இதையே வேறு விதமாக கூறினார். இப்படியே மூன்று முறை ஆனதும், கண்ணீர் சிந்தி தனது நாடகத்தை ஆரம்பித்தார்.
எப்போதுமே நல்ல சிவத்திற்கு அன்னையிடம் பயம்தான். அதையும் தாண்டி பாசமும் அதிகம். அதனாலேயே அன்னை தான் நினைத்ததை எல்லாம் மூத்த மகன் மூலம் சாதித்துக் கொண்டார். இயல்பிலேயே நல்ல சிவம் நல்லவராக இருந்ததால் இப்படி இருக்கிறார். இல்லையெனில் அவரும் தம்பி போலவே நாசமாகி இருப்பார் . அன்னையின் கண்ணில் கண்ணீரை கண்டதும், அவரால் தாங்க முடியவில்லை.
சரிம்மா, நான் சாப்பிடறேன், என்று மெதுவாக எழுந்து அமர்ந்து கொண்டார். நல்ல நேரத்தில் அவர் வாயில் வைப்பதற்குள் தேவி வந்து விட்டார். இவர் உண்ண போவதை ஜன்னல் வழியே பார்த்தவள், அவசரமாக ஓடி வந்தாள் .
அயோ அயோ இதென்ன அநியாயம்! என்னங்க இது இப்படி கார சாப்பாட்டை சாப்பிடறீங்க ? என்னங்க இது ?
வாடி போக்கத்தவளே, தாலி கட்டியவனுக்கு ஒழுங்கா பொங்கி போடாம ஊர் சுத்திட்டு வர்ற, நீ என்னடி இவனை கேள்வி கேட்கறது? என்று கொத்தாக அவள் தலையை பிடித்து ஆட்டினார்.
தன் மூத்த மனைவிக்கும் நடந்ததே இப்போது இவளுக்கும் ஆகி விடுமோ? பயம் மனதில் தொற்றிக் கொண்டது. என்னதான் அன்னையிடம் பயம் இருந்தாலும், இது வேறு மாதிரியான பயம்,. தன்னை அறியாமலே அவர் விடுங்கம்மா, அவளை தொடாதீங்க. எடுங்க கையை, அதட்டியேவிட்டார்.
தலையை திருப்பி விசித்திரமாக மகனை பார்த்தவர் நீயா என்னை மிரட்டியது என்பது போல கண்களை விரித்துபார்த்தார். அதற்குள் சுதாரித்துக் கொண்ட தேவி,
இவரை புழக்க வைப்பேன்னான்னு பயந்த பயம், எனக்குதான் தெரியும். இவரு என் புருசன் . என்ன ஆக்கி போடணும் எனக்கு தெரியும். நீங்க இதுக்கு வராதீங்க .
பளீரென்று கன்னத்தில் அறை விழுந்தது, இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை கணவனிடமிருந்து. என் மேல் என்ன தப்பு? வார்த்தைகள் கண்களில் இருந்து வந்தது. வாய் விம்மி அழுதது. புடவையை வாயில் பொத்தி அழுது கொண்டே சமையல் அறைக்கு ஓடினாள் ,
மகனின் இந்த புது நடவடிக்கை அன்னையால் ஒத்துக் கொள்ள முடியவில்லை.
போடா போ, அதான பார்த்தேன்.
ஆஸ்பத்திரிக்கு போறேன் ஆஸ்பத்திரிக்கு போறேன்னு இவ உம் பின்னாடியே ஓடி வந்த போதே எனக்கு தெரியும், புருஷனுக்கும் முந்தானை விரிச்சு, புள்ள ..........அட சீ! இதெல்லாம் ஒரு பொழப்பு , காரி துப்பியவள்
இன்னும் காதில் கேட்க முடியாதபடி அசிங்கமான வார்தைகைளை நெருப்பாக அள்ளிக் கொட்டினார், வார்த்தைகளாக விழும் நெருப்பை விட உண்மையானதே தேவலாம் என்று க்ஷண நேரத்தில் முடிவெடுத்து அடுப்பை பற்ற வைத்து அதில் புடவையைப்பற்ற வைத்து விட்டார்,தேவி
மனைவியை அடித்தது மனம் தாங்காமல் சமாதான படுத்த வந்தவருக்கு அதிர்ச்சி, நெருப்பை அனைத்து மனைவியிடம் மனமார மன்னிப்பு வேண்டினார்.
அதே சமயம் இவர்களை திட்டிக் கொண்டே கடையில் புகையிலை வாங்க மெயின் ரோட்டிற்கு சென்ற கிழவி எதிரில் வந்த லாரியை கவனிக்கவில்லை, எதிர்பாராமல் நடுவில் வந்த கிழவியை அடித்து தூக்கி போட்ட லாரி நிற்காமல் போனது............
வாழ்க்கையில் கௌரவம் என்ற பெயரில் ஜாதி வெறி பிடித்த,பார்த்தவர்கள் அனைவரையும் தவறாக பேசி, நோகடித்தவரின் உயிரும் கண் மூடி திறப்பதற்குள் முடிந்து விட்டது. அந்த கிழவியால் ஆரம்பித்த நல்ல சிவம், தேவி , சத்யா,முத்து உறவு இனியாவது மேம்படட்டும் . ஆனால் இந்த குற்ற உணர்ச்சியில் இருந்து நல்ல சிவம் எப்படி மீளப் போகிறார்?
இதை பற்றி எதுவுமே தெரியாத கௌசிக், காலையிலே கிளம்பி மருத்துவமனைக் கட்டுவதற்ககு ஒரு கம்பனியிடம் பேச வேண்டி இருந்தது. அவர்கள் வந்து சந்திக்கிறேன் என்று சொன்ன போதும் இவன் மறுத்து அவனே நேரில் சென்றான். எப்போதுமே சரியான நேரத்திற்கு செல்பவன், அந்த அழகியால் சில நிமிடங்கள்ச் தாமதமாக சென்றான்,
சரியான நேரத்திற்கு வந்தவன் அந்த பெரிய காம்ப்ளெக்ஸில் உள்ளே நுழையும்போது எதிர்பாராதவிதமாக ஒரு மங்கையின் மேல் இடித்து விட்டான், அவள் கையில் இருந்த சான்றிதழ்கள் எல்லாம் கீழே விழுந்தது. அவள் இவன் முகத்தை பார்க்கவே இல்லை. ஆனால் அவன் பார்த்தான்.அதே பழைய தேவதைதான் என்று கண்டு கொண்டான், ப்ச், சாரி சாரி சார், என்று சொல்லிக் கொண்டே அனைத்தையும் அடுக்கிக் கொண்டாள் , நேரமானதால் இவனும் டென்ஷனாகவே இருந்தான். இருவரும் வேறு எதுவும் பேசிக் கொள்ளவில்லை. ஆனால் அவன் அவள் பெயரை மட்டும் அறிந்துகொண்டான் சான்றிதழில் இருந்து..கயல் கயல் விழி .....
மீண்டும் வருவாள் தேவதை................